புதன், 20 செப்டம்பர், 2017

நம்மாழ்வார் மனைவி பேட்டி அவரை புரிந்தைகொள்ள ஒத்துழைக்க இல்லை விகடன்

நம்மாழ்வாரை நானே நம்பலைன்னு வருத்தமா இருக்கு!

துரை.வேம்பையன், படங்கள்: நா.ராஜமுருகன்
இயற்கையை நேசிக்கும், இயற்கை விவசாயத்தை விரும்பும், இயற்கையைச்
சிதைக்கத் துடிக்கும் கரங்களைத் தடுத்து நிறுத்த இன்று வீதியில் போராட
இறங்கும் மனிதர்கள் முன்னத்தி ஏராக உச்சரிக்கும் பெயர்... நம்மாழ்வார்.
கைநிறையச் சம்பளம் கொடுத்த அரசு வேலையைச் `செக்குமாட்டுத்தனம்' என்று
உதறித் தள்ளியவர் நம்மாழ்வார். செயற்கை உரங்களை அள்ளித்தெளித்து
புதுப்புது நோய்களை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்ற `பசுமைப்
புரட்சி'க்கு எதிராக நின்று, விவசாயிகளைக் காடு, மேடு, கரட்டு எங்கும்
அலைந்து சந்தித்து, `இயற்கை விவசாயத்துக்கு வாங்கப்பா' என்று
மன்றாடியவர். டெல்டா பகுதியைப் பாலைவனமாக்குகிற மீத்தேன் எடுக்கும்
திட்டத்தை, பம்பரமாகச் சுழன்று போராட்டம் மூலம் களமாடி தடுத்து
நிறுத்தியவர்.
நம்மாழ்வார் ஊர் உலகமெல்லாம் கால் தேய நடந்து போய் இயற்கை
விவசாயத்துக்குப் பலரை மாற்றிக்கொண்டிருந்தபோது, அவரின் மனைவி அவர்களது
சொந்த நிலத்தில் 10 ஆண்டுகள் செயற்கை விவசாயம்தான் செய்து வந்தார்!
``அவரு உயிரோட இருந்தப்போ ஒரு துளி சுயநலம் இல்லாம வாழ்ந்து, இயற்கை
விவசாயத்துக்கு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் திருப்பிடணும்னு சொல்லித்
தொண்டைத் தண்ணி வத்தக் கத்தினாரு. ஆனா, அவரை அப்போ கொஞ்ச பேருதான்
ஆதரிச்சாங்க. `இந்தக் கிழவனுக்கு ஏன் இந்த வேண்டாத வேல? எங்கள நட்டத்துல
தள்ளப் பார்க்கிறார்'னு அவச்சொல் பேசினாங்க. அதுல நானும் ஒருத்தி. அவர்
கொடுத்த காசை மிச்சம் புடிச்சு வாங்குன மூன்று ஏக்கர் நெலத்துல 10 வருஷம்
செயற்கை விவசாயம்தான் பார்த்தேன். அவரோட இறப்புக்கு அப்புறம், அவரோட
முரண்பட்ட பலரும் அவரோட அருமை தெரிஞ்சு இப்போ இயற்கை விவசாயத்துக்குத்
திரும்புறதைப்போல, அவர் கொள்கைக்கு எதிரா செயல்பட்டதை நினைச்சு நானும்
இப்போ வருந்துறேன்'' என்று உள்ளுக்குள் உதைக்கும் ஆற்றாமையோடு
பேசுகிறார், நம்மாழ்வாரின் மனைவி சாவித்திரி அம்மாள். `அவர் இல்லையே'
என்ற ஏக்கம் குரலிலும் ஒலிக்கிறது.
``என் குடும்பம் ஓரளவு வசதியானது. அதனால, எனக்கு வசதியான மாப்பிள்ளையைப்
பார்த்தாங்க. ஆனா, `சாதாரண குடும்பமா இருந்தாலும், அரசாங்க வேலையில
இருக்கிற மாப்பிளையாப் பாருங்க'னு சொல்லிட்டேன். அப்படித்தான், என்னோட
அத்தை இவரை எனக்குப் பேசி, கட்டி வச்சாங்க.
சடங்கு, சம்பிரதாயங்களை முறையா கடைப்பிடிக்கிற வழக்கம் எங்களுக்கு.
ஆனா இவரோ, பகுத்தறிவுப் பேசி, தாலி கட்ட மாட்டேன்னு சொல்லிட்டாரு. `நான்
அவங்களுக்குத் தாலி கட்டணும்னா, பதிலுக்கு அவங்க எனக்குத் தாலி
கட்டணும்'னு இவரு குதர்க்கமா பேச, 1964-ம் வருஷம் வெறும் மோதிரம் மட்டும்
மாத்தி என்னை மனைவியா ஏத்துக்கிட்டாரு.
முதல் ராத்திரியில என்கிட்ட, `எங்க அண்ணன்கள் ரெண்டு பேரும் அவங்க
மனைவிகளைக் கோபத்துல அடிப்பாங்க. அதைப் பார்த்து பார்த்து வளர்ந்த நான்,
பெண்களை மதிக்கணும், அவங்களைப்போல அடிக்கக் கூடாதுனு உறுதி
எடுத்துக்கிட்டேன். அந்த மரியாதைக்கான ஆரம்பம்தான், உங்களுக்கு நான் தாலி
கட்டாதது'ன்னார். புது மாப்பிள்ளையா இருக்கிறப்போ எல்லா ஆம்பளைங்களும்
சொல்ற வசனம்தானேனு நெனச்சேன். ஆனா, அவரோட வாழ்ந்த வாழ்க்கையில ஒரு
தடவைகூட என்னை கைநீட்டி அடிச்சதில்ல. அவ்வளவு ஏன்? கோபமா பேசுனதில்ல;
`நீ, வா, போ'னு ஒருமையிலகூட கூப்பிடமாட்டாரு, `வாங்க, போங்க'னுதான்
பேசுவாரு. கடைசிக் காலம் வரை அப்படித்தான்.
அவருக்கு 400 ரூபாய் சம்பளம். இப்போ ஒரு லட்சம் மாதிரி அப்போ அதோட
மதிப்பு. அதுல அஞ்சு ரூபாய் மட்டும் எடுத்துக்கிட்டு, மீதியை அப்படியே
என்கிட்ட வந்து கொடுத்துடுவாரு. அதுல அப்படி இப்படி மிச்சம் பண்ணியும்,
இருக்குற நகைகளை அடகு வெச்சும், ஊருல மூணு ஏக்கர் நெலம் வாங்கிப்
போட்டேன். அங்கதான் எங்க ஒரே மக மீனா பொறந்தா. நாலு வருஷம் ஒழுங்கா
வேலைக்குப் போனவரு, ஒருநாள் தயங்கித் தயங்கி என்கிட்ட வந்து, `உங்ககிட்ட
கொஞ்சம் பேசணும்'னு மென்னு முழுங்கினாரு. `நான் வேலையை விட்டுட்டேன்'னு
படீர்னு சொன்னாரு. எனக்கு பக்குனு ஆயிட்டு. `ஏன்?'னு கேட்டேன். `எனக்கு
செக்கு மாடாட்டம் வேலை பார்க்கப் பிடிக்கல. செயற்கை விவசாயத்தை
ஊக்குவிக்கவா நான் விவசாயம் படிச்சேன்?'னு  ஏகப்பட்ட வேதாந்தம் பேசினாரு.
`சோத்துக்கு என்ன பண்றது?'னு  கேட்டேன். `சமாளிச்சுக்கலாம்'ன்னாரு.
 நான் கோச்சுக்கிட்டு ஊருக்கு வந்துட்டேன். ஆனா, அவரு வந்து, என்னை
சமாதானப்படுத்தி கூட்டிட்டுப் போனாரு. களக்காடுங்கிற ஊருல பெல்ஜியம்
நாட்டு தனியார் கம்பெனி இயற்கை விவசாயப் பண்ணை வச்சுருந்தாங்க. அதுல
வேலைக்குச் சேர்ந்து 10 வருஷம் வேலை பார்த்தாரு. அப்புறம், தருமபுரியில
உள்ள மலையில் மோட்ராகிங்கிற கம்பெனியில மூணு வருஷம் வேலை பார்த்தாரு.
நாடோடி மாதிரி நானும், என் மகளும் அவரு பின்னாடி போனோம். ஆனா அதையும்
விட்டுட்டு, எங்களை சொந்த மாவட்டமான தஞ்சைக்கே அழைச்சுட்டு வந்துட்டாரு.
அங்கே, `குடும்பம்'னு ஒரு இயற்கை விவசாய வழிகாட்டி அமைப்பை ஆரம்பிச்சு,
10 வருஷம் இயற்கை விவசாய வழிமுறைகளை பிரசாரமா செஞ்சாரு.
`இந்த மனுஷனை நம்பினா, பொண்ணையும் கட்டிக்கொடுக்க முடியாது, குடும்பமும்
கரை சேராது'னு நெனச்சு, நான் ஊருல வாங்கிப் போட்ட மூணு ஏக்கர் நெலத்துல
விவசாயம் பண்ணினேன். என்னையும் அவர் இயற்கை விவசாயம் பண்ணச் சொல்லி
வற்புறுத்தினாரு. ஆனா, நான் கேக்கல!
 அவருக்கு மக மீனா மேல கொள்ளை பிரியம். `நேருவுக்கு இந்திராபோல, எனக்கு
மீனா. அவளை ரஷ்யா வரை அனுப்பிப் படிக்க வைப்பேன்'னு அடிக்கடி சொல்வாரு.
நான்தான், `ஒத்தப் புள்ளையை அவ்வளவு தூரம் அனுப்ப மாட்டேன்'னு
மறுத்துட்டேன்.
கடந்த எட்டு வருஷத்துக்கு, முன்னாடி கரூர் வானகத்துல 65 ஏக்கர்
பொட்டல்காடு நிலத்தை வாங்கி, அதை சோலையாக்கணும்னு முனைப்புக்கு
வந்தபிறகு, அவர் வீட்டுக்கே வர்றதில்லை. எப்பவாச்சும் இந்த வழியா
போகும்போது, `நான் இன்னைக்கு வீட்டுக்கு வர்றேன்'னு சொல்லிட்டு வருவாரு.
அரை மணி நேரம் இருந்துட்டு கிளம்பிடுவாரு. இதனால, நான் என் மக வீட்டுலேயே
இருந்தேன்.
`குடும்பத்தை விட்டுட்டு நாடோடியா, இப்படி கருத்து சொல்லிட்டு
திரியுறாரே?'னு அவர் மேல வருத்தமா இருக்கும்தான். ஆனா, அவரை சொந்தம்,
அக்கம்பக்கம் யாராச்சும் ஏசினா பொசுக்குனு கோபம் வந்துடும். பிலுபிலுனு
அவங்ககிட்ட சண்டைக்குப் போயிருவேன். அவரு குடும்பத்தை மறந்து போனாலும்,
எல்லார்கிட்டயும் என்னைப் பத்தி பெருமையா பேசிக்கிட்டேதான்
இருந்திருக்கார்.
நான் விவசாயம் பார்த்தப்போ, ஒரு தடவை அடி உரத்துக்குப் பதில்
எருக்கஞ்செடிகளை போட்டு பயிர் செஞ்சேன். நல்ல மகசூல். அதைப் பத்தி
எல்லார்கிட்டயும் பெருமையா பேசி இருப்பார்போல. சமீபத்துல மாமல்லபுரத்துல
உள்ள ஒரு அமைப்பு அவருக்கு விருது கொடுத்தாங்க. அதை வாங்கப் போனேன்.
அப்போ அங்க பலரும், `நீங்க செயற்கை விவசாயம் பண்ணினாலும்,
எருக்கஞ்செடிகளை போட்டு சிறப்பான மகசூல் எடுத்ததை அய்யா எங்ககிட்ட பலதடவை
பெருமையா சொல்லி இருக்கார்'னு  சொன்னாங்க. அப்படியே உருகிப்போயிட்டேன்.
அவர் இறந்தப்ப வந்த கூட்டத்தை பார்த்தப்போதான், `இந்த மனுசன் வாழ்ந்த
வாழ்க்கைய நாம புரிஞ்சுக்கலையே'னு மனசை அறுத்துப் போட்டிருச்சு. அதுவும்,
பலநூறு இளைஞர்கள், இளம் பெண்களெல்லாம் வந்து அழுதப்ப, `நம்மாழ்வார்
மனைவி'ங்கிற பெருமையை, கர்வத்தை முதல் முறையா நான் உணர்ந்தேன். ஆனா,
அப்போ அவரு மூச்சில்லாத உடலாயிட்டாரேனு வெடிச்சு அழுதேன்.
இயற்கை விவசாயத்துக்குத் திரும்பும் ஒவ்வொருத்தருக்கும் அவரு தலைவன்.
பல ஆயிரம் இளைஞர்களும், இளைஞிகளும் அவர் கொள்கையால ஈர்க்கப்பட்டு, எந்தக்
கட்சி சாயமும் இல்லாம அவரைக் கொண்டாடுறதைப் பார்க்குறப்போ நம்பிக்கையா
இருக்கு. முதல்முதலா கோயில்பட்டியில அவர் வளர்த்த பாகற்கொடிபோல, இன்றைய
சந்ததிகிட்ட புது நம்பிக்கையை வளர்த்தெடுத்திருக்காரு.
இப்போ இயற்கை விவசாயத்துக்கு ஆதரவா எடுக்கப்படுற ஒவ்வொரு அடியிலயும் அவரை
என்னால பார்க்க முடியுது. அவரை நான் எவ்வளவு நேசிக்கிறேன், அவரை எனக்கு
எவ்வளவு தேடுதுங்கிறதை சொல்றதுக்கு இப்போ அவரு இல்ல. இருந்தாலும், இந்த
நெனப்பெல்லாம்தான் எனக்கு இப்போ ஜீவனா கெடக்குது!''
இன்மையில் உணரப்படும் அன்பு வலிமிகு அழகு. ஒரு கண்ணில் காதலும் ஒரு
கண்ணில் கண்ணீருமாகச் சிரிக்கிறார் சாவித்திரி அம்மாள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக