ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

மேலவளவு அம்பலக்காரர் சாதி செய்த கொலை

aathi tamil aathi1956@gmail.com

26/12/15
பெறுநர்: எனக்கு
தமிழகத்தில் 1994இல் இயற்றப்பட்ட தமிழ் நாடு ஊராட்சிகள் சட்டப்படியான
ஊராட்சி அமைப்புகளின் தேர்தல், 1996 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்
நடைபெற்றது. குறிப்பிட்ட அளவிலான ஊராட்சி அமைப்புகளில் தலைவர் பதவி,
பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அவ்வகையில், மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்திலுள்ள மேலவளவு ஊராட்சித்
தலைவர் பதவி, பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கீடு
செய்யப்பட்டது. அது நாள்வரை தலைவர் பதவியை அனுபவித்து வந்த அம்பலக்காரர்
சமூகத்தினர் இந்த ஒதுக்கீட்டை ஏற்க மறுத்தனர். தலைவர் பதவிக்கான தேர்தல்
நடத்தப்பட்டபோது,
இரண்டு முறை அம்பலக்கார சமூகத்தினர் கலவரம் ஏற்படுத்தி தேர்தல்
நடைபெறவிடாமல் தடுத்தனர். இதில் ஒருமுறை வாக்குப் பெட்டியையே தூக்கிச்
சென்றுவிட்டனர். மூன்றாவது முறையாக நடைபெற்ற தேர்தலில் தலித் மக்களைப்
பங்கேற்கச் சொல்லி, மாவட்ட நிர்வாகம் பல்வேறு உறுதியளிப்புகளுடன்
வேண்டியதன் பேரில் போட்டியிட்ட முருகேசன் தலைவராகத்
தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முந்தைய தேர்தல் கலவரத்தில் ஆதிக்கச் சாதியினரால் தீ வைத்து
பாழ்படுத்தப்பட்ட தலித் மக்களின் குடிசை வீடுகளுக்கு இழப்பீடு வழங்கக்
கோரி, 30.06.1997 அன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு
அளித்துவிட்டு மேலவளவு நோக்கி பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்த
முருகேசன், துணைத் தலைவர் மூக்கன், முருகேசனின் தம்பி ராஜா உட்பட 6 பேர்
மேலவளவுக்கு அருகே நெருங்கும்போது, பேருந்தை வழிமறித்த 40க்கும்
மேற்பட்டோர் அடங்கிய அம்பலக்காரர்களின் வன்முறைக் கும்பலால் பட்டப்பகலில்
படுகொலை செய்யப்பட்டனர்.
முருகேசனின் தலை தனியே துண்டிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டது. “தலை
இருந்தால்தானே தலைவனாக இருக்க முடியும்; தலைவனாக வரும் எந்த தலித்தின்
தலையும் தப்பாது” என்பதுதான் கொலையாளிகளின் செய்தியாக இருந்தது.
இப்படுகொலைக்குக் காரணமானவர்கள் என 40 நபர்கள் மீது குற்றப்பத்திரிகை
தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணைக்கு முன்பும், வழக்கு
விசாரணையின்போதும், அதன் பின்னர் சென்னை உயர் நீதிமன்றத்தில்
மேல்முறையீடுகள் தாக்கல் செய்யப்பட்டபோதும், அம்மேல் முறையீடுகளின் மீதான
விசாரணையின்போதும் இவ்வழக்கை வலுவிழக்கச் செய்ய ஆதிக்க சாதியினர் கையாண்ட
சூழ்ச்சிகள் பலப்பல. அவர்களின் பொருளாதார, ‘சமூக' பலம்
இச்சூழ்ச்சிகளுக்கு துணை புரிந்தது.
நீதித்துறையும் இச்சூழ்ச்சிகளுக்குத் தப்பவில்லை. இச்சூழ்ச்சிகளையெல்லாம்
காலவரிசைப்படி தொகுத்து விளக்கி வழக்குரைஞர் குழு ‘நீதியைத் தேடும்
மேலவளவு வழக்கு' என்ற தலைப்பில் வெளியிட்ட துண்டறிக்கை, தலித் முரசில்
விரிவாகப் பதிவு செய்யப்பட்டது.
வழக்கு விசாரணையின் முடிவில் 17 நபர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கியும், 23
நபர்களை குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்தும் சேலம் முதன்மை அமர்வு
நீதிமன்றம் 26 சூலை 2001 அன்று தீர்ப்பளித்தது. விசாரணை நீதிமன்றத்தால்
தண்டனை விதிக்கப்பட்ட 17 நபர்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை
எதிர்த்து, சென்ன உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடுகள் செய்தனர்.
வழக்குச் சம்பவத்தில் காயமடைந்த தலித் மக்களின் சார்பில் 23 நபர்களின்
விடுலையை எதிர்த்தும், அனைத்துக் குற்றவாளிகள் மீதும் சார்த்தப்பட்ட
‘வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகளின்படியான குற்றச்சாட்டுகள்
நிரூபிக்கப்படவில்லை' என்ற விசாரணை நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்தும்
குற்றவியல் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இவற்றை ஒருங்கே விசாரணை செய்த சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் பி.
சதாசிவம் (தற்பொழுது உச்ச நீதிமன்ற நீதிபதி) மற்றும் என். பால்
வசந்தகுமார் ஆகியோர் அடங்கிய ஆயம் 19.04.2009 அன்று விசாரணை
நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.
வழக்கில் விசாரணை செய்யப்பட்ட சாட்சிகளின் சாட்சியங்களின் அடிப்படையில்,
இப்படுகொலை சாதியப் பகைமையின் பின்னணியில்தான் நிகழ்ந்துள்ளது என்பதை
உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்ட போதிலும், விசாரணை
நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட நபர்களை தண்டிக்காமல் விடுவித்தது. இது
குறித்து அரசுத் தரப்பு மேல்முறையீடு செய்யாததாலும், சம்பவம் நிகழ்ந்து
முழுமையாக 9 ஆண்டுகள் கடந்துவிட்ட அந்நிலையில் இவ்வழக்கை மீண்டும்
விசாரணை நீதிமன்றத்திற்கு அனுப்பி விசாரிக்க உத்தரவிட விரும்பவில்லை
என்று கூறி உயர் நீதிமன்றம், காயமடைந்தோர் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட
மனுக்களை தள்ளுபடி செய்தது.
தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்த உயர் நீதிமன்றத் தீர்ப்பை
எதிர்த்து 17 குற்றவாளிகளும் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தனர்
22.10.2009 அன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் வி.எஸ். சிர்புர்கர்
மற்றும் தீபக் வர்மா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற ஆயம், உயர்
நீதிமன்றம் உறுதி செய்த விசாரணை நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்து,
குற்றவாளிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி
செய்துள்ளது.
இவ்வழக்கில், சம்பவம் குறித்து தாக்கல் செய்யப்பட்ட முதல் தகவல்
அறிக்கையின் வரிசை எண்ணில் முரண்பாடு இருப்பதால், முதல் தகவல் அறிக்கைப்
புத்தகத்தை முன்நிலைப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டும் அரசுத் தரப்பு
முன்னிலைப்படுத்தத் தவறிவிட்டதால், வழக்கின் முதல் தகவல் அறிக்கை
பொய்யாகத் தயாரிக்கப்பட்டதாகவும் எனவே, வழக்கின் அடிப்படையே
அய்யத்திற்குரியதாக உள்ளதாகவும் தண்டிக்கப்பட்டோர் சார்பில்
வாதிடப்பட்டது.
முன்னெப்போதுமில்லாத வகையில் நடைபெற்ற படுகொலை என்ற அடிப்படையிலும்,
இச்சம்பவம் அப்பகுதியில் ஏற்படுத்திய குழப்பச் சூழ்நிலையையும்,
இப்படுகொலை ஏற்படுத்திய ஒட்டுமொத்த அதிர்ச்சியையும் கணக்கில் கொண்டு
பார்க்கும்போது, முதல் தகவல் அறிக்கைப் புத்தகம் முன்னிலைப்படுத்தப்படாத
ஒரே காரணத்திற்காக இவ்வழக்கின் முதல் தகவல் அறிக்கையை ஏற்கக் கூடாது
என்று வாதம் சரியல்ல; ஏற்க முடியாது என்று கூறி உச்ச நீதிமன்றம்
இவ்வாதத்தை நிராகரித்துள்ளது.
மேலும், முதல் தகவல் அறிக்கைப் புத்தகத்தை நீதிமன்றத்தில்
முன்னிலைப்படுத்த முடியாத சூழ்நிலை மற்றும் காரணங்களை விளக்கி, காவல்
துறை உயர் அலுவலர் ஆணையுறுதிப் பத்திரம் தாக்கல் செய்துள்ளதையும்
குறிப்பிட்டுள்ள உச்ச நீதிமன்றம், முதல் தகவல் அறிக்கைப் புத்தகத்தை
உள்நோக்கத்துடன் மறைத்து வைத்திருக்கவும் வாய்ப்புள்ளபடியால் இத்தகைய
வாதத்தை ஏற்க முடியாது என்று கூறியுள்ளது உச்ச நீதிமன்றம்.
மேலும், குற்ற சம்பவம் நடைபெற்றது குறித்து வருவாய்த் துறை அலுவலர்களான
மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மேலூர் வட்டாட்சியர், அரசுக்கு
அனுப்பியிருந்த அறிக்கைகளில் சில குற்றவாளிகளின் பெயர்கள் இடம்
பெறாததால், அவர்கள் பின்னர் பொய்யாக வழக்கில் சேர்க்கப்பட்டதாகவும்
வாதிடப்பட்டது.
வருவாய்த்துறை அலுவலர்கள் புலன் விசாரணை அதிகாரியுடன் இணைந்து செயல்பட்டு
அந்தப் புலன் விசாரணையின் ஒரு பகுதியாக அந்த அறிக்கையை கருத முடியாது
என்று கூறி, இவ்வாதத்தையும் உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்து உயர்
நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்துள்ளது.
கீழ்வெண்மணி வழக்கிலிருந்து மேலவளவு வழக்கு வரையிலான நீதிக்கான பயணம்
நீண்ட நெடியதாகவும், பல்வேறு எதிர்ப்புகளையும் சவால்களையும்
துரோகங்களையும் சந்தித்தாக அமைந்துள்ளது.

முத்தரையர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக