தமிழர்நாடு தகவல் திரட்டு

முகநூலில் தமிழ்த்தேசியர் இட்ட பதிவுகளின் சேமிப்பு _ ஆதி பேரொளி (வேட்டொலி)

வியாழன், 27 ஜூலை, 2017

சங்ககால வாழ்க்கை ஈமக்கடன் மாயோன் மேய தமிழி கல்வெட்டு குமரிக்கண்டம் முருகன் மெய்யியல் காமம் களவு காதல் திருமணம் பரத்தை உணவுமுறை கள் ஆடை நகை காலக்கணக்கீடு நாழிகை வேளாண்மை வணிகம் கடல் கப்பல் ஆயுதம் கருவி ஆட்சி சேரர் சோழர் பாண்டியர் ஊர்கள் நாணயம் இலக்கியம்


உரையாடல் திறக்கப்பட்டது. படிக்காத செய்தி 1 உள்ளது.

உள்ளடக்கத்திற்குச் செல்
திரைப் படிப்பான்களுடன் Gmailஐப் பயன்படுத்துதல்

தேடு

Gmailக்கான டெஸ்க்டாப் அறிவிப்புகளை இயக்க, இங்கே கிளிக் செய்யவும்.   மேலும் அறிக  மறை
Gmail
எழுது

லேபிள்கள்

இன்பாக்ஸ் (563)
நட்சத்திரமிட்டது
முக்கியமானவை
அனுப்பிய அஞ்சல்
வரைவுகள் (179)
மேலும்
 

Hangouts

 
 
 
 
மேலும்
 
 
 
 
அனைத்தையும் அச்சிடு
புதிய சாளரத்தில்

சங்ககால வாழ்க்கை ஈமக்கடன் மாயோன் மேய தமிழி கல்வெட்டு குமரிக்கண்டம் முருகன் மெய்யியல் காமம் களவு காதல் திருமணம் பரத்தை உணவுமுறை கள் ஆடை நகை காலக்கணக்கீடு நாழிகை வேளாண்மை வணிகம் கடல் கப்பல் ஆயுதம் கருவி ஆட்சி சேரர் சோழர் பாண்டியர் ஊர்கள் நாணயம் இலக்கியம்

இன்பாக்ஸ்
x

aathi tamil <aathi1956@gmail.com>

ஏப். 13
பெறுநர்: எனக்கு
சங்க காலம்-முனைவர் ப. சரவணன்
Permalink  
 


புதைந்தவை சாட்சி சொல்கின்றன

சங்க காலம் / தேடல் – 1
காலத்தை வெட்டாதீர்
PandyasSangamAgeMCSIObverse‘காலம்’ எனும் நீள் சரடில் ஒரு குறிப்பிட்ட அளவினைத் துண்டாக வெட்டியெடுத்து அது எந்தக்காலம் என்று கணிப்பது எளிதன்று. பொருத்தமில்லாதது. அதற்குப் பதிலாகக் குறிப்பிட்ட தூண்டுதல் ஏற்பட்டு அது துலங்கலாக மாறி பல்வேறு மாற்றத்துக்குட்பட்டு ஒருநிலைபெற்ற  பெருநிலையைக் கண்டு, அது தோன்றுவதற்கும் தொய்வடைவதற்கும் இடைப்பட்ட காலத்தை அளந்து அதற்கு ஒரு பெயரிடுதல் எளிது. பொருத்தமானது.
பொது யுகத்துக்கு முன்பு (பொ.யு.மு) ஏதோ ஒரு நூற்றாண்டையும் பொது யுகத்தில்  ஏதோ ஒரு நூற்றாண்டையும் குறித்துக் கொண்டு இக்காலக்கட்டத்தை ‘இவ்வாறு சொல்லலாம்’ என்று பெயரிடுவதைவிட, ஒரு சமூகம் இவ்வாறு தோன்றி, இவ்வாறு வளர்ந்து, இவ்வாறு நலிவுற்றது என்று குறித்துக்கொண்டு அச்சமூகம் தோற்றியது முதல் நலிவுற்றது வரையிலான காலக்கட்டத்தை ‘இவ்வாறு சொல்லலாம்’ என்று பெயரிடுவது சிறப்பு.
காலத்தை வெட்டாதீர். காலத்தில் நிகழ்ந்த பெருநிகழ்வைத் தனித்தெடுத்துக் காலத்தைக் கணிக்கவேண்டும். அது ஒன்றின் முழுமையாக இருக்கவேண்டும். ஒரு மனிதனின் ஆயுட்காலம் போலவோ (தனிமனித வரலாறு) அல்லது ஒரு சமூகத்தின் ஆயுட்காலம் போலவோ  (சமூகத்தின் வரலாறு) அது முழுமையானதாக இருக்கவேண்டும். தலையும் வாலும் சிதைந்திருந்தாலும் (தோற்றமும் முடிவும் தெரியவில்லை என்றாலும் கூட) அதன் உடலின் நீளத்தைக் கொண்டு காலத்தைக் கணிக்கவேண்டும். தனிமனித வரலாற்றைப் பொருத்தவரை அக்கணிப்பு ஐந்தாண்டுகாலம் முன், பின்னாக இருக்கலாம். சமூகத்தின் வரலாற்றைப் பொருத்தவரை அக்கணிப்பு  ஐம்பதாண்டுகாலம் முன், பின்னாக இருக்கலாம்.
தமிழரின் சங்ககாலம்
தமிழர் தோன்றி, வளர்ந்து, வாழ்ந்து, நலிவுற்ற காலத்தைச் ‘சங்ககாலம்’ எனலாம். சங்கம் என்பது கூட்டம். பொதுமைப்பட்ட எவற்றையும் செய்வதற்குமுன் ‘கூடிப்பேசி முடிவெடுத்தல்’ என்பது இனக்குழுத் தமிழரின் தொல்வழக்கம்.
செய்யுளைப் புலவர்கள் கூடிப்பேசி ஒப்புக்கொள்வதைச் சங்க இலக்கியங்கள் ‘புணர்கூட்டு’ என்று சுட்டியுள்ளன. புணர்தல் என்றால் கூடுதல். புணர்கூட்டு என்பது ஒருங்கிணைதல், சங்கமித்தல் என்ற பொருள்படும்.
சங்கு என்ற சொல்லிலிருந்து சங்கம் என்ற சொல் பிறந்துள்ளது. சங்கிலிருந்து எழும் ஒலியைச் சங்குநாதம் என்று கூறுவதில்லை – சங்கநாதம் என்று கூறுகிறோம். க,த,ந,ப,ம போல ‘ச’ வும் மொழிமுதல் வரும் என்று தொல்காப்பியர் சுட்டியுள்ளார். ‘பெயல் ஊழி’யைச் சங்கம் ஆண்டு என்று சுட்டுவது உண்டு. இங்குச் சங்கம் என்பது மிகப்பெரும் ஓர் எண்ணைக் குறிக்கிறது.
‘சங்கம்’ என்ற சொல் அசைவன, சங்கு, ஒருவகை வாச்சியம், கணைக்கால், கூடுகை, கூட்டம், சங்கநிதி, சங்கவாத்தியம், சங்குவளையல், சபை, திரள், நெற்றி, மிகுதியைக் குறிக்கும் அளவுப்பெயர், தொகுதி, பெருங்கூட்டம் எனப் பல்வேறு பொருள்படும். ‘சங்கம்’ என்பது பல்வேறு பொருள்களில் ஆளப்பட்ட தமிழ்ச்சொல்.
காலப்போக்கில் இனக்குழுத்தன்மை மாறினாலும் தமிழர் கூட்டமாகவே வாழ்ந்தனர். தனித்து வாழ்தல் என்பது தமிழர் மரபன்று. அந்தக் கூட்டு வாழ்க்கையின் ஒட்டுமொத்த காலநிர்ணயமே சங்ககாலம். அது பொ.யு.மு. எட்டாம் நூற்றாண்டு முதல் பொ.யு. இரண்டாம் நூற்றாண்டு வரையிலான காலக்கட்டத்தைக் குறிக்கின்றது என்பதனைத் தொல்லியல் அறிஞர் புலவர் செ. இராசு அவர்கள் பல்வேறு சான்றாதாரங்களோடு நிறுவியுள்ளார். அக்காலக் கட்டமே சங்ககாலம் என்பதற்கு அக்காலக்கட்டத்தில் வாழ்ந்த தமிழர்கள் பயன்படுத்திய பொருட்கள் பல ஆதாரங்களாக அமைகின்றன. அவை மண்ணில் புதையுண்டு நூற்றாண்டுகள் பல கடந்துவிட்டன. அவை அகழ்வாய்வின் வழியாக மீட்டெடுக்கப்பட்டுவருகின்றன. அவை அதிரும் எண்ணற்ற எளிய கேள்விகளுக்கு உறுதியான மெளன விடைகளாக, சாட்சியங்களாக விளங்குகின்றன.
சாட்சி – 1
இறந்தோரைப் புதைப்பது தமிழர் மரபு. அவ்வாறு தமிழரைப் புதைத்த இடங்கள் பல அகழ்வாய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றை ஈமக்குழிகள் என்பர். இவற்றைக்  கற்பாறைகளைக் கொண்டு மூடிவைத்துப் பாதுகாக்கும் வழக்கம் இருந்துள்ளது. மூடப்படும் கல்லின் அளவு, மூடப்பட்ட விதம் ஆகியவற்றைக்கொண்டு  இவற்றைக் கல்படை, கல்அறை, கல்குவை, கற்கிடை, கல்வட்டம், கல்திட்டை என்ற பெயர்களால் அழைக்கின்றனர். ஒரு வகையில் இறந்தோர் உடலைப் பதுக்கி, மறைத்து, புதைத்து வைப்பதால் இவற்றைப் பதுக்கைகள் என்று பொதுப்பெயரால் சுட்டினர். கல்லால் பதுக்கப்பட்டதால் கல்பதுக்கை, கற்பதுக்கை என்றனர்.
அப்பதுக்கைகளுக்குள் இறந்தோரின் உடல், அவருக்கு உணவுப்பொருட்கள் சிலவும் மற்றும் அவர் பயன்படுத்திய பொருட்கள் எனச் சிலவற்றையும் வைத்திருந்தனர்.  அகழ்வாய்வின் வழியாக அப்பதுக்கைகளுக்குள்ளிருந்து கண்டெடுக்கப்பட்ட பொருள்களை கார்பன் டேட்டிங் (C14) பரிசோதனை செய்ததில், அவற்றின் காலம் ஏறத்தாழ பொ.யு.மு. ஐந்தாம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்று அறியமுடிந்தது. இப்பதுக்கைகள் பற்றிய குறிப்புகள் புறநானூறு – 3, அகநானூறு – 109, கலித்தொகை – 12 ஆகிய சங்க இலக்கியச் செய்யுள் அடிகளில் காணப்படுகின்றன.
சாட்சி – 2
பதுக்கைகள் பெருகியபின்னர் அல்லது அவற்றில் புதர் மண்டுவதால் அவை இருந்த இடம் பற்றிய தெளிவுக்காக, அடையாளத்துக்காகப் புதிய பதுக்கைகளைத் தோற்றுவிக்கும் போது அவற்றின் அருகில் உயர்ந்த செங்குத்தான கல்லினை நிறுத்தினர். இதனை நெடுகல் என்றனர். ஒன்றோ ஒன்றுக்கு மேற்பட்டோ நெடுகல் நிறுத்தும் வழக்கம் இருந்துள்ளது. இத்தகைய நெடுகல் பற்றிய செய்திகளைப் புறநானூறு – 264, அகநானூறு – 269, 289 ஆகிய செய்யுள் அடிகள் தெரிவிக்கின்றன.
சாட்சி – 3
இறந்தோரைப் புதைத்த இடத்தில் அவரது உருவத்தையும் அவரின் சிறப்பையும் மக்களுக்கும் அடுத்த தலைமுறைக்கு அறிவிக்கவேண்டும் என்ற தொலைநோக்குச் சிந்தனையோடு  அகன்ற கல்லில் அவரது உருவினைச் சிற்பமாகச் செதுக்கியும் அவரின் சிறப்பினைத் ‘தமிழி’ எழுத்தில் எழுதியும் வைத்துள்ளனர். அக்கல்லுக்கு நடுகல் என்று பெயர். இதற்கு நினைவுக்கல் என்ற பொதுப்பெயர் உண்டு. குத்துக்கல் என்றும் சுட்டுகின்றனர். இறந்தோர் வீரராக இருந்தால் இக்கல்லுக்கு வீரக்கல், வீரன்கல் என்றும் பெயரிட்டனர்.
நடுகல் பற்றிய குறிப்புகளைப் புறநானூறு – 221,223,232,335 அகநானூறு – 53,67,179, ஐங்குறுநூறு – 352, மலைபடுகடாம் – 386-389 ஆகிய செய்யுள் அடிகளில் காணமுடிகின்றது. நடுகல்லினைச் சிறுதெய்வமாகவும் வழிபட்டுள்ளனர்.
தேனிமாவட்டம் ஆண்டிபட்டி வட்டத்தில் அமைந்துள்ள புலிமான்கோம்பையில் கண்டெடுக்கப்பட்ட மூன்று நடுகற்கலிலும் உருவம் செதுக்கப்பட்டும்  சிறப்பு எழுதப்பெற்றும் உள்ளன. தமிழி எழுத்தில் தூய தமிழ்ச்சொற்களில் எழுதப்பெற்றுள்ள அவ்வாசகங்களைப் படித்தறிந்த நடன. காசிநாதன் அவை பொ.யு.மு. மூன்றாம் நூற்றாண்டும் அதற்கு முன்னரும் என்று காலக்கணிப்பினைச் செய்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டத்தில் அமைந்துள்ள தாதப்பட்டியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு நடுகல்லும் ஏறக்குறைய இதே காலக்கட்டத்தைச் சார்ந்ததே.
அப்படியானால் பொ.யு.மு. மூன்றாம் நூற்றாண்டும் அதற்கு முன்னரும் பொதுவாகவே அனைவருக்கும் எழுத்தறிவு இருந்தது என்பது தெளிவாகின்றது.
சாட்சி – 4
இறந்தோரை ஒரு பெரிய பானையில் வைத்துப் புதைக்கும் வழக்கமும் இருந்துள்ளது. அந்தப் பெரிய பானைக்குத் தாழி என்று பெயர். அத்தாழிக்குள் இறந்தோரை அமர்ந்த நிலையிலோ அல்லது குத்தவைத்த நிலையிலோ வைத்துப் புதைத்துள்ளனர். அகழ்வாய்வில் பெரும்பான்மையாக இத்தாழிக்குள் இறந்தோரின் எலும்புகளும் அணி, மணிகள் சிலவும் தானியத் துகள்களும் கிடைத்துள்ளன.
மிக அண்மையில், மதுரை அருகே அயன்பாப்பாக்குடி பகுதியில் உள்ள சின்ன உடைப்பு என்ற இடத்தில் உள்ள கண்மாயின் மறுகால் வடிநிலப்பகுதி, அய்த்திரும்புக்கண்மாய் ஓடையின் வடிநிலப்பகுதி, கூடல்செங்குளம் மேட்டுப்பகுதி ஆகிய மூன்று நீர்நிலைகள் சூழ்ந்த பகுதியில் தொல்பழங்காலப் புதைமேடு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இப்புதைமேட்டில் முதுமக்கள் தாழிகள் பல புதைக்கப்பட்டுள்ளன. இவை பொ.யு.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்தவை.
தாழியிலிட்டுப் புதைக்கும் வழக்கத்தைப் புறநானூறு – 228,236,256,364, பதிற்றுப்பத்து – 44, நற்றிணை – 271, அகநானூறு – 275 ஆகிய செய்யுள் அடிகளில் சுட்டியுள்ளன.
சாட்சி – 5
தமிழர்கள் கடலோடிகளாகவும் வாழ்ந்தனர். கடல்வணிகத்தில் சிறந்திருந்தனர். ஏற்றுமதியும் இறக்குமதியும் இருந்தகாரணத்தால் கிரேக்கநாடு, ரோமானிய நாடு, எகிப்து நாடு, பாரசீகநாடு, அரேபியா நாடு எனப் பன்னாட்டு வணிகர்களின் பயன்பாட்டுப் பொருட்களும் நாணயங்களும் அணி, மணிகளும் சோழர், பாண்டியர், சேரர் துறைமுகப்பகுதிகளில் நடத்திய அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் காலம் பொ.யு.மு. முதல் நூற்றாண்டாகும்.
தமிழரின் கடல்வாணிகம் பற்றிய செய்திகளைப் புறநானூறு – 56, பதிற்றுப்பத்து – 2, முல்லைப்பாட்டு – 61-62, நெடுநல்வாடை – 101, அகநானூறு – 149 ஆகிய செய்யுள் அடிகளில் படித்தறியமுடிகின்றது.
சாட்சி – 6
தமிழர்கள் குகைகள், சமணப்பாழிகள், பானை ஓடுகள், தாழிகள், மோதிரங்கள், முத்திரைகள், கல்லாயுதங்கள் ஆகியவற்றில் தங்கள் பெயரையோ, குறிப்புகளையோ அல்லது ஒரு சிறு செய்தியையோ தமிழி எழுத்துகளில் எழுதிவைத்துள்ளனர். இவற்றின் காலம் பொ.யு.மு. முதல் நூற்றாண்டும் அதற்கும் முன்புமாகும்.
கரூர் மாவட்டம் புகழூர் அருகேயுள்ள ஆறுநாட்டார்மலையில் பதிற்றுப்பத்தில் குறிப்படப்பட்டுள்ள சேர அரசமரபினரின் ஏழு, எட்டு, ஒன்பதாம் பத்துக்குரிய அரசர்களின் பெயர்கள் (செல்வக்கடுங்கோ வாழி ஆதன், பெருஞ்சேரல் இரும்பொறை, இளஞ்சேரல் இரும்பொறை) எழுதப்பெற்றுள்ளன. இக்கல்வெட்டின் காலத்தை நடன. காசிநாதன் பொ.யு.மு. மூன்றாம் நூற்றாண்டு என்று கணித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் அவல்பூந்துருத்திக்கு அருகில் அமைந்துள்ள அறச்சலூர் என்ற இடத்தில் உள்ள கற்குகையில் இசைக்கல்வெட்டு கண்டறியப்பட்டது. இது சதுரப்பாலையைச் சார்ந்த இசைக்குறிப்பு. இக்கல்வெட்டின் காலம் பொ.யு. இரண்டாம் நூற்றாண்டு என்று நடன. காசிநாதன் குறிப்பிட்டுள்ளார். ஆதலால், சங்ககாலத்தின் இறுதியில் தமிழர்கள் தமிழிசையில் தேர்ச்சிபெற்றிருந்தனர் என்பது உறுதிப்படுத்தப்படுகின்றது.
மதுரை மாவட்டம் மாங்குளம் (மீனாட்சிபுரம் அல்லது அரிட்டாபட்டி) அருகே உள்ள ஓவாமலையில் கண்டெடுக்கப்பட்ட ஆறு கல்வெட்டுகளுள் ஒன்றில் நெடுஞ்செழியன் பற்றிய குறிப்பு உள்ளது.  இந்த நெடுஞ்செழியன் சங்க இலக்கியங்களில் சுட்டப்பெறாத பழைய நெடுஞ்செழியன் என்று தெரியவருகின்றது. மற்ற கல்வெட்டுகளின் செய்தியிலிருந்து பாண்டிய அரசு மற்றும் வணிகர்களின் ஆதரவோடு சமண முனிவர்கள் தங்கள் பள்ளிகளை அமைத்துக் கொண்டமையை அறியமுடிகின்றது. இக்கல்வெட்டுக்களின் காலத்தைக் கா. இராஜன் பொ.யு.மு. ஐந்தாம் நூற்றாண்டு என்று கணித்துள்ளார்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்து மலைக்குகையில் “அந்துவன்“ என்ற பெயர் குறிக்கப்பெற்றுள்ளது. ‘அந்துவன்’ என்பவர் திருப்பரங்குன்றத்தைப் பற்றிப் பாடியதாக அகநானூறு – 59ஆவது செய்யுள் குறிப்பிட்டுள்ளது.
வணிக முத்திரைகளிலும் மோதிரங்களிலும் குறவன், தாயன், தித்தன், வேட்டுவன், குட்டுவன்கோதை, மாக்கோதை, பெருவழுதி, கொல் இரும்பொறை, சாத்தன் போன்ற பெயர்கள் தமிழி (சங்ககாலத்தில் தமிழ்ச் சொற்களை எழுதப் பயன்பட்ட எழுத்துகளைத் தமிழி என்று அழைப்பர்) எழுத்துகளில் பொறிக்கப்பட்டுள்ளன. இச்சொற்கள் அனைத்தும் சங்க இலக்கியங்களில் மட்டும் இடம்பெற்றுள்ளன.
ஈரோடு மாவட்டம் கொடுமணல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில் கிடைக்கப்பெற்ற 250-க்கும் மேற்பட்ட பானையோட்டுத் துண்டுகளுள் ஒன்றில் கண்ணன் ஆதன் என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. இப்பானையோட்டின் காலம் பொ.யு.மு. முதல் நூற்றாண்டாகும்.
இந்த ஆறு வகைப்பட்ட மௌனத் தொல்சாட்சியங்களின் வழியாகச் சங்ககாலத்தைப் பொ.யு.மு. எட்டாம் நூற்றாண்டு முதல் பொ.யு. இரண்டாம் நூற்றாண்டு வரை என்று உறுதிபடுத்த முடிகின்றது. அக்காலகட்டத்தில் தமிழர்கள் கூட்டமாக வாழ்ந்ததையும் அவர்கள் எழுத்தறிவும் வணிகஅறிவும் இலக்கியப் புலமையும் இசைநுட்பமும் பெற்றுச் சிறந்திருந்தனர் என்பதனையும் அறியமுடிகின்றது. சமணர்களின் செல்வாக்கும் நிலவியதை உணரமுடிகின்றது.

__________________
Admin


Guru

Status: Offline
Posts: 16711
Date:Apr 12, 2015
Permalink  
 

நான்கும் நமதே

சங்க காலம் / தேடல் – 2
தமிழர் மலர்ந்த விதம்
india-militaryஏறத்தாழ 1000 ஆண்டுகாலப் பரப்பில் நான்கு படிநிலைகளில் தமிழர் மலர்ந்தனர். வேட்டையாடுதல், மேய்த்தல், விளைவித்தல், விற்றல் என்ற நான்குவித தொழில் முறைமைகளில் அந்த மலர்ச்சி இருந்தது.
ஒவ்வொன்றுக்கும் இடைப்பட்ட காலம் ஒன்றுக்கும் மேற்பட்ட நூற்றாண்டுகளாக இருக்கலாம்.முதல் படிநிலையின் உச்சத்தில் இரண்டாம் படிநிலையின் தோற்றம் என்ற நிலையில் ஒவ்வொரு படிநிலையும் அமைவுபெற்றது. ஆனால், பின்னது வந்தவுடன் முன்னது அழிவுற்றது என்று கருதமுடியாது.
இக்கருத்தினை, “ஒன்று அழிந்து வந்தது. மற்றொன்று வளர்ந்து வந்தது. பழைய சமுதாயத்தின் குறிக்கோள்கள், கருத்துக்கள், தத்துவங்கள் முதலியன புதிதாகத் தோன்றும் சமுதாயத்தின் குறிக்கோள், கருத்துக்கள், தத்துவங்களுக்கு மாறுபட்டனவாக இருந்தன“[1] என்று நா. வானமாமலை கூறுவதோடு இணைத்துச் சிந்திக்கலாம். இறுதியில், இந்நான்கும் இணைந்தும் தனித்தும் ஓர்மை பெற்றிருந்தன.
இந்நான்கு தொழில்களும் நான்கு வெவ்வேறு தனித்தன்மையுடைய நிலப்பரப்பில் காலவோட்டத்துக்கு ஏற்ப உருவானவையே. வேட்டையாடுதல் – மலை, மேய்த்தல் – காடு, விளைவித்தல் – வயல், விற்றல் – கடற்கரை மணலும் கடலும். “நால் நிலப்பாகுபாடுகளும் அந் நால்நிலங்களின் இயற்கை விளைபொருட்களும் உற்பத்திப் பொருட்களும் உற்பத்திக் கருவிகளும் உணவு முறைகளும் மரம்-செடி-கொடிகளும் இசை முதலானவையும் வெவ்வேறுபட்டனவாய் இருந்தன“[2] என்று பெ. மாதையன் உறுதிபடுத்தியுள்ளார்.
வேட்டையிலும் விளைவித்தலிலும் இனக்குழு மரபினையும் விளைவித்தலிலும் விற்றலிலும் அரசுசார் நிறுவன மரபினையும் காணமுடிகின்றது. இது தேவைக்கு ஏற்ப நிகழ்ந்த மாற்றம்.  இதனை இனக்குழுக்கள் பெருங்குழுக்களாக மாறியமை என்று கொள்ளலாம். காலவோட்டத்தில் இனக்குழுத்தலைவர்கள் சிற்றரசர்களாகவும் சிற்றரசர்கள் பேரரசர்களாகவும் உருப்பெற்றனர்.
வேட்டையாடு விளையாடு
இனக்குழுத் தமிழர்கள் முதலில் வாழ்ந்தது மலைகளிலும் குன்றுகளிலும்தான். அக்காலத் தமிழகத்தில் இத்தகைய நிலவியல் சூழல் மிகுந்திருந்தமையும் இதற்கொருகாரணம். அங்கு கிடைத்த இயற்கைசார் உணவினை உட்கொண்டு அதற்குரிய தகவமைப்புடன் அத்தமிழர் வாழ்ந்துவந்தனர்.
அன்றாட உணவினை அந்தந்த வேளைக்கும் தேவைக்கும் ஏற்ப எடுத்தும் (தேன், புல்லரிசி), அகழ்ந்தும் (கிழங்கு, வேர்), பறித்தும் (இலை, பூ), கொன்றும் (வனவிலங்கு, பறவை ) உண்டனர். இவர்களின் பொருளாதாரம் (உணவாதாரம்) மூங்கில்நெல், பலா, வள்ளிக்கிழங்கு, தேன் முதலியவையே. குறிஞ்சித்திணையை மையமிட்ட சங்கப் பாடல்களில் இத்தகைய உணவுப்பொருட்களே இடம்பெற்றுள்ளன. சான்று புறநானூறு – 109.
இலக்கியத்தில் இத்தகைய நிலப்பரப்பினைக் குறிஞ்சி என்றும் அதற்குரிய நிலவெல்லையாக மலையும் மலையைச் சார்ந்த பகுதியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஔவையார் “மிசை“ என்று குறிஞ்சி நிலத்தைச் சுட்டியுள்ளார். மிசை என்பது “மேடு“ என்ற பொருள்படும்.
மலைக்காட்டுப்பகுதிகளில் வேடர், எயினர், மழவர், மறவர் ஆகிய பெயர்களால் சுட்டப்படும் வேடர்கள் இனக்குழுமுறையில் வாழ்ந்துவந்தனர். “குன்றுகளில் வாழும் மக்கள் மிகவும் புராதனமான (நாகரீகமற்ற) நிலையில் இருந்தார்கள்“[3] என்று கார்த்திகேசு சிவத்தம்பி குறிப்பிட்டுள்ளார். ஆம்! அவர்கள் காட்டுமனிதர்கள்தான். அதற்காக அவர்களைக் காட்டுமிராண்டிகள் என்று கருதிவிடக்கூடாது.
குறுநில மன்னர்கள் பெரும்பாலும் இக்குன்றுப் பகுதிகளில் இருந்து அரசாண்டதாக இலக்கியங்கள் சுட்டியுள்ளன. இவர்கள் மலைத்தலைவர்கள். அதியமான், பாரி, காரி, ஆய், பேகன், கண்டீரக் கோப்பெருநள்ளி, இளவிச்சிக்கோ, ஓரி, கொண்கானங்கிழான், ஏறைக்கோன், குமணன், பிட்டங்கொன்றன் போன்றார்கள் குறிப்பிடத்தக்க மலைத்தலைவர்கள். இவர்களில் பலர் வள்ளல்களாக இருந்துள்ளனர். காரணம், இவர்களுடைய மலை உணவு வறட்சியற்றதாக இருந்துள்ளது.
நல்ல மேய்ப்பர்கள்
காலவோட்டத்தில் மலைகளில் உணவுப்பற்றாக்குறை ஏற்பட்டபோது அவர்கள் மலையைவிட்டு இறங்கிவந்தனர். அதாவது, மலையடிவாரத்தில் மண்டியிருந்த காட்டுப்பகுதிகளுக்குள் நுழைந்தனர். ஆடுமாடுகளை மேய்த்தலும் சிறு அளவில் உழுதலும் இவர்களுடைய தொழிலாக இருந்தது. இந்நிலங்கள் புன்செய்நிலங்கள்தான். இவர்கள் காடும் காடுசார்ந்த பகுதிகளிலும் குடியிருந்தனர். இந் நிலப்பகுதியை முல்லை என்றனர்.
காட்டுப்பகுதிகளில் வேட்டையாடி, கால்நடைகளை வளர்த்த ஆயர் (ஆ-பசு, நிரை – கூட்டம். ஆநிரையை மேய்த்ததால் இவர்களை ஆயர்கள் என்றனர்.), கோவலர், இடையர், அண்டர், பூழியர், குடவர் ஆகியோர் இனக்குழுமுறையில் இப்பகுதிகளில் வாழ்ந்துவந்தனர். இதற்குச் சான்றாக அகநானூற்றின் 101, 311, 393 ஆகிய பாடல்களைக் காட்டலாம். இவர்களிடம் இனக்குழுச் சமுதாயமான குறிஞ்சி நிலத்தவரின் பண்பாட்டு எச்சங்கள் மிகுந்திருந்தன. இவர்கள் கூட்டுழைப்பினர்கள். கூட்டாகவே உண்டனர். இவர்களின் உணவுப்பொருட்களாக வரகு, கொள், தினை, அவரைப் புழுக்கு போன்றன இருந்தன. சான்று பெரும்பாணாற்றுப்படை – 190 முதல் 196 வரையிலான அடிகள்.
இவர்களின் வாழ்விடப் பகுதியைச் “சீறூர்“ என்று இலக்கியங்கள் சுட்டியுள்ளன. சான்று புறநானூறு – 285 முதல் 335 வரையிலான பாடல்கள். இந்தச் சீறூரினை ஆண்ட மன்னர்கள், இனக்குழுத் தலைமையையும் அரசமைப்பின் தலைமையையும் கொண்ட இருகலப்புநிலைத் தலைமையுடைய ஒருவகையான ஆட்சியினை நடத்தினர். இத்தலைமையினருக்குக் குடிமக்களாகத் துடியன், பாணன், பறையன், கடம்பன் ஆகியோர் இருந்துள்ளனர்.
இவர்களின் பெருஞ்செல்வம் மாடுகள்தான். அவற்றைக் காக்கவும் அவற்றிலிருந்து பல்வேறு பொருட்களைப் பெற்றுத் தங்களின் உணவுத்தேவைகளைப் போக்கிக்கொள்ளவும் பெரும்பாடுபட்டனர். மாடுகளைத் தம் உடைமையாகக் கருதியதால் இவர்களின் சமுதாயத்தை “உடைமைச்சமுதாயம்“ என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இவர்களின் மாடுகளைப் பகைவர்கள் கைப்பற்றவரும்போது, அவர்களைத் தடுத்து அவர்களிடமிருந்து அவற்றைக் காக்கும்பொருட்டு உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு நடுகல் நட்டு வழிபாடு செய்துள்ளனர். இச்செயலினை அகநானூறு – 67, 131 ஆகிய இரண்டு பாடல்கள் விளக்கியுள்ளன.
ஓர் ஆடவருக்கு ஒரு பெண் என்ற கற்புடை வாழ்க்கை இந்நிலப்பகுதியில் வேரூன்றியது. குறிப்பாக ஒருத்தி ஒருவனுக்காகவே வாழ்ந்தாள் என்று உறுதியாகச் சொல்லலாம். அதனால்தான் இலக்கியங்கள் “முல்லைசார்ந்த கற்பினள்“ என்று குறிப்பிட்டுள்ளன.
“ஏறுதழுவுதல்“ என்ற மாட்டினை அடக்கும் வீரத்தை ஓர் ஆடவனின் திருமணத்தகுதியாகக் கொண்டனர். இது முல்லைத்திணைக்குரிய வீர விளையாட்டுகளுள் ஒன்றாகப் பிறந்து வளர்ந்தது. இன்றுவரை கொண்டாடப்படும் விழாவாகத் தமிழரிடையே உள்ளது.
குறிஞ்சி நிலத்தில் தலைமையுடையோரின் பெண்கள் சமுதாய நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. ஆனால், முல்லை நிலத்தில் தலைமையுடையோரின் மனைவி சமுதாய நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இது நாகரிக வளர்ச்சியில் ஒரு பாய்ச்சல். குறிஞ்சி நிலத்தலைவர்களின் பெயர்கள் இலக்கியத்தில் பதிவாகியுள்ளன. ஆனால், முல்லை நிலத்தலைவர்களின் பெயர்கள் குறிப்பாகவே இலக்கியத்தில் புலப்படுத்தப்பட்டுள்ளன. இவர்களும் குறிஞ்சி நிலத் தலைவர்கள்போல வள்ளல் தன்மையுடன் இருந்தாலும் இவர்களின் நிலப்பரப்பில் தொடர்ச்சியான வளம் இல்லை.
வயலும் வாழ்வும்
காலவோட்டத்தில் உழவின் வழியாக உணவு உற்பத்திப் பெருக்கத்தை மிகுவிக்கக் கற்ற தமிழர்கள் ஆற்றுப்பாசனவசதியுடைய வயல்வெளிகளைத் தங்களின் தொழிலிடமாக, வாழ்விடமாகக் கொண்டனர். இவர்கள் மென்புல மக்கள். நன்செய் வேளாண்மையை உடையவர்கள். வயலும் வயல் சார்ந்த பகுதியும் மருதம் என்று சுட்டப்பட்டது.
வயல் விளைவதற்குக் காரணமான மழையும் அதற்குரிய கடவுளான இந்திரனும் இவர்களால் போற்றப்பட்டனர். இந்திரனை வேந்தன் என்று அழைத்தனர். பின்னாளில் இவர்களின் தலைவர்கள் தங்களை “வேந்தர்கள்“ என்று அழைத்துக்கொண்டனர். ஆனால், இவர்கள் பெருநிலப்பரப்பினையுடைய மூவேந்தர்களுள் அடங்குபவர்கள் அல்லர். இந்நிலமக்களின் தலைவர்கள் “முதுகுடி மன்னர்கள்“ என்ற அழைக்கப்பட்டனர். இவர்கள் நிலவுடைமையாளர்களாகத் திகழ்ந்தனர்.
பணப்பயிர்களை விளைவித்தனர். பண்டமாற்றில் நெல்லை உயர்நிலைமதிப்புப் பெறச்செய்தனர். வளம் கொழிக்கும் நிலமாக மருதநில வயல்கள் இருந்தன. வாழ்வும் செம்மைப்பட்டது. கொண்டாட்டங்கள் பெருகின. “மருதநிலப் பகுதியில் வாழும் மக்கள் வளர்ச்சியடைந்த நிலையில் காணப்படுகின்றனர்“[4] என்று கா. சிவத்தம்பி குறிப்பிட்டுள்ளார்.
இவர்களின் உணவுப்பொருட்களாக வெண்ணெல் உணவு, கருப்பஞ்சாறு போன்றன இருந்தன. சான்று பெரும்பாணாற்றுப்படை – 255 முதல் 262 வரையிலான அடிகள்.
வேலைப்பிரிவு, பொருளாதார ஏற்றத்தாழ்வு, மதங்களின் செல்வாக்கு போன்றன இந்நிலத்தில் கிளைத்து வளர்ந்தன. வயலைப்போலவே இவர்களின் வாழ்வும் வளம்பெற்றிருந்தது.
நன்செய் வேளாண்மையின் அசுரவளர்ச்சியால் புன்செய் வேளாண்மை இழிவுக்குரியதாகக் கருதப்பட்டு மதிப்பிழந்தது. அதனால்தான், வென்ற அரசர் தோல்வியடைந்த அரசரின் விளைநிலங்களில் ஏரில் கழுதையைப் பூட்டி புன்செய் பயிர்களான வரகு, கொள் முதலிய தானியங்களை விதைத்து இழிவுபடுத்தினர். சான்று புறநானூறு -15, 392.
திரைகடலோடி திரவியம் தேடி
காலவோட்டத்தில் வேளாண்மைக்கு அடுத்தபடியாக வணிகத்துக்கு முதன்மைத்தன்மை வழங்கப்பட்டது. நேரடியாக உற்பத்தியில் ஈடுபடாத வணிகர் வர்க்கம் உள்நாட்டு, வெளிநாட்டு வணிகத்தில் தங்களை முழுமையாக அர்ப்பணித்தது. உள்நாட்டு வணிகக் குழுவினருக்கு “நிகமம்“ என்று பெயர் இருந்துள்ளது.
கடலும்  கடல்சார் பகுதிகளும் இவர்களின் வணிகத்தளங்களாயின. பரதவர்கள் தங்களின் வணிகக்குழுவினருக்கு “நியமம்“ என்று பெயரிட்டிருந்தனர். இப்பகுதியை நெய்தல் என்றனர். நெய்தல் நிலத்தில் உமணர்கள் விளைவித்த உப்பு மருதநிலத்தில் விளைந்த நெல்லுக்கு ஒப்பாகப் பண்டமாற்றில் கருதப்பட்டது.
கடலிலிருந்து எடுக்கப்பட்ட முத்து விலைமதிப்புடையதாக வெளிநாட்டு வணிகத்தில் கருதப்பட்டது. நா. வானமாமலை, “தென்கடலில் முத்துக்குளிப்புப் பற்றியும் கொற்கைக் கடல் முத்து தங்கள் சீமாட்டிகளை அணியச்செய்வது பற்றியும் அறிந்திருந்தார்கள். நம் நாட்டு இலக்கியச் சான்றுகளை அவை உறுதிப்படுத்துகின்றன. மேலும் கொற்கையில் அகப்படும் ரோம நாணயங்கள் தொடர்ச்சியாக அகஸ்டஸ் காலம் முதல் ஆர்க்கேடியஸ் காலம் (14-400கி.பி வரை) வரை கிடைப்பது இச்செய்திகளை ருசுப்படுத்தும் பொருட்சான்றாகும்“[5] என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.
முடியுடை மூவேந்தர்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் பட்டினங்களின் வளர்ச்சி அளப்பரியதாக உள்ளது. நிலைத்த அரசால்தான் வலுவான கடல்வாணிகத்தைச் செம்மையுற செய்யமுடியும். அந்தவகையில், சோழ வேந்தருக்கு புகாரும் (புறநானூறு – 30, பட்டினப்பாலை – 129-136, 216-218) சேர  வேந்தருக்கு முசிறியும் (புறநானூறு – 343, அகநானூறு – 149) பாண்டியருக்குக் கொற்கையும் (அகநானூறு – 27,130,201, 296, ஐங்குறுநூறு – 185, 188, நற்றிணை – 23, சிறுபாணாற்றப்படை – 56-58) கடல்வணிகத் துறைமுகங்களாக அமைந்து வளம்தரும் அட்சயப் பாத்திரங்களாகத் திகழ்ந்தன.
இம்மூன்றாலும் அந்நியநாட்டு வணிகர்கள் நம்நாட்டில் கால்பதிக்க வழியேற்பட்டது. அவர்களின் பண்பாடும், பழக்க வழக்கங்களும், அடிமைகளை வாங்கிப் பணியமர்த்தும்  வழக்கமும் நம்நாட்டிலும் ஏற்படலாயின.
பண்டமாற்றுமுறை கடல்கடந்து நிகழ்ந்தது. வணிகர்களின் வளமான வாழ்வினை மதுரைக்காஞ்சியின் 500 முதல் 506 வரையிலான அடிகள் எடுத்துக்காட்டியுள்ளன.
நான்கிலும் நாம்தான்
மலை,காடு,வயல்,கடல் என்ற நான்கு வெவ்வேறான நிலப்பரப்புகளில் வாழ்ந்ததும் படிப்படியாக முன்னேறியதும் தமிழர்தான். அவர்களின் சங்ககாலம் இந்நான்கிலும் ஊடுபாவாக விரவியுள்ளது.
நால்வகை நிலங்களையும் தனித்தனியே ஆண்ட நிலைமை மாறி, நானிலத்தையும் ஒருவர் ஆளும் பேரரசுநிலை உருவாகியது.[6] பாண்டிய நெடுஞ்செழியன் நானிலத்தோர் வழிபட ஆண்டுவந்தான் என்ற செய்தியைப் புறநானூற்றின் 17ஆவது பாடல் தெளிவுபடுத்தியுள்ளது. சேரமான் கோக்கோதை மார்பன் இவ்வாறு நானிலப்பகுதியை ஆண்டதனால் அவன் நாடன், ஊரன், சேர்ப்பன் எனப் புகழப்பட்டான்.
நானிலத்தையும் இணைத்து ஆளும் போக்கில் தொழில் அடிப்படையில் உரிமைகளும், மதிப்பும் வரிசைநிலையும் வகுக்கப்பட்டன. தொல்காப்பியத்தில் 70-84 ஆகிய நூற்பாக்களில் நால்வருணத்தாருக்குரிய வரையறைகள் வகுக்கப்பெற்றுள்ளன. நால்வருணம் (அரசர், அந்தணர், வணிகர், வேளாளர்) என்ற கோட்பாடு இந்நிலையில் வலுப்பட்டது.



1.  வானமாமலை, நா., பழந்தமிழ் இலக்கியத்தில் பொருள் முதல்வாதக் கருத்துக்கள், ஆராய்ச்சி 2: 9, ப.14.
2.  மாதையன், பெ., சங்க்கால இனக்குழுச் சமுதாயமும் அரசு உருவாக்கமும், ப. 10.
3.  சிவத்தம்பி, கா., திணைக்கோட்பாட்டின் சமூக அடிப்படைகள், ஆராய்ச்சி 3: 2, ப.342.
4.  மேலது.
5.  வானமாமலை, நா., சங்கும் முத்தும் சமுதாய மாறுதல்களும் – 2, தாமரை, ஏப்ரல் 1969, ப.39.
6.  மாதையன், பெ., சங்க்கால இனக்குழுச் சமுதாயமும் அரசு உருவாக்கமும், ப. 69.

__________________
Admin


Guru

Status: Offline
Posts: 16711
Date:Apr 12, 2015
Permalink  
 

எழுதிச்சென்ற விதியின் கை

சங்க காலம் / தேடல் – 3
தமிழரின் “தலை“யெழுத்து
Influence of Christianity on Tamil Languageகல்தோன்றிய, மண்தோன்றிய காலத்துக்குப் பின்தோன்றிய மொழிகள் பல. அவற்றுள் ஒன்று தமிழ்மொழி.எகிப்து நாட்டில் பொ.யு.மு. 60ஆம் நூற்றாண்டுக்கு முன்பே கல்வெட்டுகள் இருந்தன.[1] சீன நாட்டில் பொ.யு.மு. 20ஆம் நூற்றாண்டுக்கு முன்பே கல்வெட்டுகள் இருந்தன. உலக மொழிகளோடு ஒப்பிடும்போது தமிழ்மொழிக் கல்வெட்டுகளின் காலம் மிகப் பிற்பட்டதுதான்.
பாரத கண்டத்தில் தோன்றிய ரிக் வேதத்தின் காலம் பொ.யு.மு. 14 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டது.[2] ரிக் வேதத்தின் காலத்தைத் தீர்மானிப்பதில் பல அறிஞர்களிடம் கருத்து வேறுபாடுகள் உள்ளன. எப்படியானாலும் பாரதகண்டத்தில் தோன்றிய மொழிகளோடு ஒப்பிடும்போதும் தமிழ்மொழியின் எழுத்துருவின் காலம் பிற்பட்டதுதான்.
ஆனால், மற்றவை வழக்கிழந்தபோதும் தமிழ் வழக்கிழக்காமல் தன்னைச் செம்மைப்படுத்திக் கொண்டு உயர்ந்து வளர்ந்தது என்பதில் எந்த அறிஞர் குழுக்களிடமும் கருத்துவேறுபாடு இருக்காது.
‘தமிழி’ எழுத்தின் காலம்
தமிழ்மொழியின் எழுத்து வடிவம் முதலில் உருவ (படம்) எழுத்தாக இருந்து, கருத்தெழுத்தாக மாறிப் பின்னர் அசையெழுத்து நிலையினை அடைந்து, பின் செம்மையடைந்து வரியெழுத்தாக மாறியது. அதற்குத் “தமிழி“ என்றுபெயர்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலைக்கு அருகில் உள்ள கொடுமணல் என்ற பகுதியில் அகழ்வாய்வுசெய்து கண்டெடுக்கப்பட்ட பானையோட்டில் தமிழி எழுத்தில் ஒரு பெயர் எழுதப்பட்டிருந்தது. அப்பானையோட்டினை கார்பன் டேட்டிங் பரிசோதனை செய்ததில் அதன் காலம் பொ.யு.மு.எட்டாம் நூற்றாண்டு என்று தெரியவந்தது.அதாவது, தமிழி எழுத்து ஏறத்தாழ பொ.யு.மு.எட்டாம் நூற்றாண்டிலிருந்தே வரியெழுத்தாக வழக்கிலிருந்துள்ளது. அப்படியென்றால், அது உருவ (படம்) எழுத்தாக இருந்த காலகட்டம் ஏறத்தாழ பொ.யு.மு. 13ஆம் நூற்றாண்டு என்பது என் கணிப்பு.
தமிழகத்தில் அரசலூர், ஆதிச்சநல்லூர், பொருந்தல், அழகர்மலை, ஆனைமலை, எடக்கல் கல்வெட்டு, கருங்காலக்குடி, கலசக்காடு, கழுகுமலை, கீழவளவு, கொடுமணல், சமணர்மலை, சித்தன்னவாசல், பரங்குன்றம், திருவாதவூர், பஞ்சபாண்டவர்மலை, புகழூர், மறுகால்தலை, மாங்குளம், மாமண்டூர், முத்துப்பட்டி, மேட்டுப்பட்டி, விக்கிரமங்கலம், தேனூர், ஐம்பை, போர்ப்பன்னக்கோட்டை போன்ற இடங்களில் கண்டறியப்பட்ட பொ.யு.மு.மூன்றாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட கல்வெட்டுகளில், மட்பாண்டச் சில்லுகளில் தமிழி எழுத்தில் அமைந்த சொல், சொற்கள், தொடர் ஆகியன காணப்படுகின்றன.
இவற்றுள் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கண்டறியப்பட்ட குகைக் கல்வெட்டுகளில் உள்ள எழுத்துகள் தமிழி தானா? அல்லது மூலத் தென் திராவிட மொழியா? என்ற ஐயம் தெ.பொ.மீனாட்சிசுந்தரனாருக்கு இருந்தது. காரணம், இக்குகைக் கல்வெட்டுகளின் மொழி தமிழ் மற்றும் பிராகிருத மொழிகளின் கலப்பில் ஒரு கலப்புமொழியாக அமைந்திருந்ததே.[3]
இக்கல்வெட்டுகளைச் செதுக்கிய புத்தசமயத்தைச் சார்ந்தோர்கள் பிராகிருத மொழியில் புலமைபெற்றவர்கள். அதே நேரத்தில் அவர்கள் தமிழைத் தாய்மொழியாகப் பெற்றவர்கள் அல்லர். தமிழகத்தில் வாழும் தமிழ் மக்கள் “இக்குகை இவரது“ என்றோ, “இக்குகையை இவருக்கு இவர் அமைத்துக்கொடுத்தார்“ என்றோ அறிந்துகொள்ளவேண்டும் என்ற நோக்கில்தான் அக்குகைகளில் அச்செய்திகளை எழுதிவைத்தனர்.
தென்தமிழக மாவட்டங்களில் தொடர்ந்து குகை மற்றும் குகைசார்ந்த பகுதிகளில் கண்டறியப்பட்ட கல்வெட்டுகளின் மொழி, மொழி நடையின் அடிப்படையிலும் அவை தொல்காப்பிய விதி ஒழுங்குக்கு உட்படுவதாலும் சங்க இலக்கியங்களில் பயின்று வரும் சொற்களாக இருப்பதாலும் அவை தமிழி மொழிதான் என்பதனை ஆய்வாளர்கள் உறுதிப்படுத்திக் கொண்டனர்.
மூன்றுமுகம்
தமிழி எழுத்துரு மூன்றுகட்ட நிலைகளில் மாற்றங்களைப் பெற்று வளர்ந்துள்ளது.[4] முதல்கட்ட வளர்ச்சி நிலையில் அதாவது, பொ.யு.மு.எட்டாம் நூற்றாண்டு முதல் பொ.யு.மு. ஐந்தாம் நூற்றாண்டு வரையில் தமிழி எழுத்தில் “கந்தசாமி“ என்ற சொல்லினை எழுதினால் நம்மால் அதனைக் “காந்தாசாமி“ என்றே படிக்கநேரிடும். அக்காலத்தில் வாழ்ந்தவர்கள் அதனைக் “கந்தசாமி“ என்றே புரிந்து சரியாகப் படித்தார்கள்.
இரண்டாம் கட்ட வளர்ச்சி நிலையில் அதாவது, பொ.யு.மு. ஐந்தாம் நூற்றாண்டு முதல் பொ.யு.மு. இரண்டாம் நூற்றாண்டு வரையில் தமிழி எழுத்தில் கந்தசாமி என்ற சொல்லினை எழுதினால் அதனைக் “கநதசாமி“ என்றே படிக்கநேரிடும். அக்காலத்தவர்கள் அதனைச் சரியாகவே படித்தார்கள்.
மூன்றாம் கட்ட வளர்ச்சி நிலையில் அதாவது, பொ.யு.மு. ஒன்றாம் நூற்றாண்டு முதல் பொ.மு. மூன்றாம் நூற்றாண்டுவரையில் தமிழி எழுத்தில் கந்தசாமி என்ற சொல்லினை எழுதினால் அதனைக் “கந்தசாமி“ என்று மட்டும் படிக்கமுடிந்தது. அவர்களும் அவ்வாறே படித்தார்கள். அதனால், தமிழி எழுத்துவடிவம் தன்னுடைய மூன்றாம் கட்ட வளர்ச்சி நிலையில் செம்மையுற்றது என்று உறுதிபடுத்தலாம்.
மொழிகள் பல – எழுத்துரு ஒன்றே
அக்காலத்தில் எழுத்துவழக்கில்லாத பல மொழிகள் தமிழி எழுத்தினையே தமது எழுத்துவடிவமாகக் கொண்டிருந்தன. வடஇந்தியப்பகுதிகளில் வாழ்ந்தவர்கள் பிராகிருத மொழியைப் பேசினாலும் அவர்களுடைய மொழியைத் தமிழி எழுத்துவடிவிலேயே எழுதியுள்ளனர். அங்குக் கண்டறியப்பட்ட பழைய கல்வெட்டுக்கள் அனைத்தும் தமிழி எழுத்துவடிவில் எழுதப்பெற்றவையே.
அசோகர் தமது பிராகிருத மொழி மற்றும் பாலி மொழிக் கல்வெட்டுக்களைத் தமிழி எழுத்துவடிவிலேயே எழுதினார். காரணம் இந்திய அளவில் பல மொழி பேசுவோரும் அறிந்த எழுத்துருவாகத் தமிழி இருந்துள்ளது. அதாவது, இப்போது உலக அளவில் ஆங்கில எழுத்துரு இருப்பதுபோல.
பதினெட்டுள் ஒன்று
பொ.யு.மு. மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பெற்ற “சமவயங்க சுத்தா“ என்ற சமணசமய நூல் அக்காலத்தில் இந்தியாவில் வழக்கிலிருந்த 18 வகையான எழுத்துவடிவங்களைப் பட்டியலிட்டுள்ளது.[5] அவற்றுள் ஒன்று தமிழி.
பொ.யு.மு. 168 இல் எழுதப்பெற்ற “பன்னவயங்க சுத்தா“ என்ற சமண சமய நூலும் அப்பதினெட்டு எழுத்துவடிவங்களுக்குரிய பெயர்களைக் குறிப்பிட்டுள்ளது.
அவை 1.பம்பி, 2.யவநாளி, 3.தொசபுரியா, 4.கரோத்தி, 5.புக்க ரசரியா, 6.போகவையா, 7.பஹாரையா, 8.உய-அம்த ரிக்கியா, 9.அக்கரபித்தியா, 10.தேவானையா, 11.நினித்யா, 12.அம்கலிபி, 13.கணியலிபி, 14.கம்தவ்வ-லிபி, 15.ஆதம்சலிபி, 16.மஹேசரி. 17.தமிழி, 18.பொலிம்தி என்பனவாகும். இந்நூலில் இவ்வெழுத்துகள் அவை தோன்றிய காலத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்படவில்லை. அவ்வாறு வரிசைப்படுத்தப்பட்டிருந்தால் தமிழி எழுத்து வடிவம் முதலாவதாகச் சுட்டப்பட்டிருக்கும்.
இந்திய எல்லையைக் கடந்த தமிழி எழுத்து
தாய்லாந்து நாட்டில் குவான் லுக் பட் என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஓர் உரைகல்லில் தமிழி எழுத்து பொறிக்கப்பட்டிருந்தனைக் கண்டுபிடித்துள்ளனர். அவ்உரைகல்லின் காலம் பொ.யு.மு. நான்காம் நூற்றாண்டு ஆகும்.
இலங்கையில் கந்தரோடையில் கண்டெடுக்கப்பட்ட கருப்பு – சிவப்பு மட்பாண்டங்களில் தமிழி எழுத்தினைக் கண்டுள்ளனர். இதன் காலம் பொ.யு.மு. மூன்றாம் நூற்றாண்டாகும்.
அதே நாட்டில் திசமகாராமையில் அதே காலகட்டத்தைச் சார்ந்த கருப்பு – சிவப்பு மண் தட்டில் தமிழி எழுத்தினைக் கண்டுபிடித்துள்ளனர்.
அதே நாட்டில் பூநகரியில் பொ.யு.மு. இரண்டாம் நூற்றாண்டுக்குரிய ஒரு மட்பாண்டத்தில் தமிழி எழுத்தினைக் கண்டுள்ளனர்.
தாய்லாந்து நாட்டில் அதே காலகட்டத்தைச் சார்ந்த ஒரு மட்பாண்டத்தில் தமிழி எழுத்தினைக் கண்டுபிடித்துள்ளனர்.
தமிழி எழுத்தில் “பானை ஒறி“ என்று எழுதப்பெற்ற பொ.யு.மு. முதல் நூற்றாண்டிற்குரிய ஒரு சாடியினை எகிப்து நாட்டில் உள்ள லெக்குஸ் லிமன் என்ற இடத்தில் கண்டுபிடித்துள்ளனர்.[6]
அதே நாட்டில் பெரின்ஸ் ரொக்ளோடிசியா என்ற இடத்தில் அதே கால கட்டத்தைச் சார்ந்த ஒரு சாடியில் தமிழி எழுத்தில் எழுதப் பெற்ற ஒருவாசகத்தைக் கண்டறிந்துள்ளனர்.
ஓமன் நாட்டில் அதே கால கட்டத்தைச் சார்ந்த ஒரு பானை ஓட்டுத்துண்டில் “ணந்தை கீரன்“ என்று தமிழி எழுத்தில் எழுதப்பட்ட ஒரு சொல்லினைக் கண்டுபிடித்துள்ளனர்.
வெளிநாட்டவரின் வருகையாலும் தமிழ்நாட்டவரின் வெளியுறவு நடவடிக்கைகளாலும் கடல் வணிகத்தின் வளர்ச்சியாலும் இவை சாத்தியப்பட்டுள்ளன.
புகழ்பெற்ற தமிழிக் கல்வெட்டுகள்
மிகப்பழமையான தமிழிக் கல்வெட்டுகள் ஆதிச்சநல்லூரிலும் மாங்குளத்திலும் கிடைத்துள்ளன. இவற்றின் காலம் பொ.யு.மு. ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன். இவற்றிற்கு அடுத்தபடியாகத் தொல்நிலையில் உள்ளவை புலிமான்கோம்பை, தாதப்பட்டி கல்வெட்டுகளாகும். இவற்றின் காலம் பொ.யு.மு. நான்காம் நூற்றாண்டுக்கு முன். அதற்கு அடுத்தது சித்தன்னவாசல் குகைக் கல்வெட்டுகள். இவற்றின் காலம் பொ.யு.மு. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்.
சித்தன்னவாசல் குகைக் கல்வெட்டு, “எருமி நாட்டுக் குமுழூர் பிறந்த காவுடி ஈதென்கு சிறுபோவில் இளயர் செய்த அதிடனம்“ என்ற செய்தியை வழங்குகிறது.[7] இதிலுள்ள “காவுடி“ என்ற சொல் “காவிதி“ என்ற ஒரு பட்டப்பெயரினைக் குறிக்கின்றது. இப்பட்டப்பெயர் சங்க இலக்கியத்தில் இடம்பெற்றுள்ளது.
ஜம்பையில் கண்டறியப்பட்ட கல்வெட்டு தகடூரை ஆண்ட அதியமான் நெடுமான் அஞ்சியின் காலத்த்தாகும். இக்கல்வெட்டில் அதியமான் நெடுமான் அஞ்சியை “சதியபுதோ“ என்று குறிப்பிட்டுள்ளது. வட இந்தியாவில் மௌரியராட்சியின் போது அசோகர் உருவாக்கிய கல்வெட்டில், தன் அண்டைநாட்டு அரசர்கள் பற்றிய குறிப்பில், “சோழர், பாண்டியர், சத்யபுத்ரர், கேரளபுத்ரர்“ என்று உள்ளது. ஆக, அசோகர் குறிப்பிடும் “சத்யபுத்ரர்“ என்ற சொல் “சதியபுதோ அதியமான் நெடுமான் அஞ்சி“யைத்தான் குறிக்கிறது என்று உறுதிப்படுகிறது. அப்படியென்றால், பொ.யு.மு. மூன்றாம் நூற்றாண்டில் அதியமான் நெடுமான் அஞ்சி தமிழகத்தின் மூவேந்தர்களுக்கு இணையாக ஆண்டுவந்தமையை அறியமுடிகிறது.
ஜம்பைக் கல்வெட்டு திருக்கோயிலூர்க்கு அருகில் கிடைத்திருப்பதால், “அதியமான் நெடுமான் அஞ்சி திருக்கோயிலூரை ஆட்சிபுரிந்த மலையமான் திருமுடிக்காரியை வென்றதாக“ இலக்கியங்கள் குறிப்பிடும் செய்தி கதை அல்ல – நிஜம் என்று உறுதிபடுத்தியுள்ளது.
அரச்சலூரில் கிடைக்கப்பெற்ற இசைக் கல்வெட்டில் இசைக்குறிப்புகள் பொறிக்கப்பட்டுள்ளன. அதன் அருகில், “எழுத்துப் புணருத்தான் மசிய் வண்ணக்கன் தேவன் ஙாத்தன்“[8] என்ற செய்தி உள்ளது. அதாவது, “மசிய் வண்ணக்கன் தேவன் இவ் இசை எழுத்துகளைக் கல்லில் செதுக்கினார்“ என்ற பொருளினைத் தருகிறது. தமிழரின் இயல் (இலக்கணம், இலக்கியம்) மட்டுமல்ல இசையும் பொ.யு.மு. முதல் நூற்றாண்டிற்கு முற்பட்டது என்பது தெளிவாகிறது. குறிப்பாக, அவ் இசை “தமிழிசை“ என்பதனையும் நாம் நினைவில் நிறுத்தவேண்டும். இக்கல்வெட்டிற்குப் பிற்பட்டதே சிலப்பதிகாரம். அதில் உள்ள அரங்கேற்றுக்காதை தமிழரின் இசைப் புலமைக்கும் கூத்து நுட்பத்திற்கும் ஓர் உரைகல்.
முக(ம்)வரி மாறிய தமிழி
தமிழி என்பதனைக் காலப்போக்கில் தமிழ்பிராமி எழுத்து, தொல்தமிழ் எழுத்து, பண்டைத்தமிழ் எழுத்து, சங்கத்தமிழ் எழுத்து, தென்னிந்திய பிராமி எழுத்து என்றெல்லாம் அழைத்துள்ளனர். இப்போது நாம் இதனைத் “தமிழ்“ என்று சுட்டுகிறோம்.
செம்மையுடைய எழுத்துவடிவமே சிறப்பெழுத்துகளைக் கொண்டிருக்கும். தொடக்க காலத்திலேயே “தமிழி“ தனக்குரிய சிறப்பெழுத்துகளான ழ,ள,ற,ன ஆகிய நான்கு எழுத்துகளையும் பெற்றித்திகழ்ந்தது. தமிழி செம்மையுடைய எழுத்துவடிவமுடையது. “அசோகன் பிராமி“ முதலானவை அனைத்தும் தமிழிக்குப் பிற்பட்டவையே – செம்மையற்றவையே.
தமிழி எழுத்தின் எழுத்து வடிவம் பொ.யு.மு. ஒன்றாம் நூற்றாண்டளவில் மாறத்தொடங்கியது. அது முதலில் வட்டெழுத்தாகவும் மிகப் பிற்காலத்தில் தற்போது உள்ள தமிழ் எழுத்தாகவும் மாற்றம் பெற்றது.
கண்ணெழுத்து (சிலப்பதிகாரம் – 5 11-112), கோலெழுத்து (திருக்குறள் – 1285), குயிலெழுத்து (அகநானூறு – 297) என்று தமிழி எழுத்து எழுத உதவும் கருவி, எழுதப்படும் பொருள் சார்ந்து பல பெயர்களைப் பெற்றது.
சமஸ்கிருத மொழியின் உச்சரிப்புகளைச் சரியாக எழுதுவதற்காக மட்டுமே கிரந்த எழுத்துக்களைத் தமிழர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
“தலை“ என்ற சொல்லுக்கு “முதல்“ என்றும் பொருளுண்டு. தமிழரின் முதல் எழுத்து வடிவம் “தமிழி“ என்பதால் அது தமிழரின் தலையெழுத்துதானே! இப்போதும் “தமிழி“ இருக்கிறது– “தமிழ்“ என்ற பெயரில். “தமிழி“ தன்னுடைய வரியெழுத்தில் மாற்றம் பெற்றாலும் தன் மரபுப் பண்பினைத் தக்கவைத்துக் கொண்டு, கொள்ளுத் தாத்தாவின் தனிப் பண்பினைப் பெற்ற எள்ளுப் பெயரனைப் (எள்ளுப் பேரன்) போலத் “தமிழ்“ என்ற எழுத்து நிலையிலுள்ளது.
0
ஆதாரம்
  1. இலக்குவனார், சி. பழந்தமிழ், ப. 30.
  2. மேலது.
  3. மீனாட்சி சுந்தரனார், தெ.பொ. தமிழ் மொழி வரலாறு, ப. 59.
  4. இராசேந்திரன், பொ., சாந்தலிங்கம், சொ., கல்வெட்டுக்கலை, ப. 19.
  5. T.V.Mahalingam, Early South Indian Paleography, Pp. 110-111.
  6. ta.wikipedia.org
  7. காசிநாதன், நடன., கல்லெழுத்துக்கலை, ப. 27.
  8. மேலது, ப. 28.

__________________
Admin


Guru

Status: Offline
Posts: 16711
Date:Apr 12, 2015
Permalink  
 

 சங்க காலம் / தேடல் – 4

சங்கத் தமிழர்கள் வந்தேறிகளா?
tsunamiதமிழ்நாட்டின் தெற்கேயுள்ள கன்னியாகுமரிக்கு அடுத்துள்ள கடல், சங்ககாலத்தில் இல்லை என்றும் அங்கு மிகப்பெரிய நிலப்பரப்பு இருந்தது என்றும் பின்னர் கட(ற்)ல்கோளால் (சுனாமி) அந்நிலப்பரப்பு கடலுக்குள் மூழ்கியது என்றும் அங்கு வாழ்ந்த தமிழர்கள் (சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தமிழர்கள்) தப்பிப் பிழைத்து இப்போது இருக்கும் தென் தமிழகப் பகுதியில் குடியேறினர் என்றும் செவிவழிச்செய்தி சார்ந்த வலுவான தொன்மக் கருத்து உள்ளது.
அப்படியென்றால், இப்போது இருக்கும் தென் தமிழகப் பகுதிகளுக்கு வந்த சங்கத் தமிழர்கள் அனைவரும் வந்தேறிகள்தானா? அவர்கள் கடல்கோளால் தப்பிப்பிழைத்து அகதிகளாகத்தான் இப்போது இருக்கும் தமிழகத்துக்கு வந்தார்களா? அப்படியானால் இப்போது உள்ள தமிழகம் அவர்களின் தாய்நிலம் இல்லையா? அவர்கள் இம்மண்ணின் மைந்தர்கள் அல்லரா? இவ்வினாக்களுக்குரிய விடைகளை நாம் சுனாமிகளின் பின்னணியில்தான் தேட வேண்டியுள்ளது.
அழிக்கும் கடற்பேரலைகள்
பொ.யு.மு. 426 ஆம் ஆண்டிலும் பொ.யு.மு. 365 ஆம் ஆண்டிலும் உலகில் ஏற்பட்ட சுனாமிகள் பற்றிய எழுத்தாதாரங்கள் கிடைக்கின்றன. பொ.யு. 1755, பொ.யு.1883, பொ.யு.1929, பொ.யு.1946, பொ.யு.1950, பொ.யு.1958, பொ.யு.1960, பொ.யு.1964, பொ.யு.1998, பொ.யு.1999, பொ.யு.2001, ஆகிய ஆண்டுகளில் உலக அளவில் சுனாமிகள் ஏற்பட்டுள்ளன. அவற்றின் பாதிப்பு பற்றிய விரிவான செய்திகளை அறியமுடிகின்றது.
தற்காலத் தமிழர்கள் அறிந்த சுனாமிகள் இரண்டு. ஒன்று, 22.12.1964 ஆம் நாள் தனுஷ்கோடியைத் தாக்கிய சுனாமி (ஆழிப் பேரலை). இரண்டு, 26.12.2004 ஆம் நாள் சென்னை உள்ளிட்ட கடலோரத் தமிழகத்தைத் தாக்கிய சுனாமி. இரண்டும் இப்போதும் நெஞ்சில் நிழலாடுகின்றன.
தமிழ் இலக்கியங்களில் உள்ள சில குறிப்புகள் பழந்தமிழகத்தைத் தாக்கிய ஒரு பெரிய சுனாமி பற்றிக் குறிப்பிட்டுள்ளது. இலக்கியம் என்றால் புனைவுதான், கற்பனைதான். அவற்றில் உள்ள செய்திகளின் மிகைப்படுத்தலை நாம் ஒதுக்கிவிடலாம். ஆனால், அச்செய்திகளின் மையத்தை நாம் புறக்கணிக்க முடியாது.
குமரிக் கண்டம் இருந்ததா?
குமரி (கன்னியாகுமரி) என்பது, சங்ககாலத்தில் நாஞ்சில் என்ற சிற்றூரினை உள்ளடக்கிய ஓர் ஊர். இப்போது பேரூராட்சியாக உள்ளது. அப் பழங்காலத்து நாஞ்சில் இப்போது வீரநாராயண மங்கலம் என்ற பெயரில் உள்ளது. நாஞ்சில் என்றால், கலப்பை என்று பொருள். கலப்பை வடிவில் உள்ள மலையினைக் குறிக்கிறது. அம்மலையைச் சுற்றியுள்ள நாட்டினை நாஞ்சில் நாடு என்கிறனர். அந்நாட்டின் தலைநகர் நாஞ்சில். இவ்வூர் பற்றிய குறிப்பு புறநானூரில் 137ஆவது பாடலில் உள்ளது.
இந்திய விடுதலையின்போது திருவதாங்கூருக்கு உட்பட்டிருந்த குமரி தமிழ்பேசும் பகுதியாக இருப்பதால் நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் தமிழகத்தோடு இணைந்த்து. இப்போது குமரி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது. இம்மாவட்டத்தில் பேசப்படும் தமிழ்மொழியினை “நாஞ்சில் தமிழ்“ என்றுதான் சுட்டுகிறோம்.
“நாஞ்சில்நாட்டின் கடற்கரையினைக் குமரிமுனைதான் இப்போது கிழக்கு, மேற்காகப் பிரித்துள்ளது. மேற்குக்கடற்கரையில் கடல் அரிப்பு மிகுதியாக உள்ளது. ஆதலால், கடற்கோளால் விழுங்கப்பட்ட பகுதி நாஞ்சில்நாட்டின் மேற்குக்கடற்பகுதியாக இருக்கலாம்“[1] என்பது சு.கி. ஜெயகரனின் கருத்து.
பழைய சுனாமி
சிலப்பதிகாரத்தின் காலம் பொ.யு. இரண்டாம் நூற்றாண்டு. சிலப்பதிகாரத்தில் உள்ள காடுகாண்காதையில் பழந்தமிழகத்தில் பாய்ந்த பஃறுளி ஆற்றினையும் பலமலைகளைத் தொடராக உள்ள குமரி எனும் மலையினையும் கடல் விழுங்கிய செய்தியைக் காணமுடிகின்றது. ஆக, ஒரு பெரும் நிலப்பரப்பும் அதில் பாய்ந்த ஆறும் நீள் மலையும் நீருள் ஆழந்த செய்தி புலனாகிறது. இது நிகழ்ந்தது அந்நூல் எழுதுவதற்கு ஏறத்தாழ நூறாண்டுகளுக்குள் முன் இருக்கலாம்.
குமரிக்கோடு பகுதியில் 49 நாடுகள் இருந்ததாகக் கூறுவர். இப்போது இருக்கும் நாடு என்ற சொல்லுக்கும் அப்போதிருந்த நாடு என்ற சொல்லுக்கும் நில அளவையில் மிகுந்த வேறுபாடுகள் உண்டு. நாடு என்றால் அக்காலத்தில் சிறிய அளவில் உள்ள நிலப்பரப்புதான். அதாவது, இப்போதுள்ள ஓர் ஊரினைப் போன்ற நிலப்பரப்பு.
வடபகுதியில் இருந்த குமரியாற்றுக்கும் தென்பகுதியில் உள்ள பஃறுளியாற்றுக்கும் இடைப்பட்ட தொலைவு 700 காதம் என்பர். ஒரு காதம் என்பது 1.1கி.மீ.[2] என்ற அளவில் மொத்தம் 770 கி.மீ. தூரம்தான். அதுவும் ஆறு வளைந்து நெளிந்து ஓடும் என்பதால் மொத்தத் தூரம் வடக்குத் தெற்காக 400கி.மீ. இருக்கலாம்.
குமரிக்குத் தெற்கே ஒரு கண்டம் இருந்தது என்று சொல்லப்படுகிறது. அது கடல்கோளால் நீருள் மூழ்கியது என்றும் கூறுகின்றனர். கடலுக்கு அடியில் இருப்பது நிலம்தான். அந்த நிலமெல்லாம் நீருள் மூழ்கிய நாடுகள் என்றோ நீருள் மூழ்கிய கண்டங்கள் என்றோ நாம் நம்புவதும் கற்பனைசெய்வதும் ஏற்புடையதல்ல.
குமரிக்கண்டம் என்ற கருத்து ஆங்கிலேயர்களால் கற்பனையில் உருவாக்கப்பட்டு பின்னர் அதனைத் தமிழர்கள் தங்களின் பழமைக்கு ஆதாரமான விவரித்துக்கொண்ட நீள்புனைவு என்பது சு.கி. ஜெயகரன் முதலானோரின் அசைக்கமுடியாத கருத்து.
கண்டம் அல்ல நிலத்துண்டம்
தற்போது இருக்கும் கன்னியாகுமரிக்கு அடுத்துள்ள கடற்பகுதியில் ஓர் ஊரினைப் போன்ற நிலப்பரப்பும் அதற்குள் திசை அளவில் 400கி.மீ. நீளமுள்ள ஓர் ஆறும் இருந்திருக்க வாய்ப்புள்ளது.
ஆக, ஒரு நிலத்துண்டு இருந்துள்ளது. அது கண்டம் அளவிற்கு இல்லை. காரணம், கண்டம் என்பது, “பெரும் நீர்ப்பரப்பால் பிரிக்கப்ட்ட பெரிய தொடர்ச்சியான நிலத் தொகுதிகளாகும்“[3] என்று கூறப்பட்டுள்ளது.
ஆக, குமரிக்கண்டம் என்று கூறுவது சரியன்று. குமரியின் தென் எல்லை ஓர் ஊரின் அளவில் நீண்டிருந்திருக்கலாம். அதனால்தான், சு.கி. ஜெயகரன் “குமரிக்கண்டம் இருந்ததா?“ என்பது பற்றிய ஆய்வு நூலில் தான் கண்டடைந்த முடிவினையே, உண்மையினையே அந்நூலுக்குத் தலைப்பாகக் “குமரி நிலநீட்சி“ என்று தலைப்பிட்டுள்ளார்.
பாண்டியனின் சங்கம்
அந்த நிலநீட்சிப்பகுதியினைத்தான் கடல் அழித்தது. அங்குள்ள மணவூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சிபுரிந்து வந்த பாண்டிய மன்னன் சங்கம் வைத்துத் தமிழாராய்ந்து வந்தான். அப்பகுதி கடலால் மூழ்கடிக்கப்படவே இப்போது இருக்கும் தமிழகத்தை அதாவது, அப்போது சேரர்களும் சோழர்களும் ஆட்சிபுரிந்துவந்த, தமிழர்கள் வாழ்ந்த, தமிழகத்தைக் கைப்பற்றி ஆளத் தொடங்கினான். அங்கும் தன் வழமைப்படிச் சங்கம் அமைத்துத் தன் தமிழாய்வுப் பணியினைத் தொடர்ந்துள்ளான்.
அவன் தன்னுடைய தொடர் படையெடுப்பால் கடற்கோளால் தான் இழந்த தென் தமிழகத்திற்கு ஈடாக “வடக்கே கங்கையையும் இமயத்தையும் கைப்பற்றினான்“ என்ற செய்தியைச் சிலப்பதிகாரம் காடு காண்காதை புலப்படுத்துகிறது. ஆக, பாண்டியன் தன் ஆட்சிக்குட்டபட்ட பகுதிகளில், குறிப்பாகத் தமிழர்கள் வாழும் பகுதிகளில் சங்கம் அமைத்துத் தமிழாராய்ந்துள்ளான்.
குறிப்பாகப் பாண்டியர்கள் ஆட்சிகுட்பட்ட தமிழர் பகுதிகளில் சங்கம் என்ற அமைப்பு முனைப்புடன் செயல்பட்டுள்ளது. ஆதலால்தான் மதுரை, வையை, கூடல் என்ற சொற்களோடு சங்கம் அல்லது தமிழ்மொழி பற்றிய செய்திகளை இணைத்துப் பிற்கால இலக்கியங்கள் சிறப்பித்துள்ளன. சான்றுகள் சிறுபாணாற்றுப்படை – 65, 66, பரிபாடல் – 6. இவற்றைத் தமிழ்ச் சங்கத்துக்கும் இவற்றுக்குமான உறவாகவோ அல்லது தமிழ் மொழிக்கும் இவற்றுக்குமான உறவாகவோ கருத்தில்கொள்ள வாய்ப்புள்ளது.
மணவூரை அவன் கடல்கோளில் இழப்பதற்கு முன், தமிழகத்தில் எந்த மன்னரும் சங்கம் வைத்துத் தமிழாராயவில்லையா? என்ற வினா எழுகின்றது.
மூச்சங்கங்களும் முழுப்பொய்களும்
பொ.யு. எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்த இறையனார்க் களவியலுரை முதலான தமிழ் நூல்களிலும் பொ.யு. 10ஆம் நூற்றாண்டினைச் சார்ந்த சின்னமனூர்ச் செப்பேட்டிலும் சங்ககாலத்தில் முதல், இடை, கடை என்ற மூன்று சங்கங்கள், மூன்று வேறுபட்டக் காலகட்டத்தில், மூன்று வேறுபட்ட நிலப்பரப்பில், மூன்று வேறுபட்ட சான்றார் கூட்டத்தில் இருந்ததாகக் தெரிவித்துள்ளன. அந்நூல்கள் கூறும் காலகட்டமும், மன்னர் மற்றும் புலவர் கூட்டங்களும் ஏற்புடையனவாக இல்லை. அவை தமிழையும் தமிழரையும் மிகைப்படுத்திப் புகழும் நோக்கோடு எழுதப்பெற்ற புனைவுகளே. டாக்டர் எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார், ஏ.கே. நீலகண்ட சாஸ்திரி, இரா. இராகவ ஐயங்கார், தெ.பொ.மீனாட்சி சுந்தரம் ஆகியோர் இப்புனைவினை முழுவதும் நம்பாவிடினும் “ஒரு சங்கமாவது இருந்திருக்கக் கூடும்“ [4] என்று கருதுகின்றனர்.
பத்துப்பாட்டிலும் எட்டுத்தொகையிலும் (பிற்காலத்தொகுப்பு நூல்கள் தவிர) மூச்சங்கங்கள் பற்றிய எக்குறிப்பும் இல்லை. “புணர்க்கூட்டு“ என்ற சொல் மதுரைக்காஞ்சியில் (762) காணப்படுகின்றது. மன்றம், தமிழ்நிறை என்ற சொற்களாலும் “சங்கம்“ என்ற அமைப்பு பிற இலக்கியங்களில் சுட்டப்பட்டுள்ளது.
முச்சங்க கால நூல்களான அகத்தியம், கலி, குருகு, வெண்டாளி, பெருநாரை, பெருங்குருகு, பஞ்ச பாரதீயம், பரதம், முறுவல், சயந்தம், குணநூல், செயிற்றியம் போன்றனவற்றுள் எவையும் முழுமையாகக் கிடைக்கப்பெறவில்லை. இவையெல்லாம் கற்பனை நூல்களோ என்றும் எண்ணத்தோன்றுகிறது.
மதுரையில் சங்கம் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. அதனை மதுரா, உத்தர மதுரை, தென்மதுரை, வட மதுரை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.[5] அக்காலத்தில் மதுரைக்குக் “கூடல்“ என்ற பெயர்தான் இருந்துள்ளது. அதற்கு முற்பட்டக் காலத்தில் மதுரைக்கு “மதிரை“ என்ற பெயரே இருந்துள்ளது. இவற்றைக் கல்வெட்டாதாரங்கள் மெய்ப்பித்துள்ளன.
“முச்சங்கங்கள்“ என்ற மாயையை விரிவுபடுத்தி, ஸ்கை நலன் [6] என்ற ஒரு வலைத் தளத்தில் வரைபடத்துடன் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. முச்சங்கங்கள் பற்றி மாயையின் உச்சம் அச்செய்தி.
“முச்சங்கங்கள்“ என்ற மாயையை உடைத்தெறியும் ஆய்வுக்கட்டுரைகளுள் மூ. அய்யனார் எழுதிய “இறையனார் அகப்பொருளுரை முன்வைக்கும் முச்சங்கவரலாற்றை முன்வைத்துச் சில கருத்தியல்கள்“[7] என்ற கட்டுரை ஆகச்சிறந்தது.
“சங்கம் என்ற அமைப்பு இல்லவே இல்லை“ என்ற கருத்தினை கே.என். சிவராசபிள்ளையும் பி.தி. சீனிவாச ஐயங்காரும் முன்மொழிந்துள்ளனர். நான் அவர்களின் கருத்திலிருந்து முரண்படுகிறேன்.
தமிழகமும் சங்கமும்
எங்கெல்லாம் தமிழ் அறிந்த மன்னர்கள் ஆட்சிபுரிந்தனரோ, எங்கெல்லாம் தமிழ் அறிந்த உயர்குடியினர் வாழ்ந்தனரோ அங்கெல்லாம் புலர்வர் சென்று அவர்களைச் செய்யுட்களால் புகழ்ந்தும் போற்றியுமுள்ளனர்.
அப் புலவர்களின் கூட்டம் தங்களுக்குள் வாதிட்டும், புலமைப்போர் நடத்தியும் இருக்கலாம். “புலன் நாவுழவர் புதுமொழி கூட்டுண்ணும் புரிசைசூழ்“ (கலித்தொகை – 68) என்ற அடிகளால் புதிய செய்யுட் படைப்பினை மன்னர் உள்ளிட்ட சான்றார் அவையில் அரங்கேற்றம் செய்யும் மரபும் ஏறக்குறைய Public viva-vice போல இருந்துள்ளது. ஆக, அந்த அவையிலும் தமிழ்ச்செய்யுட்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன. சான்று தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்ட முறை.
ஆதலால், முச்சங்கம் என்று வரையறுப்பது எவ்வகையிலும் நியாயமில்லை. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பன்முகப்பட்ட சங்கங்கள் இருந்துள்ளன. அவை தமிழ்ச் செய்யுட்களைத் தகுதிப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளன என்பது என் கணிப்பு.
சங்க காலத்தின் இறுதி என்பது பொ.யு. இரண்டாம் நூற்றாண்டு என்பதும் சங்க காலத்தின் தொடக்கம் என்பது தமிழி எழுத்துருக்கள் பண்பட்ட காலமான பொ.யு.மு. எட்டாம் நூற்றாண்டு என்பதும் என் கணிப்பு.
- – -
  1.  ஜெயகரன், சு.கி., குமரி நிலநீட்சி, ப. 46.
  2. ஜெயகரன், சு.கி., குமரி நிலநீட்சி, ப. 30.
  3. Lewis, Martin W.; Karen E. Wigen,The Myth of Continents: a Critique of Metageography.p. 21
  4. http://www.tamilvu.org/courses/degree/a041/a0411/html/a04111l2.htm
  5. Sivrajapillai K.N., The Chronology of Early Tamils (1932)
  6. http://www.nalan.me/nalan.me.drupal/node/69
  7. http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=1902:2014-01-09-03-46-43&catid=2:2011-02-25-12-52-49&Itemid=19

__________________
Admin


Guru

Status: Offline
Posts: 16711
Date:Apr 12, 2015
Permalink  
 

கொள்ளையடித்தல்

சங்க காலம் / தேடல் – 5
மார்க்ஸியச் சிந்தனைச் சித்திரம்
20121129163414!Black_spear_detailகாரல் மார்க்ஸ், எங்கல்ஸ் முதலியோர் மனிதகுலத் தோற்றம் குறித்துச் சிந்தித்த சித்திரம் சங்கத் தமிழரின் வரலாற்றோடு ஒத்துள்ளது. அவர்கள் மார்க்ஸிய நோக்கில் மனித குல வளர்ச்சிப்பாட்டினை முன்வரைவு செய்தனர். அது சங்கத் தமிழரின் இனக்குழு நிலை வளர்ச்சியோடு துல்லியமாகப் பொருந்துகிறது.
மனிதர்கள் விலங்குகளோடு கலந்து வாழ்ந்த அந்த ஆதி இயற்கைச் சமூகத்தில் “வேட்டை“ மட்டுமே முதன்மையாக இருந்தது. பெரிய விலங்குகளை வளைத்து வேட்டையாடக் “கூட்டு வேட்டையும்“ தேவைப்பட்டது. வேட்டைக்காக இணைந்த மக்கள் தங்களுக்குள் வேட்டைப் பொருளினை ஓரளவிற்குச் சமமாகவே பகிர்ந்துகொண்டனர். ஆக, அக்காலத்திலே “பங்கீடும்“ அவர்களிடையே உருப்பெற்றுவிட்டது.
வேட்டையிலிருந்து வளர்த்தலுக்கு
வேட்டை உணவினை நாளும் தேடி அலையாமல் அவ் உணவினைத் தாமே பேணிப் பின் உண்ணும் திட்டம் காலச்சூழலில் ஏற்பட்டது. அவர்களின் வளர்ப்பு விலங்குகளாகப் பசுக்கள் இருந்தன.ஆடுகளும் இருந்துள்ளன. ஆனால், அவற்றை அவர்கள் பசுக்கள் அளவுக்கு முதன்மையாகக் கருதவில்லை. அவர்கள் முற்றிலுமாக வேட்டையைக் கைவிட்டு, தம் உணவினைத் தாமே வளர்க்கத் தொடங்கினர். அவற்றை மேய்ப்பதே அவர்களின் தொழிலாகியது. அவர்கள் பயறு, வரகு, தினை, கொள், அவரை, எள் ஆகியவற்றைப் பயிரிட்டு வேளாண்மைத் தொழிலிலும் ஈடுபட்டுள்ளனர்.
பசுக்களை வளர்க்கும் கூட்டங்கள் பெருகித் தனித்தனியே வாழத்தொடங்கியன. அக்கூட்டங்களுக்குரிய உடைமைப் பொருளாகப் – சொத்தாகப் பசுக்களே இருந்தன. ஆதலால்தான், “மனித குலத்தின் முதல் உடைமை பசுக்கள்“[1] என்று வெ.மு. ஷாஜகான் கனி குறிப்பிட்டுள்ளார். அவையே அவர்களின் அசையும் சொத்து. அவர்களின் பொருளாதாரமும் உணவாதாரமும் அவையே. அவற்றால் கிடைக்கப்பெறும் அனைத்து வகையான வளங்களும் (பால் உட்பட பிற அனைத்தும்) அவர்களுக்கு முதன்மையாக இருந்தன. ஆதலால், அச்சமூகச் சூழலில் பசுக்கள் முதன்மையிடத்தினைப் பிடித்தன.
வேட்டையிலிருந்து கொள்ளைக்கு
வேட்டையை மறக்காத அதாவது, வளர்த்தலில் நாட்டமில்லாத கூட்டம் வேட்டையைக் கொள்ளையாக மாற்றிக்கொண்டது. இது, மனிதகுல வளர்ச்சியில் ஏற்பட்ட மாபெரும் பிழை. சில வேடர்கள் ஆடுகளையும் மாடுகளையும் வளர்த்தமைகான சிறு தடயங்கள் புறநானூற்றின் 323 மற்றும் 325 ஆம் பாடல் அடிகளில் காணப்படுகின்றன. அவர்கள் தோரை, ஐவனம், தினை ஆகியவற்றைப் பயிரிட்டு வேளாண்மைத் தொழிலிலும் ஈடுபட்டுள்ளனர்.
பசுக்கூட்டத்தை ஆநிரைகள் என்பர். (ஆ – பசு. நிரை – கூட்டம்). ஆநிரைகளைக் கவரும் (திருடும்) கூட்டங்களும் (வேடர்) ஆநிரைகளை வளர்க்கும் கூட்டங்களுக்குச் (ஆயர்) சம அளவிலும் அவர்களுக்கு எதிர்நிலையிலும் இருந்தன. ஆயர் கூட்டத்தினர் காடுகளிலும் (முல்லைத்திணை), வேடர் கூட்டத்தினர் மலைகளிலும் (குறிஞ்சித்திணை) தங்களின் முகாம்களை அமைத்துக்கொண்டனர்.
பசுக்களைக் கொள்ளையடித்தவர்கள் மழவர், மறவர், எயினர், வேடர், குறவர் எனப் பல்வேறு குழுக்களாக இருந்தமையையும் பசுக்களை வளர்த்தவர்கள் ஆயர், கோவலர், இடையர், அண்டர், பூழியர், குடவர் எனப் பல்வேறு குழுக்களாக இருந்தமையையும்ச் சங்க இலக்கிய அடிகள் சுட்டியுள்ளன.
பசுக்களை வளர்த்த இக்கூட்டத்தாருக்குள்ளும் பசுக்களைக் கொள்ளையடிக்கும் வழக்கமும் இருந்துள்ள தகவலைப் புறநானூறு 257ஆவது பாடல் தெரிவித்துள்ளது. “உடைமை“ என்று வந்தபின்னர் அதனை எப்படியாவது அபரிமிதமாகப் பெருக்கும் போக்குகளுள் ஒன்றாகத்தான் இதனையும் நோக்கவேண்டியுள்ளது.
திருடுதலும் தடுத்தலும் (அல்லது) மீட்டலும்
வேடர்கள் ஆநிரைகளைத் திருடவருதலும் அவர்களிடமிருந்து அவற்றை ஆயர்கள் காத்தலும் ஆகிய இவ் இரு நிலைகளும் சங்கத்தமிழரின் தொடக்கக் காலத்தில் தவிர்க்கமுடியாத வாழ்வியல் நிகழ்வாக இருந்தன.
பின்னாளில், இத்திருட்டு (கொள்ளை) வீரம் சார்ந்ததாகக் கருதப்பட்டது. திருடுதலும் திருட்டினைத் தடுத்தலும் அல்லது திருடப்பட்டவற்றை மீட்டலும் வீரமாகவே போற்றப்பட்டன. திருடுதலை வெட்சித்திணை என்றும் திருட்டினைத் தடுத்தலை அல்லது பறிகொடுத்த ஆநிரைகளை மீட்டுவருதலைக் கரந்தைத்திணை என்றும் தமிழர்கள் புறத்திணைகளை வகுத்து வளர்த்தனர். இப்பாகுபாடு புறப்பொருள் வெண்பாமாலை என்ற பிற்கால இலக்கணநூலில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
களவும் கற்பும்
ஒவ்வொரு திணைக்கும் (திணை – ஒழுக்கம்) அகம், புறம் என்ற இரண்டு இணையான செயல்படு ஒழுக்க நிலைகள் உண்டு. அகத்திணை ஏழு என்றால் புறத்திணையும் ஏழு. குறிஞ்சித்திணைக்கு ஓர் ஆண் தான் விரும்பும் பெண்ணின் மனத்தினைக் களவாடுதல் (களவு – திருட்டு) அகத்திணையாகவும் உணவுக்காகப் பிறர் வளர்க்கும் ஆநிரைகளைக் களவாடுதல் புறத்திணையாகவும் அமைந்துவிட்டன.
முல்லைத்திணைக்குப் பெண் தன் கற்பினைக் காத்தல் (காத்தல் – பேணுதல்) அகத்திணையாகவும் தம் பொருளாதாரமான ஆநிரைகளைக் காத்தல் புறத்திணையாகவும் அமைந்துவிட்டன.
குறிஞ்சி என்ற அகத்திணைக்கு வெட்சி என்ற புறத்திணையை இணையாகக்கொள்வது தமிழர் வழக்கம். அதனைப் போலவே முல்லை என்ற அகத்திணைக்குக் கரந்தை என்ற புறத்திணை இணையாகக்கொள்ளலாம் என்பது என் கருத்து.
திருட்டும் வீரமும்
வேடர் முதலான இனக்குழு மக்கள், ஆயர் முதலான இனக்குழு மக்கள் மேய்க்கும் பசுக்கூட்டங்களைக் கண்காணித்துத் திட்டமிட்டுக் கூட்டமாகச் சென்று திருடும் அல்லது கொள்ளையிடும் வழக்கத்தில் சங்கத் தமிழரின் உடல்வலிமை வெளிப்படுத்தப்படுவதால் இது அக்காலத்தில் வீரமாகவே கருதப்பட்டது.
ஒரு வகையில் இதனைக் “கூட்டுவேட்டை“ என்று தமிழாய்வாளர்கள் கூறிக்கொண்டாலும் என் கணிப்பில் இது திருட்டுதான் – கொள்ளைதான்.
இத்திருட்டினைத் தடுப்பவர்களை அல்லது தங்களது ஆநிரைகளை இழந்தவர்கள் அவற்றை மீட்கப்போராடுவதனை வீரம் என்று கொள்ளலாம்.
சங்க இலக்கிய அடிகள் இத்திருட்டினை “ஊர்ப்பூசல்“, “ஆகோள்“, “ஆகோள் பூசல்“ என்று சுட்டியுள்ளன. அதாவது, “சண்டை“ என்ற பெயரில். இது போர் அல்ல.
இத்திருட்டினை நடத்தத் தலைமைதாங்கும் இனக்குழுத்தலைவனை “உரையன்“, “நெடுந்தகை“, “மதவலி“ என்று சங்க இலக்கிய அடிகள் அழைத்துள்ளன. இத்திருட்டிற்குத் துணைபோகும் வேடர்களை “மீளியாளர்“ என்றும் இத்திருட்டினைத் தடுக்கும் ஆயர்களை “மறவர்“ என்றும் அவ் இலக்கிய அடிகள் குறிப்பிட்டுள்ளன.
திருடலாம்
வேடர் இனக்குழு ஆண்கள் இத்திருட்டு நடவடிக்கைக்கு ஆயத்தமாவது குறித்துச் சங்க இலக்கிய அடிகள் பல உள்ளன. இவர்கள், காரை மரத்தின் பழம் போல் விளைந்த கந்தாரம் குடித்து, பச்சை இறைச்சி (பச்சூன்) அதாவது, அன்று கொல்லப்பட்ட விலங்கின் தசையை உண்டு, மது அருந்தி தெம்பாகச் சென்றுள்ளனர்.(புறநானூறு – 258, 269.) ஒருவிதத்தில் இது அவர்களுக்கு இறுதி உணவாகக் கூட இருக்கலாம் அல்லவா? கொள்ளை நிகழ்ச்சியில் இவர்கள் பிடிபட்டு இறக்கவும் வாய்ப்புள்ளதே!
திருடும் வெட்சியினர் வில்லையும் அம்பினையும் பயன்படுத்தியுள்ளனர். (புறநானூறு–259.) இவர்கள் பசுக்களைக் கொள்ளையடித்து வெற்றியுடன் வரும்போது அதனைக் கொண்டாடுவதற்காக, கொள்ளையடித்துக் களைத்துவருபவர்களுக்கு வழங்குவதற்காக முதிய சாடியில் “கள்“ நிறைத்து வைத்துள்ளனர். (புறநானூறு – 258.) அதுமட்டுமல்ல, தங்கள் (கொள்ளைத்) தலைவனை வரவேற்க ஊரில் பந்தலிட்டு, புதுமணல் பரப்பி, கள், இறைச்சி படைத்துள்ளனர். துடிப்பறையை முழக்கயுள்ளனர்.
அக்காலத்தில் விழா கொண்டாடப் “புதுமணல் பரப்பும் வழக்கம்“ இருந்துள்ளது. அக்காலத் திருமணம் பற்றிக் கூறும் அகநானூற்றின் 86 மற்றும் 136 ஆவது பாடல்களில் புதுமணல் பரப்பும் வழக்கம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக, அவர்கள் கொள்ளையை விழா போலக் கொண்டாடியுள்ளனர்.
வெட்சியினர் நள்ளிரவில் பதுங்கிச்சென்று ஆநிரைகளைக் களவாடி விடிவதற்குள் தம் இருப்பிடத்திற்கு வந்துசேர்கின்றனர். வந்தவுடன் அவற்றைப் பகிர்ந்துகொள்கின்றனர். அதற்குக் காரணங்கள் இரண்டு என்பது என் கருத்து.
ஒன்று – தன்னை நம்பியிருக்கும் கூட்டத்திற்கும் தன்னோடு திருட்டுத்தொழிலுக்கு உடந்தையாக இருந்த நண்பர்களுக்கும் உள்ள உணவுத்தேவைகளை உடனே பூர்த்திசெய்யும் உபசரிப்பு எண்ணம்.
இரண்டு – கொள்ளையடித்து வந்த ஆநிரைகளை மீண்டும் கூட்டமாக வைத்திருந்தால் கரந்தையர் வந்து அவற்றைக் கைப்பற்றிச் செல்ல எளிதாகிவிடும் என்ற எச்சரிக்கை எண்ணம்.
மீட்கலாம்
கொள்ளையடிக்கப்பட்ட ஆநிரைகளை மீட்டுவரச் செல்லும் ஆயர் வீரனுக்கு ஆயர் குழுவினர் “கரந்தைமாலை“யை அணிவித்து அனுப்புவதனைப் புறநானூறு – 280 ஆவது பாடல் குறிப்பிட்டுள்ளது.
திருட்டினைத் தடுக்கும் அல்லது திருடப்பட்டவற்றை மீட்டுவரும் கரந்தையினர் வாள்களைப் பயன்படுத்தியுள்ளனர். இதனைப் புறநானூறு 259ஆவது பாடல் குறிப்பிட்டுள்ளது.
அவன் அப்போரில் வீரமரணமடைந்துவிட்டால் அவனுக்கு நடுகல் நட்டு, அந் நடுகல்லுக்குப் “படலை மாலை“யைச் சூட்டி வழிபடும் மரபு இருந்துள்ளது. புறநானூறு – 265.
அறிவொளி
வெட்சியினரான வேடர்களைக் கல்வியறிவற்றவர்களாகப் புறநானூறு 263ஆவது பாடல் குறிப்புணர்த்தியுள்ளது. அப்படியென்றால், கரந்தையினர் கல்வியறிவுடையவர்களா? ஆம். அவர்கள் ஆநிரையைக் காக்க அல்லது பறிகொடுத்த ஆநிரையை மீட்டுவர நிகழ்த்தப்பட்ட கரந்தைப் பூசலில் உயிர்துறந்த வீரர்களுக்கு நடுகல் நட்டு வழிபட்டுள்ளனர். (புறநானூறு – 260) அந்த நடுகல்லில் இந்த நபர், இந்த இடத்தில், இவர்களுடன் நடைபெற்ற ஆகோள் பூசலில் வீரமரணமடைந்தார் என்ற செய்தியினைத் “தமிழி“ எழுத்தில் எழுதியுள்ளனர். (புறநானூறு – 260). இவற்றைப் பற்றி ராஜ் கௌதமன், “பெருங்கற்காலப் பண்பாட்டின் பிற்பட்ட அம்சம் போலத் தெரிகிறது“[2] என்று குறிப்பிட்டுள்ளார். உண்மைதான். சங்ககாலத்தின் தொடக்கத்திலிருந்து இந்த முறை தொடர்ந்து வந்துள்ளது. முடிமன்னர் காலத்தில் இது சடங்காக மாற்றப்பட்டுள்ளது என்பது என் கணிப்பு.
திருடுதல் ஒரு சடங்காக மாற்றப்படுதல்
இனக்குழு நிலை நலிவடைந்து அதாவது, பெருங்கற்கால நாகரிக எச்சங்கள் முற்றிலும் மறைந்து முடிமன்னராட்சி மலர்ந்தபோது, இத்திருட்டும் திருட்டினைக் காத்தலும் அல்லது பறிகொடுத்த பசுக்கூட்டத்தை மீட்டலுமாகிய வெட்சியும் கரந்தையும் பெரும்போருக்கு முன் நிகழ்த்தப்படும் ஒரு சடங்காகக் கைக்கொள்ளப்பட்டன.
இங்குப் பசுக்களைத் திருடுதல் “கவர்தல்“ என்ற சொல்லாலும் பசுக்களைக் கவரச்செல்லும் வீரர்கள் வெளிப்படுத்தும் வீரம் பூசல் என்று அழைக்கப்படாமல் “போர்“ என்ற சொல்லாலும் புலவர் மரபினரால் குறிக்கப்பட்டுள்ளன.
அதாவது, முடிமன்னர்கள் வேடர் முதலான இனக்குழு மக்களின் தலைவர்களை அழைத்து தம் எதிரி நாட்டிலுள்ள பசுக்கூட்டங்களைக் கவர்ந்து வர (கொள்ளையிட) ஆணையிட்டுள்ளனர். இதற்கு, “வேந்து விடு தொழில்“ என்று பெயர். “பெரும்போரில் ஆநிரைகள் அழியாமல் காத்தல் வேண்டும்“ என்ற உயிர்நேய நோக்கோடு அச்சடங்கு நடத்தப்பட்டுள்ளது என்று கருதவேண்டும்.
அச்சடங்கின் ஒரு பகுதியாகப் பசுக்கூட்டத்தினைக் கவரச்செல்லும் (திருட்டு அல்ல) வீரர்கள் வெட்சிப்பூவையும் திருட்டினைக் காக்கும் அல்லது திருடப்பட்ட பசுக்களை மீட்கும் வீரர்கள் கரத்தைப்பூவையும் சூடும் வழக்கம் ஏற்பட்டது. இவை அச்சங்கிற்கான அடையாளப் பூக்களாக மாறின.
முடிமன்னர்கள் வெட்சிவீரர்கள் கைப்பற்றி வந்த பசுக்கூட்டங்களைத் தாமே வைத்துக்கொள்ளாமல் வெட்சித்தலைவனுக்கும் அவனோடு சென்று வெட்சிப் போரினை (இது பூசல் அல்ல) நிகழ்த்த உறுதுணையாக இருந்த வெட்சிவீரர்களுக்கும் அவர்களுக்குரிய வரிசை அறிந்து பங்கிட்டுக்கொடுத்தனர். இது அவர்களுக்குரிய பரிசு அல்ல ஊதியம் என்று கருதவாய்ப்புள்ளது. அதாவது இத்தகைய இனக்குழு வீரர்களைத் தமது அடியாட்களாக மட்டும் (படைவீரர்களாக அல்ல) முடிமன்னர்கள் பயன்படுத்திக்கொண்டனர்.
மார்க்ஸிய நோக்கில் இந்த வெட்சி வீரர்களின் வாழ்க்கையை ஆராயும்போது, இவர்களின இந்நிலைக்கு “உடைமைச் சமூகத்தின் பேராசையே காரணம்“ என்று எண்ணத்தோன்றுகிறது. மலைகளில் வேட்டையாடும் வேடர்கள் காடுகளில் கொள்ளைக்காரர்களாக மாறி, பின்னர் முடிமன்னர்களுக்கு அடியாட்களாக மாறிவிட்டது காலப்பிழைதான்.
- – -
  1. ஷாஜகான் கனி, வெ.மு., “மனிதகுல வரலாறும் தொல்காப்பியமும்“, ஆய்வுக்கோவை – 2006, ப. 2346.
  2. ராஜ்கௌதமன், ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும்,ப.13.

__________________
Admin


Guru

Status: Offline
Posts: 16711
Date:Apr 12, 2015
Permalink  
 

பேயும் கடவுளும்

சங்க காலம் / தேடல் 6
மரணம் தந்த வரமும் சாபங்களும்
Demon-Dracula-HDதொல்குடித் தமிழர்கள் எதிர்கொண்ட முதல் மரணம் அவர்களுக்குள் இரண்டு வித அச்சங்களை உருவாக்கியது.
அச்சம் – 1. எல்லோரும் இறந்துவிடுவார்களா?
அச்சம் – 2. இறந்த பின்னர் என்னாவார்கள்?
அவர்கள் இவற்றைப் புரிந்துகொள்ளுவதற்கு இரண்டு மூடநம்பிக்கைகள் தடையாக இருந்தன.
மூடநம்பிக்கை – 1. இறந்தோர் உயிர்பெறுவர்.
மூடநம்பிக்கை – 2. இறந்தவர்கள் ஆவிகளாக நம்மைச் சுற்றியே வாழ்கிறார்கள்.
தொடர்ந்து பல மரணங்களைப் பார்த்த பின்னரும் அவர்களுள் ஒருவரும் உயிர்பெறவில்லை என்பதனை உணர்ந்த பின்னரும்கூட அவர்கள் இந்த மூடநம்பிக்கையை விட்டு மீளவில்லை. இப்போதும்கூடத்தான்.
இதன் தொடர்ச்சியாக அவர்கள், “நம்மவர்களின் ஆவிகள் நமக்கு நன்மை செய்யும். நமது எதிரிகளின் ஆவிகள் நமக்குத் தீமை செய்யும்“ என்றும் கருதினர். எதிரிகளின் ஆவிகளைப் “பேய்கள்“ என்று கருதினர்.
எதிரிகளிடமிருந்து தப்புவதும் அவர்களைக் கொல்வதும் தமிழர்களுக்கு எளிதாகவே இருந்தன. ஆனால், எதிரிகளின் ஆவிகளிடமிருந்து (பேய்களிடமிருந்து) தப்புவதும் அப்பேய்களை அழிப்பதும் அவர்களால் முடியாததாக இருந்தன. அந்த மனக்குழப்பம் அவர்களை நிலைகுலையச் செய்தது. அவர்கள் அவற்றைப் போக்கப்(நீக்கப்) பல மந்திரங்களையும் சடங்குமுறைகளையும் கைக்கொண்டனர். ஆனால், அவை அவர்களின் மனக்குழப்பத்தைச் சிறிதும் குறைக்கவில்லை. அவர்களுக்கு வலிமையான, நம்பகமாக ஓர் ஆவி தேவைப்பட்டது. அவர்கள் சிந்தித்தார்கள். “கடவுள்“ என்ற கருத்தாக்கத்தின் வழியாக அவர்களுக்கு நல்ல ஆவிகள் பல கிடைத்தன.
சங்கத் தமிழருக்குள் ஏற்பட்ட “பேய்“ என்ற சிந்தனை உருவாக்கமே, அவர்களைக் “கடவுள்“ என்ற ஒரு கருத்தாக்கத்தை உண்டாக்கத் தூண்டியது. “இறந்தோர் உயிர்பெறுவர்“ என்ற நம்பிக்கையே அவர்களிடையே “பேய்“ பற்றிய சிந்தனை விதையினை ஆழமாக ஊன்றியது.
மரணம் தந்த வரம் ஒன்று. அது, “இப்போது இருக்கும் ஒருவர் எப்போதும் இருக்கமாட்டார்“ என்ற நிலையாமைக் கருத்து. மரணம் தந்த சாபங்கள் இரண்டு. ஒன்று பேய். மற்றொன்று கடவுள். “பேய்“ என்பது தீய ஆவி. “கடவுள்“ என்பது நல்ல ஆவி. கிறித்துவர்கள் “பரிசுத்த ஆவி“ என்று கடவுளைக் கூறுவதை இங்கு ஒப்புநோக்கலாம். தொல்குடித் தமிழர் வளர்த்த இக் கடவுள் கோட்பாட்டினைச் சங்கத்தமிழர்கள் தங்களின் அச்சத்தின் உச்சியினாலும் கற்பனைத் திறத்தினாலும் பேருருவாக வளர்த்துக்கொண்டனர்.
ஆதிக் கடவுள்கள்
சங்கத் தமிழருக்கு இயற்கையே கடவுள். குறிப்பாக, இயற்கை தரும் மழையே அவர்களுக்கு எல்லாமுமாக இருந்தது. அந்த மழையினை உருவாக்க உதவும் கூட்டுழைப்புப் பருப் பொருள்களான மலை, கடல், கதிரவன், மேகம் ஆகிய நான்கும் அவர்களுக்குக் கடவுளாகவே தெரிந்தன. அவை, எந்நிலத்தில் உச்சம்பெற்றிருந்தனவோ (மலை – குறிஞ்சி, கடல் – நெய்தல், கதிரவன் – மருதம், மேகம் – முல்லை) அந்நிலங்களுக்குரிய கடவுளாகவே கருதப்பட்டன. இந்த நோக்கத்தில்தான் தொல்காப்பியர் பொருளதிகாரம் அகத்திணையியல் ஐந்தாவது நூற்பாவில்,
  1. மாயோன் (கருமை நிறம்)   – மேகம்  – முல்லை (காடுறை – கானுறை[ii]),
  2. சேயோன் (செம்மை நிறம்)  – மலை – குறிஞ்சி (மைவரை),
  3. வேந்தன் (தலைவன்)  – கதிரவன்   – மருதம் (தீம்புனல்),
  4. வருணன்  – கடல் – நெய்தல் (பெருமணல் – பெருமதில்[iii])
என நான்கு இயற்கைகளை நிலம்சார் கடவுளாக இலக்கணப்படுத்தியுள்ளார்.
இந்த இயற்கைப் பருப்பொருட்களுக்குச் சங்கத் தமிழர்கள் மனித உருவம் கொடுத்து மாயோன் – திருமால், சேயோன் – முருகன், வேந்தன் – இந்திரன், வருணன் என வழிபடத் தொடங்கினார்கள். அவர்களின் வழிபாடு சடங்குகள் சார்ந்து இருந்தது.
சங்ககாலச் சடங்குகள்
சங்ககாலத்தில் அகவன் மகள், கட்டுவிச்சி ஆகியோரின் குறிசொல்லும் செயல்கள், விரிச்சி கேட்டல், மழையை வருவித்தல், வெறியாடல், இயற்கைசார் வழிபாடுகள் முதலியன சடங்கு சார்ந்து இருந்துள்ளன. மந்திர உச்சரிப்பு இல்லாமல் சடங்கு இருந்திருக்குமா?
தொல்காப்பியம் செய்யுளியல் 175ஆவது நூற்பாவில் செய்யுள் வகையில் ஒன்றாக “மந்திரம்“ என்பது குறிப்பிட்டுள்ளது. செய்யுளைப் புலவர்கள் எழுதுவது வழக்கம். இவ்வகைச் செய்யுளைப் புலவர்கள் எழுதியதாகக் கருதமுடியாது. அப்படியானால் யார் எழுதியது?
அதே நூற்பாவில், “நிறைமொழி மாந்தர்“ என்ற சொல் காணப்படுகின்றது. நிறைமொழி மாந்தர் என்பவர் தலைமை பூசாரியாகவோ மந்திரவாதியாகவோ இருக்கலாம். அப்படியென்றால் இவ்வகைச் செய்யுளை அல்லது செய்யுற் கருத்துகளை இவர்கள் கூற, மற்றவர் எழுதியிருக்கக்கூடும். மந்திரத்தை “மறைமொழி“ என்று அந்நூற்பா குறிப்பிட்டுள்ளது. ஆதலால், இம் மந்திரங்கள் வேதத்துக்கு நிகரானவை என்பது புலப்படுகிறது.
மந்திரம் என்பது சடங்கில் பயன்படுத்தப்படுவது. ஆக, பூசாரி, மந்திரவாதி, மந்திரம், சடங்கு, வேதம் ஆகியன பற்றித் தொல்காப்பியர் குறிப்புணர்த்தியுள்ளார். அப்படியானால் இச் சடங்கும் மந்திரமும் பேய்களுக்கா? கடவுள்களுக்கா?
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
சங்க இலக்கியத்தில் காணப்படும் பெருவழக்கான சடங்கு “வெறியாடல்“. இதனைச் சங்க இலக்கியங்கள் பேய் ஓட்டுதல், பேய் விழா என்று குறிப்பிட்டுள்ளன. அதாவது, முருகன் இளம்பெண்ணின் மீது உறைந்ததாகக் கருதி (அணங்குதல்), அந்த முருகனைச் சமாதானப்படுத்தி, அப்பெண்ணிடமிருந்து விலக்குவதே இச்சடங்கின் நோக்கம்.
தலைவி காதல் வயப்பட்டு தன்னிலை மறந்து இருத்தலைத் தாய் தன் பெண் மீது ஏதோ தெய்வம் உறைந்துவிட்டதாகத் தவறாக நினைத்துவிடுகிறாள். அதாவது, தன் மகளைப் பீடித்தக் காதல் நோயைப் பேய் அல்லது தெய்வம் பற்றியதாகக் கருதிவிடுகிறாள். ஆக, ஒரு தவறான புரிதல்சார்ந்த சரியான சடங்குமுறையே வெறியாடல். இதுபற்றிக் குறுந்தொகை – 111,263, பரிபாடல் 5:13-15, ஐங்குறுநூறு – 243,245,248, நற்றிணை – 273, 282, அகநானூறு – 22, 98 ஆகிய இலக்கியச் செய்யுள்களில் காணமுடிகிறது.
இச்சடங்கினைக் கட்டுவிச்சியைக்கொண்டோ, வேலனைக்கொண்டோ நிகழ்த்தியுள்ளனர். அகநானூற்றின் 270ஆவது பாடலில் இச்சடங்கினை ஆடுமகள் நடத்தியதாகவும் குறிப்புள்ளது. இச்சடங்கில் குருதிப்பலியும் இடம்பெற்றுள்ளது. “வெறியாடல்“ முருகனுக்கு மட்டுமல்ல தொல்தாய்த் தெய்வமான கொற்றவைக்கும் நடத்தப் பெற்றுள்ளது.
குறிஞ்சித்திணைக்கு முருகன் மட்டுமல்ல கொற்றவையும் தெய்வமே. குறிஞ்சி நிலத்துக்கு அகத்திணையிலும் புறத்திணையிலும் தெய்வம் முருகன், புறத்திணையில் கொற்றவையும் தெய்வமாகக் கருதப்பட்டுள்ளது. அதாவது, “குறிஞ்சிதானே வெட்சியது புறனே“ என்ற அடிப்படையில் இதனைப் புரிந்துகொள்ளவேண்டும். குறிஞ்சித்திணையின் திரிபுதான் பாலை என்பதால் அங்கும் கொற்றவையே தெய்வமாகியது. ஒருவகையில் கொற்றவையின் புதல்வன்தான் முருகன்போலும். இதனைத் திருமுருகாற்றுப்படையின் 250 ஆவது அடியில் காணமுடிகின்றது. தெய்வங்களுக்குள் ரத்த உறவினைக் கற்பிதம்செய்துகொள்ளுதல் தொல்தமிழர் வழக்கம்.
தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் உள்ள 63ஆவது நூற்பாவின்படி, அகத்திணையிலும் புறத்திணையிலும் முருகனுக்கு வெறியாடல் சடங்கு நடத்தப்பெற்றுள்ளதை அறிய முடிகிறது. அகத்திணையில் வெறியாடலை நடத்தும் வேலன் “குறிஞ்சி“ப் பூவையும் புறத்திணையில் வெறியாடலை நடத்தும் வேலன் “காந்தள்“ பூவையும் சூடுவது மரபாக இருந்திருக்கலாம்.
குறிஞ்சித்திணைத் தெய்வங்களுள் ஒருவரான முருகனுக்கு இரண்டு வித பரிமாணங்களைச் சங்க இலக்கியங்களில் காணமுடிகிறது. அகத்திணைப் பாடல்களில் முருகன் ஒரு பேரழகன் – குசும்புக்காரன் – காதல் தலைவன் – காதலுக்குக் காவல்காரன் – காமக்கடவுள். புறத்திணைப் பாடல்களில் முருகன் ஒரு மாவீரன் – முரடன் – மூர்க்கன் – சினம் மிக்கவன் – போர்த்தலைவன் – போர்க்கடவுள் – வெற்றிக்கடவுள். இதற்குச் சான்றுகள் புறநானூறு – 14,16, அகநானூறு – 158,266, பதிற்றுப்பத்து – 26, மதுரைக்காஞ்சி – 181, பொருநராற்றுப்படை – 131 ஆகிய இலக்கியங்களின் செய்யுட்களில் உள்ளன.
ஜெய் காளி
பாலை நிலத்தின் தனிப்பெரும் கொடுந்தெய்வம் கொற்றவை. வெற்றிக்குரிய தெய்வம். “கொற்றம் தருபவள்“ என்பதால் இவளுக்குக் “கொற்றவை“ என்ற பெயர் ஏற்பட்டுள்ளது. அந்நிலம் சார்ந்துள்ள நல்லவர்களுக்கும் தீயவர்களுக்கும் இவளே தெய்வம். பாலைத் திணையில் பரவலாக இருக்கும் ஆறலைக் கள்வர்களாகிய எயினருக்குக்கும் வேட்டையாடும் வேட்டுவருக்கும் வெற்றியைத் தரும் தெய்வமாகவும் கொற்றவை இருந்திருக்கிறாள். ஆக, வேட்டைச் சமூகமாக இருந்த தொல்தமிழர்களின் ஆதித்தாய்த்தெய்வமே மறுஉருவில் கொற்றவையாக வணங்கப்பட்டுள்ளது. வேட்டைச் சமூகத்தினர் கொள்ளைச் சமூகத்தினராக மாறிய பின்னர் தங்களின் தெய்வத்தின் வடிவத்தையும் மாற்றிக்கொண்டனர்போலும். ஆநிரை கவரச்செல்லும் (திருடுதல்) எயினருக்கு அவள் வெற்றியைத் தருவதாகவும் அதற்குக் கைமாறாக அவர்கள் தம்மையே (நரபலி) பலியிட்டுக் கொண்டதாகவும் அறியமுடிகின்றது.
தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் 62ஆவது நூற்பா “கொற்றவை நிலை“ என்ற ஒரு புறத்திணைத் துறையினைச் சுட்டியுள்ளது. அது கொற்றவை வழிபாடு பற்றியதாக இருக்கலாம். கொற்றவை பற்றிய விரிவான தகவல்களைச் சங்க இலக்கியங்களின் வழியாகப்பெறஇயல்வதில்லை. ஆனால், சிலப்பதிகாரத்தில் வேட்டுவவரியில் கொற்றவை வழிபாட்டினை விரிவாக அறியமுடிகிறது.
“மால்“ என்ற திருமால்
முல்லை நிலத்தின் தனிப்பெருங்கடவுள் மாயோனாகிய மால் அல்லது திருமால். ஆய்ச்சியர் தலைவர் – கோவலர் அரசன் – ஆநிரைக் காவலன். கலித்தொகையின் முல்லைக்கலியிலும் பரிபாடலில் திருமால் வழிபாட்டினை விரிவாகக் காணமுடிகிறது. வேதங்களில் இடம்பெற்றுள்ள விட்ணுவின் சித்திரத்தினை முல்லைப்பாட்டில் மூவுலகை அளந்த திருமால் பற்றிய குறிப்புப் புலப்படுத்துகிறது.
ஆனால், பரிபாடல் தரும் திருமால் சித்திரம் சங்க இலக்கியத்தில் இல்லை. தொல்காப்பியர் குறிப்பிடும் தொல்தமிழரின் மாயோன் இப்போது திருமால். பரிபாடல் காட்டும் திருமால் வைணவ சமயத்தோற்றத்தின் முதன்நிலையிலுள்ள திருமால். அப்படியென்றால் திருமால் இருவரா? ஒருவர்தான். இது குறித்து ந. சுப்புரெட்டியார், “வேதங்களில் காண்ப்பெறும் மூன்று நீண்ட அடிகளை உடைய இறைவனாகக் கருதப் பெறும் விட்டுணுவைப் பற்றிய கருத்தும் மெய்ப்பொருளியல் சார்ந்த நாராயணனைப் பற்றிய கருத்தும் ஆயர் இனக்கடவுளான கிருட்டிணனைப் பற்றிய கருத்தும் இணைந்தே “திருமால் சமயம்“ உருப்பெற்றது“[iv]என்று கருத்துத் தெரிவித்துள்ளார். கால வளர்ச்சியில் மக்கள் மாயோனை வெவ்வேறுவிதமாகத் தரிசிக்கத் தொடங்கியதன் விளைவே இது.
சங்கத் தமிழர்கள் நடத்திய “குரவைக்கூத்து“ எனும் நிகழ்ச்சி திருமால் வழிபாட்டோடு நேரடித் தொடர்புடையது. இக்கூத்து பற்றிய சித்திரத்தினைச் சிலப்பதிகாரத்தின் ஆய்ச்சியர் குரவையிலும் காணமுடிகிறது. கலித்தொகையின் முல்லைக்கலியில் ஏறுதழுவுதல் நடைபெற்று முடிந்தவுடன் மக்கள் ஒன்றுகூடிக் “குரவைக்கூத்து“ நிகழ்த்தித் திருமாலை வழிபட்டதாகக் குறிப்புள்ளது.
சங்க இலக்கியத்தில் மருதநிலக் கடவுளான “இந்திரன்“ பற்றியும் நெய்தல் நிலக் கடவுளான “வருணன்“ பற்றியும் விரிவான தகவல்கள் இல்லை. சிலப்பதிகாரத்தில் உள்ள இந்திரனை மையப்படுத்திய இந்திரவிழாகாட்சியைத் தவிர வேறு பதிவுகள் கிடைக்கப்பெறவில்லை.
மனிதர்கள் உருவாக்கிய கடவுள்கள்
சங்கத் தமிழர்கள் பேய்களிலிருந்து தப்பிக்கவும் தங்களுக்கு ஏற்படும் இன்னல்களைப் போக்குவதற்கும் தங்கள் இனத்தவர் அல்லாத ஒரு தனித்த, பெரிய சக்தியின் பேருதவி தேவைப்பட்டது. அவர்கள் அறிந்தும் அறியாமலும் செய்யும் அனைத்து வகையான தவறுகளையும் பொருத்தருளும் அல்லது மன்னிக்கும் ஒரு பெரிய கருணையாளரின் துணை தேவைப்பட்டது. அதற்காக, அவர்கள் “கடவுள்“ என்ற கருத்தாக்கத்தை உருவ, அருவ, அருவுருவ அளவில் உருவாக்க முயன்றனர். அந்த முயற்சி முடிவற்றதாக அமைந்து, பின்னர் சமயமாகப் பெருகி நின்றது. ஆக, மனிதர்கள்தான் கடவுளையும் படைத்தனர்.
மனிதர்கள் பேயைக் கற்பனை செய்தனர்.அது அவர்களைப் பிடித்துக்கொண்டது. அதனை விரட்டக் கடவுளை உருவாக்கினர். இறுதியில் அவை இரண்டும் மனிதர்களைப் பிடித்துக்கொண்டன.
- – -
http://www.tamilvu.org/courses/degree/p104/p1043/html/p1043222.htm
[ii] http://thiruththam.blogspot.in/2009/04/blog-post_11.html
[iii] http://thiruththam.blogspot.in/2009/04/blog-post_11.html
[iv] சுப்புரெட்டியார், ந., வைணவச் செல்வம், ப. 35.

__________________
Admin


Guru

Status: Offline
Posts: 16711
Date:Apr 12, 2015
Permalink  
 

 அது ஒரு காதல் காலம்

சங்க காலம் / தேடல் - 07
காமத்திலிருந்து காதலுக்கு
...

[செய்தி கிளிப் செய்யப்பட்டது]  தகவல் முழுவதையும் பார்க்கவும்
பதிலளிக்க அல்லது முன்னனுப்ப, இங்கே கிளிக் செய்யவும்
15 ஜி.பை. இல் 1.02 ஜி.பை. (6%) ஐப் பயன்படுத்தியுள்ளீர்கள்
நிர்வகி
விதிமுறைகள் - தனியுரிமை
இறுதியாக கணக்கை இயக்கியது: 2 மணிநேரத்திற்கு முன்பு
விவரங்கள்
தமிழர்நாடு தகவல் திரட்டு நேரம் 8:27 AM
பகிர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

‹
›
முகப்பு
வலையில் காட்டு

என்னைப் பற்றி

தமிழர்நாடு தகவல் திரட்டு
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.