செங்கற்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், பூலிப்பரக்கோவில் எனும் ஊரில் வியாக்ரபுரீஸ்வரர் கருவறை வடபுற ஜகதியில் பொற்க்கப்பட்ட 8 வரிக் கல்வெட்டு.
- ஸ்வஸ்தி ஸ்ரீ மந் மஹாமண்டலீசரன் வீரவிஜயபூபதிராய உடையா[ர்]ற்க்குச் செல்லா நின்ற ஏவிளம்பி வுருஷம் தை மாஸம் 5 ந்தியதி உடையார் திருப்புலி[ப]
- கவ நாயினார் திருமடை விளாகம். புலிப்ப[க]வர் கோயில் தானத்தார் இவ்வூர் கைக்கோளர்க்குக் கல்வெட்டிக் குடுத்தபடி. நாட்டில் கோயில் பற்ற அற்ற மரி
- ஆதி வாசல்ப்பணம் கழிக்கவேணும் என்று புறநாட்டிலே சந்திரகிரிச் சாவடிஇலே போயிருக்கைஇல் பூர்வத்தில் கடமை பணம் 9- க்கு தறி கண்டவாசலுக்
- கு வாசல்பணம் மூன்றும் கழித்து [கொண்ட]தறிக்கு தறி ஒன்றுக்குக் கொள்ளூம் பணம் 6- சேனைக் கடைக்கும் வாசல் பணம் 3 ம் கழித்துக் கொள்ளும்
- பணம் 6_ கச்சவடவாணியர் பேர் ஒன்[று]க்குக் கொள்ளும் பணம் 3 சிவன்படவர் பேர் ஒன்றுக்கு கொள்ளும் பணம் 2_ முன்னாள் தானத்தார்க்கு நடந்து
- வரும் புடவை முதலு பணம் 4 ம் கார்த்திகை காணிக்கைக்கு பணம் 4 ம் இறுக்க கடவார்கள் ஆகவும் உபாதி விநியோகம் நாட்டில் கோயில்ப்பற்று
- அற்ற மரிஆதி இறுக்கக் கடவர்கள் ஆகவும் இம்மரிஆதி சந்த்ராதித்யவரையும் நடக்கும் படிக்குக் கல்வெட்டிக் குடுத்தோம். இவ்வூர் ஊரவற்கு
- உடையா[ர்]த் திருப்புலிபகவ நாயினார்கோயில் தானத்தாரோம் ஸ்ரீ மாஹேஸ்வரரோ ரக்ஷை. ஆலாலசுந்தரன்.
திருமடைவிளாகம் – கோவிலைச் சூழ்ந்த பகுதி; நாட்டில் – ஊரில்; கோயில்பற்று – கோயிலுக்கு என்று ஒதுக்கிய; மரியாதி – வழக்கம், மரபு; வாசல்பணம் – வீட்டை கணக்கிட்டு பெறும் வரி; கழிக்க – குறைக்க, reduce; புறநாட்டிலே – outpost; தறிகண்ட வாசல் – தறி உள்ள வீட்டிற்கு; நடந்து வரும் – நடப்பில் உள்ள, current practice; உபாதி - வரிவகை; விநியோகம் – பொதுச் செலவை ஈட்டுகட்ட வாங்கும் வரி;
விளக்கம்: வீர விஜ பூபதி என்பது வீர விஜபுக்க ராயரை (1422-1424) குறிக்குமானால் ஏவிளம்பி 1417-1418 இல் நிகழ்கின்றது. இந்த இரண்டில் ஏதோ ஒன்று தவறாக குறிக்கப்பட்டு உள்ளது. தை மாதம் 5 ம் நாள் திருப்புலிப்பகவ இறைவர் கோவிலைச் சூழ்ந்த திருமடை விளாகத்தில் வாழும் கோவில் பொறுப்பாளர்கள் இவ்வூர் செங்குந்தருக்கு வரிக் குறைப்பு குறித்த கல்வெட்டு ஒன்றைத் தந்தனர். அக் கல்வெட்டு ஊரில் கோயிலுக்கு ஒதுக்கப்படாத மரபாக வாசல்பணம் என்னும் வரியை குறைக்க வேண்டும் என்று சந்திரகிரிக்கு ஊர்ப்புறத்தே உள்ள சாவடிக்கு போய் இருந்தபோது அங்கே மன்னரை சந்தித்து வரிக்கழிவு பெற்று வந்ததற்கு இணங்க முன்பு கடமை வரிக்கு பெற்ற பணம் 9-1/2 க்கு தறி உள்ள வீட்டிற்கு வாசல் பணம் 3 கழித்து கண்டதறி ஒன்றுக்கு இனி வாங்கும் வரிப் பணம் 6-1/2, வெற்றிலை விற்கும் சேனைக்கடையார்க்கு வாசல் பணம் 3 கழித்து இனி வாங்கும் பணம் 6-1/2. கயிறு விற்கும் கச்சவடவாணியர் ஆள் ஒருவருக்கு இனி கொள்ளும் பணம் 3, மீனவரான சிவன்படவர் ஆள் ஒருவருக்கு இனி கொள்ளும் பணம் 2-1/2 ஆகும். முன்னாளிலே கோவில் பொறுப்பாளருக்கு புடவை முதலாக கட்டிய பணம் 40 -ம், கார்த்திகை காணிக்கைக்கு கட்டிய பணம் 4 –ம் அப்படியே தொடரும் அதை அப்படியே கட்ட வேண்டும். பிற வரி வகைகள், பொதுச் செலவு வரி, ஊரில் கோவிலுக்கு ஒதுக்கப்படாத மரபு வரிகளையும் அப்படியே கட்ட வேண்டும். இந்த மரபு ஞாயிறும் நிலவும் நின்று நிலைக்கும் காலம் வரை தொடரட்டும் என்று இவ்வூரார்க்கு திருப்புலிப்பகவ இறைவர் கோவில் பொறுப்பாளர்கள் கல்வெட்டி உறுதிமொழி கொடுத்தோம். இந்த வரி வரையறையை சிவனடியார் காத்து நிற்க வேண்டும். ஆலால சுந்தரன் இதை எழுதிக் கையெழுத்திட்டான்.
இதில் இடம்பெறும் கைக்கோளர், சேனைக் கடையார், வாணியர் என்போர் முன்பு போர் தொழில் செய்யும் பட்டடைக் குடிகள் ஆவர். இராசராசன் ஆட்சியின் போது தேவார மீட்சி, குலோத்துங்கன் ஆட்சியில் பெரிய புராண தொகுப்பு ஆகியவற்றால் நிகழ்ந்த சைவ சமய எழுச்சியால் இந்தப் போர்க்குடிகள் கொலைத் தொழிலென்று போர்த்தொழிலை நீங்கி வணிகத்தில் ஈடுபட்டனர். அதன் விளைவு போர்ப்புரியும் குடிகள் குறைந்ததால் எதிர்த்து போரிட்டு துரத்த முடியாதபடி தமிழகம் வலுவிழந்ததால் கடந்த 600 ஆண்டுகளாக அயல் மொழியார் ஆட்சிப் பிடியுள் கட்டுண்டு கிடக்கின்றது. ஆயுதங்கள் மட்டுமே ஏந்தி வந்தவரிடம் இதாவது, இன்று மக்கள் தொகையில் 1% மட்டுமே உள்ள அயல் மொழியாரிடம் தமிழகத்தின் 50% மேலான விளைநிலங்கள் உரிமையாகி உள்ளன.
பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 36, பக். 260
நன்றி seshadri sridharan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக