செவ்வாய், 21 மார்ச், 2017

ஒரிசா பாலு பேட்டி குமரிக்கண்டம் பழந்தமிழர் அறிவியல் கடல் கப்பல்

aathi tamil aathi1956@gmail.com

30/8/16
பெறுநர்: எனக்கு
தமிழ் மொழியின் பெருமை குறித்துப் பேசுகிறோம். ஆனால், நாம் பேசக்கூடிய
தமிழில் 14 மொழிகளின் சொற்கள் கலந்துக் கிடக்கின்றன. அதிகமாக
சமஸ்கிருதத்தின் தாக்கமும், உருது, கன்னடம், ஸ்பானிஷ், மலையாளம் என்று
தமிழின் கிளை மொழிகளின் கலப்புகளும் இருக்கின்றன’’ கூர்மையாகப் பேச
ஆரம்பிக்கிறார் கடல்சார் தமிழியல் தொன்மை ஆய்வாளர் முனைவர் ஒடிசா பாலு.

கடந்த 21 வருடங்களாக தனது ஆய்வுப் பணியை மேற்கொண்டு வரும் பாலு, லெமூரியா
கண்டம் என்று ஆரம்பத்தில் சொல்லப்பட்டு, இன்று குமரிக்கண்டம் என்று
சொல்லப்படக்கூடிய கன்னியாகுமரிக்குத் தெற்கே அமைந்திருந்த மூத்தகுடி
தமிழ் மக்கள் குறித்த ஆராய்ச்சிக்காக தன் வாழ்வை அர்ப்பணித்தவர். உலகம்
முழுக்க தமிழர்கள் சென்று தங்கள் வணிகத்தை விரிவுபடுத்தி, அங்கேயே
வாழ்ந்து, நம் மொழியையும், கலாச்சாரத்தையும் அங்கே விதைத்துவிட்டு வந்த
வரலாறுகளை, உலக அரங்கில் பதியவைக்க முயற்சி செய்து வருபவர். ஆமைகள்
குறித்த ஆராய்ச்சியில், கடல் நீரோட்டத்தின் மூலம் கண்டம் விட்டு கண்டம்
தாண்டும் ஆமைகளுக்கும் நம் தமிழ் இனத்துக்கும் இருக்கும் தொடர்பைக்
கண்டுபிடிக்கும் முனைப்பில் செயல்பட்டுவரும் பாலுவின் கால்கள் தடம்
பதிக்காத கடற்கரைகள் தமிழகத்தில் இல்லை. தமிழ் இனத்துக்கான ஆய்வில்
ஈடுபடும் பெருமைக்குரிய தமிழனை, தமிழ் புத்தாண்டு சிறப்பிதழுக்காகச்
சந்தித்தோம்!



தமிழ் மொழியில் அந்நிய மொழியின் தாக்கம் மிகுந்திருப்பதில், தமிழ்
ஆய்வாளரான உங்களின் வருத்தம் எத்தகையது?

இது எல்லோருக்கும் இருக்கும் வருத்தம். ஆனால், மொழிக்கலப்பை பொறுத்தவரை
எனக்கு வருத்தத்தை தாண்டிய மகிழ்ச்சியும் உள்ளது. எப்படி பிற மொழிகளின்
தாக்கம் நமது மொழியில் இருக்கிறதோ, அதேபோல 2000 வருடத்துக்கு முன்பாகவே
தமிழ் மொழியின் தாக்கம் உலகம் முழுக்க இருக்கும் பல நாடுகளின் மொழிகளில்
இருக்கிறது. குறிப்பா, ஆஸ்திரேலியா, மடகாஸ்கர், துருக்கி, இந்தோனேசியா,
பர்மா, வியட்நாம், அமெரிக்கா, ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் இன்னும்
எத்தனையோ நாடுகளில் நம் மொழியின் பாதிப்புகள் இருக்கின்றன. அவர்கள்
பேசும் மொழிகளில் தமிழ் வார்த்தைகள் அதிகம் இடம்பெறுகின்றன. அவர்களின்
ஊர்களுக்கு தமிழ் பெயர்கள் சூட்டப்பட்டிருக்கின்றன. அங்கே தமிழ் பெயரிலான
ஆறுகள் ஓடுகின்றன. கொரிய மொழியில் அதிகமான தமிழ் மொழியின் தாக்கம்
இருக்கிறது. இன்னும் எவ்வளவோ சொல்லிக்கொண்டே போகலாம்.



உலகம் முழுக்க நம் தமிழர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பயணித்தது
எப்படி சாத்தியம்?

பாய்மரக் கப்பல்கள் கண்டுபிடிக்கப்படும் முன்னரே, கடல் நீரோட்டத்தை
அடிப்படையாகக் கொண்டு, மக்கள் படகுகளில் ஏறி பயணம் செய்திருக்கின்றனர்.
காலநிலைகளுக்கு ஏற்ப கடலின் நீரோட்டம் மாறும், குறிப்பிட்ட காலநிலையில்
குறிப்பிட்ட திசையை நோக்கி கடலின் நீரோட்டம் இருக்கும் என்பதில் நம்
மக்களுக்கு மிகப்பெரிய தெளிவு இருந்திருக்கிறது. அதனால் அதை
அடிப்படையாகக்கொண்டு பயணம்செய்து பல்வேறு நாடுகளில் குடியேறி, அங்கே பல
வகையான வணிகங்களில் ஈடுபட்டு நம் சுவடுகளைப் பதித்து வந்திருக்கின்றனர்.



குமரிக்கண்டம் குறித்த ஆய்வில் ஈடுபட்டு வருகிறீர்கள். ‘தமிழகம் என்பது
அங்கேதான் இருந்தது. கடற்கோள் அழிவால், அங்கிருந்த மக்கள் இடம்பெயர்ந்து
வந்து கடலைவிட்டு வெகுதொலைவில் உருவாக்கிய நகரங்கள்தான் இப்போது நாம்
பார்க்கும் தமிழகம்’ என்று சொல்லப்படுவது உண்மையா?

கன்னியாகுமரிக்கு தெற்கிலிருந்து ஆரம்பித்து மடகாஸ்கர் வரைக்கும் இன்று
நாம் பார்க்கக்கூடிய இலட்சத்தீவுகள், மாலத்தீவு போன்ற இடங்களில் வாழ்கிற,
இதன் அருகில் இருந்த கடலில் மூழ்கிப்போன தீவுகளில் வாழ்ந்த மக்கள்தான்
குமரிக்கண்டத்தில் வாழ்ந்த மக்கள் என்று சொல்கின்றனர். ஆனால் அது
உண்மையல்ல. என்னைப் பொறுத்தவரை, குமரிக்கண்டத்தில் மக்கள்
வாழ்ந்துகொண்டிருந்த அதே காலத்தில் இங்கும் மக்கள் வாழ்ந்திருக்கின்றனர்.
சங்க இலக்கியங்களிலே அதற்கான தரவுகள் இருக்கின்றன. பாண்டிய மன்னனை
‘தென்புலத்துக் காவலன்’ என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
அதற்கான பொருள், தெற்கே வாழ்ந்திருந்த மக்களின் அரசனாக அவன்
இருந்திருக்கிறான் என்பதே. ஆக, இங்கே தென்புலம் மட்டுமல்ல, வேறு
இடங்களிலும் மக்கள் இருந்திருக்கின்றனர் என்பது நமக்குப் புரிய வேண்டும்.
குமரிக்கண்டத்திலிருந்து கடல் அழிவால் நிலத்தை இழந்து இங்கே வந்த மக்களை
புலம்பெயர்ந்த மக்களாக, அகதிகளாக மக்கள் பார்த்திருக்கிறார்கள்
என்பதற்கான சாட்சியங்களும் இலக்கியங்களில் இருக்கின்றன. இலக்கியங்களை
வரலாற்று நாட்குறிப்பு என்றே சொல்லலாம்.



நம் ஆதித்தமிழர்களின் வாழ்க்கைக்குச் சான்றாக இலக்கியங்களை மேற்கோள்
காட்டுவதால்தான், அவை நம்ப முடியாததாக, புராணக் கதைகளாகப்
பார்க்கப்படுகிறதா?

ஆரம்பத்தில் குமரிக்கண்டம் இருந்ததற்கான சாட்சியாக நாம் இலக்கியங்களை
மட்டுமேதான் மேற்கோள்காட்டி வந்தோம். அதனால்தான் அதை ஏற்றுக்கொள்வதற்கு
யாரும் தயாராய் இருக்கவில்லை. அப்போது குமரிக்கண்டம் இருக்கிறதென்று
சொன்னவர்களும் கடலுக்குள் செல்லவில்லை. இல்லையென்று மறுத்தவர்களும்
கடலுக்குள் செல்லவில்லை.

ஆனால், இப்போது ஆய்வில் ஈடுபட்டுவரும் என்னைப் போன்றவர்கள்
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மீனவர்களின் உதவியோடு கடலுக்குள் சென்று
ஆராய்ந்து வருவதில், பூமி சுழற்சியில் அதன் அச்சு மாறியதாலும், எரிகற்கள்
விழுந்ததாலும் பூமியின் அமைப்புகளில், கடற்கரையில் பெரிய மாற்றங்கள்
உருவாகியிருக்கின்றன. அதனால் பல தீவுகள் கடலுக்குள் சென்றிருக்கின்றன
என்று நிரூபித்துவருகிறோம். வெறுமனே இலக்கியங்களை மட்டுமே சாட்சியாக
வைத்து நிரூபிக்க முயற்சி செய்ததால் நம்மை ஏளனமாகப் பார்த்தவர்களுக்கு
இன்று தமிழர்களின் நிலங்களையும், தமிழர்களின் திறன்களையும்
அறிவியல்பூர்வமாக நிரூபிக்கும் நிலைக்கு நாம் உயர்ந்திருக்கிறோம்.



ஒரு பெரிய நகரமே கடலுக்குள் மூழ்கிப்போவதென்பது எப்படி சாத்தியம்?

கி.மு. 2300-ல், 30 கிலோமீட்டர் பரப்பளவில் மடகாஸ்கரில் இருந்து 900
மைல்களுக்கு அப்பால் ஒரு பெரிய எரிகல் விழுந்ததற்கான தரவுகள் கிடைத்து,
அதைப்பற்றிய ஆய்வு நடந்துகொண்டிருக்கிறது. அந்த எரிகல்லால் இங்கே
மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. தீவுகள் மூழ்கியிருக்கின்றன,
பாலைவனங்கள் உருவாகியிருக்கின்றன.

உலகம் முழுக்க 65,000 கிலோமீட்டர் நீளத்திலான மலைத்தொடர்கள் கடலுக்குள்
இருக்கின்றன. இமயமலையே ஒரு காலத்தில் கடலாக இருந்த இடம் என்று
ஆராய்ச்சிகள் தெரிவித்து வருகின்றன. அங்கே கடல் இருந்ததற்கான பல்வேறு
தரவுகள் தொடர்ந்து கிடைத்து வருகின்றன. அவ்வளவு பெரிய நிலப்பரப்பு கடலாக
இருந்து கரையாக மாறியது சாத்தியமென்றால், ஒரு நிலப்பரப்பு கடலுக்குள்
மூழ்கிப்போவதும் சாத்தியமே.



சுமார் எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்த குமரிக்கண்டம்
கடலுக்குள் மூழ்கியது?

இது குறிப்பிட்ட ஒரு நாளில் நடந்து முடிந்த சம்பவம் கிடையாது. நமது
இலக்கியங்களை எடுத்துப்பார்த்தால், கி.மு. இரண்டாம் நூற்றாண்டு, கி.பி.
முதல் நூற்றாண்டு, ஒன்பதாம் நூற்றாண்டு, பனிரெண்டாம் நூற்றாண்டு என்று
பல்வேறு காலகட்டங்களில் நடந்த பல மிகப்பெரிய கடற்கோள்களை நாம் படிக்க
முடிகிறது. புவிஈர்ப்பு விசை வேறுபாடு காரணமாக மடகாஸ்கர் பகுதியில்,
சிந்துசமவெளிப் பகுதியில் விழுந்த எரிகற்கள், எரிமலைக் குழம்புகள்,
இயல்பாகவே பூமியின் அச்சு மாறுகின்ற தன்மை என்று வரலாற்றுப்பூர்வமாகவும்
நிரூபிக்கப்பட்ட பல நிகழ்வுகளால் குமரிக்கண்டம் உட்பட உலகத்தின் பல்வேறு
பகுதியில், பல்வேறு தீவுகள், நகரங்கள் கடலுக்குள் மூழ்கியிருக்கின்றன.



தங்கள் அடையாளங்களோடு கடலுக்கடியில் மூழ்கிப்போன நம் மூத்தகுடி
தமிழர்களின் வாழ்க்கைமுறை எப்படிப்பட்டதாய் இருந்தது?

அந்த மக்கள் உலக நீரோட்டத்தோடு நேரடியாகத் தொடர்புடையவர்கள். அதற்கு
பெரிய உதாரணங்கள்தான், நம் ஈழத்தமிழ் மக்கள் கடல் வழியாக ஆஸ்திரேலியா,
கனடா போன்ற நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தது. உலகத்தின் மூத்தகுடியான நம்
தமிழ் மக்கள், பூமியின் சுழற்சியை நம்பினர், இயற்கையை மிகவும்
நேசித்தனர், மரங்களை உறவுகளாகப் பேணிக் காத்தனர். அதனால்தான் புன்னை
மரத்தை அக்கா என்று அழைக்கக்கூடிய குணம் தமிழ்ப் பெண்ணுக்கு இருந்தது.
விலங்குகளை தங்கள் நண்பர்களாகப் பார்த்தனர். எனவேதான், மலைப்பயணங்களில்
தேவாங்குகளை திசையை அறிந்துகொள்ளப் பயன்படுத்தினர். கடலுக்குள்
செல்லும்போது திசை அறிய பறவைகளைப் பயன்படுத்தினர்.

அப்பேற்பட்ட அறிவும், ஆற்றலும் உடைய நம் தமிழ் இனம் இன்று தமிழென்று
நினைத்துக்கொண்டு வேறு எதையோ பேசுகிறது. தமிழ் பாரம்பர்யம் என்கிறோம்.
ஆனால் ‘பாரம்பர்யம்’ என்பதே தமிழ்ச்சொல் கிடையாது. ‘விவசாயம்’ என்கிறோம்,
அது தமிழ்ச்சொல் அல்ல வடமொழிச்சொல். ஆக நம்முடைய மரபு, பண்பாடு, வாழ்க்கை
நெறியை நாம் திரும்பக்கொண்டு வர வேண்டியது கட்டாயம். தமிழ் பேசினால்
மட்டும் போதாது, தமிழர்களாக வாழ வேண்டும்.



http://manam.online/manam_v1/news/Special-Interviews/2016-APR-13/Orissa-Balu-reveals-secret-behind-Lemuria-continent-Tamil-culture

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக