|
11/2/16
| |||
|
vallinam.com.my/version2/?p= 1101
தமிழர் அறிவியலும் சில சந்தேகங்களும்
தமிழர் அறிவியலும் சில சந்தேகங்களும்
தமிழர் அறிவியலும் சில சந்தேகங்களும்
by நவீன் செல்வங்கலை • • 16 Comments
தொன்மங்களை (Myths) பொதுவாகக் கற்பனையின் உச்சத்தில் விரித்துரைக்கப்பட்ட கதைகள் என வரையறுத்துக் கூறுவர். காலங்களைக் கடந்து அவை எல்லா சமூகங்களிலும் தொடரப்பட்டு வருவது கண்கூடான ஒன்று. எச்சமயத்தைச் சார்ந்ததாக இருப்பினும் இக்கதைகளில் பொறிக்கப்பட்டிருக்கும் நிகழ்வுகளானது விண்ணுலகம் மற்றும் மண்ணுலகைச் சார்ந்தவையாக பெரும்பாலும் இருக்கும். விண்ணுலக கதைகள் பெருவாறாக கற்பனைக் கதைகள் எனக் கொள்ளப்பட்டாலும், மண்ணுலகம் சார்ந்த ஒரு சில கதைகள் வரலாற்றுக் கதைகளாகவும் விளங்குகின்றன. பெருவாறாக தெய்வங்கள், வீரர்கள், இராட்சச விலங்குகள் என இவர்களை மையப்படுத்திக் கதைகள் நகர்த்தப்பட்டிருக்கும். சமயம், சடங்குகள் குறித்த குறிப்புகளும் தொன்மங்களில் இடம்பெற்றுள்ளன. அமெரிக்காவில் பூர்வக் குடி மக்களான செவ்விந்தியர்களின் தொன்மங்களும் பழமரபுக் கதைகளும் (Legend) இன்றளவும் கோப்புகளாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 1492-ம் ஆண்டுகளுக்கு முன்னமே குடிக்கொண்டிருந்த செவ்விந்தியர்க
ள், தங்களின் கதைகளில் தெய்வங்கள் மற்றும் மனிதர்களைக் முதன்மைப்படுத்தியிருக்கிறார்கள். இக்கதைகளில் இடம்பெறும் பாத்திரங்கள் அமானுசஷ்ய விசயங்களுடன் தொடர்புக் கொண்டிருப்பதோடு பலமிக்கவர்களாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அறியப்படுகையில், இக்கதைகளி
னுள் வீற்றிருக்கும் மர்மம் நிறைந்த எழுத்து மற்றும் மொழி வகைகள், நம்பிக்கைகள், சடங்குகள், ஆசாரங்கள், நம் முன்னோர்களின் உண்மை நோக்கத்தை கேள்விக்குள்ளாக்குகிறது.
பழைய கற்கால மனிதன் அறிவாலும் ஆற்றலாலும் ஓங்கி நின்றான். அறிவியலுக்கு முன்னதாகவே தொழில்நுட்பம் தோன்றி ஆதிமனிதனின் தேவைகளை பூர்த்தி செய்தது. தன் உறுப்புகளை உபயோகித்துப் பசியைப் போக்கிக் கொண்டான். தேவைகள் அதிகரிக்க, உணவுப் பொருட்களை எடுக்க, தோண்ட, பறிக்க கற்கருவிகளையும் மரக்கருவிகளையும் பயன்படுத்தினான். சக்கி முக்கி கற்களைக் கொண்டு நெருப்பு உண்டாக்கினான். வேட்டையாடிய பொருட்களை பதப்படுத்தி உண்டான். இதனை அடுத்து வில், அம்பு எனப்பல கருவிகள் உருவெடுத்தன. வேட்டையாளனாக இருந்தவன் வேளாண்மையை நோக்கினான். இதன் வாயிலாக ஏர், கலப்பைக் கொழு எனப்பல உழுக்கருவிகள் உருப்பெற்றன. குன்று, குகை, காடுகள் என வாழ்ந்தவன் பாதுகாப்பாக வாழ்வதற்கு வீடுகளை கட்டத் தொடங்கினான். இவ்வாறான தொழில்நுட்பத்தை, முறையான கையாழுதலின் மூலம் செம்மைப்படுத்த அறிவியல் பயன்பட்டது .
5,000 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்திய, ஆசிய மக்கள் இவ்வுலகினை கூர்ந்து கவனித்து தங்களின் மொழிகளில் உரைக்க முற்பட்டனர். மொழி என்பது நாளடைவில் அதைப் பேசுகிற மக்களின் கருத்துக்கும் பண்பாட்டிற்கும் ஏற்ப வளர்ச்சியடைந்து வளம்பெறும் என்பது எமது மதிப்பு. இவ்வாறு தங்களின் அறிவுச்சார்ந்த உள்ளீட்டை வெளிக்கொணர தொன்மங்கள், பழமரபுக் கதைகள், நாட்டுப்புறக் கதைகள், இலக்கியம், இலக்கணம் போன்ற பதிவுகள் உருவாக்கப்பட்டன. வரலாற்றாசிரியர்கள், பழந்தமிழ்ச் சமுதாயத்தில் இடம்பெற்ற அறிவியல் உணர்வு, தொழில்நுட்பத்திறன் பற்றிய கூறுகளை அறிய பண்டைய இலக்கிய இலக்கணங்களும் அவற்றின் உரைகளும் பேருதவியாக இருக்கின்றன என குறிப்பிட்டுள்ளனர். பண்டைய தமிழ் சமுதாயத்தைப் பற்றிப் பேசுகையில் சிந்துவெளி நாகரிகத்தையும் எட்டிப் பார்க்கத் தூண்டுகிறது.
சிந்துவெளி நாகரிகம் திராவிடர் நாகரிகம் என்கிற கருத்தை ஏற்று, வரலாற்றை பல நூற்றாண்டுகளுக்கு முன்னோக்கிப் பார்த்தால் திராவிடரின் தொழில்நுட்பத்திறன் வியப்பைத் தரும். தமிழ் இலக்கியங்கள், இதரச் சமயம் சார்ந்த பழங்கதைகளுடன் வேறுபட்டிருப்பதை நாம் முதலில் கருத்தில் கொள்ள வேண்டும். இன்று பெரும்பாலோர் தமிழில் உள்ள தொன்மங்கள் வடமொழியில் இருந்து வந்தவை என நம்பிக்கொண்டிருக்கின்றனர். பொதுவில், தமிழ் புலவர்கள், தாங்கள் கண்டிட்ட, கேட்டிட்ட, உற்றறிந்த, பட்டறிந்த விசயங்களை குறிப்புகளாக தங்களின் பாடல்களில் பொதித்து வைத்தனர். அவற்றோடு தொடர்புடைய இயற்கை நிகழ்ச்சிகளையும் பதிவு செய்தனர். இவ்வாறு பொருத்திப்பாடிய வரிகளிலிருந்தே நாம் அறிவியல் சார்ந்த சான்றுகளைப் பெறலாம். அறிவியலை குறிப்பிட்டு எந்த பாடலும் இயற்றப்படவில்லை என்பதே உண்மை. தங்கள் பாடல்களில் அறிவியல் புகுந்திருந்தாலும் அறிவியலை மையமிட்டோ அதன் தேவையைக் கருதியோ பாடல்களின் கரு மையமிடவில்லை என்பதை ஏற்க வேண்டியுள்ளது. செடி கொடிகள், பறவை, விலங்குகள் என குறிப்புகளை சில வரிகளில் பொதித்து வைத்துள்ளனர். அவற்றில் பல இன்றைய தாவரவியல், விலங்கியல் உண்மைகளோடு பொருந்திவருவது கண்கூடு. திருக்குறளில் இடம்பெற்றிருக்கும் ‘மருந்து’ எனும் அதிகாரம், தமிழர்களின் அறிவியல் சார்ந்த அனுகுமுறைகள் இலக்கியம் மற்றும் இலக்கண படிமங்களில் உயிர்ப்பித்திருந்ததை மெய்ப்பிக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு தைவானிலுள்ள தேசிய அருங்காட்சியகம் (National Palace Museum),
சீன நாட்டில் கி.மு 3,000 ஆண்டுகளுக்கு முன்னரே காந்த விசை நடைமுறையில் இருந்ததை கண்டறிந்தது. அங்குபங்சர் அல்லது குத்தூசி மருத்துவம் எனப்படும் இயற்கை மருத்துவ வழிமுறை கி.மு 2,300-க்கு முன்பே மருத்துவர்கள் மனித நரம்பியல் சிகிச்சையில் தலைசிறந்து இருந்ததைக் குறிக்கிறது. சுமார் 3,650 ஆண்டுகளுக்கு முன்பு கோள்கள் மற்றும் விண்மீன்களின் அசைவுகளை கணக்கெடுக்க வட்ட அமைப்பிலான ‘ஸ்டோன் ஹெஞ்ச்’ (Stonehenge) உருவாக்கப்பட்டது. 2,000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட சரக சம்ஹிதை எனும் நூலில் மருத்துவச் செய்திகள், நோயறியும் முறைகள், மருந்து வகைகள், மருந்தூட்டும் முறைகள் போன்றவை குறிக்கப்பட்டிருக்கின்றன. அவை இன்றைய மருத்துவத்தோடு ஒத்துப் போவதைக் காணலாம். இன்றையளவில் மருத்துவ அறிவியலில் சோதனை முறை (experimental) அங்கத்துவம் பெற்றுள்ளது. அன்று, பெரும்பாலும் பட்டறிவு பயன்பட்ட போதிலும், சோதனை முறை கையாளப்பட்டதற்கு சான்றாக, மனித இரத்தத்தை எடுத்து நாய் அல்லது காக்கைக்குக் கொடுத்து அதன் தன்மையை அறிந்ததைக் குறிக்கலாம் (மருத்துவர் சரகர், தமிழ் வளர்க்கும் அறிவியல், முதல் பதிப்பு 2009, ப.272- 278 ). பரந்த தொல்லியல் களமான ஆதிச்சநல்லூரில், தொல்தமிழர்கள் 3,000 ஆண்டுகளுக்கு முன்னமே இரும்பை பயன்படுத்தியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ‘சுல்வசூத்திரம்’ எனும் சமஸ்கிருத நூலில் ‘இஷ்டிக’ எனும் சொல், சிந்துவெளி நாகரிகத்தில் வீடுகள் கட்டப் பயன்படுத்தப்பட்ட செங்கல்லைக் குறிக்கிறது. தமிழில் ‘இட்டிகை’ என அழைக்கப்படுகிறது. மேலும் இதனை வலுபடுத்த அகநானூறு போன்ற சங்கப் பதிவுகள் துணைபுரிகின்றன.
“இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தென” (அகநானூறு 167-13)
“நாட்பலி மறந்த நரைக்கண் இட்டிகை” (அகநானூறு 287-6)
வரலாற்றாசிரியர், மயிலை சீனி வேங்கடசாமி, தமிழகக் கட்டிடக் கலையைச் (Architecture) சிறப்பித்துப் பேசியுள்ளார். முந்தையக் காலத்தில் தமிழகக் கோயில்கள் மரத்தினால் அமைக்கப்பட்டன. பின்பு, செங்கல்லினாலும் சுண்ணாம்பினாலும் கட்டிடங்கள் எழுப்பப்பட்டன. அதனைத் தொடர்ந்து, பாறைகளைக் குடைந்து குகைக்கோயில்கள் (Rockcut Cave Temples) அமைக்கப் பெற்றன. இறுதியாகக் கருங்கற்களைக் கொண்டு கற்றளிகள் (கருங்கற்களை ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கிக் கட்டப்படும் செயல்முறை) அமைக்கப்பட்டன. அக்காலம் தொட்டு இன்றுவரை பல்வேறு அமைப்புகளில், பல தொழிற்முறைகளைக் கொண்டு வீடுகள் மற்றும் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. குடிசை, குரம்பை, வீடு, மனை, கோட்டை, அரண், மதில், வளமனை, கொட்டாரம் எனும் சொற்களை கட்டிடக்கலையின் சிறப்பைக் கூறும் சான்றுகளாகக் கொள்ளலாம். வாயில், கதவு, அறை, இடைகழி, முற்றம் முதலியன வீட்டின் உட்பகுதிகளைக் குறிக்கும் சொற்களாகும். சங்க இலக்கியங்களில் மனைகள் மற்றும் மதிகளின் உயர்ச்சி குறித்த சில குறிப்புகளும் இடம்பெற்றிருந்தன. ‘சுடும ணோங்கிய நெடுநகர் வரைப்பின்’ (பெரும்பாணாற்றுப்படை, 405) , செங்கல்லாலான வீடு பற்றிய குறிப்பாகும். ‘திண்சுவர் நல்லிற் கதவம் கரைய’ (மதுரை காஞ்சி, 667), திண்ணிய சுவர்களை உடைய நல்ல வீடுகளின் கதவுகள் ஒலிக்க என பொருள்படுகிறது. அக்காலத்திலே இக்கதவுகள் கிறிச்சிடா வண்ணம் நெய்யிட்டுள்ளனர், ‘நெய்படக் கரிந்த திண்போர்க் கதவின்..’ (மதுரை காஞ்சி, 354). இவ்வாறு, நெசவுத்தொழில், கணிதம், தாவரவியல், விலங்கியல், வேதியல், மருந்தியல் தொடர்பான சில குறிப்புகளும் சங்ககால இலக்கிய நூல்களில் இடம் பெற்றிருக்கின்றன (கட்டிட தொழில் நுட்பம், தமிழ் வளர்க்கும் அறிவியல், முதல் பதிப்பு 2009, ப.238-239).
கிடைக்கப் பெற்ற நூல்களிலிருந்து சான்றுகளோடு குறிப்புகளை நியாயமான முறையில் தொகுத்தெடுப்பதை உறுதி செய்ய வேண்டியிருக்கிறது. ‘வானுர்தி’ குறித்த குறிப்புகள் தமிழ் மற்றும் வட மொழி கதைகளில் காணப்பட்டாலும், இன்றைய நடப்பில் அவை சான்றுகளோடு உறுதிப்படுத்தப்படாமலிருப்பது பல கேள்விகளை எழுப்புகிறது. சீவகசிந்தாமணியில், சச்சந்தன், மயன் என்ற தெய்வத் தச்சனை அழைத்து மயில் பொறி ஒன்றைத் தயாரிக்கச் சொன்னான். மயனும் பார்ப்பதற்கு உயிருள்ள மயிலைப் போன்றதொரு பொறியைத் தயாரித்தான். அதிலேறி அமர்ந்து ஒரு ‘திருகை’த் திருகினால் அது விண்ணில் பறந்து செல்லும் ஆற்றல் பெற்றிருந்தது. அந்தப் பொறியை இயக்கும் பயிற்சியை விசயைக்கு நன்கு கற்றுக் கொடுத்தான்.
அந்தரத்தார் மயனே என ஐயுறும்
தந்திரத்தால் தம நூல் கரை கண்டவன்
வெம் திறலான் பெரும் தச்சனைக் கூவி ஓர்
எந்திர ஊர்தி இயற்றுமின் என்றான். (சீவகசிந்தாமணி, 234)
பல் கிழியும் பயினும் துகில் நூலொடு
நல் அரக்கும் மெழுகும் நலம் சான்றன
அல்லனவும் அமைத்து ஆங்கு எழு நாள் இடைச்
செல்வது ஓர் மா மயில் செய்தனன் அன்றே. (சீவகசிந்தாமணி, 235)
ஆடு இயல் மா மயில் ஊர்தியை அவ்வழி
மாடமும் காவும் அடுத்து ஓர் சில் நாள் செலப்
பாடலின் மேல் மேல் பயப்பயத் தான் துரந்து
ஓட முறுக்கி உணர்த்த உணர்ந்தாள். (சீவகசிந்தாமணி, 238)
பண் தவழ் விரலின் பாவை பொறிவலம் திரிப்பப் பொங்கி
விண்தவழ் மேகம் போழ்ந்து விசும்பு இடைப் பறக்கும் வெய்ய
புண் தவழ் வேல் கண் பாவை பொறி இடம் திரிப்பத் தோகை
கண்டவர் மருள வீழ்ந்து கால் குவித்து இருக்கும் அன்றே. (சீவகசிந்தாமணி, 239)
மணிமேகலையில், காஞ்சனாபுரத்தில் வசித்த, காஞ்சனன், காயசண்டிகை இருவரும் வான் வழியாகப் பயணித்ததைக் குறிக்கும் வரிகள் உள்ளன.
“ஓங்கிய மூதூர் உள்வந் திழிந்து” (மணிமேகலை, 20-28)
“வானம் போவுழி, வந்தது கேளாய்” (மணிமேகலை, 20-115).
ஆயினும், இவர்களது வான்வழி பயணமென்பது மந்திரத்திலானது எனும் கூற்றினை விருச்சிக முனிவர் இட்ட சாபம் தெளிவடையச் செய்கிறது, “அந்தரஞ் செல்லும் மந்திரம் இழந்து” (மணிமேகலை, 17-43). ‘வைமானிக்க சாஸ்திரம்’ எனும் நூல், 1952-ம் ஆண்டில் G.R. Josyer என்பவரால் வெளியிடப்பட்டது. சமஸ்கிருத மொழியிலான இக்குறிப்புகள் இந்தியில் 1959-ம் ஆண்டிலும், சமஸ்கிருதம்- ஆங்கிலம் அடங்கிய நூல் 1973-ம் ஆண்டிலும் வெளியிடப்பட்டது. 1974-ம் ஆண்டில் Indian Institute of Science எனும் கல்வி நிறுவனம் தனது தீவிர ஆய்வின் முடிவில், இந்நூலில் குறிப்பிட்டிருக்கும் விமானம் குறித்த செயல்முறைகளைக் கொண்டு விமானம் ஒன்றை உருவமைக்க இயலாது என்ற கருத்தை தெரிவித்தது. இக்கட்டுரையில், நூலின் வரலாற்று அம்சங்கள் மற்றும் நம்பகத்தன்மை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளன. மேலும், அதன் தொழில்நுட்ப உள்ளடக்கமானது தீவிரமாக விமர்சிக்கப்பட்டுள்ளது. நூலில் அடங்கியிருக்கும் சுலோகங்கள், 1904 ஆண்டிற்கு முந்தைய காலத்தில் எழுதப்பட்டிருக்க முடியாத வகையில், அவை தற்போதைய அறிவு அடைப்படையில் இருப்பதையும் சுட்டிக் காட்டியுள்ளனர்.
வைமானிக்க சாஸ்திரம் எழுதப்பட்ட கால அளவீட்டை பல்வேறு கோணங்களில் நோக்கலாம். நூலில் பொறிக்கப்பட்டுள்ள சமஸ்கிருத எழுத்துருக்கள் நவீன இலக்கணத்தை பயனில் கொண்டு தொன்மையை ஆங்காங்கே செருகியிருப்பது தெரியவருகிறது. இராமாயணம் மற்றும் மகாபாரதத்தில் விமானங்களின் பயன்பாடு குறித்து நுணுக்கமாக கையாளப்படவில்லை எனும் கூற்றினையும் முன் வைக்கின்றனர். இராமாயணத்தில் புகழ்ந்துரைக்கப்பட்ட ‘புட்பக விமானம்’ பற்றிய குறிப்புகள் இடம்பெற்றிருந்தாலும், அவ்விமானமானது மந்திர தந்திர செயலைக் கொண்டு பறக்கும் பண்போடு நின்றுவிட்டது. தொழில்நுட்ப சான்றுகள் கிடைக்கப்பெறவில்லை. தெளிவான நுட்பங்கள் புலப்படாத பட்சத்தில், எழுத்து வடிவிலான சான்றுகளை ஏற்று, இவ்வாய்வின் முடிவில் மகரிஷி பரத்வாஜரை ஆசிரியராக கொண்ட ‘வைமானிக்க சாஸ்திரம்’ சுப்பராய சாஸ்திரி என்பவரால் 1900- 1922-க்கும் இடைப்பட்டக் காலத்தில் எடுத்துரைக்கப்பட்டிருக்கும் என நம்பப்படுகிறது.
இவ்வாறாக தமிழர் மற்றும் இந்து மதவாதிகள் மத்தியில் கதைகளாகவும் கற்பனைகளாகவும் வானுர்தி மற்றும் வான்வழிப் பயணம் குறித்த குறிப்புகள் காணப்பட்டாலும், இவ்வறிவானது இவர்களுக்கு எதன் அடிப்படையில் கிட்டியது எனும் கேள்வியை மட்டும் முன் வைக்கலாம். பறக்கும் பண்பை கொண்ட பொருளொன்றை குறிப்பிட்டு, அதன் செயல்பாடுகளைக் காரண காரிய விளக்கத்தோடு வரையறுப்பதே அறிவியல்.
சிந்தனை மாற்றமென்பது ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பெரிய அளவிலான எதிர்வினையை அனுபவித்திருக்கும். இவ்வாறு வாழ்க்கை மற்றும் உலகினை திட்டமிட்ட அறிவியல் மற்றும் கற்றல் வாயிலாக மிகத் துள்ளியமாக கண்டறிய தொன்மங்களுக்கு அப்பாற்பட்டு சிந்திக்க மக்கள் வெகுண்டெழுந்தனர். இப்பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அசைவுகளையும் ஆராய எழுந்த பிற்கால விஞ்ஞானிகள் பலவாறான சிந்தனை சிதைவுகளில் சிக்கி அல்லல் பட்டனர். பெரும்பாலானோர் ‘கடவுள்’ இவ்வுலகை ஆட்கொண்டிருக்கிறார் எனும் முடிவுக்கும் வந்தனர். மாந்திரிகவாதிகள், ஜோதிடர்கள் இவ்வகையான உலகங்களுடன் தொடர்பு வைத்திருப்பதாகவும் நம்பப்பட்டது. இக்காலத்தில், ஒரு பொருளை அடையாளம் கண்டு அதற்கு ஏற்ப விளக்கம் தருவதென்பது பல கருத்து முறண்பாடுகளை ஏற்படுத்தியிருந்தாலும், அவை பெரிதாக விவாதித்திருக்க கருத்தடக்கங்கள் இல்லாமற் போயிருக்கலாம். எடுத்துக்காட்டாக, உலகில் நடக்கும் விசயங்களை அப்படியே ஏற்று, அடுத்து இவ்வாறு நிகழுலுமாயின் இதே மாதிரியான தரவுகளையே பெறுவோம் எனும் முடிவுக்கு வந்திருப்பர்.
வானத்தில் கறு மேகங்கள் குவிந்தால் மழை வரும் என்பது அக்காலத்தில் ஆதாரமாக ஏற்கப்பட்டிருக்கும். மழையின் பெருமையையும் இன்றியமையாமையையும் உலகத்தில் எல்லா மக்களும் அறிந்திருந்தனர். ஏனையர் அறிந்ததைவிட தமிழர் நன்கு அறிந்திருந்ததற்கு சான்றாக திருவள்ளுர் ‘வான்சிறப்பு’ என்னும் ஓர் அதிகாரம் எடுத்தோதியுள்ளதையே எடுத்துக் கொள்ளலாம். காவியப் புலவர்கள் பாடிய பாட்டுக்களிலே, வெண்மேகங்கள் சென்று கடலில் படிந்து வயிறு நிறைய பெய்கிறது எனப் பாடியதை நம் முன்னோர்கள் புலவர்கள் கற்பனையில் மிதந்திருப்பதை உணர்த்தினார்கள். ஆனால், வெயிலின் சூட்டினாலே நீர்நிலைகளில் உள்ள நீர் ஆவியாகச் சென்று வானத்தில் மேகமாகி மழையாகப் பெய்கிறது என்ற விஞ்ஞான சாயலைக் கண்டுக் கொள்ளவில்லை. எட்டுத்தொகையுள் ஒன்றாகிய பரிபாடலில் அகத்திய விண்மீனைக் குறிக்கும் வரிகள் உள.
“..பொதியின் முனிவர் புரைவரை கீறி
மிதுனம் அடைய விரிகதிர் வேனில்
எதிர்வரவு மாரி இயைகென இவ்வாற்றான்
புரைகெழு வையம் பொழிமழை தாழ..” (பரிபாடல், 11.11-14)
அதாவது, அகத்திய விண்மீன் மிதுன இராசியில் தோன்றும் காலத்தில் கடல் நீரானது ஆவியாக மாறுவதால் கடல் வற்றுகிறது. இவ்விண்மீன் மறையும்போது மழை பொழிந்து கடலின் நீர் மட்டம் அதிகரிக்கிறது. அகத்தியர் கடலை குடித்ததாகவும், மீண்டும் கடல் நீரை அவர் உமிழ்ந்ததாகவும் (“தூய கடன் நீர் அடிசில் உண்டு அது துரந்தான்” – 3.3.38), ஆரணிய காண்டத்தில் பொறிக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.
பிற்கால விஞ்ஞானிகள் ஆய்வகத்தில் ஆய்வினை மேற்கொள்ளவில்லை. தற்கால அதிநவீன விஞ்ஞான யுக்திகளை கையாளவில்லை. ஆனால், இவ்வுலகினை முழுமையாக அனுபவித்து பதிந்தார்கள். தாங்கள் கண்டிட்ட விசயங்களுக்கு விளக்கவுரைத் தந்து அதனை செயல்படுத்த முயன்றபோது விஞ்ஞானிகளாக உருவெடுத்தார்கள். இருப்பினும், தொடக்கக் கால விஞ்ஞானிகளால் சரியான விளக்கவுரையை தர இயலவில்லை. அதாவது, விவாதிக்க முடியாத பட்சத்தில் ஒரு கூற்றானது ஒரே இடத்தில் தங்கிவிடும். நாள்மீன் (star) கோள்மீன் (planet) பற்றிய சில குறிப்புகளை பழந்தமிழர்கள் தங்களின் இலக்கிய குறிப்புகளில் குறிப்பிட்டிருந்தார்கள். அன்று, ஞாயிறு பூமியைச் சுற்றுவதாக நம்பப்பட்டது. ‘உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு ஞாயிறு’ என நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் (1) பாடினார். இதனை புவிமையக் கொள்கை (Geocentric Theory) எனக் குறிப்பிட்டனர். தாலமி (Ptolemy) இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்புபூமியை சுற்றியே ஞாயிறு, கோள்கள், மற்றும் விண்மீன்கள் சுற்றிவருகின்றன என்பதனை வகுத்தார். இரவு நேரங்களில் விண்மீன்கள் சூழ்ந்திருப்பதைக் கண்டிட்டவர்கள் இம்முடிவுக்கு வந்திருக்களாம். பெரிய வட்டப்பரிதிகளில் ஞாயிறும் கோள்களும் சுற்றி வருவதாக அறிவித்தார். இந்தப் பரிதிகளின் மேல், சிறிய வட்டப்பாதைகளில் கோள்கள் சுற்றி _வந்தன. இச்சிறிய வட்டப்பாதைகள் மேல்மிசை வட்டங்கள் (epicycle) என அழைக்கப்பட்டன. கி.மு. 270-ல், அரிஸ்தர்கஸ் (Aristarchus) பூமிதான் ஞாயிறைச் சுற்றி வருவதாகக் கூறி தாலமியின் முடிபினைக்கு எதிரான மாற்று வாதத்தை முன் வைத்தார். இருப்பினும், அவரது வாதமானது அன்று பொருட்படுத்தப்படவில்லை.1,800 ஆண்டுகளுக்குப் (1543) பிறகு நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் (Nicholas Copernicus) சூரிய மையக்கோட்பாட்டை (Heliocentric Theory) முன்வைத்தார். அதாவது, சூரியன் மையப்பகுதியில் இருக்கையில், பூமியானது அதனைச் சுற்றியே வலம் வருகிறது எனக் குறிப்பிட்டுக் காட்டினார். இவரது கூற்றானது சமயவாதிகளால் மறுக்கப்பட்டது. பொதுவாகவே அண்மையக்காலக்கட்டத்தில் மதக்கொள்கைகளுக்கு எதிராக எழுப்பப்படும் கூறுகள் மறுக்கப்பட்டு புறந்தள்ளப்படுவது வழக்கம். இவரைத் தொடர்ந்து கலீலியோ கலிலி (Galileo Galilei) கோப்பர்னிக்கஸின் கூற்றை வழுபடுத்த தொலைநோக்கியின் வாயிலாக வான்வெளியை ஆராய்ந்து ஞாயிறுதான் மையப்பகுதி என்று கூறினார். அவருக்கும் மதவாதிகளால் நெருக்கடிகள் வந்ததை வரலாறு இன்றும் பதிவு செய்துள்ளது. பூமி உட்பட ஏனைய அனைத்துக் கோள்களும் ஞாயிறைச் சுற்றி வருகின்றன என நிருபித்தார். இவரை அடுத்து, ஜொஹன்நஸ் கெப்லர் (Johannes Kepler) கோள்கள் ஞாயிறை ஒரு நீள்வட்ட (oval) பாதையில் சுற்றி வருகின்றன என்பதனை கண்டுபிடித்தார். இதற்கு முன்னர் கோப்பர்னிக்கஸ் மற்றும் கலீலியோ இருவரும் பூரண வட்டப்பாதையில் கோள்கள் சுற்றுகின்றன எனக் குறிப்பிட்டிருந்தனர். கணிதவியலின் துணைக்கொண்டு ஐசாக் நியூட்டன் (Isaac Newton) கோள்களின் வட்டப்பாதையை கணக்கிட்டார். அறிவியல் புரட்சியானது தலைத்தூக்க தொடங்கியக் காலம் இது.
சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு Francis Bacon என்பவரின் “advancement of learning” நூலில் மக்கள் இவ்வுலகத்தைப் பற்றிய தவறான வழிகாட்டுதலில் சிக்கி திணறிக் கொண்டிருப்பதை பதிவுச் செய்துள்ளார். ‘அறிவு’ என்பதை ஓர் இருண்ட குகைக்குள்ளிருந்து வெளியே பரந்து கிடக்கும் உலகினை கிரகிக்க முற்படும் செயலாகவே குறிப்பிட்டுள்ளார். அவரைத் தொடர்ந்து Rene Descartes, தனது ஆய்வுகளின் உச்சத்தில் இவ்வுலகில் தமது இருப்பை ஒரு பிம்பமாகவே கருதினார். இவரது பார்வையில் விஞ்ஞானி என்பவர் ஒரு பொருளின் தன்மையை விளக்கும் பொழுது தனது கற்பனையில் உதிக்கும் விசயங்களை ஆய்வின் முடிபுகளில் கோர்த்து இணைக்காமலிருப்பதே சிறப்பு என்கிறார். எடுத்துக்காட்டாக, ஒரு பொருளை ஆய்வுக்கு உட்படுத்தும் போது அதன் நுண் பாகம் வரைக்கும் கேள்விகளை எழுப்பி விளக்கம் கண்டுக் கொள்ள வேண்டும். நுண் பாகங்களின் செயல்பாடுகள் அறியப்படும் வேளையில் பெரியதொரு கண்டுபிடிப்பிற்கு அவை வழி வகுக்கும் என்கிறார். இவ்வாறான சிந்தனைகளின் அடிப்படையிலேயே அறிவியல் செயல்முறைகள் வெளிப்படுகின்றன. அறிவியல் செயல்முறையை பல்வேறு வகைகளாகக் குறிப்பிடலாம். ஆனால் அடிப்படையில் இச்செயல்முறையானது, உலகினை உற்று நோக்குதலின் அம்சமாகவே கருதப்படுகிறது. பொதுவாக, அறிவியல் செயல்முறையின் படிநிலைகள், நாம் அவற்றை எவ்வாறு பகுத்தெடுக்கிறோம் என்பதை பொறுத்தே உறுதிபடுத்தப்படுகிறது. பிரச்சனை எதுவென்று கண்டறிந்து, அனைத்து தரவுகளையும் சேகரித்து, ஒரு கருதுகோளை (hypothesis) முன்மொழிந்து, அதனை சோதித்துப் பார்த்து விடை காண்பதென்பது, அடிப்படை அறிவியல் செயல்முறைப் படிநிலைகளாகக் கொள்ளலாம். கருதுகோள் ஒன்றை தொடர்ந்தார் போல ஆய்வுக்குட்படுத்தியிருப்பதே சிறந்ததோர் அறிவியல் சிந்தனையாளரின் பண்பாகும் என்பது எமது வாதம். நமக்கு மேலே விரிக்கப்பட்டிருக்கும் வளிமண்டலத்தையும் கடல் பரப்பையும் பார்த்து தங்களின் தேடலை தொடங்கினர் அறிவியளாளர்கள். பிரபஞ்சத்தின் சக்தியினை உள்வாங்கி மனிதனின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு வழிவகுத்தனர். அறிவியலும் தொழில்நுட்பமும் இன்றைய சூழ்நிலையில் வளர்ச்சி பெற்று வருகின்றன என்றாலும், இந்நிலைக்கு தன்னை உயர்த்திக் கொள்ள மனித சமூகம் நூற்றாண்டுகளாக இயற்கையோடு இணைந்தும் முரண்பட்டும் வாழ நேரிட்டது.
இவ்வாறு, அறிவியல் தன் சாரம்சத்தை உலக மக்களின் சிந்தையுள் மிதக்கவிட்டு பல்வேறு மொழிகளில் உருக்கொண்டது. வாய்வழி கதைச்சொல்லல் பாரம்பரியமாகத் தொடங்கிய பழங்காலக் கதைகள், கால ஓட்டத்தில் மிகைப்படுத்தப்பட்டு பல பதிப்புகளாக நூல் படிமத்தில் இன்றளவும் உலாவிக் கொண்டிருக்கின்றன. தற்கால அறிவியல் அளவீட்டைக் கொண்டு இவை உண்மையாக நிகழ்ந்தனவா என ஆராய்வது இலகுவான காரியமல்ல. இயற்கையோடு ஒன்றினைந்து வாழ்ந்தோரின் மொழியினை, எந்திர சூழலுக்கு கொண்டு வந்து நியாயப்படுத்த நினைப்பதும் பொருத்தமற்றதே. பண்டையக்கால மத்திய அமெரிக்கா நாகரிகமான, மாயன் நாகரிகம் கி.மு. 2,600 வாக்கில் தோன்றி மறைந்ததை அறிவோம். கணிதம், எழுத்துத்துறை, வானியல் போன்ற துறைகளில் மேம்பட்டிருந்தவர்கள், தங்களின் தொன்மங்களில் தெய்வங்களின் இருப்பை கொண்டாடினர். இவர்களின் கட்டிடக் கலை, வானியல் கணக்கெடுப்புகள் இன்றளவும் அறிஞர்களால் விவாதிக்கப்பட்டு வருகிறது. இன்று நிறுவப்படும் கருத்தானது நாளை நிராகரிக்கப்படும் என்பதே எதார்த்தம். இவ்வாறு ஆய்வுகளும் விவாதங்களும் தொடர்ந்தார் போல அரங்கேறிக் கொண்டே இருக்கும். இன்றைய உலகம் அழிந்து, மனித இனமும் மறைந்து போகும் நிலையில், நடப்பில் இருக்கும் குறியீடுகள் (signs & symbols) நாளைய மனித இனத்தின் பார்வையில் எவ்வாறு அடையாளப் படுத்தப்படும் என்பதை சிந்தித்தால், மொழியின் வாயிலாக, காலத்தைக் கடந்து பல பரிமாணங்களில் அறிவியல் பயணிக்கப் போவதை உணரலாம். இவ்வாறு நிகழுமாயின், அடுத்தக்கட்ட கதையுலகமாக (New Mythology), அறிவியலை முன் வைத்து, எல்லாம் முடிந்து தொடரும் போக்கில் இன்றைய கொண்டாட்டங்கள் நாளைய தொன்மங்களாக மீண்டும் மீட்டெடுக்கப்படும்.
மேற்கோள் நூல்கள்:
A Chronological Table of Chinese and World Cultures. Taipei, Taiwan:National Palace Museum, 1985.
Bacon, Francis. Novum Organum.
Descartes, Rene. Discourse sur la Methode.
Leeming, David. Mythology. New York: Newsweek Books, 1976
Noddings, Nel, and Paul J. Shore. Awakening the Inner Eye. New York: Teachers College Press, 1984.
இராம.சுந்தரம், தமிழ் வளர்க்கும் அறிவியல். New Century Book House Pvt.Ltd, Chennai, 2009.
டாக்டர்.கதிர் முருகு, பெரும்பாணாற்றுப்படை, சாரதா பதிப்பகம், சென்னை, 2009.
புலியூர் கேசிகன், பரிபாடல், சாரதா பதிப்பகம், சென்னை, 2009.
மணிமேகலை, சாரதா பதிப்பகம், சென்னை, 2011.
மயிலை சீனி. வேங்கடசாமி, தமிழர் வளர்த்த அழகுக் கலைகள், நாம் தமிழர் பதிப்பகம், சென்னை, 2010.
மயிலை சீனி. சேங்கடசாமி, இசைவானர் கதைகள், நாம் தமிழர் பதிப்பகம், சென்னை, 2005.
மதுரை காஞ்சி
சீவகசிந்தாமணி
அகநானூறு
கம்பராமாயணம்- ஆரணிய காண்டம் (முதற்பகுதி)
திருமுருகாற்றுப்படை
Tchudi, Stephen, Probing the Unknown, Charles Scribner’s Sons, New York, 1990.
Brian M.Fagan, The Seventy Great Mysteries of the Ancient World, Thames & Hudson, 2001.
H.S. Mukundas, S.M. Deshpandes, H.R.Nagendrass, A.Prabhu & S.P.Govindarajus, A Critical Study of the Work “Vymanika Shastra”. Indian Institute of Science, Karnataka, 1974.
நவீன் செல்வங்கலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக