| 11 ஆக., 2019, பிற்பகல் 1:04 | |||
தஞ்சாவூர் மாவட்டம் தில்லைஸ்தானம் கிருதஸ்தானேஸ்வரர் கோவில் கருவறை முன்மண்டப தென்சுவர் 5 வரிக் கல்வெட்டு.
- ஸ்வஸ்தி ஸ்ரீ கோராஜ கேஸரி வருமற்க்கு யாண்டு 8 ஆவது சோழ
- ப் பெருமானாடிகள் மகனார் ஆதித்தன் கன்னரதேவன் திருநெத்தாநத்
- து மஹாதேவர்க்கு ஒரு நொன்தா விளக்கு சந்த்ராதித்யவல் எரிப்பதற்க்கு குடுத்
- த பொன் 20 ம் இருபதின் கழஞ்சு இப்பொன் கொண்டு எரிப்போமாநோம்
- திருநெத்தாநத்து ஸபையாரும் ஊரோமும். இவ்விளக்கு பன்மாஹேஸ்வர ரக்ஷை.
விளக்கம்: விசயாலயன் மகன் ஆதித்ய சோழனின் (891-907) 8 –ம் ஆட்சிஆண்டில் 898 -ல் இக்கல்வெட்டு தில்லைஸ்தான கோவில் முன் மண்டப தென்சுவரில் வெட்டப்பட்டுள்ளது. அவன் மகன் கன்னரதேவன் பின்னாளில் இராட்டிரகூட வேந்தனாக மூன்றாம் கிருஷ்ணன் எனும் பெயரில் அரியணை ஏறினான் (839 -967). 898 – 967 இடையே 70 ஆண்டுகள். அந்த வகையில் கன்னரதேவன் பெயரில் 20 கழஞ்சு பொன்னிற்கு ஒரு நொந்தா விளக்கு எரிக்க கருவறை பிராமணர் ஒப்புக் கொண்டன போது அவன் பையற் பருவத்தில் இருந்திருக்க வேண்டும் என்று தெரிகின்றது. இவன் தாய் இளங்கோப்பிச்சி ஒரு இராட்டிரகூட இளவரிசி ஆவாள். அதனால் இவன் இராட்டிரகூட வேந்தனாக ஆக முடிந்துள்ளது. பின்னாளில் தக்கோலத்தில் நடந்த போரில் பராந்தகனின் மகன் இராசாதித்தன் கொல்லப்படுகின்றான். அது முதல் தொண்டை மண்டலம் இராட்டிரகூட ஆட்சிக்கு உட்பட்டது. கன்னரதேவன் கல்வெட்டுகள் இவனை காஞ்சியும் தஞ்சையும் கொண்டவன் என்கின்றது. அப்படியானால் அண்ணன் சோழன் பராந்தகனுக்கும் தம்பி சோழ ராட்டிரகூடன் 3-ம் கிருஷணனுக்கும் ஏதோ பிணக்கு இருந்துள்ளது உறுதி ஆகின்றது. இக்கல்வெட்டு சோழ ராட்டிரகூடன் 3-ம் கிருஷணனின் முதற் கல்வெட்டு ஆகலாம்.
பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 5 & 32, பக். 4.
சோழ ராட்டிரகூடன் 3-ம் கிருஷணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக