வியாழன், 21 செப்டம்பர், 2017

அறநிலையத்துறை சிதைத்த 17 கோவில் பட்டியல் சிலை திருட்டு கடத்தல் கோயில் தினமலர் செய்தி

ஏழு ஆண்டுகளில் 17 புராதன கோவில்கள் சிதைப்பு: திருப்பணி பெயரில்
அறநிலையத்துறை அட்டூழியம்
மாற்றம் செய்த நாள்: ஏப் 18,2016 05:18
16
தமிழகத்தில், திருப்பணி என்ற பெயரில், கடந்த, ஏழு ஆண்டுகளில், 17 புராதன
கோவில்கள், அறநிலையத்துறை துணையுடன் சிதைக்கப்பட்டு உள்ளது
தெரியவந்துள்ளது.
இதன் பின்னணியில், சர்வதேச சிலை கடத்தல் கும்பல்களுக்கு தொடர்பு
இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்து உள்ளது. தமிழகத்தில் பாரம்பரிய சிறப்பு
மிக்க கோவில்களை பாதுகாக்க, 17 உறுப்பினர் அடங்கிய வல்லுனர் குழுவை
அமைக்கும் நடவடிக்கைகளை, தமிழக அரசு கிடப்பில் போட்டு உள்ளதாக புகார்
எழுந்தது. இந்த விவகாரத்தை, உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்காக
எடுத்து விசாரித்தது.
தடை
கோவில்கள், தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் குறித்த ஆய்வு
அறிக்கை அளிக்க, மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தலைமையில் குழு அமைத்தது.
இக்குழுவின் அறிக்கையை ஏற்ற, உயர் நீதிமன்றம், 'முறையான கண்காணிப்பு
இல்லாமல், கோவில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள கூடாது' என, 2015
அக்டோபரில் உத்தரவிட்டது.
ஆனால், நீதிமன்றத்தின் உத்தரவுகளை மதிக்காமல், தொல்லியல் சிறப்பு வாய்ந்த
பல கோவில்கள் தொடர்ந்து இடிக்கப்பட்டு வருகின்றன.
கும்பகோணத்தில்.
..
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகில் உள்ள மானம்பாடி கிராமத்தில், ஆயிரம்
ஆண்டுகள் பழமை வாய்ந்த, நாகநாத சுவாமி கோவில், அறநிலையத்துறை
கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலில், ராஜேந்திர சோழன் ஆட்சி காலத்தில்
திருப்பணி செய்த தாக, தொல்லியல் துறை ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
தமிழக தொல்லியல் துறையின், 88 பாதுகாக்கப்பட்ட பாரம்பரிய சின்னங்கள்
பட்டியலில், இக்கோவிலும் ஒன்று.
உயர் நீதிமன்ற தடையை மீறி, இக்கோவில் திருப்பணிகளை, அறநிலையத்துறை
துவக்கியது. ஆறு மாதத்திற்கு முன், தனியார் ஒப்பந்தக்காரரிடம் வேலை
ஒப்படைக்கப்பட்டது.
ஏழு ஆண்டுகளில்...
தொல்லியல் சிறப்பு மிக்க கோவிலை, இதற்கான தனி அனுபவம் இல்லாதவர்களிடம்,
அறநிலையத்துறை ஒப்படைத்ததால், கலைநயமிக்க சிற்பங்கள், துாண்கள் என கோவில்
முழுவதும் தனித்தனியாக பிரிக்கப்பட்டுள்ளன. பழமையான கல்வெட்டுகள்
அனைத்தும் சிதைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்து உள்ளது.
இது மட்டுமல்லாது, 2009 முதல், 2016 வரை தமிழகத்தின் பல பகுதிகளில்,
ஏராளமான புராதன கோவில்கள் சிதைக்கப்பட்ட நிலையில், 17 கோவில்கள் சிதைப்பு
பணிகள் குறித்து உறுதி செய்யப்பட்ட விவரங்கள் தெரியவந்து உள்ளன.
அழிப்பு
கோவில் பிரிக்கப்படுவதற்கு முன், கற்களுக்கு எண்கள் கொடுக்கப்பட்டதாக
அறநிலையத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், இது போன்ற
கோவில்களை பிரிக்கும் முன், வீடியோ எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட
தொல்லியல் துறை விதிமுறைகள் அப்பட்டமாக மீறப்பட்டு உள்ளதாக புகார்
கூறப்படுகிறது.
உயர் நீதிமன்ற உத்தரவுப்படி,
தொல்லியல் துறை வல்லுனர்கள் முன்னிலையில் தான், இதற்கான பணிகள் நடந்து
இருக்க வேண்டும். ஆனால், இந்த விதிகள் வெளிப்படையாகவே மீறப்பட்டு
உள்ளன.ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோவிலில், ராஜராஜன், ராஜேந்திரன்
சிற்பங்கள் அழிக்கப்பட்டு உள்ளன. உயர் நீதிமன்ற தடை குறித்த எந்த
உணர்வும் இன்றி, அறநிலையத்துறை அதிகாரிகள் இப்பணிகளை தொடர்வது சர்ச்சையை
ஏற்படுத்தி உள்ளது.
பின்னணியில் யார்?
இது குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத, புராதன காப்பாளர்கள் கூறியதாவது:
* அறநிலைய துறையில், ஆண்டு தோறும், ஆயிரம் கோவில்களுக்கு மேல் திருப்பணி
செய்யப்படுகிறது. ஒவ்வொரு கோவிலுக்கும், 50 லட்சம் ரூபாய் முதல், பல கோடி
ரூபாய் வரை திருப்பணிக்கு ஒதுக்கப்படுகிறது
* திருப்பணி செய்ய,அறநிலையத்துறைக்கு சட்ட ரீதியாக எந்த உரிமையும் இல்லை.
அப்படியே திருப்பணி செய்ய வேண்டுமானாலும், ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக
அரசாணை பிறப்பிக்கப்பட வேண்டும். இத்தகைய விதிமுறைகள் எதையும்
அறநிலையத்துறை பின்பற்றுவதே இல்லை
* பழமையான பொருட்களுக்கு சர்வதேச சந்தையில் அதிக கிராக்கி உள்ளது போன்று,
புராதன சிறப்பு மிக்க சிற்பங்களுக்கு சர்வதேச அளவில் பெரிய சந்தை உள்ளது.
இதில் ஈடுபடும்,'மாபியா'க்கள், இது போன்ற கோவில் திருப்பணி திட்டங்களை
பயன்படுத்திக் கொள்கின்றனர்
* உள்ளூர் அளவிலான திருப்பணி ஒப்பந்ததாரர்களை வளைத்து
போடும்,'மாபியா'க்கள், அவர்கள் வாயிலாக புராதன சிலைகளையும்,
கல்வெட்டுக்கள் போன்ற அடையாள சான்றுகளை அபகரிக்கின்றனர்
* உள்ளூர் ஒப்பந்ததாரர்கள் போன்று, சில குறிப்பிட்ட ஸ்தபதிகளும்
திருப்பணி என்ற பெயரில், பழைய கோவில்களை சீரமைப்பதைவிட, புதிதாக மறு
கட்டுமானம் செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்
* இந்த பின்னணியில், விதிமுறைகளை மீறி, வேண்டுமென்றே பல கோடி ரூபாயை
செலவிட்டு, திருபணிகளை மேற்கொள்ள அறநிலையத்துறை ஆர்வத்துடன் இறங்குவது பல
சந்தேகங்களை எழுப்புகிறது. சிலை கடத்தலுக்காக, பாரம்பரிய கோவில்களை
சிதைக்கும் வகையில் திருபணி கள் முடுக்கி விடப்படுகிறதோ என்ற
சந்தேகத்துக்கு, புராதன காப்பாளர்கள் பல உதாரணங்களை சுட்டி
காட்டுகின்றனர்
* இந்த சிதைப்பு நடவடிக்கையால், ஒவ்வொரு கோவிலிலும், அதற்கு கொடையாக
கொடுக்கப்பட்ட சொத்து விவரங்கள் குறித்த கல்வெட்டு தகவல்களும், வரலாற்று
தகவல்களும் அழிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
நடைமுறை என்ன?
கோவில்கள் பராமரிக்கப்படுவது குறித்து சமூக ஆர்வலர், ஸ்ரீரங்கத்தை
சேர்ந்த ரங்கராஜன் கூறியதாவது:
புராதன சின்னமாக விளங்கும் கோவில்களை, சரியாக ஆய்வு செய்து
பராமரிக்கவும், புனரமைக்கவும் உரிய நடவடிக்கைகளை எடுக்காமல், தவறான ஆய்வு
அறிக்கையின் அடிப்படையில் இடிப்பது விதிகளுக்கு முரணானது.
புராதன நினைவுச் சின்னங்களை, குறிப்பாக கோவில்களை இடித்தால், இரண்டு
ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்க, புராதன
சின்னங்கள் சட்டத்தில் இடம் உள்ளது.எனவே, அறநிலையத்துறையின் தொல்லியல்
ஆலோசகர் நரசிம்மன் பரிந்துரையின் அடிப்படையில், 400 ஆண்டுகளுக்கு
மேலானபழமை வாய்ந்த கோவில்கள், 'சகுனம் சரியில்லை' எனக் கூறி
இடிக்கப்படுகின்றன; இது தடுக்கப்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
தீர்வு என்ன?
அறநிலைய துறை அதிகாரிகளுக்கு, கோவில் திருப்பணியை பழமை மாறாமல்
செய்வதற்காகவும், திருப்பணியின் போது செய்ய வேண்டியதையும், செய்யக்
கூடாதவற்றையும் தொல்லியல் துறை, 48 நாட்கள் நடக்கும் வகுப்பில் சொல்லி தருகிறது.
அப்படி இருந்தும், பல கோவில்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இதனால்,
தொல்லியல் துறையை வலுப்படுத்த வேண்டும். அறநிலையத்துறையில், திருப்பணிகள்
தொடர்பான பிரிவுகளில், அனைத்து நிலைகளிலும், தொல்லியல் துறையினரையே
அயல்பணி அடிப்படையில் அமர்த்த வேண்டும். அறநிலையதுறை பொறியாளர்கள்
பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்.
மேலும், தமிழகத்தில் உள்ள தொன்மையான கோவில்கள் பட்டியலிடப்பட வேண்டும்.
அங்குள்ள சிலைகளை பாதுகாக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
சிதைக்கப்படும் சிற்பங்களும்கல்வெட்டுகளும்
* பழமையான கோவில்களில் உள்ள கல்வெட்டுகளை சிதைக்கும் வகையில் அவற்றின்
மேல் வெள்ளை, பச்சைப் பூச்சுகள் பூசப்படுகின்றன
* பழங்கால ஓவியங்கள் உள்ள திருப்புலிவனம் சிவன் கோவில், ஆழ்வார்குறிச்சி
அருகே உள்ள மன்னார் கோவில் ஆகியவற்றின் புனரமைப்பின் போது, ஓவியங்கள்
அழிக்கப்பட்டு, வெள்ளை அடிக்கப்பட்டு, கற்சுவர்கள் முழுவதற்கும்
மண்பீய்ச்சி அடித்து, கல்வெட்டுகள்அழிக்கப்பட்டன
* துாண்களில் உள்ள சிலைகளின் மேலேயே ஆணி அடிப்பதும், கல்வெட்டுகளை மாற்றி
வைப்பதால் வரலாற்று தகவல்கள் சிதைக்கப்படுகின்றன
* விமானங்கள், கோபுரங்கள் முழுவதும்,'எனாமல்' வர்ணம் பூசுவதும் புராதன
தன்மையை அழிக்கும் செயலாகும்
* தொல்லியல் துறையின் அறிவுரையின் படி, 2007ல், கோவில் சிற்பங்களை மணல்
வீச்சு முறையில் சுத்தம் செய்ய தடை விதிக்கப்பட்டது. இதன் பின்னும், பல
கோவில்களில் மணல் வீச்சு முறையில் சிற்பங்கள் சிதைக்கப்படுகின்றன.
சிதைக்கப்பட்ட கோவில்கள் பட்டியல்
தமிழகத்தில் அறநிலையத்துறை துணையுடன் சிதைக்கப்பட்ட, 17 கோவில்கள் பட்டியல்:
* கும்பகோணம், மானம்பாடி நாகநாத சுவாமி கோவில்
* நாமக்கல் மாவட்டம், திருமான்குறிச்சி மருதகாளி அம்மன் கோவில்
* திருப்பூர் மாவட்டம், காங்கேயம் பெரியநாயகி அம்மன் கோவில்
* ஈரோடு, வீரப்பன் சத்திரம் மாரியம்மன் கோவில்
* ஈரோடு, வெள்ளோடு ரசகோவில்
* சேலம், ஆலாங்குட்டை, பூட்டு முனியப்பன் கோவில்
* வேலுார், சங்கரன் பாளையம், காமாட்சி அம்மன் கோவில்
* கரூர் மாவட்டம், திம்மாச்சிபுரம் கைலாசநாதர் கோவில்
* காஞ்சிபுரம் மாவட்டம், கோவளம் கைலாசநாதர் கோவில்
* காங்கேயம், பாப்பினி, பெரியநாயகி அம்மன் கோவில்
* திருப்பூர், சோளீஸ்வரர் கோவில்
* திருப்பூர், நடுவாச்சேரி கோதை பிரட்டீஸ்வரர் கோவில்
* ஈரோடு மாவட்டம், நாகேஸ்வரன் கோவில்
* நாமக்கல், கோட்டைமேடு பத்ரகாளி அம்மன் கோவில்
* தாராபுரம், செல்லாண்டி அம்மன் கோவில்
* தொண்டாமுத்துார், வெங்கடேச பெருமாள் கோவில்
* கோவில்பாளையம், காளகேஸ்வரர் கோவில்.
- நமது நிருபர் -

http://m.dinamalar.com/detail.php?id=1503161

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக