திங்கள், 28 செப்டம்பர், 2020

உதியஞ்சேரலாதன் பாரதப்போர் பெருஞ்சோறு படைத்தான் பாவாணர் மகாபாரதம்

aathi1956 புத., 5 டிச., 2018, முற்பகல் 11:38 பெறுநர்: எனக்கு அழகன் ஆச்சாரி சேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் படைகட்கே:(பாவாணர் கட்டுரை பகுதி-2) பாரதப்போர் நாடுபற்றி நிகழ்ந்ததென்பது யாவரும் அறிந்தது. நூற்றுவர் யாவரும் அப் போரில் மாண்டனர் என்பதும் ஐயமறுப்பற்றதே. மேலும், பஞ்சவர் என்னும் பன்மைப் பெயர், பாண்டியரைக் குறிக்கும்போது, முன் பின் ஆண்ட ஐந்து தலைமைப் பாண்டியரைக் குறிக்குமேயன்றி, சமகாலத் துணைப்பாண்டியரை உளப்படுத்தாது. துணைப்பாண்டியரை உளப்படுத்துமிட மெல்லாம் பஞ்ச பாண்டியர் என விரித்துக் கூறுவதே வழக்கம். பாண்டவரைக் குறிப்பதாயின் பஞ்ச பாண்டவர் என இருசொல் வேண்டுவதில்லை; பஞ்சவர் எனினே அமையும். ஐவர், அல்லது பஞ்சவர் என்னும் சொல், பாண்டியர் பாண்டவர் ஆகிய இருசாரார்க்கும் பொதுவேனும், ஈரைம் பதின்மர் என்பது பாண்டியர் ஐவரின் நூறு படைத்தலைவர் என்று கொள்வது நூலிற்கு முற்றும் மாறானதாம். ஒரு பாண்டியனுக்கு இருபதின்மர் விழுக்காடு ஐவர் பாண்டியர்க்கும் நூற்றுவர் படைத்தலைவர் இருந்தனர் என்பது, வரம்பிறந்த உயர்வுநவிற்சியாம். ஐவர்க்கும் வெவ்வேறு படைத்தலைவர் என்று கொள்ளினும், ஐவர்க்குமேல் படைத்தலைவர் இருந்திருக்க முடியாது. ஓர் அரசனுக்கு எத்துணைப் பெரும்படையிருப் பினும், பெருந்தலைவன் ஒருவனாகவே யிருப்பான். பல, துணைப்படைகள் ஒருங்கு சேரினும், ஒருவனே அவற்றுக்கெல்லாம் பொதுத்தலைவனா யிருப்பான். அல்லாக் கால், படைகள் வெற்றிபெற ஒற்றுமையாகப் பொரமுடியாது. வெற்றி பெற்றெழினும் பொருது களத்தொழியினும் புறங்காட்டியோடினும், போர் விளை வெல்லாம், அரசர் அல்லது பெரும்படைத்தலைவர் மேலேயே வைத்துக் கூறப்படும். பாண்டியர் ஐவரின் படைத்தலைவர் நூற்றுவர் எனின், அவருட் பலர் செய்யுளில் விதந்து குறிப்பிடத்தகாத சிறு படைத்தலைவரே யாவர். இனி, நூற்றுவர் படைத்தலைவர், என்பது நூலுத்தி வழக்குக்குப் பொருந்தா தென்று கண்ட கட்டுரைகாரர்தாமே, ஈரைம் பதின்மர் என்பது ஈரொன்பதின்மர் (பதினெண்மர்) என்பதின் பாடவேறு பாடாயிருக்கலா மென்று புதுவதாகக் கருதுகின்றார். பாடவேறுபாடு கொண்டு தம் கொள்கையை நாட்டக் கருதியவர், ஈரும்பதின்மரும் என்னும் பாடம் கொண்டு, படைத்தலைவர் தொகையைப் பத்தாகக் குறைத்திருக்க லாமே! இனி, உதியஞ்சேரலாதன் பதினெட்டு நாளும் பாரதப் படைகட்கு வழங்கிய பெருஞ்சோற்று மிகுபதத்தை, பிற்காலத்துச் சேரனொருவன் தன் படைமறவர்க்களித்த ''பிண்ட மேய பெருஞ்சோற்று நிலையாகக் காட்டுகின்றார் கட்டுரைகாரர். தொல்காப்பியத்தில் வஞ்சித்திணைத் துறையாகக் குறிக்கப்பட்டுள்ள ''பிண்ட மேய பெருஞ்சோற்று நிலை'' வழிவழி வந்த மூவேந்தர்க்கும் பொதுவேயன்றி அவருள் ஒருவனுக்கு மட்டும் சிறப்பாக வுரியதன்று. ஓர் அரசனைச் சிறப்பித்துப் பாடும் இயன்மொழி வாழ்த்தில், அவனுக்குச் சிறப்பாகவுரிய இயல்களையும் செயல்களையும் குறிப்பிடுவதன்றி, எல்லார்க்கும் பொதுவானவற்றைக் குறிப்பது மரபன்று. மேலும், ஒரு வேந்தன் போருக்குச் செல்லும் தன் படைஞர்க்கு அளிக்கும் விருந்து, வணிக முறையில் கைம்மாறு கருதிச் செய்யுங் கடமையேயன்றி, வள்ளன்மை முறையில் வழங்கும் கொடை யாகாது. போர்க்களத்தில் தன் வேந்தன்பொருட்டு உயிரைத் துறக்கத் துணியும் மறவனுக்கு ஓர் உருண்டை சோறு கொடுத்தல்தானா பெரிது! இதனாலேயே 'பிண்ட மேய பெருஞ் சோற்று நிலை' பாடாண் பாட்டுகளில் இடம் பெறுவதில்லை. உதியஞ் சேரலாதனது 'பெருஞ்சோற்று மிகுபதம்' 'பிண்ட மேய பெருஞ் சோற்று நிலை'யேயாயின் போர் நிகழ்த்திய எல்லா வேந்தரும் 'பெருஞ் சோற்றுக' என்னும் பெயரடை (மொழி) பெற்றிருக்க லாமே! உதியஞ்சேரலாதனது பெருஞ்சோற்று மிகுபதத்துக்குப் பல சிறப்பியல்களுண்டு. அவையாவன: 1. கைம்மாறின்மை 2. படைப்பெருமை 3. நடுநிலை 4. வரையாமை 5. சேய்மை இச் சிறப்புப் பற்றியே உதியஞ்சேரலாதன் ஒப்புயர்வற்ற அடை மொழி பெற்றான். முடிநாகராயர் பாட்டில் பெருஞ்சோறு என்று மட்டும் குறியாது 'பெருஞ்சோற்று மிகுபதம்' என மிகுத்துக் கூறியதும், 'வரை யாது' என்னுங் குறிப்பும், ''பிண்டம்'' என்னுஞ் சொல்லின்மையும், கவனிக்கத்தக்கன. ராயர் என்னும் பெயர் கடைச்சங்க காலத்தில் வழங்கப் பெறவில்லை என்பது கட்டுரைகாரர் கருத்து. அது கடைச்சங்கத்திற்கும் முந்தி வழங்கியதென்பதற்குத் தொல்காப்பியமே சான்றாம். தொல்காப்பியர் காலம் கி.மு.7ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டதாகாது. ஓர் ஆள்வினைத் துறைத் தலைவன் அரசனாற் பெறுஞ் சிறப்பு மாராயம் எனப்பட்டது. 'மாராயம் பெற்ற நெடுமொழி யானும்' (பொருள். 63) என்பது தொல்காப்பியம். மாராயமாவது மாராயன் என்று அரசனாற் பட்டம் பெறுகை. "பஞ்சவ மாராயன்......கொங்காள்வான்" என்று கல்வெட்டில் வருதல் காண்க. அரசனாற் சிறப்பெய்திய வெற்றி மறவரின் பெற்றிமை கூறும் புறத்துறையை மாராய வஞ்சி எனப் புறப்பொருள் வெண்பாமாலை கூறும் (3 : 11). அரசன்-அரைசன்-அரையன்-ராயன். மாவரையன்-மாராயன். நாகர் என்பார் பண்டைக் காலத்தில் நாகவணக்கம் மிகுந்திருந்த கீழ்நாட்டார். அவர் முடிநாகர், ஒளிநாகர், நீலநாகர் எனப் பல வகையர். ----------------தொடரும்------------------ புராணம் இலக்கியம் சேரர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக