செவ்வாய், 3 ஜூலை, 2018

நீட் திணிப்பு பற்றி மருத்துவர் எழிலன் மருத்துவம் கல்வி ஹிந்தியா

aathi1956 aathi1956@gmail.com

பிப். 25
பெறுநர்: எனக்கு

கொஞ்சம் நேரம் ஒதுக்கிப் படியுங்கள்.....

                        ""நீட் திணிப்பு"""

                   --மரு.நா.எழிலன்,எம்.டி--
                        Ezhilan Naganathan

பொதுப் பட்டியலில் கல்வியை இணைப்பதால் விரும்பத்தகாத அதிகாரக் குவியலும், சில நேரங்களில் பெரிய அளவில் விட்டுக் கொடுக்காத தன்மையும் ஏற்பட்டு சுதந்திரமாகவும்,  தேவைக்கேற்ப விட்டுக்கொடுக்கும் நிகழ்வுத்தன்மையும் இல்லாமல் போய்விடும் (D.S.Kothari Commission (1964-66), NCERT, 1970, p.829-830)

    இந்தியா கூட்டாட்சித் தத்துவத்தில் உருவான நாடு. ஒவ்வொரு மாநிலத்தின் கல்வி, சுகாதாரத் தேவைகள் அந்த மாநிலத்தின் பன்முகத்தன்மைக் கொண்டு வேறுபடும். எனவே, அந்த மாநிலத்திற்கு ஏற்படும் குறைகளைக் களைவதற்கு  அந்தந்த  மாநில அரசுகளுக்குத்தான் மிகுதியான வாய்ப்புள்ளது. எடுத்துக்காட்டாக, தருமபுரி மாவட்டத்தில் ஏற்படும் முடக்குவாத நோயைக் கண்டறிய, உரிய சிகிச்சையளிக்க அதற்கேற்றவாறு சுகாதாரக் கொள்கைகளை அமைக்க  தமிழக அரசுதான் முடிவு செய்ய முடியும்.  இதற்காக, புதுதில்லியில் மத்திய அரசின் கீழ் ஒரு துறை வல்லுநர் ஓர் அறையில் அமர்ந்து கொண்டு இப்பிரச்சினையைத் தீர்க்க முடியாது.

இந்த பொதுஅறிவுக்கு எதிராகச் செயல்படுபவர்கள், இந்நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராக இருப்பவர்கள், அவசர நிலை காலத்தில் பொதுப்பட்டியலுக்கு கல்வி, சுகாதாரத் துறைகளை எடுத்துச் சென்று மறுபடியும் மாநிலப் பட்டியலிலேயே  இணைக்கத் தடையாக இருப்பவர்கள்தான் நீட் தேர்வைத் தமிழ்நாட்டின் மீது திணிக்கிறார்கள்.

என்ன தயக்கம்?
    இந்தியா முழுவதும் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட இளநிலை மருத்துவப் படிப்பு (MBBS) இடங்கள் இருக்கும் நிலையில்  தமிழ்நாட்டின் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2500 இடங்களுக்கு நீட் தேர்வு விலக்குக் கொடுக்க என்ன தயக்கம்?
    மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கி வரும்  AIIMS, JIPMER  போன்ற நிறுவனங்களுக்கு நீட் தேர்விலிருந்து  விலக்கு அளிக்கும் போது, தமிழ் நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு விலக்களிக்க என்ன தயக்கம்?
நாடாளுமன்றத் தனிச்சட்டம் வழியாக இந்நிறுவனங்களுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடுபவர்கள், தமிழ்நாடு  சட்டசபையில் நிறைவேற்றி உயர், உச்ச நீதிமன்றங்களில் வென்று, குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்ற தமிழ்நாடு நுழைவுத் தேர்வு ரத்து சட்டம் 2007 அடிப்படையில் நீட் தேர்வு விலக்களிப்பதில் என்ன தயக்கம்?

நீட் குளறுபடிகள் 

    தேர்வு நாளில் கண்காணிப்பு என்ற பெயரில் மனிதநேயமற்ற முறையில் மாணவ மாணவியரைத் துன்புறுத்திய நிகழ்வுகள்.
    ஒரு நுழைவுத் தேர்விற்கு மாநில மொழிகளில் வெவ்வேறு வினாத்தாள் அளித்த குளறுபடிகள்.
    இரட்டைக் குடியிருப்பு சான்றிதழ்  போலியாகப் பெற்று பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ் நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கான இடங்களைக் கைப்பற்றியக் குளறுபடிகள் (சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது)

நீட் தேர்வின் குறிக்கோள்கள் நிறைவேறியதா?

    மறைமுகமாக வசூலிக்கப்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் கட்டணம் இப்போது வெளிப்படையாக வசூலிக்கப்படுகிறது.

ஓர் ஆண்டிற்கான மருத்துவக் கல்விக் கட்டணம்  – தமிழ் நாடு

அரசு மருத்துவக் கல்லூரிகள்
தனியார் மருத்துவக் கல்லூரி
நிகர் நிலைப் பல்கலைக்கழகம்
அரசு ஒதுக்கீடு
நிர்வாக ஒதுக்கீடு  
50 ஆயிரம் வரை

12.6 – 13.5 இலட்சம்
67.5-87.8 இலட்சம் 
   21-23 இலட்சம்

      
         

தனியார் கல்வி நிறுவனங்கள் கறுப்புப் பணமாகப் பெற்ற கல்விக் கட்டணத்தை வெள்ளைப் பணமாகப் பெற்று அப்பணத்திற்காகச் செலுத்தும் வரியையும் மாணவர்கள் மீது சுமத்தியுள்ளனர். இதனால், கல்விக் கட்டணம் இரண்டிலிருந்து மூன்று மடங்காக உயர்ந்தள்ளது. இதுதான் நீட் தேர்வின் மாபெரும் சாதனை!
இந்திய மருத்துவக் கழகத்திற்கு மாற்றாக முன்வைக்கப்பட்ட  தேசிய மருத்துவ ஆணையம் 2018, தற்போது நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் ஒரு முக்கிய சாராம்சம் - தனியார் மருத்துவக் கல்லூரிகளும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் தங்களின் கீழ் உள்ள 60 விழுக்காடு மருத்துவ இடங்களுக்குத் தாங்களாகவே கட்டண அளவை  நிர்ணயித்துக் கொள்ளலாம் என்பதாகும்.
ஒரு முனையில் நீட், தனியார்  மருத்துவக் கல்லூரிகளின்  பகல் பணக்கொள்ளையைத்  தடுக்கும் என்று கூறிவிட்டு, மறுமுனையில் தனியார் கட்டண வசூலுக்கு வழிவகுக்கும் சட்டங்களை நிறைவேற்றுகிறது மத்திய அரசு.

நீட் தேர்வு முறைகள் பொது மருத்துவ சேவைகளை  செம்மைப்படுத்துமா?
    தமிழ் நாடு சமூக நீதிக் கொள்கையின் முன்னோடி. இங்கு சமூக நீதிக் கொள்கை வாழ்வியலாக உள்ளது. கல்வி, பொதுச் சுகாதாரம், வேலைவாய்ப்பு அனைத்துமே சமூக நீதித்தளத்தில் இயங்கி வருகிறது. சமூக நீதியின் அடிப்படையில் மருத்துவக் கல்வி, மருத்துவ சேவை, பொதுச் சுகாதாரத்தில் பின்னிப் பிணைந்துள்ளது. இதனால், தமிழ் நாடு, வளர்ந்த ஐரோப்பிய நாடுகளுக்கு நிகராக மருத்துவக் குறியீடுகளிலும்; மனித வள மேம்பாட்டுக் அளவுகோல்களிலும் சிறப்பாக விளங்குகிறது.

பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற  அமர்தியா சென் போன்ற வல்லுநர்கள் பிற மாநிலங்களின் இயைந்த வளர்ச்சிக்குத் தமிழ்நாடு சமூக நீதிக் கோட்பாடுகள் வழிகாட்டியாக அமைந்துள்ளன என்று பதிவிட்டு வருகின்றனர்.
மாநிலப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் பள்ளித் தேர்வு மதிப்பெண்கள் கொண்டு 69%  இடஒதுக்கீடு அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை.

முதுநிலை மருத்துவப் பட்டப் படிப்பிற்கு 69%  இடஒதுக்கீட்டுடன் 50%  இடங்களை அரசு மருத்துவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு.

மேற்கூறிய சமூக நீதிக் கொள்கைகளின்படித் தமிழக அரசு  செயல்பட்டதால், இந்திய நாட்டிலேயே மாவட்டத்திற்கு ஒன்று என 24  அரசு மருத்துவக் கல்லூரிகளை அமைத்துள்ள ஒரே மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது.

இக்கொள்கையை மற்ற மாநிலங்களுக்கும் பின்பற்ற வழி செய்யாமல் தற்போதைய மத்திய அரசும், நீதிமன்றங்களும் தமிழ்நாட்டின் வெற்றிப் பாதையைத் தடுக்;கின்றன.

புதுதில்லியில் உள்ள AIIMS மருத்துவ நிறுவனத்தைத் தவிர மற்ற மாநிலங்களில் மத்தி;ய அரசினால் நிறுவப்பட்ட  AIIMS நிறுவனங்கள் தமிழ்நாட்டிலுள்ள மாவட்ட மருத்துவ மனைகளைவிட பின்தங்கிய நிலையில்தான் உள்ளன (டைம்ஸ் ஆப் இந்தியா நாளேடு, ரேமா ரங்கராஜன், 29, மே 2015).

உச்ச நீதிமன்றங்கள் உச்சத்தில் இருப்பதால் ஒவ்வொரு மாநிலத்தின் கல்வி, சுகாதாரம் கள நிலவரங்களை ஆராயாமல் நீட் விவகாரத்தில் அவசரத் தீர்ப்புகளை வழங்குகிறது. 

2017ஆம் வருடம் தமிழ்நாட்டில் சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்ப சூழலில் அனிதா போன்று பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றும், நீட் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களின் எண்ணிக்கை 462.

ஒவ்வொரு ஆண்டிற்கும் சமூக, பொருளாரத்தில் பின்தங்கிய ஏழை, எளிய சூழலில் உள்ள ஏறக்குறைய 500 மாணவர்கள்  ஏணி ஏறும் முயற்சியை நீட் தேர்வு அழித்துவிட்டது.

அரசியலைமைப்புச் சட்டம் பாதுகாப்பு வழங்கிய 69 விழுக்காட்டு இடஒதுக்கீட்டை மறைமுகமாக நீட் தாக்குகிறது.
விளக்கம்: ஒவ்வொரு பிரிவில் உள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகங்களில் உள்ள நடுத்தர பொருளாதாரப் பிரிவினர்களின், செல்வம் படைத்தவர்களின்   பிள்ளைகள்தான் இனித் தமிழ்நாட்டில்  மருத்துவக் கல்வி பயில்வார்கள். ஏனென்றால், ஒவ்வொரு சமூகத்திலும் உள்ள மேல்தட்டு, நகர்ப்புற சூழலில் வளரும் மாணவர்கள் மட்டுமே ஓராண்டு, ஈராண்டு ஏன் மூன்றாண்டு நீட் தேர்வு பயிற்சி மையங்களில் கட்டணம் செலுத்திப் படிக்கும் வாய்ப்புள்ளது, வசதியுள்ளது.

அனிதா போன்று சமூக விளிம்பு நிலைகளில் உள்ள மண்ணின் மைந்தர்கள்தான் அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சிப் பெற்று அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவராகப் பணி செய்து, அரசு மருத்துவக் கல்லூரிகளில் சிறப்பு மருத்துவர்களாகப் பயிற்சி பெற்று,  பிறகு அதே அரசு மருத்துவக் கல்லூரிகளில் துறைத் தலைவர்களாகவும், மருத்துவக் கல்லூரி முதல்வர்களாகவும் ஓய்வு பெறுவர்.

ஆனால், மேற்கூறிய பயிற்சி மையங்களில் அதிக கட்டணம் செலுத்தி மருத்துவக் கல்லூரிகளில் சேர்பவர்களிடம், சமூகப் பொறுப்பு, பிறந்த மண்ணில் சேவை செய்யும் மனப்பான்மையை எதிர்பார்ப்பது கடினமே.
நாமக்கல் கோழிப்பண்ணை பள்ளிகளைத் தடுப்பது, கல்விக் கற்கும் முறைகளைச் சீர்திருத்தம் செய்வது இன்றியமையாததேயாகும். ஆனால், ஒரு நுழைவுத்தேர்வு ஒரு மாநிலத்தி;ன் கல்வித் தரத்தை உயர்த்தும் என்று நம்புவது அடிப்படை அறிவுக்கு ஒவ்வாத ஒன்று.

இப்போது, நீட் கோழிப்பண்ணை பயிற்சி மையங்கள் தமிழ்நாடு எங்கும் புற்றீசல் போல் பரவியுள்ளன. ரூபாய் ஒரு இலட்சம் முதல் 3 இலட்சம் வரை கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.

எந்தப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களாக இருந்தாலும் அவர்களை கொள்குறி வகை (Objective) கேள்விகளுக்கு மட்டும் பதிலளிக்கும் வித்தையைக் கற்றுக்கொடுக்கிறார்கள். இதனால், பள்ளிக் கூடங்களின்  முக்கியத்துவம் குறைந்து, மாணவர் ஆசிரியர்  தொடர்பு குறைந்து  Conception Textual  Learning  முறை அழிந்து  மருத்துவக் கல்லூரிகளுக்கு இயந்திர மனிதர்கள் போல மாணவர்களை நீட் தேர்வு பயிற்சி மையங்கள் உருவாக்குகின்றன.
ஹார்வர்ட் போன்ற உலகத் தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்கள் நுழைவுத் தேர்வை ரத்து செய்து பள்ளிப் பாடங்களின் அடிப்படையில் மாணவர்களைத் தேர்வு செய்வதனால் அப்பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சித் திறன், கல்வி மேம்பாடு, சமூகத் தேவைக்கேற்ப உற்பத்தித் திறன் அதிகரித்துள்ளது என்று சமீபத்திய ஆய்வுகள் குறிப்பிடுகின்றன (Will the New SAT Promote Diversity?, Mar 10, 2014, www.theatlandic.com; ‘Harvard study says SATs should be Optional. Why? www.csmonitor.com; ‘Turning the Tide, https/.mcc.gseharvard.edu’)
ஆனால், சமூக நீதியினால் பயன்பெற்று துணைவேந்தர்களான நீட் ஆதரவு கல்வியாளர்களுக்கு இந்த ஆய்வுகள் எட்டுமா?

தீர்வு
கல்வியும், சுகாதாரமும் மாநிலப் பட்டியலுக்கே திரும்பப் பெற தமிழக மக்கள் சமூக அரசியல் போராட்டங்கள் முன்னெடுக்க வேண்டும்.
மத்திய அரசிடம் அளிக்கப்பட்டு கோமா நிலையில் உள்ள நீட் விலக்கு மசோதாவை தியானம் செய்யும் ஆட்சியாளர்கள் முறையாக அழுத்தம் கொடுத்து நிறைவேற்ற வழி வகுக்க வேண்டும்.
பதினொன்று, பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் இணைந்த cut-off    முறையை நிறுவி,  தமிழக அரசாங்க மருத்துவக் கல்லூரிகளுக்கான மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான சேர்க்கை அமைய வேண்டும். 

நிறைவு
நீதிக்கட்சிக் கொண்டு வந்த மதிய உணவு திட்டத்தை 1955ஆம் ஆண்டு பெருந்தலைவர் காமராசர் விரிவுப்படுத்தியபோது, மத்திய அரசின் திட்டக்குழு, மத்திய அரசின் உயர் அலுவலர்கள் கேலிச் செய்தனர். தடைகளைத் தாண்டிப் பெருந்தலைவர் காமராசர் திட்டத்தை நிறைவேற்றினார்.
அதே மத்திய அரசு 50 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின் மதிய உணவுத் திட்டத்தை நாடு முழமைக்கும் விரிவுபடுத்தி மத்திய அரசின் திட்டமாக அறிவித்தது.
தமிழ்நாடு மக்களே மத்திய அரசு நம்மைவிட 50 வருடம் பின்தங்கியுள்ளது.
நாம் சிறப்பாகச் செயல்படுத்தி வரும் சமூக நீதியின் அடிப்படையிலான மருத்துவக் கல்வி சேவை முறைகளை 50 வருடம் பின்னுக்குத் தள்ள வேண்டுமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக