வெள்ளி, 13 நவம்பர், 2020

இந்தியெதிர்ப்பு மாணவர் எழுச்சி துப்பாக்கிச்சூடு அண்ணா ஈவேரா திசைதிருப்பல் ராஜாஜி மனமாற்றம் ஆங்கிலம் தமிழர் முன்னேற்றம்

 

aathi tamil aathi1956@gmail.com

திங்., 10 ஜூன், 2019, பிற்பகல் 4:36
பெறுநர்: எனக்கு
1965... தமிழகம் ரத்தத்தில் தோய்ந்த ஆண்டு!

தமிழகம் ரத்தத்தில் தோய்ந்த ஆண்டு 1965. இனத்தின் விழியாம் மொழியைக் காக்க, உயிராம் உயிரைத் தந்த ஆண்டு.

‘‘நம்பிக்கையின்மையால் ஏற்பட்ட பயங்கரச் சிக்கலில், சென்னை ரத்தத் தடாகத்தில் குதித்து எழுந்தது. பெரியவர்களின் கூற்றுப்படி 1942 ஆகஸ்ட் புரட்சியை விட இது கடுமையாக இருந்தது. வெள்ளையனே வெளியேறு இயக்கம் நகரத்தில் மட்டும் இருந்தது... மொழிக் கிளர்ச்சி நகர எல்லையைத் தாண்டி கிராமத்துக்கும் பரவியது” என்று அன்று ‘ஸ்டேட்ஸ்மேன்’ பத்திரிகை எழுதியது.

1965 ஜனவரி 25 முதல் மார்ச் 15 வரை 50 நாட்கள் தமிழகம் அனலாய் அச்சம் தரத்தக்க மாநிலமாய் மாறிப்போனது. தமிழகத்தில் அப்போது இருந்த 33 ஆயிரம் காவலர்கள் போதாது என்று ஆந்திரா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து காவலர்கள் வரவழைக்கப்பட்டார்கள். இவையும் போதாது என்பதால் 5 ஆயிரம் ராணுவ வீரர்கள் வந்தார்கள். தமிழகத்தின் பள்ளி, கல்லூரி மாணவர்களை அடக்க ராணுவம் முதன்முதலாக தமிழகத்துக்குள் வந்தது.

தமிழ்நாட்டில் 40 இடங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. 70 இடங்களில் கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டன. 400-க்கும் மேற்பட்டவர்கள் இறந்தார்கள். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தார்கள். கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்ட 5 ஆயிரம் பேரில் 2 ஆயிரம் பேர் 16 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள். 25 அஞ்சல் நிலையங்கள் தாக்கப்பட்டன. 5 அஞ்சல் நிலையங்களுக்குத் தீ வைக்கப்பட்டன. 8 பேருந்துகளுக்குத் தீ வைக்கப்பட்டன. 25 புகை வண்டி நிலையங்கள் தாக்கப்பட்டன. 10 புகை வண்டி பெட்டிகளுக்கு தீ வைக்கப்பட்டன. 5 அரசு அலுவலகங்களும், ஒரு தொலைபேசி நிலையமும் கொளுத்தப்பட்டன. 5 காவல் நிலையங்கள், ஒரு பஞ்சாலை, ஒரு திரையரங்கம் தீ வைக்கப்பட்டன.

பிப்ரவரி 10 முதல் மார்ச் 2-ம் நாள் வரை தமிழகத்தில் அரசுப் பேருந்துகள் ஓடவில்லை. ஒருவார காலத்துக்கு சென்னையில் எந்தப் பேருந்தும் ஓடவில்லை. மின்சார ரயில் நிறுத்தப்பட்டது. ஒருவார காலத்துக்கு தமிழகத்தில் அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டன.

கீழப்பளுவூர் சின்னச்சாமி, சென்னை சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், ஆசிரியர் வீரப்பன், மாயவரம் சாரங்கபாணி, கீரனூர் முத்து, சத்தியமங்கலம் முத்து ஆகியோர் மொழி காக்க தீ குளித்தும், நஞ்சு அருந்தியும் உயிர் மாய்த்தார்கள். இரண்டு சப் இன்ஸ்பெக்டர்கள், 2 காவலர்கள் கொலை செய்யப்பட்டார்கள். 200-க்கும் மேற்பட்ட காவலர்கள் காயம் அடைந்தார்கள். மதுராந்தகம் இன்ஸ்பெக்டர் புத்திரசிகாமணி, தனது துப்பாக்கியைவைத்து தபால் நிலையத்தில் இருந்த இந்தி எழுத்தைப் பார்த்து சுட்டுத்தள்ளினார்.

சென்னை - மாநிலக் கல்லூரி, சட்டக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, லயோலா கல்லூரி, மதுரை - தியாகராயர் கல்லூரி, தியாகராயர் பொறியியல் கல்லூரி, திருச்சி - நேஷனல் கல்லூரி, ஜமால் முகமது கல்லூரி, சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி, கோவை - நிர்மலா கல்லூரி, அவினாசிலிங்கம் குடும்ப இயல் கல்லூரி, நெல்லை - செயின்ட் சேவியர்ஸ், செயின்ட் ஜான்ஸ், மதிதா இந்துக் கல்லூரி, சிதம்பரம் - அண்ணாமலைப் பல்கலைக்கழகம், காரைக்குடி- அழகப்பா பல்கலைக்கழகம், நாகர்கோவில் - இந்துக் கல்லூரி, தஞ்சை - கரந்தை புலவர் கல்லூரி, பேரூர் - தமிழ்க் கல்லூரி, ராஜபாளையம் - ராமசாமி ராஜா தொழில்நுட்ப கல்லூரி, விருதுநகர் - செந்தில்குமார நாடார் கல்லூரி, திண்டுக்கல் சி.டி.என் கல்லூரி - என தமிழ்நாட்டு மாணவச் சமுதாயம் அனைத்தும் தமிழுக்காகக் களத்தில் நின்றது. கல்லூரி மாணவர்கள் மட்டுமல்ல, பள்ளி மாணவர்களும் புற்றீசல்போலப் புறப்பட்டார்கள். பிப்ரவரி 13-ம் நாள் மட்டும் தமிழகத்தில் 1,028 பள்ளிச் சிறுவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

உலகப் பத்திரிகையாளர்கள் அனைவரும் தமிழ்நாட்டை நோக்கிவர ஆரம்பித்தார்கள். அன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த பக்தவத்சலம், இதனை வெறும் சட்டம் - ஒழுங்குப் பிரச்னையாக மட்டும்தான் பார்த்தார். அன்று முக்கியக் கட்சியாக வளர்ந்து கொண்டு இருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தூண்டுதலால் மாணவர்கள் போராடுகிறார்கள் என்று நினைத்தார். ‘‘இந்தப் போராட்டத்தை காங்கிரஸ் தொண்டர்கள் பார்த்துக்கொள்வார்கள்” என்று அறிவித்தார். மாணவர்கள் மிகச் சாதாரணமாக நடத்திய முதல்கட்ட ஊர்வலங்களின் மீது காங்கிரஸ்காரர்கள் சிலர் செருப்பு வீசியதும், கல் கொண்டு தாக்கியதும் எரியும் நெருப்புக்கு எண்ணெய் வார்ப்பதாக மாறும் என்பதை பழுத்த அனுபவஸ்தரான பக்தவத்சலத்தால் உணர முடியவில்லை.

அது தி.மு.க நடத்திய போராட்டம் அல்ல... பிப்ரவரி 6-ம் தேதி இந்தி எதிர்ப்புப் போராட்ட மாணவர் தலைவர்களை அழைத்துப் பேசிய அண்ணா, ‘‘போராட்டம் எல்லை மீறி போய்க்கொண்டு இருக்கிறது. எனவே, போராட்டத்தை நிறுத்துங்கள்” என்று கேட்டுக்கொண்டார். இதனை மாணவர் தலைவர்கள் ஏற்கவில்லை. அண்ணா சொன்னதற்குப் பிறகு தான் போராட்டமே தீவிரம் பெற்றது. போராட்டத்தை முன்னெடுத்த தஞ்சை எல்.கணேசனும், விருதுநகர் சீனிவாசனும்தான் தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள். மீர்சா, ராமன் போன்றவர்கள் காங்கிரஸ்காரர்கள். போராட்டத் தலைவரான ரவிச்சந்திரன் கட்சி சார்பற்றவர்.

தவத்திரு குன்றக்குடி அடிகளார் ஊர்வலம் சென்றதால் கைது செய்யப்பட்டார். போராட்டத்தைத் தூண்டியதாக முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் கைது செய்யப்பட்டார். மாணவர்களின் போராட்டத்துக்குப் பின்னணியில் இருந்ததாக மதுரை தியாகராயர் கல்லூரிப் பேராசிரியர் சி.இலக்குவனார் கைது செய்யப்பட்டார். நெல்லை மதிதா இந்துக் கல்லூரி துணை முதல்வர் கே.அருணாசல கவுண்டர் கைதுசெய்யப்பட்டார். ஏராளமான தமிழாசிரியர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

1937-ம் ஆண்டு தமிழகத்தில் இந்தியைப் புகுத்தி கொந்தளிப்பைத் தொடங்கி வைத்த மூதறிஞர் ராஜாஜி, 1965 இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தை ஆதரிக்கும் அணியில் இருந்தார். திருச்சியில் நடந்த இந்தி எதிர்ப்பு மாநாட்டில் பேசிய ராஜாஜி, ‘‘வடநாட்டவர் கையில் உள்ள மத்திய அரசு, இந்தியை மட்டும் ஆட்சி மொழியாக்குவதைத் தொடர்ந்து அமல்செய்தால் இந்தியத் துணைக் கண்டம் 15 பகுதிகளாகத் தனித்துப் பிரிந்துவிடும். இதுவரை எனக்குப் பிரிவினை எண்ணம் துளிர்விடவில்லை. ஆனால், அண்மைக் காலத்தில் அரசு நடவடிக்கைகளால் அப்படியொரு பிரிவினை உணர்வு என் உள்ளத்தில் தோன்றி வளர்ந்து இருக்கிறது” என்று பேசினார். ‘‘இந்தித் திணிப்பு என்பது புத்திசாலித்தனமற்றதும் அநியாயமானதும் பாரபட்சமுள்ளதும், அடக்குமுறையைக் கொண்டதுமான ஒரு நடவடிக்கை” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்ட மாநாட்டில் தமிழகத்தின் மிக முக்கியத் தொழிலதிபரான கருமுத்து தியாகராஜ செட்டியாரும், புகழ்பெற்ற அறிவியல் மேதை ஜி.டி.நாயுடுவும் கலந்து கொண்டனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ-வாக இருந்த பொள்ளாச்சி மகாலிங்கம் உண்ணாவிரதம் இருந்தார். மத்திய அமைச்சர்களாக இருந்த கி.சுப்பிரமணியம், ஓ.வி.அழகேசன் ஆகியோர் தங்கள் பதவியைவிட்டு விலகினார்கள். தமிழக நிலைமைகளைப் பார்த்து உண்ணாவிரதம் உட்கார்ந்த வினோபா, ‘‘ஆங்கிலம் வேண்டுவோர் மீது இந்தி திணிக்கப்படவும் கூடாது; இந்தி விரும்புவோர் மீது ஆங்கிலம் திணிக்கப்படவும் கூடாது” என்று கோரிக்கை வைத்தார்.

ஆனால் பக்தவத்சலம், இது தி.மு.க-வின் தூண்டுதல் என்று மட்டுமே பார்த்து கலைஞர் கருணாநிதியை கைதுசெய்து பாளையங்கோட்டை சிறையில் வைத்தார். தி.மு.க-வின் தூண்டுதலால் மாணவர்கள் காலித்தனம் செய்வதாகத் தந்தை பெரியார் குற்றம்சாட்டினார். ‘இது இந்தி எதிர்ப்பு அல்ல; காங்கிரஸ் எதிர்ப்பு’ என்று அவர் விளக்கம் அளித்தார். தி.மு.க மீதான கோபம் பெரியாரை இப்படிப் பேசவைத்தது. தி.மு.க-வையும் ராஜாஜியின் சுதந்திரா கட்சியையும் தடை செய்யச் சொன்னார் பெரியார். ராஜாஜி கேட்டுக் கொண்ட பிறகும், அண்ணா வேண்டுகோள் வைத்த பிறகும் போராட்டம் நிறுத்தப்படவில்லை என்பதை தந்தை பெரியாரும், பெரியவர் பக்தவத்சலமும் உணரவில்லை. ஏனென்றால், தமிழ்நாட்டு மாணவர்கள் தங்கள் தலைவிதியைத் தீர்மானிக்கும் போராட்டமாக இதை நினைத்தார்கள்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 17-வது பகுதியில் 343 முதல் 351 வரையிலான விதிகள் ஆட்சி மொழி (official Language) பற்றிப் பேசுகிறது. இதன்படி மத்திய அரசின் ஆட்சி மொழியாக தேவநாகரி லிபியைக் கொண்ட இந்தி இருக்கும். இந்தியை முழுமையாகக் கொண்டு வருவதற்கு முன்னதாக 15 ஆண்டு காலத்துக்கு ஆங்கிலத்தை நிர்வாக நடவடிக்கைகளுக்கு (For all official purposes of union) ஆங்கிலத்தைப் பயன்படுத்த வேண்டும் என்கிறது அரசியலைப்புச் சட்டம். 15 ஆண்டுகள் என்றால், 1965 வரை என்று பொருள்.

இந்தி ஆட்சிமொழி என்பதால், அதனை வளர்த்தெடுக்க பல்வேறு முயற்சிகளை மத்திய அரசு செய்தது. அப்போதெல்லாம் கடும் எதிர்ப்பைத் தமிழகம் தெரிவித்தது. ‘‘இந்தி பேசாத மாநில மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமே நீடிக்கும்” என்று பிரதமர் நேரு கூறினார். ‘‘எவ்வளவு காலத்துக்கு மக்கள் விரும்புகிறார்களோ அதுவரையில் ஆங்கிலம் இருக்க வேண்டும். அதற்கான முடிவு கூறும் உரிமையை இந்தி பேசும் மக்களிடம் விடமாட்டேன். இந்தி பேசாத மக்கள்தான் முடிவு எடுக்க வேண்டும்” என்று நாடாளுமன்றத்தில் (1959 ஆகஸ்ட் 7) பிரதமர் நேரு கூறினார். நேருவின் மறைவுக்குப் பிறகு பிரதமர் ஆன லால்பகதூர் சாஸ்திரி காலத்தில் இந்த உறுதி மொழி மீறப்பட்டது. இந்தியும் ஆங்கிலமும் ஆட்சிமொழி என்று சொல்லாமல், இந்தி ஆட்சி மொழி, ஆங்கிலமும் அத்தோடு இருக்கலாம் என்று ஆட்சிமொழி ஆட்சிக் குழு கூறியது. இதன்படி 1965 ஜனவரி 25 முதல் இந்தி ஆட்சிமொழி ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுவிட்டது.

தமிழ் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்படும் என்பதல்ல, மாணவர்களது பயம். இந்தி படிக்காதவர்கள் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்று தமிழ்நாட்டு மாணவர்கள் பயந்தார்கள். அதனால்தான் இதனை தங்கள் வாழ்க்கைப் பிரச்னையாக, எதிர்காலப் பிரச்னையாக மாணவர்கள் பார்த்தார்கள்.

ஆக்ஸ்போர்டு எழுத்தாளர்களில் ஒருவரான மைக்கேல் பிரீச்சர் (Michael Brecher) எழுதினார். ‘‘1965-ல் இந்திய மக்கள்தொகையில் 8 சதவிகித அளவே உள்ள தமிழர்கள், அனைத்திந்திய வேலைவாய்ப்புகளில் 18 சதவிகித இடங்களைப் பெற்றிருந்தனர். இதற்கும் மேலாக மிக உயர்ந்த பதவிகளையும் வகித்து வந்தனர். இவ்வளவும் ஆங்கிலத்தில் அவர்களுக்குள்ள திறமையினால் தான் கிடைத்தது. இந்தி ஆட்சிமொழியானால், ஆங்கிலம் படித்த தமிழர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறிவிடும்” என்று எழுதினார்.

இந்திபேசும் மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டுக்கு வேலை தேடி வருவதையும் உலகம் முழுக்கச் சென்று தமிழர்கள் வேலைவாய்ப்பைப் பெறுவதையும் ஒப்பிட்டுப் பார்த்தால், இந்தித் திணிப்பு எதிர்ப்புத் தியாகிகளின் தியாகம் உணரலாம்.

- ப.திருமாவேலன்

ஹிந்தி ஹிந்தியா மொழிப்போர் 1965

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக