சனி, 25 மார்ச், 2017

டோல்கேட் சுங்கச்சாவடி கொள்ளை

aathi tamil aathi1956@gmail.com

10/4/16
பெறுநர்: எனக்கு
தமிழக டோல்கேட்டுகளில் நடக்கும் கொடுமைகள்... தீர்வு என்ன?
இ ந்தியா முழுவதும் நான்கு வழிச்சாலைகளில் 60 கிலோ மீட்டருக்கு ஒன்று
என்ற கணக்கில் 386 டோல்கேட்டுகள் உள்ளன. இந்த டோல்கேட்டுகளில் சிலவற்றை
தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் நேரடியாகவும் பல டோல்கேட்டுகளை தனியாரும்
வசூல் செய்கிறார்கள். தினந்தோறும் இந்த டோல்கேட்டுகளை கடந்து செல்கின்ற
ஒவ்வொருவரும் மனம் நொந்தபடியே பயணிக்கிறார்கள். டோல்கேட் அருகிலிருக்கும்
கிராம மக்கள், பக்கத்து ஊர்களுக்கு செல்வதற்குகூட பணம் கட்டி செல்லும்
அவல நிலை உள்ளது.
நம் நாடு முழுவதும் நான்கு வழிச்சாலைகளில் அமைக்கப்பட்டிருக்கும்
டோல்பிளாசக்களால் தினம்தோறும் வாகன ஓட்டிகளும், பல்வேறு தரப்பினரும்
கடும் துன்பத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். விதிமுறைகளை மீறி அருகருகே
அமைக்கப்பட்டிருக்கும் சுங்கச்சாவடிகளும், அடாவடியாக வசூல் செய்யும்
அவர்களின் அத்துமீறல்களும் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை
ஏற்படுத்தி வருகிறது. ஒவ்வொரு டோல்கேட்டிலும் இஷ்டத்துக்கு கட்டணம்
வசூலிப்பதால் அரசாங்க அனுமதியுடன் மக்கள் சுரண்டப்படுகிறார்கள்.
மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம், நான்கு வழிச்சாலை
அமைத்ததற்கான செலவை ஈடுகட்ட வாகன ஓட்டிகளிடமிருந்து சேவைக்கட்டணம்
வசூலிக்க வேண்டியது நியாயமானதுதான். அதற்காக ஒரு வரைமுறை இல்லாமல் பணத்தை
பறிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து கேட்கத்தான் செய்கிறது.
உள்ளூர் மக்களுக்கும், டோல்கேட் ஊழியர்களுக்கும் இடையே தகராறுகள் நடந்து,
பல இடங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் கூட ஏற்பட்டுள்ளன.
சமீபத்தில் மஹாராஷ்டிராவில் இதுபோல் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், பல
போராட்டங்களை நடத்தி எந்தப் பயனும் இல்லாததால், 6 டோல்கேட்டுகளை அடித்து
நொறுக்கிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தில் இதுபோன்று
இல்லாவிட்டாலும் சிறு சிறு சம்பவங்கள் ஆங்காங்கே தொடர்ந்து நடந்துதான்
வருகின்றன. மேலூர் டோல்கேட்டில் சீமானும், விழுப்புரம் டோல்கேட்டில்
அன்புமணியும் டோல்கேட் அடாவடியை கண்டித்து கட்சி தொண்டர்களுடன் பிரச்னை
செய்தது, வழக்காகி தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. சமீபத்தில்
தமிழக காங்கிரஸ் கட்சியும் டோல்கேட்டை மூட வலியுறுத்தி போராட்டம்
நடத்தியது.
சீமான் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, ''அடிமை இந்தியாவில்கூட ஒரு
இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு செல்ல கட்டணம் வசூலித்ததில்லை.
விடுதலை இந்தியாவில்தான் இந்த கொடுமை நடக்கிறது. சாலை அமைத்ததற்கான செலவை
வசூல் செய்யத்தான் இப்படி செய்கிறோம் என்று சொல்கிறார்கள். அதுதானே
அரசாங்கத்தின் வேலை. என்னுடைய காருக்கு இதுவரை மூன்று லட்ச ரூபாய்
சாலைவரி கட்டியிருக்கிறேன், அந்த பணம் எங்கே போகிறது? சாலைவரியும் கட்டி,
சுங்க வரியும் கட்டணுமா? அப்படியென்றால் அரசாங்கத்தை கலைத்து விட்டு
அம்பானிக்கும், டாட்டாவுக்கும் அரசாங்கத்தை பிரித்து கொடுத்து விடலாமே.
அவர்களே செலவு செய்து அவர்களே வசூலித்துக் கொள்வார்கள். மதுரையிலிருந்து
ஒருவன் காய்கறியை லாரியில் ஏற்றி கொண்டு சென்னைக்கு சென்றால், மூவாயிரம்
ரூபாய் சுங்கச்சாவடிக்கு கட்ட வேண்டியுள்ளது. அப்ப, அந்த பணத்தை அவன்
எதில் வைப்பான். விலைவாசி ஏறத்தான் செய்யும். அரசாங்கத்தின் மோசமான
பொருளாதார கொள்கையின் விளைவுதான் இது. சுங்கச்சாவடி மக்களுக்கு
தேவையில்லாதது'' என்றார்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள டோல்கேட்டை எடுக்க வேண்டும் என்று
வழக்கு தொடுத்து, மாநிலங்களில் டோல்கேட் அமைக்க மத்திய அரசுக்கு உரிமை
இல்லை என்றும் மற்றொரு வழக்கை மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல்
செய்திருக்கும் முன்னாள் தென்காசி எம்.எல்.ஏ.வும், வழக்கறிஞருமான
வெங்கட்ரமணாவிடம் பேசினோம்.
''நம் நாடு முழுவதும் நான்கு வழிச்சாலைகளில் டோல்கேட்டுகள்
அமைத்திருக்கிறார்கள். தமிழகத்தில் 60 கி.மீ தூரத்திற்கு ஒரு டோல்கேட்
உள்ளது. இந்த சாலைகளை பயன்படுத்துவோரிடம் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.
தேசிய நெடுஞ்சாலைகள் பாதுகாப்பாகவும், விரைவாகவும் செல்வதற்காகவே
அமைக்கப்பட்டன. இதில் கட்டணம் வசூலிப்பதன் மூலம் டோல்கேட்
அமைக்கப்பட்டதன் நோக்கமே வீணாகிறது. சாலை அமைத்து மக்கள்
போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்வதுதானே ஒரு அரசாஙகத்தின் வேலை. அந்த
காலத்தில் ராணி மங்கம்மாள் சாலை அமைத்தார். அக்பர், அசோகர் சாலை
அமைத்தார்கள், யாரும் குடிமக்களிடம் கட்டணம் வசூலிக்கவில்லை. உலகிலேயே
நகரங்களுக்குள் வராமல் நகருக்கு வெளியே நெடுஞ்சாலைகள் முதலில் அமைத்தது
ஹிட்லர்தான்.
முதல் உலகப்போரில் பாதிக்கப்பட்ட ஜெர்மனியை மீண்டும் புனரமைக்கவும்,
அடுத்த போரில் ராணுவ வாகனங்கள் விரைவாக செல்லவும் ஜெர்மனியில்
நகரங்களுக்குள் வராமல் நெடுஞ்சாலைகளை அமைத்தார். அப்படி அமைத்த ஹிட்லர்
மக்களிடம் கட்டணம் வசூலிக்கவில்லை. ஒரு சர்வாதிகார ஆட்சியின் அதிபரே
மக்களிடம் கட்டணம் வசூலிக்காதபோது மக்களாட்சி நடப்பதாக சொல்லும் நம்
நாட்டில் அடாவடியாக கட்டணம் வசூலிப்பது கொடுமைதான்.
டோல்கேட் சிஸ்டத்தை காங்கிரஸ் ஆட்சி கொண்டு வந்தது என்று இப்போதுள்ள
பா.ஜ.க.வினர் சொல்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சி இந்த தவறை செய்தால் அதை
இவர்கள் ரத்து செய்ய வேண்டியதுதானே. தொடர்வது ஏன்? டோல்கேட் வசூலுக்கு
பின்னால் முக்கிய அரசியல் புள்ளிகள் இருக்கிறார்கள். டோல்கேட்களில்
கட்டணம் செலுத்த வாகனங்கள் வரிசையில் நிற்கும்போது டீசல், பெட்ரோல்
வீணாகிறது. பொல்யூசன் அதிகமாகிறது. டோல்கேட் மூலம் ஆண்டுக்கு ரூ.16
ஆயிரத்து 500 கோடி வருமானமாக கிடைக்கிறது என்று சொல்கிறார்கள்.
ஆனால், சாலை அமைக்க எவ்வளவுதான் செலவழித்தார்கள் என்பதை சொல்ல மத்திய
அரசு மறுக்கிறது, அதை இன்னும் எவ்வளவு காலத்திற்கு மக்களிடம் வசூல்
செய்வார்கள் என்று தெரியவில்லை. உலகிலேயே அதிகமான சுற்றுலாப்பயணிகள்
செல்லும் சுவிட்சர்லாந்திலேயே ஒரேயொரு இடத்தில் மட்டும்தான் டோல்கேட்
வைத்திருக்கிறார்கள். ஆனால், இங்கோ 60 கிலோ மீட்டருக்கு ஒரு டோல்கேட்.
சட்டப்படி மத்திய அரசுக்கு டோல்கேட் அமைக்க உரிமையே இல்லை, மாநில
அரசுக்குத்தான் உண்டு என்று நீதிமன்றத்தில் தெரிவித்தால், தவறான தகவல்களை
அரசு தரப்பு தெரிவிக்கிறது.
நான் வழக்கு போடுவதற்கு அடிப்படையாக அமைந்ததே எனக்கு நேர்ந்த
அனுபவம்தான். திருமங்கலத்திலிருக்கும் என் மனைவியை அழைக்க
மதுரையிலிருந்து காரில் சென்றபோது, திருமங்கலம் டோல்கேட்டில் பணம்
கேட்டார்கள். நான் என்னை முன்னாள் எம்.எல்.ஏ.வென்றோ, வழக்கறிஞர் என்றோ
அறிமுகப்படுத்திக்கொள்ளாமல், 'ஊருக்கு பக்கத்தில் டோல்கேட்டை வைத்துக்
கொண்டு பணம் கேட்பது எந்த வகையில் நியாயம்' என்று கேட்டேன். அதற்கு
அவர்கள் சரியாக பதில் சொல்லாமல் அப்படித்தான் கேட்போம் என்று அராஜகமாக
பேசினார்கள்.
'வேண்டுமானால் கார் இங்கே நிற்கட்டும், ரெண்டு கிலோமீட்டர் தூரத்தில்
இருக்கும் திருமங்கலத்துக்கு நடந்து போய்விட்டு திரும்ப வந்து காரை
எடுத்துக்கொள்கிறேன்' என்று சொன்னேன். அதற்குள் என் வாகனத்துக்கு
பின்னால் டிராஃபிக் ஜாமாகவே, என்னிடம் கட்டணம் வாங்காமல் என் காரை விட்டு
விட்டார்கள். வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பும்போது ரூ.6 வரியாக
வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் மத்திய அரசுக்கு ரூ.25 ஆயிரம் கோடி வரை
வருமானம் கிடைக்கிறது.
1980-ல் 80 லட்சம் வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டன. தற்போது 2 கோடி
வாகனங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. வாகனங்கள் வசூலிக்கப்படும்
சாலைவரி, எரிபொருள் போடுவதன் மூலம் பிடித்தம் செய்யும் சாலைவரி,
பல்லாயிரம் கோடி அரசுக்கு செல்கிறது. முறையாக பராமரிக்கப்படாத சாலைகள்
ஒருபுறம், கட்டணக்கொள்ளை இன்னொரு புறம். இரண்டு நகருக்கு இடையே
டோல்கேட்டை அமைத்துக்கொண்டு பணம் வசூல் செய்வது எந்த விதத்தில் நியாயம்
என்று யோசித்தேன். அதற்கு பின்புதான் திருமங்கலம் டோல்கேட்டை எடுக்க
வேண்டும் என்று வழக்கு போட்டேன். அது தள்ளுபடியானது. தற்போது நாடு
முழுவதுமுள்ள டோல்கேட்டுகளை எடுக்க வேண்டுமென்று வழக்கு
போட்டிருக்கிறேன். இது சம்பந்தமாக தமிழகத்தில் எந்த கட்சியும் வாய்
திறக்க மறுக்கின்றன" என்றார்.
சென்னையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சுற்றுலாக்களை ஒருங்கிணைத்துச்
செல்லும் அன்பு நித்யா என்பவரிடம் இது குறித்து பேசியபோது, "டோல்'களில்
எது சுற்றுலா செல்கிற வண்டி என்பதை ஒரே பார்வையிலேயே கண்டுபிடித்து
விடுவார்கள். 75 ரூபாயில் தொடங்கி 200 ரூபாய் வரையில் வம்பாக பேசிப்
பேசியே டோல்களில் கட்டண வசூல் நடத்துகிறார்கள். வேன் முதலாளிகளிடம் மாதம்
இவ்வளவு டோல் வரி என்று மொத்தமாக அரசே வசூலித்துக் கொண்டால், டோலில்
ஏற்படும் தேவையற்ற போக்குவரத்து நெரிசல்கள் குறைந்து நேரம் மிச்சமாகும்.
இதை அரசாங்கம் பரிசீலனை செய்ய வேண்டும்.
திருச்சி, மதுரை போன்ற மாவட்டங்களில் அதிகளவு டோல் இருப்பதாலும், டோலில்
வாகனங்கள் நீண்ட நேரம் காத்துக் கிடப்பதாலும் போக்குவரத்து நெரிசல்
ஏற்பட்டு மனசிக்கலை ஏற்படுத்தி விடுகிறது. ஆந்திராவில், நம்மூர் வண்டிகள்
பெர்மிட் போட்டுக் கொண்டு நுழைய வேண்டு மென்றால் குறைந்த பட்ச கட்டணமே 7
ஆயிரம் ரூபாயில்தான் ஆரம்பிக்கும். இதற்கடுத்து கர்நாடகா. அந்த மட்டில்
கேரளா எவ்வளவோ மேல். சமீபமாகத்தான் அவர்கள் வாகன பெர்மிட்டுக்கு 500
ரூபாயை கட்டணமாக நிர்ணயம் செய்திருக்கிறார்கள். கேரளாவில் சுங்கச் சாவடி
நுழைவுக் கட்டணம் அதிகபட்சமே 5 ரூபாய்தான்" என்றார்.
டோல்கேட் கட்டணத்தை தவிர்க்க சர்வீஸ் ரோடு வழியாக கிராமங்களுக்குள்
நுழைந்து பல கனரக வாகனங்கள் செல்வதால், ஊராட்சிகளில் போடப்பட்ட சாதாரண
சாலைகள் சேதமாவது மட்டுமில்லாமல், கிராம மக்கள் விபத்துக்குள்ளாவதும்
அடிக்கடி நடந்து வருகிறது. டோல்கேட் முறைகேடுகளுக்கு எதிராக, சமூக
ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து
அதுவும் நிலுவையில் உள்ளது.
எல்லா டோல்கேட்களிலும் எடை நிலையம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
எங்கும் அது செயல்படுத்தப்படவில்லை. இதற்குக் காரணம், டோல்கேட் ஒப்பந்தம்
எடுத்திருக்கும் நிறுவனங்களின் லாரிகள்தான் அதிகமான பாரங்களை
ஏற்றிச்செல்கின்றன. இதை நடைமுறைப்படுத்தினால் அவர்களுக்கு பிரசனை
ஏற்படும். தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் இணையதளத்தில் டோல்கேட்டுகளை
நிர்வகிக்கும் நிறுவனத்தின் பெயர், திட்டத்தின் தகவல்கள், பொறுப்பாளர்
பெயர்களை வெளியிட வேண்டும் என்கிற சட்டத்தை பெரும்பாலான நிறுவனங்கள்
மதிப்பது இல்லை.
இதற்குக் காரணம் பல்வேறு இடங்களில் உரிமம் முடிந்தும் வசூலித்து வருவது
வெளியில் தெரிந்துவிடும் என்று பயப்படுகிறார்கள். இதில் தனியார் கட்டுமான
நிறுவன முதலாளிகளும், அரசு அதிகாரிகளும் பெரிய அளவில் பயனடைந்து
வருகிறார்கள். இதுவரை 10,000 கோடிக்கும் அதிகமான தொகையை லாபம்
அடைந்திருப்பார்கள். இது குறித்து சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும்
கேள்வியெழுப்பட்டவில்லை.
பல இடங்களில், காலாவதியான சாலைகளில்கூட இன்னமும் பணம் வாங்கிக்
கொண்டிருக்கிறார்கள். மோசமான தரமில்லாத வாலாஜா சாலை, திண்டிவனம்,
மதுராந்தகம், ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் அதிக அளவு
கட்டணம் வசூலிக்கிறார்கள். தேசிய நெடுஞ்சாலைகளில் கிராமப்புறங்களில்
இருந்து வரும் சாலைகளை இணைக்க பாலங்கள் இருக்க வேண்டும். டோல்கேட்
இங்கிருக்கக் கூடாது என்று உயர் நீதிமன்றமே கண்டித்தும் ஓமலூர் பகுதியில்
இருக்கும் டோல்கேட்டை அகற்றாமல் வைத்திருக்கிறார்கள்.
முறையாக பராமரிக்கப்படாத சாலைகள் ஒருபுறம், கட்டணக்கொள்ளை இன்னொருபுறம்.
இவர்கள் மீது யார் நடவடிக்கை எடுப்பது?
- செ.சல்மான், ந.பா.சேதுராமன்
www.vikatan.com/news/coverstory/62139-cruelty-in-tamilnadu-toll-plaza-what-is-solution.art

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக