திங்கள், 3 ஏப்ரல், 2017

கருவூர் தேவர் கம்மாளர் பெரியகோவில் கருவறை லிங்கம் நிறுவல் சிவனடியார் பெருமாள் புகழ்தல் திருவரங்கம் செல்தல் கருவூரார் சித்தர் கரூர் ராசராச சோழன் தஞ்சை சிவலிங்கம்

aathi tamil aathi1956@gmail.com

2/12/15
பெறுநர்: எனக்கு
madhavipanthal.blogspot.in/2009/01/blog-post_25.html?m=1
தமிழ் வேதம் திருவாய்மொழி ஆசாரி 



  1. Sunday, January 25, 2009


    தேவாரம்! ஸ்ரீரங்கம்! கருவூர் சித்தர்! இராஜராஜ சோழன்!

    வாங்க மக்களே! இனிய குடியரசு நாள் வாழ்த்துக்கள்! அங்கோ, உங்களுக்கு நீண்ட விடுமுறை வார இறுதி! இங்கோ, எங்களுக்கு ஓயாத உழைப்பு! :)
    வாங்க, தேவாரப் பதிவுகளின் தொடர்ச்சியாக, இன்னிக்கி ஒரு சூப்பர் தேவாரம் பார்க்கலாம்! கூடவே பாடவும் சொல்லிக் கொடுக்கறரு ஒருத்தரு! அதோட ஒரு சூப்பர் கதையும் பார்ப்போம்!

    தேவாரப் பதிவுகளில்....இது வரைசம்பந்தர் - முதல் தேவாரம்,
    அப்பர் - ஆணும் பெண்ணுமாய் பூசை,
    சுந்தரர் - நண்பனை மறந்தாயோ?,
    மணிவாசகர் - தமிழ் அர்ச்சனை!,
    காரைக்கால் அம்மையார் - பெண் தேவாரம் - Icon Poetry!
    என்று சில பதிகங்களைப் பார்த்தோம்!

    அப்படியே...
    தமிழ் ஈழம் பற்றிப் பாடிய நாயன்மார்கள்!
    நாயன்மார்கள் 63 or 72?
    என்றும், தொகையடியார் பற்றிய சில குறிப்புகளையும் பார்த்தோம்! மாணிக்க வாசகர் அறுபத்து மூவருள் ஒருவர் இல்லை என்ற ஒரு தகவலும், அதற்கு சில பெரியோர்கள் அளித்த விளக்கமும் இன்னும் பல் சுவை கூட்டின!

    இன்னிக்கி பார்க்கப் போறது, கருவூர் சித்தரின் தேவாரம்!

    ஆகா...கருவூர் சித்தரா? அவர் தேவாரம் எல்லாம் கூடப் பாடியிருக்காரா என்ன? சித்த புருஷர்கள், பொதுவாகக் கோயில் பற்றி எல்லாம் பாட மாட்டாங்களே? நட்ட கல்லும் பேசுமோ?-ன்னு, "இடறுவது போலவும், அலர்ஜி போலவும்" தானே அவங்க பாடுவாங்க? "குழப்பவாதம்" போல் தொனிக்குமே அவங்க ஆன்மீகம்? அவங்க எப்போ தேவாரம் எல்லாம் பாடினாங்க? ஹா ஹா ஹா! :)

    அட, கருவூர் சித்தர் தேவாரம் பாடியிருக்காருங்க! பார்க்கலாமா?
    ஆனால் அதற்கு முன்னாடி ஒரு சிறு குறிப்பை மனசில் வாங்கிக்குங்க! முன்பே சொன்னது போல்...* நாலாயிரத் திவ்ய பிரபந்தம் பாடிய அத்தனை பேரும் ஆழ்வார்கள் பட்டியலில் இடம் பெற்று இருப்பார்கள்! (அமுதனார் என்ற பின்னாளைய கவிஞரைத் தவிர)!
    * ஆனால், 63-உள் இருப்பவர்கள் அத்தனை பேரும், தேவாரம் பாடி இருக்கணும்-ன்னு அவசியமில்லை! அதே போல தேவாரம் பாடியதாலேயே, 63-உள் வைக்கப்படணும் என்ற அவசியமும் இல்லை!

    * பாடணும் என்ற அவசியம் இல்லாமல், தொண்டு மட்டுமே செய்தவர்களும், 63 நாயன்மார்களுள் வைக்கப்பட்டது சிறப்பு! = எனக்கு மிகவும் பிடித்த விஷயம் இது தான்!
    * அதே போல், சேந்தனார், கருவூர் தேவர் போன்றவர்கள் 63-உள் இல்லை! ஆனால் இவர்கள் தேவாரம் பாடி உள்ளார்கள்!


    அன்றைய சோழ/சேர நாடுகளின் பெரிய ஊர் கருவூர்! இன்னிக்கி கரூர்! திருச்சியில் இருந்து ஒன்னரை மணி நேரப் பயணத்தில் போயிறலாம்!
    அங்கு பிறந்தவர் தான் நம்ம கருவூரார்! சிற்பங்கள் செய்யும் விஸ்வகர்மா குலத் தம்பதியர்க்கு மகவாய்ப் பிறந்தார்! தில்லை நடராஜப் பெருமானின் திருவுருவம் இவர் செய்ததே என்று சொல்லும் ஒரு சுவையான கதையும் உண்டு! இன்று சொல்லப் போவதில்லை! இன்னொரு நாள்!

    * இவர் குரு = போகர் சித்தர்! (நவபாஷாண முருகனைத் தந்தவர்)
    * இவர் சீடர் = இடைக்காட்டுச் சித்தர்! (தாண்டவக் கோனே என்று பாடல்கள் பாடியவர்)

    குருவான கருவூரார், சீடரான இடைக்காடர் இருவருமே சித்தர்கள் அல்லவா! சித்தர்கள் யோக மயமான சிவபெருமானைத் தானே வணங்குவார்கள்? பெருமாளை வணங்குவார்களா என்ன? :)
    நம்மாழ்வார் திருவாய் மொழியைத் "தமிழ் வேதம்" என்று முதலில் பாராட்டியதே, சிவச் செல்வரான இடைக்காட்டுச் சித்தர் தான்! இதோ!

    சைவ நூல்களையோ, ஏனைய வைணவ நூல்களையோ சொல்லாது, நம்மாழ்வாரை மட்டும் "தமிழ் வேதம்" என்றார்கள் சித்தர்கள்! வேதத்தை, அதன் சாரம் மாறாமல், தமிழ்ப் படுத்தியதால் தான், "தமிழ் வேதம்" என்று இதை மட்டும் குறிப்பிட்டுச் சொன்னார்!
    கருவூர் சித்தரும், திருவரங்கத்து நம்பெருமாளைப் போற்றிப் பாடி, அவர் கையால் பிரசாதம் வாங்கினார்! அப்படியே ஒரு வம்பிலும் சிக்கிக் கொண்டார்! பதிவின் இறுதியில் பார்ப்போம் :)



    அன்று தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்)! மாமன்னன் இராசராசன், இனி வரப் போகும் தமிழ்ச் சமுதாயத்துக்கும் சேர்த்தே தந்த கலைப் பொக்கிஷம்!

    ஆனால் அன்று பார்த்து, சிவலிங்கம் நிறுவனம் ஆகவில்லை! (பிரதிஷ்டை)!

    பெருவுடையார் = பேருக்கு ஏற்றாற் போலே பெரிய பெரிய உடையார் தான்! பெரிய சிலை அல்லவா! அதற்கு முன்பு அப்படி ஒரு சிலையைச் சிற்பிகளும் செய்ததில்லை! அப்படியே செய்தாலும், அதைக் கருவறைக் குழியில் இறக்கியதும் இல்லை! அனுபவம் இன்மை! ஆனால் கும்பாபிஷேக (மூர்த்தி ஸ்தாபன) நாள் அதுவுமா இப்படி ஒரு தடங்கலா?

    சிவலிங்கத்தை உள்ளே இறக்கிய சில நிமிடங்களில், கனம் தாங்காமால், சிவலிங்கம் ஒரு பக்கமாய்ச் சாய்ந்து விட்டதே! கோணலான சிவலிங்கமா?
    ஐயகோ! இராஜராஜனுக்கு நெஞ்சே வெடித்து விடும் நிலைமை! கோயிலைப் பார்த்துப் பார்த்துக் கட்டியது இதற்குத் தானா?
    அஷ்ட பந்தனம் என்னும் அந்தக் கலவை கெட்டிப் பட மாட்டேங்கிறது! தலைமைச் சிற்பி, இராஜராஜப் பெருந்தச்சரான குஞ்சரமல்லனும் எவ்வளவோ போராடிப் பார்க்கிறார்! ஹூஹூம்!

    இதோ, கருவூரார் வந்து நிற்கிறார்! இராஜராஜனின் பெருமதிப்பைப் பெற்றவர்!

    தாம் கொண்டு வந்த மூலிகைப் பொருட்களைக் காய்ச்சி, கலவை செய்கிறார் கருவூரார்! அந்தணர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பு மக்களையும் பணியில் ஈடுபடுத்துகிறார்! புதிய கலவை காய்ச்சப்பட்டு, தொட்டி தொட்டியாக ஊற்றப்படுகிறது! கொதிக்கக் கொதிக்க, கருவறைக் குழிக்குள் ஊற்றப்படுகிறது!
    ஆகா! சிவலிங்கத்தின் மேலேயே கால் வைத்து ஏறிவிட்டாரே கருவூரார்! அதை முட்டி, மோதி, கட்டி, இழுத்துச் சமநிலைப் படுத்த...மருந்து இறுக, இறுக...

    தஞ்சைப் பெருவுடையார் நின்று விட்டார்! அஷ்டபந்தன மருந்து நின்று விட்டது! அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம்!!
    மன்னன் மனங்குளிர, மக்கள் மனங்குளிர, அடியார்கள் மனங்குளிர, ஆண்டவனும் மனங்குளிர்ந்தான்!


    பல காலம் கழித்து, தஞ்சையில் இருந்து கிளம்புகிறார் சித்தர்! பூலோக வைகுந்தம் என்ற போற்றப்படும் திருவரங்கம் நோக்கிச் செல்கிறார் கருவூர் சித்தர்! தன் சீடன் இடைக்காட்டுச் சித்தன், திருவாய்மொழி நூலை அப்படிச் சிலாகிக்கிறானே! தமிழ் வேதம்-ன்னு வேற சொல்லுறான்!

    அதுவும் வேதம் ஓத, குல உரிமை வேண்டும்-ன்னு சொல்லப்படுகிறதே! அப்படி இருக்க, ஒரு வேளாளச் சிறுவன்-மாறன் நம்மாழ்வான், தமிழ் வேதம் செய்தானா? அப்படி என்ன தான் இருக்கு அதுல? இன்னிக்கு அதையும் பார்த்து விடலாம்!

    அவர் திருவரங்கம் வந்து சேர்ந்தது தான் தாமதம்.......
    * தமிழோசை வேகமாய் முன் செல்ல,
    * இறைவன் பரபரத்து, தமிழின் பின் செல்ல,
    * இவர்கள் வேகத்துக்கு ஈடு கொடுக்க மாட்டாமல், வேத கோஷ்டி இறைவன் பின்னால் ஓடி வர...

    வீதியுலாவில், நம்மாழ்வாரின் சந்த ஓசையில் பெருமாளே மயங்கி, மாறனுக்குப் பின்னாலே செல்கிறான்! தொண்டர்கள் தலைவனைப் பின் தொடர்வார்கள்! இங்கே தலைவனோ, பயபக்தியுடன், தொண்டர்களைப் பின் தொடர்கிறானே?
    அநதக் காட்சியைக் கண்ணுக்கு நேராகப் பார்க்கிறார்! காதுக்கு நேராகக் கேட்கிறார் சித்தர்!

    அடங்கெழில் சம்பத்து -- அடங்கக் கண்டு "ஈசன்"
    அடங்கெழில் அஃதென்று -- அடங்குக உள்ளே!
    உள்ளம் உரை செயல் -- உள்ள இம் மூன்றையும்
    உள்ளிக் கெடுத்து இறை -- உள்ளில் ஒடுங்கே!!
    அற்றது பற்றெனில் -- உற்றது வீடு, உயிர்
    செற்றது மன்னுறில் -- அற்றிறை பற்றே!!!

    ஈரடிகளில் ஈர்த்து விட்டதே! சகல வேத ஞானமும் சட்டென்று புரிந்து விட்டதே! அதற்கு மேல் ஒன்றும் பேச முடியவில்லை கருவூராருக்கு!
    அரவணைத் துயிலும் மாயோன் அரங்கனைக் கண்குளிரத் தரிசிக்கிறார்!

    தரிசித்து முடித்து வெளியே வந்தால், அவர் காலடிகளில் ஒரு தாசி விழுகிறாள்...பேரு அபரஞ்சி! பேரழகி! அரங்கனைத் தரிசித்த மாத்திரத்தில், இப்படித் தான் ஆளனுப்பிக் கள்ளத்தனம் செய்வானோ? :) அவளோ சிரிக்கிறாள்!

    கரு ஊரில் சிக்காத கருவூரார், என்ன விஷயம்? என்பது போல் ஒரு பார்வையை வீசுகிறார்! சற்று முன் கேட்ட வேத கோஷத்தில், யோக சாதனையில், தனக்குள்ள சில ஐயங்களைத் தீர்க்கச் சொல்லிக் கேட்கிறாள் இவள்! ஆகா! இப்படியும் ஒரு தாசியா?
    பாட்டுக்கு நடனம் மட்டுமே ஆடாமல், அதன் பொருளையும் கேட்ட விதம் அவருக்கு மிகவும் பிடித்து விட்டது! அவள் ஆர்வத்தைப் பாராட்டி ஐயத்தை அங்கேயே தீர்த்து வைக்கிறார்!

    அடங்குக உள்ளே! உள்ளில் ஒடுங்கே!-ன்னு சித்த புருஷ லட்சணத்தை இப்படி ரெண்டே சொல்லில் சொல்லவும் முடியுமோ?
    அவளுக்கு விளக்கத்தை எடுத்துச் சொல்லச் சொல்ல, சித்தருக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி! மகிழ்வில் கடவுளையே அதட்டுபவர் அல்லவா கருவூரார்! முன்பு நெல்லையப்பர் படாத பாடு பட்டாரே இவரிடம்! இப்போதும் அதே தொனியில் கருவூர் சித்தர்..."ரங்கா, உன் கழுத்து மாலையை என்னிடம் கொடு"!



    தஞ்சைப் பெரிய கோயிலில், கருவூரார்-இராசராசன் ஓவியம்

    திருக்கழுத்து மாலை! பவழ வாய் கமலச் செங்கண்ணனின் பவழ மாலை கருவூரார் கைகளில் வந்து விழுகிறது!
    "அபரஞ்சி, என்னை வியப்பில் ஆழ்த்தி விட்டாய்! இதை என் பரிசாக வைத்துக் கொள்! நீ எப்போது நினைத்தாலும் நான் வருவேன்" என்று சொல்லி விட்டுக் கிளம்பி விட்டார்! சித்தர்கள் தான் ஓரிடத்தில் இருக்க மாட்டார்களே!

    மறுநாள் காலை... கோயிலுக்குள் வந்த அபரஞ்சியின் கழுத்தில் அரங்கப் பழவம்! அவள் மீது ஆளுக்கு ஒன்றாய் குற்றச்சாட்டு அடுக்குகிறார்கள்! பஞ்சாயத்து நடக்கிறது!
    கருவூரார் கொடுத்த பரிசு என்பதை அவள் சொல்ல...பிடி கருவூராரை! ஹா ஹா ஹா! காற்றைப் பிடிக்கத் தான் முடியுமா?

    அபரஞ்சி, கருவூராரை மனதால் வேண்டி, "இப்படி விளக்கம் சொல்லி இக்கட்டு கொடுத்து விட்டீர்களே சுவாமி", என்று அழுகிறாள்! கருவூரார் அங்கே மீண்டும் வந்து, மாயக் கள்வனைச் சாட்சிக்கு அழைக்கிறார்!
    அரங்கன் அசரீரியாய்ச் சாட்சி உரைக்க...திருவரங்கக் கோயில் ஸ்தனத்தார்கள், கருவூராரை நிற்க வைத்துப் பேசியமைக்கு மன்னிப்பு கேட்கிறார்கள்! கருவூரார் பின்னர் கருவூருக்கே திரும்புகிறார்!

    கருவூர் சித்தர் காட்டில் போய் இருக்காமல், சமூகத்திலேயே இருந்து விட்டார்! அவர் சொல்லும் கருத்துக்கள் வெட்டு ஒன்னு, துண்டு ரெண்டாக இருக்கு!
    ஆன்மீகப் போலித்தனங்களை அவர் சாடச் சாட, அவர் மேல் வெறுப்பும், பொறாமையும், பகையும் சொந்த ஊரிலேயே எழுகிறது! குறிப்பாகப் போலியாக நியமங்கள் செய்யும் சைவ அந்தணர்கள் சில பேர், அவர் மேல் அதீத பகைமை கொள்கின்றனர்!

    கருவூரார் ஒரு துர்வேத நிபுணர் என்று குறுநில மன்னனிடம் ஓதி ஓதி, மனதைக் கரைக்கிறார்கள்! மது-மாமிச படையல் வைப்பவர், வாம பூஜை செய்பவர் என்றெல்லாம் காட்ட வேண்டி, சில அத்வைதிகளே அவர் வீட்டில், மது-மாமிசம் ஒளித்து வைக்கின்றனர்! ஆனால் சோதனையில் அவை யாகத் திரவியங்களாக மாறி இருப்பது தெரிய வர, அந்த வைதீகர்களுக்குப் பெருத்த அவமானம்!

    அதிக ஆள் பலம், சிஷ்ய பலம் இல்லாத கருவூராரை எளிதாக அடித்துத் துவைத்து விடலாம் என்று அந்தப் போலி அந்தணர்கள் சிலர் கிளம்ப, சித்தர் சிரிக்கிறார்! பயந்து ஓடுவது போல் நடித்து ஆட்டம் காட்டுகிறார்! கரூர் ஆனிலையப்பர் கோயிலுக்குள் ஓடுகிறார்! பசுபதீஸ்வரர் = ஆனிலையப்பர்!
    அவர் கருவறைக்கு உள்ளேயே நுழைவதைக் கண்டு இவர்கள் இன்னும் சீற்றம் அடைய, "ஆனிலையப்பா!" என்று கூவிச் சிவலிங்கத்தை இறுக்கித் தழுவிக் கொள்கிறார் கருவூரார்!
    தஞ்சைப் பெரிய கோயிலில், கருவூர் சித்தர் சன்னதி!

    கருவில் ஊறாக் கருவூரார், இறைவனுடன் கலந்து மறைந்த காட்சி! 
    இன்றும் ஆனிலையப்பர் கோயிலில் கருவூராரின் சிற்ப வடிவம் உள்ளது!
    தஞ்சை பெரிய கோயிலிலும் அவரது சிலை வடிவம் பின்னாளில் பிரதிஷ்டை செய்யப்பட்டது!


    வாங்க, கதை முடிந்து, தேவாரத் தமிழிசை கேட்போம்! தேவாரத் தொகுப்பில், கருவூரார் பாடல்கள் ஒன்பதாம் திருமுறை!

    பத்து சிவத் தலங்களைப் பாடுகிறார் சித்தர்! இராஜராஜ சோழன் பால் வைத்த அன்பால், தஞ்சை இராச ராசேச்சரம், கங்கை கொண்ட சோழேச்சரம் ஆகிய தலங்களையும் பாடியுள்ளார்! மெட்டும், ராகங்களும் தானாகவே அமையும் இனிய இசைப் பாடல்கள்! "திருவிசைப்பா" என்று போற்றப் படுகிறது!

    அதில் ஒன்றைக் காண்போம்! கேட்போம்! இதோ சொல்லிக் கொடுக்கிறாரு, கூடவே சொல்வோம்!



    பவளமே மகுடம்! பவளமே திருவாய்!
    பவளமே திருவுடம்பு! அதனில்
    தவளமே களபம்! தவளமே புரிநூல்!
    தவளமே முறுவல் ஆடு அரவம்!
    துவளுமே கலையும்! துகிலுமே ஒருபால்!
    துடியிடை இடமருங்கு ஒருத்தி!
    அவளுமே ஆகில், அவரிடம் களந்தை
    அணிதிகழ் ஆதித்தேச் சரமே!

    * ஈசனின் ஜடா மகுடம், செவ்விதழ், உடம்பு = மூன்றுமே பவளம்! அப்படிச் செக்கச் சிவந்த சிவப்பு!
    * ஈசனின் மேனியில் பால் வெண்ணீறு, முப்புரி நூல், சிரித்து வளையும் பாம்பு = மூன்றுமே தவளம் (வெண்மை)! அப்படிப் பால் வெளுத்த வெளுப்பு!
    இப்படிச் சிவப்பும் - வெளுப்புமான கலவையில் சிவபெருமான் ஒரு பக்கமாய் மின்ன....

    * துவளும் மேகலை (ஒட்டியாணம்), சேலைத் துகில், துடிக்கும் இடுப்பு = இப்படி மூன்றுமான முக்கண்ணி, "ஒருத்தியாய்" நிற்கிறாள்! = அவள் இந்தப் புறம், அவனின் அந்தப் புரம்!
    * அவளே நின்று விட்ட படியால், இனி அவரும் நின்று விடுவார்! எங்கே?
    திருக்களந்தை என்னும் ஆதித்தேச்சரம்! நாகை மாவட்டம் திருத்துறைப்பூண்டிக்கு அருகில் உள்ள களப்பாழ் (களப்பாள்) என்ற ஊர்! அதுவே திருக்களந்தை!

    அங்கு தான் இப்படி ஒரு சிவ-சக்தி தரிசனத்தை நமக்குக் காட்டுவிக்கிறார் கருவூர் சித்தர்!
    பவளமே மகுடம்! தவளமே களபம்!!
    திருச்சிற்றம்பலம்! திருச்சிற்றம்பலம்!


    கருவூர் சித்தர் திருவடிகளே சரணம்!!

    56 comments:

    1. அருமையா இருக்குங்க. கருவூர்ச் சித்தரைப் பற்றித் தெரியாத தகவல்கள். நல்ல இசைக் கோர்ப்பு. நீங்க புதிய பதிவரா? தமிழிஷ்ல உங்களைப் பார்த்தது இல்லையே?
      Reply
    2. அருமை, கே.ஆர்.எஸ்! அரவம் என்றால் பாம்பு என்று புரிகிறது. அது என்ன "முறுவல் ஆடு "?
      Reply
    3. அப்பர்,சம்பந்தர், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகியோர்பாடிய பாடல்கள் மட்டுமே "தேவாரம்" என்கின்ற சிறப்புப் பெயர்பெறும். இந்தத்தேவாரங்களோடு பிறவற்றையும் சேர்த்தே திருமுறைப்பாடல்கள என நம்பியாண்டார் நம்பியால் தொகுக்கப்பட்டன. பிற்காலத்தில் சேக்கிழார் எழுதிய திருத்தொண்டர் புராணமும் பன்னிரண்டாந்திருமுறையாக சேர்க்கப்பட்டது.
      Reply
    4. மிக அழகாக சொல்லிருக்கீங்கண்ணா..
      Reply
    5. நண்பர் ரவி,
      கருவூர்த்தேவர் லிங்கத்தை நிறுத்திய செய்திக்கான இலக்கிய வரலாற்று சான்று ஏதாவது உள்ளதா?

      உடையாரில் பாலகுமாரன் இதை எழுதியிருந்தாலும் அவர் எழுதவதை வரலாற்று சான்றாகக் கருத முடியாது என்பதால் அப்போதே இது பற்றிய சிந்தனை வந்தது...
      Reply
    6. //Anonymous said...
      அருமையா இருக்குங்க. கருவூர்ச் சித்தரைப் பற்றித் தெரியாத தகவல்கள்//

      நன்றிங்க!

      //நல்ல இசைக் கோர்ப்பு//

      பாடுவது சத்குருநாத ஓதுவார்!

      //நீங்க புதிய பதிவரா?//

      ஆமாங்க! அடியேன் புதிய பதிவர் தான்! :)
      ....தமிழிஷில்!
      Reply
    7. //Expatguru said...
      அருமை, கே.ஆர்.எஸ்!//

      வாங்க Expatguru! நலமா?

      //அரவம் என்றால் பாம்பு என்று புரிகிறது. அது என்ன "முறுவல் ஆடு "?//

      தவளமே முறுவல் ஆடு அரவம் = முறுவல் என்றால் புன்முறுவல் போன்று மென்மை/லேசாக! மெலிதாய் நெளியும் பாம்பைத் தான் அப்படிச் சொல்கிறார்!

      //தவளமே களபம்//
      களபம் = பூசும் சாந்து/நறுமணம்...சீதக் களபச் செந்தாமரைப் பூம் என்ற விநாயகர் அகவல் ஞாபகப் படுத்திக்குங்க!
      Reply
    8. மிக நல்ல பதிவு. என் சிறு வயதில் கரூரில் இருந்தேன். நீங்கள் தந்திருக்கும் தகவல் மிகவும் நன்றாகவும், புரியும்படியும் உள்ளது. வியந்தேன். பசுபதீஸ்வரர் கோவில் இவ்வளவு சங்கதிகள் நிறைந்ததா என்று.
      Reply
    9. //துடிக்கும் இடுப்ப//

      துடி இடை என்பதற்கு உடுக்கை போன்ற இடை என்று தமிழாசிரியோர் சொல்லித் தந்ததாக ஞாபகம்.
      Reply
    10. தஞ்சை ராஜ ராஜனுடன் இருந்த கருவூர் தேவரும்,கரூரில் சித்தியடைந்த கருவூர் சித்தரும் ஒருவரா அல்லது வேறு வேறா? எது உண்மை என்பதை தெரிவிக்கவும்
      Reply
    11. //ஆதித்தன் said...
      அப்பர்,சம்பந்தர், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகியோர்பாடிய பாடல்கள் மட்டுமே "தேவாரம்" என்கின்ற சிறப்புப் பெயர்பெறும்//

      வாங்க ஆதித்தன்!
      நீங்க சொல்வது டெக்னிக்கலா சரி தான்! ஆனால் பொது மக்களின் பேச்சு வழக்கில் தேவாரம் என்பது அனைத்து திருமுறைப் பாடல்கள் என்று ஆகி விட்டது!
      தேவார, திருவாசக வகுப்புகள்-ன்னு தான் சொல்றாங்க! ஆனால் மூவர் பதிகங்கள் மட்டுமில்லாது, பிறர் பதிகங்களும், திருக்கோவையாரும் கூடச் சொல்லித் தராங்க அல்லவா!

      //இந்தத்தேவாரங்களோடு பிறவற்றையும் சேர்த்தே திருமுறைப்பாடல்கள என நம்பியாண்டார் நம்பியால் தொகுக்கப்பட்டன//

      இன்னொரு வியப்பான சேதி தெரியுமா ஆதித்தன்?
      அப்பர் சுவாமிகள் செய்தது மட்டும் தான் "தேவாரம்" என்பது!
      சம்பந்தர் செய்தது திருக்கடைக்காப்பு! சுந்தரர் செய்தது திருப்பாட்டு!

      அப்புறம் "தேவாரம்" என்பது மூவருக்கும் பொதுவாகி, இப்போ பன்னிரு திருமுறைக்கும் அதுவே பொதுப்பெயர் ஆகி விட்டது! :)

      திருமுறை
      1,2,3=திருக்கடைக்காப்பு (சம்பந்தர்)
      4,5,6=தேவாரம்(அப்பர்)
      7=திருப்பாட்டு(சுந்தரர்)
      8=திருவாசகம்/திருக்கோவையார் (மாணிக்கவாசகர்)

      9=திருவிசைப்பா/திருப்பல்லாண்டு(சேந்தனார், கருவூரார், கண்டராதித்தர்...முதலானோர்)
      10=திருமந்திரம்(திருமூலர்)
      11=பிரபந்தம்(காரைக்கால் அம்மை, நம்பியாண்டார் நம்பி, சேரமான் பெருமாள்...முதலானோர்)
      12=பெரிய புராணம்(சேக்கிழார்)
      Reply
    12. //Raghav said...
      மிக அழகாக சொல்லிருக்கீங்கண்ணா..//

      நன்றி ராகவ்!
      அழகாச் சொல்லி இருப்பது கருவூரார்! பவளம்-தவளம்-கவளம்-ன்னு அவர் தானே பாடி இருக்காரு! :)
      Reply
    13. //அறிவன்#11802717200764379909 said...
      நண்பர் ரவி,
      கருவூர்த்தேவர் லிங்கத்தை நிறுத்திய செய்திக்கான இலக்கிய வரலாற்று சான்று ஏதாவது உள்ளதா?//

      உம்...
      இலக்கியத்தில் இருக்கான்னு தேடிப் பார்க்கணும் அறிவன்!
      ஒன்பதாம் திருமுறையில் பெரிய கோயில் பற்றி பத்து பதிகங்கள் பாடுகிறார் கருவூரார்! அதில் ஏதாச்சும் சொல்லி இருக்காரா?

      //உடையாரில் பாலகுமாரன் இதை எழுதியிருந்தாலும் அவர் எழுதவதை வரலாற்று சான்றாகக் கருத முடியாது என்பதால் அப்போதே இது பற்றிய சிந்தனை வந்தது...//

      பாலகுமாரனும் சில ஆய்வுகளைச் செய்து தான் எழுதினார்! அந்த ஆய்வுகளை, வரலாற்றுக் கட்டுரைகளின் ஆசிரியர்களை, நூலின் முன்னுரையில் சொல்லியிருப்பார்! அங்கும் தேடலாம்!

      பொன்னியின் செல்வன் யாஹூ குழுமத்தில் இதற்குத் தனியாக ஒரு இழை ஓடியது!
      Reply
    14. //ராது said...
      மிக நல்ல பதிவு. என் சிறு வயதில் கரூரில் இருந்தேன். நீங்கள் தந்திருக்கும் தகவல் மிகவும் நன்றாகவும், புரியும்படியும் உள்ளது வியந்தேன்.//

      நன்றி ராது!

      //பசுபதீஸ்வரர் கோவில் இவ்வளவு சங்கதிகள் நிறைந்ததா என்று//

      ஹா ஹா ஹா! உங்கூரு கோயிலுங்க!
      ஆனிலையப்பரான பசுபதீஸ்வரர் கருவூரார் மனம் கவர்ந்தவர்! சைவ சித்தாந்தக் கொள்கை பசு-பதி-பாசம் என்பதற்கு வடிவமாய் விளங்குபவர்!

      ஒரு முறை திருச்சியில் இருந்து, முக்கொம்பு அணைக்கு வந்து, உங்க கரூர் ஆலயம் வந்திருக்கேன்! :)
      Reply
    15. //நான் விஜய்கோபால் said...
      //துடிக்கும் இடுப்ப//

      துடி இடை என்பதற்கு உடுக்கை போன்ற இடை என்று தமிழாசிரியோர் சொல்லித் தந்ததாக ஞாபகம்//

      வாங்க விஜய்கோபால்!
      துடி என்பதற்குப் பல பொருட்கள் இருக்குங்க!
      துடி = கொட்டும் கருவி (முரசு போல), முருகன் மேல் ஆடும் ஆட்டம், வளைந்த தூதுவளைக் கொடி!

      நான் இக்காலத்துக்கு ஏற்ற மாதிரி "துடிதுடிப்பான துடியிடை"-ன்னு பொருள் கொண்டேன்! சினிமாவில் துடிக்கும் துடியிடையை காட்டுவாங்களே! :)
      Reply
    16. //enpaarvaiyil said...
      தஞ்சை ராஜ ராஜனுடன் இருந்த கருவூர் தேவரும்,கரூரில் சித்தியடைந்த கருவூர் சித்தரும் ஒருவரா அல்லது வேறு வேறா? எது உண்மை என்பதை தெரிவிக்கவும்//

      ஹா ஹா ஹா!
      இந்தச் சந்தேகம் உங்களுக்கு வரக் காரணம் என்னங்க?

      சித்தர்கள் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் சதுரகிரி புராணம், மற்றும் பதினெண் சித்தர் பெரிய ஞானக்கோவை போன்ற இன்ன பிற நூல்களின் படி...இருவரும் ஒருவரே!

      இராஜராஜனின் சமகாலத்தவர் தான், கருவூரிலும் சித்தி அடைந்த சித்தர்!

      இது பற்றிய பல விதமான வரலாற்று உரையாடல்களை பொன்னியின் செல்வன் யாஹூ குழுமத்தில் படிச்சிப் பாருங்க! உங்களைப் போலவே இன்னும் சிலரும் இதே கேள்வியை எழுப்பி இருக்காங்க! :)
      Reply
    17. இரவி, தேவாரம் = திருமுறைகள் என்ற கேள்வியைக் கேட்க வந்தேன். ஏற்கனவே அதைப் பற்றி பேசியிருக்கிறீர்கள்.

      தஞ்சை பெரிய கோவிலில் முதலில் இலிங்கத் திருவுருவை நிறுவிவிட்டு அப்புறம் தான் திருக்கோவிலை அதனைச் சுற்றி கட்டினார்கள் என்று படித்த நினைவு. பிராண பிரதிட்டை வேண்டுமானால் குடமுழுக்கின் போது நிகழ்ந்திருக்கலாம்; ஆனால் அட்டபந்தனம் கோபுரத்தை எழுப்புவதற்கு முன்னரே நடந்துவிட்டது என்று படித்த நினைவு. இல்லையேல் குறுகிய கருவறை வாசல் வழியே இலிங்கத்தை உள்ளே கொண்டு செல்ல இயன்றிருக்காது.
      Reply
    18. அறியாதனவற்றை அருமையாக அறிய வைக்கும் அரிய தம்பீ வாழ்க!
      Reply
    19. //குமரன் (Kumaran) said...
      தஞ்சை பெரிய கோவிலில் முதலில் இலிங்கத் திருவுருவை நிறுவிவிட்டு அப்புறம் தான் திருக்கோவிலை அதனைச் சுற்றி கட்டினார்கள் என்று படித்த நினைவு//

      எங்கே படித்தீர்கள் குமரன்? கொஞ்சம் விவரம் தாருங்களேன்!

      //பிராண பிரதிட்டை வேண்டுமானால் குடமுழுக்கின் போது நிகழ்ந்திருக்கலாம்;ஆனால் அட்டபந்தனம் கோபுரத்தை எழுப்புவதற்கு முன்னரே நடந்துவிட்டது என்று படித்த நினைவு//

      அப்படிச் செய்ய சிவாகமங்களில் இடம் உண்டா?
      அட்டபந்தனம் செய்த பின், பூசையில்லாமல் இருக்கலாமா?
      சிற்பிகளும், பலரும், வேலையின் பொருட்டு செய்யும் பூச்சுகள், மேல் ஏறி நிற்றல், குப்பை போன்றவை எல்லாம் நடக்குமே! எப்படிச் சமாளித்தார்கள்?

      //இல்லையேல் குறுகிய கருவறை வாசல் வழியே இலிங்கத்தை உள்ளே கொண்டு செல்ல இயன்றிருக்காது//

      பெரிய கோயில் வாசல் பெருசாச்சே! படத்தில் பாருங்களேன்!

      மேலும், பெருவுடையார் முழு உருவச் சிலை இல்லை! இலிங்கம் தனி! ஆவுடையார் தனித் துண்டுகள் ஒன்றிணைத்துப் பூட்டியது! அதனால் பார்ட் பை பார்ட் ஆகவும் கொண்டு சென்றிருக்க முடியும்
  2. கெபி அக்கா உட்பட இன்னும் பல பேரின் கவனத்துக்கு:

    ஆழ்வார்கள் பட்டியலைக் காட்டிலும் சைவ நாயன்மார்கள் தொகுப்பு பிடிச்சிருக்கு! என்று சொல்லும் அற நேர்மையும் என்னிடம் உண்டு!

    //பாடணும் என்ற அவசியம் இல்லாமல், தொண்டு மட்டுமே செய்தவர்களும், 63 நாயன்மார்களுள் வைக்கப்பட்டது தான் சிறப்பு!//-ன்னு என்னால் காய்தல் உவத்தல் இன்றி ஓப்பனாச் சொல்ல முடியும்!

    அப்படி எத்தனை சைவர்கள் இங்கே சொல்வீர்கள்? சொல்லுங்க பார்ப்போம்!

    குறுகிய வளையக் கும்மி, இனி இங்கே செல்லவே செல்லாது!
    அது நான் பெரிதும் மதிக்கும் கெபி அக்காவுக்கே செல்லவில்லை என்னும் போது...
    மற்றவர்கள், அனானிகள் எல்லாம் இனி விழிப்பாக இருக்குமாறு சொல்லிக் கொள்கிறேன்!
    Reply
  3. அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும்...குறிப்பாக ஒரு சாராருக்கும் சொல்லிக் கொள்கிறேன்:

    திருப்பாணாழ்வாரைக் கல்லால் அடிச்சி, ரத்தம் கொட்டியது! அடிச்சவர் ஒரு வைணவ அந்தணர்! லோக சாரங்க பட்டர்! கோயில் பட்டர்!

    இதை மறைக்காமல் ஒப்புக் கொண்டு, தவறுக்கு வருந்தும் நேர்மை வைணவத்தில் இருக்கு!
    சேச்சே, லோக சாரங்கர் அடிக்கலை, கோவமாப் பேசினாரு, அப்பறம் வருந்தினாரு-ன்னு எல்லாம் கதை கட்டலை! வைணவத் தலைமை அந்தணரைக் "காப்பாற்றும்" முயற்சியிலும் இறங்கலை!

    அடிச்சவரும் அவரே, பிற்பாடு உணர்ந்து, தன் தோள் மேல் தூக்கி வந்தவரும் அவரே! அதனால் முனி வாகனம்-ன்னு பேரே வந்துடிச்சி! - பாணர் குலத்தானுக்கு, ஒரு அந்தணன் வாகனமா?-ன்னு யாரும் சங்கோஜப் படுவது இல்லை! "போலியான தன்னடக்கம்"-ன்னும் சொல்வதில்லை!

    மனசாட்சிக்கு உண்மையா யோசிச்சிப் பாத்தா புரியும்!
    இப்படியான அற நேர்மை இருந்தா ஆன்மீகம் தழைக்கும்!


    குறுகிய மனசுல, எதையோ காப்பாத்துவதாய் நினைச்சிக்கிட்டு, திருக்கதைகளில் புனைவு ஏத்திக்கிட்டே இருந்தா நந்தனார் கதை போலத் தான் முடியும்! இங்கே கேட்டாரு பாருங்க ஒரு அனானி, அது போலப் பூசி மெழுகிடலாம்!

    அப்பறம் ஒரு தந்தை பெரியார் தான் வந்து எல்லாத்தையும் ஒடைச்சிப் போடுவாரு! அதைச் சைவப் பெருமக்கள் கொஞ்சம் யோசிச்சிப் பார்க்கணும்!

    * அப்படியெல்லாம் யோசிச்சா,
    * அன்பே சிவம்-ன்னு யோசிச்சா,
    * சைவம்-ன்னு நாம ஏற்படுத்தியதை விட, நம் சிவபெருமான் பெரியவர்-ன்னு யோசிச்சா...
    * சிவனுக்காகச் சைவம், சைவத்துக்காகச் சிவன் இல்லை-ன்னு யோசிச்சா...

    அப்போ "சிவாலயக் கருவறைக்கு உள்ளேயும்" தமிழ் முழங்கும்!
    மேன்மை கொள் சைவ நீதி உலகெலாம் தழைக்கும்!

    அந்த நாளும் வந்திடாதோ?

    இப்படிக்கு,
    "சிவ" கோத்திரம், சுவாதீ நட்சத்திரம், KRS!
    Reply

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக