புதன், 20 செப்டம்பர், 2017

வானியல் நாட்காட்டி 2017 பற்றி தென்னன் மெய்மன்

 பெருந்தச்சு நிழல் நாட்காட்டியின்படிஇவ்வாண்டின் ஆறாவது முழுநிலவு
வெற்றிபெற்றுள்ளது. கடந்த 09.06.2017-ல்முறையாகத் தோன்றிய
முழுநிலவானதுவெற்றியைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளது.

1) தைப்பூசம் வென்றது ....................................12.01.2017       √

2) மாசிமகம் வென்றது ..................................11.02.2017   √

3) பங்குனி உத்தரம் தோற்றது ...................12.03.2017   ×

4) சித்திரைச் சித்திரை தோற்றது ............10.04.2017   ×

5) வைகாசி விசாகம் வென்றது ...............105) வைகாசி விசாகம் வென்றது
...............10.05.2017   √

6) ஆனிக் கேட்டை வென்றது...................09.06.2017   √



     இவ்வாறாக ஆறு முழுநிலவுகள் கடந்து விட்ட நிலையில், கதிரவனின்
வடசெலவு நிறைவை நெருங்கிக் கொண்டு இருக்கிறது என்பதனைக் கணக்கில் கொள்ள
வேண்டும்.

     01.01.2017 அன்று தொடங்கிய ஆங்கிலப் புத்தாண்டு இம்முறை தைத்திங்கள்
முதல் நாளில் வானவியல் அடிப்படையில் வளர்பிறை 4-ஆம் நாளில் பொருந்தியதை
அறிவோம். அதன் தொடர்ச்சியாக180-வது நாள் என்பது சூன் 29 (29.06.2017)
அன்று அமைய வேண்டும்.

சனவரி    – 31

பிப்ரவரி   – 28

மார்ச்      - 31

ஏப்பிரல்    - 30

மே        - 31

சூன்       - 29

                ------

            180

           ------

     கடந்த ஆறாவது முழுநிலவு 09.06.2017 அன்று கடந்து விட்ட நிலையில்,
அதனுடன் 18 நாட்களைச் சேர்த்தால் 27.06.2017 அன்று மூன்றாம் பிறை நாளுடன்
ஆறு மாதம் முடிகிறது. ஆனி மாதமும் முடிகிறது. ஆனால் 180-வது நாள் என்பது
‘2’ நாட்கள் கழித்து 29.06.2017 அன்று வருகிறது. இந்த ‘2’ நாள் வேறுபாடு
என்பது ஆண்டின் முதல் பாதியில் பங்குனி மற்றும் சித்திரை முழுநிலவுகள்
தோற்றபடியால் நேர்ந்தது என்று புரிந்து கொள்ள வேண்டும்.



நிழல் எல்லை:-

                கதிரவனின் வடசெலவு எல்லை என்பது, 27.06.2017-ல் அமையுமா?
அல்லது 29.06.2017-ல் அமையுமா? என்றால் பெருந்தச்சு நூலின்படி அது
29.06.2017-ல் தான் அமைய வேண்டும். பிழையைப் பிழையென்று குறித்துக் கொள்ள
வேண்டும். ஆண்டின் இறுதியில் தென் எல்லையை அளந்தறிய வேண்டும். அப்போது
முழுநிலவும் மூன்றாம் பிறையும் பிழை அறிவிக்கும் தகைமையில் இருக்கும்.



வடசெலவு தென்செலவு:-

     வெறுங்கண்ணால் கிழக்கு முகமாகப் பார்க்கும் போது கதிரவன் தோன்றும்
இடம் வடக்கே விலகிச் செல்வதும், அது ஓர் எல்லைவரை சென்று திரும்புவதும்,
அதற்கு ஆறு மாதங்கள் எடுத்துக் கொள்வதும், அவ்வாறு செல்லும்போது ஒவ்வொரு
30 நாட்களுக்கும் குறிப்பிட்ட அகலப் பாதையை எடுத்துக் கொள்வதும்
அனைவருக்கும் தெரியும். அவ்வாறு தெற்கில் ஆறு மாதங்கள் விலகிச் செல்லும்.
அதனைப் பரிப்பு, பாரிப்பு, பரிவிட்டம், இருக்கை, அழுவம், நீத்தம் என்று
பழந்தமிழ் பேசுகிறது. அந்தப் பாதையில் இரவில் செல்லும் உடுக்கணங்கள்
அடையாளப் படுத்தப் பட்டுள்ளன. அவையே இராசிகள் என்று அழைக்கப்படுகின்றன.
அந்த இராசிகளின் பெயரால் தமிழ் மாதங்கள் அழைக்கப் படுகின்றன.

     மக்கள் பெருவழக்காக அவை வழங்கப்பட்டு வந்த படியால் அதனில் பிழை
ஏதும் இருக்க வாய்ப்பு இல்லை. இது நிலவு என்பதிலோ, இதுதான் கதிரவன்
என்பதிலோ எப்படி யாருக்கும் ஐயம் தோன்றுவது இல்லையோ அதுபோலவே பெருவழக்காக
அறியப்பட்ட மாதங்களின் பெயர்களிலும் அவற்றின் வரிசையிலும் அந்தந்த
மாதங்களில் வெற்றிபெற்ற முழுநிலவுகள் அவ்வவற்றின் நட்சத்திரப் பெயர்களால்
அழைக்கப் பெற்றிருப்பதிலும் ஐயம் தேவையற்றது என்று நம்பலாம். அதாவது
தைப்பூசம், மாசிமகம், பங்குனி உத்தரம் என்றவாறு.

வானக்காட்சி:-

                வெறுங்கண்ணால் பார்க்கும் போது வடதிசையின் அடிவானத்தில்
அசைவற்ற சிறுமீன் தோன்றுவதும், அதற்கு நேர்மேலே எழுமீன் எனும் மீன்வரிசை
சிறுவெண் காக்கை போல குரவையாடிச் செல்வதும், தென்திசையில் பெருங்கூட்டமாக
மகரமீன் அசைவதும், இடையில் ஆதிரை உட்படப் பல கூட்டங்கள் கிழக்கிலிருந்து
மேற்காக நகர்வதும் பழந்தமிழில் மிக அழகாக வியந்து பேசப்பட்டுள்ளன.

     தமிழ்ப்புத்தாண்டுப் புரிதலோடு இந்த இலக்கிய வியப்புக்களை இணைத்துப்
பார்க்கும் போது, கிரேக்க வானவியலில் இருந்து அவை முற்றிலும் வேறுபட்டு
இருப்பதை உணர முடிகிறது.

     மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம், இரவு வானத்தையே திறந்த
பாடப் புத்தகமாகப் பழந்தமிழின் துணையுடன் புரிந்து கொள்ள வகை செய்யும்
கோட்டங்களைத் திட்டமிட்டு வருகிறது. அவற்றுள் ஒன்று செவ்வாய்க் கோட்டம்.
அது மறைநிலவு நாளில் விளக்கேற்றும் இடமாக விளங்கும். அதுவே முழுநிலவில்
நிலாக் கோட்டமாகவும் போற்றப்படும். அங்கு மரபறிவில் ஆழங்கால்பட்ட
‘லாவண்டை வாத்தியார்கள்’ என்ற ஆசான்மார் அடையாளங்காட்டப்படுவர். அவர்
நாட்டுப்புறக் கலைகளில் வல்லவராக இருப்பார்.

     வடசெலவின் நிழல் எல்லையையும் தென்செலவின் நிழல் எல்லையையும் மரபு
வழியே கணித்தறிந்து அடியின் அளவை அதாவது நிழலின் அளவை, அடி இற்றன்ன அளவை
(சிலம்பு – காடுகாண் 15-22) அதாவது நிழல் இற்றுப் போகும் எல்லையை முறையாக
அறிந்து அறிவிப்புச் செய்யும் துப்புடைய வல்லுநர்களைத் திரட்ட வேண்டிய
கடமை அறிஞர்களுக்கு இருக்கிறது. அனைத்து வகை அறிவுத்துறையினருக்கும்
இருக்கிறது.



இது ஆனி மாதம் (29.05.2017 முதல் 27.06.2017):-

     வட செலவின் எல்லையில் மூன்றாம் பிறையைக் காட்டிச் செல்லும் மாதம்
ஆனி மாதமாகத்தான் இருக்க முடியும். இல்லை இல்லை பஞ்சாங்கம் அப்படிச்
சொல்லவில்லை, அதனால் நாங்கள் கண்களை மூடிக் கொண்டு அடுத்த தலைமுறையின்
கண்களையும் மூடுவோம் என்று விடாப்பிடியாக எவரும் நிற்க கூடாது. சற்று
நேரம் ஒதுக்கி உண்மை நிலையைப் புரிந்து கொள்ள முயல வேண்டும்.



தமிழ்ப்புத்தாண்டும் மாதப்பிறப்பும்:-

     தமிழ்ப்புத்தாண்டு தைத்திங்களின் முதல் நாள் என்பதிலும், அது
மாதத்தின் வளர்பிறை 4-ஆம் நாளில் அமைகிறது என்பதிலும், ஒவ்வொரு தமிழ்
மாதமும் அந்தந்த மாதத்து வளர்பிறை 4-ஆம் நாளில் அமைகிறது என்பதிலும்
உண்மை இருக்குமானால் அதனை விரும்பி ஏற்றுக்கொள்வதில் உண்மைத் தமிழர்கள்
மட்டற்ற மகிழ்ச்சியடைவர் என்பதில் யாருக்கும் ஐயம் இல்லை. அந்த நாள்
தொலைவில் இல்லை என்பது அனைவருக்கும் உவப்பான செய்தி.



பூந்தொடை விழவு:-

     மாதப்பிறப்பின் முதல் நாள் என்பது, ஞாயிற்றுக் கிழமை என்பதும்,
அதனைத் தலைநாளாகக் கொண்டு 12 நாட்களில் முழுநிலவைப் பெருநாளாகக் கொண்டாடி
மகிழ்ந்தனர் பழந்தமிழர் என்று நன்கு அறிய முடிகிறது.

     பூந்தொடை என்பது இரண்டு வாரங்கள் முறையே ஈராறு நாட்களின் தொகுப்பாக
அமைவதைக் குறிக்கலாம். சாறு தலைக் கொண்டென (புறம் 82-1) என்பது பூந்தொடை
விழவின் தலைநாளைக் குறிக்கும் என்று கருத இடம் இருக்கிறது.

     பூந்தொடை விழவின் தலைநாள் அன்ன

     தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றம்– அகம் 187: 8-9



     நாள் ஞாயிறு உற்ற செருவிற்கு(களவழி நாற்பது – 1)



     இன்றும் தமிழ் நாட்டின் நடு மாவட்டங்களில் வளர்பிறை விழாத்
தொகுதியின் முதல்நாள் விழாவைப் ‘பூத்தட்டு விழா’ என்று அழைப்பதையும்
அன்று மலரால் அழகு செய்யப்பட்ட தேர், வீதி வலம் வருவதையும் உற்று நோக்க
வேண்டும். பெண்கள் பெருமளவில் பங்கெடுக்கும் விழா அது என்பது அதன் தனிச்
சிறப்பு.



தொழுது காண் பிறையும் மாதப்பிறப்பும்:-

     மறைநிலவு நாள் செவ்விதாகப் பதினைந்தாம் நாளில் பொருந்துவதை
உறுதிசெய்து அந்த நாளைத் தவிர்த்து மூன்றாம் நாள் மாலையில் மேற்கு வானில்
பிறை தோன்றுவதையே பிறையின் முதல் தோற்றமாக எதிர்பார்த்து நோற்றனர்
பழந்தமிழர் என்று அறிய முடிகிறது. அன்று வெள்ளிக் கிழமையாகவும், அன்றே
மாதம் முடிவதாகவும் கொள்ளப்பட்டு, அதன் மறுநாளே ஞாயிற்றுக் கிழமையாக,
தலைநாளாக, சாறாக, பூந்தொடை விழவின் தலைநாளாகக் கணக்கிடப் பட்டிருக்கிறது.
என்று கருதலாம். இன்று அனைத்தையும் பறிகொடுத்தாயிற்று. பேதைகள் போல
பிதற்றும் நிலையில் தமிழ் மக்கள்?

என்று தமிழ் மாதம் பிறக்கிறது? - தெரியாது.

அது என்ன கிழமையில் அமைய வேண்டும்? – தெரியாது

இந்த நிலையை உருவாக்கியது யார்? – தெரியாது

     வளர் பிறைக்கீற்றின் முதல் தோற்றமானது மறைநிலவின் மறுநாளிலோ அல்லது
இரண்டாம் நாளிலோ தெரிந்தாலும் அதனையே அளவு கோலாக ஏற்கலாமா என்றால் தமிழ்
மரபுப்படி அது கூடாது. இசுலாமியர்கள் அப்படிக் கருதுகிறார்களே? அது
அவர்களது நம்பிக்கை. தமிழர்களுக்கு அது தேவையில்லை.



அடுத்த மாதப்பிறப்பு:-

                கடந்த முழுநிலவு நாள் 09.06.2017 அன்று அமைந்து
விட்டபடியால் அதனுடன் 18 நாளைக் கூட்ட மாதம் முடிகிறது. அந்த நாள்
27.06.2017. அதற்கும் முன்பாக ஏழு நாட்கள் நோன்பு. அந்த நோன்பின்

முதல்நாள்      - 21.06.2017

இரண்டாம் நாள் - 22.06.2017

மூன்றாம் நாள்  - 23.06.2017

நான்காம் நாள்   - 24.06.2017 – மறைநிலவு

ஐந்தாம் நாள்    - 25.06.2017

ஆறாம் நாள்     - 26.06.2017

ஏழாம் நாள்           - 27.06.2017 – மூன்றாம் பிறை

     இவ்வகையில் அடுத்த மாதம் ஆகிய ஆடி மாதத்தின் முதல் நாள் 28.06.2017
அன்று பிறக்கிறது. பின்பற்ற விருப்பம் உடையோர் பின்பற்றலாம். மறுப்போர்
காத்திருக்கலாம்.

     இது தொடர்பான ஆய்வுகளும் உயர் ஆய்வுகளும் ஒரு புறம் நிகழ்ந்து
கொண்டிருந்தாலும் எந்த ஆய்வுக்கும் அப்பாற்பட்டுச் சில உண்மைகள் மக்களின்
மன்ங்களைத் தொட்டு விடுவது உண்டு. தமிழ்ப் புத்தாண்டுப் புரிதல் அப்படி
ஓர் அரிய வகையைச் சேர்ந்த அறிவுத் துறையாக இருக்கலாம். அது வரவேற்கத்
தக்கதே!.







உயர்நிலைக் குழு:-

     ஆங்கில ஆண்டு 2017 இறுதிக்குள் தமிழ்ப்புத்தாண்டு தொடர்பாகக் கலந்து
பேசும் வல்லுநர்களைக் கொண்ட உயர்நிலைக் குழுவை அமைத்தாக வேண்டும் அரசு.
அதுவே அரசு.

முற்றாகப் புலால் தவிர்க்கும் நோன்பு:-

                ஒவ்வொரு தமிழ் மாதத்தின்கடையேழு நாட்களும் நோன்புக்கு
உரியன அந்த ஏழு நாட்களின் நடுநாளாக மறைநிலவு அமைகிறது. இந்த நாட்களில்

·         முற்றாகப் புலால் உணவைத் தவிர்த்தல்

·         உட்கொள்ளும் உணவின் அளவைக் குறைத்தல்

·         முற்றாக இரவு உணவைத் தவிர்த்தல்

·         முற்றாகப் பொய் தவிர்த்தல்

·         பேசாது இருத்தல்

·         பயணங்களைத் தவிர்த்தல்

·         பிறர் வீட்டில் உணவு உண்பதைத் தவிர்த்தல்

·         விழாக்களைத் திட்டமிடாதிருத்தல்

போன்ற வாழ்வியல் ஒழுகல் ஆறுகளுடன் ஆரிய வைதிகக் கருமாதிச் சடங்குகளைத்
தவிர்த்தலும் தமிழர்களின் இனமூச்சை வலிமைப் படுத்தும். இருசுடர் நேமி
ஒன்றிய சுடர்நிலை உள்படுவோர் (பரிபாடல்) என்போர் இந்த ஏழுநாள் நோன்பினைப்
புத்தாண்டுப் புரிதலுக்குப் பயன்படுத்திட விழைவர்.



மஞ்சுவிரட்டும் தமிழ்புத்தாண்டும்:-

மஞ்சு விரட்டை விரும்புகிறேன். மாட்டுக்கறி உணவைப் பெரிதும்
விரும்புகிறேன் என்று எவரும் கூறினால் அது தன்முரண். இசுபெயின்
புல்பைட்டில்தான் அது நடக்கிறது. தமிழர்கள் அத்தகையவர்கள் அல்லர்.
உழைக்கும் பகடுகளை, எருதுகளை இறைச்சிக்குப் பயன்படுத்துவதை ஒருபோதும்
ஒப்ப மாட்டார்கள்.

   பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும், மாட்டுக்கறி எனது உணவு உரிமை என்பது
மலையாளிகளுக்கு அறமாகத் தெரியலாம். தமிழர்கள் ஏற்கமாட்டார்கள்.
ஆட்டுக்கறியைத் தின்றுவிட்டு மாட்டைத் தொடலாமா? என்றால் அதுவும்
தவறுதான். பொதுவாக மஞ்சு விரட்டு மாடு பிடி வீரர்கள் முற்றாகப் புலால்
உணவைத் தவிர்த்து கோயிலில் தங்கிக் குளித்து முழுகி விரதம் இருந்து மாடு
பிடிக்கிறார்கள் என்ற நம்பிக்கையைக் கணக்கில் கொள்ள வேண்டும்.

   அடிமாடுகள் விற்பனைத் தடை என்பது வரவேற்கத்தக்கது. மாடுகளை அவை
இயல்பாக வாழ்ந்து இறக்கும் வரை புகலிடங்களை அமைத்துக் காக்க வேண்டியது
அரசின் பொறுப்பு. வளர்க்க முடியாத நிலையில் மாடுகளை அரசிடம் ஒப்படைத்து
விடலாம். அரசு அதற்கு விலைகூடத் தரலாம். இன்னொரு செய்தி, இறைச்சிக்காக
மாடுகளை வளர்க்க யாரும் முனைய வேண்டாம். தமிழ்ப் புத்தாண்டை காக்கும்
ஆற்றல் மாடுகளிடம்தான் இருக்கிறது. தெரிந்தோ தெரியாமலோ மாட்டுக்கறி
உண்ணும் பழக்கம் உள்ளவர்கள் யாரும் தமிழர்களில் இருந்தால் மெள்ள அதனைக்
கைவிடுவது நல்லது. குறிப்பாக மரபு வழித் தமிழ்த் தேசியர்களின் உணவுப்
பட்டியலில் மாட்டுக்கறி இல்லை. இருக்காது.



தக்கார் யார்?:-

   யாவதும், கற்றோர் அறியா அறிவினர்

   கற்றோற்குத் தாம் வரம்பாகிய தலைமையர் (திருமுரு:133,134)

   இவ்வாறாகத் திருமுருகாற்றுப்படை சுட்டிக்காட்டும் தகுதியுடைய பெரும்
பேராசிரியப் பெருமக்கள் தான் தக்காரைத் தேடித் தரவேண்டும். அவர்களின்
வழிகாட்டுதலில் பிறழாப் பெருநடை பீடுறப் பயில ஒரு தலைமுறையே
தவமியற்றுகிறது.





இது மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார்அவையத்தின்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக