இந்துக் கலை - சிற்பக்கலை
By
யாழ்அன்பு, August 18, 2013 in
மெய்யெனப் படுவது யாழ்அன்பு 411
Posted August 18, 2013சிவசக்தி அந்தரசக்திஇந்துக் கலை - சிற்பக்கலை
இந்துக்கள் இன்று நேற்றல்ல இற்றைப்படுத்த இயலாத பண்பாட்டுப் பழமையையும், பாரம்பரியத்தையும் கொண்டவர்கள். இப்பண்பாட்டு உணர்வு சமயம், கலை, தத்துவம், என்பவற்றின் கூட்டுருவாக்கம் எனலாம். இந்துக்கலை என்பது வெறும் காட்சிப்பொருளே அன்றின் கற்பனைப்பொருளே அல்ல, இந்துக்கள் தம் ஆத்ம தேடலின், ஆத்மீக தாகத்தின் வடிகால்களாகவே கலை ஞானத்தை தம் எதிர்கால தலமுறையினருக்கு விட்டுச்சென்றனர்.
இந்துக் கலைகள் அறுபத்து நான்கு என்பது மரபு. அவற்றுள் சிறந்தவை நுண்கலைகள் இவை கட்டிடம், சிற்பம், ஓவியம், இசை, நடனம், நாடகம் என்பனவாகும். இவை ஒருகலைஞனின் உள்ளார்ந்த ஆற்றலாக வெளிப்படுபவை.
“இந்திய மக்கள் மிகத்தொன்மையான காலம் தொட்டே கட்டிடம், சிற்பம், ஓவியம், இசை, நடனம், நாடகம் ஆகிய நுண்கலைகளைப் பொன்னெனப்போற்றி வளர்த்து வந்திருக்கின்றனர். இக்கலைப்படைப்புக்கள் உலகையே வியக்கவைக்குமளவிற்கு கலைத்துவம் மிக்க அற்புதமான படைப்புகளாக விளங்குகின்றன என்பர் கலைவிமர்சகர்கள்” Anandu Coomaraswamy (1969;ix) எனும் கருத்து ஆழ்ந்து நோக்கற் பாலது.
இந்த நுண்கலைகளுள் தலையாயது சிற்பக்கலை. இதுவே விக்கிரகவியல் கலையின் தாயூற்று. ஆதலால் விக்கிரகவியல் கலையின் மேன்மையையும் சிறப்பையும். கூறமுற்படும்போது சிற்பக்கலையை தவிர்ப்பது பொருத்தமற்றது எனும் தன்மையால் இங்கே இரண்டையும் பற்றி ஆராய முற்படுகின்றோம்.
மனிதன் படைத்த கலைகளுள் மிகச் சிறந்தது சிற்பக்கலை என்பர். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே இக்கலை வளர்ந்து வருகின்றது. மனித நாகரீகத்தையும் அதன் வளர்ச்சியையும் எடுத்துக்காட்டும் சான்றுகளில் சிற்பக்கலையைவிட சிறந்தது வேறொன்றில்லை. நாடுகளின் தொன்மை வரலாற்றை அம்மக்கள் வளர்த்த சிற்பக்கலை வழியாகவே பெரிதும் அறிய முடிகின்றது.
கண்ணால் கண்ட உருவங்களையோ கற்பனை உருவங்களையோ வடிவமைத்துச் செய்வது சிற்பம் எனப்படும். அதனை வடிப்பவன் சிற்பி எனப்படுவான். கல், உலோகம், செங்கல், மரம், சுதை, தந்தம், வண்ணம், கண்டசருக்கரை, மெழுகு என்பன சிற்பம் வடிக்க ஏற்றவை என பிங்கல நிகண்டு கூறும். கல்லில், கருங்கல், மாக்கல், பளிங்குக்கல், சலவைக்கல் என்பனவும் உலோகங்களில் பொன், வெள்ளி, வெண்கலம், செம்பும் ஏற்றனவாகக் கருதப்பட்டன.
வடிவம் முழுவதையும்-முன்புறம் பின்புறம் இரண்டையும்-காட்டும் சிற்பங்களை “முழுவடிவச் சிற்பங்கள்” என்றும் வடிவத்தின் ஒருபுறம் மட்டும் காட்டும் சிற்பங்களைச் “புடைப்புச் சிற்பங்கள்” என்றும் வகைப்படுத்துவர். கோயில்களில் காணப்படும் முதன்மைத் தெய்வத் திருமேனிகளும் உற்சவச் திருமேனிகளும் முழுவடிவச் சிற்பங்கள் ஆகும்.
சிற்பாசாரிகளால் செதுக்கப்படுபவை சிற்பம், அவற்றிட்கு சிவாச்சாரியர்கள் மந்திர தந்திர, யந்திர அனுஷ்டாணங்களைச் செய்து இறைநிலைப்படுத்தும் போது எழுபவை விக்கிரகம்.
“மனிதனது உணர்வுகளை ஆத்மீகத்தின் பால் ஈடுபாடு கொள்ளச்செய்யும் முயற்சியின் ஒரு பயனாக அமைவதே திருவுருவ வழிபாடு ஆகும்”
இப்படியான் இந்நிறத்தான் இவன் இறை எனக் கூறமுடியாத, ஓர் உருவம் ஒரு நாமம், ஓர்வடிவம் இலானுக்கு பல் உருவம் பல நாமம் கற்பித்து கல்லில் செதுக்கியும் பொன், வெள்ளி, ஈயம், பித்தளை, செப்பு முதலாய உலோகத்தால் வார்த்தும் வழிபடும் முறையே விக்கிரக வழிபாடு எனலாம்.
இறை அனுபூதிமான்கள் சித்தத்தை சிவன்பால் வைத்து சித்தநிலையால் சிந்திய அருள் வாக்குகளை தன் அகக் கண்ணிலே அமர்த்தி மந்திர ஜபம் செய்து அதை மனதிலே நிறுத்தி தன்விரல் நுணிகளின் வழியே சிற்றுளி கொண்டு சிற்பத்தை பிரசவிப்பான் சிற்பி. இக்கலையில் வல்லுநரை “ஸ்தபதி” என அழைப்பர். அவனால் படைக்கப்பட்ட “விக்கிரகம்” பக்குவ நிலைப்படா ஆன்மாக்கள் கட்புலனுக்கு உட்படுத்தி பக்குவப்பட கால்கோள்கிறது.
விக்கிரகம் என்பது வி+கிரகம் எனவரும். “வி” என்பது மேலான எனவும் “கிரகம்” என்பது இல்லம் எனவும் பொருள்கொண்டு “இறைவனின் மேலான இல்லம்” எனப்பொருள் புலப்படுத்தப்படுகின்றது.
விம்பம், விக்கிரகம், மூர்த்தி பேதம், பிரதிமை, படிமம் போன்ற பல சொற்களால் திருவுருவம் அழைக்கப்படுகின்றது. “திரு” என்பது தெய்வத்தன்மை எனவும்“ உருவம்” என்பது அழகிய வடிவம் எனவும் பொருள் கொள்ளப்பட்டு “தெய்வத்தன்மை பொருந்தி அழகிய வடிவமே திருவுருவம்” ஆகும்.
“திருவுருவங்கள் இறைவனை மனத்தால் கிரகிப்பதற்கு உறுதுணையாக அமைவன அத்துடன் இறைவனைப்பற்றிய புராணங்கள் கூறும் தத்துவப் பொருள் செறிந்த தெய்வீக வரலாற்றை அறிவதற்கும் உணர்வதற்கும் பெருந்துணை புரிவன. திருவுருவங்களும் அவற்றிட்கு நிகழும் கிரியைகளும் வழிபடுவோனது உள்ளத்திலே படிப்படியாகப் பரம்பொருள் தத்துவச் சிறப்பினை உணரவைப்பன சமய அனுபவத்தை வளர்பபதற்கு அவை உதவுவன”
என்ற பேராசிரியர் ப.கோபாலகிருஷ்ணஐயர் அவர்களுடைய கருத்து விக்கிரகவியல் கலையின் சிறப்பினை அறிவதற்கு ஒரு மைல் கல் எனலாம்.
மேற்படி சிறப்பினை உடைய விக்கிரகக் கலைபற்றி அறிய உதவும் சான்றுகளாக தொல்பொருட் சின்னங்கள், நாணயங்கள், கல்வெட்டுக்கள், இலக்கியங்கள் எனும் வரலாற்றியல் மூலாதாரங்களை ஆதாரப்படுத்த முடியும்.
மொஹாஞ்சதாரோவிற் கிடைத்த வெண்கலத்தாற் செய்யப்பட்ட நடனமாதின் உருவம் சிந்துவெளி மக்களின் சிற்ப அறிவைப் புலப்படுத்துகின்றது. இதன் இடதுகை நிறைய வளையல்கள் காணப்படுகின்றன. இதனது கூந்தல் மிகவும் நுட்பமாகச் செய்யப்பட்டுள்ளது. (Sundaram1974:13) இச் சிலை வழவழப்பாகவும் ஒழுங்காகவும் அமைந்துள்ளது. வேறுசில உருவச்சிலைகள் நடனஞ்செய்வதற்கு ஏற்றவாறு நிற்கும் கோலத்தில் அமைந்துள்ளன. இச்சிலைகள் சிவபிரானது நடனக் கோலத்தின் முன்னோடியாக அமையலாம் எனபர் றோலண்ட் (Rowland 1967;15) அனால் இது ஆராய்ச்சிக்குரியதாகும் என்பர் சுந்தரம்.
இங்கு கிடைத்துள்ள திமில் பருத்த எருது, குட்டியுடன் இருக்கும் குரங்கு, தனித்திருக்கும் குரங்கு, சிவயோகியின் வடிவம், தரைப்பெண் வடிவங்கள் என்பன அக்கால மக்களின் சிற்ப அறிவை அறிய உதவுகின்றன.
சிந்துவெளிக் கலாசாரத்தின் பின் உருக்கொண்ட வேத கால கலாசாரம் அருவ வழிபாட்டை ஆதரிப்பதால் அங்கு எத்தகைய தொல்பொருட் சான்றுகளும் கிடைத்தில.
எனினும் வேதகாலத் தெய்வங்களான சூரியன், இந்திரன் ஆகியோரது சிற்பங்கள் பாஜாவில் உள்ள பழையவிகாரையின் விறாந்தையில் உள்ளன. இதிலிருந்து மெளரியருக்கு முற்பட்ட சிற்பக்கலையின் சிறப்பை ஊகிக்க முடியும்.
வடஇந்திய வரலாற்றில் சிற்பக்கலையின் உன்னத வளர்ச்சிக்கான சான்றுகளை குப்தர்கால சிற்பங்களில் காணமுடியும் குசானர் கால லிங்க வழிபாட்டின் தொடர்ச்சியாக லிங்கத்தை ஒருமுகத்துடனும், நான்கு முகத்துடனும் படைத்து வழிபடும் மரபினைக் குப்தர்கள் பேணினர். மேலும் திருமாலை அவதாரச்சிற்பமாக வடிக்கும் மரபு இங்கேயே தோற்றம் கண்டது.
வட மதுரையில் உள்ள திருமாலின் சிற்பம், உதயகிரி குகைவாயிலில் உள்ள திருமாலின் வராக அவதார புடைப்புச் சிற்பம், பித்தரக் கோன் கோயிலில் காணப்படும் புராணக் கதை கூறும் சுடுமட் சிலைகள், தசாவதாரக் கோயிலில் நுழைவாயிலின் இருபுறமும் உள்ள கங்கை யமுனை சிற்பங்கள் என்பன குப்தர்களின் சிற்பக்கலைக்கு தக்க சான்றெனலாம்.
தமிழ்நாட்டுச் சிற்பங்களின் சிறப்பியல்புகளில் ஒன்று ஆடற்கலை இலக்கணங்கள் அவற்றில் அளவாய் அமைந்துள்ள நிலையாகும். இவ்விரு கலைகளுமே கோயில்களால் வளர்க்கப்பட்டமையால், இவை எளிதாக கைவரப்பெற்றன. சிற்ப வடிவங்கள் நின்றாலும் அமர்ந்தாலும் கிடந்தாலும் வேறெந்த அமைதியில் தோன்றினாலும், அவை பெரும்பாலும் ஆடற்கலை இலக்கணத்தையொட்டி அமைந்திருப்பதைக் காணலாம். சிற்பிகள் ஆடற்கலை இலக்கணத்தை நன்கறிந்து தம் கலைஉணர்வு, கற்பனைத் திறன் கலந்து அமைப்பதால், தெய்வத் திருமேனிகள் நிறுவப்படும் இடத்துக்குத் தக்கவாறு கலையழகை மட்டுமன்றி அவ்வடிவ அமைப்புகளின் உட்கருத்தையும் உணர்த்தும் வகையில் உள்ளன.
சிற்பக்கலை பண்டைக்காலம் முதற்கொண்டே தமிழரால் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. சங்க காலத்தில் மண், மரம், தந்தம்,கல் ஆகியவற்றில் சிற்பங்கள் செதுக்கப்பட்டன. மண்ணில் சிற்பங்கள் உருவாக்கியவர்கள் "மண்ணீட்டாளர்கள்" எனப்பட்டனர். அக்காலத்தில் இறந்த போர் வீரர்களுக்கு கற்களால் சிலை அமைக்கும் வழக்கமும் இருந்தது.
அ. தட்சிணாமூர்த்தி "தமிழர் நாகரிகமும் பண்பாடும்" என்ற நூலில் தமிழர் சிற்பக்கலையின் சிறப்பியல்புகளை விளக்கியிருக்கின்றார். அதற்காக மயிலை சீனி வேங்கடசாமி அவர்களின் பின்வரும் கருத்தை தனது நூலில் தருகின்றார்.
"நமது சிற்பங்கள் அயல்நாட்டுச் சிற்பங்களைப்போன்று, வெறும் அழகிய காட்சிப் பொருள்களாக மட்டும் இல்லாமல், காட்சிக்கும் அப்பால் சென்று கருத்துக்களையும் உணர்சிகளையும் ஊட்டுகின்றன."
மேலும் வை. கணபதி அவர்களின் பின்வரும் குறிப்பையும் தருகின்றார்.
"நம் நாட்டுச் சிற்பக்கலை மரபின் சிறப்பியல்புகளில் ஒன்று ஆடற்கலையின் இலக்கணங்களையும் இக்கலையில் புகுத்தியதாகும்."
தென்னக வரலாற்றில் சங்க காலத்திலும் அதற்கு முன்னரும் மண், சுதை, மரம், உலோகம் என்பவற்றினால் சிற்பங்கள் ஆக்கப்பட்டமையினை அறியமுடிகின்றது. இங்கு கற்சிற்பங்கள் தோன்றவில்லை. இந்நிலையினையே சங்க மருவிய காலத்திலும் காணமுடிகின்றது.
“வழுவறு மரனும் மண்ணும் கல்லும்
எழுதிய பாவையும் ......”
(மணிமேகலை 21:115-116)
“மண்ணினுங் கல்லினும் மரத்தினும் சுவரினும்
கண்ணிய தெய்வம் காட்டுநர்”
(மணிமேகலை 21: 25-123)
எனும் வரிகளே இதற்கு தக்க சான்று. எனினும் “சேரன் செங்குட்டுவன் வடநாடு சென்று கனக விசயரை வென்று இமயத்திலிருந்து கல் கொணர்ந்து கண்ணகிக்குச் சிலை எடுத்தான்” எனச் சிலம்பு கூறுவதில் இருந்து (சிலப்பதிகாரம் 28:225-231) கற்சிற்பங்கள் தென்னகவரலாற்றில் அரும்புவதை அவதானிக்கலாம்.
சங்க காலத்தில் உலோகத் திருமேனிகளும் வழக்கிலிருந்தன. “இவை பொன் புனைந்த பாவைகள்” என மதுரைக்காஞ்சி (வரி;410) குறிப்பிடுகின்றது. “பொற்சிலை” பற்றிய குறிப்பு ஒன்று குறுந்தொகையிற் (292:3-4)காணப்படுகின்றது நெல்லை மாவட்டத்தைச் சார்ந்த ஆதிச்ச நல்லூரில் நடைபெற்ற அகழ்வாய்வில் தாய்க்கடவுள், நாய், கோழி ஆகிய செப்புத்திருமேனிகள் கண்டெடுக்கப்பட்டன. இவை வரலாற்றுக் காலத்திற்கு முன்பே தமிழகத்தில் உலோகத் திருமேனிகள் இருந்தன என்பதை எடுத்துக்காட்டுகின்றன.
சங்கமருவிய காலத்திலும் மாங்காட்டு மறையவன். திரு வேங்கட மலையில் திருமாலின் கிடந்த வண்ணத்தையும் திருவரங்கத்தில் செங்கண்நெடியவன் நின்ற வண்ணத்தையும் கண்டதாகக் கூறுகின்றான். (சிலம்பு 2:11வரி 40-51)
தமிழகத்தில் பல்லவர்களின் மாமல்லக் குகைக் கோயில் சிற்பங்கள் வரலாற்றுப் புகழ் பெற்றவை. இவை உலக அரங்கில் சிற்பக்கூடம் என்ற சிறப்பினை மாமல்ல புரத்திற்கு கொடுத்ததெனலாம்.
பல்லவ சிற்பம் என்றாலே ஒரு தனி பாணி - மிகவும் இயல்பான தோற்றம் , அதிலும் ஒரு கம்பீரம், சிற்பியின் கலைத்திறன் ஆகமங்கள் என்ற கட்டுப்பாடுகளுக்குள் அடைக்கும் முன்னர் பிறந்த படைப்பு.
மல்லையில் அற்புத புடைப்பு சிற்பத்தை பார்க்கமுடியும்.மல்லை மகிஷாசுர மர்த்தினி மண்டபத்தில் உள்ள மகிஷாசுர மர்த்தினி சிற்பமும், சேஷ சயன பெருமாள் சிற்பமும். ஆகும்.
சிற்பக் கலைக்கு மெருகேற்றிய பல்லவ மன்னன் ராஜசிம்ஹன் காலத்து சோமஸ்கந்தர் வடிவங்கள் பல இடங்களில் உள்ளன. மல்லை கடற்கரை கோயிலில் அற்புதமான வடிவம் ஒன்று உள்ளது. மல்லை கடற்கரை கோயில் உண்மையில் மூன்று ஆலயங்கள் கொண்டது. முதலில் இருந்த சயன பெருமாள் கோயில், அதனை ஒட்டி ராஜ சிம்ஹன் எடுப்பித்த ராஜசிம்மேஷ்வரம் மற்றும் ஷத்ரியசிம்மேஷ்வரம் என்ற இரு சிவ ஆலயங்கள்,
கீழ் உள்ள சோமஸ்கந்தர் வடிவம் ராஜசிம்மேஷ்வர ஆலயத்தில் உள்ளது.
மேலும் நாயன்மார்கள் பாடலிலிலும் பல்லவர் சிற்பங்களின் பாங்கினைக் காணமுடியும்.
மூவிலைவேற் கையானை மூர்த்தி தன்னை
முதுபிணக்கா டுடையானை முதலா னானை
ஆவினிலைந் துகந்தானை அமரர் கோனை
ஆலால முண்டுகந்த ஐயன் றன்னைப்
பூவினின்மேல் நான்முகனும் மாலும் போற்றப்
புணர்வரிய பெருமானைப் புனிதன்றன்னைக்
காவலனைக் கழுக்குன்ற மமர்ந்தான்றன்னைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.
என்ற அப்பர் பாடலடியினைச் சான்றாகக் குறிப்பிட முடியும்.
பொதுவாக செப்புத் திருமேனி என்றவுடன் நாம் சோழர் காலம் என்றே நினைப்போம். எனினும் அவர்களுக்கு முன்னரே பல்லவர் காலத்தில் பல அற்புத செப்புத் திருமேனிகள் வடிக்கப்பட்டன. சான்றாக சோமஸ்கந்தர் செப்புத் திருமேனியை குறிப்பிட முடியும். இந்த சிற்பம் அதன் அமைப்பு, அணிகலன் , வாகு போன்ற பலவற்றை கொண்டு சோழர் காலத்திற்கு முற்பட்ட காலம் என்று அடையாளம் கொள்ளப்படுகிறது. அதன் அளவை முதலில் மனதில் கொள்ள வேண்டும். சோழர் கால சோமஸ்கந்தர் வடிவங்களில் பாதி உயரமே உள்ளது இந்த சிற்பம். அளவு மட்டும் அல்ல, அதில் அமர்ந்திருக்கும் திருக்கோலமும் சற்று வித்தியாசமாக உள்ளது. இவற்றைக் கொண்டே இது சோழர் காலத்துக்கு முந்தைய சிற்பம் என்று கருதப்படு்கிறது. முருகர் வடிவம் தொலைந்துபோய் விட்டது.
பாண்டியர் கால சிற்பங்களும் தமிழகச் சிற்பங்களின் கலைத்திறனுக்குச் சான்றாய் விளங்குகின்றன. தமிழகத்தில் சோழர்காலக் குடந்தை நாகேசுவரர் கோயில், தஞ்சைப் பெரிய கோயில், கங்கை கொண்ட சோழீச்சுரம், தராசுரத்து ஐராவதேசுவரர் திருக்கோயில் ஆகியவற்றிலுள்ள சிற்பங்கள் உலகப் புகழ் பெற்றவை. இவை சிற்பக் கலை வளர்ச்சியையும், அக்கலையில் தமிழகச் சிற்பிகள் பெற்றிருந்த பெருந்திறனையும் உலகுக்கு உணர்த்துவன.
வெண்கல வார்ப்புக் கலையில் முக்கியமாக பஞ்சலோகங்களை மிகப் பெரிய அளவில்
வைத்துக் கொண்டு கலவையினால் செய்து, கோட்பாடுகள், தத்துவங்கள், சிற்ப
சாஸ்திரங்கள் ஆகிவற்றிற்கு ஏற்ப முதலில் மெழுகில் தயாரித்துப் பிறகு, களிமண்
ஒட்டிப் பின்னர் மெழுகி உருக்கி எடுத்து இடைவெளியில் உருக்கப்பட்ட உலோகத்தை
அழகுபட வார்க்கின்ற கலையை இன்றும் உலகம் அனைத்தும் மெய்சிலிர்த்து வியக்கும்
அளவுக்குச் சோழர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.
சோழர் காலத்து உலோகத் திருமேனிகள் மிக்கவாறும் 'சிரே பெர்டு'(Cire Perdu) என்னும் முறையில் வார்க்கப்பட்டவையாகும். தஞ்சையிலுள்ள சில கல்வ்வெட்டுகள் திடமாகவும்(Solid), உள்ளீடுள்ளதாகவும்(hollow) உள்ள உலோகத் திருமேனிகள் வார்ப்பது பற்றிய செய்திகளைக் கொண்டுள்ளன. தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தற்போது காணப்படும் உலோகத் திருமேனிகள் பண்டைக் காலத்து வார்ப்புக் கலையின் சிறப்பினை எடுத்துக் காட்டுவனவாகத் திகழ்கின்றன
இரண்டாம் இராசராசனின் கலைப்படைப்பாய் எழுந்த ஐராவதேசுவரர் திருக்கோயில், சிற்பக்கலைச் சாதனைகளின் உச்சம் என்பர். அழகிலும் நுணுக்கத்திலும் ஆற்றலிலும் மிக உன்னத நிலையிலிருந்தே இச்சிற்பக் கலையின் எச்சமாக கம்போடியாவின் ‘அங்கோர் வாட்’ கோயில்களிலும் இந்திய நாட்டு ‘லெம்பா பந்தாய்’ பள்ளத்தாக்கிலும் சிதைவுற்றிருக்கும் சிற்பங்களே சீரிய எடுத்துக்காட்டுகள்.
இந்திய சிற்பக் கலையில் இந்து சிற்பக்கலை பற்றிய தகவல்களினை இதுகாறும் தொல் பொருட்கள் துணையுடன் அலசினோம் இனி இலக்கியம் வழி இனம்காண்போம்.
20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஸ்ரீ லலிதா நவரத்னம் என்னும் பெயரில் வெளிவந்த நூலொன்று பண்டைக் காலத்தில் ஏற்பட்ட சிற்ப நூல்களாக 32 நூல்களைப் பட்டியலிட்டிருக்கிறது.
இதில் கண்டவை
1) விசுவதர்மம்
2) விசுவேசம்
3) விசுவசாரம்
4) விருத்தம்
5) மிகுதாவட்டம்
6) நளம்
7) மனுமான்
8)பானு 9) கற்பாரியம்
10)சிருஷ்டம்
11) மானசாரம்
12) வித்தியாபதி
13) பாராசரியம்
14) ஆரிடகம்
15) சயித்தியகம்
16) மானபோதம்
17) மயிந்திரமால்
18) வஜ்ரம்
19) ஸௌம்யம்
20) விசுவகாசிபம்
21) கலந்திரம்
22) விசாலம்
23) சித்திரம்
24) காபிலம்
25) காலயூபம்
26) நாமசம்
27) சாத்விகம்
28) விசுவபோதம்
29) ஆதிசாரம்
30)மயமான போதம்
31) மயன்மதம்
32) மயநீதி
என்பனவாகும். இவற்றுள் பல இன்று இல்லை. இப் பட்டியலில் காணப்படும் இன்றும் புழக்கத்திலுள்ள நூல்களான மானசாரம், மயன்மதம் (மயமதம்) என்பவை சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டாலும், தென்னிந்திய நுல்களாகும்.
'சிற்பச் செந்நூல்' எனும் அரியதொரு நூலை உருவாக்கியிருக்கும் சிற்பக் கலைஞர் திரு.வை. கணபதி, நூலிற்கான முகவுரையில் தென்னாட்டுச் சிற்பக்கலை மரபைச் சேர்ந்த கலை நூல்களாக மானசாரம் என்ற கட்டடக்கலை நூல் குறிபபிடும் 32 நூல்களின் பட்டியலைத் தந்துள்ளார். மனுசாரம் என்னும் சிற்பக் கட்டடக்கலை நூல் குறிப்பிடும் 28 நூல்களில்,மானசாரம் குறிப்பிடாத 18 நூல்களின் பெயர்களைப் பட்டியலிட்டுள்ளார் .
இந்த ஐம்பது நூல்களுள் பெரும்பாலானவை இன்றில்லை என்று குறிப்பிடும் சிற்பி, 'இன்று நம்மிடையே கீழ்க்கண்ட நூல்களே தங்கிவருகின்றன' என்று கூறி மயமதம், விஸ்வகர்மீயம், மானசாரம், ஐந்திரமதம்,மனுசாரம், காஸ்யபம் எனும் ஆறின் பெயர்களை மட்டுமே தந்துள்ளார். 'இவை சிறபக்கலை பற்றியும் கட்டடக்கலை பற்றியும் ஒருமித்துப் பேசும் முழு நூல்களாகும். இவற்றிற்கு வாஸ்து சாஸ்திரம் என்று பெயர்' என்கிறார்.
மானசாரம் என்பது, ஒரு சிற்பநூல் ஆகும். பண்டைக்கால இந்தியாவின் நகர அமைப்பு, கட்டிடக்கலை, படிமவியல் ஆகியவை பற்றிய விடயங்கள் இந்நூலில் எடுத்தாளப்படுகின்றன. மேற்படி துறைகள் தொடர்பாகப் பல நூல்கள் இருந்த போதும், முழுமையான நூல்கள் என்று சொல்லத் தக்கவை மிகச் சிலவே. இம் மிகச்சில முழுமையான நூல்களுள் மானசாரமும் ஒன்றாகும். சிற்பநூல்களுள் மிகவும் நீளமானது என்று சொல்லத்தக்க வகையில் 5400 பாடல்களைக் கொண்டுள்ள இந்நூல், 70 அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டுள்ளது ஆயினும், பெரும்பாலும் தென்னிந்திய மரபுகள் பற்றியே பேசுவதால், இது தென்னிந்தியாவிலேயே எழுதப்பட்டிருக்கவேண்டும் என்ற கருத்து நிலவுகின்றது.
மயமதம் என்பது மிகப் பழைய காலத்தில் மயன் என்பவரால் எழுதப்பட்ட சிற்பசாஸ்திர நூலாகும். இது தென்னிந்தியாவிலேயே ஆக்கப்பட்டதாகக் கருதப்படினும், இது எழுதப்பட்ட மொழி வட மொழியாகிய சமஸ்கிருதமாகும். இது மனிதனுக்கான வீடுகள் முதல் இறைவனுக்காக அமைக்கப்படும் பெரிய கோயில்கள் வரையிலான பலவித கட்டிடங்களின் அமைப்பு முறைகள் பற்றி விவரிப்பதுடன், ஊர்கள், நகரங்கள் ஆகியவற்றின் அமைப்புகள் பற்றிய விபரங்களையும் தன்னுள் அடக்கியுள்ளது. கட்டிடங்கள் கட்டுவதற்கான நிலத்தைத் தெரிவு செய்வது முதற் கொண்டு, கட்டிடங்கள் நோக்கவேண்டிய திசை, அதன் அளவுகள், பொருத்தமான கட்டிடப்பொருள்கள் என்பன பற்றியும் மயமதம் விரிவாக எடுத்துரைப்பதுடன், விக்கிரகக் கலையும் இதன் உள்ளடக்கத்துள் அடங்குகிறது.
வாசுத்து சூத்திர உபநிடதம் என்பது இந்திய மரபுவழிச் சிற்பக்கலை குறித்த ஒரு பழங்கால நூல் ஆகும். 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இந்நூல் சமஸ்க்கிருத மொழியில் எழுதப்பட்டது. இதை எழுதியவர் பிப்பிலாடர் என்பவர். பிப்பிலாடர் நான்கு மாணவர்களின் சிற்பநூல் பற்றிய கேள்விகளுக்கு விளக்கம் அளிப்பது போன்ற வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்நூல் இதன் காலத்துக்குச் சற்று முன்னும் பின்னும் எழுந்த சிற்பநூல்களிலிருந்து மாறுபட்டதாக அமைந்துள்ளது. மற்ற நூல்கள் சிற்பம் தொடர்பிலான செயல் முறைகளை விரிவாக விளக்குவனவாக அமைந்துள்ளன. ஆனால் வாசுத்து சூத்திர உபநிடதமோ சிற்பக்கலையைக் கோட்பாட்டு அடிப்படையில் விளக்குகின்றது.
சிற்ப சாத்திரம் அதர்வ வேதத்தின் ஒரு பகுதி என்னும் கருத்தைப் பல இடைக்காலச் சமசுக்கிருத நூல்கள் கூறுகின்றன. அதர்வ வேதத்தில், சிற்ப சாத்திரம்குறித்த தகவல்கள் அதிகம் இல்லை. அதர்வ வேதம் கிறித்துவுக்கு முந்திய காலப்பகுதியைச் சேர்ந்தது. முறையான சிற்ப நூல்களின் காலம் கிபி ஏழாம் எட்டாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டதே. எனவே இந்தப் பல நூற்றாண்டுக் கால இடைவெளியை நிரப்பும் வகையிலான சிற்ப நூல்கள் எதுவும் கிடைத்தில. வாசுத்து சூத்திர உபநிடதம் இத்தகைய ஒரு நூலாக இருக்கலாம் என்ற கருத்தை இந் நூலை முதன்முதலாகப் பதிப்பித்தவர்கள் கொண்டிருந்தனர். எனினும், இந்நூலின் உட்சான்றுகளும் வெளிச் சான்றுகளும் இந்தக் கருத்தை உறுதி செய்வதாக இல்லை எனச் சில அறிஞர்கள் கருதுகின்றனர்.
சைவாகமங்கள் இருபத்தெட்டு. இவற்றுள் தலையாயது காமிகாகமம் ஆகும். இது மிகப் பெரிய ஆகமங்களுள் ஒன்று. ஏனைய ஆகமங்களைப் போலவே இதுவும் சமஸ்கிருத மொழியிலேயே எழுதப்பட்டுள்ளது. சமஸ்கிருத மொழியில் இருந்தாலும், தமிழ் நாட்டில் மட்டும் வழங்கிவந்த கிரந்த எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளதால், வட இந்தியப் பகுதிகளில் இது அதிகம் அறியப்படவில்லை.
காமிகம் என்பது சமஸ்கிருதத்தில் விரும்பிய பொருள் எனப் பொருள்படும். காமிகாகமம், ஆன்மாக்கள் விரும்பிய பொருள்களை வழங்கி, அவை மலங்களில் இருந்து விடுதலை பெற உதவுவதால், இப்பெயர் பெற்றதாகக் கூறுகிறார்கள்.
இந் நூலின் 75 பிரிவுகளில் 60 பிரிவுகள் கட்டிடக்கலை, சிற்பம் ஆகியவற்றுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
காமிகாகமத்தில் கூறப்பட்டுள்ள கட்டிடம் மற்றும் சிற்பம் தொடர்பான அம்சங்கள், பிற்காலத்தில் உருவான தனித்துவமான சிற்பநூல்களான மயமதம், மானசாரம் போன்றவற்றுக்கு அடிப்படையாக அமைந்ததாகச் சில ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.
மயமதம் எனும் சிற்பநூலை சமஸ்கிருதத்தில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த புரூனோ டாகென்ஸ் (Bruno Dagens), அந் நூலுக்காக எழுதிய அறிமுகப் பகுதியில்,
“காமிகாகமத்திலும் மயமதத்திலும், சொல்லுக்குச் சொல் சரியாக அமைந்த வசனங்களும், சில சமயங்களில் முழுமையான பத்திகளும் கூடப் பொதுவாக அமைந்துள்ளது. இரண்டில் ஏதாவதொன்று மற்ற நூலிலிருந்து விடயங்களைப் பிரதிபண்ணியிருக்கக்கூடும்”
எனக்கருதும் அவர், காமிகாகமத்தில் கட்டிடக்கலை தொடர்பான அம்சங்கள் ஒழுங்கின்றியும், ஒருங்கிணைவின்றியும் அமைந்திருப்பதைச் சுட்டிக்காட்டி, மயமதம் போன்ற ஒரு நூலிலிருந்து, காமிகாகமத்தில் பிற்காலத்தில் இடைச் செருகல்கள் ஏற்பட்டிருக்கக்கூடும் எனக் கருத்து வெளியிட்டுள்ளார். இது போன்றே காரணாகமும் சிற்பக்கலை பற்றிப் பலவிடங்களில் பகர்கின்றது.
இந்திய வரலாற்றின் பக்கங்களினை உலகமே உற்று நோக்குகின்ற தென்றால் அதற்கு இந்து மதம் ஆங்கே பிறந்து, இந்துக் கலைத்துவத்தை ஆத்ம ஞான தேடலாக, உள்ளக் கிளர்ச்சியை ஊட்டும் உன்னத படைப்பாக வெளிப்படுத்தியதோடு இன்றைய விஞ்ஞான உலகே வியக்கும் விந்தையினைக் கலைக்குள் புகுத்தியமையும் ஒரு காரணமென்று கூறிவிடலாம்.
"நவீன இயற்பியல் விஞ்ஞானிகள் பொருளை அசைவற்ற ஜடமாகக் கருதவில்லை. துடிப்புள்ள தொடர்ந்து நடனமிடும் ஒன்றாகக் கருதுகின்றனர். இந்தியக் கலைஞர்கள் சிவ நடராஜரின் நடனத்தைச் சித்தரிக்கும் அருமையான ஓவியங்களையும் சிற்பங்களையும் படைத்துள்ளனர். இவை பிரபஞ்ச நடனத்தின் பார்வை சித்திரங்களாகும். மேற்கத்திய நவீன உபகரணங்களை உபயோகித்து இப்போது நாம் கண்டறிந்துள்ளவை சிவ நடனத்தின் புதிய பிரதியே. ஹிந்து சிற்பங்களில் உள்ள பிரம்மாண்டமும் அழகும் இதிலும் உள்ளன என்றே எனக்குத் தோன்றுகிறது. ஆகவே அவை இரண்டையும் இணைத்துள்ளேன்."
என்கிறார் “காப்ரா” எனும் அணு விஞ்ஞானி.
இவரது கூற்றின் மூலம், இந்துக் கலை அன்றும், இன்றும், என்றும் மெஞ்ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச்சுடராய் விஞ்ஞானமாகி வியக்கும் விந்தையைத் தன்னகத்தே கொண்டுள்ள தெனலாம்.
சிவசக்தி அந்தரசக்தி முகனூல்