ஞாயிறு, 19 மார்ச், 2017

கார்த்திகை பற்றிய சங்ககால குறிப்பு இலக்கியம் தீபாவளி பண்டிகை நாட்காட்டி வானியல் திருவிழா

கார்த்திகை பற்றிய சங்ககால குறிப்பு இலக்கியம் தீபாவளி பண்டிகை நாட்காட்டி வானியல் திருவிழா

aathi tamil aathi1956@gmail.com

12/12/16
பெறுநர்: எனக்கு
தமிழர்களின் தீபாவளி எது தெரியுமா...? #மஹாதீபம்ஸ்பேசில்

இந்துக்கள் கொண்டாடும் பல பண்டிகைகளில் தீபாவளியும் ஒன்று. தீபாவளி
என்றால் ஐப்பசி மாதம் அமாவாசைக்கு முந்தின சதுர்த்தசி அன்று
கொண்டாடப்படுவது என்றே நம்மில் பலரும் நினைத்திருப்போம்.
ஆனால், தமிழர்களைப் பொறுத்தவரை  தீபாவளி என்றால் அது விளக்கீடுத்
திருவிழா எனப்படும் கார்த்திகை தீபத் திருவிழாதான் ஆகும். அதற்கான
எண்ணற்ற சான்றுகள் பல சங்க இலக்கியங்களிலும்,  பிற்கால
இலக்கியங்களிலும்கூடக் காணப்படுகின்றன.
தீபாவளி என்றால் தீபம் + ஆவளி = தீபங்களின் வரிசை என்று பொருள்.
தமிழர்கள் தீபங்களை வரிசையாக ஏற்றிக் கொண்டாடும் பண்டிகை
திருக்கார்த்திகை தீபத் திருநாள்தான்.

தீபத் திருவிழா பற்றி அகநானூறில்...
இறைவன் அக்னிப் பிழம்பாகத் தோன்றிய திருவண்ணாமலை திருத்தலத்தில்தான்
முதன்முதலாக தீபத் திருவிழா நடந்தது என்பதை விளக்கும் ஒரு பாடல்
அகநானூறின் 141-வது பாடல் விளக்குகிறது.

மழை கால் நீங்கிய மகா விசும்பில்
குறுமுயல் மறுநிறம் கிளர்மதி நிறைந்த
அறுமீன் சேரும் அகவிருள் நடுநாள்
மறுகு விளக்குறுத்து மாயை தூக்கிப்
பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய
விழவுடன் அயர வருகத்தில் அம்ம !
என்று கூறுகிறது. பழவிறல் மூதூர் என்று இங்கே குறிப்பிடப்பட்டு இருப்பது
திருவண்ணாமலை திருத்தலத்தைத்தான். மற்றொரு பாடல்
நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்ட
தலைநாள் விளக்கின் தகையுடையவாகிப்
புலமெல்லாம் பூத்தன தோன்றி சிலமொழி
தூதொடு வந்த மழை'
என்று விவரிக்கிறது.

"தலை நாள் விளக்கின்' என்று சொல்லப்பட்டு இருப்பதில் இருந்து தீபத்
திருவிழா பலநாள் கொண்டாடப்படும் விழா என்றும், இறுதியாக கார்த்திகை மாத
நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் விழாவே கார்த்திகை தீபப் பெருவிழா
என்றும் பொருள் கொள்ளலாம்.

நெடுநல்வாடையில்...
இருள் சூழ்ந்திருக்கும் கார்கால மாலைப் பொழுதில் பெண்கள் மாலைப் பொழுதில்
தீபங்களை ஏற்றி வழிபடுவது பற்றி நெடுநல்வாடை அழகாக விவரிக்கிறது.
வெள்ளி வள்ளி வீங்கு இறைப் பணைத் தோள்
மெத்தென் சாயல் முத்து உறழ் முறுவல்
பூங்குழைக்கு அமர்ந்த ஏந்து எழில் மழைக்கண்
மடவரல் மகளிர் பிடகைப் பெய்த
செவ்வி அரும்பின் பைங்கால் பித்திகத்து
அவ்விதழ் அவிழ் பதம் கமழப் பொழுது அறிந்து
இரும்பு செய் விளக்கின் ஈர்ந்திரி கொளீஇ
நெல்லும் மலரும் தூஉய் கைதொழுது
மல்லல் ஆவணம் மாலை அயர
வெண்மை நிற சோழிகளாலும் கிளிஞ்சல்களாலும் ஆன வளையல்களை தங்கள் கைகளில்
அணிந்திருக்கும் மங்கையர்கள், மல்லிகை இதழ் விரித்து மணம் பரப்பும் மாலை
நேரத்தில் இரும்பினால் ஆன விளக்குகளை, எண்ணெயில் நனைத்த திரிகளைக் கொண்டு
ஏற்றி, ஏற்றிய தீபங்களை மலர்களும் நெல்பொரியும் தூவி வழிபடுவார்களாம்.

தேவாரப் பதிகத்தில்
ஞானசம்பந்தர் சென்னை மயிலாப்பூர் தலத்தில் பாடிய பூம்பாவைப் பதிகத்தில்
ஒவ்வொரு மாதமும் கொண்டாடப்படும் திருவிழாக்களைப் பற்றிக் குறிப்பிட்டுப்
பாடும்போது,
வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில்
துளக்கில் கபாலீச் சரத்தான்தொல் கார்த்திகைநாள்
தளத்தேந் திளமுலையார் தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்.
என்று பாடி இருக்கிறார். இந்தப் பதிகத்தில் ஒவ்வொரு மாதமும்
கொண்டாடப்படும் பண்டிகைகளைப் பற்றிய விவரங்களை நம்மால் அறிந்துகொள்ள
முடிகிறது.

'அறுமீன் பயந்த அறஞ்செய் திங்கள் செஞ்சுடர் நெடுங்கொடி என்று
நற்றிணையிலும்'அழல் சேர் குட்டம்'; என்று சிலப்பதிகாரத்திலும், 'நலமிகு
கார்த்திகை நாட்டவர் இட்ட நாள் விளக்கு' என்று கார் நாற்பதிலும்;
'கார்த்திகை விளக்கு இட்டன்ன கடிகமழ் குவளை பைந்தனர்' என்று சீவக
சிந்தாமணியிலும் கார்த்திகை தீபத் திருவிழா பற்றிய பல சான்றுகள்
காணப்படுகின்றன.
பிற்காலத்தில் சிவப்பிரகாசரால் இயற்றப்பட்ட சோனசைல மாலை என்ற நூலில்,
கார்த்திகை விளக்கு மணிமுடி சுமந்து
கண்டவர் அகத்து இருள் அனைத்தும்
சாய்த்துநின்று எழுந்து விளங்குறும் சோண
சைலனே கயிலை நாயகனே..
என்று, உலக விளக்குகள் எல்லாம் புற இருளை மட்டுமே நீக்க, இக்கார்த்திகை
விளக்கோ புறத்திருளோடு அகத்திருளையும் அதாவது அஞ்ஞான இருளையும் நீக்க
வல்லதாய் இருக்கும் அற்புதத்தைச் சிவப்பிரகாசர் கூறுகிறார்.

*தமிழர்கள் விழாக்கள்,  பாரம்பரிய பண்டிகைகளுக்கு தமிழகத்தில் விடுமுறை
விடப்படாமல், ,, ,  அயலாருக்கு விடுமுறை ஒரு சாபக்கேடு*

*திருக்கார்த்திகை விளக்கீடு*

கார்த்திகை விளக்கீடு என்பதுகார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை
நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் தமிழர்கள்தமது
இல்லங்களிலும் கோயில்களிலும்பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக்
கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆகும்.

கார்த்திகை மாதம்

*தமிழ்நாட்டில் கார்மேகம் சோணைமழை பொழியும் மாதம் கார்த்திகை மாதம். கார்
என்றும், கார்த்திகை என்றும் வழங்கப்படும் காந்தள் பூ மிகுதியாக மலரும்
காலம் கார்த்திகை மாதம். கார்த்திகை எனப்படும் விண்மீன் கூட்டம்
கீழ்வானில் மாலையில் தோன்றும் மாதம் கார்த்திகை மாதம்.*

கார்த்திகை நாள்

பண்டைய தமிழர்கள் ஒரு மாதத்தில் உள்ள நாட்களை 27 நாள்மீன்பெயர்களால்
வழங்கி வந்தனர். அந்த நாள்மீன்களில் ஒரு நாள்மீன் கார்த்திகை-நாள்.
இவ்வாறு ஒவ்வொரு மாதமும் வருகின்ற கார்த்திகை-நாள் முக்கியமான நாளாக
தமிழர்களால் வழிபடப்பட்டு வருகின்றது.

கார்த்திகை நட்சத்திரம்

கார்த்திகை நட்சத்திரத்தன்று பூரணை கூடுகின்ற மாதம் கார்த்திகை
ஆகும்.இதனால் இக்கார்த்திகை நாள் திருக்கார்த்திகை எனப்படுகிறது.
*கார்த்திகை நட்சத்திரம் ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களைக் கொண்டிருந்த
போதிலும் அதிலுள்ள ஏழு நட்சத்திரங்கள் பிரகாசமானவை. இதிலுள்ள
மிகப்பிரகாசமான ஆறு நட்சத்திரங்களே கார்த்திகை நட்சத்திரக் கூட்டம்
(Pleiades) எனப்படுகிறது.*

சங்கநூல்களில் கார்த்திகை

*கார்த்திகை மாலை-விளக்குவீரை என்னும் ஊரிலிருந்துகொண்டு ஆண்ட வேளிர்குடி
அரசன் வெளியன்.அவன் மகள் தித்தன்.அவன் முரசில் திரி போட்டு விளக்கேற்றி
வைத்தான். மாலையில் அந்த விளக்கை ஏற்றியபோது வெண்சங்கு ஊதப்பட்டது. பனி
பொழிந்தது. (இந்தக் காலத்தில் போருக்குச் சென்ற தன் தலைவன் மீள்வான் எனத்
தலைவி நம்புகிறாள்.)இது சங்க காலத்தில் நிகழ்ந்த கார்த்திகை விழா
ஒளிவிளக்கை எடுத்துக்காட்டுகிறது.*

கார்த்திகை பற்றிச் சங்கப்பாடல்கள் குறிப்பிடுகின்றன.

கார்த்திகை என்னும் விண்மீன் கூட்டம் காதில் அணியும் மகரக்குண்டலம் போல ஒளிர்ந்தது.

அழல் என்பது கார்த்திகை-நாளைக் குறிக்கும். ஆடு என்னும் மாதத்தில் வரும்
அழல்-நாள் என்பது, மேடம் என்னும் சித்திரை மாதத்தில் வரும் கார்த்திகை
நட்சத்திர நாளைக் குறிக்கும்.

ஆஅல் என்பது கார்த்திகை மாதத்தில் தோன்றும் கார்த்திகை என்னும் விண்மீன்
கூட்டத்தைக் குறிக்கும். இந்த மீன் கூட்டத்தின் வெண்ணிறம் போல முசுண்டைப்
பூ மலர்ந்ததாம்.

ஆரல் என்னும் பெயரிலும் சங்கப்பாடல்களில் குறிப்புகள் உள்ளன.

எரி என்பது கார்த்திகை மாதம். சையம் என்னும் மேற்குத் தொடர்ச்சி மலையில்
மழை பொழிந்து வையை ஆற்றில் வெள்ளம் வரும் காலம்.

சூடாமணி நிகண்டு

கார்த்திகை மாதத்தைக் குறிக்கும்
சொற்கள்தெறுகால்,தேள்,விருச்சிகம்கார்த்திகை நாளைக் குறிக்கும்
சொற்கள்அங்கிஅளக்கர்அளகுஅறுவாய்ஆரல்இறால்எரிநாள்நாவிதன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக