வியாழன், 21 செப்டம்பர், 2017

கமுதி குண்டாறு அதானி க்கு தாரைவார்க்கப்பட்டது ஒரு நாளைக்கு 2லட்சம் லிட்டர் குண்டாறு ஆறு நதிநீர் சுரண்டல் கார்ப்பரேட் பன்னாட்டு முதலாளித்துவம்

கமுதியை லபக்கிய கவுதம்!*

(எஸ்.பி.ராஜேந்திரன், ஆர்.மோகன், தீக்கதிரில்)

இராமநாதபுரம், ஜூன் 18-

கவின்மிகு முல்லை திருநகரம் என்ற ஊர், மேற்குத் தொடர்ச்சி
மலைப்பகுதிக்கும் வங்காள விரிகுடாவுக்கும் இடையில் உள்ளது. வருடத்திற்கு
300 நாட்களுக்கும் அதிகமாக மிகச்சரியான அளவு சூரிய வெப்பத்தை குவி
மையமாகஈர்க்கக்கூடிய பூமி. இன்றைக்கு கமுதி என்று அழைக்கப்படுகிற அந்த
ஊரின் மக்களுக்கு இந்த வரலாறு தெரிந்திருக்கிறதோ இல்லையோ - மோடியின்
அருமை நண்பர், இந்தியாவின் மிகப்பெரும் பணக்கார கார்ப்பரேட் முதலாளி
கவுதம் அதானிக்குத் தெரிந்திருக்கிறது.

*இராமநாதபுரம் மாவட்டமும் அதில் அமைந்திருக்கும் கமுதிவட்டமும் அதன்
சுற்றுவட்டாரத்தில் அருப்புக்கோட்டை துவங்கிமுதுகுளத்தூர், சாயல்குடி
உள்ளிட்ட பகுதிகள் முழுவதும் வறண்ட பூமி என்றே தமிழக அரசால்
வகைப்படுத்தப்பட்டுள்ளது. வறட்சியைத் தவிர இங்கு வேறு எதுவும் இல்லை
என்றே இந்த மக்களும் நம்பவைக்கப்பட்டிருக்கிறார்கள்.* வறண்டு, காய்ந்து,
கருவேல மரங்களே கடல்போலக் காட்சியளிக்கும் இந்தப் பகுதியில் யார் வந்து
எதைச் செய்தால் என்ன? என்ற கருத்து வலுவாக்கப்பட்டு, கண்ணுக்கெட்டிய
தூரம் வரை கவுதம் அதானிக்கு தாரைவார்த்துவிட்டார்கள்.*வறண்ட பூமி, கவுதம்
அதானிக்கு ஒரே வருடத்தில் பல்லாயிரம் கோடி ரூபாய்களை வருமானமாக ஈட்டித்
தந்திருக்கிறது. நிலத்தைப் பறிகொடுத்த மக்கள் தவித்த வாய்க்குத் தண்ணீர்
கூட இல்லாமல் காய்ந்து கிடக்கிறார்கள்.*

உண்மையில் கமுதி வறண்ட பூமி அல்ல. அதன் வரலாறு வளம்மிக்கது. ஐவகை
நிலங்களில் முல்லை நிலப்பகுதியைச் சார்ந்தது. கவின்மிகு முல்லை நிலத்தின்
திருநகரமாக இதுஇருந்தது. முல்லை நிலத்தின் கவின்மிகு வளம் பற்றி கி.பி.
4-5 ஆம்நூற்றாண்டுக் கால பதினெண்கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான ‘கார்
நாற்பது’ பாடல்களில் விரிவாக இடம்பெற்றுள்ளது. “கார்கால தொடக்கம். இரவு
முழுவதும் விடாத மழை. காலைப்பொழுதில் உழவர்கள் தத்தம் நிலத்தில் சென்று
ஏர்பூட்டி செம்மண்பூமியின் புழுதி மேலும் கீழும் சென்றிடுமாறு உழுது
தொழில்செய்தனர். உழுத நிலத்தில் விதைத்த வரகுகளின் முளைகள்மேலே தெரிந்தன.
உழவர்கள் தங்கள் தலைமேல் ஓலைக்குடையை பிடித்து தொழில்செய்த நிகழ்வு
அங்கிருந்த கலைமான்கள் பரந்து திரிந்ததுபோல் காட்சி அளித்தது. பறை ஒலிக்க
உழவர்கள் களையைக் களைய, களைந்தபின் வரகு செழித்து வளர்ந்துவிட்டது.

இரண்டு இரண்டாக பிளந்து காணப்பட்ட கதிர்களை மயில்கள் கொத்தித் தின்றன”.-
இப்படியாக செழித்து நின்ற பூமி தான் கமுதி. இந்தச் செழிப்புக்கு காரணம்
இங்கு ஓடும் குண்டாறு. மேற்குத்தொடர்ச்சி மலையில் புறப்பட்டு மதுரை
மாவட்டத் தின் ஒரு பகுதி, விருதுநகர் மாவட்டத்தின் ஒரு பகுதி வழியாக
கமுதியை வளம்கொழிக்கச் செய்து வங்கக் கடலில் கலக்கிறது குண்டாறு. இப்போது
குண்டாறைக் காணவில்லை. கால வெள்ளத்தில் குண்டாறு ஒரு காட்டாறாக
மாறிப்போனது. மழை பெய்தால் இதன் வழியாக வெள்ளம் வரும் என்று மட்டும்
மக்களுக்குத் தெரிந்திருக்கிறது.*ஆனால் மழை பெய்யாத காலத்திலும், வெள்ளம்
வராத காலத்திலும் கூட தன்னுடைய நிறுவனத்தின் 25லட்சம் சூரியமின்தகடுகளை
குளிப்பாட்டுவதற்கு ஒவ்வொரு நாளும் சுமார் 20லட்சம் லிட்டர் நீரை இதே
குண்டாற்றின் மணல் வெளிகளின் கீழிருந்து உறிஞ்சி எடுக்க முடியும் என்ற
உண்மை மோடியின் நண்பர் கவுதம் அதானிக்கு தெரிந்திருக்கிறது.*

மேற்குத் தொடர்ச்சி மலையின் சதுரகிரி மலைப்பகுதியில் புறப்பட்டு மதுரை
மாவட்டத்தின் சிவரக்கோட்டை, திருமங்கலம் பகுதிகளை வளமாக்கி, விருதுநகர்
மாவட்டத்தின் காரியாபட்டி, திருச்சுழி வழியாக கமுதிக்கு வரும் இந்தக்
குண்டாற்றின் கரைகளில் கவின்மிகு முல்லைத் திருநகரம் என்ற மாபெரும்
மக்கள் சாம்ராஜ்யம் இருந்திருக்கிறது. அதன் அழியாச் சுவடாகவே இன்றைக்கும்
குண்டாற்றின் கரையில் கமுதி கோட்டைமேடு நின்றுகொண்டிருக்கிறது. இந்தக்
கோட்டை மேட்டில் இருந்துதான் அதானியின் கம்பெனிக்கு தண்ணீர்
சென்றுகொண்டிருக்கிறது. ஆனால் அதே கோட்டை மேடு உள்ளிட்ட பகுதிகளில்
குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் மக்கள் தத்தளிக்கிறார்கள்.

2

*அதானியின் சாம்ராஜ்யம் இந்தியாவில் இதுவரைக்கும் உருவான சாம்ராஜ்யங்களை
விடப் பெரியது. ஒட்டுமொத்த இந்தியாவின் விவசாயிகளும், வங்கிகளில்
வாங்கியிருக்கிற பயிர்க்கடனின் மொத்தத் தொகை சுமார் ரூ.75 ஆயிரம் கோடி.
ஆனால், ஒரே ஒரு கவுதம் அதானி மட்டும் இந்தியாவின் வங்கிகளில்
வாங்கியிருக்கிற கடன் தொகை ரூ.72 ஆயிரம் கோடி. எப்பேர்ப்பட்ட சாம்ராஜ்யம்
இது.* இந்தியாவின் மிகப்பெரும் சூரிய மின் உற்பத்தி நிலையத்தை
அமைப்பதற்கு கவுதம் அதானி, கமுதியை தேர்வு செய்தார். சூரிய வெப்பம் 300
நாட்களுக்கும் அதிகமாக மிகச்சரியான கோணத்தில் - அதாவது 35 டிகிரி
கோணத்தில் - சிந்தாமல் சிதறாமல் அதே நேரத்தில் மிகக்கொடூரமாகச்
சுட்டெரிக்காமல் மின்சார உற்பத்திக்கு ஏதுவான முறையில் வந்து விழுகிற
இடம் கமுதி. கிழக்கிலிருந்து வரும் கடல்காற்றின் வெப்பம் மேற்கிலிருந்து
வரும் மலைப்பகுதியின் தென்றல் காற்று இரண்டும் சங்கமித்து சூரிய
வெப்பத்தை மிகச்சரியான சூட்டுடன் மின் உற்பத்தி தகடு களுக்கு அனுப்பி
வைக்கிற இடம் இது.*நரேந்திர மோடி மூன்றாண்டுகளுக்கு முன்பு ஆட்சிப்
பொறுப்பேற்றவுடன், முக்கியத்துவம் வாய்ந்த மின்சாரத்துறையை பியூஷ்
கோயலிடம் கொடுத்தார். பியூஷ் கோயல், பாரதிய ஜனதா கட்சியின் பொருளாளர்.
ஆடிட்டர். மிகப்பெரும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆலோசகர்.* இந்தியாவின்
செல்வ வளம் கொழிக்கும் அதிமுக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் இன்றைய
நிலையில் முதன்மையானது எரிசக்தி மற்றும் மின்சாரத்துறைதான். ஜப்பானில்
புகுஷிமா அணுஉலை விபத்திற்குப் பிறகு உலகம் முழுவதும் அதுவரையிலும்
தீவிரமாக இருந்த அணுசக்தி மின் உற்பத்தி முயற்சிகள் சற்று
தொய்வடைந்திருந்த தருணத்தில்தான் இந்திய மின்சாரத்துறை அமைச்சராக பியூஷ்
கோயல் வந்தார்.

முதலாளிகளின் கவனம் இந்தக் காலக்கட்டத்தில் சூரிய மின்சார உற்பத்தியின்
பக்கம் திரும்பியது. மாற்று எரிசக்தி - மரபு சாரா எரிசக்தி துறையில்
கவனம் செலுத்தப்போகிறோம் என பியூஷ் கோயல் அறிவித்தார். அரசாங்கம் எந்த
உதவி வேண்டுமானாலும் செய்யத் தயார்என்று அறிவித்தார். மோடியின் நண்பர்
கவுதம்அதானி அதுவரையிலும் இந்தியாவில் நிலக்கரிமூலமான மின்சார உற்பத்தி
நிலையங்களைத்தான் வடமாநிலங்களில் நடத்திக் கொண்டிருந்தார். மோடியும்,
கோயலும், அதானியும் கைகோர்த் தார்கள்.

*சூரிய மின் உற்பத்தித் துறையில் அதானி நுழைந்தால் இதுவரையில் இந்திய முத
லாளிகள் சம்பாதிக்காத அளவிற்கு கொள்ளை லாபம் சம்பாதிக்க முடியும் என்று
கணக்குப் போட்டார்கள். இடத்தைத் தேடினார்கள். சிக்கியது கமுதி.2015
இறுதிவாக்கில் சூரிய மின்சார உற்பத்தி செய்ய முதலீடு செய்ய வாருங்கள் என
பெயரளவில் பெரு முதலாளிகளுக்கு அழைப்பு விடுத்ததுமத்திய அரசு.
அதைத்தொடர்ந்து தமிழகத்தில்தொழில் தொடங்க தயாராக இருப்பதாகக்கூறி அதானி
குழுமம் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து பேச்சு நடத்தியது.
ஒப்பந்தம் தயாரானது. இராமநாதபுரம் மாவட்டம்கமுதி வட்டாரம், செங்கப்படை
கிராமத்தை மையமாகக் கொண்டு கிட்டத்தட்ட 5 ஆயிரம் ஏக்கர்நிலங்கள்
கையகப்படுத்தப்பட்டன. ‘கையகப் படுத்தல்’ என்றால் அது அரசாங்க வார்த்தை.
உண்மையில் கமுதியின் கிராமப்பகுதிகள் முழுவதும் உள்ள விவசாயிகளிடம்
மிரட்டியும், ஆசை காட்டியும் நிலங்கள் கைப்பற்றப்பட்டன.*

*வறண்ட பூமியில் தொழில் செய்து வந்தால் நல்லது தானே என்று நியாயம்
பேசப்பட்டது. இந்த அநியாயத்தின் பின்னணியில் தமிழக அமைச்சர்
பெருமக்களுக்கும் கோடி கோடியாக பணம் கைமாறியது.* அன்றைய தமிழக
மின்சாரத்துறை, அதானியின் சூரிய மின்சார நிறுவனத்தை உருவாக்குவதற்காக
தன்னையே ‘அர்ப்பணித்துக்’ கொண்டது. 2016 பிப்ரவரியில் கமுதி சூரியமின்
திட்டம்என்ற பெயரில் அதானி குழுமம் பிரம்மாண்ட மான மின் உற்பத்தி
நிலையத்தை கட்டமைக்கத் துவங்கியது. 8500 தொழிலாளர்கள் எட்டு மாதகாலத்தில்
மிகப்பிரம்மாண்டமாக உருவாக்கி னார்கள். வெளிநாடுகளிலிருந்து கப்பல்கள்
மூலம்வரவழைக்கப்பட்ட சுமார் 25 லட்சம் சூரிய மின் தகடுகள் கிட்டத்தட்ட
2500 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டன.

*3லட்சத்து80 ஆயிரம் தூண்கள்,27 ஆயிரம் மீட்டர் அளவிற்கு கட்டுமானம், 576
மின்சேமிப்புக் கலங்கள், 154 டிரான்ஸ்பார்மர்கள், சுமார் 6 ஆயிரம்
கிலோமீட்டர் அளவிற்கான மின் வயர்கள் என கிட்டத்தட்ட ரூ.4, 500 கோடி
அளவிற்கு முதலீடு செய்யப்பட்டு கமுதி சூரிய மின்திட்டம் என்ற பெயரில்
அதானி கிரீன் எனர்ஜி (தமிழ்நாடு) நிறுவனம் உருவாக்கியது. மேற்படி
ரூ.4,500 கோடி பணம், அதானியின் பாக்கெட்டிலிருந்து எடுக்கப்பட்டது அல்ல.
இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளிடம் அதானி கடனாக வாங்கிய 72 ஆயிரம் கோடி
ரூபாயில் இந்தப் பணமும் அடங்கும். எனவே அது அவரது சொந்தப் பணம்
அல்ல.மார்ச் 2017இல் கமுதி சூரிய மின்திட்டம் தனது உற்பத்தியை
துவக்கியது.*

கமுதி சூரியமின் பூங்கா என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்திலிருந்து 648
மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மின்சாரத்தை தேசிய
மின்தொகுப்பிற்குள் கொண்டு செல்வதற்காக 5 துணை மின் நிலையங்கள்
அரசாங்கத்தால் அமைத்து தரப்பட்டுள் ளன. தமிழ்நாடு மின்சார வாரியத்தின்
ஒரு பிரிவான தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழ கத்திற்குச் சொந்தமான 400
கிலோ வாட் துணை மின்நிலையம் ஒன்று, அதானி நிறுவனத்திற்காக
அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அதானிக்காக கமுதி மக்களும் தமிழக அரசும்,தமிழக
மக்களும் தங்களையே அர்ப்பணித்திருக் கிறார்கள்.

3

மார்ச் 2017இல் கமுதி சூரிய மின்திட்டம் உற்பத்தியை துவங்கிய இரண்டே மாத
காலத்தில் - *மே 2017- அதானி குழுமத்தின் நிகர லாபம் இதுவரை இல்லாத
அளவிற்கு 60 சதவீதம் அதிகரித்தது. கடந்த ஆண்டு இதேகாலக்கட்டத்தில்
130கோடி ரூபாயாக இருந்த அதானி குழுமத்தின் நிகர வருமான உயர்வு இந்த ஆண்டு
221 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.மரபு சாரா எரிசக்தி விற்பனை மூலமாக -
அதாவது சூரியமின்சக்தி விற்பனை மூலமாக 13 மடங்கு அதிகமாக அதானி குழுமம்
லாபம் சம்பாதித்துள்ளது. அதாவது, நடப்பாண்டில் இத்துறையில் மட்டும்
14,300 கோடி ரூபாய் வருமானம் பார்த்துள்ளது.அத்தனையும் கமுதி மக்களின்
சொத்து.*

யூனிட் ஒன்றுக்கு 7 ரூபாய்க்கு தமிழக மக்களிடம் விற்றுச் சம்பாதித்த
லாபம்.அதானியைப் பொறுத்தவரை இந்த லாபம் போதவில்லை. லாபம் குறையக்கூடாது.
அப்படியானால் சூரிய மின்சார உற்பத்தியின் அளவு லேசாகக் கூட
குறையக்கூடாது.கமுதி செங்கப்படையில் அமைந்துள்ள சூரியமின்சார உற்பத்தி
மையத்தில் 25லட்சம் சூரியமின் தகடுகளும் முழு அளவில் வெப்பத்தை ஈர்த்து
மின்சாரத்தை தயாரிக்க வேண்டுமானால் அவை அனைத்தும் பளிச்சென்று சுத்தமாக
வைக்கப்பட்டிருக்க வேண்டும். இதற்காக பிற நாடுகளில் பிரத்யேகமான
ரோபோட்டிக்ஸ் சாதனங்கள் உள்ளன. ஆனால் அவை விலை உயர்ந்தவை. அதானிக்கு
அதனால் லாபம் இல்லை. 25லட்சம் மின் தகடுகளையும் தினந்தோறும் தண்ணீரால்
கழுவ முடிவு செய்தார்கள்.

தண்ணீரை இயந்திரக் குழாய்கள் வழியாக சூரியத்தகடுகளில் பீய்ச்சி அடித்து
கழுவும் பணி தினந்தோறும் நடந்தாக வேண்டும். தண்ணீர் கமுதி கோட்டைமேடு
குண்டாற்றின் மணல்வெளியில் ஆழத்தில் கிடக்கிறது என்று அதானிக்குத்
தெரியும். இஸ்ரோவின் சேட்டிலைட்டுகள் இதற்கு உதவுகின்றன என்பது தனிக்கதை.
குண்டாறு நீர்வளம் முழுவதையும் உறிஞ்சத் துவங்கிவிட்டது அதானியின்
ராட்சதக் கரங்கள். குண்டாற்றை வைகையுடனும் காவிரியுடனும் இணைக்க தமிழக
அரசு நீண்டகாலத்திற்கு முன்பே ஒரு திட்டம் போட்டது. ஆனால் அது கிடப்பில்
கிடக்கிறது. புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர் மாவட்ட
விவசாயிகள் அத்திட்டத்தை தூசி தட்டி எடுத்து போராடிக்
கொண்டிருக்கிறார்கள். காவிரி - வைகை- குண்டாறு - வைப்பாறு ஆகிய நான்கு
நதிகளை இணைத்தால் மீண்டும் கவின்மிகு நிலமாக மாறும் என்று விவசாயிகள்
ஆர்ப்பரிக்கிறார்கள்.

*ஆனால் ஏற்கெனவே ஒருபுறம் குண்டாற்றின் மணல்வளம் கொள்ளையடிக்கப்பட்டு
வருகிறது. இப்போது நாளொன்றுக்கு சுமார் 20லட்சம் லிட்டர் தண்ணீரை அதானி
சூரியமின் ஆலை உறிஞ்சிக் கொண்டிருக்கிறது.இது பற்றிய விபரங்கள் இந்தியன்
எக்ஸ்பிரஸ் ஏட்டில் முதன் முறையாக கடந்த ஜூன் 8ந்தேதி வெளியானது.
மற்றவர்கள் சுதாரித்து பிரச்சனை ஆவதற்குள், சூரிய மின் ஆலையின்
அதிகாரிகள் தலையிட்டு அவசர அவரசமாக விளக்கம் கொடுத்தனர். சூரியமின்
தகடுகளை தினமும் கழுவுவதில்லை; மாதம் ஒரு முறை கழுவுகிறோம். அவ்வளவுதான்
என்றனர். அப்போதும் கூட தண்ணீரை நாங்களே உறிஞ்சவில்லை; தனியார்
காண்ட்ராக்டரிடம் தண்ணீர் வேண்டுமென்று கேட்கிறோம். அவர்கள் எங்கிருந்தோ
தண்ணீர் கொண்டுவந்து தருகிறார்கள்; எனவே அதற்கு நாங்கள் பொறுப்பல்ல
என்றும் விளக்கினார்கள்.*

அதோடு நிற்காமல், ஒரு சூரியமின் தகடைகழுவுவதற்கு வெறும் 2 லிட்டர்தான்
தண்ணீர் தேவை; ஏற்கெனவே ஆலைக்குள்ளேயே அமைக்கப்பட்டுள்ள
போர்வெல்களிலிருந்து 50 ஆயிரம் லிட்டர் ஒவ்வொரு நாளும் எடுக்கப்படு
கிறது; அதுவே எங்களுக்கு போதுமானது; மாதம் ஒரு முறை
சுத்தப்படுத்துவதற்காக மட்டுமேவெளியிலிருந்து தண்ணீர் விலைக்கு வாங்கு
கிறோம் என்று ஆலையின் தலைமை இயக்குநர் சந்தோஷ்குமார் மால் விரிவான
விளக்கம் சொன்னதாக செய்திகளும் வெளியாகின. இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டின்
செய்தியாளர் மீண்டும் எழுதினார்: ‘அதானியின் ஆலையில் அமைக்கப்பட் டுள்ள
சூரியமின்தகடுகள் ஒவ்வொன்றும் 125 அடி நீளமும் 28 அடி அகலமும் கொண்டவை.*

*ஒவ்வொரு தகடும் பிரம்மாண்டமானவை. ஒரு தகடை கழுவுவதற்கு ஆலை நிர்வாகியின்
கூற்றின்படி வெறும் 2 லிட்டர் போதுமானது என்பதை ஒப்புக்கொண்டு, அந்தக்
கணக்கின்படியே பார்த்தாலும் 25லட்சம் தகடுகள் ஒ 2லிட்டர் = 50லட்சம்
லிட்டர். மாதம் ஒன்றுக்கு 50லட்சம் லிட்டர் என்றால் நாள்ஒன்றுக்கு
1.67லட்சம் லிட்டர். அதாவது கிட்டத் தட்ட நாள் ஒன்றுக்கு 2லட்சம்
லிட்டர். அப்படியானால் நான் எழுதியது சரிதானே; ஒவ்வொரு நாளும் அதானி
குழுமம் சுமார் 2லட்சம்லிட்டர் தண்ணீரை உறிஞ்சுகிறது; காண்ட்ராக்டர்
ர்களிடம் அந்த வேலையை கொடுத்திருக்கிறது. காண்ட்ராக்டர்கள் கோட்டைமேடு
குண்டாற்றி லிருந்து உறிஞ்சுகிறார்கள்’.*

4

குண்டாறு எவ்வித கேள்வியும் இல்லாமல், யாருடைய அனுமதியும் இல்லாமல்
எந்தவிதமான உரிமமும் இல்லாமல் உறிஞ்சப்படுகிறது. மொத்த நீரும், அதானியின்
கொள்ளை லாபத்திற்காக உறிஞ்சப்படுகிறது.கமுதி வட்டத்தின்
பரிதாபத்திற்குரிய அதிகாரிகளிடம் இதற்கு பதில் இல்லை. அதானி நிறுவனத்தைப்
பகைத்துக்கொண்டு, இராமநாதபுரம் ஆட்சியர் என்ன செய்வார் பாவம்!ஆனால் தமிழக
அரசின் கிராமப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளரான ஹன்ஸ்ராஜ்
வர்மாவிடம் பதில் இருக்கிறது;‘மரபு சாரா மின்சக்தி உற்பத்திக்கு கமுதி
ஒருஅற்புதமான இடம். கடல் பகுதியிலிருந்து வரும் வெப்பக்காற்றும்,
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியிலிருந்து வரும் தென்றல் காற்றும்
சங்கமித்து மிகச்சரியான பதத்தில் மிகச்சரியான கோணத்தில் சூரியத்
தகடுகளுக்கு சக்தியை அளிக்கின்ற இடம். பகலில் வெப்பமும் இரவில் காற்றும்
வீசுகிற அற்புதம். 24 மணிநேரமும் மின் உற்பத்திக்கான ஆதார வளம்
கிடைக்கிறது. அத்தனை வளமும் இலவசம். என்னே அற்புதம். ஆமாம், அத்தனையும்
இலவசம், குண்டாறும் இலவசம். மோடியின் ஆட்சியில் அதானிக்கு அத்தனை யும்
இலவசம்!
( *தீக்கதிர், 20/6/2017* )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக