திங்கள், 10 பிப்ரவரி, 2020

ஈவேரா சிந்தனை ஹிந்தி வேண்டாம் தமிழ் பரவாயில்லை ஆங்கிலம் சிறந்தது




aathi tamil <aathi1956@gmail.com>

சனி, 4 ஆக., 2018, பிற்பகல் 3:23





பெறுநர்: எனக்கு




எழுத்தாளர்: பெரியார் பிரிவு: ஏப்ரல்10வெளியிடப்பட்டது: 20 ஏப்ரல் 2010


தமிழ் மொழி

இதுதான் பெரியாரின் மொழிக்கொள்கை


மொழி என்பது ஒரு மனிதனுக்கு அவ்வளவு முக்கியமான சாதனம் அல்ல. அது இயற்கை ஆனதும் அல்ல. அதற்கு ஒரு கட்டாயமும் தேவையில்லை.

மொழி மனிதனுக்குக் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் அளவுக்கு விசயங்களைப் புரிந்துகொள்ள வாய்ப் பளிக்கும் அளவுக்குத் தேவையானதே ஒழிய பற்றுக் கொள்வதற்கு அவசியமானது மல்ல.

மொழியானது சமுதாயத்திலுள்ள சூழ்நிலைக்கு ஏற்றதே ஒழியப் பொதுவாழ்வுக்கு உணர்ச்சிக்கு ஏற்றது அல்ல.

இந்தக் கருத்துக்களை முக்கியமாகக் கொண்டுதான் நாம் நமக்கு எந்த மொழி வேண்டும் என்பது பற்றிச் சிந்திக்க வேண்டியவர்களாய் இருக்கிறோம்.

நமக்குச் சொந்த மொழி என்பது பிறந்த “ஜாதி’’யின் காரணமாக, எனக்குக் கன்னடம், உங்களுக்குத் தெலுங்கு, மற்றப் பெரும்பாலான மக்களுக்குத் தமிழ் நாட்டுக்கு உரியது அதாவது பெரும்பாலான மக்கள் பேசுவது தமிழ்.

தமிழ்நாட்டில் இருந்துகொண்டு - தமிழ்நாட்டைப் பற்றி நினைத்துக் கொண்டு - தமிழ் நாட்டுக்கு ஒரு மொழி அரசியலுக்கானாலும், இலக்கியத்திற்கானாலும், போதனைக்கானாலும் ஒரு மொழி வேண்டுமானால் நாம் தெரிந்தெடுக்க வேண்டியது தமிழ்மொழி என்பதாகத்தான் தோன்றும். அது ஓரளவுக்கு நியாயமாகும். ஆனால் நாடு நம்முடைய சொந்த நாடு ஆனாலும் ஆட்சி தமிழர்களல்லாத அன்னியர்களுடைய ஆட்சியாக இருப்பதால், அந்த அன்னியர்கள் பல நாடுகளை ஒன்று சேர்த்து அடக்கி ஆள்பவர்களாக இருப்பதனால் அவர்களுடைய ஆட்சி நிலைப்பிற்கும் வசதிக்கும் ஏற்றபடி ஏதேதோ காரணங்களைச் சொல்லிக்கொண்டு அன்னியமொழியாகிய இந்தி மொழி என்பதுதான் ஆட்சி மொழியாகவும், கல்லூரி போதனா மொழியாகவும் பள்ளிகளில் கட்டாய மொழியாகவும் கூட இருக்கவேண்டும் என்று ஆட்சியாளர்களால் வலியுறுத்தும்படியான நிலைமை நம் நாட்டுக்கு ஏற்பட்டுவிட்டது. இது நமக்கு ஒரு மாபெரும் கெட்ட வாய்ப்பும் வெட்கப்படத்தக்கதுமான சம்பவம் ஆகும்.

இந்த நாட்டில் மேற்கண்டபடி இந்தி மொழி கட்டாய மொழியாக ஆக்கப்பட வேண்டும் என்பதற்கு அரசாங்கமும் இந்த நாட்டுப் பார்ப்பனர்களும் அவர்களது அருளால் பிழைக்க வேண்டும் என்கின்ற நிலையில் உள்ளவர்கள் பெரும்பாலோரும் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் இந்தியைப் புகுத்தவும் கட்டாயப்படுத்தவும் இவைகளுக் காகப் பல தந்திரமான வழிகோலவும் துணிந்து முன்வந்திருக்கிறார்கள்.

அதுபோலவே தமிழ் மொழியை அரசியல் மொழியாகவும், பள்ளிகளில் கட்டாய மொழியாகவும் இன்னும் இலக்கிய மொழியாகவும் இருக்க வேண்டுமென்று தமிழர்களிடையே அரசியல்வாதிகள் என்போர்களும் பொதுநலச் சேவை செய்கிறவர்கள் என்பவர்களும் மற்றும் புலவர்கள் என்பவர்களும், இலக்கிய வாழ்வுக்காரர்களும் மொழிப்பற்று என்பதைச் சமயப்பற்று போல் முக்கியப் பற்று என்று கருதுகிறவர்களும் வலியுறுத்துகிறார்கள். முயற்சிக் கிறார்கள். கிளர்ச்சி வயப்பட்டவர்கள் இதற்காகக் கிளர்ச்சிகளும் செய்கிறார்கள்.

என்னைப் பொறுத்தவரையிலும் இந்த இரண்டு மொழிகள் பற்றியும் கவலையுமில்லை; பிடிவாதமுமில்லை. இவற்றுள் இந்தி எந்த வகையிலும் கண்டிப்பாக நமக்குத் தேவையில்லை என்பதோடு, கண்டிப்பாக நம் நாட்டிற்குள் இந்தியைப் புகவே விடக் கூடாது என்பது எனது கருத்தாகும். எந்தத் துறையில் இந்தி நமது நாட்டிற்குள் புகுந்தாலும் சமசுகிருதத்தினால் தமிழர்களும் தமிழ்நாடும் இன்று என்ன நிலைமைக்கு வந்து தொல்லையும், மடமையும், இழிவும் அனுபவிக்கிறார்களோ, சற்றேறக்குறைய அந்த நிலைமைக்குத்தான் நம்மைக் கொண்டு போய் விடும் என்பது எனது துணிபு. இந்தி தமிழ்நாட்டையும் தமிழனையும் வட நாட்டானுக்கு, பார்ப்பனருக்கு அடிமைப்படுத்துவதல்லாமல் வேறு எந்தக் காரியத்திற்கும் பயன்படாது. இந்தி ஆட்சி மொழியாய் இருக்கிறதே என்றால் நாம் உலகம் உள்ள அளவும் வடநாட்டானுக்கு அடிமையாக இருப்பது என்று முடிவு செய்து கொண்டோமா? தமிழ்நாடு ஒரு நாளைக்கும் அன்னியன் ஆதிக்கம் இல்லாத சுதந்திர நாடாக இருக்கக் கூடாது என்பதுதான் தமிழ்நாட்டின் தலைமையா? அப்படி இல்லையென்றால் இன்றைய அன்னிய நாட்டான் ஆதிக்க ஆட்சியைத் தற்கால ஆட்சி என்று தானே சொல்ல வேண்டும்?

மற்றும் இந்தி மொழி கலாசாலை போதனைக்கோ, இலக்கிய போதனைக்கோ, ஆட்சி முறை போதனைக்கோ, வேறு மொழியிலிருந்து இந்தி மொழியில் மொழிபெயர்த்து நம் நாட்டிற்குள் புகுத்த வேண்டிய அளவில்தான் இருக்கிறதே தவிர மற்றப்படி மூலநிதி (பொக்கிசம்) என்ன இருக்கிறது? இன்று சட்ட அறிவோ, கலை அறிவோ, பொறி இயல் அறிவோ, வைத்திய அறிவோ, விஞ்ஞான அறிவோ அளிக்கத்தக்க நேரிடைச் சாதனம் இந்திக்கு என்ன இருக்கிறது?

நிற்க. தமிழை எடுத்துக் கொண்டாலும் இன்று உலக ஞானத்தில் முற்போக்குத் தன்மையில் தமிழுக்கு என்ன சிறப்பு இருக்கிறது? தமிழனுக்கு முதலாவது தெளிவான, நேரான சரித்திரம் இல்லை.

தமிழனுக்கு அதுபோலவே சமய ஞான சாதனமும் இல்லை. இவை மாத்திரமல்லாமல் தமிழனுக்கு என்று ஆரிய ஆதிக்கமும் கலப்பும் அற்ற இலக்கியமும் இல்லை. அதாவது ஆரிய வரவுக்கு முந்தியது என்று சொல்லத்தக்க வண்ணம், விவகாரத்திற்கு இடமில்லாத தன்மையில் எதுவும் கிடைப்பது மிக்க அருமையாகத்தான் இருக்கிறது. தமிழ்மொழி வேண்டுமானால் ஆரியத்திற்கு முந்தியது என்று ஒப்புக் கொள்ளலாம். அதுவும் தமிழனுக்கு இன்றளவு என்ன பலனைக் கொடுத்திருக்கிறது? விஞ்ஞானத்திற்குச் சிறிதும் பயன்படத்தக்கதாய் இல்லை. அறிவுக்கும் தக்கபடி பயனளிக்க முடியவில்லை. தமிழ்மொழி ஏற்பட்டுப் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகியும் அதைத் தாய் மொழியாகக் கொண்ட தமிழன், இன்றும் இந்த விஞ்ஞானப் பரவல் காலத்திலும், உலகில் எங்கும் இல்லாத அளவுக்கு மூட நம்பிக்கை (மடமை) உடையவனாகவும், மான உணர்ச்சி என்பது நூற்றுக்கு எழுபத்தைந்து பாகம் இல்லாத வனுமாக இருந்து வருகிறான். மனித வாழ்வுக்கு மொழி முக்கிய மென்றால், உலக மற்ற மொழி நாடுகளைக் காணும் போது தமிழ்நாட்டுக்குத் தமிழ் மொழி என்ன பயன் அளித்திருக்கிறது?

தமிழை வளர்க்க வேண்டும் என்பதெல்லாம் கலைத் துறையிலோ விஞ்ஞானத் துறையிலோ, மற்றும் சில துறைகளிலோ வேறு மொழிகளிலிருந்து மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்கின்ற நிலைமைதானே தமிழுக்கும் இருக்கிறது? ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தமிழ் மொழி யிலாகட்டும், பொருளில் ஆகட்டும், எழுத்தில் ஆகட்டும், வேறு துறையில் ஆகட்டும் எவ்வித முன்னேற்றமும் மாறுதலும் அடையவில்லை. உலகத்திலே நீதி சிறந்த இலக்கியம் குறள் தமிழில் உள்ளது. அது துருப்பிடித்து விட்டது. என் அனுபவத்திற்கெட்டிய வரையில் உலகத்திலே சிறந்த துறை அறிவு தமிழில் உள்ள கணக்கு முறை (கணித முறை). அதாவது இளஞ்சுவடி என்றும், எண் கணக்கு என்றும் சொல்லக்கூடிய இலக்க முறை. அது குப்பைக்கே போய் விட்டது. இது இரண்டையும் கழித்து விட்டால் தமிழில் இருந்து தமிழன் தெரிந்து கொள்ளத் தக்கதோ, தமிழனுக்குப் பயன்படக் கூடியதோ எதுவும் தென்படவில்லை. தமிழும் தமிழனும் பெரும்பாலும் பழங்காலச் சின்னமாகக் காணப்படுகிறது.

தமிழனின் பேச்சு மொழி, தாய்மொழி தமிழ் என்பதைத் தவிர, தமிழருக்கு வேறு உலக முக்கியத்துவம் எதுவும் எனக்குத் தென்படவில்லை. மற்றப்படி தமிழ்நாட்டுக்கு, தமிழருக்கு வேறு எந்த மொழி தேவையானது, நல்லது, அரசியல், விஞ்ஞானம், இலக்கியம், கலை முதலி யவைகளுக்கு ஏற்றது, பயன்படக் கூடியது என்று என்னைக் கேட்டால், எனக்கு ஆங்கில மொழிதான் சிறந்தது என்று தோன்றுகிறது. இது எனக்குச் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னமேயே (அதாவது 1931லேயே) தோன்றிய எண்ண மாகும். நான் 1939இல் (என்பதாக ஞாபகம்) கோவைக் கல்லூரியில் அதன் பிரின்சிபால் திரு. கிருட்டிணமூர்த்தி அய்யர் - 1964 (காலஞ்சென்ற அய்க்கோர்ட் சட்ச் சதாசிவ அய்யர் குமாரர்) தலைமையின் கீழ்க் கல்லூரி மாணவர்கள் முன்னிலையில் பேசும்போது எடுத்துச் சொல்லியிருக்கிறேன். அந்தச் சமயம் நான் இந்தி எதிர்ப்புக்காகச் சிறை சென்று, சிறையிலிருந்து விடுதலையாகி வந்த பிறகு கல்லூரி மாண வர்களால் அழைக்கப்பட்டு, மொழி என்னும் தலைப்பில் பேசிய பேச்சில் குறிப்பிட்டிருக்கிறேன். அத்தலைப்பில் ‘மொழியின் பயன் என்ன?’ ‘பயனுக்கேற்ற மொழி எது?’ என்று இரண்டுபிரிவாய்ப் பிரித்துக் கொண்டு பேசியிருக்கிறேன். அப்பேச்சில் ஆங்கில எழுத்துக்களையே தமிழ் எழுத்துக்களுக்கு நெடுங்கணக்காக, அகர வரிசையாக எடுத்துக் கொள்ளலாமென்றும் தமிழ் உச்சரிப்புக்கேற்ற எழுத்து ஆங்கிலத்தில் ஏதாவது ஒன்றிரண்டு குறையுமானால் அதற் கேற்ற தமிழ் எழுத்தையே எடுத்துக் கொள்ளலா மென்றும் சொன்னதோடு, மற்றும் ஆங்கிலமே தமிழனின் பேச்சு மொழியாக ஆகும்படியான காலம் ஏற்பட்டால் நான் மிகமிக மகிழ்ச்சியும் திருப்தியும் அடைவேனென்றும் பேசி யிருக்கிறேன். மற்றும் சென்னை விக்டோரியா மெமோரியல் ஆலில் 6, 7 வருடங்களுக்கு முன் கூடிய இந்தி எதிர்ப்புக் காகக் கூட்டப்பட்ட கூட்டத்தில் நான் பேசும்போதும் இதே மாதிரி ஆங்கிலம் பேச்சு மொழியாக ஆக்கப்படுவதற்கு ஒரு தீர்மானம் வருமானால் நான் அதற்கு ஓட்டு கொடுப்பேன் என்று சொல்லிவிட்டு ஆங்கிலந்தான் அரசாங்க மொழியாக இருக்க வேண்டும் என்று சொன்னேன்.

என்னைத் தவிர அந்தக் கூட்டத்தில் பேசியவர்கள் எல்லோரும் தோழர்கள் சிவஞான கிராமணியார், அண்ணா துரை முதலியவர்கள் ‘இந்தி கூடாது, தமிழ்தான் அரசியல் மொழியாக இருக்க வேண்டும்’ என்று பேசினார்கள். என்றாலும் கிராமணியார் பேசும்போது சிறிது என்னைத் தாக்குகிற மாதிரியில் “பெரியார் ஆங்கிலம்தான் தமிழ் நாட்டிலும் அரசியல் மொழியாக இருக்க வேண்டும் என்று பேசினார் என்றாலும், அவர் உள்ளம் அதற்குச் சம்மதிக்காது’’ என்று பேசினார். அண்ணாதுரை பேசும்போது, ‘இந்தி கூடாது; தமிழ் ஆட்சி மொழியாய் இருக்க வேண்டும்’ என்கிற அளவுக்குப் பேசிவிட்டு வெளியில் வந்தவுடன் கூட்டம் கலைந்து என் வண்டியில் ஏறியவுடன் என்னைப் பார்த்து, ‘தமிழ் நாட்டில் ஆங்கிலம் ஆட்சி மொழியாக இருக்க வேண்டுமென்று நீங்கள் சொன்னதனால் எல்லோரும் ஒன்றும் பேசாமல் வாய்மூடிக் கொண்டிருந்தார்கள். நாங்கள் யாராவது பேசியிருந்தால் கூட்டத்தில் பெரிய கலவரம் செய்திருப்பார்கள்’ என்று சொன்னார்.

இது மாத்திரமல்லாமல் சமீபத்தில் 5, 6 மாதங்களுக்கு முன்னால் (அதாவது 1956இல்) நுங்கம்பாக்கத்தில் திருவாளர் ஏ. சுப்பையாபிள்ளை அவர்கள் பங்களாவில் இந்தி எதிர்ப்புக் கூட்டம் என்பதாக ஒரு கூட்டம் கூட்டப்பட்ட காலத்தில் எல்லாக் கட்சிக்காரர்களும் வந்திருந்தார்கள். (அதாவது 1931லேயே)

அந்தக் கூட்டத்தில் பேசிய திருவாளர் சி. ராஜ கோபாலாச்சாரியார் அவர்கள் ‘தமிழ்நாட்டுக்கு ஆங்கிலமே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும்’ என்றும் பேசினார். ஆங்கிலமே போதனா முறையாக இருக்க வேண்டும் என்றும் பேசினார். பிறகு நான் பேசும் போதும் அதுபோலவே பேசிவிட்டு, ஆங்கிலம் பேச்சு மொழியாக இருந்தாலும் மிகவும் பயன்படும் என்று சொன்னேன்.

அது சமயம் இப்படி நான் சொல்லுவதில் மொழி வெறியர்கள் சிலர் என்னை நீ யாருக்கு பிறந்தாய் என்று கூடக் கேட்டார்கள். அந்த மொழியைப் பேச வேண்டும் என்று சொல்வதனால் நாம் ஆங்கிலேயனுக்குப் பிறப்ப தானால் மற்றப்படி காப்பி குடிப்பது முதற்கொண்டு ரயில், ஆகாயக் கப்பல், ரேடியோ, டெலிபோன், மருந்து முதலியவைகள் ஆங்கிலேயனுடையவை என்று தெரிந்து அனுபவிக்கிற நாம் எத்தனை தடவை ஆங்கிலேயனுக்குப் பிறந்தவர்களாவோம் என்பதைச் சிந்தித்துப் பார்த்தால் மொழி பேசுவதனால் ஆங்கிலேயனுக்குப் பிறந்தவனாக மாட்டோம் என்று சொன்னேன்.

கடைசியாக தமிழின் மூலமோ, தமிழ் இலக்கியத் தின் மூலமோ தமிழ்ச் சமயம், தமிழ்ப்பண்பாடு மூலமோ நாம் உலக மக்கள் முன்னணியில் ஒரு நாளும் இருக்க முடியாது. தமிழ் வடமொழியைவிட, இந்தி மொழியை விடச் சிறந்ததென்பதிலும், பயன்படத் தக்கது என்பதிலும் எனக்கு ஐயமில்லை என்றாலும், நாம் இன்றைய நிலைமை யைவிட வேகமாக முன்னேற வேண்டுமானால் ஆங்கிலம் தான் சிறந்த சாதனம் என்றும், ஆங்கிலமே அரசியல் மொழி யாகவும், போதனா மொழியாகவும் இருந்தாக வேண்டும் என்றும், ஆங்கில எழுத்துக்களே தமிழ் நெடுங்கணக்கு எழுத்துக்களாவது அவசிய மென்றும், ஆங்கிலமே நம் பேச்சு மொழி ஆவது நலம் பயக்கத்தக்கது என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.





இன்றைய தேவை ஆங்கிலம்
நாம் இன்றைய நிலைமையைவிட வேகமாக முன்னேற வேண்டுமானால் ஆங்கிலம்தான் சிறந்த சாதனம் என்றும், ஆங்கிலமே அரசியல் மொழியாகவும், போதனை மொழியாகவும் இருந்தாக வேண்டுமென்றும், ஆங்கில எழுத்துக்களே தமிழ் நெடுங்கணக்கு எழுத்துக்களாவது அவசியம் என்றும், ஆங்கிலமே நம் பேச்சு மொழியாவது நலம் பயக்கும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.

– ‘மொழியும் அறிவும்’ நூலில் பெரியார்




(மொழிநடை மாற்றாமல் கொடுக்கப் பெற்றுள்ளது)

நன்றி - கலைக்கதிர், திசம்பர் 1956

1 கருத்து: