திங்கள், 24 ஏப்ரல், 2017

சீகன்பால்க் ஜெர்மானியர் தமிழார்வலர் அகராதி தமிழ்த்தொண்டு ஜெர்மனி ஐரோப்பியர்

தொடுவானம் 80. ஓர் இறைத்தொண்டரின் தமிழ்த்தொண்டு

டாக்டர் ஜி. ஜான்சன்

டாக்டர் ஜி. ஜான்சன்
தரங்கம்பாடியில் டேனிஷ் நாட்டவர் வாணிகம் செய்யத்தான் துறைமுகம் தேடி வந்தனர். அப்பகுதி ஆழ்கடலாக இருந்ததால் அவர்களுடைய கப்பல்கள் நங்கூரமிட வசதியாக இருந்ததை அறிந்தனர். அதனால் அவர்கள் தரங்கம்பாடி என்ற மீன் பிடிக்கும் கடலோரப் பகுதியை அப்போது தஞ்சையை ஆண்ட இரகுநாத நாயக்கரிடமிருந்து 1620ஆம் ஆண்டில் விலைக்கு வாங்கினர். அவர்கள் தொடர்ந்து 1845ஆம் வருடம் வரை அங்கிருந்து கடல் வாணிகம் செய்தனர்.
masilamaninathar தங்களுடைய பாதுகாப்புக்காக ” டேன்ஸ்பர்க் ” கோட்டையை கடலோரத்தில் கட்டினர். அங்கு ஆளுநரின் இல்லமும், தலைமையகமும், இன்னும் சில உயர் அதிகாரிகளின் பணியிடமாகவும் 150 வருடங்கள் செயல்பட்டுள்ளது. அதனுள்ளேயே சிறைச்சாலையும் இருந்தது. அவர்கள் தரங்கம்பாடி ஊரைச் சுற்றிலும் பெரிய மதிற்சுவர்கள் கட்டிக்கொண்டனர். ஊருக்குள் நுழைய உயரமான கதவுகள் கொண்ட இருந்தன. அவற்றை மூடிவிட்டால் அவர்கள் ஆண்ட அந்த ஊருக்குள் யாரும் நுழைய முடியாது. அவ்வளவு பாதுகாப்புடன் அவர்கள் ஆட்சி புரிந்து வந்துள்ளனர்.
தஞ்சையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் காவிரி நதியின் ஒரு கிளை நதி கடலில் கலக்கும் இடத்தில் தரங்கம்பாடி அமைந்துள்ளது. இது காரைக்காலின் வடக்கே பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
zieganbalg இந்த கடற்க்கரை ஊர் மிகவும் பழமையானது. 14ஆம் நூற்றாண்டில் மாறவர்மன் குலசேகர பாண்டியன் என்ற மன்னன் வழங்கிய கடலோரப் பகுதியில் 1306 ஆம் ஆண்டில் ஒரு சிவ ஆலயம் எழுப்பப்பட்டது. மாசிலாமணி நாதர் கோவில் என்ற அந்த ஆலயம்தான் மிகவும் பழமையான சின்னமாகத் திகழ்கிறது. கடல் கொந்தளிப்பில் அந்தக் கோவிலின் ஒரு பகுதி சேதமுற்று உள்ளது.
1620 ஆம் ஆண்டில் டென்மார்க் நாட்டினர் வரும்வரை தரங்கம்பாடி தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்களின்கீழ் இருந்தது. அப்போது டென்மார்க் நாட்டின் கடற்படைத் தளபதி வாணிபம் செய்ய தரங்கம்பாடியைத் தேர்ந்தெடுத்தான். ஓவே ஜெடி ( Ove Gjeddie ) என்ற அந்த தளபதி அப்போது தஞ்சையை ஆண்ட ரகுநாத நாயக்கரிடம் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டு நிலத்தை விலைக்கு வாங்கினான். அங்கு ஒரு பிரமாண்டமான கோட்டையைக் கட்டி அதற்கு ” டேன்ஸ்பர்க் கோட்டை ” என்று பெயரிட்டான்.
அப்போது டென்மார்க் நாட்டின் மன்னர் நான்காம் பிரடெரிக். அவர் லுத்தரன் சபையைச் சேர்ந்தவர். அவர் இயேசுவின் நற்செய்தியை இந்தியாவில் பரப்ப எண்ணினார். அதற்கான இறைத்தொண்டர்களைத் தேடினார்.
ஜெர்மனி நாட்டில் உதவி சபை குருவாகப் பணியாற்றிய சீகன்பால்குவுக்கு அந்த அழைப்பு வந்தது. முன்பின் அறியாத வெளிநாட்டிற்குச் சென்று கடவுளின் பணியைச் செய்யும்படியாகத் தனக்கு வந்த அழைப்பைக் கண்டு ஒரு கணம் அதிர்ச்சியுற்றார். பிறகு சம்மதம் தந்தார். அவர் டென்மார்க் சென்று அரசரின் முன்பு அருளுரை ஆற்றவேண்டி பணிக்கப்பட்டார். 24 வயதுடைய அந்த இளைஞரின் அருளுரை கேட்டு அரசரும் அவையோரும் வியந்தார்கள்.
ze1 1705ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30ஆம் நாள் அவரும் புளுச்சோ எனும் இன்னொரு இறைத்தொண்டரும் கப்பல் ஏறினார்கள். அதில் ஏழு மாதங்கள் பிரயாணம் செய்தார்கள். 1706ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9ஆம் நாள் அந்த கப்பல் தரங்கம்பாடி வந்தடைந்தது.
ஆனால் தரங்கம்பாடியில் அவர்களுக்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை.அவர்கள் தரையிறங்க கப்பல் மாலுமி மூன்று நாட்கள் தாமதப்படுத்தினான். தரை இறங்கியதும் ஆளுநர் ஜே. சி. ஹசியுஸ் என்பவன் கோட்டைக்குள் செல்ல அனுமதி தராமல் கொளுத்தும் வெயிலில், சுடு மணலில் மாலை வரை காக்கவைத்தான். அவர்கள் இருவரும் அரசரின் ஆணையைக் காட்டியும்கூட அவர்கள் அரசரின் உளவாளிகளோ என அஞ்சினான்.தன்னுடைய ஊழல்கள் அவர்கள் மூலம் அம்பலமாகுமோ என்றும் பயந்தான். பின்பு வேண்டாவெறுப்புடன் அவர்களை கோட்டைக்குள் செல்ல அனுமதித்தான்.
ஆனால் கடவுளின் செய்தியைக் கூற வந்துள்ள அந்த இருவரும் கொஞ்சமும் மனந்தளாராமல் தாங்கள் வந்த நோக்கத்தை நிறைவேற்றும் பணியில் ஈடுபட்டனர்.
தமிழ் மொழியைக் கற்றாலே ஒழிய தமிழ் மக்களுக்கு இயேசுவின் நற்செய்தியைப் பரப்ப இயலாது என்பதை சீகன்பால்க் உணர்ந்தார். மணலில் அமர்ந்து கைவிரலால் தமிழ் எழுத்துக்களை எழுதிப் படிக்கும் திண்ணைப் பள்ளியில் சேர்ந்து தமிழ் கற்றார்.தமிழ் சொற்களின் பொருளை விளங்கிக்கொள்ள சிரமப்பட்டார்.சிரமப்பட்டார். போர்த்துகீசிய மொழி தெரிந்த அழகப்பன் என்பவரின் உதவியுடன் சொற்களின் பொருளை அறிந்துகொண்டார். இவ்வாறு எட்டே மாதங்களில் தமிழைப் படிக்கவும் பிறருடன் பேசவும் கற்றுக்கொண்டார்!
அதன்பின்பு அவர் தமிழ் மொழியின்மீது கொண்ட பற்றுதல் அபாரமானது! இரண்டு ஆண்டுகளுக்குள்ளாக 20,000 வார்த்தைகள் அடங்கிய ஓர் தமிழ் அகராதியையும், தமிழ் இலக்கணத்தையும் எழுதியதோடு, ஜெர்மன் மொழியிலிருந்து பல நூல்களைத தமிழில் மொழிபெயர்க்கவும் ஆரம்பித்தார். அவ்வாறு அவர் மொழிபெயர்த்த முதல் நூல் லூத்தரின் சிறிய ஞான உபதேசம் ஆகும்.
சீகன்பால்க் ஓலைச் சுவடிகள் மீது மிகுந்த ஆவல் கொண்டார். அவற்றைச் சேகரித்து, தொகுத்து தமது நூலகத்தில் பத்திரப்படுத்தினார். அவை தற்போது லண்டனில் பிரிட்டிஷ் பொருட்காட்சியகத்தில் உள்ளன.அவற்றில் உலக நீதி எனும் நூலை ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்தார். இது தற்போது டென்மார்க்கில் கோப்பென்ஹேகன் அரசு பொருட்காட்சியகத்தில் உள்ளது.
அப்போது ஓலைச் சுவடிகளின் அருமை தெரியாமல் பலர் இருந்துள்ளனர். அவர் சேகரித்து வைத்திருந்த சில சுவடிகளை பள்ளி ஆசிரியர் ஒருவர் குளிர் காய்வதற்கு எடுத்து எரித்துள்ளார்! ( அவர் சேகரித்து வைத்திருந்த ஓலைச் சுவடிகள் என்னென்ன என்பதை பிறகு கூறுவேன். )
அவருக்குமுன் கத்தோலிக்க குருக்கள் எழுதிய ஓலைச்சுவடிகளை வாசித்து அவற்றில் நற்செய்திக்குப் புறம்பான கருத்துக்கள் இருந்ததை சுட்டிக்காட்டினார். அதனால் வீரமாமுனிவர்கூட அவர் மீது குறை கூறினார்.
அவர் உருவாக்கிய தமிழ் அகராதி நான்கு ஆண்டுகளில் 40,000 வார்த்தைகளுடன் பெரிதானது. அத்துடன் செய்யுள் அகராதி ஒன்றையும் 17,000 சொற்களுடன் தொகுத்தார்.
சீகன்பால்க் தமிழை மட்டுமல்லாது தமிழ் மக்களையும், தமிழர் கலாச்சாரத்தையும் பெரிதும் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் இவ்வாறு கூறுகிறார்:
” தமிழர்கள் எழுத்தாணியால் பனை ஓலையில் அழகாக தமிழ் எழுத்துக்களை எழுதும் திறமைகொண்டவர்கள். மிகப் பழமையான மொழிகளில் தமிழும் ஒன்று. தமிழர் எல்லா கலைகளிலும் சிறந்தவர்கள்.இவர்கள் எழுதாத நூல் இல்லை. வியாபாரத்திலும் சித்திரக்களையிலும் கைதேர்ந்தவர்கள். தமிழர் யார் என்று தெரியாதவர்கூட அவர்கள் எழுதிய நூல்களைப் படித்து அவர்களின் சிறப்பை உணர்ந்துகொள்ளமுடியும்.
stampze தமிழ் இலக்கண விதிகள் சிறந்த முறையில் அமைக்கப்பட்டுள்ளன. நாட்டை ஆட்சி செய்வதற்குரிய சட்டங்களும் நீதிநெறி விளக்க நூல்களும் மக்களின் வாழ்க்கையைப் பாதுகாக்கின்றன. மனோதத்துவ இறையியல் பொருள்கள்பற்றி இவர்கள் எழுதியிருப்பவைகள் ஆச்சரியப்படும்படி இருக்கின்றன. இறையியலை ஆழமாகவும் உயர்ந்த முறையிலும் ஆராய்ச்சி செய்திருக்கின்றார்கள். விஞ்ஞான அறிவில் பிற நாட்டவர்கள் இதுவரைக்கும் ஆராயாத கோட்பாடுகள் பலவற்றை அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டேன். ஐரோப்பிய கிறிஸ்துவர்கள் இந்துக்களை இன்னின்ன முறையில் கிறிஸ்துவத்தைத் தழுவச் செய்யலாம் என்று அங்கிருந்துகொண்டே எளிதாகக் கூறிவிடுகின்றார்கள். ஆனால் அவர்கள் இங்கு வந்து, இந்துக்களுடன் பேசிப்பார்த்தால் ஐரோப்பியர் கூறும் ஒவ்வொரு காரணத்திற்கும் இந்துக்கள் பத்து காரணங்களைத் திருப்பிச் சொல்லும் நிலையில் இருக்கின்றார்கள் என்பதை .உணர்ந்துகொள்ளுவார்கள்.”.
இயேசுவின் நற்செய்தி கூற தமிழகம் வந்த ஒரு இளம் ஜெர்மானியர் தமிழ் மீது இவ்வாறு காதல் கொண்டு தமிழ்ப் பணியில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டது தரங்கம்பாடியில் நிகழ்ந்த ஓர் அதிசயமாகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக