வியாழன், 21 செப்டம்பர், 2017

ராம்குமார் கைதின்போதே கழுத்தை அறுத்தனர் குடும்பம் வறுமையில் ஸ்வாதி கொலை செங்கோட்டை

"என் குடும்பமே நடுத்தெருவுக்கு வந்துடுச்சு!'' - கலங்கும் ராம்குமாரின் தாய்..
ராம்குமார் மரணத்துக்குப் பிறகு, அவரின் குடும்பமே நிலைகுலைந்துபோய்
இருக்கிறது. சமூகரீதியில் மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியிலும் பெரும்
பின்னடைவு ஏற்பட்டிருப்பதால், குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.
தன் மகனின் மறைவுக்குப் பிறகு, குடும்பமே நடுத்தெருவுக்கு வந்துவிட்டதாக
அவரின் தாய் புஷ்பம் வேதனை தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட மென்பொருள்
பொறியாளர் சுவாதி கொலை வழக்கில், நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள
மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார், கடந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி
கைதுசெய்யப்பட்டார்.
சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர், செப்டம்பர் 18-ம் தேதி
மின்கம்பியைக் கடித்து தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதில், மர்மம் இருப்பதாக ராம்குமாரின் பெற்றோர் தொடர்ந்து குற்றம்சாட்டி
வருகின்றனர். சுவாதி கொலைக்கும் ராம்குமாருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை
என்றும், திட்டமிட்டு அவரை இந்த வழக்கில் கைதுசெய்திருப்பதாகவும்
ராம்குமாரின் பெற்றோர் புகார் தெரிவித்து வருகின்றனர். ஆனாலும்,
ராம்குமார் தற்கொலையுடன் சுவாதி கொலை வழக்கின் மர்ம முடிச்சு
அவிழ்க்கப்படாமலேயே முடிவுக்கு வந்தது.
சுவாதி கொலையாகி ஓர் ஆண்டு நிறைவடையும் நிலையில், அந்த வழக்கில்
குற்றவாளி எனக் கருதப்பட்ட ராம்குமாரின் குடும்பத்தினர் எப்படி
இருக்கிறார்கள் என்பதை அறிய, மீனாட்சிபுரம் கிராமத்துக்குச் சென்றோம்.
ராம்குமார் மரணம், அந்தக் கிராமத்தின் சூழலையே மாற்றியிருக்கிறது. நாம்
ஊருக்குள் நுழைந்ததுமே பொதுமக்கள் சந்தேகத்துடன் நம்மைக் கவனித்தனர்.
நேராக ராம்குமாரின் வீட்டுக்குச் சென்றோம். அதற்குள் ஏராளமான பெண்கள்
அங்கு திரண்டுவிட்டார்கள். ``யார் நீங்க? என்ன விஷயமா வந்திருக்கீங்க?
யாரைப் பார்க்கணும்?" என ஆளாளுக்குக் கேள்விகளால் நம்மைத் துளைத்தனர்.
சத்தம் கேட்டு வீட்டிலிருந்து வெளியே வந்த ராம்குமாரின் தந்தை பரமசிவன்,
நம்மை அடையாளம் கண்டுகொண்டதும், ``வாங்க சார்... உள்ளே வாங்க" என
அழைத்ததும் அங்கு கூடிய பெண்கள் அவரவர் வேலையைப் பார்க்கச்
சென்றுவிட்டனர்.
மிகச்சிறிய பழைய ஓட்டு வீடு. அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லாத அந்த
வீட்டின் உள்ளே ராம்குமாரின் படம், அவர் பாட்டி படத்துக்கு அருகில்
ஃப்ரேம் போட்டு மாட்டப்பட்டிருந்தது. ராம்குமாரின் தாய் புஷ்பம்,
வீட்டின் உள்ளே முடங்கிக் கிடந்தார். நாம் வந்ததைப் பார்த்தபோதிலும்,
`யார்?' எனக் கேட்கக்கூட திராணியற்ற நிலையில் பிரமை பிடித்ததுபோல்
இருந்தார். அவரிடம் நம்மை அறிமுகப்படுத்திய பரமசிவன், நம்மிடம்
பேசவைத்தார்.
மிகுந்த சோகத்துடன் பேசத் தொடங்கிய புஷ்பம், ``எல்லாமே
முடிஞ்சுபோயிருச்சு. இனி பேசி என்ன ஆவப்போவுது? என் மகன் தப்புச்
செய்யலை. அவன்மேல எதுக்குப் பழிபோட்டங்கனு தெரியலை. அவன்மேல தப்பு
இருந்துச்சுன்னா, அவனைக் கைதுசெய்ய வந்தப்பவே கழுத்த அறுத்திருக்கவேண்டிய
அவசியம் இல்லை. திட்டமிட்டே அவனை ஜெயிலுக்குள்ள வெச்சுக் கொன்னுட்டாங்க.
வீட்டுல இருக்கிறப்ப எப்பவும் எனக்கு உதவியா இருப்பான். நான் கொஞ்சம் ஆடு
வளர்த்தேன். லீவுக்கு வந்தா, அதை அவன்தான் மேய்க்கப் போவான்.
படிச்சுட்டு வேலை தேடி சென்னைக்குப் போன மூணு மாசத்துலயே இப்படி அநியாயமா
பழியப்போட்டு கொன்னுட்டாங்க. அவனை நம்பித்தான் எங்க குடும்பமே
இருந்துச்சு. அவன் போனதுக்குப் பிறகு எங்க குடும்பமே நடுத்தெருவுக்கு
வந்தது மாதிரி ஆகிடுச்சு. நான் வீட்டைவிட்டு வெளியே போறதே இல்லை. இந்த
நாலு சுவத்துக்கு உள்ளேயே முடங்கிக் கிடக்குறேன். நிச்சயமா என் புள்ளயைக்
கொன்னிருக்காங்க. அதைச் செஞ்சவங்களுக்கும் புள்ளைங்க இருக்கத்தானே
செய்யும். அவங்களுக்கு எப்படித்தான் மனசு வந்துச்சோ!" என்று சொல்லியபடி
கதறி அழுதார்.
தொடர்ந்து பேசிய ராம்குமாரின் தந்தை பரமசிவன், ``அந்தக் கொலைக்கும் என்
மகனுக்கும் கொஞ்சமும் தொடர்பே இல்லைங்க. யாரையோ காப்பாற்ற அவனை இந்த
வழக்குல சிக்கவெச்சுட்டாங்க. அப்பாவியான அவனைப் பிடிக்க வந்த
போலீஸ்காரங்க, ஏதோ தீவிரவாதியைப் பிடிக்க வந்தது மாதிரி ஊரின்
மின்சாரத்தைத் துண்டித்து இருட்டாக்கிவிட்டு வந்தாங்க. வீட்டுக்குப்
பின்னால் உள்ள இடத்தில் தூங்கிட்டு இருந்தவனைப் பிடிச்சு கழுத்தை அறுத்த
பிறகே என்னை எழுப்பினாங்க. கைதுசெய்யும்போதே அவனைக் கொல்ல முயற்சி
நடந்தது. அவனைப் பேச முடியாத அளவுக்குத் தொண்டை நரம்பை அறுக்க முயற்சி
செஞ்சாங்க. பிறகு, சென்னைக்குக் கூட்டிட்டுப் போய் சிறையில் அடைச்சவங்க,
என் மகனை வாழவிடாமல் ஏதோ செஞ்சுட்டு, அவனாகவே கரன்ட் கம்பியைக் கடிச்சு
தற்கொலை செஞ்சுட்டதா சொல்லிட்டாங்க. அவன் மரணத்தால் எங்க குடும்பமே
நிம்மதி இழந்து தவிக்கிறோம். ராம்குமாரின் தங்கைகள்கூட படிப்பைத்
தொடராமல் வீட்டுலேயே இருக்காங்க. சுவாதி கொலை வழக்கில் ராம்குமாருக்கு
எந்தத் தொடர்பும் இல்லாததால் அவனை ஜாமீனில் எடுக்கத் திட்டமிட்டிருந்
தோம். ஆனால், அதற்குள் அவனைத் தீர்த்துக்கட்டிட்டாங்க. இப்போது வரையிலும்
எனக்கு என் மகனின் மரணம் குறித்து எந்தத் தகவலையும் கொடுக்கவில்லை. அவன்
போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் இதுவரைக்கும் தரலை. அதைக் கேட்டு பலமுறை
போலீஸுக்கும் நீதிமன்றத்துக்கும் முறையிட்டும் எந்த நகலையும்
கொடுக்கவில்லை.
என் மகன் பற்றிய எந்த ஆவணங்களையும் தராமல் இழுத்தடிப்பது எதற்காக? அந்த
ஆவணங்களைக் கொடுத்தால் உண்மை தெரிந்துவிடும் என நினைக்கிறார்களா? கொலை
செய்யும் அளவுக்கு நான் என் மகனை வளர்க்கவில்லை. ஒருவேளை ராம்குமார்தான்
அந்தக் கொலையை செய்தான் என்பதற்கான ஆவணங்களை எங்களிடம் கொடுத்தால்கூட,
`தப்புச் செஞ்சுட்டு தண்டனையாக உயிரை இழந்துட்டான்'னு மனசைத்
தேத்திக்குவேன். ஆனால், எந்த ஆவணத்தையும் தராமல் இழுத்தடிப்பது நியாயமா?
சுவாதி கொலை வழக்கை சி.பி.ஐ விசாரித்தால் மட்டுமே உண்மையான கொலையாளிகளைப்
பிடிக்க முடியும்" என்றார் ஆதங்கத்துடன்.
ராம்குமாரின் தங்கைகள் மதுமிதா, காளீஸ்வரி ஆகியோரும் இந்தச் சம்பவத்தால்
நிலைகுலைந்துபோய் இருக்கிறார்கள். இருவரும் படிப்பைத் தொடர முடியாத
அளவுக்குக் குடும்பத்தில் வறுமை தலைவிரித்துள்ளது. பக்கத்து வீட்டைச்
சேர்ந்தவர்களிடம் பேசுகையில், ``அவங்களுக்குச் சொந்தமா நிலம் எதுவும்
கிடையாது. சொந்தமா இருப்பது இந்த குடிசை வீடு மட்டும்தான். ராம்குமாரின்
அம்மா ஆடுகள் வளர்ப்பார். அதை அவ்வப்போது தேவைக்கேற்றபடி ஒவ்வொன்றாக
விற்பனைசெய்து குடும்பச் செலவுக்குப் பயன்படுத்துவார். ஆனால், ராம்குமார்
இறந்த பிறகு அவர் வீட்டைவிட்டு வெளியே வராததால் ஆடுகள் வளர்ப்பதில்லை.
அந்தக் குடும்பமே சின்னாபின்னமாகிப் போயிடுச்சு" என்றார்கள் வேதனையுடன்.
ராம்குமாரின் இறுதிச்சடங்கின்
போது பெருமளவில் திரண்டு வந்திருந்த கூட்டமும், அணி வகுத்து வந்த அரசியல்
கட்சிகள் மற்றும் சமுதாய அமைப்புகளின் தலைவர்களின் முகமும் பேச்சும்
ஊரைவிட்டுத் திரும்பும்போது நம் மனதில் நிழலாடியதைத் தவிர்க்க எவ்வளவோ
முயன்றும் முடியவே இல்லை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக