வெள்ளி, 20 செப்டம்பர், 2019

இமயமலை தமிழர் தொடர்பு இலக்கியம் சான்று ஆதாரம் மண்மீட்பு தொடர் 1 2

aathi tamil aathi1956@gmail.com

செவ்., 10 ஜூலை, 2018, பிற்பகல் 4:34
பெறுநர்: எனக்கு

இமயமலையும் தமிழர்களும் - பகுதி 1

முன்னுரை:

இன்றைய இந்தியாவில் தொல்தமிழகமானது, இமயமலையினை வட எல்லையாகவும், மேற்கு வங்காளத்தினை கிழக்கு எல்லையாகவும் ராஜஸ்தானை மேற்கு எல்லையாகவும் கொண்டு தெற்கே பரந்து விரிந்த தேயமாக விளங்கியது என்று ' நான்கு கடவுள் - தொல்தமிழகம் ' என்ற கட்டுரையில் முன்னர் கண்டோம். இக் கட்டுரையில், தொல்தமிழகமானது இமய மலைக்கு அருகில் தான் அமைந்திருந்தது என்னும் கருத்தினைப் போதுமான இலக்கிய ஆதாரங்களுடன் விரிவாகக் காணலாம். 

சிலப்பதிகாரமும் இமைய மலையும்:

தமிழினத்தைச் சேர்ந்த முப்பெரும் வேந்தர்களான பாண்டியர், சேரர், சோழர் ஆகிய மூவருமே இமையமலையில் தமது அரசுக்கான கொடியினை நட்டு தமது வெற்றியை உலகுக்குப் பறைசாற்றி உள்ளனர். இதைப்பற்றிய சிலப்பதிகாரப் பாடலைக் கீழே காணலாம்.

கயல் எழுதிய இமய நெற்றியின்
அயல் எழுதிய புலியும் வில்லும் - மதுரை.17

பாண்டியருக்கான மீன்கொடியும் சோழருக்கான புலிக்கொடியும் சேரருக்கான வில்கொடியும் இமைய மலையில் நட்டு வைக்கப் பட்டிருந்ததாக மேற்காணும் பாடல் குறிப்பிடுகிறது. இதுபோல சிலப்பதிகாரம் முழுவதிலுமே தமிழ் மன்னர்கள் தமது வெற்றிக்கொடியினை நாட்டி அரசாண்ட செய்திகள் சொல்லப்படுகின்றன. அவற்றுள் ஒருசில இடங்கள் மட்டுமே கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

மின் தவழும் இமயநெற்றியில் விளங்கு
வில்-புலி-கயல் பொறித்த நாள் - வஞ்சி.29
பொன் இமய கோட்டு புலி பொறித்து மண் ஆண்டான் - மதுரை. 17
வில் எழுதிய இமயத்தொடு கொல்லி ஆண்ட குடவர் கோவே - வஞ்சி.24

இமயமலையில் தமிழ் மன்னர்கள் தமது கொடிகளை நட்டு ஆட்சிபுரிந்த செய்திகளை மேற்காணும் பாடல்கள் கூறுகின்றன. இதெல்லாம் அம் மன்னர்களுக்கு எப்படிச் சாத்தியமாயிற்று?. தற்போதைய தமிழ்நாட்டில் இருந்துகொண்டு இமயம் வரை சென்று போரிட்டு வெற்றிபெற்று கொடிநாட்டுவது என்பது இயலாத செயலாகும். காரணம், தற்போதைய தமிழ்நாட்டில் இருந்து இமயமலையானது ஏறத்தாழ 3000 கிலோமீட்டர்களுக்கு அப்பால் இருக்கிறது. தமிழ்நாட்டில் இருந்து இமயமலைக்குச் செல்லும் வழியில் ஆறுகள், மலைகள், காடுகள் என்று பல தடைகள் எதிர்ப்படும். அவற்றைக் கடந்து முன்னேறும்போது வழியில் பிறநாட்டு மன்னர்களும் தடுப்பார்கள். அவர்களுடனும் போரிட்டு வெற்றிபெற்றால் தான் முன்னேறிச் செல்லமுடியும். இப்படிப் பல தடைகளையும் வென்று இவ்வளவு தூரத்தினைக் கடந்துசெல்வதற்குள் படைவீரர்கள், யானை, குதிரை போன்ற போர்விலங்குகளின் எண்ணிக்கை மற்றும் உடல்வலிமை ஆகிய ஒட்டுமொத்த வலிமையும் குன்றிவிடும். அப்புறம் போரில் வெற்றி பெறுவதென்ற பேச்சுக்கே இடமில்லை. ஆனால், தமிழ் மன்னர்கள் இமயமலையை வெற்றிகொண்டு ஆட்சி புரிந்திருக்கிறார்கள் என்று இலக்கியங்கள் கூறுகின்றன. என்றால், அவர்கள் அப்போதிருந்த இடமானது உறுதியாக இமயமலைக்கு அருகில் தான் இருந்திருக்க வேண்டும். அப்போதுதான் இமயமலையின் வெற்றி அவர்களுக்குச் சாத்தியமாகும்.

" இல்லை இல்லை, சிலப்பதிகாரம் என்பது கற்பனை கலந்து எழுதப்பட்ட ஒரு காப்பிய நூல். அந்நூல் கூறும் வரலாற்றுச் செய்திகள் நம்பகமற்றவை. " என்று ஒருசிலர் மறுக்கலாம். இவர்களது வாதம் எவ்வளவு தவறானது என்பதைப் படிக்கப் படிக்கப் புரிந்துகொள்வார்கள். ஆம், சிலப்பதிகாரத்தைத் தான் கற்பனைக் காப்பியம் என்று இவர்கள் குறைகூறுகிறார்கள். சங்க இலக்கியங்களில் இமயமலை பற்றி ஏராளமான செய்திகள் காணப்படுகின்றனவே. அவையும் பொய்தானா இவர்களுக்கு?. இதோ சங்க இலக்கியங்களில் இமயமலை பற்றிக் காணக் கிடைக்கின்ற செய்திகள் பாடல் வரிகளுடன் விளக்கமாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றையெல்லாம் படித்துமுடித்துவிட்டு ஒரு முடிவுக்கு வரலாம். 

சங்க இலக்கியமும் இமயமலையும்: சான்று: 1
சிமைய குரல சாந்து அருந்தி இருளி
இமைய கானம் நாறும் கூந்தல்
நன் நுதல் அரிவை இன் உறல் ஆகம்
பருகு அன்ன காதல் உள்ளமொடு
திருகுபு முயங்கல் இன்றி அவண் நீடார்
கடற்று அடை மருங்கின் கணிச்சியின் குழித்த
உடை_கண் நீடு அமை ஊறல் உண்ட
பாடு இன் தெண் மணி பயம் கெழு பெரு நிரை
வாடு புலம் புக்கு என கோடு துவைத்து அகற்றி
ஒல்கு நிலை கடுக்கை அல்கு நிழல் அசைஇ
பல் ஆன் கோவலர் கல்லாது ஊதும்
சிறு வெதிர் தீம் குழல் புலம் கொள் தெள் விளி
மை இல் பளிங்கின் அன்ன தோற்ற
பல் கோள் நெல்லி பைம் காய் அருந்தி
மெல்கிடு மட மரை ஓர்க்கும் அத்தம்
காய் கதிர் கடுகிய கவின் அழி பிறங்கல்
வேய் கண் உடைந்த சிமைய
வாய் படு மருங்கின் மலை இறந்தோரே - அகம். 399

வரிவிளக்கம்:

சிமைய குரல = மலையுச்சியில் பூத்த பல மலர்களின்
சாந்து அருந்தி இருளி = சாந்தினைக் கருமையுடன் சேர்த்துப் பூசியதால்
இமைய கானம் = இமயத்து மலர்ச்சோலைகளைப் போல
நாறும் கூந்தல் = நறுமணம் வீசுகின்ற கண்ணிமைகளையும்
நன் நுதல் அரிவை = நல்ல ஒளிவீசும் கண்களையும் உடைய தலைவியே !
இன் உறல் ஆகம் = இன்பம் தரும் கண்களைப்
பருகு அன்ன காதல் உள்ளமொடு = பருகுவதைப் போலும் காதல் உள்ளத்துடன்
திருகுபு முயங்கல் இன்றி = பின்னியதைப் போலப் பார்ப்பதே அன்றி
அவண் நீடார் = அங்கே காலந்தாழ்த்த மாட்டார்
கடற்று அடை மருங்கின் = காட்டுவழியின் ஓரமாக
கணிச்சியின் குழித்த = மழுவினைக் கொண்டு செதுக்கிய
உடைக்கண் நீடு அமை = கணு உடைந்த நீண்ட மூங்கில் மரங்களின்
ஊறல் உண்ட = பச்சிலைகளை உண்ட
பாடு இன் தெண் மணி = ஒலிக்கின்ற மணிகள் கோர்த்த
பயம் கெழு பெரு நிரை = பால் நிறைந்த பசுக்கூட்டமானது
வாடு புலம் புக்கு என = வறண்ட நிலத்தில் புகுந்ததென
கோடு துவைத்து அகற்றி = ஊதுகொம்பினை ஒலித்து நீங்கச்செய்து
ஒல்கு நிலை கடுக்கை அல்கு நிழல் அசைஇ = குட்டையாக வளர்ந்த கொன்றைமர நிழலில் தங்கி
பல் ஆன் கோவலர் கல்லாது ஊதும் = இடையர்கள் ஊதுகின்ற
சிறு வெதிர் தீம் குழல் = மூங்கிலால் செய்த சிறிய புல்லாங்குழலின்
புலம் கொள் தெள் விளி = இடம் முழுவதும் பரவிய தெளிவான ஓசையினை
மை இல் பளிங்கின் அன்ன தோற்ற = குற்றமில்லாத பளிங்கு போலத் தோன்றுகின்ற
பல் கோள் நெல்லி பைம் காய் அருந்தி = பல நெல்லிமரங்களின் பசுங்காய்களைத் தின்று
மெல்கிடு மட மரை ஓர்க்கும் அத்தம் = அசையிட்டவண்ணமாக மான்கூட்டம் கவனித்துக் கேட்கின்ற காட்டினையும்
காய் கதிர் கடுகிய = கதிரவன் மிகுதியாகக் காய்ந்ததால்
கவின் அழி பிறங்கல் = அழகு அழிந்த மலையினதாய்
வேய் கண் உடைந்த சிமைய = மூங்கில்களின் கணு உடைந்த மலையுச்சியின்
வாய் படு மருங்கின் மலை இறந்தோரே - விளிம்பருகே உள்ள வழியாக மலையைக் கடந்தவரே.

பொருள்: மலையுச்சியில் பூத்த பல மலர்களின் சாந்தினைக் கருமையுடன் சேர்த்துப் பூசியதால் இமயத்து மலர்ச்சோலைகளைப் போல நறுமணம் வீசுகின்ற கண்ணிமைகளையும் நல்ல ஒளிவீசும் கண்களையும் உடைய தலைவியே ! காட்டுவழியின் ஓரமாக வளர்ந்திருந்த பிளவுபட்ட நீண்ட மூங்கில் மரங்களை மழுவினைக் கொண்டு செதுக்கியிட்ட பச்சிலைகளை உண்ட, ஓலிக்கும் மணிகள் கட்டப்பட்ட பசுக்கூட்டமானது வறண்டநிலத்தில் புகுந்ததால், ஊதுகொம்பினை ஒலிக்கச்செய்து அங்கிருந்து அவற்றை நீங்கச்செய்தபின்னர், குட்டையாக வளர்ந்திருந்த கொன்றைமர நிழலில் இளைப்பாறியவண்ணம் இடையர்கள் ஊதிய புல்லாங்குழலின் ஓசையினை, பளிங்குபோன்ற நெல்லிக்காய்களைத் தின்று அசைபோட்டவண்ணம் கவனித்துக் கேட்கின்ற மான் கூட்டம் மிக்கதும், வெயிலின் கடுமையால் வறண்டு அழகழிந்து பிளவுண்ட பல மூங்கில் மரங்களை உச்சியில் உடையதுமான அம் மலைக்காட்டினைக் கடந்துசென்ற உனது காதலர், உனது கண்கள் தரும் இன்பத்தினைப் பருகுவதற்கு காதல் மிக்க உள்ளத்துடன் உன்னைக் காண விரைந்து வருவாரேயன்றி அங்கே நீண்டகாலம் தங்கமாட்டார். )

இப் பாடலில் இமையமலையில் இருக்கும் மலர்ச்சோலைகளைப் பற்றிக் குறிப்பிடுகிறாள் தலைவி. இமயமலையில் பல சமவெளிகளும் மலையுச்சிகளும் உண்டென்று அனைவரும் அறிவோம். அப்படி ஒரு சமவெளியில் வாழுகின்ற தலைவியானவள் அருகிருக்கும் ஒரு மலையுச்சியில் இருந்து பறிக்கப்பட்ட பூக்களின் தாதுக்களை மைபோல அரைத்துக் கருமையுடன் சேர்த்து கண்ணிமைகளில் பூசியிருக்கிறாள். அது இமயமலையில் உள்ள பன்மலர்ச் சோலைகளைப் போல மணம்வீசுவதாகக், காதலரின் பிரிவால் வாடிக்கொண்டிருக்கும் தலைவியிடம் கூறி அவள் மனதை மாற்ற முயல்கிறாள் அவளது தோழி. தலைவி வாழும் சமவெளியில் இடையர்கள் மாடு மேய்த்தவாறு புல்லாங்குழலை ஊதி மகிழ்வது வழக்கம். அப்படி அவர்கள் ஊதும் புல்லாங்குழலின் ஓசையினை அருகிருக்கும் இன்னொரு மலையுச்சியில் வாழ்கின்ற மான் கூட்டமானது கூர்ந்து கேட்குமாம். பொருள் கருதித் தலைவியைப் பிரிந்து செல்லும் தலைவன் அருகிருக்கும் அந்த மலையுச்சியினைக் கடந்துதான் செல்ல வேண்டும். மான்கள் தனது துணையுடன் சேர்ந்திருக்கும் அக் காட்சியைக் காணும் தலைவர் உன்னைக் காண விரைந்து வருவார் என்று அவளைத் தேற்றுவதாகப் பாடல் அமைந்துள்ளது.

அதுமட்டுமல்ல, இப் பாடலில் வேனில் பருவத்துக் கொடுமை விரிவாகக் கூறப்பட்டுள்ளது. இடையர்கள் மாடுமேய்த்துச் செல்லும் சமவெளியில் வெயிலின் தாக்கத்தினால் மூங்கில் மரங்கள் கணுக்கள் பிளந்தநிலையில் காணப்படுகின்றன. பசுக்கள் குடிப்பதற்குத் தண்ணீர் எங்கேயும் காணப்படாததால், லேசான ஈரப்பதத்துடன் இருக்கின்ற மூங்கிலின் இலைகளை மழுவினைக் கொண்டு செதுக்கி அவற்றைப் பசுக்களுக்கு உண்ணக் கொடுக்கிறார்கள் இடையர்கள். வெயிலில் அலைய முடியாமல் குட்டையாக வளர்ந்திருக்கும் கொன்றை மரங்களின் நிழலில் இளைப்பாறிய வண்ணம் பொழுதுபோக புல்லாங்குழல் வாசிக்கின்றனர். இதுபோல பல இடையர்கள் வாசித்ததால் எழுந்த பெரும் ஓசையினை அருகில் இருக்கும் மலையுச்சியில் வாழும் மான் கூட்டங்கள் கவனித்துக் கேட்ட வண்ணம், நெல்லி மரங்களின் காய்களைத் தின்றுகொண்டு நிற்கின்றன. மான்கள் வாழும் அந்த மலையின் நிலையோ சமவெளியைக் காட்டிலும் கொடியது. கொடிய வெப்பத்தால் மலையுச்சியிலிருந்த மூங்கில் மரங்களின் கணுக்கள் யாவும் வெடித்து முற்றிலும் பசுமை இழந்து வறண்ட நிலையில் அழகற்றுக் காணப்படுகின்றன. தாகத்தைத் தீர்க்க விரும்பிய மான் கூட்டமோ நீரின்மையால் நெல்லிக்காய்களைத் தின்று அதையே அசைபோட்டுக் கொண்டிருக்கின்றன. 

இப் பாடலில் கூறப்படும் செய்திகள் யாவும் இமயமலை பற்றியதாகத் தான் இருக்கமுடியும். இமயமலையின் மலர்ச்சோலைகளைப் போல மணம் பரப்புகின்ற கண்ணிமைகளை உடையவளே என்று தோழி கூறுவதிலிருந்து இதனை அறிந்துகொள்ளலாம். இன்றைய தமிழ்நாட்டில் இருந்துகொண்டு, எங்கோ இருக்கின்ற இமயமலையைப் பற்றி இவ்வளவு விரிவாக யாரும் கூறமாட்டார்கள். அவ்வகையில், சங்க காலத்தில் இமயமலையில் தமிழர்கள் வாழ்ந்தனர் என்பதற்கு இப்பாடலை ஒரு காட்டாகக் கொள்ளலாம் என்பது துணிபாகும். 

.......  தொடரும்.....
நேரம் நவம்பர் 01, 2016 


இமயமலையும் தமிழர்களும் - பகுதி 2

முன்னுரை:

இமயமலையும் தமிழர்களும் என்ற ஆய்வுக் கட்டுரையின் இரண்டாம் பகுதியான இக் கட்டுரையில் மேலும் சில சான்றுகளை விரிவாகக் காணலாம். 


சங்க இலக்கியமும் இமயமலையும்: சான்று: 2

சுடர் சினம் தணிந்து குன்றம் சேர
நிறை பறை குருகு இனம் விசும்பு உகந்து ஒழுக
எல்லை பைபய கழிப்பி முல்லை
அரும்பு வாய் அவிழும் பெரும் புன் மாலை
இன்றும் வருவது ஆயின் நன்றும்           
அறிவேன் வாழி தோழி அறியேன்
ஞெமை ஓங்கு உயர் வரை இமையத்து உச்சி
வாஅன் இழிதரும் வயங்கு வெள் அருவி
கங்கை அம் பேர் யாற்று கரை இறந்து இழிதரும்
சிறை அடு கடும் புனல் அன்ன என்       
நிறை அடு காமம் நீந்தும் ஆறே - நற். 369

வரி விளக்கம்:

சுடர் சினம் தணிந்து குன்றம் சேர = கதிரவன் கடுமை குறைந்து மலைக்குப் பின்செல்ல
நிறை பறை குருகு இனம் = கூட்டமாகப் பறக்கும் நாரை இனமானது
விசும்பு உகந்து ஒழுக = வானில் மகிழ்ச்சியுடன் பறந்துசெல்ல
எல்லை பைபய கழிப்பி = பகலும் மென்மெலக் கழிந்து
முல்லை அரும்பு வாய் அவிழும் = முல்லை அரும்புகள் மலர்கின்ற
பெரும் புன் மாலை = பெரும் துன்பத்தைத் தருவதாகிய மாலைப்பொழுது
இன்றும் வருவது ஆயின் = இன்றும் வருவதே ஆயினும்         
நன்றும் அறிவேன் = அதனை நான் நன்கு அறிவேன்
வாழி தோழி அறியேன் = என் தோழியே நான் அறியேன்
ஞெமை ஓங்கு உயர் வரை = ஞெமை மரங்கள் உயர்ந்தோங்கி வளர்ந்திருக்கும்
இமையத்து உச்சி வயங்கு = இமயமலையினது உச்சியில் தோன்றி
வெள் அருவி இழிதரும் வாஅன் = வெண்ணிற அருவிபோல விழுகின்ற மழைநீரானது
கங்கை அம் பேர் யாற்று = கங்கை எனும் பெரிய ஆற்றின்
கரை இறந்து இழிதரும் = கரையினைக் கடந்து பாய்தலால் உண்டான
சிறை அடு கடும் புனல் அன்ன = அணை கடந்த பெருவெள்ளம் போல
என் நிறை அடு காமம் = எனது நிறையழித்துப் பெருகும் காதல்வெள்ளத்தை
நீந்தும் ஆறே - கடக்கும் வழியினையே.

பொருள் விளக்கம்: 

என் தோழியே ! கதிரவன் தனது கடுமை தணிந்து மலைக்குப் பின்செல்லவும் கூட்டமாகப் பறக்கும் நாரை இனமானது மகிழ்ச்சியுடன் வானில் பறந்து செல்லவுமாக பகற்பொழுதானது மெல்லமெல்லக் கழிந்து முல்லை அரும்புகள் மலர்ந்து எனக்குப் பெரும் துன்பத்தைத் தருவதாகிய மாலைப்பொழுது இன்றும் வருமென்பதனை நான் நன்கு அறிவேன். ஆனால், ஞெமை மரங்கள் உயர்ந்தோங்கி வளர்ந்திருக்கும் இமயமலையினது உச்சியில் தோன்றி வெண்ணிற அருவிபோல விழுகின்ற மழைநீரானது கங்கை எனும் பெரிய ஆற்றின் கரையினைக் கடந்து பாய்தலால் உண்டான அணை கடந்த பெருவெள்ளம் போல எனது நிறையழித்துப் பெருகும் காதல்வெள்ளத்தைக் கடக்கும் வழியினை நான் அறியேன்.

மேல் விளக்கம்: 

இப்பாடல் மாலைநேர இயற்கை நிகழ்வுகளை மிக அருமையாக விவரிக்கிறது. கதிரவன் மலைக்குப் பின்னால் சென்று மறைதலையும் பறவைகள் கூட்டம் கூட்டமாகப் பறந்தவாறு தமது கூடுகளுக்குத் திரும்புவதையும் முல்லைக் கொடியின் மலர் அரும்புகள் மெதுவாக மலர்வதையும் மிக அழகாக நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறார் புலவர். இந் நிகழ்வுகளை நாம் மனதிற்குள் நினைத்துப் பார்க்கும்போது இன்புற்று மகிழ்வோம் இல்லையா?. ஆனால் இப் பாடலில் வரும் தலைவிக்கோ இவை பெரும் துன்பத்தைத் தருகின்றனவாம். ஏன்?. தலைவனைப் பிரிந்து வாடும் தலைவிக்குத் தலைவனின் காதல் பார்வையே அன்றி வேறெதுவும் இன்பம் தராது இல்லையா?. " பறவைகள் தம் துணையுடன் கூடுகளுக்குத் திரும்பும் இந்த மாலைநேரத்தில் நான் மட்டும் எனது காதலர் இன்றி தனித்து இருக்கிறேனே; முல்லை அரும்புகள் மலர்ந்து ஒளிவீச எனது கண்கள் மட்டும் அழுகையினால் ஒளியிழந்து வாடி இருக்கின்றனவே " என்றெல்லாம் அவளை ஏங்க வைக்கிறது இந்த மாலைப்பொழுது. இந்த நிகழ்வுகள் யாவும் ஒவ்வொரு நாளும் மாலைப்பொழுது வந்துவிட்டால் இயற்கையாகவே நடைபெறுபவை தான். இதைக் காதலியும் நன்கு அறிவாள். ஆனால் அவளால் அறியமுடியாத ஒன்று உண்டென்றால் அது அவளது காதலன் திரும்பிவரும் பொழுதினைத் தான்.

இப் பாடலில் பல உவமை நயங்கள் உண்டு. ஒவ்வொரு நாளும் காதலனின் வரவுக்காக ஏங்கி ஏங்கி அவளது உள்ளத்தில் காதலனைக் காணும் ஆவல் பெருகுகிறது. இந்த ஆவல் பல்கிப்பெருகிக் கட்டற்ற ஒரு வெள்ளமாக மாறத் துவங்குகிறது. அது எப்படி இருக்கிறதென்றால், இமையமலையில் பெய்த மழைநீரானது அருவிபோல விழுந்து பல ஓடைகளாக மாறி அமைதியாக இருந்த கங்கை ஆற்றின் கரையினை உடைத்துக் கொண்டு பாய, அந் நீர்ப்பெருக்கினால் கங்கை ஆற்றில் ஏற்பட்ட பெருவெள்ளம் போல இருக்கிறதாம். காதலியின் மனமானது, காதலனுடன் சேர்ந்திருக்கும் பொழுது கங்கை ஆற்று ஒழுக்கம் போல அமைதியாக இருந்ததென்றும், காதலனின் பிரிவுக்குப் பின்னர், அது கங்கை ஆற்று வெள்ளம் போலக் கலக்கமுறத் துவங்கியது என்றும் கூறுகிறார் புலவர். காதலியின் கலக்கத்திற்குக் காரணம் காதலனின் மேல் அவள் வைத்திருக்கும் அன்பு தான். அவருக்கு என்ன ஆயிற்றோ?. ஏன் இன்னும் வரவில்லை? எப்போது வருவாரோ தெரியவில்லையே ! என்று கவலைகள் ஒவ்வொன்றாய் அவள் மனதில் தோன்றுகின்றன. இந்தக் கவலைகளை இமயமலையில் பெய்த மழைநீரால் தோன்றிய ஓடைகளுடன் ஒப்பிட்டுக் கூறுகிறார். மனதிலே ஒவ்வொரு கவலையாகக் கூடும்போது அது முடிவில் பெரும் மனக்கலக்கத்தை ஏற்படுத்தும் அல்லவா?. இதனை கங்கை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்குடன் ஒப்பிட்டுக் கூறுகிறார்.

இப்பாடலில் வரும் தலைவியானவள், இமையமலையில் பெய்யும் மழையைப் பற்றியும் அதனால் கங்கை ஆற்றில் உண்டாகும் வெள்ளப்பெருக்கு பற்றியும் விரிவாகக் கூறுவதிலிருந்து இம் மக்கள் இமையமலைப் பகுதியில் தான் வாழ்ந்திருக்க வேண்டும் என்பது தெளிவாகத் தெரிகிறது. அவ்வகையில், இமயமலையில் தமிழர்கள் வாழ்ந்தனர் என்னும் கூற்றுக்கு அரணாக இப் பாடலையும் கொள்ளலாம்.

சங்க இலக்கியமும் இமயமலையும்: சான்று: 3

முன் உள்ளுவோனை பின் உள்ளினேனே
ஆழ்க என் உள்ளம் போழ்க என் நாவே
பாழ் ஊர் கிணற்றின் தூர்க என் செவியே
நரந்தை நறும் புல் மேய்ந்த கவரி
குவளை பைம் சுனை பருகி அயல
தகர தண் நிழல் பிணையொடு வதியும்
வட திசையதுவே வான் தோய் இமயம்
தென் திசை ஆஅய் குடி இன்று ஆயின்
பிறழ்வது-மன்னோ இ மலர் தலை உலகே - புறம். 132

வரி விளக்கம்:

முன் உள்ளுவோனை = முதலில் நினைத்துப்பார்க்க வேண்டியவனை
பின் உள்ளினேனே = பின்னால் நினைத்துப்பார்த்தேனே
ஆழ்க என் உள்ளம் = எனது அறிவு மறைந்துபோகட்டும்
போழ்க என் நாவே = எனது நாக்கு பிளந்து போகட்டும்
பாழ் ஊர் கிணற்றின் = பாழடைந்த ஊரிலுள்ள கிணறு போல
தூர்க என் செவியே = எனது காதுகள் தூர்ந்து போகட்டும்
நரந்தை நறும் புல் மேய்ந்த கவரி = நரந்தைப் புல்லை மேய்ந்த கவரி மானானது
குவளை பைம் சுனை பருகி அயல = குவளை மலர் பூத்த சுனையில் நீரினைப் பருகி அருகிலுள்ள
தகர தண் நிழல் பிணையொடு வதியும் = தகர மரத்தின் குளிர்ந்த நிழலில் தனது துணையுடன் தங்குகின்ற
வட திசையதுவே வான் தோய் இமயம் = மேகங்கள் தவழும் இமயமலையானது வடதிசையில் இருக்க
தென் திசை ஆஅய் குடி இன்று ஆயின் = தென்திசையில் ஆய்குடி இல்லை என்றால்
பிறழ்வது மன்னோ இ மலர்தலை உலகே = பரந்த இவ் உலகத்தின் நிலைமாறுவது உண்மையே.

பொருள் விளக்கம்: 

முதலில் நினைத்துப்பார்க்க வேண்டியவனைப் பின்னால் நினைத்துப்பார்த்தேனே. ஐயகோ ! எனது அறிவு மறைந்துபோகட்டும். எனது நாக்கு பிளந்து போகட்டும். பாழடைந்த ஊரிலுள்ள கிணறு போல எனது காதுகள் தூர்ந்து போகட்டும். நரந்தைப் புல்லை மேய்ந்த கவரி மானானது குவளை மலர் பூத்த சுனையில் நீரினைப் பருகி அருகிலுள்ள தகர மரத்தின் குளிர்ந்த நிழலில் தனது துணையுடன் தங்குகின்ற மேகங்கள் தவழும் இமயமலையானது வடதிசையில் இருக்க தென்திசையில் ஆய்குடி மட்டும் இல்லை என்றால் பரந்த இவ் உலகத்தின் நிலைமாறுவது உண்மையே.

மேல் விளக்கம்:

ஆய்க்குடியைச் சேர்ந்த மன்னன் ஆய் அண்டிரனைப் புகழ்வதாக இப் பாடலை இயற்றியுள்ளார் புலவர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார். ' வடக்கு வளர்கிறது; தெற்கு தேய்கிறது ' என்று ஒரு சொலவடை உண்டு. இது புவியியலைப் பொறுத்தமட்டிலும் உண்மையே. இந்தியாவின் வடக்கில் உள்ள இமயமலையானது வளர்ந்து கொண்டே இருப்பதாகப் புவியியல் வல்லுநர்களும் ஒப்புக்கொள்கிறார்கள். தெற்கில் இருக்கும் பரந்த நிலப்பரப்பில் வாழும் மக்கள் நிலத்தினை வெட்டியும் தகர்த்தும் அதனைத் தேய்த்துக்கொண்டே செல்கின்றனர். இப்படி ஒருபுறம் வளர்ந்துகொண்டே இருக்க, இன்னொரு புறம் தேய்ந்துகொண்டே இருந்தால் இந்தியத் துணைக்கண்டத்தின் சமநிலை பாதிக்கப்படுமே என்ற அச்சம் ஏற்படுவது இயற்கைதான். ஆனால், இதுபோன்ற அச்சம் சங்ககாலத்திலேயே இப் புலவருக்கு ஏற்பட்டிருக்கிறது. அதைத்தான் இப்பாட்டில் சொல்லி இருக்கிறார். எப்படி?.

வடக்கில் இருக்கும் இமயமலையானது வளம் மிக்கதாய் இருந்திருக்கிறது. அங்கே நீர் வளம், உணவு வளம், கனிம வளம் என்று அனைத்து வளங்களும் ஒருகாலத்திலே இருந்திருக்கிறது. அங்கே நரந்தைப் புற்கள் மிகுதியாக வளர்ந்திருக்கின்றன. நறுமணமும் சுவையும் மிக்க இப் புற்களை உண்ட மான் கூட்டமானது அங்கிருந்த சுனைகளிலே நீரினைப் பருகி அருகிலிருந்த தகர மரங்களின் நிழலில் தங்கி இளைப்பாறுகின்றன. இந்தத் தகர மரங்களும் நறுமணப் பொருள்களைத் தருபவையே. தகர மரங்களில் இருந்து தயாரிக்கப்பட்ட சாந்தினை பெண்கள் நறுமணத்திற்காகப் பயன்படுத்துவதனை இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. அதுமட்டுமின்றி, நறுமணம் வீசும் பன்மலர்ச் சோலைகளும் இமயமலையில் உண்டு என்று முன்னர் கட்டுரையில் கண்டோம். இப்படி நறுமணத்திற்குப் புகழ்பெற்ற இடமாக ஒருகாலத்தில் இமயமலை இருந்திருக்கிறது.

வடக்கில் இமயமலையானது பல வளங்களுக்கும் நறுமணத்திற்கும் புகழ்பெற்று விளங்கும்போது அதற்கு இணையாக தெற்கில் ஒரு இடம் இருந்தாக வேண்டுமே. அப்போதுதானே சமநிலை நிலவும். அந்த இடம் எது?. அதுதான் ஆய்க்குடி என்கிறார் புலவர். இமயமலையினைப் போலவே ஆய்க்குடியும் பல வளங்களை உடையதே. காரணம், நீர்வளமும் உணவு வளமும் மிக்க ஆய்க்குடியானது பழனிமலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது. பொதியில் மலை என்றும் பொதிகை மலையென்றும் அழைக்கப்படுவதான பழனிமலையின் அடிவாரத்தில் கடம்ப மரங்கள் அதிகமாக உள்ளன. இம் மரங்களின் பூக்கள் இனிய நறுமணம் மிக்கவை. பலவிதமான நறுமணப் பொருட்கள் தயாரிக்க இவை பயன்படுத்தப்படுகின்றன. ஆக, வடக்கில் இமயமலையைப் போலவே தெற்கில் பழனிமலையும் வளம் மிக்கதாய் நறுமணத்திற்குப் புகழ் பெற்றதாய் அக் காலத்தில் விளங்கி இருக்கிறது. இதை இப்பாடலில் நேரடியாகச் சொல்லாமல் மறைமுகமாக அறியவைக்கிறார் புலவர்.

வடக்கில் முப்பெரும் வேந்தர்கள் ஆட்சிபுரிய, தெற்கில் ஆய் போன்ற சிற்றரசர்கள் ஆட்சிபுரிந்திருக்க வேண்டும். பேரரசர்களிடம் பரிசில் பெறமுடியாமல் வருந்திய புலவர் ஆய் அண்டிரனைப் பற்றிப் பின்னரே அறிந்துகொள்கிறார். முதலிலேயே அவனை அறிந்துகொள்ளாமல் போனதற்காக தனது அறிவினை மறைந்துபோகட்டும் என்கிறார்; அவனைப் பாடாமல் போனதற்காக தனது நாக்கினைப் பிளந்துபோகட்டும் என்கிறார்; அவனது புகழைக் கேட்காமல் போனதற்காக தனது காதுகள் தூர்ந்து போகட்டும் என்கிறார். இந்தியாவில் உள்ள மற்ற மலைகளைக் காட்டிலும் உயரத்திலும் புகழிலும் இமயமலையே முதன்மை என்றாலும் அதற்கு ஒருசற்றும் குறையாத புகழுடையது ஆய் அண்டிரனின் பழனிமலை என்கிறார் புலவர். இல்லை என்று வந்தோருக்கு உணவினையும் பொருளையும் யானைகளையும் இன்முகத்துடன் வழங்கி இமயத்துக்கு நிகரான புகழ்பெற்றவன் ஆய் அண்டிரன் என்று இம் மன்னனைப் புகழ்ந்து பல பாடல்களைப் பாடியிருக்கிறார் இப்புலவர்.

புலவருடைய காலத்தில் தமிழ் மன்னர்களின் ஆட்சியானது வடக்கே இமயம் முதலாக தெற்கே பழனிமலை ஆய்க்குடி வரையிலும் பரவி இருந்தது என்ற கருத்து இப்பாட்டின் மூலம் தெரிய வருகிறது. அவ்வகையில் இமயமலையில் தமிழர்கள் வாழ்ந்தனர் என்ற கருத்துக்கு இப்பாடலையும் ஒரு சான்றாகக் கொள்ளலாம்.

.... தொடரும்.....
thiruththam.blogspot
நேரம் நவம்பர் 08, 2016 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக