|
14/1/15
| |||
|
தமிழர்களுக்கு அறிவியல்
பார்வை இல்லையா?-
பி.ஏ.கிருஷ்ணனுக்கு கி.வெங்கட்ராமன்
பதில்
http://andhimazhai.com/news/ view/01-12-2013-ttpk-k-v- against-p-a-krishnan.html
பார்வை இல்லையா?-
பி.ஏ.கிருஷ்ணனுக்கு கி.வெங்கட்ராமன்
பதில்
http://andhimazhai.com/news/
தமிழர்களுக்கு அறிவியல் பார்வை இல்லையா?- பி.ஏ.கிருஷ்ணனுக்கு கி.வெங்கட்ராமன் பதில்
Posted : ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 01 , 2013 11:31:36 IST
அறிவியல் பார்வை அறவே இல்லாமல், தமிழின் மீதும், தமிழினத்தின் மீதும் வன்மம் மட்டுமே மேலிட எழுதும் கட்டுரையாளர்களின் களமாக தி இந்து தமிழ் நாளிதழ் திட்டமிட்டே செயல்படுகிறது. ஏற்கெனவே எழுத்தாளர் ஜெயமோகன் தமிழ் வரி வடிவத்திற்கு எதிரான கருத்து இவ்விதழில் வெளிப்பட்டது. இப்போது பி.ஏ. கிருஷ்ணன் என்பவர் எழுதிய ‘அறிவியலும் தொழில் நுட்பமும் ஒன்றா” என்ற தலைப்பிலான கட்டுரை 28.11.2013 ஏட்டில் வந்துள்ளது.
தமிழக அரசின் பத்தாம் வகுப்பு தமிழ்ப் புத்தகத்தில் வந்துள்ள ‘தமிழ் மொழியில் அறிவியல் சிந்தனைகள்” என்ற பாடமே பி.ஏ.கிருஷ்ணனின் வன்மப் பாய்ச்சலுக்குக் காரணமாகும்.
‘தமிழர்களுக்கு விண்ணியல், பொறியியல், மண்ணியல், கணிமவியல், அணுவியல், நீரியல் போன்ற பல இயல்களில் ஆழ்ந்த அறிவு இருந்தது என்று கூறப்படுகிறது………….. அறிவியலும், தொழில்நுட்பமும் ஒன்றல்ல………… தமிழர்கள் அணைகள் கட்டியிருக்கிறார்கள். கோயில்கள் கட்டியிருக்கிறார்கள். சிற்பங்கள் செதுக்கியிருக்கிறார்கள். உலகம் வியக்கும் செப்பு சிலைகள் செய்திருக்கிறார்கள். ஆனால் இவற்றை எல்லாம் செய்வதற்கு அறிவியல் ஞானம் தேவையில்லை. தொழில் நுட்பம் போதுமானது” என்று தனது மோதாவித்தனத்தை காட்டுவதாகக் கருதிக்கொண்டு அறியாமையையும், இனப்பகைக் கருத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.
அறிவியலுக்கும், தொழில் நுட்பத்திற்கும் வேறுபாடு இருப்பதை இப்பாடம் மறைத்துக் குழப்பி விட்டதாக கிருஷ்ணன் மிகவும் கவலைப்படுகிறார். இப்பாடத்தின் தலைப்பே ‘தமிழ் மொழியில் அறிவியல் சிந்தனைகள்” என்பது தான். அடிப்படை அறிவியலாக (Basic Science) இருந்தாலும், தொழில் நுட்பமாக (Technology) இருந்தாலும் இவ்விரண்டு துறை அறிவிற்கும் அறிவியல் பார்வை – அறிவியல் சிந்தனை அடிப்படையானது.
ஏதோ அடிப்படை அறிவியலுக்கும், தொழில் நுட்பத்திற்கும் இடையில் மிக உயர்ந்த சீனச் சுவர் இருப்பதுப் போல் கிருஷ்ணன் பேசுகிறார். செயல்படும் அறிவியலே (Applied Science) தொழில் நுட்பம் எனப்படும். இந்த அரிச்சுவடிக் கூட அறியாதவர் போல் கிருஷ்ணன் எழுதுகிறார்.
தொழில் நுட்ப அறிவு என்பது முயன்று, தவறி, கற்றல் என்ற வழியில் (ட்டிரையல் அண்டு எர்ரர்) வளர்வதாகவும் அடிப்படை அறிவியல் அறிவானது கோட்பாடு (தியரி) சோதனை (எக்ஸ்பெரிமண்ட்) கண்டறியதல் (ஃபைண்டிங்ஸ்) என்ற வழியில் நிலைப்பெறுவதாகவும், கிருஷ்ணன் கூறுகிறார். அறிவியல் அறிவிற்கும் முயன்று – தவறி- கற்றல் என்ற வழிமுறையே செயல்படுகிறது. தான் காணுகிற அல்லது உணருகிற செய்திகளை தொகுத்தும், வகுத்தும் ஆய்ந்து ஓர் அறிவியலாளர் (விஞ்ஞானி) முதலில் ஒர் கருதுகோளைத்தான் (Hypothesis) வைக்கிறார். இது ஆய்வில் மெய்ப்பிக்கப்படலாம்; அல்லது தோற்றுப் போகலாம்.
இது அடிப்படையில் சரியானதாக இருந்து செழுமைப்படவும்ச் செய்யலாம். அதன் பிறகே அது கோட்பாடு (Thesis அல்லது Therory) ஆகிறது. இது ஒருவகை முயன்று – தவறி – கற்றல் வழிமுறைதான். இந்த அறிவு வளர்முறை குறித்த அரிச்சுவடி தெரியாதவராக கிருஷ்ணன் இருக்க முடியாது. ஆனால் தனது வாதத்தை நிலைநாட்டுவதற்காக ஒரு குழப்பமான வரையறையை முன்வைத்து அதன் அடிப்படையில் தமிழர்களுக்கு ‘அறிவியல் ஞானம் இல்லை” என்று நிலைநாட்ட முயல்கிறார்.
ஆனால் இவரே இக்கட்டுரையில் ‘அறிவியலுக்கும், தொழில்நுட்பத்திற்கும் இன்று இருக்கும் பிணைப்பு பிரிக்கமுடியாதது. அறிவியல் இல்லையென்றால் தொழில் நுட்பம் முன்னேற முடியாது. தொழில்நுட்பம் இல்லையென்றால் அறிவியலின் பல கண்டுப்பிடிப்புகள் நிகழ்ந்திருக்க வாய்ப்பே இல்லை” என்று கூறுகிறார். அதாவது அறிவியலுக்கும், தொழில்நுட்பத்திற்கும் இன்றைய காலத்தில் தான் பிரிக்க முடியாத பிணைப்பு வந்துவிட்டதாக வலியுறுத்துகிறார். எப்போதுமே அறிவியலுக்கும், தொழில்நுட்பத்திற்கும் பிரிக்க முடியாத பின்னிப்பிணைந்த உறவு இருந்து வருவதை தன் வசதிக்காக வேண்டுமென்றே மறைக்கிறார்.
ஆயிரம் ஆண்டுகளாக நிலைத்து நிற்கும் வானுயர்ந்த தஞ்சை பெரியக்கோயில் கோபுரம் கூட இதுபோல் பல கோபுரங்கள் கட்ட முனைந்து அவை இடிந்து போன பிறகே அறிவுப்பெற்று ஒரு தற்செயல் நிகழ்ச்சியாக நிலைக்கவைக்க முடிந்தது என்று கூறவருகிறார். இதற்கு வரலாற்கு வழிப்பட்ட ஆதாரம் ஒன்றையாவது காட்ட வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சிக் கூட அவரிடம் இல்லை. வன்மம் கண்ணை மறைக்க நெஞ்சாரப் பொய் வாதம் செய்கிறார்.
இது ஒருபுறம் இருக்க, அவர் எடுத்துக்காட்டிய பத்தாம் வகுப்புப் பாடத்திலேயே கூட தமிழர்களின் அடிப்படை அறிவியல் அறிவு (Basic Science Knowlege) நிறையவே எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. இவற்றை எல்லாம் வசதியாக மறைத்து விட்டு வானூர்தி குறித்த தொழில்நுட்பச் செய்தியை அறிவியல் வகைப்பட்டதுப் போல கூறிவிட்டார்கள் என ஏளனம் செய்கிறார்.
உலகம் உருண்டை என்பதை மேற்குலகம் கண்டறிந்து கூறியதே 16-ஆம் நூற்றாண்டில் தான். அதற்கும் மத நிறுவனங்களின் கடும் எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருந்தது. ஆனால் இதற்கு 600 ஆண்டுகளுக்கு முன்பே பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழர்கள் தங்கள் முன்னோர்கள் வழியாக ‘உலகம் உருண்டை” என்ற உண்மையை பரவலாகத் தெரிந்து வைத்திருந்தனர் என்பதற்கு திருவாசகம் சான்று கூறுகிறது.
‘அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி
ஒன்றனுக் கொன்று நின்றெடுப் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன”
என்ற திருவாசக வரிகள் வானியல் (அஸ்ட்ரானமி) என்ற அடிப்படை அறிவியல் குறித்த மூன்று முக்கிய செய்திகளைக் கூறுகிறது.
கடவுளை வாழ்த்திப் பாடுகிற ஒரு பாடலில் போகிறப் போக்கில் மிக அரிய அறிவியல் செய்திகள் சொல்லிச் செல்லப்படுகின்றன. ஒன்று, உலகம் அல்லது இந்த பூமி உருண்டை வடிவமானது, தட்டையானது அல்ல என்ற அறிவியல் செய்தி. இரண்டாவது, ‘நூற்றொருக் கோடி’ வான் பொருள்கள் இதுபோல் உருண்டை வடிவமாக இப்பேரண்டத்தில் உள்ளன என்ற அறிவியல் செய்தி. மூன்றாவது, இவை இருக்கும் வெளி விரிந்துக்கொண்டே இருக்கிறது என்ற அறிவியல் செய்தி.
இதற்கென்று தனித்த ஓர் அறிவியல் நூல் எழுதி அதன் வழியாகச் இச்செய்தியை சொல்வதற்கு பதிலாக கடவுள் வாழ்த்து பாடுகிறப் போது போகிறப் போக்கில் மாணிக்கவாசகர் இப்பேருண்மையை சொல்லிச் செல்கிறார் என்றால் இந்த அறிவியல் செய்தி மிகப்பரவலாக அக்காலத் தமிழர்களிடையே புழங்கி வந்த பரவலான அறிவு இருந்திருக்கிறது என்று பொருள்.
மணிவாசகருக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே 3000 ஆண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியம் இந்த அறிவியல் செய்திகளை ஏராளமாக கூறுகிறது என்ற உண்மையை ஆய்வாளர்கள் எடுத்துக் கூறியிருக்கின்றனர். (எ.கா: ‘தமிழ் இலக்கியத்தில் உலகாய்தம்’ முனைவர் க. நெடுஞ்செழியன் – மனிதம் பதிப்பகம் வெளியீடு -திருச்சி, 1990)
இயற்கையின் அடிப்படையாக இருப்பவை எவை என்பதை மேற்குலகம் அறிவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அது பற்றிய அறிவியல் அறிவு தமிழர்களிடம் இருந்தது. நிலம், நீர், காற்று, தீ, விசும்பு என்ற ஐம்பூதங்களால் ஆனது இயற்கை என்ற அறிவியல் அறிவு தமிழர்களுக்கு இருந்தது. வடமொழி வாணர்களான ஆரியர்கள் கூட ‘சதுர்பூதம்’ என்று நான்கு கூறுகளை மட்டுமே அறிந்திருந்தனர். காற்று வேறு அது இயங்கும் வெளி வேறு, அதன் பெயர் விசும்பு (ஸ்பேஸ்) என்ற தெளிவு தமிழர்களிடம் இருந்தது.
‘ மண் திணிந்த நிலனும்
நிலனேந்திய விசும்பும்
விசும்புதை வரு வளியும்
வளித் தலைஇய தீயும்
தீ முரணிய நீரும் என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை”
என்று சங்கப் பாடல் ஒன்று கூறுகிறது.
புற இயற்கைக்கு மட்டுமின்றி மனித உடலுக்கும் இந்த ஐம்பூதங்களே அடிப்படை என்பதை ‘ அண்டமே பிண்டம்” என்ற சொற்களால் தமிழர்கள் வரையறுத்தனர்.
இது கிருஷ்ணன் கூறுவதுப் போல் தொழில் நுட்ப அறிவு அல்ல, அடிப்படை அறிவியல் அறிவு.
டாப்ளர் விளைவை வைத்து 20-ஆம் நூற்றாண்டில் தான் இந்த விசும்பு – அண்டவெளி விரிவடைந்து வருகிறது என்ற உண்மையை கிருஷ்ணன் தலையில் தூக்கிக்கொண்டாடும் மேற்குலக அறிவியல் உணர்ந்தது. ஆனால் இதற்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ‘அகலிரு விசும்பு” என்று தொல்காப்பியம் கூறுகிறது. ‘வளிதிரி தரு மண்டலம்” என்று காற்றே இல்லாத வெட்டவெளி விசும்பு இருக்கிறது என்ற உண்மையையும் பண்டைத் தமிழர்கள் கூறிச்செல்கிறார்கள். இதெல்லாம் மேற்குலக அறிவாளிகளுக்கு தெரிய 2000 ஆண்டுகள் ஆனது.
தமிழர்களின் கணிதவியல் அறிவை கிருஷ்ணன்கள் புரிந்துக்கொள்ளாததாலேயே அவை பொய் என்று ஆகி விடாது. ‘அறிவியல் ஞானம்” அற்றவர்களாக கிருஷ்ணன்கள் ஒதுக்குவதாலேயே தமிழினம் அறிவியல் அறிவற்ற கூட்டமாக ஆகிவிடாது.
இன்று மில்லியன் என்று மேற்குலகம் அழைக்கிற எண்ணை (106) பண்டைத் தமிழர்கள் மெய்யிரம் என்று குறித்தனர். இன்று மேற்குலகம் பில்லியன் (109) என்று கூறும் எண்ணை தமிழர்கள் தொள்ளுண் என்று குறித்தனர். இன்று டிரில்லியன் (1012) என்று குறிக்கும் எண்ணை தமிழர்கள் ஈகியம் என்றனர். இதனையும் தாண்டி நெளை (1015), இளஞ்சி (1018), வெள்ளம் (1020), ஆம்பல் (1021) என்ற எண் அளவுகளையும் தமிழர்கள் பரவலாகப் பயன்படுத்தி வந்தனர்.
இதுமட்டுமின்றி 1-க்கு கீழ் உள்ள பின்ன கீழ் அளவுகளையும் இன்று மேற்குலகம் கற்பனைச் செய்ய முடியாத அளவுகளில் அன்றாடம் பயன்படுத்தி வந்தனர். இந்த அளவுகளைக் கொண்டு பலப் புதிய நுட்பங்களை வளர்த்தெடுத்தனர். எடுத்துக்காட்டாக 1/16 வீசம் அல்லது மாகாணி எனப்பட்டது. 1/32 அரை வீசம் ஆகும். இது போல் கீழ் அளவுகள் நுணுகி நுணுகி பகுக்கப்பட்டுள்ளன. ஒரு இலட்சத்திது இரண்டாயிரத்து நானூறில் ஒரு பாகம் (1/102400) என்பதை கீழ் முந்திரி என்றனர். 21, இலட்சத்து 50 ஆயிரத்து 400-ல் ஒரு பங்கு என்பதை (1/2150400) இம்மி என்றனர்.
இன்று பில்லியனில் ஒரு பங்கு அதாவது 100 கோடியில் ஒரு பங்கு என்பதை நானோ (Nano) என்று மேற்குலக நவீன அறிவியல் குறிக்கிறது. இதுதான் ஆகச்சிறிய பகுப்பு என்பதாக குதிக்கிறது. ஆனால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இதைவிடக் கூடுதலாக 149 கோடியே 2 இலட்சத்து 27 ஆயிரத்து 200-ல் ஒரு பங்கு (1/1490227200) என்பதை ‘குணம்’ என்று குறித்தனர்.
இதையும் தாண்டி 3 இலட்சம் கோடி கோடியில் ஒரு பங்கு என்பதையும் தாண்டிய (1/35751146618880000000) என்ற நுண் அளவை நுண் மணல் எனக்குறித்தனர்.
இவ்வாறு பகுப்பதும் அதற்கு தனிப்பெயர் குறிப்பதும் விளையாட்டுக் கற்பனை அல்ல கணித அறிவின் உச்சம். கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டு விட்டதாக பூனைக் கருதுவதாலேயே உலகம் இருண்டு விடுவது இல்லை. இதனை கிருஷ்ணன் அறியாவிட்டால் அது அவரது அறியாமையே தவிர தமிழர்கள் அறிவியல் அறிவு அற்றவர்களாக மாறிவிடமாட்டார்கள்.
இந்த அளவீடுகளை நடைமுறை வாழ்க்கையில் தமிழர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதற்கான சான்றுகள் உள்ளன. சித்த மருத்துவத்தில் உலோக பற்பம் (பஸ்பம்), செந்தூரம் போன்ற மருந்துகள் தயாரிக்க மேற்சொன்ன கீழ் முந்திரி இம்மி, அடிசாரம், போன்ற நுண் அளவுகளைத் தமிழர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள். இதனை சித்த மருத்துவம் ‘இம்மிப் பகுப்பு’ என்று வரையறுக்கிறது.
இந்த அளவீடுகளை நில அளவையிலும் தமிழர்கள் பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் உண்டு. சோழர்கள் காலத்தில் நிலங்கள் அளவெடுக்கப்பட்டு துல்லியமாக பகுக்கப்பட்டன. இது குறித்து தஞ்சை பெரியக்கோயிலில் இராச ராச சோழனின் கல்வெட்டு ஒன்று கீழ் வருமாறு கூறுகிறது. இது திருவாரூர் மாவட்டம் பாலையூர் என்ற கிராமத்தின் பரப்பளவை அளந்து கூறுகிறது.
‘தெக்கடு வாயான அருமொழித் தேவ வளநாட்டு
இங்ஙணாட்டு பாலையூர் பள்ளியுங் கணி
முற்றூட்டும் உட்பட அளந்தப்படி நிலம் நூற்று
முப்பத்து நான்கேய் எட்டு மாவின் கீழ் முக்காலே
மும்மா வரையறைக் காணி முந்திரிகைக் கீழ் நான்குமா”
என்பது அக்கல்வெட்டுக் கூறும் செய்தி.
இது ஏறத்தாழ 130 வேலி நிலம் ஆகும். (1வேலி = சுமார் 6.75 ஏக்கர்) தமிழர் அளவீடுகளின் படி கீழ்க் காணி (1/25600), கீழ் முந்திரி (1/102400) ஆகிய மிகச் சிறிய அளவுகளில் கூட நிலம் அளக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த கணித அறிவு மக்களின் அன்றாட வாழ்வில் இயல்பாக புழங்கி வந்திருக்கிறது. (விரிவிற்கு காண்க: நிலம் அளந்த இராசராசன் – முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன்- தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம், 2010, செப்டம்பர் இதழ்) தமிழர்களின் இந்த அறிவியல் அறிவு அது சார்ந்த தொழில் நுட்ப அறிவு ஆகியவை மிகப் பரவலாக மக்களிடம் புழங்கியதால் அது தமிழ் மக்களின் பன்பாட்டு நடவடிக்கைகளோடும், சடங்குகளோடும் இரண்டறக் கலந்து அவர்கள் வாழ்வியலின் பிரிக்க முடியாத கூறாக மாறிவிட்டது. இதனைக் கவனிக்காமல் அவற்றை வெறும் சடங்கு அல்லது மூட நம்பிக்கை என்று ஒதுக்கி விடுவது கிருஷ்ணன் போன்றவர்களின் அறியாமையாக இருக்கலாமே தவிர அதற்காக தமிழர்களை அறிவியல் அறிவு அற்ற சமூகமாக கீழ்ப்படுத்திவிட முடியாது.
‘ஆடிப்பட்டம் தேடிவிதை” என்ற மக்கள் வழக்கில் இருந்த பழமொழி தலைமுறை தலைமுறையான முயற்சியில் தமிழர்கள் வளர்த்தெடுத்த அறிவியல் அறிவின் ஓர் பிழிவு.
இன்று நவீன அறிவியல் உலகம் மக்களிடம் புழக்கத்தில் உள்ள அறிவியல் அறிவை அடையாளம் காணப் பெரிதும் முயன்று வருகிறது. மக்கள் குடி உயிரியல் (Ethno Biology), மக்கள் குடி மருந்தியல் (Ethno medicine), மக்கள் குடி மரபியல் (Ethno Genetics) போன்று பல அறிவியல் துறைகள் வளர்ந்து வருகின்றன. இந்த புதிய அறிவியல் போக்கை பி.ஏ. கிருஷ்ணன் அறியாமல் இருக்கலாம் அல்லது அறிந்தும் மறைக்கலாம். ஆனால் உண்மை மறைந்து விடாது.
பசுமைப் புரட்சியை திணித்து, இரசாயன வேளாண்மையைப் புகுத்திய வேளாண் அறிவியலாளர் எம்.எஸ் சுவாமிநாதனின் நிறுவனமான ‘எம்.எஸ் சுவாமிநாதன்’ ஆராய்ச்சி அறக்கட்டளை அண்மையில் திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி கிராமத்தில் அங்குள்ள தமிழ் மக்களிடம் நிலவிய வேளாண் அறிவியல் சிந்தனைகளை ஆய்வு செய்து அதன் அடித்தளத்தில் நின்றுக்கொண்டு நவீன் வேளாண் அறிவியலை வளர்க்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது.
ஆய்வாளர் ரெங்கலட்சமி ராஜ் Hormonizing Traditional and Sceintific knowlege systems in Rainfall Predictions and Utilization என்ற தலைப்பில் வெளியிட்ட இந்த ஆய்வறிக்கை அம்மக்களிடம் இருந்த விண்ணியல், மண்ணியல், பருவவியல், நீரியல் அறிவை வியந்துப் பாராட்டுகிறது. அதை ஒரு முறை பி.ஏ. கிருஷ்ணன் படிக்கட்டும். (www.unep.org)
கன்னிவாடி பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் காற்று வீசும் திசை, காற்றின் ஈரப்பதம், நிலவைச் சுற்றிய வட்டத்தின் தன்மை, பறவை, பூச்சி ஆகியவற்றின் இயக்கம் மின்னலின் தன்மை போன்ற 12 காரணிகளை ஆய்வுச் செய்து மழை வருவது குறித்து முன்னறிந்து கூறுகின்றனர்.
கிழக்கில் புறப்பட்டு மேற்கு நோக்கி மின்னல் பாய்ந்தால் ஒரு மணி நேரத்தில் மழைப் பெய்யும். தென்மேற்கு மற்றும் வடமேற்கில் மின்னல் மின்னினால் இரவு நேரத்தில் மழைப் பெய்யும். நிலவைச் சுற்றி வளையமிருந்தால் சிறு தூரல் மட்டுமே விழும் சிட்டுக்குருவி கூட்டமாக தாழப்பறந்தால் அன்றைக்கே மழை வரும், கிணற்றுத் தவளை வழக்கத்தை விட அதிகமாக ஒலி எழுப்பினால் அல்லது நண்டு வளையை பெரிதாக குடைந்தால் இரண்டு நாளில் மழைவரும் என்பன போன்ற இவர்களது பருவ நிலை அறிவு இன்றைய நவீன கருவிகள் கண்டுப்பிடித்து அறிவிக்கும் அறிவிப்புகளுக்கு மிக நெருக்கமாக இருப்பதை ரெங்கலட்சுமி ராஜ் குறிப்பிடுகிறார்.
‘ஆடிமாதம் காற்றடித்தால் ஐப்பசியில் மழை வரும்” என்பது மக்கள் மொழி. ஜுலை, ஆகஸ்ட்-ல் காற்று வலுவாக வீசினால் அட்டோபர், நவம்பரில் பருவ மழை சரியான அளவு பொழியும் என்று வானியல் ஆராய்ச்சியாளர்கள் கருவிகள் கொண்டு கண்டறிந்து கூறியதைத் தான் மக்கள் கூறுகிறார்கள். இந்த ஆராய்ச்சியாளர்கள் கண்காணிக்கும் மேக மண்டல மாற்றங்களைத் தான் மக்களும் அடிப்படையாக கொண்டுள்ளனர் என்று ரெங்கலட்சுமி வியப்புடன் கூறுகிறார்.
பொன்னேறு பூட்டும் விழா என்ற பெயரில் முதல் உழவு நடத்துகிற காலத்தில் அச்சமூகத்தின் மூப்பர்கள் இளையோர்களிடம் கதையாகவும், பாட்டாகவும், பழமொழியாகவும் இதை கற்றுத்தருகிறார்கள் என்று ரெங்கலட்சமி கண்டு கூறுகிறார்.
தமிழர்களின் வேளாண் அறிவியல் மட்டும் அல்ல அவர்களின் பலவகை மரபுசார் மருத்துவமும் இன்று அறிவியல்; உலகத்தால் திரும்பிப் பார்க்கப்படுகின்றன.
டெங்கு காய்ச்சலுக்கும், சிக்கன் குனியா காய்ச்சலுக்கும் பி.ஏ. கிருஷ்ணன் கொண்டாடும் மேற்கத்திய அலோபதி மருத்துவத்தில் மருந்து இல்லை என்று மருத்துவ மனைகள் கைவிரித்ததையும், இந்நோய்க்கு நிலவேம்பு கசாயம் கொடுத்து இந்நோய்களை குணப்படுத்த முடிந்ததையும்; தமிழகம்; பார்த்தது.
இன்று மாடுகளை தாக்கியுள்ள கொள்ளை நோயான கோமாரிக்கு மேற்கத்திய மருத்துவம் எதுவும் செய்யமுடியவில்லை என்று கால்நடைத்துறையே கைவிரித்து விட்டது. ஆனால் அதே கால்நடைத்துறை குப்பைமேனி, பூண்டு, மஞ்சள் ஆகியவற்றைக் குறிப்பிட்ட அளவில் அரைத்து தயாரிக்கும் மூலிகை மருத்துவத்தையே பரிந்துரைக்கிறது.
இவற்றை எல்லாம் பி.ஏ. கிருஷ்ணன் கண்டும் காணாதது போல் எழுதுகிறார்.
தமிழக அரசின் பாடத்திட்டத்தில் தமிழர்களின் மரபு அறிவியலைப் பற்றி மிக அரிதாக ஒரு மூலையில் இடம்பெற்றுள்ள பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தை எடுத்து வைத்துக்கொண்டு அறிவியல் பார்வை மறந்து தமிழ் மீதும், தமிழர் மீதும் நஞ்சு கக்கும் பி.ஏ. கிருஷ்ணன் சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ள வேதகணிதம் (வேதிக் மேதமேடிக்ஸ்), வேத விஞ்ஞானம் (வேதிக் சயின்ஸ்) ஆகியவை குறித்து வாய்திறக்கக் காணோம்.
கிருஷ்ணன்களுக்கு ‘பசித்துப் புசி” என்ற தமிழ் முன்னோர் வாக்கு அறிவியல் அற்றது. அதையே சமஸ்கிருதத்தில் ‘லங்கணம் பரம ஒளஷதம்” என்று சொன்னால் அதுவே ‘அறிவியல் ஞானம்”.
கிருஷ்ணன் சொல்வதுப் போல் தமிழர்கள் தங்களைப் பற்றி ‘எங்களிடம் எல்லாம் இருந்தது என்று” தம்மைத் தாமே பாராட்டிக் கொள்பவர்கள் அல்லர். ‘கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலகளவு” என்ற ஒளவையின் வரிகள் தான் தமிழர்களின் வழிகாட்டி.
இருந்த அறிவெல்லாம் மறைக்கப்பட்டு விட்டது அல்லது அழிக்கப்பட்டு விட்டது என்ற உண்மையை பி.ஏ. கிருஷ்ணன் ஏற்க மறுக்கிறார்.
ஒரு நாட்டில் பழைய வர்க்கத்தை ஒடுக்கி ஓர் புதிய வர்க்கம் ஆதிக்கத்திற்கு வரும் போது பெரும்பாலும் ஏற்கெனவே இருந்த மக்களின் அறிவை முற்றிலும் அழித்து விடுவது இல்லை. பெரிதும் அதனை தனதாக்கிக் கொண்டு தொடரவேச் செய்யும். ஆனால் ஓர் இனத்தின் மீது அயல் இனத்தின் ஆதிக்கம் நிகழ்கிற போது அதன் அறிவுச் சின்னங்களும், நூல்களும், வரலாற்றுச் சின்னங்களும் அழிக்கப்படுவதே வரலாறு நெடுகிலும் நடக்கிறது.
தமிழினம் ஆரியர், ஆதிக்கத்திற்கு ஆட்பட்டது. அவர்களது அறிவு ஏற்கப்படாமல் அறிவு என்ற வளையத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டது. இந்த அறிவை தமது பண்பியல் வாழ்க்கை நெறியாக கொண்டிருந்த பெரும்பாலான தமிழர்கள் கீழ்நிலை சாதிகளாக அழுத்தப்பட்டு அவர்கள் அறிவாளர் வளையத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டனர்.
பிறகு விஜயநகரப் பேரரசை தொடர்ந்து வந்த நாயக்கர் ஆட்சிக்கு கீழ்ப்பட்டதாக தமிழகம் மாறியபோதும், அதைத் தொடர்ந்து மொகலாயர் ஆட்சிக்கு உட்பட்ட போதும், வெள்ளையர் ஆட்சிக்கு அடிமைப்பட்டபோதும் தமிழ் மொழி ஆட்சி அதிகாரத்தை இழந்ததோடு அறிவியல் மொழி என்ற அந்தஸ்தையும் இழந்தது. பல நூல் நிலையங்களும், நூல்களும் அழிக்கப்பட்டன. கீழ்நிலை சாதிகளாக வைக்கப்பட்ட அறிவாளர்கள் பலர் கொல்லப்பட்டனர்.
இவ்வாறு தமிழர்களின் மரபான அறிவியல் அறிவு புதைக்கப்பட்டதை, புறந்தள்ளப்பட்டதை வரலாற்று நோக்கில் ஆய்வு செய்து உண்மையை அறிந்துக் கொள்ள வேண்டுமே அல்லாது ‘ எல்லாம் அழிந்து விட்டது என்று கூறுவது நம்பும் படியாக இல்லை’ என போகிற போக்கில் தள்ளிச் செல்வது தமிழ் இனத்தின் மீது உள்ள காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடே ஆகும்.
இந்த புறக்கணிப்பையும், மறைப்புகளையும் உடைத்துக் கொண்டு செம்மாந்த தமிழினம் தனது அறிவியில் அறிவை நவீன உலகத்தில் நிலை நிறுத்தும் காலம் வெகு தொலைவில் இல்லை. அப்போது கிருஷ்ணன்களும், தி இந்து ராம்களும் இருந்த இடம் தெரியாமல் போவார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக