ஞாயிறு, 19 மார்ச், 2017

கேவலம் தலைகீழ் பொருள் வேர்ச்சொல்

நக்கீரன் பாலசுப்பிரமணியம்
'கேவலம்'
இச்சொல் தமிழா? இதனை வடமொழி என்று கூறுகிறார்களே, இதற்கு மாற்றுச்சொல்
கிடையாதா? வடமொழிகளில் இதற்குத் தனிமை, மட்டும் என்ற பொருளில் மட்டுமே
வரும், இதனைத் தமிழில் எப்படி எடுத்து 'இழிவு' எனும் பொருளில்
கொண்டார்கள் என்று தெரியவில்லை, எனினும் இது எம்முடைய மொழியே என்று
'அவர்கள்' கூறுகின்றார்களே? இதற்குத் தாங்கள்தான் விளக்கம்
அளிக்கவேண்டும் என்று எமது 'உள்ளறைக்குள்' ஒரு நண்பர் தகவல் அனுப்பிக்
கேட்டிருந்தார்.
கேவலம் எனும் சொல் பல்வேறு பொருளையுடையது. இதற்குத் 'தனிமை' (Singleness,
Solitariness, Isolation) எனும் பொருளைச் சூடாமணி நிகண்டு
குறிப்பிடுகிறது. அதேவேளை 'வீடுபேறு' (Final emancipation, Supreme
Bliss), இணையற்றது (Uniqueness) என்று பிங்கள நிகண்டு குறிப்பிடுகிறது.
ஆயினும்...
தூய தமிழ்ச்சொல்லான இச்சொல், எதிரெதிர்ப் பொருளைத் தரும் வியத்தகு
சொல்லாக உள்ளமையையும் காணுங்கள். அதாவது,
'உயர்வு, மேன்மை' (Greatness, Excellence)
என்னும் பொருளையும், அதற்கு நேர்மாறான,
'தாழ்வு, இழிவு' (Low Status, Dishonor, Humiliation)
என்னும் பொருளையும் ஒருசேரத் தருவதாக இச்சொல் உள்ளது. தவ ஆற்றல் பெற்ற
முனிவர்கள், 'கேவலிகள்' என அழைக்கப்படுவர். (இணையத்தில் கேவலிகள் என்று
தேடிப் பாருங்கள்) வீடுபேற்றிற்கு உரிய காட்சியறிவானது, 'கேவலஞானம்'
எனவும் பொருள்படும். இது,
குவி > குவை > கூவை > கேவல் எனத் திரிந்து, பின்னர் கேவலம்
என்றாகியிருக்கிறது. இதில் 'குவி, குவை' ஆகிய சொற்கள், பெருகுதல்,
மேம்படுதல் எனும் பொருளை உடையன. இவையே பின்னர் குவை என்றும், கூவை
என்றும் திரியும்.
இதனை, 'கூவைக்கிழங்கு' என்பது பெரிய கிழங்கு என்றும், 'கூவுதல்' என்பது
பெரிதாக ஒலிஎழுப்புதல் என்றும் பொருளை உடையதோடு ஒப்பிட்டு நோக்கலாம். ஆக,
இந்தக் குவை, கூவை, கூவன், கூவலம் எனத்திரிந்த சொல், இறுதியில் 'கேவலம்'
எனவாகி, மேன்மை, பெருமை, உயர்வு எனும் பொருள் தருவதாக அமைந்துள்ளதைக்
காணலாம்.
அடுத்ததாக இதற்கு நேர்மாறான பொருளில், அதாவது,
கீழ் என்பதனடியாகப் பிறந்த கீழ்வு (தாழ்வு), கேவு எனத்திரிந்து, பின்னர்
கேவலம் என்றாகியுள்ளதனைக் காணலாம். இன்னும் விரிவாகச் சொல்லப்போனால்,
தாழ்வு எனும் பொருளில், கேவலம் எனும் இச்சொல், கீழ் என்பதனடியாகப்
பிறந்து, கீழ்வு, கீவு, கீவல் எனத் திரிந்து, கீவலம் என்றாகிப் பின்னர்
'கேவலம்' என்றும் திரிந்துள்ளுமை கண்கூடு.
இந்தக் 'கீழ்வு' ஆகிய கீழ்வல், கீவல் என்பது, ஒரு 'அல்' ஈற்றுத் தொழிற்பெயர்.
இப்படி இரு வேறுபட்ட, முரணான பொருள் தரும் சொற்கள், வெவ்வேறு
வினையடிகளிற் பிறந்தவை என்பதனை உணரவேண்டும். இது சொற்பிறப்பு
நெறிமுறைகளில் ஒன்றாகும்.
தமிழில் எதுவும் 'கேவலம்' (கீழ்மை) இல்லை, அனைத்தும் கேவலம் (மேன்மை) ஆனவையே.
ஆக, இச்சொல்லும் எம் இன்தமிழிலிருந்து திருடப்பட்டதே!
# நற்றமிழறிவாய்_என்_தோழா
# எல்லாமே_தமிழ்தான்டா
# அதுதான்டா_தமிழ்
# இதுதான்டா_தமிழ்
# அதுகூடத்_தமிழ்தான்டா
# இதுகூடத்_தமிழ்தான்டா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக