ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

ஆஸ்திரேலியா தமிழர் நீர்நாய் காரன்னம் தொடர்பு வளரி 1

aathi tamil aathi1956@gmail.com

31/12/15
பெறுநர்: எனக்கு
தமிழர் வாழும் நாடுகள் - ஆஸ்திரேலியாவில் தமிழர்
இருப்பிடம்
ஆஸ்திரேலியா ஒரு கண்டம். 29,67,909 சதுர மைல் பரப்புள்ள நாடு.
இந்நாட்டின் தலைநகரம் கேன்பரோ. இங்கு ஆங்கிலமே ஆட்சிமொழி. இந்நாடு ஏழு
மாநிலமாக பிரிக்கப்பட்டுள்ளது.
தமிழர் குடியேறிய வரலாறு :
ஆங்கிலேயர் குடியேறுவதற்கு முன்பே, ஆஸ்திரேலியாவில் தமிழர் குடியேறினர்
என்பதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது. நியூசிலாந்து பழங்குடிகளான மவோரி
மக்கள் மத்தியில் 19-ஆம் நூற்றாண்டில் ஒரு வெங்கல மணியை ஆங்கிலேயர்
கண்டெடுத்தனர். அதை அங்குள்ள அரும்பொருட்காட்சிக் கூடத்தில்
வைத்துள்ளனர். அம்மணியின் மீதுள்ள வாசகம், 15-ஆம் நூற்றாண்டுத் தமிழில்
எழுதப்பட்டுள்ளது. அது பின் வருமாறு : "முகையதீன் வக்குசு உடைய கப்பல்
உடைய மணி" என்று காணப்படுகிறது. இதன் மூலம் தமிழக வணிகர்கள் எந்தளவிற்கு
தூரக்கிழக்கு நாடுகளுக்கு போய்வந்தனர் என்பதை அறியலாம். 1788இல் இருந்து
குடியேற்றம் தொடங்கியது. முதலில் ஓரிருவர் தொடங்கிய தமிழர் குடியேற்றம்
1837-38 ஆம் ஆண்டுகளில் பெருமளவு நடந்தது. இதற்குக் காரணம், இந்திய
கிழக்கிந்திய கம்பெனியிலிருந்து சென்ற ஆங்கிலேயர் தம்முடன் தமிழரையும்
அழைத்துச் சென்றனர். அங்கு விவசாய தொழிலாளர்களாகவும் தமிழர் குடியேறினர்.
1901-க்குப் பிறகு ஆங்கிலேயர் தவிர பிறரைக் குடியேற்ற வெள்ளையர்
அனுமதிக்கவில்லை. இதனால் அக்காலங்களில் தமிழர் குடியேறவில்லை. ஆனால்
ஆஸ்திரேலியருடன் தொடர்பிருந்தது.சர். பொன்னம்பலம் இராமநாதன் ஆஸ்திரேலியா
சென்று அந்நாட்டுப்பெண்ணை திருமணம் செய்து கொண்டு இலங்கை வந்தார். இது
போலவே கதிரி தம்பி சின்னையா தவரவி என்பவர் போரின் பின் இலங்கைக்குத்
திரும்பி, அங்கிருந்து 1956-இல் கல்வி கற்பதற்காக ஆஸ்திரேலியாவுக்கு
வந்து, 1958-இல் ஆஸ்திரேலியப் பெண் ஒருவரை மணம் முடித்து, சிட்னியில்
குடியேறினார். அவர் மணம் முடித்த பெண் ஹங்கேரி நாட்டிலிருந்து இங்கு
அகதியாக வந்து குடியேறியவராவார். 1967-க்குப் பிறகு எல்லோரும் குடியேற
அனுமதிக்கப்பட்டனர். தமிழ் நாட்டிலிருந்து குடியேறிய தமிழரை விட மலேசியா,
பீஜி, சிங்கப்பூர், மொரீசியஸ், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து முதலிய
நாடுகளிலிருந்து குடியேறிய தமிழர்களே மிகுதி. கல்விக்காக குடிபெயரும்
தமிழர்கள் மலேசியா, சிங்கப்பூர்காரர்கள்; பொருளாதாரக் காரணங்களால்
குடிபெயரும் தமிழர்கள் இங்கிலாந்து, மொரீசியசுகாரர்கள். அரசியல்
காரணங்களுக்காக இலங்கை, தென்னாப்பிரிக்கா, பீஜிவாழ் தமிழர்கள் இங்கு
குடிபெயருகின்றனர். இன்று ஆஸ்திரேலியாவில் உள்ள தமிழர்களின் எண்ணிக்கை
40,000 ஆகும். இதில் 75% இலங்கைத் தமிழர்களும், அவர்களது வம்சாவளியினரும்
ஆவர். தமிழர்கள் பெருமளவு நியூசவுத் வேல்ஸ், விக்டோரியா ஆகிய இரு
மாநிலங்களிலும் தலைநகர்ப் புறத்திலேதான் வாழ்கின்றனர்.
தமிழரின் இன்றைய நிலை
சமயம் :
1985-இல் ஆஸ்திரேலியாவில் முதலாவது கோயில் கட்டப்பட்டது. இக்கோயில்
ஹெலென்ஸ்பர்க் என்னும் இடத்தில் அமைந்துள்ள திருவெங்கடேஸ்வரர் ஆலயமாகும்.
சிட்னியிலிருந்து 46 கி.மீ தொலைவில் உள்ளது. சனி, ஞாயிற்றுக் கிழமைகளில்
அதிகளவு மக்கள் வழிபாடு செய்ய வருவார்கள். சிட்னி முருகன் கோயிலில்
தினப்படி பூசைகள் உண்டு. வெள்ளிக்கிழமை கூட்டு வழிபாடு நடைபெறுகிறது.
ஞாயிற்றுக் கிழமைகளில் திருமுறை வகுப்புகள் உண்டு. தமிழ்
கிருத்துவர்களுக்கு சிட்னித் தமிழர் கத்தோலிக்கர் ஒன்றியம்; நியூ சவுத்
வேல்ஸ் தமிழ் தேவாலயம் மூலம் தங்களின் வழிபாடுகளை நிகழ்த்துகின்றனர். இவை
தவிர 'சாய்பாபா' வழிபாடு பெருமளவு தமிழர்களிடம் பரவி இருக்கிறது.
தமிழர்கள் பொங்கல், நவராத்திரி, சரஸ்வதி பூசை, தீபாவளி, புத்தாண்டு
போன்றவற்றை சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். எல்லா விழாக்களையும்
வெங்கடேஸ்வரர் கோயிலில் தான் கொண்டாடுகின்றனர். இதற்கான பொது இடம் இல்லை.
உணவு :
காலை உணவு ஆஸ்திரேலிய முறைப்படி அமைவது வழக்கம். ஆனால் இரவு உணவு சோறு
கறி உணவாகவோ அல்லது வேறு தமிழ்நாட்டு உணவாகவோ இருக்கும். இட்லி, தோசை,
உப்புமா, வடை கிடைக்கும். இன்னும் கையால் உணவருந்தும் பழக்கம்
இருக்கிறது.
உடை :
ஆண்களைப் பொறுத்தவரை ஆஸ்திரேலியர் மயமாகி விட்டனர். பெண்களைப் பொறுத்தவரை
முதல் தலைமுறையினர் வீட்டிலும் வெளியிலும் புடவையில் செல்கின்றனர்.
இளம்பெண்கள் நவீன உடைகளிலும், தலை அலங்காரத்திலும் ஆஸ்திரேலியர்களையே
பின்பற்றுகின்றனர்.
தகவல் தொடர்பு
தொலைக்காட்சி :
தமிழ் மீடியா குருப்பினால் 'இன்பத்தமிழ் ஒளி' என்ற தொலைக்காட்சி மூலம்
நிகழ்ச்சிகளை தமிழர்கள் காண்கின்றனர்.
வானொலி :
சனிக்கிழமை மாலைதோறும் 'தமிழ் முழக்கம்' ஒலிபரப்பப்படுகிறது. ஞாயிறு
முழுவதும் கீதாஞ்சலி, முத்தமிழ்மாலை, மாலை மதுரம், அலையோசை, இன்பத் தமிழ்
இரவு முதலிய தலைப்புக்களில் காலை 11 மணிமுதல் இரவு 10 மணி வரை
நடத்தப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக