புதன், 14 பிப்ரவரி, 2018

நெய்வேலி தனியார் க்கு விற்பனை கார்ப்பரேட் வளம் சுரண்டல்

aathi tamil aathi1956@gmail.com

28/10/17
பெறுநர்: எனக்கு
நெய்வேலி சுரங்கத்தை விற்றுத் தின்ன காத்திருக்கும் மத்திய அரசு !
Posted by வினவு
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 15 சதவீத பங்குகளை தனியாருக்கு
விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளது மோடி அரசு. இதற்கான அறிவிப்பு விரைவில்
வெளியிடப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் தற்பொழுது ஒப்பந்த தொழிலாளர்கள் 13,000
பேரும், நிரந்தர தொழிலாளர்கள் 12,000 பேரும், எக்சிகியூட்டிவ் அதிகாரிகள்
5,000 பேரும் வேலை பார்க்கிறார்கள். இந்த அதிகாரிகளில் பெரும்பான்மையோர்
வட இந்தியர்கள்.
பத்தாண்டுகளுக்கு முன்பு 18,000 -க்கும் மேற்பட்டோர் நிரந்தர
தொழிலாளர்கள் இருந்த நிலைமை படிப்படியாக மாறி தற்போது நிரந்தரத்
தொழிலாளர்களே இல்லை என்ற நிலைமைக்குக் கொண்டு வந்துவிட்டனர்.
இதனைத்தொடர்ந்து, ஆண்டிற்கு 1,500 கோடி ரூபாய்க்கு மேல் நிகர லாபம்
ஈட்டும் என்.எல்.சி. நிறுவனத்தை தனியார்மயமாக்கும் சதித்தனமான முயற்சிகளை
தொடர்ந்து செய்து வருகிறது மத்திய அரசு.
2002 -ம் ஆண்டு என்.எல்.சி. நிறுவனத்தின் 51 சதவீதப் பங்குகளை விற்பனை
செய்யத் திட்டமிட்டு, அமைச்சரவை ஒப்புதலையும் பெற்ற நிலையில்,
நாடாளுமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தார் அன்றைய
பாஜக பிரதமர் வாஜ்பாய். அப்பொழுது எழுந்த கடுமையான எதிர்ப்பின் காரணமாக
அது நிறுத்தி வைக்கப்பட்டது.
கடந்த 2013 -ம் ஆண்டு மன்மோகன் சிங் ஆட்சியிலும் என்.எல்.சி. பங்குகளை
விற்பனை செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்பொழுது தொழிலாளர்கள்
மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பின் காரணமாக என்.எல்.சி.யின் பங்குகளை
பங்குச் சந்தையில் விற்கும் திட்டத்தை நிறைவேற்ற முடியாமல்
திணறிக்கொண்டிருந்த நிலையில், எதிர்ப்புகளைச் சமாளிக்க இப்பங்குகளை
தமிழ்நாடு அரசு நிறுவனங்கள் வாங்கிக் கொள்ளும் திட்டத்தை நயவஞ்சகமாக
அறிவித்தார் ‘A1’ ஜெயலலிதா.
இதன்படி, தமிழக அரசுத்துறை நிறுவனங்கள் 3.91% வாங்கியிருந்தாலும், அவை
தனியார் முதலாளிகளின் கைகளுக்குப் போகாது என்பதற்கு எந்த உத்தரவாதமும்
இல்லை. நாளையே தமிழக அரசுக்கு நிதிப் பற்றாக்குறை என்று காரணம் காட்டி,
இந்தப் பங்குகளை தமிழக அரசு விற்பனை செய்தால் அதை யாரும் தடுக்கவும்
முடியாது. என்.எல்.சி.யின் பங்குகளை வாங்கும் தமிழக அரசுத்துறை
நிறுவனங்கள் அவற்றைப் பங்குச் சந்தையில் விற்கவோ, ஒரு ஆண்டுக்குப் பிறகு
வேறு ஒரு கார்ப்பரேட் நிறுவனத்துக்கு விற்கவோ எந்தத் தடையும் கிடையாது.
இதை என்.எல்.சி. நிர்வாகம் கண்காணிக்கவோ, கட்டுப்படுத்தவோ முடியாது.
இம்மோசடியை மூடிமறைத்து, “எனது தலைமையிலான அரசின் தொடர் நடவடிக்கையாலும்,
எனது தனிப்பட்ட முயற்சியாலும் என்.எல்.சி. பங்குகள் தனியாருக்கு விற்பனை
செய்வது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இது தொழிலாளர் போராட்டத்துக்கும்
தமிழக மக்களின் ஒருமித்த குரலுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி” என்று
தனக்குத்தானே பாராட்டியும் கொண்டார் ஜெயா. அத்துடன் அப்பிரச்சினை
முடிவுக்கு வந்தது.
தற்போது கார்பரேட்களின் ’வளர்ப்புப் பிராணியான’ மோடி தலைமையிலான பா.ஜ.க.
அரசு, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தை சிறிது சிறிதாக தனியாரிடம்
தாரை வார்க்கும் முயற்சியாக, சுரங்கப் பணிகள் உள்ளிட்ட அனைத்தையும் அயல்
பணி ஒப்பந்தம் மூலம் நிறைவேற்றி வருகிறது.
நடப்பு நிதியாண்டில் என்.எல்.சி. நிறுவன பங்குகள் 20 சதவீதம் விற்பனை
செய்வதற்கும் மோடி அரசு திட்டமிட்டு ஆட்குறைப்பு, சம்பள வெட்டு, வேலை
நாட்கள் குறைப்பு என்று தொடர்ந்து தொழிலாளர்களுக்கு எதிராக செயல்பட்டு
வருகிறது மோடி அரசு.
என்.எல்.சி. நிறுவனப் பங்குகளில் 89.32% பங்குகள் மத்திய அரசிடம் உள்ளன.
4.06% வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமும், 3.91% பங்குகள் தமிழக
அரசின் பொதுத்துறை நிறுவனங்களிடமும், 0.96% பங்குகள் காப்பீட்டு
நிறுவனங்களிடமும் உள்ளன. பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் மத்திய
அரசிடம் 75 விழுக்காட்டுக்கும் அதிகமாக இருக்கக் கூடாது என எடுக்கப்பட்ட
கொள்கை முடிவின் அடிப்படையில்தான் பங்குகள் விற்கப்படவுள்ளதாக மத்திய
அரசு கூறியுள்ளது.
மத்திய அரசின் இந்த கொள்கை முடிவே பொதுத்துறை நிறுவனங்களை
தனியார்மயமாக்கும் சதிச் செயல்தான்.
நெய்வேலி பழுப்பு நிலக்கரிக் நிறுவனத்தின் 2012 – 13 -ம் ஆண்டுக்கான நிகர
லாபம் ரூ. 1,479 கோடி. இது அதற்கு முந்தைய ஆண்டைவிட 3.5 சதவீதம் அதிகம்.
கடந்த (2016-17) 31.03.2017 அன்றுடன் முடிவடைந்த நிதியாண்டில்
இந்நிறுவனம் ரூ.2,342.20 கோடியை நிகர லாபமாக பெற்று இதுவரை இல்லாத அளவில்
சாதனை படைத்துள்ளது.
அதாவது, கடந்த 2016 – 17 நிதியாண்டில்ரூ. 8,672.84 கோடி வர்த்தகம் மேற்கொண்டுள்ளது.
இது 2015 – 16 -ம் ஆண்டின் வர்த்தகத் தொகையான ரூ. 6,652.5 கோடியை விட
30.38 சதவீதம் அதிகம். மொத்த வருவாயாக ரூ. 9,347.25 கோடியை ஈட்டி சாதனை
படைத்துள்ளது. இது 2015 – 16ஆம் ஆண்டின் மொத்த வருவாயான ரூ. 7,177.20
கோடியை விட 30.24 சதவீதம் அதிகம். வரிக்கு முந்தைய லாபமாக ரூ. 3,027.56
கோடியை ஈட்டியுள்ளது.
2015-16 -ம் ஆண்டின் வரிக்கு முந்தைய லாபத் தொகையான ரூ. 1,856.7 கோடியை
விட 63.12 சதவீதம் அதிகம். இந்த லாபத்தில் பெரும்பகுதி மத்திய அரசுக்கு
ஈவுத் தொகையாக வழங்கப்பட்டிருக்கிறது. தொழிலாளர்களின் குருதி சிந்திய
உழைப்பில் இந்நிறுவனம் அபார வளர்ச்சியை நோக்கித் தான் சென்று
கொண்டிருக்கிறது. அப்படியிருந்தும் மைய அரசு ஏன் பங்குகளை விற்க
வேண்டும்?
தொழில் நிறுவனங்களை அரசு நடத்தக்கூடாது; அனைத்தையும் சந்தையின்
கட்டுப்பாட்டில் விட்டுவிட வேண்டும் – என்பது தான் தனியார்மயக்
கொள்கையின் தாரக மந்திரம். தொழில் நிறுவனங்களையும் அவற்றின் சந்தை
வர்த்தக நடவடிக்கைகளையும் நாடாளுமன்றமோ, அரசாங்கமோ கட்டுப்படுத்தும்
பொறுப்பில் இருக்கக் கூடாது; மாறாக தகுதியான, நேர்மையான, நிர்வாக
நுணுக்கங்களை அறிந்துள்ள அதிகார வர்க்க நிபுணர்களிடம், துறை சார்ந்த
வல்லுநர்களிடம் அதிகாரத்தை அளிப்பதன் மூலம்தான் வளர்ச்சியைச் சாதிக்க
முடியும் – என்பதுதான் புதிய தாராளமயக் கொள்கையின் அடிப்படை விதி.
இதன்படி, மின்சார ஒழுங்குமுறை ஆணையம், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்
– என அடுத்தடுத்து உருவாக்கப்பட்ட இத்தகைய அமைப்புகள் அனைத்தும் ஏற்கெனவே
பெயரளவில் இருந்த அரசாங்கக் கண்காணிப்புகளை ஒழித்துக்கட்டி, முழுவதும்
தனியார் முதலாளிகளின் சூறையாடலுக்கு ஏற்ப இயங்க ஆரம்பித்தன. இந்த
ஒழுங்குமுறை ஆணையங்களும் வாரியங்களும் தீர்மானிக்கும் விதிகளைத்தான் யார்
பிரதமராக இருந்தாலும், எந்தக் கூட்டணி அரசாங்கமாக இருந்தாலும் பின்பற்ற
வேண்டும் என்பதே தனியார்மயத்தின் பொதுவிதி .
இவை ஒருபுறமிருக்க, மோடி அரசின் அடுத்தடுத்த தாக்குதல்களால் நாட்டின்
பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. (அதே சமயம் அம்பானி, அதானி
போன்ற தரகு முதலாளிகளின் சொத்து மதிப்பு அபாரமாக உயர்ந்துள்ளது என்பதை
கவனிக்கவும். அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா சொத்து மதிப்பும் 16,000 மடங்கு
அதிகரித்துள்ளது).
இந்த வீழ்ச்சியை தூக்கி நிறுத்தவே, மத்திய அரசு நான்கு டிஃபென்ஸ்
நிறுவனங்களின் 25 சதவிகித பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
அதன்படி நான்கு டிஃபென்ஸ் நிறுவனங்களான மசகான் டாக் லிமிடெட், பாரத்
டைனமிக்ஸ் லிமிடெட், கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ், மிஷ்ரா தத்து நிகம்
லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இவற்றின் 25 சதவிகித
பங்குகள் பொது விற்பனைக்குவிட ஏற்பாடு செய்யப்படுகிறது. விரைவில் இதற்கான
அறிவிப்புகள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
மேலும், பல்வேறு அரசு நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ய
நடவடிக்கையும் எடுத்து வருகிறது. இதன் மூலம் இந்த நிதி ஆண்டில் ரூ.72,500
கோடி நிதித்திரட்ட உள்ளது. ஏற்கனவே ரூ.49,759 கோடி வருவாய் ஈட்டியுள்ள
நிலையில் மீதமுள்ள தொகையை வரும் மார்ச்சுக்குள் திரட்ட
முடிவெடுத்துள்ளது. அந்த இலக்கை நிறைவேற்றவே தற்போது என்.எல்.சி. -யின்
15% பங்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
கடந்த பத்தாண்டுகளில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கடன் தள்ளுபடி செய்த
தொகை மட்டும் பல இலட்சம் கோடி இருக்கும். இதுபோக பொதுத்துறை வங்கிகளின்
வாராக்கடன் தொகையில் 73% முதலாளிகளிடமிருந்து வசூலிக்காமல் அவர்களுக்கு
தேவையான வசதிகளையும் செய்து தரும் இந்த அரசு, என்.எல்.சி. -யின் 15%
பங்குகளை வெறும் ரூ.2,500 கோடியை திரட்டுவதற்காக தனியாரிடம் விற்கத்
துடிக்கிறது.
இப்படித்தான் மாருதி நிறுவனத்தில் 50 சதவீதப் பங்குகளைக் கொண்டிருந்த
இந்திய அரசு, பா.ஜ.க. ஆட்சியின்போது பங்குகளைப் பொதுமக்களுக்கு
விற்கிறோம் என்ற பெயரில் ஜப்பானிய ஏகபோக சுசுகி நிறுவனத்திடம் விற்றது.
இப்போது மாருதி முழுக்கவும் சுசுகியின் ஆதிக்கப் பிடிக்குள்
சென்றுவிட்டது.
என்.எல்.சி. போன்ற பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை படிப்படியாக விற்று
நாட்டையே தனியார்மயமாக்கி விடலாம் என நினைக்கிறது மோடி கும்பல்.
எப்படியிருப்பினும்  இது மோடி-கார்ப்பரேட் கூட்டணிக்கு லாபம் தான். ஆனால்
இந்நாட்டின் உரிமைதாரர்களாகிய நமக்கு ?
மேலும் :
என்.எல்.சி பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முயல்வதை அனுமதிக்க
முடியாது: ராமதாஸ் கண்டனம்
என்.எல்.சியின் 15% பங்குகளைத் தனியாருக்கு விற்கக் கூடாது!
ரூ. 2,342 கோடி நிகர லாபம்: என்எல்சி புதிய சாதனை
_____________
இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு –
புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த
அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர்
மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு,
நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை
அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது
வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன்
அறியத்தரவும். நன்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக