☝தங்கமகள் கோதை - வைகை ஆற்றங்கரையில் கிடைத்த தங்க கட்டிகள்;
கீழடியை போன்றே வைகை ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் ஊர், தேனூர்.
முதலாம் இராஜராஜ சோழன் கல்வெட்டும், சடாவர்மன் சுந்தரபாண்டியன் காலத்து
கல்வெட்டும் சங்க இலக்கியமும் இந்த ஊரின் சிறப்பைப் பதிவு செய்கின்றன என
இலக்கிய, தொல்லியல் அறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால், அறிஞர்கள் யாரும்
ஆய்வுநடத்தாமல், தானாகவே வெளிவந்த சுயம்புவான கண்டுபிடிப்பு ஒன்று உண்டு.
தேனூரில் 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பெய்த ஒரு கனமழையில்,
கருவேலமரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. மரத்தின் தூருக்கு அடியில் இருந்து
ஒரு மண்முட்டி மேலெழுந்துவர, அதனை எடுத்து சிறுவர்கள் விளையாடத்
தொடங்கினார்கள். உள்ளே விரல் அளவு கனம் கொண்ட கட்டிகள் இருப்பது
தெரிந்ததும் விஷயம் பரவியது. அவை அத்தனையும் தங்கக்கட்டிகள். சுமார்
முக்கால் கிலோ எடையுள்ள தங்கக்கட்டிகள்.
புதையல், அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அரசு அதிகாரி முதல்,
பொதுமக்கள் வரை எல்லோரும் பெரும் புதையல் என அந்தத் தங்கக் கட்டியை
நினைத்தனர். ஆனால் விலைமதிப்பில்லா புதையல் அந்தத் தங்கக் கட்டியில்
பொறிக்கப்பட்டிருந்த எழுத்துக்கள்தான்(படத்தில் பார்க்க).
ஏழு தங்கக்கட்டிகளிலும் ''தமிழி'' எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன.
ஏழிழும் ஒரு பெண்ணின் பெயரே இடம்பெற்றிருந்தது. அந்தப் பெயர் 'கோதை’.
அந்த எழுத்துக்கள் எழுதப்பட்ட விதத்தை வைத்து, இது கி.மு முதல்
நூற்றாண்டைச் சேர்ந்தது எனத் தொல்பொருள் துறை மதிப்பிட்டுள்ளது.
இதில் அதிசயம் என்ன தெரியுமா? எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட தங்கக்கட்டி,
இந்தியாவில் முதன்முதலில் இங்குதான் கிடைத்துள்ளது.
2,100 ஆண்டுகளுக்கு முன் தங்கத்தால் செய்யப்பட்ட தெய்வச்சிலைகள்கூட
இதுவரை கிடைக்கவில்லை. எந்தத் தெய்வத்தின் பெயரும் தங்கத்தில் எழுதி,
இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
உருவ வழிபாடு தொடங்காத காலம் அது. எனவே சிலைகளுக்கோ, அல்லது அதுசார்ந்த
பெயர்களுக்கோ வாய்ப்பு இல்லை. ஆனால், அன்பும் காதலும் அப்படி அல்ல.
மனிதனின் ஆதி அணுத் துகளில் இருந்து தொடங்கியது. காலமானிகளால்
அளவிட்டுவிட முடியாத உணர்வுகளின் பரிணாமம். அதைப் போய் தனியாகக்
கண்டுபிடிக்கத் தேவை இல்லை, ஏனென்றால், நாமே அதன் கண்டுபிடிப்புதான்.
அதனால்தான் தெய்வத்தின் பெயரோ, அல்லது மன்னனின் பெயரோகூட தங்கத்தில்
எழுதப்படாத காலத்தில், ஆன்மிகமும் அதிகாரமும் எட்ட முடியாத எல்லையை,
அன்பினால் தோய்ந்த மனிதச் செயலால் எட்டித்தொட முடிந்துள்ளது, ஒரு
மனுஷிக்கு அவளை நேசித்த மற்றொருவரால் தரப்பட்ட, அல்லது அவளது பெயரை அவளே
விரும்பி எழுதிவைத்துக்கொண்ட ஒரு செயலாகக்கூட இது இருக்கலாம். ஆனால்,
இந்த எழுத்துக்குப் பின்னால் இருந்த நேசம், இத்தனை ஆயிரம்
வருடங்களுக்குப் பின்பும் நம் இதயத்தை ஏதோ செய்கிறது.தமிழகத்தின் முதல்
தங்கமகள் மட்டும் அல்ல, இந்தியாவின் முதல் தங்கமகளும் கோதைதான்.
மண்ணுக்குள் இருந்து சுயமாக உதித்தெழுந்தவர்களைப் பற்றி புராணங்களில்
படித்திருக்கிறோம். இதுவும் ஒரு சுயமான உதித்தெழுதல் தான்; ஒரு வகையில்
உயிர்த்தெழுதலும்கூட. எழுந்தவள் எழுப்பும் கேள்விகளும் எண்ணற்றவை.
2,100 ஆண்டுகளுக்கு முன்பு தங்கத்தைக் கண்டறிய பயன்படுத்திய
தொழில்நுட்பம் என்ன? அதை அணிகலனாக மாற்ற என்னென்ன வடிவத்தைக்
கையாண்டார்கள். கலைநுட்பமும் ரசவாதமும் கலந்து உருக்கொள்ளும் படைப்பின்
ரகசியத்தை எவ்வாறு கண்டறிந்தார்கள்? எழுத்தை எங்கும் நிறைந்த ஒன்றாக
எப்படி மாற்றினர்? கேள்விகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.
பாதுகாப்பு வசதிகள் பெரிதாக இல்லாத காலம் அது. அந்தக் காலத்தில்
வெளியூரில் இருந்து நகரத்துக்குள் வருகிறவர்களுக்கு, தங்களின் செல்வத்தை
நகருக்கு வெளியே அடையாளத்துடன் புதைத்துவைத்துவிட்டு உள்ளே வரும் பழக்கம்
இருந்துள்ளது. அத்தகைய பழக்கப்படி இந்தப் புதையல் வைக்கப்பட்டிருக்கலாம்.
அப்படியென்றால், நகரத்தைவிட்டு வெளியே கிராமங்களிலோ அல்லது
சிறுநகரங்களிலோ இருந்தவர்களிடமே, இவ்வளவு தங்கம் புழங்குகிற அளவுக்கு
பொருளாதாரச் செழிப்பு இருந்துள்ளது என்பதை அறிய முடிகிறது.
கிராமப்புறத்திலே இவ்வளவு வளமை இருந்திருக்கும்போது, தலைநகரமான மதுரையின்
வளமை எப்படி இருந்திருக்கும்?
முதலில் ஞாபகம் வருவது அழகர்கோயில் கல்வெட்டு. அங்கே கி.மு மூன்றாம்
நூற்றாண்டில் சமணப் பள்ளி அமைக்க, மதுரையைச் சேர்ந்த பொற்கொல்லன் ஆதன்,
தானம் அளித்துள்ளான் எனச் செய்தி உள்ளது. இது மதுரை பொற்கொல்லர்களின்
உயர்வைக் காட்டுகிறது. சிலப்பதிகாரத்தின் கடைசிப் பகுதியில் 1,000
பொற்கொல்லர்களின் தலைகளைக் கொய்து, கண்ணகியைச் சாந்தப்படுத்தினான்
பாண்டிய வேந்தன் எனச் சொல்லப்படுகிறது. இது ஒரு படைப்பாளியின் கற்பனையாக
இருக்கலாம். ஆனால், பெரும் எண்ணிக்கையில் பொற்கொல்லர்கள் இங்கு
வாழ்ந்திருக்கிறார்கள் என்பதன் சாட்சி இது.
தூத்துக்குடி கிறிசி மஹாலட்சுமி கல்லூரி மாணவர்கள் நடத்திய கள ஆய்வில்,
முக்காணி என்ற கிராமத்தில் இருக்கும் பொற்கொல்லர்கள் தங்களின்
குலக்கதையைச் சொல்லும்போது, 'மதுரையில் பெரும் எண்ணிக்கையில்
பொற்கொல்லர்கள் கொலைசெய்யப் பட்டபோது நாங்கள் உயிர் தப்பி இங்குவந்து
சேர்ந்தவர்கள்’ எனக் கூறியதாக கூறப்படுகிறது
இவ்வளவு பெரும் எண்ணிக்கையில் பொற்கொல்லர்கள் வாழ்வதற்கான தேவை இருந்த
நகரமாக மதுரை இருந்துள்ளது. அப்படியென்றால், அவ்வளவு வேலைப்பாடுகள்
செய்யத் தேவையான பொற்குவியல் இருந்துள்ளது என்பதை, யூகிப்பது கடினம்
அல்ல.
ஒரு கல்வெட்டு ஆதாரம், ஓர் இலக்கிய ஆதாரம், ஒரு வாய்மொழி வரலாற்று
ஆதாரம்... என ஒவ்வொன்றாகச் சேர்த்துக்கொண்டிருந்தால், கை நிறையத்
தங்கக்கட்டிகளோடு நம் முன்னால் வந்து நிற்கிறாள் கோதை. அவளின் கைகளில்
இருக்கும் மண் கலயத்திலேயே இவ்வளவு தங்கம் என்றால், மாமதுரைக்குள்
எவ்வளவோ?
சங்க இலக்கிய அகநானூற்றுப் பாடல் ஒன்றில் பொருள் தேடி வட திசை சென்ற
தலைவன் வரத் தாமதமாவதால் கோபமான தலைவி, 'பாடலிபுரத்தில் எடுத்து சோணை
நதிக்கரையில் நந்த வம்சத்தினர் புதைத்துவைத்த புதையல் நம்மைவிட அதிக
செல்வத்தைக்கொண்டது என நினைத்துத் தேடிக்கொண்டிருக்கிறானோ?’ எனக்
கேட்கிறாள். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, சோணை நதிக்கரை நந்த
வம்சத்தினரின் புதையலுக்கு இலக்கியம் சான்று கூறுகிறது. வைகை நதிக்கரை
கோதை வம்சத்தின் புதையலுக்கு நாமே சான்றாக இருக்கிறோம்.
சாம்ராஜ்ஜியங்களை ஆண்ட பேரரசர்களின் பெயர்கள்கூட கல் எழுத்துக்குள்
பதுங்கியிருக்கும் நிலையில், சாமானியப் பெண்ணின் பெயர் ஒன்று, பொன்
எழுத்துகளால் பொறிக்கப்பட்டு இன்றும் மின்னுகிறது. அந்த மின்னும் ஒளியின்
வழியாக சிரித்துக்கொண்டே கோதை சொல்லும் செய்தி இதுதான்.
வைகை நதிக்கரை சங்கத் தமிழை மட்டும் வளர்க்கவில்லை, தங்கத் தமிழையும்
அதுதான் வளர்த்தது!
#செம்மொழிவாழ்க!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக