செவ்வாய், 21 மார்ச், 2017

ஜீவா தமிழ்ப்பற்று ஜீவானந்தம் தோழர் சீவானந்தம்

வாலறிவன் மற்றும் 34 பேர் உடன்
Kathir Nilavan.
'பொதுவுடைமைப் போராளி'
ப.சீவானந்தம் பிறந்த நாள்:
21.8.1907
தமிழ்நாட்டில் இந்தியப் பொதுவுடைமை இயக்கங்கள் தமிழ்மொழி, இனம், பண்பாடு
குறித்துப் பேசினாலே அது குறுகிய இனவெறி என்று முத்திரை குத்துகின்றனர்.
குறிப்பாக சி.பி.எம். கட்சி பாரதமாதாவின் பாதந்தாங்கி கட்சியாகவே
செயல்பட்டு வருகிறது. தமிழின உணர்வு என்றாலே அதற்கு வேப்பங்காய் தான்.
ஆனால் பழைய பொதுவுடைமை இயக்க வரலாறு அவ்வாறு இல்லை. இந்திய விடுதலை
இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதோடு தமிழ்மரபு வேர்களிலிருந்து
பொதுவுடைமைக் கருத்துகளை வெளிக் கொணர்ந்து தமிழர் நலன் நோக்கில் போராடிய
ஒரு மாபெரும் தலைவர் இருந்துள்ளார். அவர் பெயர் ப.சீவானந்தம்.
அவர் தொடக்கத்தில் காந்தியின் மீது ஈர்ப்பு கொண்டு கதராடை உடுத்திய படி
பேராயக் கட்சியில் பணியாற்றினார். இந்திய விடுதலைக்காக பிரித்தானியரை
எதிர்த்து சிறை சென்றார். பின்னர் தந்தை பெரியாரின் சுயமரியாதை
இயக்கத்தோடு தோழமை கொண்டார். பெரியாரின் குடியரசு ஏட்டில் தொடர்ந்து
எழுதினார். பகத்சிங் எழுதிய நான் ஏன் நாத்திகன ஆனேன்? நூலை எழுதியதற்காக
சிறை தண்டனை பெற்றார். சீர்திருத்தம், பொதுவுடைமை கருத்துகளை பரப்ப
அரசியல் அதிகாரம் தேவையென உணர்ந்து 'சமதர்ம கட்சி' யொன்றை பெரியாரோடு
இணைந்து உருவாக்கினார்.
பெரியார் பிரித்தானியர் ஆட்சிக்கு அஞ்சி பொதுவுடைமைக் கொள்கையை கைவிட்ட
போதிலும் அவர் கைவிட மறுத்தார். பொதுவுடைமை இயக்க கொள்கையை
தமிழ்நாடெங்கிலும் பரப்புரை செய்து மக்களிடையே கொண்டு சேர்த்தார்.
பொதுவுடைமை இயக்கம் பிரித்தானிய அரசால் தடைசெய்யப்பட்ட போதிலும்
தலைமறைவாக இயங்கி வந்தார்.
1957ஆம் ஆண்டில்
பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பின் இரட்டைத்தன்மை குறித்தும், அவரின் சாதி
ஒழிப்புக்கொள்கை குறித்தும் ஒரு பொதுக்கூட்டத்தி
ல் தோலுரித்துப் பேசினார். அது வருமாறு: "விரும்பினால் இராம மூர்த்தியை
ஆதரிப்பார், இராஜ கோபால ஆச்சாரியை ஆதரிப்பார், மாவூர் சர்மாவை
ஆதரிப்பார், இது ஒர் சித்தம்! வேறொரு பித்தம் கிளம்பினால், அக்கரகாரத்தை
ஒரு கை பார்ப்பேன் என்று ஆவேசம் காட்டுவார். நேற்று நடந்த பொதுத்
தேர்தலில் காஞ்சிபுரம் டாக்டர் சீனிவாசனையும், ஸ்ரீரங்கம் வாசுதேவனையும்,
மதுரை சங்கரனையும் ஆதரித்தார். அதற்கு ஒரு காரணம் சொன்னார். இன்று
ஜாதிஒழிப்பு சாக்கில் பிராமணர் மீது பாய்கிறார். இதற்கு ஒரு காரணம்
சொல்லுகிறார். கடந்த 30 ஆண்டுகளாக அவர் ஜாதியை எப்படி ஒழித்து
வந்திருக்கிறார். அதில் எவ்வளவு தூரம் வெற்றி பெற்றிருக்கிறார் என்பதை
நாடறியும். அவர் காட்டிய வழியில் தமிழ்நாட்டில் ஜாதிய வெறியும்,
ஜாதிப்பூசலும் ஒழியவில்லை என்பது மட்டுமல்ல, மாறாக பெருகி வந்திருக்கிறது
என்பதே என்னுடைய கருத்து" என்றார்.
மொழி வழி மாகாணக் கிளர்ச்சியில் ம.பொ.சிவஞானம் அவர்களோடு இணைந்து
பணியாற்றினார். தேவிகுளம், பீர்மேடு மீட்பு கதவடைப்புப் போராட்டத்தில்
பங்கேற்றார். தனது கட்சியைச் கேரள மாநிலச் செயலாளர் ஏ.கே.கோபாலன்
தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் மலையாளிக்குரியவை என்ற போது கடும் கண்டனம்
தெரிவித்தார். அன்றைக்கு மொழிவழி மாகாணத்திற்கு பச்சை தமிழன் காமராசர்
ஆட்சி பச்சை கொடி காட்ட வில்லை. அதைக் கண்டித்து சட்டமன்றத்தில்,
"மொழிவழியாக ராஜ்யங்கள் பிரிக்கப்படும் போது இந்திய தேசம் சுக்கு நூறாக
உடைந்து விடாது. காங்கிரசு கட்சியும் சுக்கு நூறாக உடைந்து விடாது" என்று
கிண்டலடித்தார். சென்னை ராஜ்யத்திற்கு தமிழ்நாடு பெயர் சூட்டக் கோரியும்
பேசினார். 1956இல் மொழிவழித் தமிழகம் பிரிந்த நவம்பர் முதல் நாளை
'தேசியப்பெருநாள்' என்று சிறப்பித்து எழுதினார்.
சோவியத் ஒன்றியத்தில் அனைத்து மொழிகளும் ஏற்கப்பட்டு சம உரிமை
வழங்கப்பட்டுள்ளது. அது போல "மக்கள் சபையிலும் ஒவ்வொரு ராஜ்யப்
பிரதிநிதிகளும் பிரதேச மொழியில் பேச அனுமதிக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட்
தீர்ப்புகள், மத்திய அரசாங்க கெஜட்டுகள், மசோதாக்கள், அனைத்தூ
சட்டங்களும் தமிழில் இயற்ற வேண்டும். தமிழக கல்லூரிகளில் தமிழைக் கொண்டு
வர வேண்டும்" என்றும் பேசினார். தமிழ் இலக்கியங்கள் காட்டும் அறநெறி
வாழ்வை பரப்பிட 'தாமரை' இதழைத் தொடங்கினார். தமிழ் கலை இலக்கியங்கள்
பொதுவுடைமைக்கு எதிரியல்ல என்று கூறி கலை இலக்கியப் பெருமன்றம்
நடத்தினார். ஆனாலும் இந்தியப் புரட்சியில் கால் விடுத்து தமிழ்த் தேசிய
விடுதலையில் கால் பதிக்கத் தவறியது அவரின் பெருங் குறையாகும்.
இருப்பினும் தமிழ் மண் சார்ந்து ஒரு தமிழராக மார்க்சியத்தை முன்னெடுத்த
சீவானந்தம் எனும் பெருமகனாரை அவரது பிறந்த நாளில் நினைவு கூறுவோம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக