ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் எது?
சமீப காலமாக விவாதிக்கப்படும் ஒரு விஷயம்குறித்து ஆதாரங்களுடன் சில விளக்கங்கள்…
கடந்த ஜூலை மாதம் 24, 25-ம் தேதிகளில் மாமன்னன் முதலாம் ராஜேந்திர சோழன் பேரரசராக முடிசூடிய ஆயிரமாவது ஆண்டையும், அவர் பிறந்த ஆடி மாதத்துத் திருவாதிரை நாளையும் ‘கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமம்’ மிகச் சிறப்பாகக் கொண்டாடி உலகத் தமிழ் மக்களையும் வரலாற்று ஆர்வலர்களின் கவனத்தையும் கங்கை கொண்ட சோழ புரத்தின்பால் ஈர்த்தனர்.
விழா நடந்து முடிந்த பிறகு, சில வரலாற்று ஆர்வலர்கள் ‘சோழர் வரலாறு’என்ற நூலை எழுதிய கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியும், ‘பிற்காலச் சோழர் வரலாறு’ என்ற நூலை எழுதிய சதாசிவப் பண்டாரத்தாரும் முதலாம் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் மார்கழி மாதத்து ஆதிரை என்று கூறியிருக்கும்போது, இவர்கள் எப்படி ஆடி மாதத்துத் திருவாதிரை நாளை அவருடைய பிறந்த நாள் விழாவாகக் கொண்டாடலாம் எனக் குற்றம் கூறுவதோடு, அது வரலாற்றுப் பிழை என்றும் சாட முற்பட்டுள்ளனர்.
வரலாறு என்பது எழுதி முடிக்கப்பெற்ற ஒன்று அல்ல. இந்தியத் தொல்லியல் துறையால் படி எடுத்துப் பதிவு செய்யப்பட்ட கல்வெட்டுகள் அத்தனையும் இதுவரை அச்சில் வெளிவரவில்லை. மேலும், ஆண்டுதோறும் பல நூற்றுக் கணக்கான கல்வெட்டுச் சாசனங்களும் சில செப்பேட்டுச் சாசனங்களும் கண்டுபிடிக்கப்பட்டு வெளிவந்துகொண்டிருக்கின்றன. புதிய தரவுகள் கிடைக்கும்போது பழைய கருத்துக்களும் முடிவுகளும் நிச்சயம் மாற்றம் பெறும்.
திருவொற்றியூர் கல்வெட்டு:
சாஸ்திரியாரும் பண்டாரத்தாரும் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் மார்கழித் திருவாதிரையாக இருக்கலாம் எனக் கணிக்க, அவர்கள் கண்ட சான்று திருவொற்றியூர் சிவாலயத்தில் உள்ள ஒரு கல்வெட்டுச் சாசனமே. ராஜேந்திர சோழனின் 31-ம் ஆட்சியாண்டான கி.பி.1043-ல் சதுரானன பண்டிதர் என்பவர் அந்தக் கோயிலில் 150 காசுகளை முதலீடு செய்து, மார்கழித் திருவாதிரை நாள் விழா கொண்டாட ஏற்பாடு செய்தார். அதுபற்றிக் கூறும் அந்தக் கல்வெட்டு, ‘திருவொற்றியூருடைய மகாதேவர்க்கு உடையார் ராஜேந்திர தேவர் திருநாள் மார்கழித் திருவாதிரை நாளன்று நெய்யாடி அருள வேண்டும் மிடத்துக்குச் சதுரானன பண்டிதன் தேவர் பண்டாரத்து வைத்த காசு நூற்று ஐம்பது’ என்று கூறுகிறது.
சிவபெருமான் ஆதிரை நாளுக்கு உரியவன் என்பதைச் செம்மொழித் தமிழ் நூலான முத்தொள்ளாயிரம் வாழ்த்துப் பாடலில், ‘ஆதிரையான் ஆதிரையான் என்றென்று அயருமால் ஊர்திரை மேலி உலகு’ என்று கூறுகிறது.
பண்டு முதல் இன்றளவும் எல்லா சிவாலயங்களிலும் மார்கழித் திருவாதிரை நாளை ஆருத்ரா தரிசனம் என்ற பெயரில் ஆடவல்லான் உலா செல்லும் திருநாளாகக் கொண்டாடிவருவது சேய்மையான மரபாகும். திரு ஞானசம்பந்தர் மயிலாப்பூரில் தேவாரப் பதிகம் பாடும்போது ‘ஆதிரைநாள் காணாதே போதியோ பூம்பா வாய்’ எனக் கூறி மார்கழி மாதத்து ஆதிரை நாளின் சிறப்பை எடுத்துரைத்துள்ளார். மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நட்சத்திரம் திருவாதிரை என்பதைப் பல கல்வெட்டுச் சாசனங்கள் உறுதிசெய்கின்றன. எந்த மாதத்து ஆதிரை என்பதே ஆய்வுக்குரிய கேள்வி. திருவொற்றியூர் சாசனத்தில் மார்கழி ஆதிரை நாளை ராஜேந்திர சோழன் திருநாளாகச் சதுரானன பண்டிதர் கொண்டாடினார் என்ற செய்தியை மட்டுமே அறிய முடிகிறதே அன்றி, அதுதான் அவன் பிறந்த மாதம் என்ற எந்தவொரு குறிப்பும் அந்த சாசனத்தில் இல்லை.
தக்கோலம், திருமழபாடி கல்வெட்டுகள்
சென்னைக்கு அருகே தக்கோலம் என்ற ஊர் உள்ளது. இவ்வூரின் பழைய பெயர் திருவூறல். அங்கு இருக்கும் சிவாலயத்தில் உள்ள ராஜேந்திர சோழனின் மூன்றாமாண்டுக் கல்வெட்டு ஒன்று உடையார் ராஜேந்திர சோழ தேவர் திருநாள் திருவாதிரை நாள் எழுந்தருளும் திங்கட் திருவிழாக்களுக்குரிய (12 மாதத் திருவிழாக்களுக்கும் உரிய) நிவந்தங்கள் பற்றி விவரிக்கிறது. இந்தக் கல்வெட்டு ‘தென்னிந்தியக் கல் வெட்டுச் சாசனங்கள்’ தொகுதி 5-ல் 1378-ம் சாசனமாக இந்திய அரசின் கல்வெட்டுத் துறையால் வெளி யிடப்பட்டுள்ளது.
இதனை நோக்கும்போது மாதந்தோறும் வரும் ஆதிரை நாளை ‘ராஜேந்திர சோழன் திருநாள்’ என்ற பெயரில் கொண்டாடியதை அறிகிறோம். இதே போன்று அரியலூர் மாவட்டம் திருமழபாடி கோயிலில் உள்ள ராஜாதிராஜ சோழனின் 4-ம் ஆண்டு கல்வெட்டில் மாதந்தோறும் ‘ராஜேந்திர சோழ தேவர் திருநட்சத்திரத்துத் திருவாதிரைத் திருநாள்’ என்ற பெயரில் அவ்விழா கொண்டாடப்பட்ட குறிப்பு உள்ளது.
இச் செய்தியை ‘தென்னிந்தியக் கல்வெட்டுச் சாசனங்கள்’ தொகுதி 5-ல் உள்ள 633-ம் சாசனம் விவரிக்கின்றது. எனவே, ஒரு ஆண்டுக்குரிய 12 மாத ஆதிரை நாட்களும் ‘ராஜேந்திர சோழன் திருநாள்’ என்ற பெயரில் கொண்டாடப்பட்டதால் நாம் முதலில் கண்ட திருவொற்றியூர் சாசனம் குறிப்பிடும் மார்கழி மாதத்துத் திருவாதிரை ராஜேந்திர சோழன் திருநாளாகக் கொண்டாடப்பட்டது என்ற குறிப்பைக் கொண்டு அதுதான் அவர் பிறந்த மாதம் எனக் கொள்ள முடியாது. பேரறிஞர்கள் கூறிய அக்கூற்று ஓர் ஊகமேயன்றி உறுதியன்று.
திருவாரூர் கல்வெட்டுக்கள்
திருவாரூரில் உள்ள வீதிவிடங்கப் பெருமான் (தியாகேசர் திருக்கோயில்) திருக்கோயில் மூலட்டானத்தைக் கற்றளியாக எடுப்பித்து, அதற்குப் பொற்றகடுகளைப் போர்த்தியவர் ராஜேந்திர சோழன் என்பதை அக்கட்டுமானத்தில் உள்ள கல்வெட்டுச் சாசனங்கள் எடுத்துரைக்கின்றன. அவருடைய தொடர் கல்வெட்டுச் சாசனங்களின் இடையே உள்ள அந்த மன்னரின் 31-ம் ஆட்சியாண்டின் 244-ம் நாளில் பொறிக்கப்பட்ட அவருடைய ஆணையைக் குறிப்பிடும் சாசனத்தில், அவர் பிறந்த மாதமும் நட்சத்திரமும் அவருடைய தந்தை ராஜராஜ சோழன் பிறந்த மாதமும் நட்சத்திரமும் குறிக்கப்பட்டுள்ளன. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தக் கல்வெட்டை இந்திய தொல்லியல் துறையினர் 1919-ம் ஆண்டில் எண்:674-ம் சாசனமாகப் பதிவுசெய்து, ஆங்கிலத்தில் ஆண்டறிக்கைக் குறிப்பும் வெளியிட்டுள்ளனர். அதில் மாமன்னர் ராஜராஜன் ஐப்பசி மாதத்து சதய நாளிலும், அவருடைய மகன் ராஜேந்திரன் ஆடி மாதத்துத் திருவாதிரையிலும் பிறந்தவர் என்ற குறிப்பு அந்த மன்னராலேயே பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளனர்.
திருவாரூர் தியாகராஜர் கோயில் அதிட்டானத்து குமுதப் படையில் மேற்குத் திசையிலும், தென்திசையிலும் உள்ள அக்கல்வெட்டை இக்கட்டுரையின் ஆசிரியரும், அரியலூர் அரசுக் கல்லூரியின் முன்னாள் வரலாற்றுத் துறைத் தலைவருமான பேராசிரியர் இல. தியாகராஜனும் இணைந்து படி எடுத்தனர். அது, கட்டுரையாளரின் ‘திருவாரூர் திருக்கோயில்’ என்ற பெருநூலில் 70-ம் எண் கல்வெட்டாகப் பதிப்பிக்கப்பட்டது. அந்த சாசனம் ராஜேந்திர சோழனின் ஆணையை வெளியிடு வதாகும். அதில் திருவாரூர் கோயிலின் மூலஸ்தான முடையாரான புற்றிடங்கொண்டாருக்கு மார்கழித் திருவாதிரை நாள், திருப்பூரநாள், ஆவணி அவிட்ட நாள், ஆண்டுப் பெருவிழா ஆகிய நான்கு நாட்களுக்குச் செய்ய வேண்டிய பூஜை முறைகளைக் கூறி, பின்பு தன் ‘அய்யர் பிறந்து அருளிய ஐப்பிகைச் சதயத் திருவிழா வரைவுக்குத் திருமுளையட்டவும், தீர்த்தத்துக்கு திருச்சுண்ணம் இடிக்கவும், நாம் பிறந்த (ராஜேந்திர சோழன் பிறந்த) ஆடித் திருவாதிரை நாளில் திருவிழா வரைவு குருமுளையட்டவும், தீர்த்தத்துக்குத் திருச்சுண்ணம் இடிக்கவும்…’ கொடுத்த நிவந்தங்கள் குறிக்கப்பட்டுள்ளன. எனவே, இந்தக் கல்வெட்டுச் சான்றால், ஐயம்திரிபற ராஜராஜன் ஐப்பசி சதயத்தில் பிறந்தவர் என்பதும், ராஜேந்திரன் ஆடித் திருவாதிரையில் பிறந்தவர் என்பதும் உறுதியாகின்றன. இங்கு மார்கழி ஆதிரை நாள் ஆரூர் இறைவனுக்குரிய நாளாகச் சுட்டப்படுகிறது.
மேல்பாடி சொல்லும் செய்திகள்
கடந்த 2009-ம் ஆண்டு தமிழக அரசின் தொல்பொருள் ஆய்வுத் துறையினர் ‘மேல்பாடி’ என்ற ஆய்வு நூலை வெளியிட்டுள்ளனர். அந்நூலின் ஆசிரியரான கல்பனா, மைசூர் கல்வெட்டு ஆவணக் காப்பகத்திலிருந்து மேல்பாடி கோயிலிலிருந்த ராஜேந்திர சோழனின் வெளி வராத கல்வெட்டொன்றை ஆய்வுசெய்து தகவல்களை வெளியிட்டுள்ளார். அதில், அந்த விழா நாள் பூஜை கள்பற்றிய விரிவான செய்திகள் கூறப்பட்டுள்ளன.
காமரசவல்லியில் உள்ள ராஜேந்திர சோழனின் கல்வெட்டு வைகாசி மற்றும் மார்கழி ஆதிரை விழாக்களைப் பற்றிக் கூறுகிறது. எனவே, 12 மாத ஆதிரை விழாக்களும் ராஜேந்திர சோழன் திருநாளாகக் கொண்டாடப்பட்டாலும் அவர் பிறந்தது ஆடி மாதத்துத் திருவாதிரையே என்பது அவரே கூறியுள்ள கூற்று. இந்தக் கருத்துக்களை மறுக்க முற்படும் ஆய்வாளர்கள் இங்குக் குறிப்பிடப்படும் திருவாரூர் மற்றும் மேல்பாடி கல்வெட்டுக்களை நேரில் பார்த்த பின்பு அவை ராஜேந்திர சோழனின் ஆணைகள் இல்லை என்பதைச் சான்றுகளுடன் மறுத்துக் காட்டிவிட்டுப் பின்பு, அவை யாருடையவை என்பதை மெய்ப்பித்தாலன்றி மாறுபட்ட கருத்துக்களுக்கு இடமே இல்லை.
- குடவாயில் பாலசுப்ரமணியன், தொல்பொருள், கல்வெட்டுத் துறை அறிஞர், ‘ராஜராஜேஸ்வரம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்,
தொடர்புக்கு: kudavayil@yahoo.com