செவ்வாய், 21 மார்ச், 2017

தெ.பொ.மீ தனித்தமிழ்நாடு சென்னை மீட்பு 1956 தெபோமீ மபொசி

aathi tamil aathi1956@gmail.com

22/8/16
பெறுநர்: எனக்கு
Kathir Nilavan
சென்னை -377வது பிறந்த நாள்
தலையினை மீட்டுத்தான் தலைநகரைக் காக்க வேண்டும்! -தொ.பொ.மீ.
"தலையினைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்" எனத் 'தமிழ்முரசு'
முழங்குகிறது. எதுகை மோனையின் இன்பநயம் ததும்பும் தமிழின் இனிமை மட்டுமா
இந்த முழக்கத்தில் எழுகின்றது? தமிழ் இரத்தத்தின் தனி வீரமும்
தழைத்தோங்கிக் கொதித்து எரிகிறது.
கனக விசயர் தலையை நொறுக்கிய செங்குட்டுவன் வீரம், கலிங்கம் வென்ற
கருணாகரத் தொண்டைமானின் வீரம், கப்பலோட்டிக் கடலாண்ட பழந்தமிழ் வீரம்,
கப்பலோட்டிக் கல்லுடைத்த புதுத் தமிழ்ச் சிதம்பரனார் வீரம், நேற்றைய
போரிலே நிலத்திலும் நீரிலும் நெடு வானிலும் நின்றோங்கிய பெரு வீரம் -நல்ல
காலம் இவை எல்லாம் நாடறிந்த உண்மையாக விளங்குகின்றன.
யார் அறியார்? ஆந்திரரும் அறிவர். அது கொதித்தெழுந்தால் அடக்க முடியாதென
அவரும் அறிவர். தமிழன் தூங்கினால் பிரகாசனார் துள்ளலாம்.
விழித்தெழுந்தால் என்ன ஆகும் என்று ஆந்திரம் அறிய வில்லையா? கடல்
கொதித்தால் வளாவ நீர் ஏது? வெட்டிக் குவிக்கத் தலை வேண்டாம்; எண்ணிப்
பார்க்கவே தலை வேண்டும்.
தமிழன் தலையில் உள்ள தனிப்பெரும் மூளை வேலை செய்யத் தொடங்க வேண்டும்.
தமிழன் தன் அருமந்த தலையை யார் யாருக்கோ அடகு வைத்திருக்கின்றான்.
திராவிடருக்கு, ஆரியருக்கு, வடவருக்கு, வெள்ளையருக்கு -இன்னும் எத்தனையோ
பேருக்கு அடகு வைத்திருக்கிறான்.
மொழிவழி நாடு என்ற உண்மையை ஆந்திரும் கேரளரும் கன்னடரும் உணர்ந்திருப்பது
போலத் தமிழன் உணர வில்லை. தமிழ்நாட்டில் பல இடங்களில் என்ன காண்கிறோம்?
என்ன கேட்கின்றோம்? தமிழ்நாடு என்றால் "தமிழ்ஸ்தான்- பாகிஸ்தான்" என்று
கூறி விடுவதிலேயே அறிவின் அறுதியான எல்லை உண்டு என அக மகிழ்வோர் ஒரு
புறம்; திராவிட நாடு, இந்திய நாடு எனப் பேசுவதே அரசியல் அறிவொளி
வீசுவதாம் எனச் செருக்கித் திரிவோர் ஒருபுறம். ஆந்திர நாடு கன்னட நாடு
கேரள நாடு எனப் பேசுவது போலத் தமிழர் "தமிழ்நாடு" என ஒரு முகமாகப் பேசக்
காணோமே!
தமிழா எழுந்திரு! எதிர்காலத் தமிழ்நாட்டினைப் பற்றி எண்ணத் தொடங்கு!
தலையை அடகு வைத்தது போதும்! தலையை மீட்டுத் தலைநகரைக் காப்பாற்று!
- தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்.
குறிப்பு: ஆந்திரருக்கு எதிராக சென்னை மீட்பு இயக்கத்தை ம.பொ.சிவஞானம்
அவர்கள் 1947ஆம் ஆண்டு தொடங்கினார். அப்போது அவர் எழுப்பிய முழக்கம் தான்
"தலையைக் கொடுத்தேனும் தலை நகரைக் காப்போம்". அந்த முழக்கத்தை தனது
'தமிழ்முரசு' ஏட்டிலே தொடர்ந்து எழுதி தமிழர்களை விழிப்புணர்வு
கொள்ளும்படி தூண்டினார். அத்தோடு மற்றவர்களையும் 'தமிழ் முரசு' ஏட்டிலே
எழுத வைத்து வெளியிடவும் செய்தார். அப்படி எழுதியவர்களில் ஒருவர் தான்
'பன்மொழிப் புலவர்' தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் அவர்கள். 1.5.1947இல்
'தமிழ்முரசு' ஏட்டில் அவர் எழுதியதே மேற்கண்ட கட்டுரையாகும்.
2 மணிநேரம் · பொது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக