| சனி, 27 ஜூலை, 2019, முற்பகல் 11:57 | |||
ராஜராஜ சோழன் காலத்தில் தீண்டப்படாதவர்கள் யார்? - வரலாற்று ஆய்வாளர் பேட்டி
வரலாற்று ஆய்வாளர் BBC க்கு அளித்த பேட்டி.
(பிபிசி தமிழ்
11 ஜூன் 2019)
ராஜராஜன் சோழன் காலம் இருண்டகாலமா? -
ராஜராஜன் சோழன் காலத்தில் தலித் என்று ஒரு பிரிவு இருந்தது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்கிறார் வரலாற்றாசிரியரும் எழுத்தாளருமான மே.து.ராசுகுமார்.
சாதி ரீதியான ஒடுக்கு முறைகள், நிலப் பறிப்பு என ராஜராஜ சோழனின் காலம் இருண்டகாலமாக இருந்தது என திரைப்பட இயக்குநர் ரஞ்சித் அண்மையில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசி இருந்தார்.
குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமூகம், நில உரிமையை இழந்தது ராஜராஜன் ஆட்சி காலத்தில்தான் என ரஞ்சித் குறிப்பிட்டு இருந்தார்.
இது தொடர்பாக வரலாற்றாசிரியர் மே.து.ராசுகுமார் அவர்களிடம் பேசினோம்.
‘சமூக பங்களிப்பு’
ராசுகுமார், "ஓர் அரசர் வாழ்ந்த காலத்தில் அந்த சமூகம் யாருடைய வர்க்க நலனை பாதுகாப்பதற்காக இருந்ததோ, அந்த வர்க்க நலனை அரசர்கள் பாதுகாத்து கொண்டுதான் இருந்தார்கள். அதனை நாம் மறுத்துவிட முடியாது. எந்த அரசரும் வர்க்க நலனுக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை. ஆனால், அதே நேரம் தாங்கள் இருக்கின்ற சமூகத்தில் அன்றைய சமூக பொருளியல் நிலையில் அந்த சமூகத்தை அடுத்தக்கட்ட நகர்வுக்கு அந்த மன்னர்கள் எப்படி அழைத்து சென்றார்கள் என பார்க்க வேண்டும். அப்படிப் பார்த்தால்தான் ராஜராஜ சோழனின் பங்களிப்பை நாம் புறந்தள்ள முடியாது" என்கிறார் மே.து.ராசுக்குமார்.
"வேளாண் வளர்ச்சியில், தொழில்நுட்ப வளர்ச்சியில், நிலசீர்த்திருத்தத்தில் ராஜராஜ சோழனின் பங்களிப்பு மிகப்பெரியது. அவரின் காலத்தில் நிலங்கள் முறையாக அளவிடப்பட்டது. இதன் மூலமாக உற்பத்தி பெருகியது. உற்பத்தி பெருக்கம் என்னவிதமான விளைவுகளை ஏற்படுத்துமோ, அது அனைத்தும் ராஜராஜ சோழனின் காலத்திலும் ஏற்பட்டது. உற்பத்தி பெருக்கம் பிற நாடுகளை பிடிக்க காரணமாக இருந்தது. ஒரு அரசன் பிற நாடுகளை பிடித்ததை வைத்தே அவரை குற்றஞ்சாட்டுவோமாயின், இங்கு எந்த அரசரையும் புகழ முடியாது" என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் ராசுகுமார்.
மே.து.ராசுகுமார் பிறகாலச் சோழர் கால வாழ்வியல், சோழர் கால நிலவுடைமைப் பின்புலத்தில் கோயில் பொருளியல், தமிழகத்தொல் சாதியக் குடிகளின் மேலேற்றமும் கீழிறக்கமும் உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதி உள்ளார்.
பறையர் சமூகத்தை குறித்து விவரிக்கும் ராசுகுமார், "தீண்டப்படாதார் குறித்த குறிப்புகள் சில கல்வெட்டுகளில் உள்ளன.
*ஒரே கல்வெட்டில் ஒரு ஊரில் தீண்டாசேரி என்றும் பறைசேரி எனவும் தனித்தனியாக இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.*
அப்படியானால் பறையர்கள் தீண்டப்படாதவர்களாக அந்த காலக்கட்டத்தில் இல்லை என்றுதானே பொருள்? பறையர்கள் அந்த காலத்தில் தீண்டப்படாதவர்களாக இல்லை. அப்போது உற்பத்தி முறைக்குள் வராதவர்கள் வேண்டுமானால் தீண்டப்படாதவர்களாக கருதப்பட்டிருக்
கலாம். அதாவது, வேட்டை சமூகமாக இருந்தவர்கள் தீண்டப்படாதவர்களாக இருந்திருக்கலாம்.
*விஜயநகர காலத்திற்கு பின்புதான் பறையர்கள் தீண்டப்படாத நிலைக்கு தள்ளப்பட்டார்கள்*
என்பது என் மதிப்பீடு" என்கிறார்.
"இங்கு தவறான சில கற்பிதங்கள் நிலவுகின்றன. பிராமணர்கள் கையில்தான் வளமான நிலங்கள் இருந்தன என்பது அதில் ஒன்று. உண்மையில் அப்படியெல்லாம் இல்லை. 40 ஆண்டுகளுக்கு முன்பே அதனை பேராசிரியர் சுப்புராயலு உடைத்துவிட்டார். அவரது எம்.லிட் ஆய்வு சோழ நாட்டின் புவியியல் அரசியல் குறித்தது. அதில், "சோழர் காலம் குறித்து கிடைத்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்வெட்டுகளில் *வெறும் இருபது விழுக்காடுதான் பிராமணர்களுக்கு
ம், கோயில்களுக்கும்* கொடுத்த ஊர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. மீதமுள்ளது எல்லாம் வேளாளர் சமூகத்தின் ஊர் பெயர்கள்" என்கிறார். பெரும் நிலப்பரப்பை பிடுங்கி பிராமணர்களுக்கு கொடுத்தார்கள் என்பதெல்லாம் வெறும் கற்பிதமன்றி வேறில்லை. பிராமண ஆய்வாளர்கள் தங்களை மேன்மையாக காட்டிக் கொள்வதற்காக வளமான நிலங்கள் எல்லாம் தங்களிடம் இருந்தன என்று எழுதிவிட்டு சென்றுவிட்டார்கள் " என்று ராசுக்குமார் குறிப்பிடுகிறார்.
"ராஜராஜ சோழன் காலத்தில் பிராமணர்களுக்கு நிலம் உரிமையாகவெல்லாம் தரப்படவில்லை. பங்குதான் தரப்பட்டது. அதாவது விளைச்சலில் பங்குதான் கொடுக்கப்பட்டது. இதுவும் எப்படி செயல்படுத்தப்பட்டது என்று பார்த்தால், நிலத்தை முழுவதுமாக வாங்கிக்கொண்டு அதில் உற்பத்தியில் ஈடுபட வேறொருவருக்கு கொடுத்து, அதிலிருந்து பங்குதான் பிராமணர்களுக்கு கொடுக்கப்பட்டது. இது 'குடிநீக்கி' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது ஏற்கெனவே இருந்த குடிகளை நீக்கி உற்பத்தியில் ஈடுபடும் வேறொரு குடிகளை அமர்த்துதல். மற்றொன்று 'குடிநீங்கா பிரமதேயம்'. ஏற்கெனவே இருந்த குடிகளை நீக்காமல் அவர்களின் உற்பத்தியில் பிராமணர்களுக்கு பங்கை கொடுப்பது.
சரி. இதில் 'குடி' என்பது யார் என்பதை பார்க்க வேண்டும். 'குடி' என்பது ஏதோ குறிப்பிட்ட சாதி அல்ல. வேட்டை சமூகத்திலிருந்து வேளாண் சமூகமாக மாறிய போது, யார் நிலத்தை பண்படுத்தி அதை வேளாண்மை செய்வதற்கு ஏற்றவாரு மாற்றினார்களோ, அவர்களே 'குடி'. அதாவது காடு கொன்று நாடாக்கியவர்கள். இந்த உழுகுடிகள் தான் குடிநீக்கம் செய்யப்பட்டார்கள். உழுகுடிளாக அனைத்து சமூக மக்களும் இருந்தார்கள். ஏதோ குறிப்பிட்ட சாதியின் நிலம் மட்டும் பறிக்கப்படவில்லை" என்று ராஜராஜ சோழன் காலத்தில் நிலத்திற்கும் பிராமணர்களுக்கும் இருந்த தொடர்பை விவரிக்கிறார் மே.து.ராசுக்குமார்.
'உயர்நிலை'
"சோழர் காலத்தில் பிராமணர்கள் உயர்நிலையில் இருந்ததுபோல ஒரு கருத்து நிலவுகிறது. உண்மையில் அப்படியெல்லாம் இல்லை. அனைத்து சமூகமும் அரசில் பங்கு வகித்ததுபோல, அவர்களும் பங்கு வகித்திருக்கிறார்கள். மற்றபடி இங்கு சிலர் நினைப்பது போல, சோழ ஆட்சியே பிராமணமயமாக இல்லை. அப்போது நிலவிய நிலவுடமை அமைப்பில் நிலம் கையில் வைத்திருந்த வேளாளர்கள்தான் சமூகத்திலும், அரசிலும் ஆதிக்கம் செலுத்தினார்கள்." என்கிறார் ராசுக்குமார்.
மு. நியாஸ் அகமது
பிபிசி தமிழ்
சோழர் நிலவுடைமை பார்ப்பனர் வேளாளர் வெள்ளாளர் ராசராச இராசராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக