திங்கள், 5 பிப்ரவரி, 2018

தேவிகுளம் பீர்மேடு போராட்டம் தலைவர் குப்புசாமி வரலாறு மண்மீட்பு

aathi tamil aathi1956@gmail.com

23/10/17
பெறுநர்: எனக்கு
மூணார் தமிழர்களின் போராளி ஆர்.குப்புசாமி (1925 – 2014)
விவரங்கள்
எழுத்தாளர்:
என்.டி.தினகர்
தாய்ப் பிரிவு: வரலாறு
பிரிவு: தமிழ்நாடு
C வெளியிடப்பட்டது: 13 அக்டோபர் 2015
தொழிலாளர்கள்
கேரளா
தமிழ்ச் சான்றோர்கள்
திருவாங்கூர் சமஸ்தானத்திற்குட்பட்டிருந்த தேவிகுளம் - பீர்மேடு
தாலுகாக்களை தமிழகத்துடன் இணைக்க வலியுறுத்திப் போராடிய தலைவரான
ஆர்.குப்புசாமி தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக பாடுபட்டு
வந்த தொழிற்சங்கவாதியும் ஆவார். கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் 15-ஆம்
தியதி காலமான அவர், தனது கடைசி காலம் வரைக்கும் தொழிலாளர்களுக்காக
தொடர்ந்து போராடி வந்தவர். தான் மேற்கொண்ட போராட்டங்களின் விளைவாக கொலை
முயற்சிகளுக்கு இலக்காகியும் ஆதிக்க சக்திகளுக்கு பணிந்து விடாமல்,
மூணார் தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்த ஒரு தீர்க்கமான
அரசியல் தலைவர்.
1865-ம் ஆண்டு முதல் தேவிகுளம் பீர்மேடு மலைப்பகுதிகளில் தேயிலை
சாகுபடியைத் தொடங்கிய ஆங்கிலேயர்கள் கங்காணிகள் என்றழைக்கப்பட்ட தரகர்கள்
மூலம் தமிழ் தொழிலாளர்களை ஏமாற்றி வரவழைத்து கொத்தடிமைகளாக நடத்தத்
தொடங்கினர். தோட்டத் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் தாழ்த்தப்பட்ட
சமூகங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். அதிகப்படியான வேலைப்பளு,
மிகக்குறைந்த கூலி, சுகாதாரமற்ற வாழிடம், தொற்று நோய்கள் என மிக மோசமான
சூழலில் தவித்து வந்த அந்த தொழிலாளர்களுக்கு நாடு விடுதலை அடைந்த பிறகே
விமோசனம் கிடைத்தது.
இந்திய விடுதலைக்குப் பிறகு அரசியல் ஆர்வம் கொண்ட மூணார் பகுதி தமிழ்
பிரமுகர்கள் சிலர் திருவாங்கூர் சமஸ்தான காங்கிரஸ் கட்சியில் தங்களை
இணைத்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் மூணார் தமிழர்கள்,
திருவாங்கூரின் குடிமக்கள் அல்ல என்று கூறி அக்கட்சியின் தலைவர் பட்டம்
தாணு பிள்ளை கட்சியில் சேர்த்துக் கொள்ள மறுத்து விட்டார். இதனையடுத்து
தமிழ் பிரமுகர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் காமராஜரிடம்
முறையிடவே, அவரது ஆலோசனையின் பேரில், நாகர்கோவில் பகுதி தமிழர்களுக்காக
செயல்பட்டு வரும் திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் (தி.த.நா.கா) கமிட்டி
மூணாரில் 23.10.1947 அன்று தொடங்கப்பட்டது.
மலையாள மொழிப் பிரதேசங்களை ஒருங்கிணைத்து கேரள மாநிலம் அமைக்க வேண்டும்
என்ற கோரிக்கைக்கு திருவாங்கூர் சமஸ்தான காங்கிரஸ் தீவிர ஆதரவு அளித்து
வந்ததால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியில் இருந்து வெளியேறிய
தமிழ் தலைவர்கள் 1945 ஆம் ஆண்டு நாகர்கோவிலில் ‘அகில திருவாங்கூர் தமிழர்
காங்கிரஸ்’ எனும் அமைப்பைத் தொடங்கியிருந்தனர். திருவாங்கூரின் தமிழர்
பகுதிகள் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்
வைத்து அவர்கள் செயல்பட்டு வந்தனர். சாம் நத்தானியல் தலைமையில் இயங்கி
வந்த தமிழர் காங்கிரசின் பெயர் 1946 ஆம் ஆண்டு ‘திருவாங்கூர் தமிழ்நாடு
காங்கிரஸ்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்திய விடுதலைக்குப் பிறகு
நேசமணியும், அவரது ஆதரவாளர்களும் தி.த.நா.கா.வில் இணைந்த போது தென்
திருவாங்கூர் பகுதியில் தமிழர் போராட்டம் மேலும் தீவிரமடைந்து வந்தது.
மூணாரில் தி.த.நா.கா செயல்படத் தொடங்கியதை எதிர்பாராத சமஸ்தான காங்கிரஸ்
தலைவர்கள் ‘ஹைரேஞ்ச் தொழிலாளர் சங்கம்’ என்ற தொழிற்சங்கத்தை உருவாக்கி
தமிழ் தொழிலாளர்களை அதில் உறுப்பினர்களாக இணைத்து வந்தனர். அத்துடன்
தமிழர் பகுதிகளில் மலையாள அதிகாரிகளை அதிகளவில் நியமித்து, அவர்கள் மூலம்
தி.த.நா.கா.வின் செயல்பாடுகளை முடக்க திட்டங்களை வகுத்து வந்தனர். 1948
ஆம் ஆண்டு திருவாங்கூர் சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலின் போது,
மூணார் தமிழர்களுக்கு வாக்குரிமை அளிக்கப்படாததாலும், தமிழர்
கிராமங்களில் நடத்தப்பட்ட தாக்குதலின் காரணமாகவும் தேவிகுளம் தொகுதியில்
தி.த.நா.கா.வால் வெற்றி பெற இயலவில்லை. அதே நேரத்தில் தென் திருவாங்கூர்
பகுதிகளில் தி.த.நா.கா 14 தொகுதிகளை கைப்பற்றியிருந்தது.
தமிழ் தொழிலாளர்களின் நிலையை நேரில் பார்வையிட வருமாறு தி.த.நா.கா.வினர்
விடுத்த கோரிக்கையை ஏற்று, 1948 பெப்ரவரி மாதம் காமராஜர் மூணாருக்கு
வந்தார். தமிழ் தொழிலாளர்களுக்கு தனி தொழிற்சங்கம் தேவை என்பதை உணர்ந்த
காமராஜர், தமிழக தோட்டப் பகுதிகளில் காங்கிரஸ் ஆதரவுடன் செயல்பட்டு வரும்
‘தென்னிந்திய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின்’ கிளையை மூணாரிலும்
தொடங்குமாறு அறிவுறுத்திச் சென்றார். இதனையடுத்து 1948 மார்ச் 30 ஆம்
தியதி முதல் தென்னிந்திய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் வால்பாறை
கமிட்டியின் ஒரு கிளை மூணாரிலும் செயல்படத் தொடங்கியது.
தி.த.நா.கா ஆதரவு தொழிற் சங்கம் வலுப்பெற்று விடக் கூடாது என்பதில்
கங்கணம் கட்டிக் கொண்டிருந்த ஹைரேஞ்ச் தொழிற்சங்கத்தினர், தோட்டப்
பகுதிகளில் தென்னிந்திய தொழிற்சங்கத்தினர் நுழையக் கூடாது என்று தோட்ட
நிர்வாகம் மூலம் உத்தரவு பிறப்பிக்கச் செய்தனர். அத்துடன் தென்னிந்திய
தொழிற்சங்கத்தினரை தாக்கியும், அச்சுறுத்தி பணிய வைக்கும் முயற்சிகளிலும்
ஈடுபடலாயினர். இந்நிலையில் தொழிற்சங்கத்தை நிர்வகிக்க வலுவான தலைவர் தேவை
என்பதை உணர்ந்த தி.த.நா.கா.வினர், மதுரை ஐ.என்.டி.யூ.சி சங்கத்தின்
பிரச்சாரகராக தீவிரமாக பணியாற்றி வந்த குப்புசாமியை மூணாருக்கு அனுப்பி
வைக்குமாறு காமராஜரை கேட்டுக் கொண்டனர். அவர்களின் விருப்பப்படியே
குப்புசாமி 1951 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மூணாருக்கு அனுப்பி
வைக்கப்பட்டார்.
குப்புசாமியின் வசீகரமான பேச்சாற்றலும், உறுதியான செயல்பாடுகளும்
தொழிலாளர்கள் மத்தியில் விழிப்புணர்வையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தின.
குப்புசாமியின் வருகைக்குப் பின்னரே தேவிகுளம், பீர்மேடு
தமிழர்களிடத்தில் தி.த.நா.கா பெரும் செல்வாக்கினைப் பெற்றது எனலாம்.
நெல்லை மாவட்டம் வெள்ளாங்குழி கிராமத்தில் 1925-ஆம் ஆண்டு பிறந்த
குப்புசாமியின் இளமைப் பருவம் வறுமையிலேயே கழிந்தது. பாபநாசத்தில்
இயங்கிய ஆலை ஒன்றில் தொழிலாளியாக இருந்த போது ஐ.என்.டி.யூ.சி சங்கத்தில்
இணைந்து முழு நேரப் பிரச்சாரகராக செயல்பட்டு வந்தார். இவரது வேகமும்,
பேச்சாற்றலும் தொழிலாளர்கள் மத்தியில் பிரபலமாகியிருந்த வேளையில் மூணார்
தமிழர்களுக்காக பணி புரிவதற்கான அழைப்பு வந்தது.
குப்புசாமியின் பிரச்சாரம் மூணார் தமிழர்களிடத்தில் பெரும் எழுச்சியை
உருவாக்கி வந்ததால் ஆத்திரமடைந்த ஆதிக்க சக்திகள் ஹைரேஞ்ச்
தொழிற்சங்கத்தினர் மூலம் அவரை ஒழித்துக்கட்ட சதி செய்தனர். ஒத்தப்பாறை
என்ற இடத்தில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை குப்புசாமி செய்து
கொண்டிருந்தபோது அறுபது பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களுடன் வந்து மிளகாய்ப்
பொடியை வீசி குப்புசாமியையும் அவருடன் இருந்த பிற நிர்வாகிகளையும்
கடுமையாகத் தாக்கியது. தாக்குதலில் உணர்விழந்து கிடந்தபோது அவரது நாக்கை
அறுக்கவும் முயற்சித்தனர். குப்புசாமி இறந்து விட்டதாக கோஷமிட்டவாறு
ஒழிந்து கொண்டது அந்தக் கும்பல்.
அவரது நாக்கு கடைவாய் இரண்டு அங்குல நீளத்திற்கு அறுபட்டிருந்த நிலையில்
மூணார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்
சிகிச்சைக்காக நாகர்கோவிலில் ஒரு தனியார் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டார். இரண்டு மாத சிகிச்சைக்குப் பிறகு மீண்டும்
மூணாருக்கு வந்த குப்புசாமி, தனக்கு வரவேற்பளித்த தொழிலாளர்களிடம், தான்
இனி மூணார் மண்ணை விட்டு போகப் போவதில்லை என்றும், இங்குள்ள மக்களை மனித
உணர்ச்சியற்ற மரக்கட்டைகள் என்று நினைத்து சுரண்டி வருபவர்களின் அந்திமம்
நெருங்கி விட்டதாகவும் ஆவேசமாகப் பேசினார். குப்புசாமி மீதான தாக்குதல்
காரணமாக ஹைரேஞ்ச் தொழிற்சங்கத்தின் அங்கீகாரத்தை ஐ.என்.டி.யு.சி. ரத்து
செய்ததால், தி.த.நா.காவின் செல்வாக்கு மேலும் பெருகியது.
தோட்டத் தொழிலாளர்களிடம் எழுந்த தமிழ் உணர்வு, அடுத்து வந்த சட்ட மன்றத்
தேர்தலில் பிரதிபலித்தது. 1952 ஜனவரி மாதம் திருவாங்கூர் -கொச்சி மாகாண
சட்ட மன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலின் போது தேவிகுளம் பீர்மேடு இரட்டை
உறுப்பினர் தொகுதியில் ஓரிடத்தில் தி.த.நா.கா வேட்பாளர் தேவியப்பன்
வெற்றி பெற்றார். குப்புசாமியின் பிரச்சாரமே தி.த.நா.கா.வின் வெற்றிக்கு
காணரம் என்பதை உணர்ந்த மலையாள அரசு, அவர் மீது பொய் வழக்கு போட்டு கைது
செய்தது. சிறையில் போலீசார் தாக்கியதில் அவரது இடது காது ஜவ்வு
கிழிந்ததில், ஒரு பக்க காது செயலிழந்தது. இத்தகைய துயரங்களை அனுபவித்தும்
கூட அவர் தனது அரசியல் பயணத்திலிருந்து பின் வாங்கவில்லை.
திரு-கொச்சி மாநில அரசு போதிய பெரும்பான்மையின்றி விரைவில் கவிழ்ந்து
விட்டதால் 1954-ஆம் ஆண்டு மீண்டும் சட்ட மன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்த
முறை தேவிகுளம் - பீர்மேடில் தி.த.நா.கா வேட்பாளர்களான எஸ்.எஸ்.சர்மா,
தங்கையா ஆசிய இருவரும் வெற்றி பெற்றதால் புதிய முதல்வராக பொறுப்பேற்ற
பட்டம் தாணுபிள்ளை, மூணார் தமிழர்கள் மீது அடக்குமுறைகளை ஏவிவிட்டார்.
தி.த.நா.கா ஆதரவாளர்கள் கைது செய்யப்படுவதும், துன்புறுத்தப்படுவதும்
தொடர்ந்தது. அன்னவடிவு என்ற பெண் தொழிலாளி போலீசார் தாக்கியதில்
உயிரிழந்தார். குப்புசாமியைக் கண்டதும் சுடுமாறு போலீசாருக்கு ரகசிய
உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் அவர் தமிழகப் பகுதியில் சில காலம்
தலைமறைவாக வாழ நேரிட்டது.
தேவிகுளம் தமிழர்கள் மீதான அடக்குமுறைகளைக் கண்டித்து தென் திருவாங்கூர்
தி.த.நா.கா தலைவர்கள் மூணாருக்குச் சென்று தடையை மீறி போராட்டம் நடத்தி
கைதாயினர். தலைவர்கள் கைதானதைக் கண்டித்து கன்னியாகுமரி பகுதியில்
நடைபெற்ற போராட்டங்களின் விளைவாக மார்த்தாண்டம், புதுக்கடை ஆகிய ஊர்களில்
போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 9 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
இறுதியில் பட்டம் தாணு பிள்ளை முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பிறகே
திருவாங்கூரின் தமிழர் பகுதிகளில் அமைதி திரும்பியது.
மொழி வாரியாக மாநிலங்களைப் பிரிப்பதற்காக மத்திய அரசால் நியமிக்கப்பட்ட
பசல் அலி கமிஷன் நாடு முழுவதும் ஆய்வு செய்து 1955 ஆம் ஆண்டு தனது
அறிக்கையை சமர்ப்பித்தது. தென் திருவாங்கூரில் நான்கு தாலுகாக்களும்,
செங்கோட்டை பகுதியும் மட்டும் தமிழகத்துடன் இணைக்கப்பட்டால் போதும் என்று
கமிஷன் பரிந்துரைத்தது. தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் புவியியல் மற்றும்
பொருளாதார ரீதியாக கேரள மாநிலத்திற்கு அவசியமானவை என்று கமிஷன்
பரிந்துரைத்தது. பசல் அலி கமிஷனில் அங்கம் வகித்திருந்த கே.எம்.பணிக்கர்
என்ற மலையாளியின் செல்வாக்கு காரணமாகவே கமிஷன் தமிழர்களுக்கு எதிரான
நிலைபாட்டை எடுத்திருந்தது.
மூணார் பகுதியின் வரலாற்றுப் பின்னணியை கமிஷன் கருத்தில் கொள்ளத்
தவறியது. முதுவான் எனப்படும் தமிழ் பேசும் பழங்குடியின மக்களே
தேவிகுளத்தின் ஆதி குடிகள் ஆவர். பூஞ்சார் எனும் குறுநில அரசின்
வரம்பிற்குட்பட்ட இந்த மலைப்பகுதிகள், மதுரை ஆட்சியாளர்களின்
கட்டுப்பாட்டிற்குட்பட்டிருந்த பகுதிகளாகவே இருந்து வந்தன. 18-ஆம்
நூற்றாண்டில் பூஞ்சார் திருவாங்கூர் மன்னரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு
வரப்பட்ட போதிலும், தமிழகப் பகுதி மக்களே இந்த வனப்பகுதியை முழுமையாக
பயன்படுத்தி வந்தனர். தமிழர்கள் பெரும்பான்மையாக வசித்து வந்த இந்த
மலைப்பகுதிகளின் இழப்பு, பின்னாளில் தமிழக விவசாயிகளுக்கு பாதகத்தை
ஏற்படுத்தியது.
பசல் அலி கமிஷன் அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ம.பொ.சிவஞானத்தின்
தமிழரசு கழகமும், தி.மு.க.வும் இணைந்து மாநிலந் தழுவிய போராட்டங்களை
முன்னெடுத்தன. குப்புசாமி தி.த.நா.கா. தலைவர்களுடன் டெல்லிக்குச் சென்று
சத்தியாகிரகம் மேற்கொண்டார். ஆனால் தமிழகத்தில் அன்று ஆட்சி
பொறுப்பிலிருந்த காங்கிரஸ் கட்சியோ, இந்தப் போராட்டங்களை
அலட்சியப்படுத்தியது. தி.த.நா.கா.வின் மக்களவை உறுப்பினரான நேசமணி
தேவிகுளம் - பீர்மேடு பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க வேண்டியதன் அவசியத்தை
பாராளுமன்றத்தில் எடுத்துரைத்தபோது தமிழக உறுப்பினர்கள் எவரும் அதை
ஆதரித்துப் பேச முன்வரவில்லை.
தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தொழிலாளர்களின் உரிமைகளுக்கு ஆதரவாக
இருந்தார்களேயொழிய, தமிழர் பகுதிகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்பதில்
ஆர்வமில்லாதவர்களாக இருந்தனர். இதனால் ம.பொ.சி. போன்ற தமிழ் உணர்வாளர்கள்
காங்கிரஸிலிருந்து வெளியேறி தமிழர் நல அரசியலை முன்னெடுக்க
வேண்டிதாயிற்று. முல்லைப் பெரியாறு அணை விவகாரம் விசுவரூபம் எடுத்தபோது
தான், தேவிகுளம் - பீர்மேடு தாலுகாக்களின் இழப்பை தமிழகம் உணரத்
தொடங்கியது.
1956-ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட பிறகு, குப்புசாமி
தொழிற்சங்க நடவடிக்கைகளில் தீவிரம் காட்டியதோடு, சிறுபான்மைத்
தமிழர்களின் நலனைக் காப்பதிலும் அதிக அக்கறை செலுத்தினார். தோட்டத்
தொழிலாளர்களின் வேலை நேரம் 8 மணி நேரமாக குறைக்கப்பட்டது, காங்காணிமார்
முறை ஒழிப்பு, வருடாந்திர விடுமுறை சலுகை போன்றவற்றை தென்னிந்திய தோட்ட
தொழிலாளர் சங்கத்தின் முக்கிய சாதனைகளாக குறிப்பிடலாம்.
தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதி, குடும்ப ஒய்வூதியம் போன்ற
திட்டங்கள் நடைமுறைபடுத்தப்படுவதற்கான முயற்சிகளை எடுத்தவர் குப்புசாமி.
தொழிலாளர்கள் பணிபுரியும்போது செருப்பணிந்து வரக்கூடாது என்று தோட்ட
நிர்வாகிகள் விதித்திருந்த கட்டுப்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர்
அந்த வழக்கத்திற்கு முற்றுபுள்ளியும் வைத்தார்.
தேவிகுளம்-பீர்மேட்டில் போதுமான தமிழ் ஆசிரியர்கள் நியமிக்கப்படாததைக்
கண்டித்து மூணாரில் குப்புசாமியின் ஆதரவுடன் தமிழ் மாணவர் கிளர்ச்சி
நடந்தது. இறுதியில் தென்னிந்திய தோட்டத் தொழிலாளர் சங்கம் மேற்கொண்ட
போராட்டங்களின் விளைவாக தமிழ் ஆசிரியர்களை நியமிக்க கேரள அரசு முன்
வந்தது. மூணாரில் அரசு கலைக் கல்லூரி அமைவதில் முக்கிய பங்கு வகித்த
குப்புசாமி, தற்காலிகமாக கல்லூரி செயல்படுவதற்காக தொழிற்சங்கக்
கட்டிடத்தை வாடகையின்றி கல்லூரி நிர்வாகத்திற்கு தரவும் செய்தார்.
தனது நேர்மையான செயல்பாடுகளால் ஐ.என்.டி.யூ.சி. சங்கத்தின் தேசியத்
தலைவர்களால் அவர் பெரிதும் மதிக்கப்பட்டார். தேயிலை தொழில் வீழ்ச்சி
அடைந்திருந்த வேளையில், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியை சந்தித்து
தேயிலை விற்பனைக்கு பத்து ஆண்டு கால வரிச்சலுகையையும் பெற்றுத்
தந்திருக்கிறார். தொழிற்சங்க நடவடிக்கைகளில் வேலை நிறுத்தத்தை பெருமளவில்
தவிர்த்து பேச்சுவார்த்தை மூலமும், சட்டரீதியான நடவடிக்கைகள் மூலமாகவும்
தொழிலாளர் நலனைப் பேணுவதில் தான் குப்புசாமி அதிக நம்பிக்கை
கொண்டிருந்தார்.
அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டிருந்த மூணார் தோட்டத் தொழிலாளர்கள்
மேம்பாடு அடைந்ததில் குப்புசாமி ஆற்றியிருக்கும் பணி அளப்பரியது.
குப்புசாமியின் ஆதரவு பெற்ற வேட்பாளரே தேவிகுளம் தொகுதியில் வெற்றி பெற
முடியும் என்றிருந்த அரசியல் நிலைமை, அவருக்கிருந்த மக்கள் செல்வாக்கை
நமக்கு உணர்த்தும். மூணார் பகுதியில் தலைவர் என்றால் அது குப்புசாமியைத்
தான் குறிக்கும். அவரது மரணத்திற்குப் பிறகும் அந்த சொல் வேறு எவரையும்
குறிக்கவில்லை என்பதே குப்புசாமிக்கு கிடைத்திருக்கும் பெருமை.
- என்.டி.தினகர்

கேரளா மலையாளி தொழிலாளர் தேயிலை திருநெல்வேலி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக