வெள்ளி, 20 செப்டம்பர், 2019

மீனவர் நாயன்மார் சைவம் சிவன்படவர் செம்படவர் பரதவர் பத்தர்


aathi1956 aathi1956@gmail.com

செவ்., 3 ஜூலை, 2018, பிற்பகல் 4:13
பெறுநர்: எனக்கு
Suresh N
# சிவன்_படவர் குலத்துச் செம்மல்...
# அதிபத்தர் கல்வெட்டும் சில தகவல்களும்..
தமிழ்நாட்டிலுள்ள சிவாலயங்களில் குறிப்பாகத் தேவாரப் பாடல் பெற்ற திருக்கோயில்களில் மூலட்டானத்தைச்
சுற்றி அமைந்துள்ள திருச்சுற்றில் திகழும் திருமாளிகைப்பத்தி எனப்பெறும் சுற்று மண்டபத்தில் 63 நாயன்மார் கள் தம் திருவுருவச் சிலைகள் வரிசையில் திகழ்வதை நாம் காணலாம். ஒவ்வொரு நாளும் அத்திருக்கோயில்களில் மூலவராகத் திகழும் லிங்கத் திருமேனிக்கு பூஜைகள் நிகழும் போது இந்த நாயன்மார்களின் பிரதிமங்களுக்கும் வழிபாடுகள் நடத்தப்பெறும். அத்திருக்கோயிலின் சிவாச்சாரியார் பூஜைகள் செய்வார்.
அறுபத்துமூவர் திருநட்சத்திர நாட்களிலும், ஆண்டுப் பெருவிழாவின் போது ஒரு குறிப்பிட்ட நாளிலும் (அறுபத்து மூவர் திருவிழா) சிறப்பு பூஜைகள் நடத்தப் பெறுவதோடு அவர்தம் செப்புத் திருமேனிகளை வீதி உலாவாக எடுத்து வருவதும் நம் மரபுப் பெருமையாகும். சைவாகம் நூல்கள் இந்த அடியார்களுக்கு நாள் வழிபாடுகள் நிகழ்த்துவது பற்றியும் திருவிழாக்கள் நடத்துவது பற்றியும் சிறப்புற எடுத்துரைக்கின்றன.
சேக்கிழார் பெருமானார் பெரிய புராணத்தில் கூறியுள்ள அறுபத்துமூவர் வரலாற்றையும் நாம் ஆழ்ந்து நோக்கும் போது அவர்கள் அந்தணர்களில் தொடங்கி தீண்டத்தகாதவர் எனப் பண்டு கருதப்பெற்ற குடிகள்வரை அனைத்து சாதிகளையும் சார்ந்தவர்கள் என்பதை நாம் அறியலாம்.
அவர்கள் ஒழுகிய நெறியாலும்,
பக்தியாலும், அவர்தம் வாழ்வாலும் அனைவரும் திருக்கோயில்களில் தெய்வமெனப் போற்றப் பெறுகின்றனர். *‘சாதிகள் நெறியில் தப்பா’* என்பது சேக்கிழார் வாக்கு. சாதிகளைக் கடந்து சிவநெறியில் திளைக்கும் போது வேறுபாடுகள் மறைந்து மானுடநெறி தழைக்கும். இதை தான் அந்த அருளாளர்கள் நமக்குக் கற்பித்துச் சென்றுள்ளனர். *‘விரிதிரைசூழ் கடல் நாகை அதிபத்தற்கு அடியேன்’* எனச் சைவாகமம் போற்றுகின்ற சிவாச்சாரியார் குலத்துதித்த சுந்தரமூர்த்தி நாயனார் திருத்தொண்டத் தொகையில் பாடியிருக்கிறார் என்பதை நோக்கும் போது நாகப்பட்டினத்தில் பிறந்த #அதிபத்தர் என்ற #செம்படவரின் பெருமை எவ்வளவு உயர்வுடையது என்பதை நாம் அறியலாம்.
சோழநாட்டு நாகப்பட்டினத்தில் பரதவர் குலத்தில் (மீனவர்) தோன்றியவர் #அதிபத்தர். மீனவர்களின் தலைவராய்ச் சிவ பக்தியில் சிறந்த இவர் நாள் தோறும் கடலில் மீன் பிடிக்கும் போது வலையில் அகப்படும் முதல் மீனை எடுத்து *‘இது சிவனுக்கு’* என்று அன்பினால் கடலிலேயே விட்டுவிடுவார். இச்செய்கையினின்
று அவர் என்றும் தவறியதில்லை. இவ்வாறு இதுவே சிவப்பணி என உறுதியுடன் அவர் வாழ்ந்த போது கடலில் மீன்கள் அகப்படாமல் பஞ்சமேற்பட்டது. பல நாட்களில் ஒவ்வொரு மீனே வலையில் அகப்பட்டது. அதனைத் தன் நியமப்படியே கடலிலே விட்டு வந்தார்.
இவ்வாறு ஒழுகும் நாளில் ஒருநாள் இவருடைய ஏவலர்களாகிய பரதவர்கள் கடலில் வலை வீசியபோது நவமணிகள் பதிக்கப்பெற்ற பொன்னால் செய்யப்பட்ட தங்க மீனொன்று அகப்பட்டது. பரதவர்கள் அதனை கையிலெடுத்து *‘ஒரு மீன் பிடித்தோம்’* என்றனர். தொடர்ந்த அவர்களுடைய வறுமை நிலையில் இது ஒரு பொக்கிஷமெனக் கிடைத்தது. ஆனால், அதனைக் கையில் வாங்கிய அதிபத்தரோ *‘‘இது என்னை ஆட்கொண்டருளிய சிவனுக்கே உரியது”* என்று கூறி அதனைக் கடலிலேயே சேர்ப்பித்தார். அப்போது சிவபெருமான் இடபக்கத்தின் மீது உமையம்மையோடு காட்சி தந்து அவருக்கு அருள்பாலித்தார்.
சிவப்பேறு பெற்ற இவர் # படவர் எனப்பெறும் # பரதவர் குலத்தில் உதித்தவர் என்பதால் இவர் பிறந்த படவர் குலத்தைப் பின்னாளில் *‘சிவன் படவர்’* எனக் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் குறிப்பிடுகின்றன. சிவன் படவர் என அழைக்கப்பெற்ற அச்சொல் காலப் போக்கில் மருவி # செம்படவர் என்றாயிற்று.
நாகப்பட்டினத்துக்கு அருகே திருக்கோளிலி என்ற தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம் ஒன்றுள்ளது. இவ்வூரினை திருக்குவளை எனத் தற்காலத்தில் அழைப்பர். திருக்கோளிலி சிவாலயத்து மகா மண்டபத்தின் கிழக்குச் சுவரில் மூன்றாம் ராஜராஜ சோழனின் நான்காம் ஆட்சியாண்டு (கி.பி.1219) கல்வெட்டொன்று உள்ளது.
அதில், *‘‘ஸ்வஸ்தி ஸ்ரீதிரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீராஜராஜ தேவர்க்கு யாண்டு 4வது மார்கழி மாதத்தொரு நாள் உடையார் திருக்கோளிலி உடையார் கோயிலில் முன்னாளில்
# சிவன்_படவரில் ஆலன் எழுந்தருளுவித்த அதிபத்த நாயனார்க்கு திருமுகப்படி மாற்றுக்கு இவன் சாதியார் பக்கல் இறந்து பெற்ற காகாய் காலசேரி அய்யனைப்பட்டன் மகன் தாமோதிரப்பட்டன் பக்கல் நெல் பொலிசைக்கு குடுத்த காசாய் இவன் ஒடுக்கின காசு 2100. இக்காசு இரண்டாயிரத்தொரு நூறும் கைக்கொண்டு திருப்படிமாற்றுக்கு நாள் ஒன்றுக்கு இருநாழி அரிசி அமுதுபடிக்கு அளப்போமாகவும் நாங்கள் இப்படி செய்வோமாக சம்மதித்தோம்”* என்று கூறுப்பெற்றுள்ளது.
சிவன் படவர்(செம்படவர்) இனத்தைச் சார்ந்த ஆலன் என்பான் திருக்கோளிலி கோயிலில் அதிபத்த நாயனார் என்ற நாகப்பட்டினத்து மீனவருக்கு உருவச் சிலையினை முதலில் எடுப்பித்தான். பின்பு (கி.பி.1219) தன் சிவன்படவர் இனத்து மக்களிடமிருந்து யாசகமாக 2100 காசுகளை வசூல் செய்து அதனைக் கொண்டு அக்கோயிலில் ஓர் அறக்கட்டளையை உருவாக்கி, அத்தொகைக்கு தொடர்ந்து கிடைக்கும் வட்டியிலிருந்து தான் முன்னர் இக்கோயிலில் அமைத்த அதிபத்த நாயனார் திருமேனிக்கு நாள்தோறும் அமுதுபடியோடு வழிபாடு செய்ய ஏற்பாடுகள் செய்ததை இக்கல்வெட்டு விரிவாகக் கூறுகின்றது. #செம்படவர் என்ற சொல் பண்டு # சிவன்படவர் என அழைக்கப்பெற்றதையும் இக்கல்வெட்டுச் சாசனம் நமக்கு எடுத் துக்காட்டுகின்றது.
தாராசுரம் ஐராவதீஸ்வரர் திருக்கோயிலுக்குச் செல்வோர் அங்கு அறுபத்துமூன்று நாயன்மார் வரலாறும் சிற்பக் காட்சிகளாக விளங்குவதைக் காணலாம். அவ்வரிசையில் 43ம் காட்சிக்கு மேலாக *‘அதிபத்தர் கதை’* என்ற சோழர்கால கல்வெட்டுப் பொறிப்பு காணப்பெறுகின்றது. அக்காட்சியில் ஒருபுறம் சங்கு, மீன், நண்டு ஆகியவற்றுடன் கடலொன்று திகழ்கின்றது. அக்கடலில் கட்டுமரத்தின் மேல் நின்ற வண்ணம் மூன்று மீனவர்கள் வலை வீசி மீன் பிடிக்கின்றனர். இதனை கவனித்தவாறு அதிபத்தர் நிற்கிறார். அடுத்து அவரே வலையில் கிடைத்த நவமணிகள் பதிக்கப்பெற்ற பொன் மீனை கையில் ஏந்தி, கடலில் விடுகின்றார்.
எதிர்புறம் இடபத்தின் மீது சிவபெருமானும் உமையம்மையும் எழுந்தருளி காட்சி கொடுக்க, அதிபத்தர் எதிரே நின்றவாறு தலைக்கு மேல் கையுயர்த்தி ஈசனையும் தேவியையும் வழிபடுகின்றார். எழிலார்ந்த இக்காட்சி நம்மை மெய்மறக்கச் செய்யும். இங்கு மூன்று நிலைகளில் அதிபத்தர் காணப்பெறுகின்றார்.
சுந்தரரும், நம்பியாண்டார் நம்பியும், சேக்கிழார் பெருமானும் இலக்கியத்தில் செப்பியுள்ள நாகப்பட்டினத்து இம்மீனவரின் வரலாறு பின்னாளில் எவ்வாறு போற்றப்பெற்றது என்பதனை கல்வெட்டுகள் வாயிலாகவும், சிற்பக்காட்சியின் மூலமாகவும் கண்டோம்.
உறுதியானதும் செம்மையானதும் ஆகிய பெருவாழ்வு வாழ்ந்து சிவத்தோடு இணைந்த அப்பேரருளாளர் தான் பிறந்த குலமக்களுக்கு என்றும் அழியாத *‘சிவன்படவர்’ (செம்படவர்)* என்ற சிவநாமத்தையும் அருளிச் சென்றுள்ளார். நாகப்பட்டினத்து மீனவர்களில் யாரேனும் இறந்து விட்டால் அவர்களுடைய ஈம ஊர்வலம் *கயாரோகணசுவாமி திருக்கோயில்* எனப்பெறும் நாகை நகரத்துச் சிவாலயம் வழியாகச் செல்லும் போது கோயில் முன்பாக இறந்தவரின் உடலுக்கு திருக்கோயில் மரியாதைகள் செய்யப் பெறுவது இன்றளவும் நிகழும் நடைமுறையாகும். அது சிவன் படவராகிய அதிபத்தருக்காகச் செய்யப்பெறும் மரியாதையாகும்.
++
இவன்,
# சிவன்_படவன் ,
பர்வதராஜ குலம்,
அகமுடையார்,
பார்கவ உடையார்,
# வெட்டு_மாவலி_வாணாதிராயன் ..
சனி அன்று PM 7:55 மணிக்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக