சனி, 25 மார்ச், 2017

கங்கைகொண்டான் பெப்சி தாமிரபரணி தாமிரவருணி வளங்கள் mugilan நீர்மேலாண்மை கருணாநிதி

aathi tamil aathi1956@gmail.com

12/4/16
பெறுநர்: எனக்கு
கங்கை கொண்டான் பெப்சி ஆலை பிரச்சனையில் ஊரை ஏமாற்றும் கருணாநிதி
விவரங்கள்
எழுத்தாளர்: முகிலன்
தாய்ப் பிரிவு: சமூகம் - இலக்கியம்
பிரிவு: கட்டுரைகள்
C வெளியிடப்பட்டது: 01 மார்ச் 2016
நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் 36 ஏக்கர் நிலத்தில்
தினசரி தாமிரபரணி ஆற்றில் இருந்து 15லட்சம் லிட்டர் தண்ணீர் எடுத்து
குடிநீர், குளிர்பானம் தயாரிக்க அமெரிக்காவின் பெப்சி ஆலைக்கு, தமிழக
அரசிடம் ஜனவரி – 2014 இறுதியில் கேட்ட விண்ணப்பத்திற்க்கு 05.02.2014
அன்று பத்தே நாட்களில் அனுமதி அளித்து உத்தரவிட்டது தமிழக அரசு .
நெல்லை- தூத்துக்குடி மாவட்டத்தில் 86,000 ஏக்கர் விவசாயத்திற்கும்,
நெல்லை-தூத்துகுடி- விருதுநகர் மாவட்ட மக்களுக்கும் குடிநீர் ஆதாரமாக
விளங்குவது தாமிரபரணி. பாசன உறுதி சட்டப்படி 86,000 ஏக்கர்
விவசாயத்திற்கும் நீர் முறையாக கிடைப்பது இல்லை. நெல்லை-தூத்துக்குடி
மாவட்ட கடலோர கிராமங்களில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக நல்ல தண்ணீர்
கிடைக்காமல் லாரி மூலம் ஒரு குடம் தண்ணீர் ரூ.5.00 கொடுத்துதான் வாங்கும்
அவல நிலை இப்போது வரை உள்ளது. நெல்லையிலேயே பல இடங்களில் வாரம் 1 முறை, 4
நாட்களுக்கு ஒருமுறையும், மேலப்பாளையத்தில் வாரம் ஒரு முறைதான் குடிநீர்
விநியோகம் செய்யும் அவல நிலைதான் தற்போதும் உள்ளது.
மக்களின் குடிநீர் தேவைக்கும், விவசாய தேவைக்கும் பயன்படுத்த போதாமல்
உள்ள தாமிரபரணி ஆற்று நீரை, பெப்சி ஆலை தண்ணீர் வியாபாரத்திற்கு
தாமிரபரணி ஆற்றில் இருந்து தினமும் 15 லட்சம் லிட்டர் தண்ணீர்
எடுக்கவும், எடுக்கும் தண்ணீருக்கு 1000லிட்டர் ரூ.37.00 எனவும், சந்தை
மதிப்பில் 15கோடியும்-அரசு மதிப்பில் 5.40 கோடியும் உள்ள 36 ஏக்கர்
சிப்காட் நிலத்தை பெப்சி கம்பெனிக்கு ஆண்டு ஒன்றுக்கு ஏக்கர் ஒன்றுக்கு
ரூ.1.00 வீதம் 98 ஆண்டுகளுக்கு 36 ஏக்கர் 36 ரூபாய் என ஒப்பந்தம்
போட்டும், 99 ஆம் ஆண்டு ரூ.2.00 வீதம் 36 ஏக்கர் 72 ரூபாய் என தமிழக அரசு
பெப்சி கம்பெனிக்கு ஒப்பந்தம் போட்டுக் கொடுத்துள்ளது.
இந்த திருநெல்வேலி கங்கை கொண்டான் – சிப்காட் வளாகத்தில் உள்ள பெப்சி
ஆலைக்கு தடை கோரி தி.மு.க. வின் அதிகாரபூர்வ பேச்சாளராக தொலைக்காட்சி
விவாதத்தில் பங்கேற்பவரும் – இராதாபுரம் சட்டமன்ற தொகுதி முன்னாள்
உறுப்பினருமான திரு.அப்பாவு அவர்கள் “பெருந்துறை சிப்காட்டில்
கொக்கோ-கோலா ஆலைக்கு கொடுக்கப்பட்ட அனுமதியை தமிழக அரசு ரத்து செய்தது
போல், நெல்லை கங்கை கொண்டான் பெப்சி ஆலைக்கு கொடுக்கப்பட்ட அனுமதியை
தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்” எனக் கோரி, சென்னை உயர்நீதிமன்ற
மதுரைக் கிளையில் கடந்த டிசம்பர் 15-2015 அன்று வழக்கு தொடந்துள்ளார்.
திரு.அப்பாவு அவர்கள் வழக்கு தொடர்ந்தது முன்னாள் முதலமைச்சரும்- திராவிட
முன்னேற்றக் கழக தலைவர் திரு.மு.கருணாநிதி அவர்களின் வழிகாட்டல்படியே என
உறுதியாக சொல்கிறோம். காரணம் தி.மு.க. வின் அதிகாரபூர்வ பேச்சாளராக
தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்று வருபவரும் – இராதாபுரம் சட்டமன்ற
தொகுதி முன்னாள் உறுப்பினருமான திரு.அப்பாவு அவர்கள் வகிக்கும்
பொறுப்பும், பதவியும் ஆகும். இதுவே தி.மு.க. வின் நிலைபாடாகும்.
சுற்றுச்சூழல் பிரச்சனையும் – நீதிமன்ற தீர்ப்புகளும்:
இந்தியா முழுக்கவும், தமிழகத்திலும் சுற்றுச்சூழலை, வாழ்வாதாரத்தை
பாதிக்கக் கூடிய தொழிற்சாலை பற்றிய பிரச்சனைகளில் நீதிமன்றங்களின்
அணுகுமுறையும், பார்வையும் எப்படி உள்ளது என்பதை நாம் பார்க்க வேண்டி
உள்ளது.
சுற்றுச்சூழலை, வாழ்வாதாரத்தை பாதிக்கும், மாசுபடுத்தும் தொழிற்சாலை
பற்றிய வழக்குகளில் கடந்த 15 ஆண்டுகளாக வந்துள்ள தீர்ப்புகளில் எதுவும்
நிலவும் பிரச்சனைக்கும், பாதிப்புக்கும் தீர்வாக இல்லாமல், சுற்றுச்சூழலை
பாதிக்கும் ஆலைகளுக்கு சாதகமாகவே நீதிமன்ற தீர்ப்புகள் இதுவரை வந்துள்ளன
என்பதே கசப்பான உண்மையாகும்.
கேரளாவில் பாலக்காடு மாவட்டம், பெருமாட்டி ஊராட்சியில் பிளாச்சிமடாவில்
அமெரிக்காவின் கோக் ஆலை அமைக்கப்பட்டு மக்களின் வாழ்வாதாரமான குடிநீர்,
விவசாயம், சுற்றுசூழல் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டது. ஐந்து ஆண்டு காலம்
மக்களின் தொடர்ந்த போராட்டத்தின் விளைவாக கேரளா உயர்நீதிமன்றம் அந்த
கொக்கோ-கோலா ஆலைக்கு தடை விதித்தது. ஆனால் டெல்லி உச்சநீதிமன்றம் “அரசின்
கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது. தொழில் வளர்ச்சிக்கு இது போன்ற
ஆலைகள் தேவை” எனக்கூறி கொக்கோ-கோலா ஆலைக்கு விதிக்கப்பட்ட தடையை
நீக்கியது. ஆனால், மக்கள் போராட்டம் மூலமே அந்த ஆலை (கொக்கோ-கோலா)
இன்றுவரை பிளாச்சிமடாவில் இயங்க முடியாமல் மூடப்பட்டு உள்ளது.
ஐரோப்பாவில் உள்ள ஒரு நாட்டை சார்ந்த “புளு லேடி” என்ற 6000 டன் எடையுடைய
ஆஸ்பெட்டாசால் (கல்நார்) கட்டப்பட்ட கப்பல் காலாவதியாகி உடைக்கபடுவதற்காக
குஜராத் காண்ட்லா துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது. ஆஸ்பெட்டாசை
மிகுதியாக வைத்துக் கட்டப்பட்ட கப்பலை உடைப்பதால் கப்பலை உடைக்கும்
தொழிலாளர்களுக்கும், அப்பகுதியை சர்ந்தவர்களுக்கும் புற்று நோய் ஏற்படும்
அபாயம் இருந்தது எனவே அக்கப்பலை உடைக்கக்கூடாது என ஐரோப்பா கண்டத்தில்
உள்ள பல நாட்டு தொழிலாளர்கள் போராடினர். அதன் விளைவாக ஆஸ்பெட்டாசால்
(கல்நார்) ஆன “புளு லேடி” கப்பலை குஜராத் காண்ட்லா துறைமுகத்தில் உடைக்க
கூடாது எனக்கோரி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் சுற்றுச்சூழல்
செயல்பாட்டாளர்கள் வழக்கு தொடர்ந்து தடை வாங்கினர். ஆனால் டெல்லி
உச்சநீதிமன்றம் “சிலர் பாதிப்பு அடைவார்கள் என்பதற்காக தொழில் வளர்ச்சியை
தடுக்கக் கூடாது” எனக் கூறி ஆஸ்பெட்டாசால் கட்டப்பட்ட புளு லேடி கப்பலை
உடைக்க அனுமதி வழங்கியது.
மராட்டிய மாநிலம் இரத்தனகிரி மாவட்டத்தில் மிகக்கடுமையான பாதிப்பை
ஏற்படுத்தக்கூடிய ஸ்டொர்லைட் ஆலை அமைக்கப்பட்டது. உள்ளாட்சி நிர்வாகம்
ஆலைக்கு அனுமதி கொடுக்காமலும், மக்கள் கடுமையாக போராட்டம் நடத்தியதாலும்
அந்த ஆலை அங்கிருந்து வெளியேறி தூத்துக்குடி சிப்காட் வளாகத்திற்கு
1995-ஆம் ஆண்டுகளில் தமிழக அரசின் அனுமதியோடு தனது உற்பத்தியை
தொடங்கியது. தூத்துக்குடி சிப்காட் வளாக ஸ்டெர்லைட் ஆலையால் இதுவரை
எண்ணற்ற உயிர் பாதிப்புகள், சுற்றுசூழல் பாதிப்புகள் அப்பகுதிகளில்
ஏற்பட்டுள்ளது. பலர் உயிழந்து உள்ளனர். 2013 ஆம் ஆண்டில் ஸ்டெர்லைட்
ஆலையில் இருந்து வெளியேறிய ரசாயன விசக்காற்று வெளியேற்றத்தின் மூலம்
அப்பகுதியில் இருந்த செடி, கொடிகள் கூட கருகி பாதிப்பு ஏற்பட்டது. சென்னை
உயர்நீதிமன்றம் அவ்வாலை இயங்க தடை விதித்தது. ஆனால் டெல்லி
உச்சநீதிமன்றம் அந்த நாசகார “ஸ்டெர்லைட் ஆலை 100கோடி ரூபாயை அரசிடம்
வைப்பு நிதியாக வைத்து விட்டு இயங்கலாம்.பாதிப்பு ஏற்பட்டால் அதில்
இருந்து இழப்பீடு வழங்கலாம்” என உத்தரவிட்டது.
இது சில உதாரணங்கள் மட்டுமே. பட்டியல் இட்டால் பக்கங்கள் போதாது. இந்த
நிலையில் இருந்தே தி.மு.க. வின் சார்பில் போடப்பட்ட பெப்சி ஆலை தடை கோரிய
வழக்கு என்னவாகும் எனப் பார்க்க வேண்டி உள்ளது.
தமிழகத்தில் கொக்கோ-கோலா நிறுவனம் ஆலை சிவகங்கை படமாத்தூரில் 2005-ல்
இயங்கத் தொடங்கி மூடப்பட்டது. பெருந்துறை சிப்காட்டில் கொக்கோ-கோலா
நிறுவனம் 2015-ல் ஆலைக் கட்டுமான பணிகள் கூட தொடங்க முடியாமல் போனதற்கும்
மக்களின் ஒன்றுபட்ட உறுதியான, தொடர்ச்சியான போராட்டமே காரணமாகும்.
பெருந்துறை கொக்கோ-கோலா ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் முன்நின்று
செயல்பட்டவர்களில் ஒருவன் என்ற முறையில் நாங்கள் அனுபவபூர்வமாக உணர்ந்த
உண்மை இது.
ஆனால் திரு.அப்பாவு அவர்கள் ” பெருந்துறை கொக்கோ-கோலா ஆலை மூடப்பட்டது
போல் நெல்லை பெப்சி ஆலையும் மூட வேண்டும்” என தன் வழக்கில்
தெரிவித்துள்ளார். ” பெருந்துறை கொக்கோ-கோலா ஆலை அரசின் விதிப்படி
கொடுக்கப்பட்ட காலத்திற்குள் கட்டிட பணிகளை தொடங்காததால் தான் ஆலைக்கு
கொடுக்கப்பட அனுமதியை ரத்து செய்கிறோம்” என தமிழக அரசு உத்தரவில் கூறி
உள்ளது. எங்கேயும் மக்கள் போராட்டத்தை பற்றியோ, ஆலையால் ஏற்படவிருக்கும்
சுற்றுசூழல் பாதிப்பு பற்றியோ, காவிரி ஆற்றில் தண்ணீர் எடுப்பதை பற்றியோ
கூறவில்லை.
இதன் அடிப்படையில் நெல்லை பெப்சி ஆலை தடை கோரிய வழக்கில் “தமிழக அரசுடன்
பெப்சி நிறுவனம் செய்து கொண்ட ஒப்பந்தப்படி ஆலை கட்டுமான பணிகள் முடிந்து
ஆலை செயல்பட தயாராக உள்ளது. ஆலை ஒப்பந்தத்தில் போட்டுள்ள விதிகளின்படி
சரியாக செயல்பட்டு வருகிறது. எனவே பெப்சி ஆலை செயல்பட எவ்வித தடையும்
இல்லை. பெப்சி ஆலை இயங்கக் கூடாது என தடை விதிக்க எவ்வித முகாந்திரமும்
இல்லை ” என்றே உயர்நீதிமன்றம் உத்தரவிடும் என்பதுதான் நடைபெறப் போகும்
வெளிப்படையான நிலைமையாகும்.
இப்படித்தான் நடைபெறும் என்பது தி.மு.க விற்கு தெரியாதா, ஐந்து முறை
முதல்வராக இருந்து தமிழகத்தை ஆண்ட கருணாநிதிக்கு அவர்களுக்கு தெரியாதா
என்றால் கட்டாயம் தெரியும். ஆனால் தி.மு.க வினர் ஏன் இப்படி செய்கின்றனர்
என்பதை யோசித்து பார்க்க வேண்டும். தற்போது பாளையங்கோட்டையில் சட்டமன்ற
உறுப்பினராக தி.மு.க வை சேர்ந்த முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சர்
டி.எம்.பி மைதீன்கான் உள்ளார். அடுத்து தமிழகத்தின் ஆட்சியை நாங்கள் தான்
பிடிப்போம் எனக்கூறி பல்வேறு போராட்டங்கள் நடத்தும் தி.மு.க வினர் பெப்சி
ஆலை பிரச்சினையில் மக்களை திரட்டி போராடாமல், வழக்கு தொடர்ந்தது என்பது
பெப்சி ஆலைக்கு ஆதரவான நீதிமன்ற உத்தரவை பெற்று தரும் மிகப்பெரிய
சதிநாடகமாகவே படுகிறது. அதன் அடிப்படையிலேயே தி.மு.க வை சேர்ந்த
திரு.அப்பாவு அவர்கள் உயர்நீதிமன்றத்தில் போட்டுள்ள வழக்கை பார்க்க
வேண்டும்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த நீதிபதி-சந்துரு அவர்கள் மீத்தேன்
பிரச்சனை பற்றி 2015 –இல் பேசும் போது “சட்டப்படி நீதி கிடைக்க
நீதிமன்றம் செல்லுங்கள். தர்மப்படி நீதி கிடைக்க வேண்டும் என்றால்
தெருவிற்கு வந்து போராடுங்கள்.” என மீத்தேன் பிரச்சனை போன்ற
சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சனையில் மக்கள் போராட்டமே தீர்வு என தெளிவாக
வழிகாட்டி உள்ளார்.
இப்போதுதான் பெப்சி-கோக் எதிர்ப்பு போராட்டக் குழு, நாம் தமிழர், தமிழக
வாழ்வுரிமைக் கட்சி உட்பட பல்வேறு கட்சிகள், பல்வேறு மக்கள் இயக்கங்கள்
நெல்லை சிப்காட் பெப்சி ஆலையை எதித்து போராட்டங்களை தொடங்கியிருக்கின்றன.
இதனால் அரசு தரும் பல நெருக்கடிகளையும் சந்தித்து வருகின்றனர். இது
மக்கள் எழுச்சி தொடராமலும், வெற்றி பெறாமலும் தடுக்கும் உத்தியாகவே
“பெப்சி ஆலை இயங்க தடையில்லை” என்ற உயர்நீதிமன்ற உத்தரவு பெற வைப்பதன்
மூலமாக, மக்களின் போராட்ட உணர்வை நீர்த்து போக வைக்கிறது தி.மு.க
என்பதுதான் உண்மை நிலை. பெப்சி ஆலைக்கு ஆதரவாக மறைமுகமாக தி.மு.க
செயல்படுகிறது.
தி.மு.க.வில் பொருளாளரும், இளைஞரணி தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான
திரு. ஸ்டாலின் அவர்கள் நெல்லை-தூத்துக்குடி-விருதுநகர் மாவட்டம் முழுக்க
பயணம் மேற்கொண்டார். ஆனால் இம்மாவட்ட மக்களை கடுமையாக பாதிக்க இருக்கும்
பெப்சி ஆலை பிரச்சனை பற்றி ஒரு வார்த்தை கூட வாய்திறந்து பேசக்கூட இல்லை.
மக்கள் போராட்டம் வலிமையாக இருந்ததால் பெருந்துறை கொக்கோ-கோலா ஆலைக்கு
எதிரான போரட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்த, பெருந்துறை
பொதுக்கூட்டத்திற்க்கு பேச வர ஒப்புதல் கொடுத்த (பொதுக்கூட்டத்திற்கு
முன்பாகவே பெருந்துறை கொக்கோ-கோலா ஆலை அனுமதி ரத்து செய்யப்பட்டது) திரு.
ஸ்டாலின் அவர்கள் நெல்லை-தூத்துக்குடி-விருதுநகர் என மூன்று மாவட்ட
மக்களைப் கடுமையாக பாதிக்கும் பெப்சி ஆலை பிரச்சனை பற்றி ஒரு வார்த்தை
கூட பேசாத மர்மம் என்ன?
சென்னையை கடுமையாக பாதித்த செம்பரபாக்கம் ஏரி பிரச்சனையில் மக்களை
திரட்டி போராட்டம் நடத்தியது தி.மு.க. மக்கள் போராட்டம் மூலம் மட்டுமே
பெப்சி ஆலையை மூட முடியும் என்ற உத்தியை தெளிவாக தெளிந்துணர்ந்துள்ள
தி.மு.க., “நீதிமன்றத்திற்கு சென்று மறைமுகமாக அமொரிக்காவில் பெப்சி
ஆலையை திறக்கும் முயற்சிக்கு துணை போகும் முடிவை உடனே மாற்றிக் கொள்ள
வேண்டும்” என கேட்டுக்கொள்கிறோம்.
நீதிமன்றம் ”பெப்சி ஆலை இயங்க தடையில்லை” என தீர்ப்பு கொடுத்துவிட்டால்,
மக்களின் போராட்டம் காற்று போன பலூன் போல ஆகி விடும். நீதிமன்றமே சொல்லி
விட்டது. இனி நம்மால் என்ன செய்ய முடியும் என மக்களின் மனதில் போராட்ட
உறுதி இழந்து போராட்டம் சீர்குலைய தொடங்கும். மக்கள் தன்னம்பிக்கை இழந்து
இனி போராடி பயனில்லை என்ற முடிவுக்கு வருவார்கள்.
தி.மு.க. வினரோ “நீதிமன்றம் வரை சென்று நாங்கள் போராடிப் பார்த்தோம்.
ஆனால் நீதிமன்றம் பெப்சி ஆலை இயங்க சொல்லி விட்டது. என்ன செய்வது.
நீதிமன்ற தீர்ப்பை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். நீதிமன்ற தீர்ப்பை
விமர்ச்சிக்க கூடாது” எனக் கூறி சப்பைக் கட்டு கட்டி தப்பித்துக்
கொள்ளும். பெப்சி ஆலை தி.மு.க. வினரின் நடவடிக்கையால் எவ்வித தடையும்
இன்றி இயங்கத் தொடங்கும்.
உண்மையில் திரு.கருணாநிதி அவர்களே நீங்கள் யாருக்காக? மக்களுக்காகவா…
இல்லை பெப்சி ஆலைக்காகவா?
திரு.கருணாநிதி அவர்களே, காவிரி- கச்சத்தீவு- ஈழம்- மீத்தேன் என தொடரும்
உங்கள் துரோகங்கள் பெப்சி ஆலை பிரச்சனையிலும் தொடர்கிறது. அமெரிக்காவின்
பெப்சி ஆலையை திறக்கும் முயற்சிக்கு துணை போகும் சதிநடவடிக்கையை தி.மு.க.
உடனே மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் வரலாறு உங்களுடைய சதி, துரோக
நடவடிக்கைக்கு தகுந்த பதிலடி கொடுக்கும்.
- முகிலன், தமிழ்நாடு சுற்றுசூழல் பாதுகாப்பு இயக்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக