ஞாயிறு, 9 ஜூலை, 2017

சுப்பிரமணிய சிவா தமிழ்ப்பற்று

aathi tamil aathi1956@gmail.com

23/7/14
பெறுநர்: எனக்கு
Kathir Nilavan
தமிழ் மொழி வளர்த்த சுப்பிரமணிய
சிவா நினைவு நாள்
|23.7.1925|
பிரித்தானிய வல்லாதிக்க எதிர்ப்பாளர்
சுப்பிரமணிய சிவா என்பதை நாமறிவோம். 'வீர
முரசு' என்று பட்டம் சூட்டப்பெற்ற சிவாவின்
19ஆண்டு கால பொது வாழ்க்கையில் 10
ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார்.
மீதமுள்ள 9 ஆண்டுகளில் அவர் ஆற்றிய
பணிகள் அளவிடற்கரியவை. இந்திய விடுதலை,
ஆன்மிகம், தமிழ்மொழி இந்த மூன்றிலும் தடம்
பதித்தவர்.
இவர் பார்ப்பன குலத்தில் பிறந்த போதிலும்
பார்ப்பன ஆதிக்கத்தை மறுத்த
வ.உ.சி.யோடு தோழமை கொண்டார்.
வ.உ.சி.யின் தமிழ்ப்பணியை அவர்தம் வாழ்வின்
மறுபக்கம் என்பர். சிவாவின் தமிழ்ப்பணியும்
அவ்வாறு தான். எழுத்துச் சீர்திருத்தத்திற்கும்,
தூய தமிழ் இயக்கத்திற்கும் 1913இல் "ஞான
பானு" எனும் பெயரில்
இதழொன்றை தொடங்கினார். "தமிழில்
எழுத்துக்குறை" எனும் தலைப்பில் கட்டுரைப்
போர் நடத்தினார். அதில் பாரதியாரும்,
வ.உ.சியும் பங்கேற்று தமிழுக்கு ஆக்கம்
செய்தனர்.
1915இல் சமசுகிருதம் உள்ளிட்ட ஏனைய
அந்நிய மொழி கலவாத தனித் தமிழில்
கட்டுரை எழுதினால் ஐந்து ரூபாய்
பரிசளிக்கப்படும் என்று அறிவித்தார்.
அக்காலத்தில் வெளிவந்த 'சுதேசிமித்திரன்'
ஏட்டில் ஆங்கிலச் சொற்கள் கலக்கப்படுவதைக்
கடுமையாக கண்டித்தார். கலைச் சொல்லாக்கம்
செய்திடும் போது "ஆங்கில வார்த்தைகளுக்குச்
சரியாகப் பொருள்படும்படியான
தமிழ்ச்சொற்களை உண்டு பண்ணிக் கொள்ளுதல்
அவசியமாகுமே தவிர ஆங்கிலப்
பதங்களை அப்படியே தமிழ் எழுத்துக்களிலும்
எழுதி விடுவது ஸ்வய பாஷையைக்
கொலை செய்தது போலாகும்"
என்று வேதனையோடு குறிப்பிட்டார்.
திருக்குறள் போன்றதோர் நூல்
இவ்வுலகமெங்கும் தேடிப் பார்த்தாலும்
கிடைக்காது. பிரம்ம
சூத்திரத்தை படிப்பதை விட திருக்குறளைப்பட
ி என்றார். அவர் "கற்ககசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக" எனும்
குறளுக்கு விளக்கவுரை எழுதிவிட்டு பின்
வருமாறு குறிப்பிட்டார்;
"எத்தனையோ யோகீஸ்வரர்கள்,
எத்தனையோ ரிஷீஸ்வரர்கள்,
எத்தனையோ மகான்கள் எண்ணற்ற
சாஸ்திரங்களையும் பரோபகார்த்தமாக
எழுதி இருக்கின்றனர். எல்லாப் பாஷைகளிலும்
எல்லாத் தேசங்களிலும்
எத்தனையோ சாஸ்திரங்கள் எழுதப்பட்டிருக்
கின்றன. ஆயினும் தேன்மொழி போன்ற
நமது தென்மொழியில் திருவள்ளுவர்
இயற்றியருளிய திருக்குறளைப் போன்றதோர்
நூல் எத்தேசத்திலும் எப்பாஷையிலும்
எவராலும் இயற்றப்படவில்லை என்று நாம்
கூறத் துணிகிறோம். தமிழ்ப்பாஷைக்கு என்றும்
அழியாத் தன்மையை ஏற்படுத்தியவர்
திருவள்ளுவர் என்று மேல்நாட்டாரும் ஒப்புக்
கொள்கின்றனர். இவர் பாஷா ஞானிமாத்திரம்
அன்று; ஆத்ம ஞானதீரர்"
என்று திருவள்ளுவரை உயர்த்தி பிடித்தார்.
தனக்கு தண்டனை தந்த நீதிமன்றத்திலும்
திருக்குறளை எடுத்துரைத்து வாதிட்டார்.
1916 இல் அவர் எழுப்பிய தமிழ் முழக்கம்
வருமாறு:
தமிழ்ப்பண்டிதர்களே! தமிழ் மகா ஜனங்களே!
ஜாக்கிரதை! ஜாக்கிரதை! உங்களுடைய
பாஷையை காப்பாற்றுங்கள். ஒரு ஜன
சமூகத்திற்கு உயிர் அதன் பாஷை தான். தமிழ்
பாஷை அழிந்து விட்டால் தமிழர்களின் சிறப்பும்
சீரும் அழிந்து விடும்! உங்கள் நா தமிழே பேசுக!
நீங்கள் கையிலேந்தும் இறகு தமிழே எழுதுக!
உங்களுடைய இருதயம் தமிழையே நாடுக!
சுப்பிரமணிய சிவா தன் வாழ்நாளின் இறுதியில்
தொழு நோய் கொண்டு மடிந்ததைப் போல
அவன் நேசித்த தமிழும் ஆங்கிலத்
தொழுநோயால் இன்று பீடிக்கப்பட்டுள்ளது.
அவர் நினைவு நாளில் ஒரு போதும்
தமிழை மடிய விட சம்மதியோம்
என்று சூளுரைப்போம்!
பார்ப்பனர் தமிழறிஞர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக