வெள்ளி, 20 செப்டம்பர், 2019

அந்தணர் அரசர் கலப்பு சூர்ப்பனகை மீது இராமன் இலக்குவன் செய்த வன்முறை இராவணன் நல்லவன்

aathi1956 aathi1956@gmail.com

சனி, 7 ஜூலை, 2018, பிற்பகல் 12:26
பெறுநர்: எனக்கு
SUNIL KUMAR k
ரத்த வெள்ளத்தில் சூர்ப்பனகை

அண்மையில் விருதுநகர் மகளிர் அரிமா சங்க மாநாட்டில், கலந்து கொண்டு
பேசினேன். பெண் விடுதலை குறித்து ஆற்றிய நீண்ட உரையின் ஒரு பகுதி,
கம்பராமாயணத்தில் சூர்ப்பனகைக்கு நேர்ந்த அவலம் குறித்தது. கூட்டம்
முடிந்தவுடன் பெண்கள் பலர் நேரில் வந்து, தங்களின் வியப்பைத்
தெரிவித்தனர். தங்களுக்கு இராமாயாணக் கதை நன்றாகவே தெரியும் என்றாலும்,
இன்று அறிந்துகொண்ட செய்திகள் மிகப் புதியனவாக இருந்தன என்று கூறினர்.
அதனை அனைவரோடும் பகிர்ந்து கொள்ள, இன்றைய தொடர் பயன்படட்டும். என்
உரையில் இருந்து ஒரு பகுதி கீழே...
சூர்ப்பனகை என்றொரு பாத்திரம் வருகிறதே, அந்தப் பெண்ணுக்கு இழைக்கப்பட்ட
அநீதியை எத்தனை பேர் மேடைகளில் பேசுகிறோம்? அது குறித்துச் சற்று
விரிவாகவே கூறவேண்டும் என்று கருதுகிறேன். கம்பரின் காப்பியத்தில், ஆரண்ய
காண்டத்திலே இடம் பெற்றுள்ள சூர்ப்பனகைப் படலம், கரன் வதைப்படலம்,
மாரீசன் வதைப்படலம் ஆகிய மூன்று படலங்களையும் படித்தால் பல உண்மைகள்
நமக்கு விளங்கும்.
இலக்குவனால் அமைக்கப்பெற்ற பர்ணசாலையின் வெளிப்புறத்தில், இராமர்
ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். தூங்கியும், தூங்காமலும் அரிதுயில்
கொண்டுள்ளதாக அதனைக் கூறுவர். அப்போது தன் கணவன் வித்யுத்சிகுவனைப்
போரில் இழந்து, கைம்பெண்ணாய்க் காட்டில் அலைந்து கொண்டிருக்கும்
சூர்ப்பனகை அங்கு வருகிறாள். இராமரைக் கண்டு, அவர் அழகில் மயங்குகிறாள்.
தன்னுடைய அரக்க உருவத்தை, மந்திரத்தால் அழகிய உருவாக மாற்றிக் கொண்டு,
இராமரை நெருங்குகிறாள். அவள் எப்படி நடந்து வந்தாள் என்பதைக் கம்பரின்
கவிநயம் அழகுபடக் கூறும்.
“பஞ்சியொளிர் விஞ்சுகுளிர் பல்லவ மனுங்கச்
செஞ்செவிய கஞ்சநிமிர் சீறடிய ளாகி
அஞ்சொலிள மஞ்ஞையென அன்னமென மின்னும்
வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்”
என்னும் கவிதையை எத்தனையோ மேடைகளில் நாம் கேட்டிருக்கிறோம்.
அத்தனை அழகுடன் நடந்துவந்த சூர்ப்பனகையைக் கண்டு, இராமரும் வியந்தார்.
மூவுலகிலும் இல்லாத அழகாக உள்ளதே என்று எண்ணினார்.
“ஏதுபதி ஏதுபெயர் யாவர் உறவு” என்று கேட்டார். சூர்ப்பனகை சொன்னாள். தான்
அந்தணர் வழிவந்தவள் என்று புனைந்து கூறினாள். ‘வந்த நோக்கமென்ன?’ என்று
இராமர் கேட்க, ஒளிவுமறைவின்றி உண்மையைக் கூறினாள் சூர்ப்பனகை. ‘ உன் அழகு
கண்டு மயங்கினேன். உன்னை மணந்து கொள்ள விரும்புகிறேன்’ என்றாள்.
உத்தமர் இராமர் என்ன சொல்லியிருக்க வேண்டும்?- ‘வருந்தாதே பெண்ணே, எனக்கு
ஏற்கனவே திருமணமாகிவிட்டது. என் மனைவி சீதை பர்ணசாலையின் உள்ளே
இருக்கிறாள்’ என்றல்லவா உண்மை உரைத்திருக்க வேண்டும்?
அப்படிச் சொல்லவில்லை இராமர். காட்டில் வாழ்ந்த அவருக்குப்
பொழுதுபோகவில்லையாம். இந்தப் பெண்ணுடன் சற்று நேரம் விளையாட்டாய்
உரையாடலாம் என்று தோன்றியதாம்.
‘சுந்தரி’ என்றழைத்தார் இராமர். தன்னை அழகி என்று அழைத்தவுடன், அகம்
மகிழ்ந்த சூர்ப்பனகை, அவர் தன்னைக் கண்டிப்பாய் மணம் புரிவார் என்று
நம்பினாள். ஆனால், ‘நாம் மணம் புரிந்து கொள்ளத் தடை ஒன்று உள்ளதே’ என்ற
இராமர், அதனை விளக்கினார். “அந்தணர் பாவைநீ, யான்அரசரில் வந்தேன்”
என்பதுதான் அவர் கூறிய தடை. இருவரும் வேறுவேறு வருணத்தைச் சேர்ந்தவர்கள்
ஆயிற்றே, எப்படி மணம் புரிந்து கொள்ள முடியும் என்று வருந்தினார். உடனே
சூர்ப்பனகை, ‘அதற்காக நீ வருந்த வேண்டாம். என் தாய் தாரணி, புரந்த சால
கடங்கடர் என்னும் அரசர் மரபில் வந்தவள் தான்’ என்று சமாதானம் சொன்னாள்.
‘அப்படியானால், உன் அண்ணன்மார் உன்னைத் தருவரேல்’, அதாவது கன்னிகாதானம்
செய்வரேல் மணம் செய்து கொள்ளலாம் என்றார் இராமர்.
‘அதுவரை நாம் காத்திருக்க வேண்டியதில்லை. கந்தர்வ மணம் புரிந்து
கொள்ளலாம்’ என்ற வடமொழி மரபைச் சூர்ப்பனகை முன்வைத்தாள். திருமணத்திற்கு
முன் உடலுறவா என்று அதிர்ச்சி அடைய வேண்டாம். பழந்தமிழ்
இலக்கியங்களிலும், களவொழுக்கத்தில், அதாவது திருமணத்திற்கு முந்திய
காலத்தில், மெய்யுறு புணர்ச்சி என்று உடல் உறவுச் செய்தி
கூறப்பட்டுள்ளது.
“கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே
புணர்ந்துடன் போகிய காலை”
என்கிறது தொல்காப்பியம். கரணம் என்றால் திருமணம். புணர்ந்து என்றால்,
உடல் உறவு கொண்டு என்று பொருள். எனவே இதனைத் தான், கந்தர்வ மணம் செய்து
கொள்ளலாம் என்கிறாள் சூர்ப்பனகை.
இராமர் சூர்ப்பனகையைக் கிண்டல் செய்கிறார். ஆனால், அதனை அந்தப் பெண்
உணரவில்லையாம். ‘இந்த இப்பிறவியில் இருமாதரைச் சிந்தையாலும் தொடாத’
இராமர், சூர்ப்பனகையைப் பார்த்து, ‘அடடா, இது என் தவப்பயன்’ என்கிறார்.
இதனை வெறும் கேலிப்பேச்சு என்று உணர்ந்து கொள்ள முடியாத சூர்ப்பனகை,
இராமரை நெருங்கி வரும் நேரத்தில், பர்ணசாலையின் உள்ளிருந்து, சீதை வெளியே
வருகிறாள்.
இருவரும் ஒருவரைப் பார்த்து மற்றவர் திகைக்கிறார்கள். யார் இவள் என்னும்
கேள்வி இருவரிடமும் எழுகிறது-. ‘இந்த அரக்கியை இங்கிருந்து விலக்கிவிடு’
என்கிறாள் சூர்ப்பனகை. இப்போதுதான் இராமர் சினம் கொண்டு, ‘நீ இந்த இடத்தை
விட்டு அகன்று போ’ என்று சொல்லிவிட்டுச் சீதையுடன், பர்ணசாலைக்குள்
சென்றுவிடுகிறார்.
சீதை வெளியில் வரும்வரை, சிரித்துச் சிரித்துப் பேசிக்கொண்டிருந்த
இராமர், இப்போது ஏன், சினம் கொள்கிறார் என்று சூர்ப்பனகைக்குப்
புரியவில்லை. இரவு முழுவதும் அழுது தீர்த்தபின், அடுத்தநாள் மீண்டும்
பர்ணசாலைக்கு வருகிறாள். அங்கே உலவிக் கொண்டிருந்த சீதையைக் கண்டு, அவளை
நெருங்குகிறாள்.
இதுவரை என்ன நடந்தது என்னும் முன்கதைச் சுருக்கம் எதுவும் அறியாத
இலக்குவன், யாரோ ஒரு பெண் சீதையை நெருங்குவதைக் கண்டதும், அதிர்ச்சி
அடைகிறான். நீ யார், ஏன் இங்கு வந்தாய் என்று எதுவுமே கேட்காமல், அந்தப்
பெண்ணைப் பிடித்து அடிக்கிறான். அங்கே என்ன நடந்தது என்பதைக் கம்பரின்
வரிகளிலேயே எடுத்துச் சொல்கிறேன் கேளுங்கள் -
“சில்அல் ஓதியைச் செய்கையின் திருகுறப்பற்றி
ஒல்வயிற் றுதைத்து...”
என்கிறார் கம்பர். ஓதி என்றால் கூந்தல். சிலவாக அல்லாத நீண்ட கூந்தலைத்
திருகிப்பற்றிச் சூர்ப்பனகையின் வயிற்றில் ஓங்கி உதைத்தான் இலக்குவன்
என்கிறது பாடல். அத்தோடு நிற்கவில்லை, இன்னும் ஒருபடி மேலே போய் என்ன
செய்தான் என்பதை,
“மூக்கும் காதும்வெம் முரண்முலைக் கண்களும்
முறையால் போக்கி...” என்று சொல்லிச் செல்கிறார் கம்பர்.
சூர்ப்பனகையின் மூக்கை அறுத்துவிட்டதாக மட்டும்தான் பொதுவாகச்
சொல்வார்கள். ஆனால், அந்தப் பெண்ணின் மூக்கு, காதுகள், மார்புக்
காம்புகள் எல்லாவற்றையும் இலக்குவன் வாளால் சிதைத்தான் என்பதுதான்
இராமாயணக் கதை. இதோ, எதிரில் பரமக்குடிக் கம்பர் கழகத்தின் நண்பர்
இராமமூர்த்தி அமர்ந்திருக்கிறார். நான் பொய் சொல்லிவிட்டுப் போய்விட
முடியாது. நீங்களும் கம்பராமாயணத்தை எடுத்துப் படித்துவிட்டு நான்
சொல்வதெல்லாம் உண்மைதானா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
இத்தனை கொடுமைகள் அந்தப் பெண்ணுக்கு ஏன் இழைக்கப்பட்டன? ஆசைகாட்டிப்
பேசிய இராமருக்கு என்ன தண்டனை?
இரத்தச் சேறாகிறது அந்த இடம். இரத்தம் கொட்டக் கொட்ட இராமரைச் சந்தித்து,
இது என்ன நியாயம் என்று கேட்கிறாள் சூர்ப்பனகை. ‘நான் உன் மீது அன்பு
வைத்ததைத் தவிர, வேறு என்ன பிழை செய்தேன்’ என்று கேட்கிறாள்.
“அந்தோஉன் திருமேனிக்கு அன்பிழைத்த வன்பிழையால்...” இப்படிக்
காயப்படுத்தப்பட்டு விட்டேனே என்று கதறுகிறாள். அன்பு இழைப்பது
வன்பிழையாகுமா என்று அவள் கேட்ட கேள்விக்கு இராமர் எந்த விடையும்
சொல்லவில்லை. ‘அரக்கிப் பெண்ணே, நீ இந்த இடத்தை விட்டு உடனே போய்விடு’
என்னும் கட்டளையோடு, இராமரின் நியாயம் முடிந்து போகிறது.
அதற்குப் பின்னர்தான், தன் அண்ணன் இராவணனிடம் ஓடுகிறாள் சூர்ப்பனகை.
இரத்த வெள்ளத்தில் வந்து நிற்கும் தன் தங்கையைக் கண்டு, கடும்
சினமுற்றாலும், இராவணன் கேட்ட முதல் கேள்வி என்ன தெரியுமா? “நீயிடை
இழைத்த குற்றம் என்னைகொல்” என்பதுதான். இப்படி உன்னைக் காயப்படுத்தும்
அளவிற்கு நீ என்ன குற்றம் செய்தாய் என்று கேட்கும், இராவணனை, மாரீசன்
வதைப்படலம், 66ஆவது பாடலில் நீங்கள் காணலாம்.
பாருங்கள், இப்படி நியாயமாக நடந்துகொண்ட இராவணன் வில்லன், கேள்விகள்
ஏதுமின்றி, ஒரு பெண்ணைச் சிதைத்த இலக்குவன் கதாநாயகன். இராமரோ கடவுள்
அவதாரம்.
(சனிக்கிழமைதோறும் சந்திப்போம் )
Posted by சுப.வீரபாண்டியன்

இராமாயணம் உண்மை பெண்ணடிமை பெண்ணுரிமை திருமணம் களவுமணம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக