புதன், 20 செப்டம்பர், 2017

சென்ன தெலுங்கு சென்னி தமிழ் சென்னை தமிழே வேர்ச்சொல் சொல்லாய்வு

Magudeswaran Govindarajan
சென்னை என்பது தமிழ்ச்சொல்லன்ற
ு, தெலுங்குச்சொல் என்று இக்கட்டுரை கூறுகிறது. விளக்குக என்று
வேண்டுகோள் வந்தது. இது அக்கட்டுரை இணைப்பு.
http://timesofindia.indiatimes.com/city/chennai/Chennai-is-a-Telugu-word-nothing-Tamil-about-it-Historian/articleshow/
34640530.cms?from=mdr

இது பழைய கட்டுரை. ஆனால், பாரிஸ் நகரைச் சேர்ந்த ஒரு வரலாற்றாளர் ஜேபிபி
மூரே கூறுகிறார் என்று அக்கட்டுரை தொடங்குகிறது.
கட்டுரை என்ன சொல்கிறது என்றால், வெங்கட்டப்ப நாயக்கர் அப்பகுதியை
ஆங்கிலேயர்க்குத் தருகையில் ‘மத்ராஸ்பட்டணம்” என்றே ஆவணங்கள்
குறிப்பிடுவதாகக் கூறுகிறார். திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தில்
கால்டுவெல்லார் இந்த மத்ராஸ் பட்டணத்தின் பெயர்க்காரணம் “முத்துராசுப்
பட்டணம்” என்பதாகக் கூறுகிறார். நிற்க.
ஆங்கிலேயர்க்குத் தரப்பட்ட பிறகுதான் அவ்விடத்திற்குச் சின்னபட்டணம் /
சீனாபட்டணம் / சென்னபட்டணம் போன்ற பெயர்கள் தோன்றிக் காணப்படுவதாக
அக்கட்டுரை கூறுகிறது.
இந்தச் சென்னா என்பதிலிருந்து சென்னை என்ற சொல் உருவாக்கப்பட்டது
என்றும், சென்னை தமிழ்ச்சொல் இல்லை என்றும், அதன் வேர்ச்சொல் ‘சென்ன”
என்றும் கட்டுரை வலியுறுத்துகிறது.
சென்ன என்னும் சொல் கன்னடத்திலும் இருக்கிறது. சென்ன என்றால் பெரிய.
சிக்க என்றால் சிறிய. சென்னபட்டணம் என்ற ஊர் கர்நாடத்தில் மைசூருக்கு
வடக்கே இருக்கிறது. சிக்மகளூர் (சிக்கமகளூர், சின்ன மகளுடைய ஊர்) என்னும்
ஊரும் கர்நாடகத்தில் இருக்கிறது.
தெலுங்கிலுள்ள சென்ன என்பதற்கு நல்ல, அழகிய என்னும் பொருள் என்கிறார்
மூரே. “சென்னை என்பதற்கு உற்சவ மூர்த்தி கிளம்பும்போது ஒலிக்கப்படும்
கோவில் மேளம் என்பதுதான் தமிழ்ப்பொருள். அதற்கும் ஊர்ப்பெயரான
சென்னைக்கும் தொடர்பில்லை” என்று செல்கிறது அவராய்வு.
சென்ன என்பதைச் சென்னை ஆக்கியது ஒன்று. கோயம்புத்தூரைக் கோவை
ஆக்கியதுபோல், நெல்வேலியை நெல்லை ஆக்கியதுபோல் சென்ன என்பதைச் சென்னை
ஆக்கினோம்தான். ஆனால் தமிழில் சென்ன, சென்னா போன்ற சொல்வேர் இல்லையா ?
ஏன் இல்லை ? கட்டாயம் இருக்கிறது.
சென்னக்கூனி என்பது இறால்மீன்வகை. வாளைமீனுக்கும் விலாங்குமீனுக்கும்
கல்யாணம். அந்தச் சென்னாக்கூனிக்கூட்டத்துல ஊர்கோலம்... என்ற
கானாப்பாட்டில் சென்னாக்கூனி என்னும் மீன்வகை வருகிறது, பாருங்கள்.
சென்னம் என்பது ஒரு நீர்ப்பறவை வகை. இவ்விரண்டு பெயர்களையும் சென்னைப்
பட்டணம் வாழ் மீனவர்களுடைய மொழியை ஆராய்ந்தால் கண்டுபிடிக்கலாம். அத்தகைய
சொற்கள் அவர்களிடத்திலே வழங்குவது கண்கூடு என்றால் அதுவே வேர்ச்சொல்.
சென்ன என்பதற்கான தமிழ்வேர்ச்சொல். ஏனென்றால் அத்தகைய மீனோ பறவையோ அங்கே
மிகுந்திருக்க வேண்டும். அப்படியேதுமில்ல
ை என்றால் சென்னத்தின் வேறு தமிழ்வேர்களை நோக்கி நகரவேண்டும்.
’நெடுஞ்சேட்சென்னி’ என்ற மன்னன் வாழ்ந்திருக்கிறான். சென்னி என்பது
சோழர்களின் பட்டமாய் இருந்திருக்கிறது. சோழமண்டலக் கடற்கரையில் சென்னி
என்ற ஊர்ப்பெயர் அமையாமலா போய்விடும் ? அதற்கும் வாய்ப்பிருக்கிறது.
இந்தச் சென்னி என்பதற்கு ‘உயர்வு, சிறப்பு, தலை, உச்சி’ ஆகிய பொருள்கள்
உள்ளன. அதனால்தான் சென்னிமலை என்று ஊரும் இங்குள்ளது. சென்னிமலையை
வடமொழியில் ‘சிரகிரி’ என்கிறார்கள். சென்னி என்றால் தலை என்பது அதன்மூலம்
உறுதியான விளக்கமாய்ப் பெறப்படுகிறது. உயர்ந்தது, பெரியது, தலையாயது,
சிறப்பானது என்ற பொருளைச் சென்னி என்ற சொல்லிலிருந்து பெறுகிறோம்.
சென்னபட்டணம் என்பது பெரிய/
சிறந்தபட்டணம் என்னும் பொருளிலோ சோழப்பட்டணம் என்னும் பொருளிலோ
வழங்கப்பட்டிருக்க வேண்டும். அன்றேல் மீன்வகை /நீர்ப்பறவை
மிக்கிருந்தமையால் தோன்றியிருக்கவேண்டும். தெலுங்கு, கன்னடச்
சென்னத்திற்கும் வேர்ச்சொல் தமிழ்தான். அதனால் சென்னை என்பது தூய
தமிழ்ச்சொல்லே, அடித்துச் சொல்லலாம்.
- கவிஞர் மகுடேசுவரன்
21 ஏப்ரல், 10:59 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக