வியாழன், 21 செப்டம்பர், 2017

சங்ககால உணவு அரிசி இறைச்சி கள் கூழ் மாட்டிறைச்சி இலக்கியம் உணவுமுறை 2

செய் நெல்லின் வாங்குகதிர் முறித்துப் பாசவல் இடிக்கும் பெருங் காழ்
உலக்கை” எனக் குறிப்பிடுகிறது. பாசவல் என்பது பச்சை நெல்லை உரலில் இட்டு
இடிப்பதைக் குறிக்கும். பாசவலுடன் கரும்புச்சாறும் பாலும் விட்டுக்
கலந்து சாப்பிடும் பழக்கமும் இருந்தது.
சோற்றுக்கு விடும் குழம்பு கொடுகளி பற்றிய செய்திகள்
ஆரம்பகாலத்திலிருந்தே குறைவாகவே கிடைக்கின்றன. பிங்கலநிகண்டு பாகு, ஆணம்
என்னும் இரண்டு சொற்களையே குழம்பிற்குக் கூறுகிறது.
சங்க காலத்தில் சோற்றுக்குரிய குழம்பாகப் புளிக்குழம்பு இருந்தது. தமிழ்
மக்கள் புளியை அதிக அளவில் பயன்படுத்தினர். ஒரிசாவில் விளைந்த புளி
தமிழகத்திற்கே வந்திருக்கிறது. பிற்காலச் சோழர் காலத்தில்
ஒரிசாவிலிருந்து புளி வந்ததைப் பற்றிய செய்தி உண்டு. ஒரிசாவிலிருந்து
புளி வந்ததைப் பற்றிய செய்தி உண்டு. ஒரீயர்கள் புளியைப் பெரும் அளவில்
பயன்படுத்துவதில்லை. மலைபடுகடாம் மூங்கிலரிசி, நெல்லரிசிச் சோற்றுடன்
அவரை விதையைச் சேர்த்துப் புளிக்குழம்பை விட்டுப் பிசைந்து உண்ட
செய்தியைக் கூறுகிறது. குறுந்
தொகை குறிப்பிடும் தயிர்க்குழம்பு (167) புளிகலந்த குழம்பு என்றே
கருதலாம். புளியம்பழத்தை மோரில் கரைத்து மூங்கில் அரிசியைச் சமைத்துத்
தயாரித்த உணவு, புளிக்குழம்பு சோறு என்று கொள்ளப் பட்டது.
புறநானூறு வாளைமீனைச் சமைத்து உவியல் என்னும் தொடுகறி செய்ததையும்
சோற்றுடன் அதைச் சேர்த்து உண்டதையும் கூறும் (புறம் 395) பெரும்பாலும்
பழஞ்சோற்றுக்கு இக்கறிகூட்டாக இருந்திருக்க வேண்டும்.
அகநானூறு அயிலை மீன் துண்டுடன் புளிக் கறி ஆக்கி முரல் வெண் சோற்றுடன்
உண்டதைக் கூறும் (60 - 4-6) புறநானூறு செம்புற்றீயலை மோருடன் சேர்த்துத்
தயாரித்த புளிக்கறியைக் கூறும் (119).
சங்க காலத்திலிருந்தே ஊறுகாய் பயன்படுத்தும் வழக்கம் இருந்திருக்கிறது.
மாங்காயில் நல்லமிளகு கலந்து கறிவேப்பிலை தாளித்து ஊறுகாய் ஆக்கும்
வழக்கம் பற்றி பெரும் பாணாற்றுப்படை கூறும் (307-10) மாதுளங்காயுடன்
மிளகு கலந்து செய்த ஊறுகாய் வழக்கத்தில் இருந்தது.
மிகப் பழைய ரிக் வேதத்தில் உப்பு பற்றிய குறிப்பு இல்லை. பிற்கால
வேதங்களும் புராணங்களும் உப்பு பற்றிப் பேசுகின்றன. விஜயநகரப் பேரரசு
காலத்தில் மலைப் பகுதியிலிருந்தும் ஆற்றுப் படுகையிலிருந்தும்
கடலிலிருந்தும் எடுத்த உப்பு பற்றிய தகவல்கள் பதிவாகியுள்ளன.
சங்க காலத்தில் உப்பு, விலை உயர்ந்த பொருளாகக் கருதப்பட்டது. “நெல்லும்
உப்பும் நேராகும்” என்பது அன்றைய நிலை. உப்பெடுத்த உமணர் என்னும் சாதி
இருந்தது.
கி.மு.2000-இல் தென்னிந்தியாவில் பால் பயன் பாட்டில் இருந்தது என்பது
குறித்த தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன. ரிக்வேதத்தில் பால் என்ற சொல்
700 முறை வருகிறது என்பர். சூடான பாலிலிருந்து சத்தைப் பிரித்தெடுப்பது
பற்றிய நுட்பத்தைக்கூட ஆரம்ப காலத்தில் அறிந்திருக் கின்றனர். ஆடு,
ஒட்டகம் கழுதைப் பாலையும் பெண்ணின் முலைப்பாலையும் பார்ப்பனர்கள்
குடிக்கக்கூடாது என்னும் நடைமுறை இருந்தது.
நெய் எப்போதுமே மேல் தட்டு உணவாக இருந்தது. படித்தவர் மத்தியில் இது
புழங்கியது என்பதற்கு நெய் தொடர்பான இழுது, கிருதம், துப்ப, ஆச்சியம்,
ஆதிரம், ஆகாரம் போன்ற சொற்கள் சான்று. கோவில் பயன்பாட்டுக்கு நெய், பால்
கட்டாயப் பொருளாக இருந்தது என்பதற்குரிய கல்வெட்டுச் சான்றுகள்
கிடைத்துள்ளன.
ஆடு, எருமை, பசு ஆகியவற்றின் நெய் விளக் கெரிக்கப் பயன்பட்டது. பிற்காலச்
சோழர் கல் வெட்டுகளில் சாவா மூவா பேராடு நிவந்தம் அளிப்பது சாதாரணமாய்க்
காணப்படுகிறது. தயிர் மோரின் பயன்பாடு பொதுவானதல்ல. மோருக்குச் சேந்தன்
திவாகரம் முகில், தந்திரம், மகிதம், மச்சிகை, அணை, அருப்பம் என்னும்
சொற்களைக் கூறும். கீரை வகைகளில் பெரும்பாலானவை பயன் பாட்டில் இருந்தன.
வேளைக்கீரை வறியவர்களின் உணவாக இருந்தது. திருமூலர் அறைக்கீரையை
முக்கியமாகக் குறிப்பிடுகிறார்.
பழைய இலக்கியங்களில் பலா, மா, வாழை, நெல்லி போன்ற காய்கள்
குறிப்பிடப்படுகின்றன. கி.மு.6ஆம் நூற்றாண்டு, திருமூலர்
வழுதுணை வித்திடப் பாகல் முளைத்தது
புழுதியைத் தோண்டினேன் பூசணி முளைத்தது
தொழுது கொண்டோடினர் தோட்டக்குடி மக்கள்
முழுதும் பழுத்தது வாழைக் கனியே
என்கிறார். இங்கு வழுதுணை, பூசணி, வாழை ஆகியவற்றின் பெயர்கள் வருகின்றன.
வேத காலத்தில் அசைவ உணவை உண்ட தற்கான சான்றுகள் உள்ளன. வேதங்களில் 250
விலங்குகள் பேசப்படுகின்றன. இவற்றில் 50 அளவில் பலி கொடுக்கப்பட்டன. இவை
உணவுக்காகப் பயன்பட்டன என்பர்.
ரிக்வேத காலத்தில் குதிரை, காளை, எருமை, ஆடு போன்றன பலிகொடுக்கப்பட்டு
உணவுக்குப் பயன்படுத்தப்பட்டன. ஆண் ஆடு, குதிரை போன்ற வற்றின்
இறைச்சியைச் சமைக்கும் முறை பற்றிப் பழைய வேதங்களில் சான்று உண்டு.
அர்த்த சாஸ்திரத்தில் பச்சை இறைச்சிக் கடை, சமைத்த இறைச்சிக் கடை பற்றிய
குறிப்பு வருகிறது. 20 பலம் (700 பஅ) இறைச்சியைப் பொரிக்க 250 கிராம்
எண்ணெய் பயன்பட்டது என்ற குறிப்பைச் சாணக்கியர் கூறுகிறார்.
தமிழன் ஆரம்ப காலத்திலிருந்தே அசைவ உணவுப் பிரியனாக இருந்திருக்கிறான்.
இறைச்சித் துண்டுக்கு பைந்தடி, ஊன், பைந்துணி என்னும் சொற்கள் உள்ளன.
வீரர்கள் தொடர்ந்து இறைச்சியைத் தின்றதால் நிலத்தை உழும் கலப் பையின்
கொழு தேய்வதைப் போலப் பற்கள் மழுங்கிப் போயின என்று பொருநர் ஆற்றுப்படை
கூறும்.
இறைச்சியைக் காயவைத்துப் பதப்படுத்திய செய்தி “இரும்புலி துறந்த
ஏற்றுமான் உணங்கல்” எனப் புறநானூறு கூறும். நாஞ்சில் நாட்டில் வழக்கில்
உள்ள கொடியிறைச்சிதான் இங்கு உணங்கல் எனப்பட்டது. இறைச்சியை எண்ணெயில்
பொரிக்கும் பழக்கம் ஆரம்பகாலத்தில் இருந்தது. கொதிக்கும் எண்ணெயில்
இறைச்சி பொரிக்கும் போது எழும் ஓசை நீர் நிறைந்த பொய்கையில் மழைத்துளி
விழுவது போல் இருந்தது எனப் புறநானூறு கூறும். (386) இறைச்சியை இரும்புக்
கழியில் சுட்டுத் தின்னும் வழக்கமும் இருந்தது. (பொருநர் 105, அகம் 169).
சங்கப் பாடல்களில் “ஊன்” உணவு பற்றிய செய்திகள் நிறையவே வருகின்றன.
முக்கியமாகப் பசுவைக் கொன்று தின்ற செய்தி பழைய பாடல் களில்
காணப்படுகிறது.
புலையன் ஆவுரித்துத் தின்றான். பாணன் கன்றை உரித்துத் தின்றான். (நற்
3-9) வீரர்கள் கொழுத்த பசு இறைச்சியை உண்டனர். (அகம் 129) சிறுபாணாற்றுப்
படை” எயிற்றியர் சுட்ட இன்புளி வெண்சோறு தேமா மேனிச் சில் வளையாய மொடு
ஆமான் சூட்டின் அமைவரப் பெறுகுவீர்” எனக் கூறும் (175-77) இங்கு
விருந்தினர்க்கு மாட்டு இறைச்சியும் வெண்ணரிசிச் சோறும் கொடுத்த செய்தி
விவரிக்கப்படுகிறது.
உழவர்கள் கூடப் பசு இறைச்சியைத் தின்றதை அகநானூறு (129) நன்னூல் உரையில்
பாணர் பசு இறைச்சியைத் தின்ற செய்தி வருகிறது. (சூத் 310) பசுவைக் கொன்று
பாறையில் அதன் இறைச்சியைக் காய வைத்த ஒரு நிகழ்ச்சியை அகநானூறு கூறும்
(390).
பழைய இலக்கியங்கள் அயிலை, ஆரல், இரால், சுறா, வரால், வாளை போன்ற
மீன்களைச் சுட்டும், வேகவைத்தும், புளிசேர்த்துக் குழம்பாகவும் உண்டதைக்
கூறும் (பெரும்பாண் 280, குறும்320, பட்டினப் 63, நற்றிணை 60) பறவைகளில்
எல்லாப் பறவைகளும் உணவுக்குப் பயன்பட்டன. வெண் சோறும் கோழிப் பொரியலும்
உயர்தர உணவாகக் கருதப்பட்டது. (பெரும் 255).
கருப்பஞ்சாற்றைக் கட்டியாக்கி இனிப்புக்குப் பயன்படுத்திய செய்தி சங்கப்
பாடலில் வருகிறது. (பெரும் 259) தொடர்ந்து இது பற்றிய குறிப்புகள்
கல்வெட்டுகளிலும் உள்ளன. கரும்பு பற்றி வேதத்தில் தகவல் இல்லை. அர்த்த
சாஸ்திரம் கரும்புச் சாற்றைக் கடவுளர்க்குப் பயன்படுத்தலாம் எனக் கூறும்.
தேனீ சேகரிப்பு பற்றிய செய்தி மிகப் பழங்கால நூற்களில் கிடைக்கிறது.
கி.மு.3000 ஆண்டினது எனக் கருதப்படும் குகை ஓவியங்களில் தேனீ சேகரிப்பு
பற்றிய ஓவியம் உள்ளது. மகாபாரதத்தில் தேனீக்கள் நிறைந்த தோட்டம் பற்றிய
வர்ணனை வருகிறது. தமிழகத்தில் தேன் உயர்தர மக்களின் உணவாகவே காட்டப்படும்
செய்திகளே கிடைத்துள்ளன.
சமையலுக்குப் பயன்பட்ட பாத்திரங்கன், சமையல்சாதி நம்பிக்கை பற்றிய
செய்திகள் பழைய ஓவியங்களிலும் சிற்பங்களிலும் வருகின்றன. வட இந்திய
ஓவியங்களில் இலையால் ஆன தொன்னையும் தட்டமும் காட்டப்பட்டுள்ளன. குமரி
மாவட்டத்தில் கிடைத்துள்ள 18 ஆம் நூற்றாண்டு முதலியார் ஆவணங்களில்
அருவள், கோருவை, கட்டுவம் போன்ற பாத்திர வகைகள் பற்றிய குறிப்பு உள்ளது.
உணவு உண்ணும் போதும், அதற்கு முன்னும் பின்னும் செய்ய வேண்டிய செயல்கள்
பற்றிய நியதிகள் மேல் வர்க்கம் சார்ந்ததாகவே உள்ளன. நீரை அண்ணாந்து
குடிக்க வேண்டும், தம்ளரை வாய் வைத்து உறிஞ்சிக் குடிக்கக் கூடாது,
சமையல் செய்யும் போது பெண் சமையல்காரி ருசி பார்க்கக் கூடாது என்பது
போன்ற பல நம்பிக்கைகள் உண்டு.
வெள்ளைக்காரன் மலம் பெய்யும் போது மறைவான இடத்தில் இருப்பான், சாப்பிடும்
போது எல்லோரும் அறியச் சாப்பிடுவான்; இதற்கு நேர் எதிரான -
பண்புடையவர்கள் நாம் என்று குறிப்பிடும் வழக்காறு உண்டு. “ஒளிச்சுப்
பேலுவான் வெள்ளக் காரன்; கண்டு தின்பான் வெள்ளக்காரன்” பார்ப்பனர்கள் பிற
சாதியினர் பார்க்கும்படி சாப்பிட மாட்டார்கள் என்ற செயல் பார்ப்பனர்
அல்லாத சமூகத்தினரிடையே ஒரு எதிர்ப்பை உருவாக்கக்
காரணமாயிருந்திருக்கிறது.
தமிழகத்தில் கோவில் கலாச்சாரம் பரவிய பின்னர் கோவிலில் நைவேத்தியம்,
பிரசாதம், பார்ப்பன போஜனம் என்னும் பெயர்களில் தயாரிக்கப்பட்ட உணவு
பற்றியும் அதற்காக விடப் பட்ட நிவந்தம் பற்றியும் கல்வெட்டுகளில் கணிச
மாகவே செய்திகள் உள்ளன.
கி.பி.200 ஆம் ஆண்டினது எனக் கருதப்படும் பதஞ்சலி யோக சூத்திர உரையில்
பௌர்ணமி அன்று உணவுபற்றிய செய்தி வருகிறது. பௌர்ணமி, அமாவாசை போன்ற
திதிகளிலும் பொங்கல், தீபாவளி போன்ற விழாக்களிலும் உண்பதற்கென்றே உணவு
தயாரிக்கும் வழக்கம் பிற்காலத்தில் உருவானது.
கோவில்களிலும் அரச விழாக்களிலும் தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் பற்றிய
குறிப்புகள் முதலியார் ஆவணங்களில் காணப்படுகின்றன.
அஷ்டமி விழாவில் நெல் அதிக அளவில் செலவிடப்பட்டது. (1483 ஆம் ஆண்டு
ஆவணம்) ஓணவிழாவில் கோட்டைக் கணக்கில் தயிர் தேவைப் பட்டது. (1632 ஆம்
ஆவணம்) சிவராத்திரி விழாவில் வழுதலங்காய், பூசனிக்காய் கூட்டு சமைக்கப்
பட்டது. பூசனிக்காய் நல்லமிளகு சேர்த்து செய்யப் பட்ட கூட்டு பற்றிய
குறிப்பு இதில் உண்டு (1729 ஆம் ஆண்டு ஆவணம்).
பொங்கல், கூட்டு போன்றவற்றை வைக்க சுக்கு, சீரகம், மிளகு, சர்க்கரை, எரி
கரும்பு, நெய் ஆகியவற்றைக் கொடுத்ததை ஒரு கல்வெட்டு கூறும். (க.கு.
1968-69) இது 1558 ஆம் ஆண்டின் நிலை, என்றாலும் இதே நூற்றாண்டில் உள்ள
இன்னொரு கல்வெட்டு பருப்பு, நெய், பப்படம், உப்பேரி, ஊறுகாய், பச்சடி
சகிதம் பார்ப்பனர் களுக்கு உணவளித்ததைக் கூறும். (க.கு.1968-80) பொதுவாக
இதுபோன்ற கல்வெட்டுகளில் காணப் படும் செய்திகளில் பார்ப்பனர்களுக்கு
அளிக்கப் பட்ட உணவின் வகைகளும், செழிப்பும் முனைப்புடன் நிற்கின்றன.
பார்ப்பனர் அல்லாதாருக்கு தனிமனிதர் நிவந்தம் இட்ட செய்தி ஒரு
கல்வெட்டில் உள்ளது. (1968-36) இதில் அவர்களுக்குக் கஞ்சியே உணவாகக்
கொடுக்கப்பட்டது என்ற செய்தி வருகிறது.
(உங்கள் நூலகம இதழில் வெளியானது)
நன்றி முகமது அலி முகமது முகைதீன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக