வெள்ளி, 22 டிசம்பர், 2017

ஆகமம் தமிழுக்கு தடையா கட்டுரை பார்ப்பனர் அர்ச்சகர் பூசாரி

aathi tamil aathi1956@gmail.com

அக். 11
பெறுநர்: எனக்கு
ஆகமங்கள் தமிழுக்குத் தடையா?

அண்மையில் கேரள அரசு கோயில்களில் பிராமணர்கள் அல்லாத 36 பேரை அர்ச்சகராக
நியமனம் செய்துள்ளது. இது வரவேற்கத்தக்கது. தமிழ்நாட்டில் திராவிட
கட்சிகள் அனைத்து சாதியினரையும் அர்ச்கராக்குவோம் என்று நீண்ட நாட்களாக
சொல்லி வந்தனவே தவிர, அதில் எள்முனையளவும் முனைப்பு காட்டவில்லை. 2015ஆம்
ஆண்டில் உச்சநீதி மன்றம் கோயில்களில் ஆகமப் பயிற்சி பெற்றவர்களை
அர்ச்சகராக நியமிக்கலாம் என்று தீர்ப்பு வழங்கியது.

இந்தத் தீர்ப்பிலே,
அர்ச்சகர் நியமனத்தில் சாதியோ – பிறப்போ – பிறந்த கோத்திரமோ
பார்க்கக்கூடாது என்றும் அவை காரணமாக ஒருவரை அர்ச்சகராக நியமிக்க
மறுப்பது அரசமைப்புச் சட்ட அடிப்படை உரிமைகள் 14, 17 ஆகியவற்றுக்கும்
1972ஆம் ஆண்டு இது தொடர்பாக ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்புச் சட்ட
அமர்வு (சேசம்மாள் வழக்கு) வழங்கிய தீர்ப்பிற்கும் எதிரானது என்றும்
கூறப்பட்டுள்ளது.

அதேவேளை, இந்து மதத்தில் உள்ள சிவநெறி, திருமால் நெறி (வைணவம்) ஆகியவை
சார்ந்த கோயில்களுக்கு அது அதற்கும் உரிய ஆகமம் கூறும் தகுதிகளைக் கொண்டு
அர்ச்சகர் நியமிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், என்.வி.
ரமணா ஆகியோரைக் கொண்ட இரு நீதிபதிகள் அமர்வு தெளிவு படுத்தியது.

இதன்பொருள் பரம்பரை அடிப்படையில் இப்பொழுது அர்ச்சகராக உள்ளவரின்
வாரிசுதான் அர்ச்சகராக நியமிக்கப்பட வேண்டும் என்பதல்ல. அந்தந்தக்
கோயிலுக்குரிய ஆகமத்தின்படி – உரியவரை நியமிக்க வேண்டும். அதாவது
அதற்குரிய பயிற்சியும், தீட்சையும் பெற்றவரை நியமிக்க வேண்டும்
என்பதாகும்.

ஆனால், அப்போது முதல்வராக இருந்த செயலலிதா தீர்ப்பை அமல் படுத்த
மறுத்துவிட்டார். பெரியாரின் விரல் பிடித்து வளர்ந்ததாக கூறும்
கருணாநிதியும் பேனா பிடித்து எழுதியதோடு சரி, தீர்ப்பை அமல்படுத்த எந்தப்
போராட்டத்தையும் நடத்தவில்லை.

அது ஒருபுறமிருக்க, பிராமணர்களும் ஆகமம் என்பது பிறப்பு அடிப்படையில்
பிராமணர்களுக்காக இறைவனால் தோற்றுவிக்கப்பட்டது என்றும், இதில் இறைவனது
கருவறையில் அர்ச்சனை செய்திடும் உரிமை பிராமணர்களைத் தவிர வேறு
எவருக்கும் கிடையாது என்றும் நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்து பேசி
வந்தனர்.

 உண்மையிலேயே  ஆகமம் என்பது தமிழர்களுக்குச் சொந்தமானதாகும். இந்த
வரலாற்று உண்மையை  ஒப்புக் கொண்டால் தமிழர்கள் கட்டிய கோயிலும்
தமிழர்களுக்கே சொந்தம் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். எனவே தான் ஆகமமும்
தங்களுக்கே, கோயிலும் தங்களுக்கே, என்று உரிமை கொண்டாடுகின்றனர்.

ஆகமம் என்பது தமிழர்களால் உருவாக்கப்பட்டவை என்பதை இனி வரலாற்று ரீதியாக
தெரிந்து கொள்வோம்.

ஆகமம் என்பதற்கு வடமொழி அறிஞர்கள் கூறும் பொருள் என்னவென்றால், "வந்தது"
என்று கூறுகின்றனர். யாரிடமிருந்து வந்தது என்று கேட்டால் இறைவனை கை
நீட்டுகிறார்கள். தமிழர்களிடமிருந்து வந்தது என்று சொல்வதற்கு
அவர்களுக்கு மனமில்லை.

முதலில் ஆரியப்பிரமாணர்கள் போற்றுகின்ற வேதத்திலிருந்து வரலாற்றை தொடங்குவோம்.

ஆரியர்களின் வேதங்கள் வடமொழியில் இருப்பவை. அவற்றில் இறைவனைப் பற்றிய
எண்ணம் கிடையாது, வைதிக தரிசனங்களான மீமாம்சை, சாங்கியம், யோகம்,
நியாயம், வைசேடிகம் என்ற ஐந்தும் இறை மறுப்புக் கொள்கையை வெளிப்
படுத்துபவையாகும். ரிக்வேதத்திலும் கூட உருவ வழிபாட்டை வலியுறுத்த
வில்லை. இதனால் உருவ வழிபாடற்ற ஆரியருக்கு சிலை வடிக்கும் முறைகளோ,
நுட்பங்களோ, கோயில் கட்டும் முறைகளோ, வழிபாட்டு முறைகளோ தெரிந்திருக்க
வாய்ப்பே இல்லை.

ஆனால் தமிழர்களோ இதற்கு நேர் மாறாக கடவுள்  கொள்கையை ஏற்றுக்
கொண்டவர்கள். தமிழர்களின் மொழி இலக்கண நூலான தொல்காப்பியத்தில் கடவுள்
கூறப்படுகிறார். தமிழர்கள் வாழ்ந்த நான்கு நிலங்களுக்கும் கடவுள்கள்
உண்டு. தமிழர்களுக்கு உருவ வழிபாட்டிலும் நம்பிக்கையுண்டு. சிந்து சமவெளி
நாகரிகத்தில் சிவனை லிங்க வடிவில் வழிபட்டனர். தமிழில் பூ செய் என்ற சொல்
தான் வடமொழியில் பூஜையாக மருவியது.

தமிழர்கள் இறைவனை பெருங்கோயில்களில் வழிபடுவதற்கு என்று சில விதிமுறைகளை
உருவாக்கி அதற்கு ஆகமம் என்று பெயரிட்டனர். ஆ என்பது ஒரெழுத்தைக்
குறிக்கும். இதற்கு உயிர் என்று பொருள். அது போல கமம் என்ற சொல்லுக்கு
நிறைவு என்று பொருள். அதாவது உயிரின் நிறைவு என்பதே இதற்கான
முழுப்பொருளாகும்.  இறைவன் திருவடியில் இணைந்து உயிர் நிறைவு பெறுவதை
ஆகமம் என்று தமிழர்கள் பெயரிட்டு அழைத்தனர்.

கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரை மூவேந்தர்கள் ஆட்சி செய்த காலத்தில் ஆகம
விதிப்படி கட்டப்பட்ட கோயில்களில் அதுகாறும் தமிழ்ப்பார்ப்பனர்கள் தான்
பூசை செய்து வந்தனர். கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு பல்லவர்கள்
தொண்டை நாட்டைப் பிடித்தனர். அவர்கள் பேசிய மொழி வடமொழி என்பதால் தொண்டை
நாடு முதலில் வடமொழிக்கு அடிமையாகிப் போனது. பல்லவ அரசருக்குப் பிடித்த
வடமொழியை கோயிலில் கையாள வேண்டிய கட்டாயத்திற்கு தமிழ்ப்பார்ப்பனர்கள்
தள்ளப்பட்டனர்.  கறையான் புற்றில் கருநாகம் புகுந்ததைப் போல தமிழ்ப்
பார்ப்பனர்கள் இருந்த இடத்தில் வடமொழி தெரிந்த ஆரிய பிராமணர்களை
நியமிக்கவும் ஆட்சியாளர்கள் முடிவு செய்தனர். தமிழ்வழிபாட்டு முறைகளை
அவசர அவசரமாக வடமொழியில் மொழி பெயர்த்தனர்.

தமிழ்ப்பார்ப்பனர்களும் முடிந்த அளவுக்கு  தங்கள் தொழில் எதிரிகளாகிய
ஆரிய பிராமணர்களை தடுக்க எண்ணினர். அதன்படி வடமொழிக்கு அதுவரை இல்லாத
எழுத்து வடிவத்தை ஒரு சுருக்கெழுத்து போல கண்டு பிடித்து அதற்கு கிரந்த
எழுத்துகள் என்று பெயரிட்டனர்.  இதில் உள்ள பல எழுத்துகள் தமிழ்
எழுத்துகள் போலவே காணப்படும். தமிழர்களுடைய தமிழ் எழுத்துகளிலிருந்து
வந்த காரணத்தால் ஆகமத்திற்கு வடமொழியில் 'வந்தது' என்று பொருள்
கூறினார்கள்.

கி.பி.14ஆம் நூற்றாண்டில் கிருஷ்ண தேவராயர் ஆட்சிக்காலத்தில் ஆகம
சுலோகங்களில் தமிழுக்கும், தமிழருக்கும் எதிராக சில திருத்தங்கள்
செய்யப்பட்ட போதிலும் அது தமிழையோ, அனைத்துச் சாதித் தமிழர்கள் பூசை
செய்வதையோ தடுக்கும் விதமாக எங்கும் கூறப்பட வில்லை. சங்கராச்சாரிகள் வழி
வந்த ஸ்மார்த்த பிராமணர்கள்  கோயில் கருவறையில் பூசை செய்திட உரிமை
கிடையாது என்று மட்டுமே அதில் கூறப்பட்டுள்ளது.

ஆரியப் பிராமணர்கள் இனியாவது ஆகமத்தில் இல்லாத ஒன்றை இருப்பதாகக் கூறி,
கோயில்களில் ஆதிக்கம் செலுத்த முற்படும் எண்ணத்தை  கைவிட வேண்டும்.

ஆகமங்கள் தமிழுக்கும், தமிழருக்கும் எப்போதும் தடையில்லை என்பதை கட்டாயம்
ஆரியப்பிராமணர்கள் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இல்லையெனில், நாளைய
வருங்காலத் தமிழர்கள்  கருவறைக்குள் நுழைவார்கள். கருவறைத் தீண்டாமையை
கட்டாயம் கருவறுப்பார்கள்!

நன்றி: மு.பெ.சத்தியவேல் முருகனார் எழுதிய "ஆகமங்கள் தமிழுக்குத் தடையா?"
தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி வெளியீடு. 2007.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக