புதன், 22 மார்ச், 2017

தமிழரசன் வாழ்க்கை நடத்திய தாக்குதல்கள் balan tholar 2

aathi tamil aathi1956@gmail.com

27/5/16
பெறுநர்: எனக்கு
பல தொலைபேசி உரையாடல்களுக்கு பின்னர் ரயிலை மறிக்க வேண்டாம் என்றும்
தொடர்ந்து பயணிக்க அனுமதிக்கும்படியும் மேலிட உத்தரவு வந்தது. இது அந்த
அதிகாரிக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. இருந்தும் மேலதிகாரிகளின்
உத்தரவுக்கு இணங்க வேறு வழியின்றி அடுத்து வந்த மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ்
ரயிலை தொடர்ந்து செல்ல அனுமதித்தார். ஆனால் நிகழ இருக்கும் ஆபத்தை
உணர்ந்தவராய் மனம் கேட்காமல் அந்த ரயில் டிரைவரிடம் “ஏதோ வெடி சத்தம்
கேட்டது. மெதுவாக பார்த்து போகவும்” என்று எச்சரித்துள்ளார். சாரதியும்
மெதுவாக ஓட்டி வந்ததால் ரயில் பாலத்தில் கவிழ்ந்து 35 பேர் பலியானார்கள்.
இல்லையேல் அதிகளவில் பலியாகியிருப்பர்.
பாலத்தில் குண்டு வெடித்து மூன்று மணி நேரம் கழித்து வந்த ரயில்
கவிழ்ந்து 35 பேர் பலியானார்கள். ஆனால் அடுத்தநாள் பத்திரிகைகளில் “ஓடும்
ரயிலுக்கு குண்டுவைப்பு. பல அப்பாவி தமிழர்கள் பலி” என்று செய்தி
வெளிவந்தது. மக்களுக்காக போராடியவர்கள் மக்களைக் கொன்ற பயங்கரவாதிகள்
ஆக்கப்பட்டனர். தாங்கள் எச்சரித்தும் தங்கள் மீது கெட்ட பெயர்
உருவாக்குவதற்காக அரசு வேண்டுமென்றே ரயிலை கவிழ்த்து மக்களைப்
பலியாக்கியள்ளது என்பதை தோழர் தமிழரசன் உணர்ந்து கொண்டார். இந்த உண்மையை
மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டும் என அவர் விரும்பினார். ஆனால்
அவர் இறக்கும்வரை மட்டுமல்ல அவர் இறந்தபின்பும் கூட இந்த உண்மை மக்கள்
மத்தியில் வெளிவரவில்லை. எந்த மக்களுக்காக தோழர் தமிழரசன் போராடினாரோ
அந்த மக்களை குண்டு வைத்து கொன்றார் என்ற அவப் பெயருடனே அவர் மறைந்தார்.
மக்களை கொன்ற பயங்கரவாதி என்ற அந்தப் பழி அவர் மனதை மிகவும்
பாதித்திருந்தது.
உட்கோட்டை வங்கியை கொள்ளையிட சென்றபோதும் அங்கிருந்த மக்கள் தோழர்
தமிழரசனையும் அவரது தோழர்களையும் கொள்ளையர்கள் என நினைத்து தாக்க
முற்பட்டிருந்தார்கள். ஆனால் இவர்கள் காரில் சென்றிருந்தமையினால் இலகுவாக
தப்பிச் செல்லக்கூடியதாக இருந்தது. ஆனால் பொன்பரப்பி வங்கியை கொள்ளையிடச்
சென்றபோது காரில் செல்லாமல் சைக்கிளில் சென்றிருந்தார்கள். இது இவர்களை
தப்பி செல்லவிடாமல் தடுக்க முடியும் என்ற நம்பிக்கையை இவர்களை
தாக்கியவர்களுக்கு கொடுத்து விட்டது. உட்கோட்டை வங்கியை கொள்ளையிட
சென்றபோது கார் டிறைவராக எமது தோழர் திணேஸ் சென்றிருந்தார். ஆதலினால்
பொன்பரப்பி வங்கியை கொள்ளையிடச் செல்லும்போதும் காரைப்
பயன்படுத்தும்படியும் அதற்கு டிறைவராக தானே வருவதாகவும் எமது தோழர்
திணேஸ் கூறியிருக்கிறார். ஆனால் தோழர் தமிழரசனுடன் கூட இருந்த இன்னொரு
தோழர் ஒருவரே “கார் வேண்டாம். சயிக்கிளில் போய் கொள்ளையடிக்கலாம்” என்று
தமிழரசனை சம்மதிக்க வைத்தார். இவ்வாறு சயிக்கிளில் செல்வது என்று இவர்கள்
முடிவெடுப்பதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று ஈழத்தில் போராளிகள்
சயிக்கிளில் சென்று பல கொள்ளைகளை வெற்றிகரமாக நிகழ்த்திய கதைகளை எமது
தோழர்கள் மூலம் இவர்கள் அறிந்திருந்தார்கள். எனவே ஈழப் போராளிகள் போல்
தாங்களும் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இவர்களுக்கு இவ்வாறான உந்துதலைக்
கொடுத்திருந்தது. இரண்டாவது பொன்பரப்பி பிரதேசம் தோழர் தமிழரசனுக்கு
மிகவும் பழக்கமான சொந்த பிரதேசம் ஆகும். அருகில் முந்திரிகைக்காடு
இருந்ததால் கொள்ளையடித்துவிட்டு அதனுள் சென்றுவிட்டால் யாராலும் பிடிக்க
முடியாது என்று அவர்கள் நினைத்தார்கள். அதையும்விட பொன்பரப்பி வங்கியில்
பணி புரிந்த ஊழியர் ஒருவரின் ஒத்துழைப்பு தோழர் தமிழரசனுக்கு
கிடைத்திருக்கிறது. அவர் மூலம் உள்ளே சென்று எற்கனவே பலதடவை தோழர்
தமிழரசன் வங்கியை நோட்டம் விட்டிருக்கிறார். இதனால் கொள்ளையிடும்போது
வங்கியில் எந்த பிரச்சனையும் வராது என்று அதீத நம்பிக்கையை
உருவாக்கிவிட்டார். தோழர் தமிழரசன் கொண்டிருந்த இந்த அதீத நம்பிக்கையே
அவர் தவறாக திட்டமிடுவதற்கும் அதன் காரணமாக அவர் மரணத்திற்கும் வழி
சமைத்துவிட்டது.
இங்கு நான் ஈழத்தில் நடந்த இரு கொள்ளை சம்பவங்களை சுட்டிக்காட்ட
விரும்புகிறேன். இவற்றை தோழர் தமிழரசன் கவனத்தில் எடுத்திருந்தால்
பொன்பரப்பியில்; தவறு இழைத்திருக்கமாட்டார் என நம்புகிறேன். முதலாவது
குரும்பசிட்டி என்னும் இடத்தில் புலிகள் இயக்கத்தின் தலைவரான பிரபாகரன்
நடத்திய கொள்ளை. தலைவர் பிரபாகரன் தனது போராட்டத்தின் ஆரம்ப காலத்தில்
அமைப்பின் பணத்தேவைக்காக குரும்பசிட்டியில் அடகு பிடிக்கும் ஒரு தனியார்
வீட்டில் கொள்ளையடித்தார். அவரும் அவருடைய சக போராளிகளும்
கொள்ளையடித்தவிட்டு வெளியே வரும்போது அருகில் சுருட்டு
சுற்றிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் இவர்களை கொள்ளையர்கள் என நினைத்து
கற்களால் தாக்கத் தொடங்கிவிட்டார்கள். இதனால் வேறு வழியின்றி இரு
தொழிலாளர்களை சுட்டுக் கொன்றுவிட்டே பிரபாகரன் தப்பி செல்ல முடிந்தது.
அன்று அவர் தப்பி சென்றதாலே பின்னாளில் மாபெரும் போராட்டத்தை அவரால்
நடத்த முடிந்தது. அதேவேளை மக்களும் இவர் ஆரம்பத்தில் தொழிலாளர்களை
சுட்டுக்கொன்றதை பெரிய தவறாக பின்னாளில் பார்க்கவில்லை. எனவே தோழர்
தமிழரசனும் தனது கையில் இருந்த அயுதங்களைப் பயன்படுத்தி தப்பி
சென்றிருக்க வேண்டும். அதில் மக்கள் கொல்லப்பட்டிருந்தாலும் பின்னாளில்
அவரின் அத் தவறு மக்களால் புரிந்து கொள்ளப்பட்டிருக்கும்.
இரண்டாவதாக நான் சுட்டிக்காட்ட விரும்பும் சம்பவம் தியாகி சிவகுமாரன்
புத்தூரில் மேற்கொண்ட கொள்ளை முயற்சியாகும். சிவகுமாரன் ஒரு ஆரம்பகால
போராளி. முதன் முதல் சயனைட் உட்கொண்டு தற்கொலை செய்து கொண்ட
போராளியும்கூட. அதுமட்டுமல்ல ஈழத்தில் முதன் முதல் சிலை அமைத்து
கௌரவிக்கப்பட்ட போராளியும் அவரே. அவர் தனது அமைப்பு தேவைக்காக
யாழ்ப்பாணத்தில் புத்தூர் என்னும் இடத்தில் வங்கியை கொள்ளையிட முயன்றார்.
அப்போது பொலிசார் சுற்றிவழைத்துவிட்டதால் வேறு வழியின்றி சயனைட்
உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் இறந்துவிட்டதால் அதன்பின் அவரது
அமைப்பு செயலற்றுப் போய்விட்டது. எனவே இந்த இரு சம்வங்கள் மூலம் தோழர்
தமிழரசன் தனது தமிழ்நாடு விடுதலைப்படையில் தன் முக்கியத்தவத்தை உணர்ந்து
செயற்பட்டிருக்க வேண்டும். அவர் அவ்வாறு செயற்படாததால் அவர்
கொல்லப்பட்டது மட்டுமன்றி அவரது தமிழ்நாடு விடுதலைப்படைக்கும் பெரும்
பின்னடைவு ஏற்பட்டுவிட்டது.
தோழர் தமிழரசனை தமிழக காவல்துறை சதி செய்து கொன்றுவிட்டது என்பதை நாம்
சுட்டிக் காட்டும்போது “அதெப்படி பொலிசார் சட்டவிரோதமாக கொல்ல முடியும்?”
என சிலர் அப்பாவித்தனமாய் கேட்கின்றார்கள். இந்தியா ஒரு ஜனநாயக நாடு
என்றும் இங்கு சட்டத்தின் படியே ஆட்சி நடக்கிறது என்றும் அவர்கள் எமக்கு
கூறுகின்றார்கள். இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 21 ல் “
சட்டத்தால் நிறுவப்பட்ட நடைமுறைகளுக்கு பொருந்தியதன்றி வேறெந்த வகையிலும்
தனி ஒருவருடைய உயிரை அல்லது உரிமையை பறிக்கும் உரிமை எவருக்கும் இல்லை”
என்று இருப்பது உண்மைதான். ஆனால் இந்த சட்டத்திற்கு விரோதமாக இந்திய
அரசும் அதன் ஏவல்நாயான காவல்துறையும் தமக்கு எதிராக போராடும்
புரட்சியாளர்களின் உயிரை எடுத்து வருகிறது. இதற்கு ஒரு உதாரணமாக
அண்மையில் பத்திரிகையில் வந்த ஒரு செய்தியை இங்கு சுட்டிக்காட்ட
விரும்புகிறேன்.
1991, ஜூலை 12-ல் நேபாள் அருகிலுள்ள இந்திய பகுதியான பிலிபிட்
கிராமத்திலிருந்து சீக்கியர்கள் பேருந்தொன்றில் புனிதப் பயணம்
மேற்கொண்டனர். அவர்களைத் தடுத்து நிறுத்திய காவல்துறையினர்
பேருந்திலிருந்து இளம்வயது சீக்கியர்கள் 10 பேரை இறக்கினர். அவர்களை மினி
பஸ்ஸில் ஏற்றிச் சென்று, மும்மூன்று பேராக வெவ்வேறு இடங்களுக்குக்
கொண்டுசென்று போலி என்கவுண்டரில் தீர்த்துக் கட்டினர். அவர்களிடமிருந்து
ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், கால்சா தீவிரவாதிகள் எனவும் போலீசாரால்
சித்தரிக்கப்பட்டனர். இந்த என்கவுண்டர் அப்போது பெரும் சர்ச்சையைக்
கிளப்பியது. பத்திரிகைகள் போலீஸ் தரப்பு வாதத்திலுள்ள ஓட்டைகளை
வெளிக்கொண்டுவந்தன. 1992-ல் வழக்கறிஞர் ஆர்.எஸ். ஜோதி பொதுநல வழக்கு
தாக்கல் செய்ததை ஏற்று, உச்சநீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு
உத்தரவிட்டது நீண்டகால விசாரணைக்குப் பின் சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி லாலு
சிங் ஏப்ரல் 1, 2016-ல் தனது தீர்ப்பை வெளியிட்டார். அதன்படி 47
காவலர்களுக்கு ஆயுள் தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
குற்றம்சாட்டப்பட்ட 57 பேரில் 10 பேர் விசாரணைக் காலத்திலே இறந்து
போய்விட்டனர். இந்த காலதாமதமான தீர்ப்பின் மூலம் சுமார் 25 வருடங்களுக்கு
முன் நடைபெற்ற ஒரு போலி என்கவுண்டர் மோதல் இன்று வெளிச்சத்திற்கு
வந்துள்ளது.
இவ்வாறு கடந்த பல ஆண்டுகளாக இந்திய அரசு தன் காவல்துறை மூலம் சமூக
விடுதலைக்காக போராடுபவர்களை சட்டத்திற்கு புறம்பாக மோதல் என்ற போர்வையில்
கொன்று வருகிறது. இந்திய அரசானது அரசியல் சட்டத்தின்படி அனைத்து மக்களின்
அடிப்படை உரிமைகளை மதிப்பதாக கூறிக்கொண்ட போதிலும் அரசுக்கு எதிராக
போராடும் பரட்சியாளர்களை சட்ட விரோதமாக கொன்று வருகிறது. போராடும்
புரட்சியாளர்களை தீவிரவாதிகள் என்கிறார்கள். ஆனால் இவர்கள் தானாக
உருவாவதில்லை. மாறாக உருவாக்கப்படுகிறார்கள் என அறிஞர்கள் கூறுகிறார்கள்.
மேலும் இவ்வாறு உருவாக்கப்படும் போராளிகள் எவரும் வன்முறைமீது காதல்
கொண்ட மனநோயாளிகள் அல்லர். இவர்களை நக்சலைட் சமூகவிரோதிகள் என்றும்
பயங்கரவாதிகள் என்றும் இந்திய அரசு அழைக்கிறது. ஆனால் இவர்களை விசாரணை
செய்த இந்திய உச்சநீதிமன்றம் இவர்களை தேச பக்தர்கள் என்று
குறிப்பிட்டிருக்கிறது.
மேற்கண்டவற்றை நாம் சுட்டிக்காட்டினால் உடனே சிலர் வட இந்திய
பொலிசார்தான் இப்படி காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்கிறார்கள். தமிழக
அரசும் அதன் காவல்துறையும் அப்படிப்பட்டவர்கள் இல்லை. அவர்கள்
ஸ்கொட்லாண்ட் பொலிசாருக்கு நிகரானவர்கள் என்ற பெருமை பெற்றவர்கள் என்று
தமிழக பொலிசாருக்காக  வக்காலத்து வாங்குகிறார்கள். அவர்களுக்;காக தமிழக
அரசும் அதன் காவல்துறையும் மேற்கொண்ட சட்டவிரோத கொலைகள் சிலவற்றை இங்கு
சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
(1) 1960 களின் இறுதியில் உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற முழக்கத்தின்
கீழ் எழுந்த நக்சல்பாரி புரட்சி வழியில் உழைக்கும் ஏழை மக்களின்
விடுதலைக்காக போராடிய கோவையைச் சேர்ந்த எல்.அப்பு என்பவரை தமிழ்நாடு
காவல்துறை ரகசியமாக கொலை செய்தது. இன்றுவரை அவர் என்ன ஆனார் என்ற
மர்மத்தை தமிழ்நாடு அரசு அறிவிக்காமலேயே இருந்து வருகிறது. இதுபோன்று
1970 முதல் 1980வரை நாற்பதுக்கு மேற்பட்ட நக்சல்பாரி அமைப்பை
சேர்ந்தவர்கள் தர்மபுரி வடஆற்காடு மாவட்டங்களில் தமிழக காவல்துறையினரால்
கொல்லப்பட்டுள்ளனர்.
(2) 1980ல் நக்சல்பாரி அமைப்பைச் சேர்ந்த கண்ணாமணி என்பவர் சேலம் பயணியர்
மாளிகையில் வைத்து பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால் பொலிசுடனான
மோதலில் இறந்ததாக வழக்கம்போல் காவல்துறை கூறியது.
(3) 1982ல் தர்மபுரி மாவட்டம் சிறியம்பட்டு கிராமத்தில் பாலன் என்ற
நக்சல்பாரி தோழர் ஆயிரக் கணக்கான மக்கள் மத்தியில் உரையாற்றிக்
கொண்டிருக்கும்போது 300 க்கும் மேற்பட்ட பொலிசார் எவ்வித முன்னறிவிதலும்
இன்றி கைது செய்து சென்னை கொண்டு சென்றனர். பின்னர் சென்னையில் வைத்து
அவரை சித்திரவதை செய்து கொன்றுவிட்டு அவர் தப்பி ஓட முயற்சி செய்தபோது
சுட்டுக் கொன்றதாக பொய் கூறினார்கள். அவர் உடலைக்கூட உறவினர்களிடம்
ஒப்படைக்காமல் சாம்பலை மட்டுமே கொண்டு வந்து கொடுத்தனர்.
(4) அதே காலப் பகுதியில் வட ஆற்காடு திருப்பத்தூர் பகுதியில் நக்சல்பாரி
தோழர் சீராளன் என்பவர் பொலிசாருடனான மோதல் என்னும் பெயரில்
சுட்டுக்கொல்லப்பட்டார்.
(5) 1993ம் ஆண்டு தமிழ்நாடு மக்கள் விடுதலைப்படைத் தலைவர் தோழர் நாகராசன்
காவல் கண்காணிப்பாளர் சைலேந்திர பாபுவினால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
திண்டுக்கல் பகுதியில் ஒரு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த நாகராசனை
பிடித்துச்சென்று சித்திரவதை செய்து கொன்றுவிட்டு வழக்கம்போல் மோதலில்
பலியானார் என காவல்துறை பொய் கூறியது.
(6) 1994 மார்ச் மாதத்தில் தமிழ்நாடு விடுதலைப் படையின் தலைவராக
கருதப்பட்ட தோழர் லெனின் தற்செயலாக ஏற்பட்ட வெடி விபத்தில் காயமடைந்தார்.
உடனடியாக அவரை சுற்றிவழைத்த காவல்துறையினர் 6 மணி நேரத்திற்கும் மேலாக
அவருக்கு எந்தவித மருத்தவ சிகிச்சைக்கும் ஏற்பாடு செய்யாமல் அவரை
வேண்டுமென்றே கொன்றனர்.
(7) இதேபோன்று 1994ம் அண்டு செப்டெம்பர் மாதம் தென்னாற்காடு மாவட்டம்
வடலூர் அருகே தமிழ்நாடு விடுதலைப்படையைச் சேர்ந்த தோழர் சின்னத்தம்பி
வெடி விபத்தில் காய மடைந்தார். அவரை மருத்துவமனையில் சேர்த்த பொலிசார்
மருத்துவர்களின் உதவியுடன் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் அவரையும்
வேண்டுமென்றே கொன்றனர்.
(8) 1992ம் ஆண்டு நீதிமன்ற காவலில் இருந்த தமிழர் பாசறை என்னும் அமைப்பை
சேர்ந்த சந்திரன் என்னும் நபரை விசாரணை என ஜ.ஜி அலுவலகத்திற்கு அழைத்துச்
சென்று சித்திரவதை செய்து கொன்றுவிட்டு மாடியில் இருந்து குதித்து
தற்கொலை செய்து கொண்டார் என்று தமிழக காவல்துறை பொய் கூறியது.
(9) 1997ல் ஆண்டிமடம் காவல் நிலையம் தாக்கப்பட்டது தொடர்பாக உஞ்சனை
கிராமத்தைச் சேர்ந்த சடையன் என்பவர் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்திற்கு
விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சித்திரவதை செய்து கொல்லப்பட்டார்.
ஆனால் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் எனப் பொய்கூறி அவருடைய
உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தது தமிழக காவல்துறை.
(10) நெல்லை மாவட்டம் இராசப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மச்சக்காளை.
இவர் அந்தப் பகுதி விவசாயிகளுக்காகப் போராடியதால் இவரையும் அடித்துக்
கொன்றது தமிழக காவல்துறை.
கடந்த பல ஆண்டுகளாக மக்களுக்காக போராடுபவர்களை தமிழக அரசும் அதன்
காவல்துறையும் சட்டவிரோதமாக கொலை செய்து வருவதை மேலே காட்டப்பட்ட சில
உதாரணங்களில் இருந்து புரிந்துகொள்ள முடியும். தமிழ் மக்களுக்காக போராடிய
தோழர் தமிழரசனையும் இவ்வாறே தமிழக காவல்துறை சதி செய்து கொன்றது.
1945ம் ஆண்டு ஏப்பிரல் 14ம் நாள் பிறந்த தோழர் தமிழரசன் 1987ம் ஆண்டு
செப்டெம்பர் 1ம் நாள் அவரது 42வது வயதில் கொல்லப்பட்டார். 1967ம் ஆண்டு
நக்சல்பாரி தலைவர் சாரும்மஜீந்தார் அவர்களின் அழைப்பை ஏற்று தனது பொறியல்
படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு முழுநேர போராளியாக மாறினார். அவர்
1975ம் ஆண்டு அரியலூரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் ஒருமுறை ஓரு அதிகாரி இவரிடம் “நீங்கள் ஓரு பொறியிலாளராக
வாழ்க்கையை அமைத்திருந்தால் வசதியாக வாழ்ந்திருக்கலாமே?” என்று
கேட்டதற்கு “என் நாட்டு மக்கள் பட்டினியிலும் வறுமையிலும் இன்னல்
படும்போது நான் மட்டும் எப்படி வசதியாக நிம்மதியாக வாழ முடியும்?” என்று
தோழர் தமிழரசன் பதில் அளித்துள்ளார்.
 இவ்வாறு மக்களை நேசித்த மக்களுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்த தோழர்
தமிழரசன் 9 ஆண்டு சிறைவாசத்தின் பின் 1983ம் ஆண்டு சிறையில் இருந்து
விடுதலையானார். சிறையில் இருந்து வெளியே வந்த தோழர் தமிழரசன் தொடர்ந்தும்
மக்களுக்காகவே போராடினார். அவர் தமிழ்நாடு பொதுவுடைமைக்கட்சி மற்றும்
தமிழ்நாடு விடுதலைப்படை என்பவற்றை உருவாக்கி அவற்றுக்கு தானே தலைமைதாங்கி
நடத்தினார்.
இவ்வாறான புரட்சியாளர் தோழர் தமிழரசனை கொள்ளையர் என்று சொல்லி தமிழக
காவல்துறையால் கொல்லப்பட்டார். எந்தவித சமரசமும் இன்றி தமிழ்நாடு
விடுதலைக்காக ஆயதப் போராட்டத்தை அவர் முன்னெடுத்தார். எனவேதான் அவர்
தமிழக அரசாலும் அதன் ஏவல் நாயான காவல்துறையாலும் சதி திட்டம் தீட்டி
கொல்லப்ட்டார். தோழர் தமிழரசனைக் கொல்வதன்மூலம் அவர் முன்னெடுத்த
தமிழ்நாடு விடுதலைப் போராட்டத்தை நசுக்கிவிட முடியும் என தமிழக காவல்துறை
நினைத்தது. ஆனால் தோழர் தமிழரசன் புதைக்கப்படவில்லை.
விதைக்கப்பட்டுள்ளார். அவரில் இருந்து பல தமிழரசன்கள் தோன்றிக்
கொண்டிருக்கிறார்களன். அவர்கள் தோழர் தமிழரசன் கண்ட கனவை நிச்சயம்
நிறைவேற்றுவார்கள். இது உறுதி.

tholarbalan.blogspot.in/2016/05/blog-post_72.html?m=1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக