திங்கள், 11 மார்ச், 2019

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு படுகொலை திருமாவேலன் கட்டுரை

aathi1956 aathi1956@gmail.com

வெள்., 1 ஜூன், 2018, முற்பகல் 9:30
பெறுநர்: நான்

‘தேசபக்த’ மராட்டியர்களும் ‘தேசவிரோத’ தமிழர்களும்!
ப. திருமாவேலன்

எத்தனை கோயில்களுக்குப் போனாலும், எவ்வளவு பரிகாரம் செய்தாலும் தூத்துக்குடி பாவத்தை எடப்பாடி பழனிசாமியால் துடைக்க முடியாது. எடப்பாடி பழனிசாமி மட்டுமல்ல, தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, காவல்துறைத் தலைவர் டி.கே.ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன் ஆகியோருக்கும் தான் இது. மே 22-ம் நாள் தமிழ்நாட்டுக்குக் கண்ணீர் நாளாகவே இருந்து தொலையட்டும். ஆனால், உங்கள் வாழ்க்கையில் கறுப்புநாள். இந்தச் சாவுப்பூதம் இறுதிவரை உங்களை நிம்மதியாக இருக்க விடாது.

அப்பாவிகளைக் கொன்ற தீவிரவாதிகளை நீங்கள் கொல்லவில்லை. அப்பாவிகளையே கொன்றிருக்கிறீர்கள். ‘நாங்க நடந்து வரும்போது எந்த போலீஸ் கையிலயும் துப்பாக்கி இல்லை. சுடுவாங்கன்னு தெரியாது’ என வெள்ளந்தியாக வீறிடும் ஒரு பெண், இந்த அரசுமீது கள்ளங்கபடமின்றி வைத்த நம்பிக்கையைக் கொன்றிருக்கிறீர்கள். “அக்கா... வாங்கக்கா... சுடுறாங்க... ஓடிடுவோம்” என இன்பென்டாவிடம் (வயது 22) சொல்லி, அவரை இழுத்து ஓடுகிறாள் ஸ்நோலின் என்ற வெனிஸ்டா (வயது 17). இன்பென்டாவின் முதுகில் தடி இறங்குகிறது. ஸ்நோலின், குண்டு தாங்குகிறாள். பிளஸ் 2 தேர்வு எழுதியவள் ஸ்நோலின். “ஸ்டெர்லைட்டை மூடனும்னு கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தோம்” என்கிறாள் இன்பென்டா. டிப்ளமோ முடித்துள்ள ரஞ்சித்குமார், ரத்த தானம் செய்வதில் ஆர்வமுள்ளவர். ‘சொட்டு ரத்தம் பத்தாது, மொத்த உடம்பையும் கொடு’ என்று அவரின் உயிரைப் பறித்துள்ளனர். ஈழத்தில் வாழ முடியாமல் வந்த கந்தையா, தென்னாட்டைக் காப்பாற்றும் மாவீரனாக மரணமடைந்துவிட்டார். தூத்துக்குடியில் முதல் குண்டு வாங்கியவர் அவர். ‘சாகுறதுக்கா இங்க வந்தோம்?’ என்று அவர் மனைவி செல்வமணியின் கேள்வி, கடலில் எதிரொலிக்கிறது.

மணிராஜை மட்டுமா கொன்றிருக்கிறீர்கள்? மூன்று மாதங்களுக்கு முன் அவரைக் கைப்பிடித்த அனுசுயாவின் கனவையும் சேர்த்து அல்லவா? மூன்று மாதக் கரு வயிற்றில் உள்ளது. பிறக்கப் போகும் குழந்தையின் எதிர்காலத்தையும் சேர்த்தல்லவா கொன்றிருக்கிறீர்கள்? எம்.பி.ஏ பட்டதாரியான சண்முகம், ஏ.டி.எம்-மில் பணம் எடுக்கப்போனவர். காளியப்பனுக்கு ஒரு பெண்ணைப் பார்த்துத் திருமணம் உறுதிசெய்யப்பட்டுவிட்டது. அக்டோபரில் திருமணம். திரேஸ்புரம் ஜான்சி, தன் சகோதரி வீட்டுக்கு மீன் கொண்டு போய்க்கொண்டிருந்தார். அவரின் நான்கு பிள்ளைகளும் கண்ணீர்கூட கிடைக்காமல் நிற்கிறார்கள். மாலையில் திரேஸ்புரத்துக்குள் புகுந்தார்கள் காவலர்கள். வீடு வீடாகப் புகுந்து அடித்திருக்கிறார்கள். ‘ஏன்ம்பா... இப்படி அடிச்சு கொல்றீங்க!’ என்று தெருவில் நின்று கேட்டவர் வினிதா. (வயது 37). அடுத்த குண்டு அவருக்கு. செத்துப்போனார். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேதான் அந்தோணி செல்வராஜ் வேலைபார்க்கும் நிறுவனம் உள்ளது. 28-ம் தேதி அவரின் மகளுக்குச் சடங்கு வைத்திருக்கிறார். அழைப்பிதழ் கொடுக்கப் போய்க்கொண்டிருந்த அந்தோணி செல்வராஜ் இப்போது இல்லை. யாரைக் கொன்றிருக்கிறீர்கள்... பயங்கரவாதிகளையா?

இவர்களையும் காப்பாற்றுவேன் என்று பதவிப்பிரமாணம் எடுத்தவர் முதலமைச்சர். இந்த மக்கள் தருகிற வரிப்பணத்தில்தான் ஐ.ஏ.எஸ்-களும், ஐ.பி.எஸ்-களும் சம்பளம் வாங்குகிறீர்கள். கொன்ற பாவம் தின்றால் போய்விடுமா?

ஒருநாள் அல்ல, 100 நாள்களாகத் தெருவில் வாழ்கிறார்கள் அவர்கள். பிரியாணிக்கும், குவாட்டருக்கும் கூட்டிவரப்பட்ட கூட்டம் அல்ல. ஸ்டெர்லைட் ‘விரிவாக்கம் செய்யப்பட்டால், வாழத் தகுதியில்லாத ஊராக இது மாறிப்போகும்’ என அவர்கள் அச்சப்படுகிறார்கள். 2013 மார்ச் 23-ம் நாள், விஷவாயு கசிந்து ஊரே ஓடியது. அதுவே நிரந்தரமாகி விடக்கூடாது என நினைக்கிறார்கள். அவர்கள் பயத்தைப் போக்கியிருக்க வேண்டியது அரசின், அதிகார வர்க்கத்தின் கடமை இல்லையா? சாமி பேர்ல அர்ச்சனை செய்யச் சொன்னால், எடப்பாடி பழனிசாமி மேல் அர்ச்சனை செய்யும் அளவுக்குச் சுபிட்ச சுக வாழ்வைத் தமிழ்நாட்டுக்குத் தந்துவிட்டோம் என நினைக்கிறார்களா? ‘ஸ்டெர்லைட் ஆலையை மூடிவிடுவோம்’ என இன்று சொல்லும் முதலமைச்சரும், மாவட்ட நிர்வாகமும் 100 நாள்கள் வனவாசம் போயிருந்தார்களா?

அரசாங்கக் கணக்கின்படியே அன்று கூடியவர்கள் 20 ஆயிரம் பேர். இத்தனை ஆயிரம் பேர் திரளும் நாளில், தனக்கு மனு கொடுக்கத் திரளும் நாளில் தூத்துக்குடியில் இல்லாமல் கோவில்பட்டியில் ஜமாபந்திக்கு வரவேண்டும் என மாவட்ட ஆட்சியரை அந்த ஊர்க்காரர்கள் வெற்றிலை பாக்கு வைத்து அழைத்தார்களா? இவ்வளவு களேபரத்துக்குப் பிறகும், தூத்துக்குடிக்கு வராமல் ஓட்டப்பிடாரத்துக்கு அவர் போய்விட்டார். இத்தனை உயிர்கள் பலியான இடத்தில் எஸ்.பி ஏன் இல்லை? இத்தனை ஆயிரம் பேர் கூடப்போகும் இடத்தில், தென்மண்டல ஐ.ஜி காலையில் ஏன் இல்லை? இவ்வளவு நடந்த பிறகும், டி.ஜி.பி அன்றே ஏன் அங்கு செல்லவில்லை? சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி ஏன் செல்லவில்லை? எல்லோரையும் எங்கோ பதுங்கிக்கொள்ளச் சொன்ன சக்தி எது? ‘உங்களை மாதிரியே நான் டிவி பார்த்துத்தான் தெரிந்துகொண்டேன்’ என ஒரு  மாநிலத்தின் முதலமைச்சர் சொல்கிறார் என்றால், அவருக்குத் தெரியாமல் சுடச் சொன்னது யார்? இந்த வெறியாட்டம், யாரிடம் வாங்கிய கூலிக்காக மாரடிக்கப்பட்டது?

தூத்துக்குடியில் 144 தடையுத்தரவு போடுங்கள் என்று கேட்டது கலெக்டரோ, எஸ்.பி-யோ, தாசில்தாரோ அல்ல. ஸ்டெர்லைட் நிறுவனப் பொதுமேலாளர் சத்யப்ரியா தான், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். 144 போட்டால் நான்கைந்து பேர் சேர்ந்து நிற்க முடியாது, கூடுவதற்கு முடியாது, ஊர்வலம் செல்ல முடியாது. இதை மக்களுக்கு முறைப்படி அறிவிக்கவேண்டும். அது தொடர்பான ஆட்சியரின் அறிக்கையில், ‘பேரணியாக வாள், கத்தி, கம்பி, கற்கள், அரசியல் - சமூகக் கொடிக்கம்புகள் மற்றும் இதர அபாயகரமான ஆட்சேபகரமான ஆயுதங்கள் கொண்டுவரக்கூடாது’ என விஷமத்துடன் சொல்லப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கக் குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள்... என அனைவரையும் அழைத்து வருபவர்கள் எதற்காக வாள், கத்தி எல்லாம் எடுத்து வரப்போகிறார்கள்? கூட்டமாக மக்கள் கூடிய இடத்திலிருந்து ஆட்சியர் அலுவலகம் 9 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இவர்களிடம் ஆயுதம் இருந்ததா? ஆயுதம் வைத்திருப்பவர்களை நடந்துவர விட்டிருப்பார்களா? அவர்கள் கூடிய இடத்துக்குச் சென்று, ‘ஸ்டெர்லைட் இனி இயங்காது’ என இப்போது சொல்வதை அப்போது சொல்லயிருந்தால் இது நடந்திருக்குமா? இத்தனை உயிர்கள் போயிருக்குமா?

அவர்களின் நோக்கம், பொதுமக்களுக்குப் பயத்தைக் காட்டுவது. இனி எவனும் போராட வரக்கூடாது என்று தடுப்பது. ‘இனிமேல் விவசாயிகளையும் சுடுவீர்களா?’ என்று அய்யாக்கண்ணு கேட்கிறார் அல்லவா? அந்த அச்சத்தை விதைப்பது. இதுதான் ஜல்லிகட்டு போராட்டத்திலும் நடந்தது. ‘ஒரு மணி நேரத்தில் கலைந்து விடுகிறோம்’ என்றவர்களை அடித்ததன் மூலமாக, சென்னை மெரினா கடற்கரையை நிரந்தரமாகப் பூட்டிவிடுவதுதான் நோக்கம். அதுபோலத்தான் நியூட்ரினோ, ஹைட்டோகார்பன் போராட்டங்களை ஒடுக்கத் தூத்துக்குடியைத் தொடக்கப்புள்ளியாக மாற்றி 13 உயிர்களை விழுங்கியுள்ளனர். ஒரு சிறுவனைப் பத்து போலீஸார் அடிக்கிறார்கள். வேட்டி அவிழ நடந்துவரும் ஒரு பெரியவரைப் பத்து போலீஸார் சுற்றி நின்று அடிக்கிறார்கள். எவ்வளவு வேண்டுமானாலும் அடிங்கடா என்று நிற்கும் ஒருவரை, இரக்கமில்லாமல் அடிக்கிறார்கள். ஒரு பெண் பிள்ளைக்கு முதுகெல்லாம் பிரம்படி. காளியப்பன் செத்துக்கிடக்கிறான். ‘நடிக்கிறான்டா’ என்கிறது ஒரு காக்கிக் குரல். நீ யாருக்கு எதிராய் லத்தி சுழற்றுகிறாய், துப்பாக்கி பிடித்திருக்கிறாய் என்பதையே உணராத ஜென்மங்களின் கையில், இந்த நாட்டின் சட்டம் ஒழுங்கு சீரழிவதைவிட விஷவாயு நல்லது!

தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் செல்வசேகரை வயிற்றில் உதைத்துக் கொன்றுள்ளார்கள். செல்வசேகரின் அக்காள் கேட்கிறார், ‘‘10 லட்சம் தர்றியே.. என் தம்பி உயிரை மீண்டும் தருவியா?’’ என்று. இன்னொரு பெண் கேட்கிறார், “உங்க வீட்டுல யாரையாவது சுட்டுக்கொன்றால் 20 லட்சம் வாங்கித் தர்றேன். சாகக் கொடுப்பியா?” என்று. பணம் கொடுப்பது, ஆறுதல் சொல்வது, அரசாங்க வேலை தருவது... இவையெல்லாம் கொலைக்குப் பரிகாரமா? அது சரியென்றால், சட்டம் எதற்கு? நீதிமன்றம் எதற்கு? தனி மனிதன் செய்தால் கொலை... அரசாங்கம் செய்தால் கொலை அல்ல என்று எந்தச் சட்டத்தில் இருக்கிறது? ‘சிரம் அறுத்தல் வேந்தர்க்குப் பொழுதுபோக்கு; நமக்கோ உயிரின் வாதை’ என்றான் புரட்சிக்கவி. 13 பேர் என்பது வெறும் எண்ணிக்கை அல்ல. எதையும் நம்பராகவே பார்த்து நம்பராகவே மாறிப்போன நமத்துப்போன சமுதாயம் இது. அதனால்தான், இவர்களுக்கு 13 பேர் தானே, போலீஸைப் பார்த்துக் கல்வீசினால் சுடத்தானே செய்வான், ஸ்டெர்லைட் மூலமா நமக்கு வளர்ச்சிதானே, கம்பெனி வந்தா வேலை கிடைக்குதே... என்றெல்லாம் சொல்ல வைக்கிறது.

ஸ்டெர்லைட்டை விரட்டிய மராட்டியர்கள் தேசபக்தர்கள் என்றால், விரட்டும் தமிழர்கள் மட்டும் எப்படி தேசத்துரோகிகள் ஆவார்கள்? ஸ்டெர்லைட்டை வரவிடாத குஜராத்தியர்கள் தேசபக்தர்கள் என்றால், விரட்டும் தமிழர்கள் மட்டும் எப்படி தேசத்துரோகிகள் ஆவார்கள்? மூக்கைப் பொத்திக்கொண்டு 23.3.2013-ல் ஓடியவன் தூத்துக்குடிகாரன். அதனால்தான், துணிந்து வருகிறான். நாற்றம்பிடித்த நம் வீட்டுக் குப்பையை அடுத்த தெருவில் போட்டுவிட்டு, ‘இந்தக் குப்பைவாரி ஏன் சவ நாத்தம் நாறுது’ன்னு கமென்ட் அடிக்கும் ‘பரந்த உள்ளம்’ கொண்டவர்களுக்கு, தூத்துக்குடி மக்களின் வலி புரியாது. ஸ்டெர்லைட் ஆலையின் 2-வது, 3-வது, 4-வது, 5-வது யூனிட்டுகளை மெரினா தொடங்கி பெசன்ட்நகர் பீச் வரை வைத்தால்தான் பலருக்குப் புரியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக