ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

காட்டை உருவாக்கியவர் தேக்கு முதலீடு வீரப்பன் வேளாண்மை விவசாயம் பொருளாதாரம் புதுமுயற்சி மரம் வீரப்பனார்

aathi tamil aathi1956@gmail.com

17/10/15
பெறுநர்: எனக்கு
Anbu Jeyaraj
‘மாண்புமிகு’ மரம் தங்கசாமி!
'தங்கசாமி' என்று யாராவது பெயரைச் சொல்லி அழைத்தால் திரும்பிப்
பார்க்காமல் கூட நிற்பார். ஆனால், அருகில் நின்று 'மரம்' என்று ஒரு
வார்த்தையை மெல்ல உச்சரித்து பாருங்கள், மின்னல் வேகத்தில் உங்கள் பக்கம்
அவரின் தலை திரும்பும். அவர்....? 'மரம்' தங்கசாமி!
வெயில் நுழையாத அடர்ந்த ஒரு குட்டிக் காடு. முள் மரங்கள் தொடங்கி சந்தன
மரங்கள் வரை வகைப்படுத்த முடியாத அளவில் மரங்கள் மண்டிக்கிடக்கின்றன.
காட்டுக்கு நுழைவாயிலாக இருக்கிறது தங்கசாமியின் வீடு. அவருக்கான
விசுவாசமாகவோ... என்னவோ... அவருடைய வீட்டுக்கு போட்டிபோட்டுக் குடை
பிடித்துக் கொண்டிருக்கின்றன வாசலில் இருக்கும் முற்றிய மரங்கள்.
காட்டுக்குள்ளே அடியெடுத்து வைக்கிறபோதே மனசுக்குள் குளுமை மண்டியிட்டு
உட்கார்ந்து கொள்கிறது. நாம் தேடி வந்திருக்கும் விஷயம் தெரிந்ததும் உற்ற
உறவினரைக் கட்டிக் கொள்வது போல் ஓடி வந்து அணைத்துக் கொள்கிறார்
தங்கசாமி.
இத்தனைக்கும் காவிரியோ... தாமிரபரணியோ பொங்கிப்பாயும் நதி தீரத்தில்
வசிப்பவரல்ல தங்கசாமி... வானம் பார்த்த பூமிகளில் ஒன்றான புதுக்கோட்டை
மாவட்டத்தில் கீரமங்கலம் அருகே உள்ள சேந்தன்காடு என்ற குக்கிராமத்தில்
தான் இப்படி ஒரு காட்டைக் கட்டி வளர்த்திருக்கிறார்.
''எது வாழ்க்கையோட அடிநாதம்னு தெரியாம இந்த உலகமே பரபரப்புல ஓடிக்கிட்டு
இருக்கு. இந்த நேரத்தில மண்ணுக்கும் பயிருக்கும் மதிப்புக் கொடுத்து
'பசுமை விகடன்' வெளிவர்றது தெரிஞ்சு மனசு குளிர்ந்து போயிடுச்சு.
நாமெல்லாம் ஒரே குடும்பம் தம்பி'' என முதல் பார்வையிலேயே முற்றிய
பாசத்தோடு பேசுகிறார் தங்கசாமி.
''சின்ன வயசிலிருந்தே மரம், செடி, கொடிகள் மேல எனக்கு அளவில்லாத அன்பு.
இந்த அன்பு எப்படி உண்டாச்சுனு கேட்டா, 'எனக்கு ரெண்டு கண்ணும்... பெரிய
மனசும் இருக்கிறதால உண்டாச்சு’னுதான் சொல்வேன். ஆமாங்க.. கண்ணு மேல கை
வைச்சுப் பார்க்கிற அளவுக்கு தலை விரிச்சு நிற்கிற மரங்கள்.. மலை மாதிரி
படர்ந்து கிடக்கிற முறுக்கு மீசை மரங்கள்.. பூமிப் பயலோட இடுப்பில
சுத்திகிட்ட அருணா கொடி மாதிரியான செடி, கொடிகள்.. கண்ணுக்குள்ள நுழைஞ்சு
மனசை பிடிச்சிக்கிற பூச்செடிகள்னு நம்மளை சுத்தி இருக்கிற பிரமிப்பான
அழகை மனசார நெனச்சம்னாலே மரஞ்செடி கொடிக மேல நமக்கு தன்னால பாசம்
பொத்துக்கிட்டு வந்திடும். ஆனா, இப்ப எந்தப் பய மக்க அப்படி ஆசையா மண்ணு
மரங்களை நெனைச்சுப் பார்க்கிறாங்க? பணம், புகழ், பரவசம்னு தேடி
அலையிறவங்க கண்ணிருந்தும் குருடர்களாகிட்ட
ாங்க'' என சமூகத்தின் மீதான கோபத்தை நம்மிடத்தில் இறக்கி வைத்து விட்டு,
தன் காட்டுக்குள் நடை போடுகிறார் நம்மையும் அழைத்துக்கொண்டு.
கொஞ்சமும் வளைவு இல்லாமல் நெட்டுக்குத்தாக நீண்டு பருத்திருக்கும்
தேக்கு.. பழங்களை முதுகில் சுமந்திருக்கும் பலா.. கிளைகளைப் பரப்பி
வியாபித்துக் கிடக்கும் மா.. என்று வகைவகையாக சுமார் நான்காயிரத்துக்கும்
மேற்பட்ட மரங்கள், பதினைந்து ஏக்கர் நிலத்தில் விரவிக் கிடக்கின்றன.
குட்டி சரணாலயம் போல் விதவிதமான பறவைகள் காட்டுக்குள் இசைக்கச்சேரி
நடத்துகின்றன.
''இங்க 190 ரக மரங்களும், 125 ரக மூலிகைகளும் பரவிக் கிடக்கு. தேக்குக்கு
நிகரா சந்தனமும், மகாகனி மரங்களும் வளர்ந்திருக்கு. வேம்பு, பாலை,
மனோரஞ்சிதம், பெரு, செஞ்சந்தன மரம், ஈட்டி மோகினி, குமிள், பொரிசி,
பதிமுகம்னு ஏராளமான மரங்கள் இங்கே கிடக்கு. இத்தனைக்கும் இதுகளைக்
காவந்து பண்ண நான் பெரிசா ஏதும் செய்யல. மழை பேய்ஞ்சாதான் தண்ணீ..
குப்பைதான் உரம்னு அதுவாத்தான் வளர்ந்துகிட்டிருக்கு. மண்ணையும்
மரங்களையும் நாம சீரழிக்காம இருந்தாலே போதும். அது நமக்கு வேண்டிய
அத்தனையையும் தேடிக் கொடுத்துடும்.
எட்டாவது படிக்கிறப்பதான் முதன்முதலா மரக் கன்னுகளை நட ஆரம்பிச்சேன்.
நட்டதும் நாலுகால் பாய்ச்சல்ல அதுங்க வளர்ந்த வேகத்தைப் பார்த்துட்டு,
மரக் கன்னு நடுற வேலையில தீவிரமா இறங்கினேன். என்னோட காட்டுல நட்டு
வெச்சிருக்கும் மரங்கள் மட்டுமில்லாம, அரசு அலுவலகம், பள்ளிக்கூடம்னு
ஆயிரக்கணக்கான மரங்களை நட்டிருக்கேன்.
என்னோட கல்யாணத்தன்னிக்கு நல்ல நேரம் நெருங்குதுனு எல்லாரும் தாலி கட்ட
அவசரப்படுத்தினாங்க. நானோ 'நல்ல நேரம் கிடக்கட்டும்.. ஆனா, எங்களுக்கு
நல்ல காலம் உருவாகணும்னா மரக்கன்னு நட்டுட்டுத்தான் மாலை போடுவேன்’னு
உறுதியா சொல்லிட்டு, என் பக்கத்தில உட்கார்ந்திருந்த பொண்ணை
அழைச்சுக்கிட்டு நேரா மரம் நட வந்திட்டேன். ரெண்டு பேரும் சேர்ந்து
மாங்கன்னு நட்டோம். நாப்பது வருஷமாகிப்போச்சி... இன்னிக்கு அந்த மாமரம்
எவ்வளவு உசத்தியா நிற்குதுனு பாருங்க'' என்று ஆச்சர்யம் பொங்க, அந்த
மரத்தைக் காட்டுகிறார். படு பருமனாக வளர்ந்து செழித்திருக்கிறது அந்த
மாமரம்.
இந்திராகாந்தி- தேக்கு, நேரு- சந்தனம், காந்தி-தீக்குச்சி மரம்,
எம்.ஜி.ஆர்.- தேக்கு மரத் தோப்பு என திரும்பிய பக்கமெல்லாம் பசுமைக்
கூட்டம். அதைப்பற்றியெல்லாம் சொல்லிக் கொண்டே வந்தவர், ஒரு பலா
மரத்திலிருந்து முற்றிய பலாப் பழம் ஒன்று, எலுமிச்சைப் பழங்கள் சில,
நான்கு வாழைப் பழங்கள் என்று பறித்து காட்டுக்குள்ளேய
ே நமக்கு 'கனி’வான விருந்து படைக்கத் தொடங்கி விட்டார்.
''தீப்பட்ட உணவு... தெம்பு தராதுனு சொல்ற மாதிரி, செயற்கையா பழுக்க
வைக்கிற பழங்களும் நமக்கு எந்தப் பலனையும் தராது. இயற்கையை நம்ம
உள்ளங்கைக்குள்ள வெச்சுக்கிட்டு நாம ஏன் செயற்கை முறையில காய், கனிகளைத்
தேடி அலையணும்?'' என்று வேதனையின் விளிம்பில் நின்றபடி சொல்லும்
தங்கசாமி,
''மத்திய-மாநில அமைச்சர்கள் என்னைப் பாராட்டி நடத்துற விழாக்களில் கூட
'மாண்புமிகுங்கிற வார்த்தையை மந்திரிமார்களுக்கு பயன்படுத்துறது தப்பு.
அதை மக்களுக்காகவே பிறப்பெடுத்திரு
க்கிற மரங்களுக்குத்தான் அடைமொழியா சொல்லணும்’னு வெளிப்படையாவே பேசுவேன்.
சின்னவயசுப் பிள்ளைகளிடம் மரம் வளர்ப்பு பற்றிய ஆர்வத்தை
உண்டாக்கணும்கிறதுதான் என்னோட பெரிய ஆசை. வருங்கால தலைமுறையை
ஆர்வப்படுத்தினா
லே இயற்கையோட அபாய அழிவுகளைத் தடுத்திட முடியும்கிறது என்னோட நம்பிக்கை''
எனச் சொல்லும் தங்கசாமி, சிறு வயதினரை வசீகரிக்க மரங்கள் சம்பந்தமான
பாடல்களையும் சுயமாகவே எழுதிப்பாடுகிறார்.
''ஏ... சின்னச் சின்னப் பிள்ளைங்களே..
எஞ்சேதியைக் கொஞ்சம் கேளுங்களேன்...
பொறந்து விழுந்த தொட்டிலு..
பொறண்டு படுக்கிற கட்டிலு..
எல்லாமே மரத்தாலதானடா.. மரம்
இல்லாட்டி நாம பொணத்தாளுதானடா..
மரக்கன்னு நட்டு வச்சா நாமெல்லாம் மகராசி
மரம் இல்லாம போனா என்னாகும் நீ யோசி
மரங்களும் செடிகளும்தான் உங்க சாமி..
மனசு வைக்க கெஞ்சுறேன்டா இந்த தங்கசாமி..''
-ஏக்கத்தோடு பாடும் தங்கசாமியின் குரலுக்குக் கோரஸ் பாடுவது போல்,
வேகமாய் தலையசைத்து ஆடுகின்றன மொத்த மரங்களும்!
படங்கள்: எ.பிரேம்குமார்
கோடீஸ்வரர்!
காடு வளர்ப்பில் ரொம்ப தீவிரமாக தங்கசாமி இறங்கியதைப் பார்த்து, 'நாலு
பயிரைப் போட்டோமா... நாலு காசைப் பாத்தோமானு இல்லாம... அவனே அவனுக்கு
அழிவைத் தேடிக்கிறான்' என்று சிலர் சொல்லியிருக்கிறார்கள். அவர்களெல்லாம்
இப்போது வாயடைத்துப் போய் நிற்கிறார்கள். ''வர்ற 25-ம் தேதி என்
பையனுக்கு கல்யாணம் வெச்சிருக்கேன். அந்த செலவுக்குக் கூட ஏழு தேக்கு
மரங்களை வித்துத்தான் ரெண்டு லட்ச ரூபாய் திரட்டினேன். சுவிஸ் பேங்க்ல
பணம் போட்டா கூட இந்தளவுக்கு உடனே பணம் எடுக்க முடியாது. அந்த அளவுக்கு
என்னோட மரங்கள் என்னை இப்ப கோடீஸ்வரனாக்கியிருக்கு. ஒரு மரத்தை
வெட்டினேன்னா அதுக்கு பதிலா... ஒண்ணுக்கு ரெண்டா மரக் கன்னுங்களை நட்டு
வெச்சிடுவேன். 'குழந்தை பிறக்கிறப்ப அதோட ஞாபகமா ரெண்டு மரக் கன்னுகளை
நட்டு வையுங்க. நாம தோத்துப் போயிட்டாலும் நாம நட்டு வெச்ச மரங்கள் நம்ம
பிள்ளைகளைக் காப்பாத்திடும்’னுதான் எல்லோருக்கும் அறிவுரை சொல்லிக்கிட்டு
இருக்கேன்'' எனச் சொல்லும் தங்கசாமி, தன் மகனின் திருமண விழாவுக்கு
வருபவர்களுக்கு பரிசளிக்க மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மரக் கன்றுகளை
தயார் செய்து வைத்திருக்கிறார்!
வீரப்பனுக்கு ஒரு மரம்!
தங்கசாமியின் காட்டில் தென்புற வாசலில் ஆளுயர சந்தன மரக் கன்று ஒன்று
நிற்கிறது. அதைச் சுட்டிக் காட்டிய தங்கசாமி, ''இது, சந்தனக் காட்டு
மன்னனான வீரப்பனின் நினைவு நாளன்னிக்கு நடப்பட்ட மரம். அவன் நல்லவனோ...
கெட்டவனோ அந்த விவாதத்துக்குள்ள நான் போகலை. ஆனா, வீரப்பன்
கொல்லப்பட்டதுக்குப் பின்னால ஆயிரமாயிரம் மரங்கள் தமிழக-கர்நாடகக்
காடுகள்ல வெட்டிக் கடத்தப்படுது. அதைத் தடுக்க நாதியில்ல'' என்கிறார்
ஆதங்கம் பொங்கியவராக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக