சனி, 25 மார்ச், 2017

அரசு கொலைகள் துப்பாக்கிச்சூடு மோதல்கொலை encounter தலித்முரசு 2

aathi tamil aathi1956@gmail.com

15/4/16
பெறுநர்: எனக்கு
விருதுகளும் அளிக்கக் கூடாது என்கிறது, மனித உரிமை ஆணையத்தின் மற்றொரு பரிந்துரை.
ஆனால், வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்ட மறுநாளே, அதில் தொடர்புடைய
அதிகாரிகளுக்கு மட்டுமின்றி, வீரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில்
பல்வேறு மனித உரிமை மீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட அனைத்து
அதிரடிப்படையினருக்கும் அரசு இரட்டை பதவி உயர்வும், விருதும் அளித்து
சிறப்பித்தது. மனித உரிமைகளுக்கே மதிப்பில்லாதபோது, மனித உரிமை
ஆணையத்தின் பரிந்துரைகளுக்கு அரசு முக்கியத்துவம் கொடுக்கும் என்று
எதிர்பார்ப்பது வீண்.
கடந்த பிப்ரவரி 5 அன்று மயிலாடுதுறையில் சுட்டுக் கொல்லப்பட்ட மணல்மேடு
சங்கரின் தாய் ஓர் ஊராட்சி மன்றத் தலைவி. இவர் மீதும் இவரது மகன் சங்கர்
மீதும் காவல் துறை தொடர்ந்து பொய் வழக்குகளைப் போட்டு தொந்தரவு செய்து
வந்துள்ளது. அது மட்டுமின்றி, சங்கரின் சாவு எங்கள் கையில்தான் என்று
வெளிப்படை யாகவே காவல் துறை அதிகாரிகள் கூறிவந்திருக்கின்றனர். இதனால்,
சங்கரின் தாய், தனது மகனின் உயிருக்கு காவல் துறையால் ஆபத்து உள்ளது
என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்; சென்னை
வந்து தமிழக காவல் துறை தலைவரிடமும் மனு அளித்துள்ளார். இத்தனைக்குப்
பிறகும் சங்கரை ஒரு வழக்கில் கைது செய்து, நீதிமன்றத்திற்கு அழைத்துச்
செல்லும் வழியில் அவர் தப்பியோட முயன்றதாகக் கூறி அவரைச் சுட்டுக்
கொன்றுள்ளது காவல் துறை. ஆக, உள்ளூர் காவல் துறை தலைவர், உச்ச நீதிமன்றம்
என எதைப் பற்றியும் இவர்களுக்கு அச்சமோ, கவலையோ இல்லை.
இப்படி பரவலாக ஏறத்தாழ ஆண்டிற்கு சராசரியாக ஏழு, எட்டு என நடக்கும் மோதல்
சாவுகள் மக்களி டையே ‘மற்றுமொரு செய்தி'யாக மட்டுமே சென்றடைவது மிகப்
பெரும் வேதனை. பாலன் சாவு ஏற்படுத்திய அதிர்வலைகள் போன்று இன்று எந்த
மோதல் சாவும் அதிர்வலையை ஏற்படுத்துவதில்லை. வழக்கம் போல் மனித உரிமை
இயக்கங்கள் மட்டும் குரல் கொடுத்துவிட்டு, உச்சபட்சமாக ஓர் உண்மை அறியும்
குழுவை அமைத்து ஓர் அறிக்கையை அளிக்கின்றன. அந்த அறிக்கையும் ஒரு
செய்தியாக மட்டுமே வெளிவருகிறது. இவை அனைத்துமே வெறும் சடங்காக மாறி
விட்டது பெரும் துயரமே. அதோடு ‘கொல்லப்படுகிறவர்கள் யாரும் உத்தமசீலர்கள்
அல்லர். அவர்களும் குற்றவாளிகள்தானே; அவர்களைக் கொல்வதில் என்ன தவறு
இருக்கிறது' என்ற உளவியல் திட்டமிட்டு உருவாக்கப்பட்டு விட்டது. சுட்டுக்
கொல்லப்பட்டவரைப் பற்றி காவல் துறை ஊடகங்களுக்கு தரும் செய்திகள்
அனைத்துமே அத்தகைய உளவியலுக்கான உரமே.
அப்பு கொல்லப்பட்ட காலகட்டத்தில்தான் ‘தங்கப்பதக்கம்' திரைப்படம்
வெளியானது. மகனாகவே இருந்தாலும் அவன் தவறு செய்கிறபோது அவனை சுட்டுக்
கொல்லத் தயங்காத ஒரு காவல் துறை அதிகாரியின் கதையாக காவல் துறையை
தூக்கிப்பிடிக்கும் அந்த திரைப்படம், அப்பு கொலையை ஒட்டி வெளியானது
தற்செயலானதோ திட்டமிட்டதோ; ஆனால், ‘தங்கப்பதக்கம்' முதல் ‘காக்க காக்க'
வரையிலான இத்திரைப்படங்கள் அனைத்துமே இத்தகு கொலைகளை நியாயப்படுத்தும்
உளவியலுக்கு வலு சேர்ப்பதாகவே அமைகின்றன. சுட்டுக் கொல்லப்பட்டவர்
குற்றவாளியாக இருக்கலாம்; பலவித குற்றங்களை செய்தவராக இருக்கலாம். ஆனால்,
அவர்களை விசாரணையின்றி கொல்லும் அதிகாரத்தை காவல் துறைக்கு வழங்கியது
யார் என்பதே முக்கியக் கேள்வி. குற்றத்தைத் தடுப்பதும், அதை மீறி குற்றம்
இழைத்தவர்களை கண்டுபிடித்து, தக்கச் சான்றுகளோடு அவர்களை சட்டத்தின் முன்
நிறுத்தி தண்டனை பெற்றுத் தருவதுமே காவல் துறையின் வேலை.
சனவரி 13, 2007 அன்று மதுரை மாவட்டம் மேலூரில் சுட்டுக் கொல்லப்பட்ட டோரி
மாரி மீது 1998 இல் இருந்தே வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஏறத்தாழ 8
ஆண்டுகளாக அவரைப் பிடிக்க வக்கற்று இருந்ததா காவல் துறை? சரி, டோரி
மாரியை சுட்டுக் கொன்றாகி விட்டது. அவர் மீதான வழக்குகளின் நிலை என்ன?
சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் மீதான வழக்குகள் அனைத்தும் கேள்வியின்றி
புதைக்கப்படுகின்றன. இதனால் கொல்லப்பட்டவர்களால்
பாதிக்கப்பட்டவர்களுக்கும் நீதி மறுக்கப்படுகிறது என்பதே உண்மை. ஆனால்,
இத்தகு குற்றாவாளிகள் மிக எளிதாக தண்டனையிலிருந்து தப்பி விடுகிறார்கள்
என்ற காரணத்தை காவல்துறை முன் வைத்தால், தக்க சான்றுகளோடு அவர்களின்
குற்றத்தை உறுதி செய்ய இயலாதது - காவல் துறையின் இயலாமையா அல்லது காவல்
துறையினருக்கு நீதிமன்றங்களின் மீதிருக்கும் அவநம்பிக்கையா? அப்படி காவல்
துறையினருக்கே தங்கள் மீதும் நம்பிக்கை இல்லையெனில், மக்கள் எதற்கு
அவர்களை நம்ப வேண்டும்? அத்துறையை மதிக்க வேண்டும்?
உண்மையான காரணம் இவை எதுவுமே அல்ல. இந்த மோதல் சாவுகள் அனைத்துமே காவல்
துறை, அரசியல் கட்சிகள், அதிகார வர்க்கம், நீதித்துறை என அனைவரும்
இணைந்து நடத்தும் திட்டமிட்ட நாடகமே!
இதில் கொடுமை என்னவெனில், இது நாடகம் என்பதை மக்களும் உணர்ந்துள்ளனர்.
ஆனால், காவல் துறை என்றால் அப்படித்தான் என்று ஏற்றுக் கொண்ட மனநிலையோடு
மிக எளிதாக இச்செய்திகளை உள்வாங்கிக் கொள்கின்றனர்.
இந்த மன நிலைக்கு மக்களை தள்ளிவிட்டுவிட்ட நிறைவோடு, அரசு எந்திரமும்
துணிச்சலோடு மேலும் மேலும் வெளிப்படையாகவும், திட்டமிட்டும், பல
நேரங்களில் அறிவித்து விட்டேகூட இக்கொலைகளை நடத்துகின்றன. மக்கள் மீதான
அரசின் வன்முறை எல்லைகள் கட்டுப்பாடற்று விரிந்து கொண்டே செல்கின்றன.
காஷ்மீரில் 1990 முதல் நடந்த மோதல் சாவுகள் குறித்து அண்மையில்
வெளிவந்திருக்கும் செய்திகள் - காவல் துறை, ராணுவம், நீதித்துறை,
அரசியல்வாதிகள், சர்வதேச சமூகம் என அனைத்தின் மீதும் ஒட்டுமொத்தமாக
நம்பிக்கை இழக்க வைக்கின்றன.
அமெரிக்க ராணுவம் ஈராக்கிய மக்களை துன்புறுத்திக் கொன்ற செய்திகள்
வெளிவந்தபோது, இந்தியா உட்பட உலகநாடுகள் அனைத்துமே அதைக் கண்டு அதிர்ந்து
எதிர்த்துக் குரல் எழுப்பின. ஆனால், காஷ்மீரில் இந்திய ராணுவம், அதற்கு
எந்த வகையிலும் குறைந்திராத கொடூரங்களை நாளும் நிகழ்த்தி வருவது இன்று
வெளிவந்துள்ளது. காவல் துறையினரும், ராணுவத்தினரும் அவர்களுக்கு
பணிக்கப்பட்ட ‘கணக்கை' எட்ட, பொதுமக்களை கடத்தி, அடையாளம் காண இயலாத
போராளிகள் என முத்திரை குத்தி, சுட்டுக் கொன்றுள்ள செய்தி
வெளிவந்துள்ளது. ஒன்றல்ல, இரண்டல்ல... 1990இல் இருந்து இன்று வரை
ஆயிரக்கணக்கில்... இந்த காலப்பகுதியில் ‘காணாமல் போனவர்களின் பெற்றோர்கள்
சங்கம்' என்று ஓர் அமைப்பே அங்கு நிறுவப்பட்டு, காணாமல் போனவர்களின் கதி
என்னவாயிற்று என்று கண்டறிவதில் முழு நேரமாக ஈடுபட்டு வருகிறது. காணாமல்
போனவர்கள் வெறுமனே சுட்டுக் கொல்லப்படுவது இல்லை; கடும்
சித்திரவதைக்குள்ளாக்கப்படுகின்றனர். இதற்கென பாதுகாப்புப் படையினர்
சிறப்பு வதை முகாம்களை நடத்தும் செய்தியும் வெளிவந்துள்ளது.
வதை முகாம்களில் உயிருடன் வெளிவந்தவர்களின் நிலை இன்னமும் மோசம்.
போராளிகளின் தாக்குதல் எங்கு நடந்தாலும், உடனே பாதுகாப்புப்படையினர் தேடி
வருவது இப்படிப்பட்டவர்களைத்தான். பொய் வழக்குகளில் சிக்க வைப்பதும்,
அதிலிருந்து தப்பிக்க வேண்டுமானால், லட்சக்கணக்கில் பணம் கேட்பதும்,
அதற்கு மறுத்தால் சுட்டுக் கொல்வதும் அன்றாட நிகழ்வாகவே ஆகிப் போனது.
பிறப்பு உறுப்பில் மின்சாரம் பாய்ச்சுவது, குளிர்ந்த நீரில் உறைய
வைப்பது, பெட்ரோலில் முக்கி எடுப்பது, மிளகாய் புகையில் நிற்க வைப்பது என
வதை முகாம்களில் நடத்தப்படும் வதைகள், ஒரு நாகரீக சமூகத்தால்
நினைத்துக்கூட பார்க்க இயலாதவையாகவே இருக்கின்றன. இத்தகைய வதைகளை ஒரு
முறை அனுபவித்தவர்கள், பாதுகாப்புப் படையினர் என்ன சொன்னாலும் செய்யக்
கூடிய மன நிலைக்குச் சென்று விடுகின்றனர். அப்படி சித்ரவதைகளை
அனுபவித்து, பாதுகாப்புப் படையினரின் கைப்பாவையாக மாறிப்போன பரூக் அகமத்
பத்தார் என்னும் காவல் துறை ஓட்டுநரின் உதவியோடு, ஒன்றுமறியா பல
இளைஞர்களைக் கடத்தி கொலை செய்துள்ளது காஷ்மீரில் உள்ள இந்திய
பாதுகாப்புப் படை.
நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முகமது அப்சல்
குரு, அண்மையில் ‘தெகல்கா' ஆங்கில வார இதழுக்கு அளித்துள்ள பேட்டியில்,
இந்த வழக்கில் சிக்குவதற்கு முன், பாதுகாப்புப் படையினருக்கு ஒரு லட்ச
ரூபாய் கொடுக்க ஒப்புக் கொள்ளும் வரை, ஏறத்தாழ மூன்று மணி நேரம் அவர்
மீது மின்சாரம் பாய்ச்சப்பட்டதாகக் கூறியுள்ளார் (‘தலித் முரசு' ஏப்ரல்
2007 இதழ் காண்க).
ஒரு சில வாரங்கள் போராளி இயக்கத்தில் இருந்ததற்காக, அதிலிருந்து விலகி
இயல்பான வாழ்க்கை வாழ முயற்சித்த நிலையிலும் அவரை நாளும் துன்புறுத்தியது
ராணுவம். இதனால், காவல் துறை அதிகாரி ஒரு புது நபரைக் காட்டி தில்லிக்கு
அழைத்துச் செல்லுமாறு கூறியபோது, எவ்வித மறுப்புமின்றி அதை ஒப்புக்
கொள்ளும் நிலையிலிருந்தார் அப்சல். ஆனால், அந்தப் புதிய நபர்தான்
நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப் போகிறவர் என்பதோ, அதற்காகத்தான்
அவர் தில்லி செல்கிறார் என்பதோ, பின்னாளில், இதே காரணத்திற்காகத் தான்
தூக்கு மேடை வரை செல்வோம் என்பதோ - அப்சலுக்கு அன்று
தெரிந்திருக்கவில்லை. தெரிந்திருந்தாலும் அவரால் மறுத்திருக்க முடியுமா
என்பது வேறு கேள்வி. காஷ்மீரில் வெளிவரத் தொடங்கியிருக்கும் கொடுமைகள்...
நாடெங்கிலும் வெளிவராத வேதனைகளாகவே குமுறிக் கொண்டிருக்கின்றன.
அண்மையில் குஜராத்தில் சொராபுதீன் ஷேக் என்பவரை காணவில்லை என்று அவரது
மனைவி தொடர்ந்த வழக்கில் வெளிவந்திருக்கும் உண்மைகள், அதற்கு
சான்றுரைக்கின்றன. நவம்பர் 26, 2005 அன்று சொரா புதீன் ஷேக்,
அகமதாபாத்தில் உள்ள வைஷாலா எனும் இடத்தில் குஜராத் பயங்கரவாதிகள்
ஒழிப்புப் பிரிவு மற்றும் ராஜஸ்தான் சிறப்புக் காவல் படையினரால் சுட்டுக்
கொல்லப்படுகிறார். கொலை நடந்த உடன் குஜராத் பயங்கரவாதிகள் ஒழிப்புப்
பிரிவுத் தலைவர் வன்சாரா, மிகப் பெரிய பத்திரிகையாளர் சந்திப்பை
கூட்டினார். அனைத்து அச்சு மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் பங்கேற்ற
அந்த சந்திப்பில், சொராபுதீன் லஷ்கர் இதொய்பா இயக்கத்தைச் சேர்ந்தவர்
என்றும், தாவூத் இப்ராகிம் உத்தரவின் பேரில் குஜராத் முதலவர் நரேந்திர
மோடியை கொல்வதற்காகவே குஜராத் வந்திருந்தார் என்றும் கூறினார். அந்தக்
கொலைக்குப் பிறகு சொராபுதீனின் மனைவி கவுசர் பீயை காணவில்லை.
அண்மையில் கவுசர் பீ, தனது கணவரை காவல் துறையினர்தான் அழைத்துச் சென்றனர்
என்றும், அதன் பிறகு அவரை காணவில்லை என்றும் அவரை கண்டுபிடித்துத்
தரும்படியும் ஆள் கொணர்வு மனு ஒன்றை அகமதாபாத் உயர் நீதிமன்றத்தில்
தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில் கடந்த மார்ச் 23 அன்று, குஜராத்
அரசு, காணாமல் போன சொராபுதீன் காவல் துறையினரால் கடத்தி கொலை
செய்யப்பட்டார் என்பதை ஒப்புக் கொண்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சி.பி.அய்.
நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தரும் உண்மைகள் வெளிவந்துள்ளன.
சொராபுதீனும் அவரது மனைவியும், உடன் இருவரும் காவல் துறையினரால்
கடத்தப்பட்டுள்ளனர். அவர்களில் சொராபுதீன் நவம்பர் 26, 2005இல்
கொல்லப்படுகிறார். அவருடன் கடத்தப்பட்ட துளசிராம் கங்காராம் பிரஜாபதி,
டிசம்பர் 28, 2006 அன்று கொல்லப்படுகிறார். அதுமட்டுமல்ல,
இக்கொலைகளின்போது பொறுப்பில் இருந்த காவல் அதிகாரியான வன்சாரா, இதற்கு
முன் பொறுப்பில் இருந்த பிற பகுதிகளிலும் இதே போன்ற கொலைகள்
நடந்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. செப்டம்பர் 27, 2002இல் காவல்
துறையினரால் அழைத்துச் செல்லப்பட்ட சமீர்கான் பதான், அக்டோபர் 22,
2002இல் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சனவரி 13, 2003இல் சாதிக் ஜெமால்
மேத்தார் என்பவர் நரோதாவில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சூன் 15,
2004இல் அகமதாபாத்தின் புறநகர்ப் பகுதியில் 4 இளைஞர்கள்
கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவர் மீதும் சுமத்தப்பட்ட ஒரே
குற்றச்சாட்டு, இவர்கள் நரேந்திர மோடியை கொலை செய்யத் திட்டமிட்டு
வந்தனர் என்பதே.
இந்தக் கொலைகளுக்குக் காரணமாக இருப்பதாகக் கருதப்படும் காவல் அதிகாரி
வன்சாரா, நீண்ட விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார். இந்த வழக்கு
முடிவதற்குள் அந்த அதிகாரி ஓய்வு பெற்று விடுவார். அத்தோடு வழக்கின்
முக்கியத்துவமும் குறைந்து, அனைவரும் மறந்துவிட்ட ஒரு நாளில் தீர்ப்பு
வரும். அந்தத் தீர்ப்பு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதாகவும்
இருக்கலாம்; அல்லது உச்சப்பட்ச தண்டனையாக அந்த அதிகாரியை பதவி நீக்கம்
செய்வதாகவும் இருக்கலாம்; ஆனால், அதற்குள் அந்த அதிகாரி தனது பதவியில்
அனுபவிக்க வேண்டியவற்றை எல்லாம் அனுபவித்து, ஓய்வு பெற்றிருப்பார். அதோடு
முடியுமா? உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்
முறையீடு செய்யப்படும். அங்கு வழக்கு முடிய எத்தனை ஆண்டுகள் ஆகுமோ
தெரியாது.
அதன் தீர்ப்பு வரும் நாளில் அதைக் கேட்க மனு செய்தவர் உயிருடன் இருக்க
வேண்டும். இத்தனைத் தடைகளையும் கடந்து என்றாவது ஒரு நாள் நீதி கிடைக்கும்
என்ற நம்பிக்கையில் உறுதியுடன் நிற்கும் கவுசர் பீ போன்ற ஒரு சிலரால்
மட்டுமே இந்த அளவாவது உண்மைகள் வெளிவருவது சாத்தியப்படுகிறது. மிகப்
பெரும்பான்மையான போலி மோதல் சாவுகளின் பின்னணியில் இருக்கும் உண்மைகள்
இறுதி வரை வெளிவராமலேயே போய் விடுகின்றன என்பதே வேதனையான உண்மை.
“மோதல் சாவினை எதிர்த்துப் போராடி வரும் மனித உரிமை அமைப்புகள் தங்களது
நீண்ட நாள் கோரிக்கையாக இந்த நடவடிக்கைகளில் ஈடுபடும் காவல் துறை அதிகாரி
மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கோரி வருகின்றன.
நீதிபதி வெங்கடாசலய்யா, மோதல் சாவுகள் குறித்த தனது பரிந்துரையில் இதனை
வலியுறுத்தி இருக்கிறார். காவல் துறை அதிகாரிகள், தங்கள்
தற்காப்புக்காகத் தான் இந்தக் கொலையை செய்தோம் என்பதை நீதிமன்றத்தில்
சான்றுரைக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். ஆனால், இன்று வரை இந்த
நடைமுறை பின்பற்றப்படுவதில்லை. ஆர்.டி.ஓ. விசாரணை மட்டுமே
நடத்தப்படுகிறது. ஆர்.டி.ஓ. என்பவர் ஓர் அரசு அதிகாரி. அரசை மீறியோ
உள்ளூர் காவல் துறையினரை மீறியோ அவர் என்ன செய்துவிட முடியும்? அதனால்
நீதிபதி வெங்கடாசலய்யாவின் பரிந்துரையைப் பின்பற்றி குறைந்தபட்சமாக மோதல்
சாவுகளில் ஈடுபடும் காவல் துறை அதிகாரிகள் மீது குற்றவியல் சட்டப்பிரிவு
307இன் கீழ் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்’ என்கிறார்
மனித உரிமை ஆர்வலர் எஸ்.வி. ராஜதுரை.
மக்களின் நலன்களைப் பாதுகாக்க அமைக்கப்பட்ட காவல் துறையும் ராணுவமும்
ஒருபோதும் அதனை செய்ததில்லை. மாறாக, ஆட்சிப்பீடத்தில் இருப்பவர்களின்
நலன்களைக் காக்க மட்டுமே அவை பயன்பட்டு வந்திருக்கின்றன. அரசு மற்றும்
அரசியல் கட்சிகள் தங்களது இயலாமையை மறைக்கவும், அதிகாரத்தை காத்துக்
கொள்ளவும் எதையும் செய்யத் தயாராக உள்ளன. அதற்கான கூலிப்படையாகவே காவல்
துறையையும் ராணுவத்தையும் அவை பயன்படுத்துகின்றன. எங்கோ யாருக்கோ எதுவோ
நடக்கட்டும் என்ற மனநிலையில் மக்கள் உள்ளவரை, அரசுகளின் இந்த மனப்போக்கு
மாறப்போவதில்லை.
இந்தியா விடுதலை பெற்று ஏறத்தாழ 60 ஆண்டுகளாகும் நிலையிலும், ஓயாமல்
போராடிக் கொண்டிருக்கும் வடகிழக்கு மாநில மக்களின் உணர்வுகள் நமக்குப்
புரிவதில்லை. நமக்கு மிக அருகில் இருக்கும் ஆந்திரத்தில்
நக்சலைட்டுகளுடன் ஒருபுறம் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டே மறுபுறம்
சுட்டுக் கொல்லும் கொடுமைகளும் நமக்கு உறைப்பதில்லை.
தடா, பொடா, தேசிய பாது காப்புச் சட்டம் என எத்தனை அடக்குமுறைச் சட்டங்கள்
யார் மீது போடப்பட்டால் என்ன... அது வெறும் எண்ணிக்கை. விசாரணையேயின்றி
பல ஆண்டுகளாக சிறையில் வாடும் ஒன்றுமறியாத எளிய மக்களைப் பற்றி நமக்கு
தெரியவே தெரியாது. லாக்அப் கொலைகள், லாக்அப் வன்புணர்வுகள்... அது அந்த
குடும்பத்தினரின் கவலை. இத்தனைக் கொடுமைகளையும் தன் மக்களின் மீதே ஏவி
விடும் அரசுக்குப் பெயர் : மக்களுக்காக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட
மக்களின் அரசு.
வாழ்க ஜனநாயகம்!
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பரிந்துரை 2003
1. காவல் துறை மோதலால் ஒரு சாவு நிகழ்ந்த செய்தி வந்தவுடன், நிகழ்வு
நடந்த பகுதியின் காவல் நிலையத்தில் பொறுப்பில் உள்ள அதிகாரி, உடனடியாக
அதை காவல் நிலையப் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.
2. மோதல் சாவில் ஈடுபட்ட காவல் அதிகாரிகள் அதே காவல் நிலையத் தைச்
சேர்ந்தவர்களானால், விசாரணை - குற்றவியல் புலனாய்வு பிரிவு போன்ற ஒரு
சுதந்திரமான அமைப்பிடம் வழங்கப்பட வேண்டும்.
3. ஒரு மனிதரின் சாவில் முடியக் கூடிய குற்றத்தில் காவல் துறையினர்
ஈடுபட்டிருப்பதாகப் புகார் வருமாயின், உடனடியாக இந்திய குற்றவியல்
சட்டத்தின் சரியான பிரிவுகளின் கீழ், முதல் தகவல் அறிக்கை பதிவு
செய்யப்பட வேண்டும். விசாரணை கண்டிப்பாக குற்றவியல் புலனாய்வு பிரிவிடம்
ஒப்படைக்கப்பட வேண்டும்.
4. காவல் துறை நடவடிக்கையால் நிகழ்ந்த சாவுகளுக்கு, கண்டிப்பாக ஒரு
மாவட்ட நீதிபதியின் விசாரணை நடத்தப்பட வேண்டும். இறந்தவரின் மிக
நெருங்கிய உறவினர் விசாரணையில் ஈடுபடுத்தப்பட வேண்டும்.
5. மாவட்ட நீதிபதியின் விசாரணையிலோ, காவல் துறையின் விசாரணையிலோ
குற்றவாளியாக சான்றளிக்கப்படும் காவல் துறை அதிகாரிகள் மீது
சட்டப்பூர்வமாக நடவடிக்கையும் துறை நடவடிக்கையும் உடனடியாக மேற்கொள்ளபட
வேண்டும்.
6. இறந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவது, அந்தந்த வழக்கின்
சூழல்களைப் பொறுத்தது.
7. நிகழ்வு நடந்த உடன், அதில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளுக்கு எந்த உடனடி
பரிசுத் தொகையோ, பதவி உயர்வோ வழங்கப்படக் கூடாது. அந்த அதிகாரிகள்
சந்தேகத்திற்கு இடமின்றி குற்றமற்றவர்கள் என்று சான்றளிக்கப்பட்ட பிறகே
அதுபோன்ற விருதுகளோ, பதவி உயர்வோ வழங்கப்படலாம்.
8. ஆண்டுதோறும் சனவரி 15 அன்றும் சூலை 15 அன்றும், அந்த ஆறு மாதங்களில்
காவல் துறை நடவடிக்கைகளால் நிகழ்ந்த சாவுகள் குறித்த அறிக்கையை, மாநில
காவல் துறை தலைவர் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு அளிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக