திங்கள், 27 மார்ச், 2017

குமரிக்கண்டம் நோவா நெடியோன் பாண்டியர் மனு

aathi tamil aathi1956@gmail.com

22/3/16
பெறுநர்: எனக்கு
முத்துக் குளிக்க வாரீகளா 10: மீன் தோணி
Updated: September 19, 2015 08:33 IST | கவிக்கோ அப்துல் ரகுமான்
தமிழ்நாட்டில் உள்ள தலபுராணங்கள் பெரும்பாலும் கடல்கோள் பற்றிக்
குறிப்பிடுகின்றன. கடல்கோள் குமரிக் கண்டத்தில்தான் நடந்தது என்பதற்கு
இது ஒரு முக்கியமான சான்றாகும்.
தமிழ்நாட்டில் உள்ள சீர்காழி என்னும் ஊர் ‘தோணிபுரம்’ எனப் படுகிறது.
அவ்வூர்க் கோயிலில் உள்ள சிவபெருமான் ‘தோணியப்பர்’ எனப்படுகிறார்.
சிவபெருமான் பிரளயத்தின்போது ‘ஓம்’ என்னும் பிரணவத்தைத் தோணியாக்கிப்
பயணம் செய்தார் என்று அருணாசலக் கவிராயர் ‘சீர்காழித் தலபுராண’த்தில்
(2.15.4) கூறுகிறார்.
தோணி வந்தடைந்த இடம் என்பதால் ‘தோணிபுரம்’ என்று அழைக்கப்பட்டதாகச்
‘சீர்காழித் தலபுராணம்’ கூறுகிறது.
தமிழ்நாட்டுத் தலபுராணங்கள் பெரும்பாலும் தோணி தங்கள் ஊரையே வந்தடைந்தது
என்று கூறுகின்றன.
கடல்கோளிலிருந்து தப்பித்தவர்கள் பல்வேறு இடங்களில் குடியேறினர்.
பிற்காலத்தில் குடியேறிய ஊரைப் பெருமைப்படுத்தத் தோணி வந்தடைந்த இடம் தம்
ஊரே என்றனர். இது மனித இயல்பே.
இந்த அடிப்படையில் திருப்புறம்பயத்தின் கணேசர், ‘பிரளயம் காத்த விநாயகர்’
எனப்படுகிறார். (ஜகதீச ஐயர், South Indian Shrines, P.75)
பிரளயத்திலிருந்து மனிதர்களைக் காத்தது நந்தி என்கிறது ‘திருப்பெண்ணாகட
வரலாறு’ (ப.12).
பிரளயத்தில் அழியாமல் இருந்தது நாககிரி என்கிறது ‘திருச் செங்கோட்டுப்
புராணம்’ (1.2.6) நாககிரி திருச்செங்கோட்டில் இருக்கிறது.
சதபதப் பிரமாணத்தில் (1.8.1-10) பிரளயத் தொன்மம் இடம்பெற்றிருக் கிறது.
மனு, வைகறை வழிபாட்டிற்காக ஆற்று நீரில் அங்கசுத்தி செய்து
கொண்டிருந்தார். அப்போது அவருடைய கையில் ஒரு மீன் அகப்பட்டது. அந்த மீன்
மனுவிடம், ‘‘ஒரு பெரிய பிரளயம் வரப் போகிறது. அதில் உயிர்களெல்லாம்
அழிந்துவிடும். இப்போது நீ என்னைக் காப்பாற்றினால் அப்போது நான் உன்னைக்
காப்பாற்றுவேன்’’ என்றது.
மீனை ஒரு கலயத்தில் விட்டார் மனு. அது பெரிதாயிற்று. மனு அதைக் குளத்தில்
விட்டார். அது குளத்தளவு பெரிதாயிற்று. எனவே அவர் அதைக் கடலில் விட்டார்.
‘‘நீ ஒரு தோணியைச் செய். நான் தக்க நேரத்தில் வந்து உன்னைக்
காப்பாற்றுகிறேன்’’ என்று அந்த மீன் கூறியது.
குறிப்பிட்ட நாளில் பிரளயம் உண்டாயிற்று. வாக்களித்தபடியே அந்த மீன்
வந்தது. அது பிரமாண்டமாக இருந்தது. அதன் தலையில் ஒற்றைக் கொம்பு
இருந்தது.
தோணியைக் கொம்பில் கட்டச் சொன்னது மீன். மனு அவ்வாறே செய்தார் தோணியை
மீன் இழுத்துக்கொண்டு போய் வடமலையில் சேர்த்தது என்று சதபதப் பிரமாணம்
கூறுகிறது.
மகாபாரதத்தில் இக்கதை சிறிது மாற்றத்துடன் காணப்படுகிறது. அதில் வைவசுத
மனு வைசால வனத்தில் தவம் செய்யும்போது அருகில் இருந்த ஆற்றில் வந்த மீன்
பிரளயம் பற்றி எச்சரித்துத் தோணி செய்யச் சொன்னது.
பிரளயம் வந்தபோது வைவசுத மனு ஏழு முனிவர்களோடும், பலவகை விதைகளோடும்
தோணியில் ஏறியதாகவும், தோணியை மீன் இமயமலையில் சேர்த்ததாகவும் அக்கதையில்
சொல்லப்படுகிறது.
கப்பலில் நூஹ் (நோவா) அவர்களோடு அவருடைய மூன்று ஆண் மக்களும் மூன்று பெண்
மக்களும் ஆக ஏழு பேர்களே ஏறினர் என்று அக்முஸ் என்பவர் கூறியிருக்கிறார்.
(அப்துற் றஹீம், நபிமார்கள் வரலாறு, முதல் பாகம், ப.230)
நோவா தம் புதல்வர்கள் சேம், காம், எப்பேத்து, தம் மனைவி, தம் புதல்வர்
மூவரின் மனைவியர் ஆகிய ஏழு பேருடன் பேழைக்குள் நுழைந்ததாக பைபிளும்
கூறுகிறது (தொடக்க நூல் 7.13)
பாகவத புராணம் பிரளய காலத்தில் மனு தோணி ஏறிய இடம் தென்னிந்தியா என்றும்
அந்த மனுவின் பெயர் சத்திய விரதன் என்றும், அவன் திராவிட வேந்தன்
என்றும், மனுவின் கையில் மீன் சிக்கிய இடம் மலையமலையில் ஊற்றெடுத்து
வரும் கிருதமாலை என்னும் நதி என்றும் கூறுகிறது. (8.24.13) வைகை
நதிக்குக் கிருத மாலை என்ற பெயரும் உண்டு.
இச்சான்று பிரளயத் தொன்மத்தைத் தமிழர்களோடு மிக நெருக்கமாக்கி வைக்கிறது.
மச்ச புராணத்திலும் இத்தொன்மம் சிறு வேறுபாடுகளுடன் காணப்படுகிறது.
சத்திய விரதன் என்ற ராஜரிஷி கிருதமாலா நதியில் வழிபட்டபோது மீன்
அகப்பட்டதாக இப்புராணமும் கூறுகிறது.
இதில் வரும் மீன், ‘‘பிரளயம் உண்டாகும்போது நம் ஆக்கினையால் ஓர் இடம்
வரும். அதில் நீ சத்த இருடிகளுடனும் (ஏழு முனிவர்கள்) ஓஷதிகளுடனும்
(மருந்துக்குரிய பூண்டுகள்) ஏறுக’’ என்று கூறுகிறது.
இந்த அரசனே வைவச்சுத மனு என்னும் திருமால் இந்த அவதாரத்தில் மநு, பூதேவி,
ஓஷதிகளை இரட்சித்தார் என்றும், மநு தவம் செய்த இடம் ‘மலையம்’ என்றும்
மச்ச புராணம் கூறுகிறது. ‘மலையம்’ என்பது பொதிகை மலையைக் குறிக்கும்.
மனுக் குலத்தின் தந்தையை மனு என்று கூறுவது இந்திய மரபு. இஸ்லாமியத்
தொன்மத்தின்படி ஆதம் மனுக் குலத்தின் முதல் மனு ஆவார். ஆதம் வழி
வந்தவர்களில் நோவா அவர்களுடன் தப்பித்தவர்கள் தவிர மற்ற அனைவரும்
பிரளயத்தில் அழிந்துவிட்டனர்.
இப்போதிருக்கும் மனுக் குலம் நோவா அவர்கள் வழிவந்ததாகும். எனவே நோவா
இரண்டாம் ஆதம் என்று அழைக்கப்படுகிறார். அதாவது நோவாவும் ஒரு மனுவே.
மேலே காட்டிய சான்றுகளிலிருந்து குமரிக் கண்டத்தை அழித்த பிரளயமே
தொன்மமாகிப் பல்வேறிடங்களில் பல்வேறு மாற்றங்கள் பெற்றிருக்கிறது என்பதை
அறியலாம்.
தொன்மம் கப்பலை மீனாக்கிவிட்டது. தொன்மத்தின் இயல்பு இது.நோவா கட்டிய
கப்பல் மீன் வடிவத்தில் அமைந்திருக்கலாம்.
தொன்மத்தின்படி மீனால் தப்பித்தவர்கள் என்பதால் அவர்கள் மீனைக் குலக்குறி
(Totem) ஆகக் கொண்டிருக்கலாம். மீனைக் குலக்குறியாகக் கொண்ட பாண்டியர்கள்
அவர்கள் வழிவந்தவர்களாக இருக்கலாம். இதனாலேயே சேர, சோழ, பாண்டியர்
மூவரிலும் பாண்டியர்களே பழமையானவர்கள் என்று சிலர் கருதுகின்றனர்.
- இன்னும் முத்துக் குளிக்கலாம்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக