திங்கள், 3 டிசம்பர், 2018

போலீஸ் பெண்களை சீண்டியதாலேயே கலவரம் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி ஜூனியர் விகடன்

aathi1956 aathi1956@gmail.com

மே 28, திங்., பிற்பகல் 5:58
பெறுநர்: நான்
Posted Date : 06:00 (26/05/2018)
“பெண்களின் மார்பைப் பிடித்து போலீஸார் தள்ளியதே ஆரம்பம்!”
“தி ட்டமிட்டபடி, மே 22-ம் தேதி காலை பேரணி தொடங்கியது. பனிமயமாதா கோயில் அருகில் பேரணியை போலீஸார் தடுத்தனர். முன்வரிசையில் இருந்த பெண்கள், ‘நாங்கள் 100 நாள்களாகப் போராடு கிறோம். எங்களின் குரல் உரியவர்களை எட்ட வில்லை. அதனால், கலெக்டர் அலுவலகத்துக்குச் செல்கிறோம்’ என்று சொல்லிவிட்டு பேரணியைத் தொடர்ந்தனர். பிறகு வி.வி.டி சிக்னல் அருகே தடுத்த போலீஸார், முன்வரிசையில் இருந்த பெண்களின் மார்பைப் பிடித்து தள்ளினர். அதனால் ஆத்திரமடைந்த ஆண்கள் முன் வரிசைக்கு வந்தனர். அவர்களுக்கும் போலீஸாருக்கும் மோதல் ஏற்பட்டது. போலீஸார் தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு, பொதுமக்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்துதான், கலெக்டர் அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு நடந்தது” என்று தூத்துக்குடியில் நடந்த சம்பவங்களை நம்மிடம் விவரித்தார் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த பிரபு.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வரை தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்போவதாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு அறிவித்திருந்தது. அதன்படி நடைபெற்ற பேரணியின்போதுதான், 12 பேரை போலீஸார் சுட்டுக் கொன்றனர். போலீஸார் தேடிவரும் நிலையில், போராட்டக் குழுவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, பிரபு ஆகியோரைப் பெரும் சிரமத்துக்கு மத்தியில் சந்தித்தோம்.
வங்கி அதிகாரியின் மகனான பிரபு, மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்தவர். ஸ்டெர்லைட் ஆலையால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு, அதனால் சிறுநீரகம் பழுதடைந்து தந்தை இறந்்ததை அருகில் இருந்து பார்த்தவர். அதுவே இவரை ஸ்டெர்லைட் எதிர்ப்பாளராக மாற்றி விட்டது. பிரபுவுடன் பேசியபோது, “22-ம் தேதி போராட்டம் நடத்த நாங்கள் முடிவு செய்தது, அதிகாரிகளுக்கு நன்கு தெரியும். எங்கள் கோரிக்கையைத் தீர்ப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபடாத அதிகாரிகள், போராட்டக் குழுவினர் மத்தியில் பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபட்டனர். மே 20-ம் தேதி மாவட்ட நிர்வாகம் சார்பாக 23 பேருக்கு மட்டும் அழைப்பு அனுப்பப்பட்டது. போராட்டத்துக்கு சம்பந்தமே இல்லாதவர்களை எல்லாம் அழைத்துப் பேசி, போராட்டத்துக்கான இடத்தை மாற்றிவிட்டதாக அறிவித்தனர். ஆனால், போராடும் கிராமங்களைச் சேர்ந்த மக்கள், போராட்ட வடிவத்தை மாற்ற ஒப்புக் கொள்ளவில்லை. திட்டமிட்டபடி, கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடுவது என முடிவெடுத்தார்கள். முதலில் பெண்களின் மார்பில் கையை வைத்துத் தள்ளியதால் ஆண்கள் ஆத்திரமடைந்தனர். அதனால் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்துதான் துப்பாக்கியால் போலீஸார் சுட்டனர்” என்றார் வேதனையுடன்.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான கிருஷ்ணமூர்த்தி, கடந்த 23 வருடங்களாகத் தொடர்ந்து போராடி வருபவர். தூத்துக்குடி உப்பளத் தொழிலாளர் சங்கத்தில் முக்கியமாக செயல்பட்டவர். அறவழிப் போராட்டத்தையே முன்னெடுக்க வேண்டும் என்பதில் எப்போதும் அக்கறையுடன் செயல்படுபவர். தற்போதைய போராட்டத்தில் வன்முறை வெடித்து துப்பாக்கிச் சூடு நிகழ்ந்து உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், மிகுந்த மன வருத்தத்துடன் இருந்த அவரிடம் பேசினோம்.
“எங்கள் போராட்டத்தைத் திசைதிருப்பும் செயலில், எப்போதுமே சிலர் முன்னின்று செயல் பட்டு வந்துள்ளனர். இந்த முறையும் அது நடந்தது. மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் இருப்பதால்தான், அப்பாவி மக்களின் உயிர் அநியாயமாகப் பறிக்கப்பட்டுள்ளது. போலீஸார் திட்டமிட்டுக் கலவரத்தைத் தூண்டி, இந்த அளவுக்கு நிலைமையை மோசமாக்கிவிட்டனர். ஆலை நிர்வாகத்தின் கைக்கூலிகளாக மாறிவிட்ட சிலரால்தான், உயிரிழப்பு ஏற்படும் அளவுக்கு விபரீதம் நடந்துவிட்டது. அவர்களுக்கு துப்பாக்கிச்சூடு நடக்கும் என்பது முன்கூட்டியே தெரிந்திருக்கிறது.
என் கண் முன்பாகவே ஒருவரை சுட்டுக் கொன்றார்கள். போலீஸார், எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல், நேரடியாக துப்பாக்கிச்சூட்டில் இறங்கினர். அதற்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை. சாதாரண உடையில் இருந்த காவலர்கள், வாகனங்களுக்கு தீவைத்தல் போன்ற சம்பவங்களில் ஈடுபட்டிருப்பார்களோ என்ற சந்தேகம் உள்ளது. காரணம், கலெக்டர் அலுவலகத்தில் நுழைந்த மக்கள் கூட்டத்தை போலீஸார் விரட்டி அடித்துவிட்டார்கள். பிறகு எப்படி, அங்குள்ள வாகனங்கள் எரிந்தன? இதுபோன்ற பல சந்தேகங்கள் உள்ளன. இவ்வளவு நடந்த பிறகும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவது தொடர்பாக தமிழக அரசு எதுவுமே சொல்லாமல் இருப்பது ஏன்? ஆலையை நிரந்தரமாக மூடுவது மட்டுமே தூத்துக்குடி மக்களை நிம்மதி அடையச் செய்யும். அதை, உடனடியாகத் தமிழக அரசு செய்ய வேண்டும்’’ என்றார்.
- பி.ஆண்டனிராஜ், இ.கார்த்திகேயன்
படங்கள்: ஏ.சிதம்பரம் பி.ஆண்டனிராஜ்
இ.கார்த்திகேயன்
ஏ.சிதம்பரம்

படுகொலை பெண் பெண்கள் போராட்டம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக