Wednesday, November 27, 2013
உலை வாயை மூட முடியுமா?.
(கதிர்வீச்சு கண்ணழகி ...ஹி...ஹி..!)
கி.பி 1986 ஆம் ஆண்டு முன்னால் சோவியத் ஒன்றியத்தில் இருந்த செர்நோபிள்(இன்றைய உக்ரெயின்),அணு மின்நிலையத்தில் ,அணு உலை நான்கில் பராமரிப்பு பணிகளின் போது ஏற்பட்ட "கவனக்குறைவால்" அணு உலை வெடித்து , பலத்த உயிர்ச்சேதமும், பெரும் அணுக்கதிர்வீச்சு மாசும் உருவானது அனைவருக்கும் நினைவிருக்கும்.
சரித்திரத்தில் மிகப்பெரிய அணு உலை விபத்தாக , செர்நோபிள் சம்பவம் கருதப்படுகிறது. அவ்விடத்தில் உள்ள செயல்படாத அணு உலை மூலம் இன்றும் கதிரியக்க பரவல் நடைப்பெறுவதால், அப்பகுதியே மனிதர்கள் வாழத்தகுதியற்றதாக கருதி " மனிதர்கள் இல்லா மண்டலமாக" அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பு:
----------------------------------------------------------
செர்நோபிள் அணு உலையை மையமாக வைத்து சுமார் 30 கி.மீ ஆரம் அளவில் "மனித சஞ்சாரமற்ற பிரதேசமாக " அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடத்தில் பெரும்பாலும் பைன் மரக்காடுகளே உள்ளன ,அவையும் கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்டு , வாழும் கதிரியக்க மரங்களாக உள்ளன.எனவே பைன் மரக்காட்டில் காட்டுத்தீ ஏற்படுமானால், அதன் மூலமும் கதிரியக்கம் காற்றில் பரவும் அபாயம் உள்ளதாம்.
இதற்காக சுமார் 80 தீயணைப்பு வாகனங்கள் எப்பொழுதும் தயாராக செர்நோபிள் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது , கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து காட்டுத்தீ உருவாவதை கவனித்து அவ்வப்போது அணைத்தும் விடுகிறார்கள்.
----------------------------------------------
கைவிடப்பட்ட செர்நோபிள் அணு உலை வளாகத்தில் இன்றும் அணு கழிவுகளும்,எஞ்சிய அணு உலை எரிப்பொருளும் அகற்றப்படாமல் உள்ளது, ஏதேனும் இயற்கை சீற்றத்தினால் ,அவை எல்லாம் " கலைக்கப்பட்டால்" காற்றில் கதிரியக்கம் பரவும் அபாயம் உள்ளது ,ஆனால் ஒட்டு மொத்த "அணுவளாக கழிவுகளையும்" அகற்ற போதுமான தொழிற்நுட்பம் இல்லை ,அப்படியே முயன்றாலும் அதற்கு மிக மிக அதிகம் செலவாகும் நிலை.
தற்போதுள்ள நிலையில் கதிரியக்கம் பரவாமல் பாதுகாக்கவே மிக அதிகம் செலவாகிறது,அதனையே ரஷிய அரசால் செய்ய இயலவில்லை. உக்ரெயின் தனி நாடாக பிரிந்து விட்டாலும் , இன்னமும் ரஷியா தான் அணு உலை சமாச்சாரங்களை கவனிக்கிறது. இப்படியே தொடர்ந்தால் , என்றாவது இயற்கை சீற்றத்தினால் "பழுதடைந்த அணு உலை கலைக்கப்பட்டு " உள்ளிருக்கும் அணுக்கழிவுகள் காற்றில் கலக்கலாம், அதனால் உக்ரெயின் மட்டுமல்லாமல் ஐரோப்பிய நாடுகளும் பாதிக்கப்படும் நிலை, எனவே வளர்ச்சியடைந்த நாடுகளின் கூட்டமைப்பான ஜீ-8 மூலம் நிதி திரட்டி ,செர்நோபிள் உலையில் இருந்து கதிரியக்கம் வெளியாகும் ஆபத்தினை தவிர்க்க ஒரு திட்டம் வகுத்துள்ளார்கள்.
இத்திட்டத்தின் படி சுமார் 1.5 பில்லியன் ஈரோ மதிப்பீட்டில் ஒரு மாபெரும் இரும்பு உறை தயாரித்து , ஒட்டு மொத்தமாக செர்நோபிள் அணு உலையை மூடி சீல் வைத்து விடுவதாகும்.
உலகில் மேற்கொள்ளப்படும் பொறியியல் கட்டுமானங்களிலேயே இது தான் தற்போது மிகப்பெரியது.
அரைவட்ட வடிவக்கூறையாக " இந்த இரும்பு கவசம்" தயாராகிறது.
உயரம் -110 மீட்டர்.
லிபர்ட்டி சிலையை விட உயரமானது,
அகலம்- 257 மீட்டர்.
ஒரு கால்பந்து மைதானமே இவ்விரும்பு கூறையின் கீழ் அமைக்கலாம்.
மொத்த எடை , 29,000 டன்கள்.
எப்படி மூடப்படும் என்பதனை விளக்கும் படங்கள்.
(முதற் பகுதி டோம்)
(டோம்-2)
அணுக்கதிர் வீச்சு நிரம்பிய சூழலில் பல நூறு பேர் உயிரை பணயம் வைத்து அங்கு வேலை செய்துக்கொண்டுள்ளார்கள். பாதுகாப்பு கவசம், பிராணவாயுக் கலன்கள் அணிந்துக்கொண்டு தான் வேலை செய்ய வேண்டும், இது போன்ற பல தடைகள் இருப்பதால் வேலை மெதுவாகத்தான் நடைப்பெற்று வருகிறது.
இவ்வேலையில் தற்போதுள்ள மிகப்பெரிய சவால் , அணு உலையின் புகைப்போக்கி மிக உயரமாக உள்ளது எனவே அதனை பிளாஸ்மா கட்டிங் முறையில் வெட்டி அகற்ற வேண்டும், அப்பொழுது , சில துண்டுகள் அணு உலையின் மீது விழுமானால் , செயல்படாத அணு உலையில் உள்ள கழிவுகள் மேல் கிளம்பி அனைவரையும் தாக்கும் அபாயம் உள்ளதாம்.
எப்படியும் வெட்டி அகற்றிவிட்டு , மொத்தமாக .இரும்பு உறை போட்டு மூடிவிடுவது தான் ஒரே வழி என்பதால் ,நிதானமாக ஆனால் தொடர்ந்து வேலை செய்துக்கொண்டுள்ளார்கள், இத்திட்டம் 2015 இல் முடிவடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது, இரும்பு உறையின் ஆயுட்காலம் 100 ஆண்டுகளாம், அப்பவும் அணு உலையில் உள்ள கழிவுகள் கதிவீச்சுடன் வீரியமாகவே இருக்கும், எனவே அதற்கு பிறகு என்ன செய்ய உத்தேசம் எனத்தெரியவில்லை.
ஊருல ஒரு சொலவடை சொல்வாங்க உலை வாய மூடினாலும் ஊர் வாய மூடவா முடியும்னு ,ஆனால் அவங்களுக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை, அணு உலை வாயை மூடுவது ஊர் வாயை மூடுவதை விட ரொம்ப கஷ்டம்னு :-))
சனங்க தொலைக்காட்சி பார்க்கவும், லைட் எரியவிடவும் மின்சாரம் இல்லைனு ,அணு மின்சாரத்தை உருவாக்கிட்டு ,இப்போ குத்துதே,குடையுதேனு ,எம்புட்டு கஷ்டப்பட வேண்டி இருக்கு, இதுக்கு பேசாம மின்சாரமே இல்லாம தீப்பந்தம் புடிச்சுட்டு நிம்மதியா வாழ்ந்திடலாம் போல இருக்கே அவ்வ்!
ஆமாம் நம்ம ஊரிலவும் "அதி நவீன அணு மின் உலைய " கூடங்குளத்திலே கட்டினாங்களே ,அதுக்கதை என்னதான் ஆச்சு, தொறப்பாங்களா ,இல்லை அப்படியே வேலை நடக்கிறது இன்னும் 15 நாளில் மின் உற்பத்தி துவக்கம்னே கதை ஓடுமா, அதுக்கு பாதிப்பு வந்தா மூடி வைக்க இப்படி "இரும்பு கவச மூடி" எதுவும் செஞ்சு வச்சிருக்காங்களா , ஒன்னுமே தெரியலையே அவ்வ்!
--------------------------------------------
பின்குறிப்பு:
தகவல் மற்றும் படங்கள் உதவி,
# http://www.bbc.co.uk/news/magazine-25086097
விக்கி மற்றும் கூகிள் இணைய தளங்கள்,நன்றி!
------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக