வியாழன், 21 செப்டம்பர், 2017

மனைவி மீது காதல் கடல் இனும் பெரிது இலக்கியம் இல்லறம்

நற்றிணை Natrinai 166

குழந்தை விளையாடிகிறது
நம் காதலுக்குத் தடையில்லை
அவன் அவளிடம் சொல்கிறான்
பொன்னைப் போன்றது உன் நன்மேனி. மணியைப் போன்றது மணக்கும் உன் கூந்தல். பூம்போது போன்றது காதல் பேசும் உன் கண். மூங்கில் போன்றது அழகிய உன் தோள். இவற்றையெல்லாம் காணும்போது என் மனம் மகிழ்ச்சியில் திளைக்கிறது. அறத்தெய்வமே என்னிடம் வந்திருப்பது போல உணர்வு தோன்றுகிறது. அத்துடன் நம் புதல்வனும் விளையாடக் (பொய்தல்) கற்றுக்கொண்டிருக்கிறான். வேறிடத்தில் எனக்கு வேலை எதுவும் இல்லை. நினைத்துப் பார்த்தால் எதற்காக நான் உன்னை விட்டுப் பிரிந்து செல்ல வேண்டும்? மடந்தைப் பெண்ணே, உன்மீது எனக்குள்ள காதல் கடலைக் காட்டிலும் பெரியது. தலைவன் தலைவியிடம் இப்படிக் கூறுகிறான்.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
பாடல் – பாலை

பொன்னும் மணியும் போலும் யாழ நின்
நன்னர் மேனியும் நாறு இருங் கதுப்பும்
போதும் பணையும் போலும் யாழ நின்
மாதர் உண்கணும் வனப்பின் தோளும்
இவை காண்தோறும் அகம் மலிந்து யானும்
அறம் நிலைபெற்றோர் அனையேன் அதன்தலை
பொலந்தொடிப் புதல்வனும் பொய்தல் கற்றனன்
வினையும் வேறு புலத்து இலெனே நினையின்
யாதனின் பிரிகோ மடந்தை
காதல் தானும் கடலினும் பெரிதே

செலவுக் குறிப்பினால் வேறுபட்ட கிழத்திக்குத் தலைவன் சொல்லியது

ஆசிரியர் பெயர் தெரியவில்லை

கி.மு. 2 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய பாடல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக