வியாழன், 21 செப்டம்பர், 2017

சங்ககால உணவு அரிசி இறைச்சி கள் கூழ் மாட்டிறைச்சி இலக்கியம் உணவுமுறை

பண்டைய தமிழர் உணவுகள்!!
தமிழகத்தில் மிகப் பழங்காலம் தொட்டே உணவு பதப்படுத்தப்பட்டும்,
தயாரிக்கப்பட்டும் வந்த செய்திகளைப் பற்றி இலக்கியங்கள் கூறுகின்றன.
தொல்காப்பியத்தில் வரும் உணா என்ற சொல் உணவைக் குறிப்பதாகும். உணவுக்குத்
தமிழில் உள்ள சொற்களைப் பிங்கள நிகண்டு
“உணாவே வல்சி உண்டி ஓதனம்
அசனம் பகதம் இசை ஆசாரம்
உறை, ஊட்டம்”
என வகைப்படுத்துகிறது.
இவை தவிர புகா, மிசை என்னும் சொற்களும் உணவைக் குறிக்கப் பயன்பட்டிருக்கின்றன.
தொல்காப்பியர் மரபியலில் “மெய் திரி வகையின் எண்வகை உணவில் செய்தியும்
உரையார்” என்பார் (பொருளதிகாரம் 623) இங்கு எண்வகை உணவு
குறிக்கப்படுகிறது. இளம்பூரணர் இதற்கு உரைகூறும்போது நெல், காணம், வரகு,
இறுங்கு, தினை, சாமை, புல், கோதுமை என எண்வகைத் தானியங்களைக்
குறிப்பிடுகிறார். ஆனால் சங்க காலத் தமிழகத்தில் சாமை, இறுங்கு, கோதுமை
போன்ற தானியங்கள் வழக்கில் இல்லை.
உணவை ஐவகை உணவாகக் கூறுவது ஒரு மரபு. பெருங்கதை “ஐவேறு அமைந்த அடிசிற்
பள்ளியும்” எனக் கூறும். பிங்கல நிகண்டு கறித்தல், நக்கல், பருகல்,
விழுங்கல், மெல்லல், என்றிவை ஐவகை உணவே எனக்கூறும். வடமொழியில் “பஞ்ச
பக்ஷய பரமான்னம்” என்ற வழக்கு தமிழ் மரபை ஒத்தது.
ஐவகை உணவு முறையை நடைமுறையில் உண்பன, தின்பன, கொறிப்பன, நக்குவன, பருகுவன
என்பர். இந்தப் பாகுபாடு உணவின் தன்மை, உண்ணும்முறை, சுவை ஆகியவற்றின்
அடிப்படையில் உருவாக்கப்பட்டது.
உண்பன என்பதற்கு அரிசிச்சாதம், புழுங்கல், பொங்கல் போன்றன உதாரணங்கள்.
சமைத்த காய்கறி கூட்டுகள் வரிசையில் பொரியல், அவியல், துவட்டல், துவையல்
ஆகியனவும் கொறிப்பன வரிசையில் வற்றல் வடாம் போன்றனவும் அடங்கும். பச்சடி,
கிச்சடி போன்றன நக்குவன வரிசையில் வரும். பருகுவன என்பதில் பானகம்,
பாயகம், கஞ்சி, கூழ் ஆகியன அடங்கும். சிற்றுண்டிப் பண்டங் களை (அப்பம்,
இட்லி ) தின்பன வரிசையில் அடக்கலாம்.
உணவின் சுவைகளை உவர்ப்பு, துவர்ப்பு, கைப்பு, கார்ப்பு, இனிப்பு,
புளிப்பு என ஆறு வகைகளாகக் கூறுவதுண்டு. குற்றியலுகரச் சொற் களுக்கு
உதாரணமாக இச்சொற்களைக் கூறுவர். வடமொழியாளர் இச்சுவைகளை லவண, கஷாய,
தித்த, கடு, மதுர, அம்ல என்பர்.
இந்திய உணவுக்குரிய தானியங்களில் பரவலாக அறியப்பட்டவை அரிசியும்
கோதுமையும். இவை பற்றிய செய்திகள் இந்திய இலக்கியங்களிலும் பழைய
வேதங்களிலும் வருகின்றன. ரிக்வேதத்தில் பார்லி என்னும் தானியத்தைப் பற்றி
மட்டுமே குறிப்பு வருகிறது. பிரகதாரண்ய சம்ஹிதையில் குறிப்பிடப்படும்
பத்து தானியங்களில் அரிசி, பார்லி, கோதுமை ஆகியன அடங்கும். யஜுர்
வேதத்தில் கடவுளர்க்கும் கோதுமை உணவு படைக்கப்பட்டது பற்றிய செய்தி
வருகிறது.
தொல்காப்பியம், எள் தானியத்தை உணவுப் பொருளாகக் கூறுகிறது. அகநானூற்றில்
கொள்ளும் (காணம்) பாலும் கலந்து வைத்த கஞ்சிபற்றிக் குறிப்பு வருகிறது.
(37-12-13) அவரை விதையை அரிசியுடன் கலந்து தயாரித்த கஞ்சிபற்றிய குறிப்பை
மலைபடுகடாம் கூறும் (434) தானியங்களை வெயிலில் காய வைத்துச் சமைக்கும்
பழக்கம் பொதுவாக இருந்திருக்கிறது. (அகம் 250 நற் 344).
பண்டைத் தமிழ் இலக்கியங்களிலும் பிற்காலக் கல்வெட்டுக்களிலும் அரிசியைப்
பயன்படுத்திய விதம் பற்றிய தகவல்கள் வருகின்றன. தமிழகத்தின் மிகப் பழைய
தொல்லியல் சான்று கிடைத்த ஆதிச்ச நல்லூர் மக்களிடம் அரிசி பயன்பாட்டில்
இருந்தது.
பட்டினப் பாலை “சோறு வடித்த கஞ்சி ஆற்று நீர் போல ஓடியது” என்பதை
சோறு வாக்கிய கொழுங் கஞ்சி
யாறு போலப் பரந்து ஒழுகி,
என வருணிக்கிறது. (வரி 44-45)
அரிசியை மூன்று ஆண்டுக் காலம் பாதுகாக்கும் முறை பற்றிய தொழில்நுட்பம்
பழந்தமிழர் அறிந் திருந்தனர். (னு.கூ.ளுசiniஎயளய ஐலநபேயச, 1983, ஞ.253)
‘சாதம்’ எனப் பொதுவாக இன்று வழங்கப் படும் அரிசிச் சோறு, பொது வழக்கில்
சோறு என்றே வழங்கப்பட்டிருக்கிறது. இன்று வழக்கில் சாதம் என வழங்குவது
உயர்வாகக் கருதப்படுகிறது. என்றாலும் பழைய இலக்கியங்களிலும், கல்வெட்டு
களிலும் சோறு என்னும் பெயரே பொதுவாகக் கையாளப்படுகிறது.
ஆற்றுக்குள் இருந்து அரகரா என்றாலும்
சோற்றுக்குள் இருக்கிறான் சொக்க நாதன்
என்பது பழம் பாடல்.
சோறு என்பதற்கு அடிசில், அழினி, கூழ், அவிழ், கொன்றி, நிமிரல்,
புழுங்கல், பொம்மன், மிதவை எனப் பல சொற்கள் இருந்தன. பச்சரிசியால்
பொங்கப்பட்ட சோற்றையும் பொங்கல் என்னும் புழுங்கல் அரிசியால் பொங்கப்பட்ட
சோற்றைப் புழுங்கல் என்றும் அழைக்கப்பட்ட வழக்கம் இருந்திருக்கிறது.
சங்ககால ஒளவை, அதிகமான் நெடுமான் அஞ்சியை சிறு சோற்றாலும் நனிபல கலத்தன்,
பெருஞ்சோற்றாலும் நனி பல கலத்தன் என்கிறார். இதனால் சோறு, சிறுசோறு,
பெருஞ்சோறு என வழங்கப்பட்டிருக்கிறது என்று தெரிகிறது.
தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் “பிண்டம் மேய பெருஞ்சோற்று நிலையம்” என
வருமிடத்தில் (சூத்60) இச்சோறு சுமங்கல காரியத்திற்குரியது என்ற பொருளில்
குறிக்கப்படுகிறது. அகநானூற்றில் (பாடல் 110) சிறுசோறு என்ற சொல் மங்கல
காரியத்திற்காகக் காட்டப்படுகிறது.
சோற்றில் கலந்த பொருளின் அடிப்படையில் இது பின்னொட்டாக வரப் பல
பெயர்களால் வழங்கப்படுகிறது.
ஊன் சோறு : ஊனும் சோறும்
கொழுஞ்சோறு : கொழுப்பு நிணம் கலந்து ஆக்கியது
செஞ்சோறு : சிவப்பு அரிசிச் சோறு
நெய்ச்சோறு : நெய் கலந்தசோறு
புளிச்சோறு : புளிக்குழம்பு கலந்தசோறு
பாற்சோறு : பால் கலந்த சோறு
வெண்சோறு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக