JAN
26
Posted by வழிப்போக்கன்comments (2)
தவறினைக் கண்டிக்காமல் இருப்பதும் குற்றம். நல்ல செயல்களை ஆதரிக்காது இருப்பதும் குற்றம்.
ஒரு நாட்டின் மக்கள் எப்பொழுது மேலே உள்ளக் குற்றங்களை தங்களது மனம் உறுத்தாமல் செய்யத் தொடங்குகின்றனரோ அன்று அந்த நாடு தனது அழிவுப் பாதையில் பயணிக்கத் தொடங்குகின்றது. அது எப்பேர்ப்பட்ட நாடாக இருந்தாலும் சரி இந்த விதியிலிருந்து அது தப்புவதில்லை. அந்த நிலையில் அது மக்கள் வாழும் நாடு என்னும் நிலையில் இருந்து மாறி மாக்கள் வாழும் காடு என்ற நிலைக்கு தாழ்ந்து விடுகின்றது.
இன்றைக்கு தமிழகமும் சரி இந்தியாவும் சரி இத்தகைய இக்கட்டான மாற்ற நிலையிலையே உள்ளன. காரணம் பெருன்பான்மையான மக்கள் சிந்திப்பது இல்லை…சிலர் சிந்திக்க முயன்றாலும் அவர்கள் சிந்திக்க விடப்படுவதில்லை. மனதை மயக்கி அறிவினை தாழ்த்தும் மாயை வலையினுள் அவர்கள் சிறு வயது முதலிலேயே சிக்க வைக்கப் படுகின்றனர். அறியாமையே அறிவாக அவர்களுக்கு புகட்டப்படுகின்றது.
இதனால் தான் இன்று இந்தியாவில் சிலர் தவறுகள் செய்கின்றனர். ஒரு சிலர் தவறினை எதிர்த்து போராடுகின்றனர். பலர் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். வாழ்கையே அவர்களுக்கு வேடிக்கையாக போய் விடுகின்றது. சில நேரம் பயம் அவர்களை எந்த முடிவும் எடுக்க விடாது தடுக்கின்றது… சில நேரம் சுயநலம்.. பல நேரம் அறியாமை.
பிரச்சனை அந்த வேடிக்கை பார்ப்பவர்களால் தான். இவர்கள் களம் இறங்காததினால் தான் இன்று பல பிரச்சனைகள் முடிவுறாது தொடர்ந்து பிரச்சனைகளாகவே இருந்துக் கொண்டு வருகின்றன. நாட்டின் பிரச்சனைகளை பிறரின் பிரச்சனைகளாகவே பார்க்க கற்றுக் கொண்டு விட்டனர். அடுத்தவனின் வலி இவர்களுக்கு புலப்படுவதில்லை. தாங்கள் உண்ணும் ஒவ்வொரு சோற்றுப் பருக்கையிலும், உடுத்தும் உடையிலும், செய்யும் தொழிலிலும் அரசியல் கலந்து இருப்பதனை அறியாது, அரசியல் ஒரு சாக்கடை என்றுக் கூறி மேலும் தங்களின் அறியாமையை பெருக்கிக் கொள்கின்றனர்.
தவறுகள் செய்பவர்களுக்கு இது தான் வேண்டும்… பெருவாரியான மக்களின் மௌனம் தான் வேண்டும்!!! அவர்கள் மௌனமாய் இருக்கும் வரை இவர்கள் தாராளமாய் தவறுகள் செய்யலாம். பதவியும் பலமும் இவர்கள் கையில். இந்நிலை இருக்கும் வரை இவர்களை எந்தப் போராட்டமும் ஒன்றும் செய்ய முடியாது.
ஆனால் போராட்டக்காரார்கள் நிலை தான் பாவம். இவர்கள் போராடுவது அந்த பெருன்பான்மையான மக்களுக்காகவே. ஆனால் அநேக நேரங்களில் அம்மக்களால் இவர்கள் விரோதிகளாகவே பார்க்கப் படுகின்றனர். காரணம் அவ்வாறே இவர்கள் ஊடகங்களால் முன்னிருதப்படுகின்றனர். ஊடகங்களை மட்டுமே நம்பும் பெருன்பான்மையான மனிதர்களும் இவர்களையும் இவர்களின் போராட்டங்களையும் தேச விரோதச் செயல்களாகவே பார்க்க தலைப்படுகின்றனர்…. உண்மை எங்கோ நடுவில் புதைக்கப்படுகின்றது.
இந்த நிலையில் நாடு அழிவுப் பாதையில் செல்ல ஆரம்பிக்கின்றது.
நண்பர்களே…!!!
நம்முடைய நாடும் இன்று அழிவுப்பாதையில் சென்றுக் கொண்டு இருக்கின்றது. காரணமாய் பல காரணிகள்!!! ஆனால் முக்கியமான காரணி நம்முடைய மௌனம் மற்றும் அறியாமை. இவை இரண்டும் இருக்கும் வரை நாமும் சரி நம்முடைய நாடும் சரி உண்மையான முன்னேற்றத்தினை அடையப் போவதில்லை.
நாம் நம்முடைய நாட்டினை உண்மையிலையே நேசித்தோம் என்றால் முதலில் நம் நாடு சந்திக்கும் பிரச்சனைகளைப் பற்றி நாம் அறிந்துக் கொள்ள வேண்டும். அறிந்துக் கொண்டு பின்னர் அப்பிரச்சனைகளை களைவதற்காக குரல் கொடுக்க வேண்டும்.
தவறென்றால் எதிர்த்து குரல் கொடுப்போம்.
சரி என்றால் ஆதரித்து குரல் கொடுப்போம்.
மொத்தத்தில் குரல் கொடுப்போம். மெளனமாக மட்டும் இருக்க வேண்டாம்… ஒரு காலம் நாம் மெளனமாக இருக்க வேண்டிய காலம் வரும்… அன்று மெளனமாக திகழலாம். அது வரையிலாவது குரல் கொடுப்போமே. நம் அடுத்த தலைமுறையினருக்கு அமைதியான நல்ல உலகினை விட்டு செல்வதற்கு நம்மால் ஆவன செய்வோமே!!!
முதலில் நாம் இப்பொழுது சந்தித்துக் கொண்டு இருக்கும் பிரச்சனைகளை பற்றி அறிந்துக் கொள்வோம். இன்று நாளிதழ்களிலும் சரி… தொலைக்காட்சிகளிலும் சரி விவாதப் பொருளாக இருப்பது கூடங்குளம் போராட்டம் தான்.
சிலர் இத்திட்டம் நாட்டிற்க்கு நல்லது என்கின்றார்கள்… சிலர் அதை எதிர்த்து போராடுகின்றார்கள். இதில் யார் சொல்வது உண்மை என்று நாம் அறிந்து கொள்ள வேண்டிய கடமை நமக்கு இருக்கின்றது. ஏற்கனவே கூடங்குளப் போராட்டத்தினைப் பற்றி ஒரு இணையப் பக்கத்தினை பகிர்ந்து இருந்தேன். ஆனால் அப்பக்கத்தினை எத்தனைப் பேர் கண்டு இருப்பீர் என்று தெரியவில்லை. எனவே ’கீற்று’ இணையத்தில் வெளிவந்த அந்தப் பதிவின் சில பகுதிகளை இப்பக்கத்தில் இணைக்கின்றேன்.
படியுங்கள்… உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால் கேளுங்கள்… சேர்ந்தே விடை தேடுவோம். அறியாமையில் மட்டும் இனி இருக்க வேண்டாம் நண்பர்களே.
அந்தப் பதிவினை முழுதாகப் படிக்க இந்த இணைப்பை பாருங்கள்.
**********************************************************************************************
இத்தனை நாட்கள் கழித்து இப்போது கூடங்குளத்தில் போராட வேண்டிய தேவை என்ன?
இதற்கு நேரடியாக விடை சொல்வதை விடக் கூடங்குளத்தில் பட்டினிப்போராட்டத்தில் பங்கேற்ற கவிஞர் மாலதி மைத்ரியின் விடையைச் சொல்கிறேன். ‘உங்கள் மகளுக்கு மாப்பிள்ளை பார்த்து, திருமணம் பண்ண முடிவு செய்துவிட்டீர்கள். திருமண நாள் குறித்தாகிவிட்டது; மண்டபத்திற்குப் பணம் கொடுத்தாகிவிட்டது; சொந்தக்காரர்கள் எல்லாருக்கும் அழைப்பிதழும் அனுப்பிவிட்டீர்கள். நாளை காலை திருமணம். இன்று இரவு தான் உங்களுக்கு அதிர்ச்சியான ஒரு செய்தி தெரிய வருகிறது – நீங்கள் பார்த்திருக்கும் மாப்பிள்ளைக்கு எயிட்சு நோய் இருக்கிறது என்று! இப்போது சொல்லுங்கள்! பல்லாயிரக்கணக்கான உரூபா செலவு பண்ணிட்டோம், திருமணம் நடக்கட்டும்னு விடுவீங்களா? இல்லை நிறுத்தி விடுவீர்களா?
*************************************************************************************************
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களே கூடங்குளம் அணுமின்திட்டம் வேண்டும் என்கிறாரே!
‘அணுமின் திட்டம் வேண்டும்’ என்று சொல்வதற்கு அவர் என்னென்ன காரணங்கள் சொல்கிறார்?
23) அன்றாடம் செய்தித்தாள்களைப் படித்தாலே அவருடைய கருத்துகள் உங்களுக்குப் புரிந்திருக்கும். சரி! இருந்தாலும் சொல்கிறேன்.
- அணு மின்சாரம் மலிவானது.
- கூடங்குளம் அணு உலை நூறு விழுக்காடு பாதுகாப்பானது.
- அணுக்கழிவுகளை எட்டாண்டுகள் வரை பாதுகாப்பாக வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
- சப்பானின் புகுசிமா அணு நேர்ச்சியில் ஒருவர் கூடச் சாகவில்லை.
- நீங்கள் பெரிதாகப் பேசும் செர்நோபிள் அணு நேர்ச்சியில் ஐம்பத்தேழு பேர் தாம் இறந்தார்கள்.
- யுரேனியம் கிடைக்காமல் தான் செர்மனி அணு உலைகளை மூடுகிறதே தவிர, புகுசிமா நேர்ச்சியால் ஏற்பட்ட அச்சத்தால் ஒன்றும் இல்லை.
என்று உங்கள் கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் நெற்றியடி அடித்துச் சொல்லியிருக்கிறார். அப்படிச் சொல்லியும் உங்களுக்குப் புரியவில்லையா?
முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாம் கருத்துகளை நன்றாக ஊன்றிப் படித்திருக்கிறீர்கள். நீங்கள் சொல்லும் அக்கருத்துகளையே ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
1.கலாம்: அணு மின்சாரம் மலிவானது.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் கூறும் இக்கணக்கானது, ‘ஒரு கிராம் யுரேனியத்தின் விலையால் அதிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தின் அளவை வகுத்துச் சொல்வதாகும்’. ஆனால் அணு மின்சாரத்தைக் கணக்குப் போடும்போது கருத்தில் கொள்ளப்பட வேண்டியவை:
ð அணு உலைகளுக்குச் செய்யப்படும் சிறப்புப் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு ஆகும் செலவு. (இதுவே பிற முறைகளுக்கு ஆகும் செலவை விடப் பல நூறு மடங்கு அதிகம்)
ð அணு உலையை ஏறத்தாழ முப்பதாண்டுகளுக்குப் பின் பிரித்துக் கலைத்துவிடவேண்டும். இப்போது கூடங்குளத்திற்குப் பதின்மூன்றாயிரம் கோடி உரூபா செலவாகியிருப்பதாக அரசு சொல்கிறது. இவ்வுலையைப் பிரிக்க இன்றைய கணக்கில் இருபதாயிரம் கோடி உரூபா ஆகும் என்று அரசு கூறி வருகிறது. (அப்படியானால் இன்னும் முப்பதாண்டுகளில் அத்தொகை ஐம்பதாயிரத்தில் இருந்து அறுபதாயிரம் கோடி உரூபா தேவைப்படும்.). ஆகக் கூடங்குளத்திற்கு ஆகப்போகும் தொகை (கட்டுவதற்கும் பிரிப்பதற்கும் மட்டும்) ஏறத்தாழ எண்பதாயிரம் கோடி உரூபா.
ð அணு மின்சாரம் மலிவாகக் கிடைக்கும் ஒன்று என்றால் “Wall street நிறுவனங்கள் அணு உலைகள் அமைக்க உதவ மாட்டோம்” (“Wall street does not vote for Nuclear Industries”) என ஏன் சொல்கிறார்கள்?
ð நாட்டின் அணுஆற்றல் துறையை அரசு ‘அலுவல் கமுக்கச் சட்டத்தின்’ (‘Official Secret Act’) கீழ் பாதுகாத்து வருகிறது. எனவே அங்கு எவ்வளவு செலவழிக்கப்பட்டுள்ளது என்பது மக்களுக்குச் சொல்லப்பட மாட்டாது. கதை இப்படியிருக்க, அணு மின்சாரம் மலிவானது என்று எந்தக்கணக்கில் கூறுகிறார்கள்?
2. கலாம்: கூடங்குளம் அணு உலை நூறு விழுக்காடு பாதுகாப்பானது.
ð இக்கருத்தை அப்படியே ஏற்றுக்கொள்வதாக வைத்துக்கொள்ளுங்கள். இந்திய அரசு, இரசிய அரசுடன் சிறப்பு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. இவ்வொப்பந்தத்தின் படி, கூடங்குளம் அணு உலையில் நேர்ச்சி ஏதும் ஏற்பட்டால் இந்த அணு உலையை நிறுவியிருக்கின்ற “ஆடம்சுதுரோயெக்சுபோர்ட்டு” (“Atomstroyeksport”) நிறுவனத்தின் மீது யாராலும் வழக்குத் தொடர முடியாது. இந்த ஒப்பந்தத்தின் பெயர் தான் ‘அணு உலை நேர்ச்சி இழப்பீட்டு ஒப்பந்தமாகும்’. அணு உலை நூறு விழுக்காடு பாதுகாப்பானது என்றால் இந்த ஒப்பந்தம் எதற்கு?
ð அணு உலைகள் பாதுகாப்பானவை என்றால், பெரும்பாலான தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் ஏன் அணு உலைகளைக் காப்பீடு செய்ய முன்வருவதில்லை?
ð மற்ற எரிபொருள் ஆற்றல் தொழில்களைக் காட்டிலும் அணு ஆற்றல் தொழிலுக்கு ‘Wall Street’ வங்கிகள் ஏன் கூடுதல் வட்டி வாங்குகின்றன?
3.கலாம்: அணுக்கழிவுகளை எட்டாண்டுகள் வரை பாதுகாப்பாக வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ð கழிவுகளைப் பாதுகாக்க முடியும் என்பதை ஏற்றுக்கொள்வோம். அப்படியானால் இரசியா ஏன் (முன்பு ஒப்புக்கொண்டதற்கு மாறாகக்) கழிவுகளை எடுத்துச் செல்ல முடியாது எனக் கைவிரிக்கிறது?
ð அணுக் கழிவுகள் என்று சொல்வது ஏதோ நம்முடைய வீட்டில் இருந்து கொட்டும் சமையல் கழிவுகளைப் போல என எண்ணி விடாதீர்கள். அணுக்கதிர் தனிமமான புளூட்டோனியத்தின் ஒரு கிராமில் பத்து இலட்சத்தில் ஒரு பகுதியே புற்றுநோயை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டது. இந்தக் கழிவு இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்குக் கதிரியக்கத்தை வெளிப்படுத்தும்.
ð இரண்டு இலட்சம் ஆண்டுகள் (சரி! வெளியில் பேசப்படுகிற இருபத்தைந்தாயிரம் ஆண்டுகள் என்று கூட வைத்துக்கொள்ளுங்கள்). இருபத்தைந்தாயிரம் ஆண்டுகள் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு பொருளை எட்டாண்டுகள் மட்டும் பாதுகாத்துவிட்டு அதன் என்ன செய்யப் போகிறோம்?
ð அணுக்கழிவை நிலநடுக்கமும் நீர் ஒட்டும் வாய்ப்பும் அறவே இல்லாத யூக்கா மலையில் ஆழப் புதைக்கும் திட்டத்திற்குப் பல்லாயிரம் கோடிச் செலவழித்த பிறகு, அதுவும் பெரிய தீங்கு விளைவிப்பது தான் என அமெரிக்கா அந்தத் திட்டத்தைக் கைவிட்டது ஏன்?
4.கலாம்: சப்பானின் புகுசிமா அணு நேர்ச்சியில் ஒருவர் கூடச் சாகவில்லை.
ð ஒருவர் கூடச் சாகாத புகுசிமா நேர்ச்சிக்கு ஏன் ‘நேர்ச்சி அளவு: ஏழு’ என உச்ச அளவு சொல்லப்பட்டது?
ð ‘செர்நோபிளைப் போல இருபது மடங்கு கதிர்வீச்சு வெளிப்பட்டுள்ளது’ என அமெரிக்காவில் அணுத் தொழிலில் துணைத்தலைவராக இருந்த அர்னாடு கண்டர்சன் என எப்படிச் சொன்னார்? (http://www.aljazeera.com/indepth/features/2011/06/201161664828302638.html)
ð ஒருவர் கூடச் சாகவில்லை என்றால் ஏன் சப்பான் அரசு தன்னுடைய நாட்டில் அணு உலைகளை நிறுவுவதை உடனடியாக நிறுத்தி வைத்துள்ளது ஏன்?
ð ஒருவர் கூடச் சாகாத ‘சிறிய’ நேர்ச்சிக்குச் சப்பான் அரசு ஏன் அங்கு வாழ்ந்து வந்த எழுபதாயிரம் பேரை உடனடியாக வெளியேற்றியது?
ð புகுசிமாவில் பயிரான நெல்லை ஏற்றுமதி செய்யக்கூடாது எனச் சப்பான் அரசு ஏன் தடை விதித்தது? (http://www.dnaindia.com/world/report_japan-bans-shipment-of-rice-harvested-in-fukushima-after-high-cesium-level-detected_1619606)
5.கலாம்: நீங்கள் பெரிதாகப் பேசும் செர்நோபிள் அணு நேர்ச்சியில் ஐம்பத்தேழு பேர் தாம் இறந்தார்கள்.
ð இரண்டாம் உலகப் போரின் போது சப்பானின் இரோசிமா, நாகசாகி ஆகிய நகரங்கள் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதில் எத்தனைப் பேர் இறந்தார்கள்? அதன் பிறகு எத்தனைக் குழந்தைகள் ஊனமாக, மனவளர்ச்சி குன்றியதாக எனப் பல்வேறு குறைகளுடன் தொடர்ந்து பிறந்திருக்கின்றன என்பது நீங்கள் அன்றாடம் செய்தித்தாள் வாசிப்பவராக இருந்தாலே உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதைப் போல நூறு மடங்கு கதிர்வீச்சைச் செர்நோபில் அணு விபத்து வெளிப்படுத்தியது என்றால் எவ்வளவு பெரிய அவலம் நடந்திருக்கும் என்பதை ஊகித்துக் கொள்ளுங்கள்.
ð ஐம்பத்தேழு பேர் இறந்து போவது என்பது ஒரு பேருந்து நேர்ச்சியைப் போலத்தான்! அப்படியானால் அதை ஏன் ஆசியாவின் பெரிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகத்தில் ‘சுற்றுச்சூழலியல்’ துறை பாடத்திட்டத்தில் வைத்துப் பொறியியல் மாணவர்களுக்குச் சொல்லித் தருகிறார்கள்? கலாம் அவர்களே அப்பல்கலைக்கழகத்தில் சில காலம் பேராசிரியராகப் பணியாற்றினாரே!
ð செர்நோபிள் நேர்ச்சியால் ஒன்பது இலட்சத்து எண்பத்தைந்தாயிரம் பேர் இறந்து போனார்கள் என்று இரசிய அரசு அறிக்கையே சொல்கிறது. (இதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள ‘Chernobyl: Consequences of the Catastrophe for People and the Environment’ என்னும் அறிக்கையைப் படித்துப் பாருங்கள்).
ð செர்நோபிள் நேர்ச்சியால் செர்நோபிளைத் தாண்டி ஐரோப்பாவில் 1 இலட்சம் சதுர கி. மீ. நிலம் வேளாண்மை செய்ய முடியாத அளவு மாசுபட்டுள்ளது.
6.கலாம்: யுரேனியம் கிடைக்காமல் தான் செர்மனி அணு உலைகளை மூடுகிறதே தவிர, புகுசிமா நேர்ச்சியால் ஏற்பட்ட அச்சத்தால் ஒன்றும் இல்லை.
ð செருமன் நாட்டின் அதிபர் (சான்சலர்) ஆங்கெலா மார்க்கெல் நம்முடைய தலைமையமைச்சர் மன்மோகன்சிங்கைப் பக்கத்தில் வைத்துக்கொண்டே ‘சப்பான் நேர்ச்சிக்குப் பிறகு ஏற்பட்ட எதிர்ப்பால் தான் அணு உலைகளை மூடுகிறோம்’ என்று சொல்லியிருக்கிறார். இது கலாம் அவர்களுக்குத் தெரியாதா?
ð யுரேனியம் கிடைக்காமல் தான் செருமனி அணு உலைகளை மூடுகிறது என்று வைத்துக்கொள்வோம். அப்படியானால் நம்முடைய நாட்டில் யுரேனியம் கிடைக்கிறதா? இல்லையே! இந்த யுரேனியத்தை இறக்குமதி செய்வதற்குத் தானே மன்மோகன் அரசு அமெரிக்காவுடன் அணு ஒப்பந்தத்தைச் செய்துள்ளது!
ð யுரேனியத்தை நம்முடைய நாட்டிற்கு இறக்குமதி செய்ய முன்வந்துள்ள ஆசுதிரேலியாவில் ஓர் அணு உலை கூடக் கிடையாது! ஏன்?
****************************************************************************************************
அப்படியானால் அப்துல் கலாமும் காசு வாங்கிக் கொண்டு நம்மை ஏமாற்றுகிறார் என்று சொல்கிறீர்களா?
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நாடு போற்றுகிற ஒரு தலைவர். இளைஞர்கள் பலர் அவரை முன்னோடியாகக் கொண்டு இயங்கிவருகிறார்கள். இன்னும் சொல்லப் போனால் நம்முடைய பகுதியைச் சேர்ந்தவர்; தமிழ்வழியில் படித்தவர்; ஏழை மீனவக் குடும்பத்தில் இருந்து இவ்வளவு பெரிய பதவிக்கு வந்தவர்; எளிமையானவர் என்று பெயர் பெற்றவர். இவ்வளவு புகழ் பெற்ற ஒருவர் காசு வாங்கிக்கொண்டு ஏமாற்றுகிறார் என்றெல்லாம் கண்மூடித்தனமாக நாங்கள் சொல்லவில்லை; சான்றுகள் எவையும் இன்றி அப்படிச் சொல்வது பொருத்தமும் இல்லை. அப்துல் கலாம் ஆனாலும் சரி! அன்னை தெரசாவானாலும் சரி! அறிஞர் அண்ணாவானாலும் சரி! ‘சரி என்றால் சரி என்று சொல்வோம்! தவறென்றால் தவறு என்று சொல்வோம்!’ ‘நெற்றிக்கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே!’ என்றல்லவா தமிழ் நமக்குச் சொல்லிக்கொடுத்திருக்கிறது! முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு கலாம் அவர்கள், செல்லும் இடமெல்லாம் திருக்குறள் சொல்லும் இயல்புடையவர். அந்தத் திருக்குறள்
“எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் கேட்ப(து) அறிவு” என்று தானே நமக்குச் சொல்லிக்கொடுத்திருக்கிறது! ஆக, ஒரு கருத்தைக் கலாம் சொன்னாலும் சரி, யார் சொன்னாலும் சரி, ‘மெய்ப்பொருள் காண்பது’ நம்முடைய கடமையாகிறது அல்லவா?
*******************************************************************************************************
நீங்கள் சொல்வது எல்லாம் சரி என்று ஒரு வாதத்திற்கு வைத்துக் கொள்வோம். உங்கள் போராட்டத்தை அறிஞர்களுள் ஒருவராவது ஆதரிக்கிறாரா?
புகழ்பெற்ற அணுவியலாளர்களுள் ஒருவராகத் திகழும் முனைவர் பரமேசுவரன் (பாபா அணு ஆராய்ச்சி நிறுவனம்), சப்பான் (புகுசிமா) அணுமின் திட்டத்தில் பணியாற்றிய முனைவர் யமுனா, பேராசிரியர் வி. சிவசுப்பிரமணியன், அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் முனைவர் டி.டி. அசித்குமார் என அடுக்கிக்கொண்டே போகலாம். (http://www.dnaindia.com/india/report_top-indian-scientists-to-launch-nation-wide-protest-for-ban-on-nuclear-plants_1600845-all)
****************************************************************************************************
சரி! கூடங்குளம் அணு உலை கூடவே கூடாது என்னும் உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன். அப்படியானால் மின்வெட்டைத் தீர்க்க என்ன தான் வழி?
மின்வெட்டை ஒரு நாளும் அணு மின்சாரம் தீர்த்துவிடாது. 1962ஆம் ஆண்டே, ‘இன்னும் இருபத்தைந்து ஆண்டுகளில் நாங்கள் 20000 மெ.வா. மின்சாரத்தை அணு உலைகள் வழியாக உற்பத்தி செய்து விடுவோம்’ என்று சொன்னார்கள். ஆனால் 1987ஆம் ஆண்டு ஆயிரம் மெ.வா கூடக் கிடைக்கவில்லை. அதன்பின் இரண்டாயிரமாவது ஆண்டில் நாங்கள் மொத்தத் தேவையில் பத்து விழுக்காட்டு அளவுக்கு மின்சாரம் உருவாக்கி விடுவோம் என்றார்கள். ஆனால் மூன்று விழுக்காட்டைக் கூட எட்டவில்லை. எனவே கூடங்குளம் அணு உலை நமக்கு மின் தட்டுப்பாட்டைத் தீர்க்கும் என்பது ஏட்டுச்சுரைக்காய் தான்! அது கறிக்கு உதவாது.
******************************************************************************************************
சரி! மாற்று என்ன? அதற்கு ஏதாவது திட்டம் வைத்திருக்கிறீர்களா?
ð தமிழகத்தில் குண்டு விளக்குகளுக்கு(‘பல்பு’) மாற்றாக சி.எப்.எல் (‘’CFL’) விளக்குகளைப் பொருத்தினால் ஒரே நொடியில் 1800 மெ.வா. மின்சாரம் மிச்சமாகும்.
ð தமிழ்நாட்டில் கயத்தாற்றில் இருந்து கன்னியாகுமரி வரை நிறுவப்பட்டுள்ள காற்றாலைகள் மூலம் நாம் நாள் ஒன்றுக்கு 3200 மெ.வா மின்சாரம் பெறுகிறோம். இந்தியாவில் இது போல் காற்றடிக்கும் கடற்கரை குசராத்து முதல் வடகிழக்கு வரை ஏழாயிரத்து ஐந்நூறு கி.மீ. நீளத்திற்கு உள்ளது. அங்கும் காற்றாலைகள் நிறுவினால் பல்லாயிரக்கணக்கான மெ.வா. மின்சாரம் பெற முடியும்.
ð இன்றுள்ள காற்றாலைகள் 11-14 கி.மீ வேகத்தில் காற்றடித்தால் சுழல்கின்றன. இவற்றை ஆய்ந்து 4-5 கி.மீ வேகத்தில் காற்றடித்தாலே இயங்கும் வகையில் காற்றாலைகள் அமைக்கலாம் என்று பல ஆய்வுகள் கூறுகின்றன.
ð ஒரு ச.கி.மீ. பரப்பளவில் சூரியத் தகடுகளைப் பொருத்தினால் நாள் ஒன்றுக்கு 35 மெ.வா. மின்சாரம் பெற முடியும்.
ð நம் நாட்டில் உள்ள தார் பாலைவனத்தில் 5000 ச.கி.மீ பரப்பளவில் (5000 * 35 = 175000 மெ.வா.) சூரிய ஒளி மூலம் மின்சாரம் பெற முடியும்.
ð தூத்துக்குடி மாவட்டத்தில் மீன் பதப்படுத்தும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரில் இருந்து எரிவாயு உருவாக்கப்பட்டு மின்சாரம் பெறப்படுகிறது. இருபது இலட்ச உரூபா முதலீட்டில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் மாதம் ஓர் இலட்ச உரூபா அளவுக்குப் பணம் மிச்சமாகிறது.
ð இதே போல் ஒவ்வொரு மாவட்டத் தலைநகர், நகராட்சிகள், பேரூராட்சிகள் என எங்கெல்லாம் கழிவுநீர் அரசால் சேர்க்கப்படுகிறதோ அங்கெல்லாம் ‘கழிவு நீர் மேலாண்மை’ மூலம் மின்சாரம் பெற முடியும். ஏறத்தாழ ஐந்து மெ.வா. மின்சாரத்தை ஒவ்வொரு நகராட்சியில் இருந்தும் நம்மால் பெற முடியும். இப்படிச் செய்வதன் மூலம் நகர்ப்பகுதிகளில் மின்வெட்டை உடனடியாகக் குறைக்கலாம்.
நன்றி..!!!
SEARCH அணுவுலையும் அப்துல் கலாமும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக