வெள்ளி, 20 செப்டம்பர், 2019

வடயிந்தியர் ஆதிக்கம் தினகரன் செய்தி




aathi1956 aathi1956@gmail.com

திங்., 2 ஜூலை, 2018, பிற்பகல் 7:20
பெறுநர்: எனக்கு
தமிழகம், கேரளா, கர்நாடகாவில் வடஇந்தியர்கள் ஆதிக்கம் அதிகரிப்பு: மாநில மக்களின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறதா?
சென்னை:தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களில் வட இந்தியாவை சேர்ந்த மக்கள் கணிசமாக குடியேறியிருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனால் இந்த மாநிலங்களில் மக்களின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய 3 தென்மாநிலங்களில் பீகார், ஒடிசா உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களை சேர்ந்த மக்கள் கணிசமாக குடியேறியிருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. குறிப்பாக இந்தி, வங்காளம் மற்றும் அசாம் மொழி பேசும் வட இந்தியர்கள், தென் மாநிலங்களுக்கு அதிகளவில் இடம் பெயர்ந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தென்னிந்தியாவில் 58.2 லட்சமாக இருந்த வட இந்தியர் எண்ணிக்கை 10 ஆண்டுகளில் 77.5 லட்சமாக அதிகரித்து இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதற்கு நேர்மாறாக, கடந்த 2001-ம் ஆண்டில் தமிழர்கள் வட இந்திய நகரங்களில் சுமார் 8.2 லட்சம் பேர் குடியேறியுள்ளனர். ஆனால், 2011-ம் ஆண்டில் 7.8 லட்சமாகக் குறைந்துள்ளது. இதேபோல், வட மாநிலங்களில் கேரள மக்கள் குடியேறும் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளது.
தென்மாநிலங்களில் உள்ள வேலைவாய்ப்பு, உயர் கல்வி, பொருளாதார மேம்பாடு, அமைதியான சூழ்நிலை உள்ளிட்ட காரணங்களுக்காகவே பெரும்பாலான வட இந்தியர்கள், தென் இந்தியாவில் குடியேறியுள்ளனர். மேலும், உத்தரப் பிரதேசம், பீகார், அசாம், நேபாளம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து அதிகமானோர் தமிழகம் மற்றும் கேரளாவில் குடியேறியிருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்படும் முன்பு கர்நாடகா, ஆந்திரா, கேரளா பகுதிகளில் தமிழர்கள் பெருவாரியாக வாழ்ந்து வந்தனர். மொழி வாரி மாநில பிரிப்பில் ஆந்திராவில் திருப்பதி, கேரளாவில் பீர்மேடு, நெடுங்கண்டம் உள்பட 3 மாவட்டங்கள், கர்நாடாகவில் பெங்களூரு, கோலார் உள்பட பல்வேறு பகுதிகள் அந்தந்த மாநிலங்களுடன் இணைக்கப்பட்டது. இதன் பிறகு அங்குள்ள தமிழக மக்கள் வேலை மற்றும் இதர பல்வேறு விஷயங்களில் அந்த மாநில மொழியினை பேசவும் எழுதவும் படிக்கவும் கற்றுக் கொண்டனர்.
கர்நாடகாவில் கன்னடர்களுக்கு இணையாக தமிழர்கள் இருந்தபோதும் தமிழர் பகுதிகளில் மட்டும் தமிழரை வேட்பாளராக நிறுத்தும் போக்கு இருந்தது. ஆனால் தற்போது அங்குள்ள அரசியல் நிலவரம் பல்வேறு மாற்றங்களை அடைந்து வருகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் மதுரை, கோவை, திருப்பூர் சென்னை உள்பட பல்வேறு தொழில் நகரங்களில் குடியேறிய பிற மாநிலத்தவர்களின் வாக்கு எண்ணிக்கை கணிசமாக இருப்பதை அரசியல் கட்சிகள் உணரத் தொடங்கினர். அதே வேளையில் அந்தப்பகுதிகளில் பிற மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரையே வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்கிற பேச்சும் பலமாக அடிபட்டது. அதன்பிறகு பல்வேறு அரசியல் சூழலால் அது அபாயமான முடிவு என முக்கியமான அரசியல் கட்சிகள் முடிவெடுத்து நழுவிக் கொண்டது.
கல்வி, வேலைவாய்ப்பில் உள்மாநில மக்கள் வளர்ச்சி பாதிக்கப்படுகிறதா?
தமிழகத்தின் நகை அடகுத் தொழிலில் 90 சதவிகிதத்தை மார்வாடிகள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது போல தற்போது நகைக்கடைகள், எலக்ட்ரிக்கல் பொருட்கள், மின்சாதனப் பொருட்கள், ஜவுளித்துறை, ஏற்றுமதி, இறக்குமதி, கட்டுமானத்துறையில் தொழிலாளர்களை மொத்தமாக ஒப்பந்தம் செய்வது என பல்துறையிலும் வட மாநிலத்தவர்களின் ஆதிக்கம்தான் அதிகளவு இருப்பதாக தமிழகத்தை சேர்ந்த பல்வேறு அமைப்புகள், கட்சிகள் கொடிகட்டிப் பறக்கிறது என மிகக் கடுமையாக எச்சரித்து வருகிறார்கள். அதே போல கேரளாவில் உள்ள தேயிலை மற்றும் ஏலக்காய் எஸ்டேட்களில் மிக குறைந்த ஊதியத்திற்கு வட கிழக்கு மாநில ஆட்களை அழைத்து வந்து குடியேற்றம் செய்ததால் மிகப்பெரிய போராட்டம் வெடித்தது.
அதே போன்று சமீபகாலமாக அரசுத் தேர்வுகளில் வடமாநில மாணவர்கள் முன்னிலை வகித்து வருவதையும் இங்குள்ள தமிழ் அமைப்புகள் குறிப்பிடுகிறார்கள். குறிப்பாக மத்திய அரசுப் பணிகளில் முறைகேடாக திணிக்கப்படும் வட இந்தியர்கள். அண்மையில் தமிழக தபால் நிலையங்களில் பீகாரைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் நியமிக்கப்பட்டிருந்தனர். இவர்கள் தமிழில் 90 மதிப்பெண்கள் பெற்றதாக ஆவணங்கள் கூறியதை மிகப்பெரிய அளவில் பிரச்னையாக இருந்து வந்தது. வயிற்றுப் பிழைப்புக்காகவும், தொழில் நிமித்தமாகவும் உலகம் முழுவதும் இதுபோன்ற குடியேற்றங்கள் அனைத்து நாடுகளிலும் , அனைத்து மக்களிடையே பல்வேறு ஆண்டுகளாக நடந்து வந்தாலும் தமிழகத்தில் வட மாநிலத்தவர்கள் குடியேற்றம் உள்நாட்டு மக்களின் தொழில் மற்றும் பல்வேறு வளர்ச்சிகளைப் பாதிப்பதாக கூறுகிறார்கள். இது போன்ற பிரச்னைகளை களைய வேண்டும் என்றால் அனைத்து மாநிலங்களிலும் உள்கட்டமைப்பு, தொழில்துறை, கல்வி ,வேலை, வாய்ப்பு உள்பட பல்வேறு அடிப்படையான விஷயங்களில் மத்திய அரசு முழு கவனம் செலுத்த வேண்டும் என ஆய்வினை மேற்கொண்ட அதிகாரிகள் கூறுகின்றனர்.
எகிறும் கிரைம் ரேட்
இதேபோன்று வெளிமாநில ஆட்களின் வருகைக்குப்பிறகு தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்கார கொலை என கிரைம் ரேட் அதிகரித்து இருப்பதோடு சம்பந்தப்பட்ட குற்றங்களில் வடமாநிலத்து ஆட்களின் பங்களிப்பும் அதிக அளவில் இருப்பதும் தெரிய வந்துள்ளது. அதே போன்று டிஎன்பிஎஸ்சி மூலம் தமிழக அரசுப்பணியில் வட மாநிலத்தவர்கள் அதிகளவில் சேர்க்கப்படுவதாக புகார்கள் உள்ளது. உள்ளூர் மொழியை கற்றுக் கொள்ளாமல் வெளி மாநிலத்து ஆட்களை நியமனம் செய்யும் போக்கும் அதிகரித்துள்ளது. ஆனால் கேரளா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் 50 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் தமிழகர்களுக்கு, அனைத்து தகுதிகளும் இருந்தும் அம்மாநில அரசுகள் அரசு வேலை வாய்ப்புகளை வழங்க மறுப்புதாக குற்றச்சாட்டுகளும் இருந்து வருகிறது.

12:52 am Jul 01, 2018 | dotcom@dinakaran.com(Editor)

வேலைவாய்ப்பு க்ரைம்ரேட் ஹிந்தியர் குடியேற்றம் வந்தேறி மார்வாடி கன்னடர் 

எனது சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்ஃபோனிலிருந்து அனுப்பப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக