திங்கள், 8 ஜனவரி, 2018

கோழி நாய் நடுகல் வழிபாடு மெய்யியல் விலங்கு மதம்

aathi tamil aathi1956@gmail.com

17/10/17
பெறுநர்: எனக்கு
செங்கல்பட்டை அடுத்த அச்சிறுபாக்கத்திற்கு அருகிலுள்ள இந்தளூரில் உள்ள
நடுகல் ஒன்று, கீழ்ச்சேரிக் கோழி ஒன்று கோழிச் சண்டையில் வெற்றி பெற்று
இறக்கிறது. இதற்காக ஊர்மக்கள் கோழிக்கு நடுகல் எடுக்கின்றனர்.
'கீழ்ச்சேரி கோழி பொடுகொத்த' என கல்வெட்டு வாசகம் சொல்கிறது. புறப்பொருள்
வெண்பா மாலை என்னும் தமிழ் இலக்கிய நுாலில், கீழ்ச்சேரிக் கோழி
மேல்சேரிக் கோழி இரண்டிற்கும் நடத்தப்பட்ட கோழிச் சண்டையைப் பற்றிய
குறிப்புகள் உள்ளன. தமிழர்கள் விலங்குகளை பாதுகாத்தும் பராமரித்தும்
வாழ்ந்துள்ளனர். நன்றியுள்ள நாய்க்கு நடுகல் எடுத்தவன் தமிழன்.
திருவண்ணாமலை அருகிலுள்ள எடுத்தனுார் என்ற இடத்தில் திருட வந்த கள்வர்களை
விரட்டிக் கடித்து, வீர மரணம் அடைந்த அந்த நாய்க்கு நடுகல்
எடுக்கப்பட்டது. நாயின் உருவம் அக்கல்லெழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.



விலங்குக்கு பொன் நாணயம் வெளியிட்டவன் தமிழன்
மாற்றம் செய்த நாள்: ஜன 15,2017 11:51
உலகில் தோன்றிய தலைசிறந்த நாகரிகங்கள் அனைத்து நிலைகளிலும் உயர்நிலையை
எய்து, பொருளாதார நிலையில் தன்னிறைவு பெற்று விளங்கும் போது,
கலைகளுக்கும், விளையாட்டுகளுக்கும், விழாக்களுக்கும் சிறப்பிடம் கொடுத்து
விளங்கும் என்பது, வரலாறு வெளிப்படுத்தும் உண்மையாகும். இதில், தமிழர்
நாகரிகமும் விதிவிலக்கல்ல. சங்க காலத்தில் கடல் வாணிகத்தில் கொடிகட்டி
வாழ்ந்த தமிழர்களின் கஜானாக்கள், ரோமாபுரியின் பொற்காசுகளால் நிரம்பி
வழிந்தன. ரோமானிய வணிகர்கள் பொன்னோடு வந்து, கரியை பெற்றுச் சென்றனர்;
பொற்காசை கரியாக்கினர். வாசனை உணவுப் பொருளான மிளகைத்தான் கரி என, நம்
புலவர்கள் குறித்தனர்.
ஸ்டாரபோ என்ற ரோம வரலாற்று ஆசிரியர், தமிழக மிளகிற்காக ரோம அரசின்
கருவூலம் காலி ஆகிறதே எனக் கவலைப்பட்டாராம். ஆனால், நம் தமிழச்சியோ
காதில் அணிந்திருந்த தோடை எடுத்து, கோழியை விரட்டின செய்தி, சங்க
இலக்கியத்தில் குறிக்கப்பட்டு உள்ளது. அத்தகைய வளமான பண்டைய தமிழகத்தில்,
பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் எவ்வித குறையும் இல்லை.
5,000 ஆண்டு வரலாறு :
தமிழகத்தில் செய்யப்பட்ட அகழாய்வுகளில், பெண்கள் பொழுதுபோக்காக
விளையாடிய, பாண்டி விளையாட்டு வட்டச் சில்லுகள் மிகுந்த அளவில் கிடைத்து
உள்ளன. அத்துடன் பகடை விளையாடும், தாயக் கட்டைகளும், செஸ் விளையாடும்
கட்டப் பொருள்களும் மிகுந்த அளவில் கிடைத்துள்ளன. அண்மையில் நடைபெற்ற,
கீழடி அகழாய்வில் இவை கிடைத்திருப்பதும் சிறப்புக்குரியது. சிறப்பான
பொழுதுபோக்கு பொது விளையாட்டுகள், திருவிழாக்களின்போது நடத்தப்பட்டன.
அத்தகைய வீர விளையாட்டுகளில் முதன்மையாக விளங்கியது, ஏறு தழுவுதல்
எனப்படும் ஜல்லிக்கட்டு. தமிழர்களின் வீர விளையாட்டுகளில் தலையானதாக
விளங்கி வந்தது ஜல்லிக்கட்டு. சங்க இலக்கியங்களில் பெரிதும் பேசப்படுகிற
தொறுப்பூசல், ஆநிரை கவர்தல், ஆநிரை மீட்டல், ஆகொள் போன்ற குறிப்புகள்,
தமிழரின் தன்மானத்தைக் காக்கும் செயல்களாகக் கருதப்பட்டன. எருதுகளும்,
பசுக்களும் தெய்வமாகப் போற்றப்பட்டன. இதன் தொடர்ச்சியாக ஏறு தழுவுதல் வீர
விளையாட்டாககருதப்பட்டு போற்றப்பட்டது.
ஏறு தழுவுதல் குறித்த சான்றுகள், திராவிட நாகரிகமாகக் கருதப்படும்
சிந்துவெளிப் பகுதிகளில் கிடைத்த முத்திரைகளில் கிடைத்துள்ளன.
தமிழகத்தில் கிடைத்த சில நடுகற்களிலும், ஏறு தழுவுதல் குறித்து
குறிப்புகள் உள்ளன. தமிழகத்தின் ஒவ்வொரு ஊரிலும், ஊரின் மையமாக விளங்கும்
மந்துப் பகுதியில் மாட்டுப் பொங்கல் அன்று, வீட்டில் உள்ள எருதுகளையும்,
பசுக்களையும் ஓடச் செய்து, மந்தைவெளியின் நடுவில் நடப்பட்டு இருக்கும்
வழிபடு கல்லில் நீர் தெளித்து சுத்தம் செய்து, கால்நடைகளை சுற்றி வரச்
செய்து வழிபட்டு மகிழ்ந்தனர். தமிழர்களின் வீர விளையாட்டாக விளங்கும்
ஜல்லிக்கட்டு, மாடு பிடி, எருது பிடி, காளைப்போர், மஞ்சு விரட்டு, மஞ்சு
வெருட்டு, மைந்து விரட்டு என, பல்வேறு பெயர்களால் இது வழங்கப்படுகிறது.
தமிழர்களின் விளையாட்டான ஜல்லிக்கட்டு, 5,000 ஆண்டுகளுக்கும் முற்பட்ட
சிந்துவெளி நகரங்களில் கிடைத்த முத்திரைகளில் காணப்படுகின்றன.
சிந்துவெளிப் பகுதியில் கிடைத்த முத்திரைகளில், ஜல்லிக்கட்டில் மாடுகளை
அடக்கி வீரர்கள் வெற்றி வாகை சூடும் உருவங்கள் காணப்படுகின்றன.
சங்க இலக்கியங்களில் ஒரு முத்திரையில், வீரன் ஒருவன் கூர்மையான தடியால்
எருதின் முன்னின்று அதை விரட்டுகிறான். அவ்வெருதின் கொம்புகளில்
கட்டப்பட்டுள்ள பரிசுப் பொருளை எடுக்கும் முயற்சியாக, இம்முத்திரை
புடைப்புச் சிற்பம் அமைந்துள்ளது. பிறிதொரு சிற்பம், தமிழகத்தில்
தொடர்ந்து நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டை நினைவுகூர்வதாக அமைந்துள்ளது.
இச்சிற்பத்தில், ஆடவர்கள் சூழ்ந்து ஓர் எருதை பிடிக்க முயற்சி
செய்கின்றனர். அவ்வெருது தனது பிடரியை உயர்த்தி, ஒவ்வொரு வீரரையும்
விரட்டுகிறது.காளையை முன் சென்று அடக்கும் வீரர்கள், காளையின் மிரட்டலால்
நான்கு புறமும் சிதறி ஓடுகின்றனர். இதை அழகாக சிந்துவெளி முத்திரைச்
சிற்பம் சுட்டுகிறது. இக்காட்சிகள் சங்க இலக்கியங்களில் ஒன்றான
கலித்தொகையில், முல்லைக் கலிப் பாடல்களில், சோழன் நல்லுருத்திரனார் என்ற
புலவரும் குறிப்பிடுகிறார்.கொல் ஏறு, கொலை ஏறு, நல் ஏறு, வெள் ஏறு எனப்
பல்வேறு பெயர்களில் இவ்விளையாட்டு குறிக்கப்பட்டது. ஆடவரின் வீரத்தைப்
போற்றும் வகையில் ஏற்றினை வெல்லுகின்ற ஆடவனை, சங்க கால மகளிர் திருமணம்
செய்தனர்.
ஆயர் குல வீட்டில் பெண் பிறந்தால் அவ்வீட்டில் காளையையும் வளர்ப்பர்.
திருமண வயதை எட்டும்போது பெண் வீட்டாரும், அவரது சுற்றமும் கூடிப் பறை
அறிவித்து ஏறு தழுவுதலை அறிவிப்பர். பறக்கும் பட்டுப்பூச்சியின் சாம்பல்
நிறக் காளையும், நெற்றியில் நிலவு போன்று சுழி உடைய கருநிறக் காளையும்,
காதுகட்குப் பின்புறம் செம்புள்ளிகளையுடைய காளையும், வெள்ளை நிறக்
காளையும், செவலைக் காளையும் ஏறு தழுவும் களத்தில் வகை வகையாக
நிற்கின்றன.ஏறு தழுவுகிற இடம் ஊரின் மையத்தில் அமைந்திருக்கும். இதை
ஊற்றுக்களம் எனக் குறித்திடுவர். பரண்கள் அமைத்து அவற்றின் மீது
மகளிரும், மற்றொருவரும் அமர்ந்து காளைகளை அடக்கும் வீர விளையாட்டைக்
கண்டுகளிப்பர். களத்தில் விடப்படும் காளைகளின் கொம்புகள் கூர்மையாக சீவி
விடப்படும். காளைகளுடன் சண்டையிட்டு அடக்கும் காட்சியில் அப்பகுதியே
துாசி மண்டலமாக மாறும். பல இளைஞர்கள் இவ்வீர விளையாட்டில் மரணம் அடைவர்.
சில வீரர்கள் எருதின் கழுத்தை இறுக்கி, அதன் கழுத்தின் மேல் பகுதியில்
உள்ள திமில் மீது ஏறி அமர்ந்து காளையை அடக்குவர். எருதின் உரிமையாளர்,
அவ்வெருது படும் துன்பத்தைக் கண்டு துயரமும் கோபமும் கொள்வார்.
இவ்வேறுகளை பாய்ந்து அடக்கி வெற்றி பெறும் ஆடவரை, ஆயர் குல மகளிர் மாலை
சூடி மணப்பர்.
உலக நாடுகள் பல விலங்குகளை வைத்து பொழுதுபோக்காக விளையாடுகிற வீர
விளையாட்டுகள் தேசிய விளையாட்டுகளாக இன்றளவும் பாதுகாக்கப்பட்டு
வருகின்றன. குறிப்பாக, எருதுகளை வைத்து விளையாடும் வீர விளையாட்டுகள்
ஸ்பெயின், போர்ச்சுக்கல், மெக்சிகோ நாடுகளில் தேசிய
விளையாட்டாகக்கருதப்பட்டு அரசால் போற்றப்படுகின்றன. விழுப்புரம் அருகில்,
செஞ்சி சாலையில் அரசலாபுரம் என்ற ஊர் உள்ளது. இவ்வூரில் கோழிச் சண்டையில்
இறந்த கோழிக்கு நடுகல் எடுக்கப்பட்ட கல்வெட்டொன்று உள்ளது. இக்கல்வெட்டு
கி.பி., 5ம் நுாற்றாண்டைச் சார்ந்தது.முகையூர் என்ற ஊரில் இருந்த
சண்டைக்கோழி, மேல்சேரியில் நடைபெற்ற கோழிச் சண்டையில் போட்டியிட்டு
வெற்றி பெற்று இறந்து விடுகிறது. வீர மரணம் அடைந்த அந்த வெற்றிக்
கோழிக்கு நடுகல் எடுக்கப்படுகிறது. கோழியின் உருவத்துடன் உள்ள இந்நடுகல்
தற்போது விழுப்புரம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
நாய்க்கு நடுகல் :
இதே போன்று செங்கல்பட்டை அடுத்த அச்சிறுபாக்கத்திற்கு அருகிலுள்ள
இந்தளூரில் உள்ள நடுகல் ஒன்று, கீழ்ச்சேரிக் கோழி ஒன்று கோழிச் சண்டையில்
வெற்றி பெற்று இறக்கிறது. இதற்காக ஊர்மக்கள் கோழிக்கு நடுகல்
எடுக்கின்றனர். 'கீழ்ச்சேரி கோழி பொடுகொத்த' என கல்வெட்டு வாசகம்
சொல்கிறது. புறப்பொருள் வெண்பா மாலை என்னும் தமிழ் இலக்கிய நுாலில்,
கீழ்ச்சேரிக் கோழி மேல்சேரிக் கோழி இரண்டிற்கும் நடத்தப்பட்ட கோழிச்
சண்டையைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. தமிழர்கள் விலங்குகளை பாதுகாத்தும்
பராமரித்தும் வாழ்ந்துள்ளனர். நன்றியுள்ள நாய்க்கு நடுகல் எடுத்தவன்
தமிழன். திருவண்ணாமலை அருகிலுள்ள எடுத்தனுார் என்ற இடத்தில் திருட வந்த
கள்வர்களை விரட்டிக் கடித்து, வீர மரணம் அடைந்த அந்த நாய்க்கு நடுகல்
எடுக்கப்பட்டது. நாயின் உருவம் அக்கல்லெழுத்தில்
பொறிக்கப்பட்டுள்ளது.மாடை என்ற பொன் நாணயத்தை வெளியிட்டவன் தமிழன். ஆகவே,
விலங்கினங்களை பாதுகாத்துப் போற்றியவர் தமிழர்; அவற்றிற்கு நன்றி
செய்யும் விழாவே ஜல்லிக்கட்டு. அத்தகைய மரபு சார்ந்த விளையாட்டை
இனியேனும் காலந் தாழ்த்தாமல் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்பதே, தமிழர்
அனைவரின் கருத்து.- முனைவர் சு.இராசவேலுதஞ்சை தமிழ் பல்கலை
பேராசிரியர்rajavelasi@gmail.com

http://m.dinamalar.com/detail.php?id=1690193

சல்லிக்கட்டு மனிதநேயம் மாந்தநேயம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக